Advertisement

அத்தியாயம் – 16

அன்று ஞாயிற்றுக் கிழமை.

ஓயாமல் உழைக்கும் கதிரவனுக்கும் அன்று வேலை செய்ய மனமில்லையோ என்னவோ, கறுத்த மேகத்துக்குள் ஒளிந்து ஓய்வெடுத்தபடி சுணங்கிக் கொண்டிருந்தான்.

கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாய் அன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என்ற வானிலை அறிக்கையை மெய்யாக்குவது போல் வானம் மப்பும், மந்தாரமுமாய் கறுத்து பெய்யலாமா வேண்டாமா என்று குழம்பி நின்றது.

பிரபஞ்சன் கட்டிலில் சாய்ந்து அமர்ந்தபடி ஜன்னலில் வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். மனதுக்குள் வெளியே இருந்த காலநிலைக்கு சற்றும் குறையாமல் குழப்பம் மண்டிக் கிடந்தது. கையை ஊன்றி தானாகவே எழுவதற்கு சற்று வலித்தாலும் முயற்சி செய்து அமர்ந்திருந்தான்.

வெகு நாட்களாய் நடக்காமலிருந்த கால்களை தாழ்த்தி நிலத்தில் பதித்து ஒரு அடி எடுத்து வைப்பதற்குள் சுள்ளென்று இடுப்பிலிருந்து எழும் வலி மண்டைக்குள் ஏறி கண்ணில் நீரை வரவழைத்தது. முயற்சி செய்ய செய்யவே அந்த வலி குறையும் என டாக்டர் சொல்லி இருந்ததால் முயற்சியை விடாமல் செய்து கொண்டிருந்தான்.

மாலை நேரங்களில் அவனைத் தனது தோளோடு சேர்த்துப் பிடித்தபடி வீட்டுக்குள் நடந்து பார்க்க உதவி செய்தாள் ரஞ்சனா. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் நரகத்தை உணர்ந்திருந்தான் பிரபஞ்சன். உதவிக்கு ஊன்று கோலும் இருந்தாலும் அத்தனை சுலபமாய் நடக்க முடியவில்லை. அடிக்கடி தடுமாறி விழப் போனவனை வேதனையுடன் பார்த்தாள் மனைவி.

“பிரபா, ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்க வேணாம், இத்தனை நாளா நடக்காம கால் பாதமெல்லாம் வலுவிழந்து போயிருக்கும்… முதல்ல காலை நிலத்துல நல்லாப் பதிக்க முயற்சி பண்ணுங்க, ஈவனிங் நான் இருக்கும்போது மட்டும் நடக்க முயற்சி பண்ணலாம்… தனியா இருக்கும்போது எந்த முயற்சியும் வேண்டாம், விழுந்துட்டா பிரச்சனை…” என்று சொல்லியிருக்க சரியென்பதால் அவனும் அவள் இல்லாத நேரத்தில் முயற்சி எடுப்பதில்லை.

ரஞ்சனாவுக்கு அன்று மாலை வரை டியூட்டி இருந்தது. செக்யூரிட்டி உதவியுடன் மதிய உணவை முடித்திருந்த பிரபஞ்சனுக்கு சக்கர நாற்காலியில் அமர்ந்தால் தேவலாம் எனத் தோன்ற மெல்ல காலைக் கீழே வைக்க முயன்றான். நடுங்கியது. சமாளித்தபடி ஊன்று கோலை இரு அக்கத்திலும் வைத்து மெல்ல எழ முயன்றவன் தடுமாறினான். சுள்ளென்று இடுப்புப் பகுதியிலிருந்து எழுந்த வேதனை முகத்தை சுளிக்க வைக்க, கட்டிலின் காலருகே ஒரு அடி வைத்தால் எட்டிவிடும் தூரத்திலிருந்த சக்கர நாற்காலியை எட்டிப் பிடித்திடும் நோக்கில் வலியைப் பொருட்படுத்தாமல் துணிந்து காலை நீட்டி வைத்தான். தலைக்குள் இடி வெட்டியது போல் எழுந்த வேதனையில் கண்ணை மூடி நின்றாலும் சக்கர நாற்காலியின் அருகே வந்திருந்தான்.

மனதுக்குள் ஒரு நம்பிக்கை சுடர்விட எழுந்த வேதனை காணாமல் போயிருந்தது. இப்போதுதான் நடை பயிலும் பிள்ளை வேண்டியதை எட்டிப் பிடித்த சந்தோஷத்தில் இருப்பது போல் அவன் மனதில் மகிழ்ச்சி. நாற்காலியில் உடம்பை வளைத்து அமருகையில் மீண்டும் வலித்தாலும் சகித்தபடி அமர்ந்தவன் இதழ்கள் முறுவலித்தது.

நாற்காலியை உருட்டியபடி ஹாலுக்கு வந்தவன் மணி ஐந்தாகப் போவதைக் கண்டதும் குதூகலித்தான்.

“இன்னும் சிறிது நேரத்தில் ரஞ்சு வந்து விடுவாளே…” என்று மனது சந்தோஷத்தில் குதிக்க சட்டென்று அர்ஜூனின் ‘சனா’ என்ற அழைப்பு காதுக்குள் குறுகுறுத்தது. இரண்டு நாட்களாய் மனதை உறுத்திக் கொண்டிருக்கும் விஷயமாயிற்றே. அதைப் பற்றி மனைவியிடம் கேட்டு விட நினைத்தாலும் ஏதோ ஒரு தயக்கம் கேட்கவிடாமல் செய்தது.

தனிமை சில நேரம் மருந்து, சில நேரம் விஷம்… அவரவர் சூழ்நிலை போல் அது மருந்தாகவும், விஷமாகவும் மாறிப் போகிறது. நமது எண்ணங்களைப் பொறுத்தே தனிமை இனிக்கவும், கசக்கவும் செய்கிறது.

அர்ஜூனின் முகத்தை இயல்பாய் பார்க்காமல் ரஞ்சனாவின் முகத்தில் தெரியும் தவிப்பு பிரபாவுக்குப் புதிதாய் இருந்தது. அதுவும் அந்த டாக்டர் உரிமையோடு அவளை ‘சனா’ என்றழைக்க அது புதிய அழைப்பு என்பது போலில்லாமல் அவள் இயல்பாய் ஏற்று நடந்து கொண்டது குழப்பியது.

“இத்தனை உரிமையாய் அழைக்கும் அளவுக்கு அந்த டாக்டரோடு பழக்கம் இருந்தால் ஏன் அவரைப் பற்றி ரஞ்சு எதுவும் முன்னமே என்னிடம் சொல்லவில்லை…?” என்ற கேள்வி குடைந்தது.

“ஒருவேளை வீட்டுக்கு வந்ததும் காத்திருக்கும் பொறுப்புகளில் பொதுவான விஷயங்களை சொல்ல மறந்து விட்டாளோ…? இருந்தாலும் அந்த அழைப்பு, குழைவாய் நேசத்தோடு அப்பெயருக்கு வலிக்குமோ என்பது போல் அழைத்த அக்குரலின் தன்மை… நான் கூட என் ரஞ்சுவை இத்தனை இனிமையாய் அழைத்தது இல்லையே…” அவன் மனம் தன்னையே சாடியது. சட்டென்று மழை பெய்யத் தொடங்க ஜன்னலருகே இருந்தவனின் முகத்தில் சில துளிகள் தெளித்து நினைவுகளைக் கலைத்தது.

சக்கரத்தை உருட்டியபடி அங்கிருந்து நகர வெளியே சூழ்ந்திருந்த இருட்டு வீட்டுக்குள்ளும் படர்ந்திருந்தது. கடிகாரத்தைப் பார்க்க மணி ஆறாகியிருந்தது. ஒரு குச்சியை எடுத்து சுவிட்ச் போர்டிலிருந்த சுவிட்சைத் தேய்க்க சட்டென்று இருட்டை விரட்டியடித்து வெளிச்சம் நிறைந்தது. மனதின் இருட்டும் இப்படித்தானே… எங்கிருந்தாவது ஒரு நம்பிக்கை வெளிச்சம் கிடைத்துவிட்டால் எல்லாம் தெளிந்துவிடும், இல்லாவிட்டால் குழப்பமென்னும் மாய இருட்டில் மனம் இருண்டு கலங்கிக் கிடக்கும்.

“இத்தனை நேரமாகவா யோசித்திருந்தோம்…?” நினைத்தபடி வெளியே கவனித்தவனுக்கு கவலையானது. வானம் அடித்து ஊற்றிக் கொண்டிருக்க நேரம் பத்து மணியானது போல் அத்தனை இருட்டியிருந்தது.

“கடவுளே…! இந்தப் பேய் மழைல ரஞ்சு நல்லபடியா வீட்டுக்கு வரணுமே…” என மனம் விசனிக்கத் தொடங்கியது.

வாழ்க்கையில் விசனப்பட காரணங்களுக்கா பஞ்சம்… ஒவ்வொரு நொடியும் ஏதாவது ஒரு விஷயம் நம் மனதையும், மூளையும் நிரப்பி யோசிக்க வைத்துக் கொண்டே தானே இருக்கிறது. ஒருவிதத்தில் இதுவும் மனித மனதுக்கான விடுதலை தானோ…? ஒரே பிரச்சனையை யோசித்து உழலாமல், விதவித வண்ணங்களில் ஏதேதோ பிரச்சனைகளை யோசிக்கப் பரிசளிக்கும் வாழ்க்கையை என்னவென்று சொல்லுவது. யோசித்தபடி அமர்ந்திருந்தவன் கதவு திறக்கப்படும் ஓசையில் திரும்பினான். அணிந்திருந்த சுரிதார் முழுதும் மழையில் நனைந்து உடலை ஒட்டிப் பிடித்திருக்க உள்ளே நுழைந்தாள் ரஞ்சனா.

“ப்ச்… மழைல நனைஞ்சுட்டே வந்துட்டியா…?” என்றவனின் வார்த்தைகள் அவளுக்குப் பின்னால் கையில் பழங்கள் நிறைந்த கவரோடு வந்த அர்ஜூனைக் கண்டதும் திகைத்தது.

“டா..டாக்டர்… நீங்க…?” கணவனின் கேள்விக்கு முந்திக் கொண்டு பதில் சொன்னாள் ரஞ்சனா.

“ப..பஸ் இறங்கி, ஸ்டாப்புல ரொம்ப நேரமா நின்னுட்டு இருந்தேன்… ஸ்டாப்புல யாரும் இல்லை, மழையும் நிக்கக் காணோம்… அதான் நனைஞ்சுட்டே நடக்கத் தொடங்கவும், அந்த நேரத்துல அந்தப்பக்கம் வந்த டாக்டர் என்னை டிராப் பண்ணறேன்னு சொன்னார்…”

“ஓ… ரொம்ப தேங்க்ஸ் டாக்டர், ப்ளீஸ் உக்காருங்க…” என்றான் பிரபஞ்சன் புன்னகையுடன்.

அவன் அமர, “நா..ன் காபி எடுக்கறேன்…” என்ற ரஞ்சனா அடுக்களைக்கு நகர்ந்தாள்.

“சாரி மிஸ்டர் பிரபா… நான் உங்களை டிஸ்டர்ப் பண்ணலியே, இப்ப எப்படி இருக்கு உங்களுக்கு…? நடக்க முயற்சி பண்ணா பெயின் இருக்குன்னு சனா சொன்னாங்க… ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காம மெதுவா டிரை பண்ணுங்க… இவ்ளோ நாள் அசைக்காம வச்சிருந்த கால் தானே, அதான் அப்படி இருக்கு…”

“ஓகே டாக்டர்…”

“ஆக்சுவலா இங்கே என்னோட பிரண்டு பாமிலியைப் பார்க்க தான் வந்தேன்… அப்பதான் உங்க ஒயிப் மழைல இறங்கி நடந்துட்டு இருந்தாங்க, அதான் டிராப் பண்ணேன்…” அவன் ‘உங்க ஒயிப்’ என்ற வார்த்தையை சற்று அதிகப்படியான அழுத்தத்தோடு சொன்னது போல் இருந்தது பிரபஞ்சனுக்கு.

“என் பிரண்டு பாமிலியும் இதே அபார்ட்மென்ட்ல தான் இருக்காங்க, மிஸ்டர் பிரபஞ்சன்… உங்களுக்கு கூட அவங்களைத் தெரிஞ்சிருக்கலாம், அவன் பேரும் அர்ஜூன் தான், சிஸ்டர் நேம் தியான்னு சொன்னான்… அவங்க அம்மாவைப் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்…” அர்ஜூன் கிஷோர் விளக்கமாய் சொல்லவும் பிரபஞ்சனுக்குப் புரிந்தது.

“எஸ் தெரியும்… மேல் புளோர்ல இருக்காங்க, உங்களுக்கு அவரோட எப்படி பழக்கம்…?”

“நானும் மும்பை ஹாஸ்பிடல்ல வொர்க் பண்ணவன் தானே,  அப்படியே பழக்கம்…” அதற்குள் ரஞ்சனா காபியுடன் வர புன்னகையுடன் அவளை ஏறிட்டான் அர்ஜூன்.

“தேங்க் யூ…” காபிக் கோப்பையை எடுத்துக் கொண்டான். கணவனுக்கும் ஒரு கோப்பையைக் கொடுத்துவிட்டு, “வந்துடறேன்…” என்று அறைக்குள் நுழைந்தாள் ரஞ்சனா.

ஈர உடையுடன் அவர்கள் முன்னே நிற்க சங்கோஜமாய் இருந்தது. வேகமாய் தலை துவட்டி வேறு உடைக்கு மாறியவள் ஹாலுக்கு வர காபி குடித்து முடித்து விடை பெறுவதற்காய் காத்திருந்தான் அர்ஜூன் கிஷோர்.

“ஓகே, நான் கிளம்பறேன் சனா… இப்பதான் வீடு தெரிஞ்சிருச்சே, அடிக்கடி உங்களை நேர்ல வந்து டிஸ்டர்ப் பண்ணுவேன் பிரபஞ்சன்… உங்களுக்கு ஒண்ணும் பிராப்ளம் இல்லையே… செக்கப் வீட்டுலயே பண்ணிக்கலாம், ஏதாச்சும் அவசியம்னா மட்டும் ஹாஸ்பிடல் வந்தாப் போதும்…”

“எங்களுக்காக ரொம்ப மெனக்கெடறீங்க, தேங்க்ஸ் டாக்டர்…”

“ரஞ்சனாவோட ஹஸ்பன்ட் நீங்க, இது கூடப் பண்ணலேன்னா எப்படி…” என்றவனின் புன்னகை மிகவும் அழகாய் இருந்ததாய் பிரபஞ்சனுக்குத் தோன்றியது.

“சனா, என்னோட கொஞ்சம் துணைக்கு வர முடியுமா…? பர்ஸ்ட் டைம் அர்ஜூன் வீட்டுக்குப் போறேன்… அங்க லேடீஸ் மட்டும் தான் இருக்காங்கன்னு நினைக்கறேன், அதான்…” அவனது வேண்டுகோள் நியாயமாய் இருக்க ரஞ்சனா தவிப்புடன் கணவனைப் பார்த்தாள்.

Advertisement