Advertisement

 அத்தியாயம் – 15

பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த ரஞ்சனா, கண்டக்டரின் விசிலைத் தொடர்ந்து ‘சீக்கிரம் இறங்குங்க…’ என்ற உரத்த குரலில் கலைந்தாள். சட்டென்று பார்வையை வெளியே பதித்தவள் பேருந்து அவள் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் நிற்கவே பதட்டமாய் எழுந்து இறங்க சென்றாள்.

வழியில் அடுத்த நாளுக்கு வேண்டிய காய்கறி, பழங்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். அவள் வரும் நேரமானதும் பிரபஞ்சனின் விழிகள் வாசலிலேயே நிலைத்திருக்க அவள் தாமதிக்கவும் முகம் கடினப்பட்டது.

வேகமாய் கதவைத் திறந்து புன்னகையுடன் நுழைந்தவள், அவனது வாடிய முகத்தைக் கண்டதும் அருகில் வந்தாள்.

“சாரி பிரபா… காய்கறி, பழம் வாங்கிட்டு வர லேட்டாகிருச்சு… மதியம் சாப்பிட்டீங்களா, மாத்திரை போட்டிங்களா…?” அவள் அடுக்கடுக்காய் கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தாள்.

“ம்ம்…” என்ற வார்த்தையில் பதிலை முடித்துக் கொண்டான். கணவனின் களையிழந்த முகத்தைக் கண்டவளின் மனம் வேதனையில் தவித்தது. அவன் அருகே வந்து நின்றவள் இதமாய் தலை கோத, தாய் மடி சேர்ந்த கன்னுக்குட்டி போல் அவளது கையை எடுத்து நெஞ்சில் வைத்துக் கொண்டான் பிரபஞ்சன்.

“உனக்கு என்னால ரொம்ப சிரமம்ல…”

“ப்ச்… அப்படிலாம் சொல்லக் கூடாது, எனக்கு முடியலைனா நீங்க பார்த்துக்க மாட்டீங்களா என்ன…?” என்றவள் அவன் நெற்றியில் மெல்ல முத்தமிட கண்ணை மூடிக் கொண்டவனின் கண்களில் இயலாமையின் ஈரம் தெரிந்தது.

“ஹேய்…! இப்படி பீல் பண்ணா எப்படி பிரபா…? தைரியமா இருந்தாத்தானே சீக்கிரம் குணமாகி பழைய போல என்னைக் கொஞ்ச முடியும்…” இயல்பாக்க குறும்பாய் கண்ணடித்துக் கேட்டவளை சலனமின்றிப் பார்த்தான் பிரபஞ்சன்.

“ஒரே நிமிஷம்…! வந்துடறேன்…” சொன்னவள் கட்டிலின் கீழே பெட்பானிலிருந்த மூத்திரத்தை அப்புறப்படுத்தி, நனைந்த  துணியால் அவனைத் துடைத்துவிட்டு முடியை சீவி ஒதுக்கினாள். இரண்டு நாட்கள் முன்னர் தான் பார்பர் ஒருவர் வீட்டுக்கு வந்து பிரபஞ்சனின் காடு போல் வளர்ந்திருந்த முடியை வெட்டி, ஷேவ் செய்துவிட்டுப் போயிருந்தார். அவளும் குளித்துவிட்டு காபியுடன் கணவனிடம் வந்தாள்.

அவன் எத்தனையோ ஒடுங்கிப் போயிருந்தான். இந்த விபத்து உடலை உருக்குலைத்ததோடு, மனதின் தைரியத்தை இழக்க வைத்து அத்தியாவசியத் தேவைக்கு கூட மற்றவர்களை சார்ந்திருக்கும் அவஸ்தையில் சுருங்கிப் போயிருந்தது. வெகு நாட்களாய் சிரிக்கக் கூட மறந்திருந்தான்.

“நைட்டுக்கு என்ன பண்ண… இட்லியா, தோசை ஊத்தவா…?”

“ப்ச்… ஏதோ பண்ணு…” என்றான் வெறுப்புடன். எப்போதும் எல்லாவற்றிலும் மனைவிக்குத் துணை நின்றவன் இப்போது அவளை மட்டும் தனியே சுழல விடுவதில் மனம் நொந்து போயிருந்தான். படுத்தே கிடந்ததில் முதுகு மரத்துப் போயிருக்க வேலைக்கு நடுவே அவளை அழைத்து அமர வைக்க சொல்லவும் மனம் வராமல் கிடந்தான்.

இட்லி ஊற்றி அவனுக்கு ஊட்டிவிட்டு, மாத்திரை கொடுத்து வாயைத் துடைத்து விட்டவள், பேருக்கு இரண்டை வயிற்றுக்குள் தள்ளிவிட்டு துவைக்க வேண்டிய துணிகளை எடுத்துக் கொண்டு நகர்ந்தாள். இரவே துவைத்து விட்டால் காலையில் அந்த வேலை மிச்சமாகுமே.

வேலைகளை முடித்து அடுத்த நாளுக்கான காய்கறிகளை எடுத்துக் கொண்டு கணவன் அருகே வந்தாள். டீவியில் ஏதோ பாட்டு ஓடிக் கொண்டிருந்தது. பிரபஞ்சனுக்கு உள்ள ஒரே பொழுதுபோக்கு இப்போது அது மட்டுமே.

“பிரபா, கொஞ்ச நேரம் சாய்ஞ்சு உக்காரறீங்களா…?” கேட்டவளிடம் தலையாட்ட தலையணையை சரித்து வைத்து சாய்வாய் அமர வைத்தாள்.

“பிரபா, உங்களுக்கு ஒரு வீல் சேர் ஆர்டர் பண்ணிருக்கேன்… நாளைக்கு வந்திடும்…?”

“ம்ம், இப்ப அது ஒண்ணுதான் குறைச்சல்…” என்றவன் சட்டென்று அடிவயிற்றில் தோன்றிய வலியில் முகத்தை சுளிக்க ரஞ்சனா பதட்டமாய் அவன் அருகே வந்தாள்.

“என்ன பிரபா, என்ன பண்ணுது…?”

“அடிக்கடி அடி வயித்துல ஒரு வலி வருது…” முகத்தை சுருக்கியபடி சொன்னான் அவன்.

“இந்த வீக் செக்கப் போகும்போது டாக்டர்கிட்ட சொல்லி ஒரு ஸ்கேன் எடுத்துப் பார்த்துடலாம்…”

“ம்ம்…”

“சரி, வலிச்சா நீங்க உக்கார வேண்டம்… படுத்துக்கங்க…” சொன்னவள் மீண்டும் அவனைப் படுக்க வைத்தாள்.

முதுகெல்லாம் அரிக்க வெறுப்பாய் இருந்தது அவனுக்கு. கண்ணை மூடிப் படுத்தவன் அடுத்து டீவியில் ஒலித்த பாடலில் கண்ணைத் திறந்து பார்த்தான். அது அவர்கள் இருவருக்கும் மிகவும் பிடித்த காதல் பாடல்.

பேசாத மொழியே

பொழியாத பனியே

புலராத பூஞ்சோலையே…!

கேஎஸ் ஹரிஷங்கரின் குரல் தேனாய் உருக, அடுக்களைக்கு சென்றிருந்த ரஞ்சனா அப்பாடலைக் கேட்டு வேகமாய்  வந்து சானலை மாற்றினாள்.

“அந்தப் பாட்டையே வை…” பிரபா சொல்ல தவிப்புடன் மீண்டும் ரஞ்சனா அந்தப் பாடலை வைக்க சின்மயியுடைய குரல் காதல் தவிப்பில் பாகாய் இனித்தது. சட்டென்று நினைவுகள் இருவருக்கும் அந்த நாளைய இனிமைக்கு செல்ல விழிகள் மட்டும் பாட்டில் நிலைத்தது.

வேரோடு எனையே

சாய்க்கின்ற விழியே

உயிரோடு விளையாடுதே…!

ஒருநாள் இரவு வேலை முடிந்து இருவரும் ஓய்வாய் சோபாவில் அமர்ந்து  டீவி பார்த்துக் கொண்டிருக்க இந்தப் பாடலின் படத்துக்கான விமர்சனம் ஓடிக் கொண்டிருந்தது.

“பாட்டு நல்லாருக்குல்ல பிரபா…” கணவனின் தோளில் சாய்ந்திருந்த ரஞ்சனா சொல்ல தலையாட்டினான்.

“ம்ம்… பாடல் வரிகளும் சூப்பரா இருக்கும்…” என்றவன் தனது மொபைலில் அப்பாடலைத் தேடி ‘கானா ஆப்’ பில் ஒலிக்க விட, இருவரும் அருகருகே அமர்ந்து கேட்கும்போதே பிரபாவின் பார்வை மாறியிருக்க, “உன் விழிகள் கூட என் உயிரோட விளையாடுது ரஞ்சு மா…” என்றவனின் தாபக் குரல் அவள் விழிகளில் முத்தமிட சிலிர்ப்புடன் அவன் நெஞ்சில் சாய பாடலுடன் தேடலும் தொடங்கியிருந்தனர்.

பழைய நினைவில் இருவரின் மனமும் கனத்திருக்க, இரண்டு மாதமாய் கணவனின் ஸ்பரிசமில்லா தேகம் அவனது தொடுகைக்காய் ஏங்கியது. பெருமூச்சுடன் எழுந்து அடுக்களைக்கு சென்றவளை வேதனையுடன் தொடர்ந்தது பிரபஞ்சனின் விழிகள்.

என்னதான் சிகிச்சையில் இருக்கிறான் என எதைப் பற்றியும் மனம் யோசிக்காமல் இருந்தாலும், சில நேரம் அவள் மனதும் அவனது அணைப்புக்காய் ஏங்கவே செய்தது. அழகான நதி போல் சந்தோஷமாய் சென்ற வாழ்க்கையை விதி திருப்பிப் போட்டதும், தேவைகளுக்கான ஓட்டமும், மனதையும் உடலையும் சலித்துப் போக செய்கையில் அவனது மார்பில் சாய்ந்து எல்லாவற்றையும் இறக்கி வைத்திட பெண்ணவளின் மனதோடு, உடலும் கணவனைத் தேடவே செய்தது. அவனது கதகதப்பான அணைப்புக்குள் பறவைக் குஞ்சாய் ஒட்டிக் கொண்டு எல்லாப் பிரச்சனைகளையும் மறந்திட மனம் ஏங்கவே செய்தது.

தாம்பத்தியத்திற்கு ஒரு மிகப் பெரிய சக்தி இருக்கிறது. அது ஆபாசமானதோ, அருவருக்கத் தக்கதோ அல்ல… இரண்டு உடல்கள் இயங்குவது மட்டுமல்லாமல் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும், இருவருக்குள்ளும் அன்னியோன்யம் கூடவும் அதுவே முக்கிய வழிவகுக்கிறது… இந்நாளில் விவாகரத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்குகூட தம்பதியரின் அன்னியோன்யம் குறைந்து வருவதே மிகப் பெரிய காரணம் எனலாம்.

குடும்பத்தில் நேரிடும் பொருளாதாரப் பிரச்சனைகள், சிறு சச்சரவுகள், குழந்தைகள் வளர்ப்பு, உடல் ஆரோக்கியக் குறைபாடு இவையெல்லாம் தம்பதியருக்குள் எவ்விதப் பிளவையும் உண்டாக்குவதில்லை. ஆனால் மனதையும், உடலையும் மகிழ்ச்சியாக்கும் தாம்பத்தியத்தில் நேரும் குறைபாடுகளும், பரஸ்பர புரிதலின்மையும் தம்பதியருக்குள் இருக்கும் அன்னியோன்யத்தைக் குறைத்து விரிசலை அதிகமாக்கி விடுகிறது. இங்கே இரு இளம் உள்ளங்களும் தாம்பத்தியத்தில் சந்தோஷமாய் நீந்தத் தொடங்கிய வேளையில் இப்படியான ஒரு விபத்து இருவருக்குள்ளும் பெருத்த வேதனை, ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தது. உடல் மரத்துப் படுக்கையில் கிடந்தாலும் தாம்பத்தியத்தின் சுவை அறிந்த ஆண்மகனாய் பிரபஞ்சனின் மனதும் மனைவியின் அருகாமைக்கும், தீண்டலுக்குமாய் ஏங்கியது.

அடுத்தநாள் அவனது உபயோகத்திற்காய் சக்கர நாற்காலி வீட்டுக்கு வந்துவிட ஒரு கையால் அதை இயக்கிக் கொண்டு அவனால் அங்குமிங்கும் நகர முடிந்தது. காலை முதல் நாற்காலியில் சாய்வாய் அமர்ந்திருந்தவன் மதியம் வாட்ச்மேன் உதவியால் கட்டிலுக்கு மாறிக் கொண்டான். இப்படியாய் அவனது பொழுதுகள் வெறுமையாய் நகர்ந்தது.

அடுத்த நாட்களில் ஆசுபத்திரியிலும் ரஞ்சனா பயந்தது போல் அர்ஜூன் அவளிடம் பேசவோ, தொந்தரவுக்கோ வராமல் இருக்கவே அவளும் சற்று நிமமதியானாள்.

வார்டில் பேஷன்ட் ஒருவருக்கு குளுகோஸ் பாட்டிலை பொருத்தி சரி பார்த்தவள் கதவருகே நிழலாட நிமிர்ந்தாள்.

அர்ஜூன் கதவருகே நின்று அவளைப் பார்த்துக் கொண்டிருக்க அவளுக்கு ஒரு மாதிரி வியர்த்துப் போனது.

“டா…டாக்டர்…”

“குட் மார்னிங் சனா…”

“கு..குட்மார்னிங் டாக்டர்…”

“ஹேய்..! கூல், குலாபி…” எப்போதும் போல இயல்பாய் சொல்லி புன்னகைத்தவன், “நாளைக்கு பிரைடே, உன் ஹஸ்பண்டுக்கு செக்கப் இருக்குல்ல…” என்றான்.

“ம்ம்… எஸ் டாக்டர்…”

“அழைச்சிட்டு வா, எனக்கு அவரைப் பார்க்கணும்…”

“எ..எதுக்கு, அவர பார்க்கணும்…” அவள் பதட்டமாகக் கேட்க ஆழமாய் அவளைப் பார்த்துவிட்டு சொன்னான் அர்ஜூன்.

“நான் ஒரு ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட்… உன் ஹஸ்பண்டுக்கு என்ன பிராப்ளம்னு தெரிஞ்சுக்க வேண்டாமா…?”

“ம்ம்…” அப்போதும் அவள் முகம் தெளிவில்லா மேகமாய் குழம்பிக் கிடக்க கனிவோடு கூறினான்.

“பயப்படாத…! அவர்கிட்ட நம்ம பழைய விஷயத்தைப் பேச மாட்டேன்…” சொன்னவன் சட்டென்று நகர்ந்து விட அவளுக்கு ஒரு மாதிரியாய் இருந்தது. இயல்பாய் வேலைகளை கவனிக்க முயன்றாலும் மனது அர்ஜூனைப் பற்றிய நினைவுகளில் தடுமாறியது.

“சாரி அர்ஜூன்…! உங்களை நான் கஷ்டப் படுத்திட்டேன்… இனி என் முகத்திலேயே விழிக்க மாட்டீங்கன்னு நினைச்சா என் முன்னாடியே வந்து நிக்கறீங்களே… இது நல்லதுக்கா, கெட்டதுக்கான்னு தெரியலை, இனியும் நீங்க எனக்காக உங்க வாழ்க்கையைத் தொலைச்சிடக் கூடாது…” மனது அவனுக்காய் விசனப்பட்டுக் கொண்டிருந்தது.

“ரஞ்சனா, இன்னிக்கு சர்ஜரி பண்ண வேண்டியவங்க ரிப்போர்ட் எல்லாம் டாக்டர் டேபிளுக்கு அனுப்பியாச்சா…?” கேட்டபடி வந்த லாவண்யா அவள் ஏதோ யோசனையில் இருப்பதைக் கண்டு உலுக்க சுதாரித்தவள், “இதோ, இப்ப அனுப்பிடறேன்…” மனதை அந்த வேலைக்குத் திருப்பினாள்.

அடுத்தநாள் கணவனுடன் ஆசுபத்திரிக்கு வரும்போதும் அவள் மனதுக்குள் சஞ்சலம் இருக்கவே செய்தது. அர்ஜூனிடம் அனுமதி பெற்று அவனது அறைக்குள் நுழையும்போதும் அது தொடர்ந்தது. ஆனால் அர்ஜூனின் பேச்சும், செயலும் அவளுக்கு வியப்பளித்தன.

“ஹலோ மிஸ்டர் பிரபஞ்சன்… வாங்க, எப்படி இருக்கீங்க…?” தனது இருக்கையிலிருந்து எழுந்து வீல் சேரில் அமர்ந்திருந்த பிரபாவை நோக்கி வந்தவன் புன்னகையுடன் கேட்டான்.

வழக்கமாய் பரிசோதிக்கும் டாக்டர் இல்லாமல் இன்று புதிய ஒருத்தனை அதுவும் மிகவும் பரிச்சயம் உள்ளவன் போல தோரணையுடன் தன்னிடம் பேசி வரவேற்றவனை பிரபஞ்சன் புரியாத பார்வை பார்த்தான்.

“என்ன அப்படிப் பார்க்கறீங்க…? நான் அர்ஜூன் கிஷோர்…! உங்க மனைவி ரஞ்சனாவும், நானும் ஒண்ணா மும்பைல வொர்க் பண்ணிருக்கோம்…” அவன் தெளிவுபடுத்த பிரபஞ்சன் மனதில் குழப்பம்.

“ரஞ்சு இதைப் பற்றி ஏன் என்னிடம் சொல்லவில்லை…?” யோசித்தபடி மனைவியைப் பார்க்க அவள் முகத்தில் ஏதோ கலவரம் இருக்க ஒரு தவிப்பும் தெரிந்தது.

“என்ன மிஸ்டர் பிரபா, உங்க ஒயிப் என்னைப் பத்தி எதுவும் சொல்லலியேன்னு யோசிக்கறீங்களா…? நான் அவ்வளவு முக்கியமானவன் எல்லாம் இல்லை, அதான் சொல்லாம விட்டிருப்பாங்க…” அவன் சாதாரணமாய் சொல்லுவது போல் இருந்தாலும் அதற்குள் ஒரு வலி மறைந்திருப்பதை ரஞ்சனாவால் உணர முடிந்தது.

“வாங்க, செக்கப் முடிச்சுடலாம்…” சொன்னவன் பிரபஞ்சனை ரஞ்சனாவின் உதவியுடன் அங்கிருந்த படுக்கையில் படுக்க வைத்தான்.

“டா..க்டர், இவருக்கு அடிவயித்துல அடிக்கடி வலிக்குதுன்னு சொல்லுறார்… அதைக் கொஞ்சம் பார்க்கணும்…”

“ஓ…! ஓகே சனா, நீ கொஞ்சம் வெளிய இரு… நான் பார்த்துக்கறேன்…” அர்ஜூன் சொல்ல ரஞ்சனா கணவனை தயக்கத்துடன் பார்த்துவிட்டு வெளியேறினாள்.

“அவளது விழிகள் ஏன் இத்தனை மருண்டு விழிக்கின்றன…?” யோசித்தபடி படுத்திருந்தவனின் இடுப்பு, கால் எலும்புகளை அர்ஜூன் அழுத்திப் பார்க்க வேதனையில் முகம் சுளித்தான்.

“அடிவயித்துல எங்க வலிக்குதுன்னு சொல்லுங்க…” என்றபடி அவன் பேன்ட்டை சற்றுத் தளர்த்தி வயிற்றுப் பகுதியில் மெல்ல அழுத்திக் கொண்டு வர ஓரிடத்தில் அழுத்தியதும் அலறினான் பிரபஞ்சன்.

“யூரின், மோஷன் போகும்போது பெயின் இருக்கா…?”

“யூ..யூரின் போகும்போது வலி இருக்கு டாக்டர்…” வேதனையில் முகத்தை சுளித்தபடி கூறினான் பிரபா.

“ஓ… ஓகே… டோன்ட் வொர்ரி, ஒரு ஸ்கேன் எடுத்துப் பார்த்துடலாம்…” சொன்னவன் ரஞ்சனாவை அழைத்தான்.

“எப்படி இவரை அழைச்சிட்டு வந்திங்க, சிரமமா இருக்குமே…”

“ம்ம்… வேற வழி இல்லையே டாக்டர்…”

“அடுத்த முறை செக்கப்புக்கு இவரை இங்கே அழைச்சிட்டு வந்து கஷ்டப்படுத்த வேண்டாம்… நான் வீட்டுக்கே வந்து பார்த்துக்கறேன்… வரலாம் தானே…!” என்றவன் கேள்வியுடன் அவர்களைப் பார்க்க ரஞ்சனா பதில் சொல்லாமல் நிற்க, பிரபஞ்சன் இங்கே கிளம்பி வருவதற்கு முன் அனுபவித்த வலிகளை நினைத்து வேகமாய் சம்மதித்தான்.

“ம்ம்… ஒரு ஸ்கேன் எடுத்திடலாம்…” என்றவன் ரஞ்சனாவை அழைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்ய சொன்னான். அன்று அவள் விடுப்பு எடுத்திருந்ததால் எல்லாவற்றையும் கணவனுடன் இருந்து அவளே பார்த்துக் கொண்டாள். ஸ்கேன் முடிந்து ரிப்போர்ட்டுடன் பிரபஞ்சனைக் காண சென்றவளுக்கு அந்த ரிப்போர்ட்டில் ஒரு சந்தோஷமான செய்தியோடு அதிர்ச்சியான செய்தியும் காத்திருந்தது.

உடல் இளகிய அலைச்சலும், பரிசோதனைகளும் பிரபஞ்சனுக்கு அசதியைக் கொடுத்திருந்தாலும், இடுப்பில் செய்த ஆப்பரேஷன் நன்றாக செட்டாகி இருப்பதால் மெல்ல அமரவும், நடக்கவும் பயிற்சி செய்யுமாறு கூறியிருந்தனர்.

“இன்னும் சில நாட்களில் நான் பழையது போல் எல்லாமே செய்யப் போகிறேன்…” என்ற நினைப்பு அவனுக்கு புது உற்சாகத்தைக் கொடுத்திருக்க, “ரஞ்சனாவின் முகத்தில் இத்தனை குழப்பம் எதனால்…?” என்ற கேள்வி அவன் மனதைக் குடைந்து கொண்டிருந்தது.

டாக்ஸிக்குள் எதுவும் பேசாமல் கண் மூடிக் கிடந்தான் பிரபஞ்சன். வீட்டுக்கு வந்த பிறகும் மனைவி ஏதோ யோசனையுடன் இருப்பது போலவே தோன்றியது. அந்த அமைதியைக் கலைப்பதற்காய் ரஞ்சனாவின் அலைபேசி சிணுங்க ராதிகா அழைத்திருந்தார்.

“ஹலோ, சொல்லுங்கத்தை…”

“இன்னிக்கு செக்கப்புக்குப் போகறோம்னு சொன்னிங்களே, டாக்டர் என்ன சொன்னாரு மா…?”

“அ..அவருக்கு இப்போ நல்ல முன்னேற்றம் இருக்குன்னு சொன்னாங்க அத்தை… மெதுவா நடக்கக் கூட சொன்னாங்க, ஒரு மாசத்துக்குப் பிறகு இன்னொரு சின்ன ஆப்பரேஷனும் பண்ணிட்டா, அந்த வயித்து வலியும் சரியாகிடும்னு சொன்னாங்க…” என்றாள் கணவனை அடிக்கண்ணால் பார்த்து.

“ம்ம்… நல்ல விஷயம் சொன்ன மா… புள்ளைக்கு நல்லாகணும்னு கடவுளை வேண்டிகிட்டே கிடந்தேன்…”

“ம்ம்… மாமாவுக்கு காய்ச்சல்னு சொன்னிங்க, மாறிடுச்சா அத்தை… வைஷாலி பேசினாளா…?”

“ம்ம்… அவருக்குப் பரவால்லை மா, இப்ப அத்தைக்கு தான் மூட்டு வலி, பாவம்… உக்கார்ந்தா எழுந்திருக்க முடியாம கஷ்டப் படுறாங்க… பிரபாட்ட பேசி நாளாச்சு, போனைக் கொஞ்சம் அவன்கிட்ட கொடேன்…”

“ம்ம்… சரிங்கத்தை…” என்றவள் கணவனிடம் கொடுக்க அவன் வாங்கிப் பேசினான். வெகு நாட்களுக்குப் பிறகு உற்சாகமாய் ஒலித்த மகனின் குரல் அந்தத் தாயின் மனதுக்கு நிம்மதியைக் கொடுக்க சந்தோஷமாய்ப் பேசினார்.

பேசி முடித்து புன்னகையுடன் அவளிடம் கொடுத்தவன் “வைஷுவுக்கு சரியான கணக்குல ஏழாவது மாசம் தொடங்கப் போகுதாம்… அது முடிய முன்ன வளைகாப்புக்கு ஏற்பாடு பண்ணிடணும்னு அம்மா சொல்லுறாங்க…”

“ம்ம்…”

“என்ன ம்ம்… அவ பெத்துத் தரப் போற என் மருமகனுக்கு  நாம மகளை ரெடியாக்க வேண்டாமா…?” கண்களிலும், குரலிலும் காதல் வழிய அவன் குறும்புடன் கண்ணடிக்க சட்டென்று அவள் முகம் சிவந்து அடுத்த நிமிடமே ஒரு குழப்பம் முகத்தில் சூழ்ந்ததை யோசனையுடன் பார்த்தான்.

அவள் சட்டென்று பாத்ரூமுக்கு சென்றுவிட குழம்பினான்.

விழுந்திட அனுமதி

கேட்பதில்லை…

விழியோர நீர்த்துளி…

கலங்கிக் கிடக்கும்

மனதை மறைக்கத்

துடிக்கும் பொழுது

கார்மேகமாய் கருத்த

முகமே கண்ணாடியாகிறது…

Advertisement