Advertisement

“ஹேய் குலாபி… ஆப் பீ யஹீங் ஹே…!” நீயும் இங்கே தான் இருக்கிறாயா…? எனக் கேட்டவனின் கழுத்தை கையால் சுற்றி இருந்த குழந்தை, “கிஷோ, யே கௌன் ஹே…?” என்று அவளைக் கை நீட்டி யாரென்று கேட்டது.

“யே, தும் சாச்சி ஹே…” என்றவன் குறும்புடன் அவளை நோக்க அவள் முகத்தில் கோபம் கொப்பளித்தது.

“ஹேய்…! என்ன சொல்லறீங்க…? நான் யாருக்கும் சித்தி இல்லை…” என்றவள் படபடத்தாள்.

“ஹேய்…! கூல் சனா… எதுக்கு கோபம்…?” அவன் சொல்லும்போதே அங்கே ஒரு அழகிய பெண் கண்ணில் கூலரும், ஜீன்ஸ் டீஷர்ட்டுமாய் அருகே வந்தாள்.

“க்யா ஹுவா கிஷோ, யே கௌன் ஹே…?” என அப்பெண்ணும் கேள்வி எழுப்ப ரஞ்சனாவுக்கு எரிச்சலாய் வந்தது. அவனை அங்கே பார்த்ததும் ஓடி இருக்கலாமோ என்று கூடத் தோன்றியது. ஆனாலும் அவளது மென்மையான சுபாவம் அதற்கு இடம் கொடுக்காததால் வெறுமனே ஒரு புன்னகையைக் கொடுத்து அமைதியாய் நின்றவள் அவன் ஏதாவது வில்லங்கமாய் சொன்னால் பட்டென்று கேட்டுவிடும் தீர்மானத்துடன் நின்றிருந்தாள்.

ஆனால் அதற்கு வாய்ப்பின்றி அர்ஜூன் கிஷோர் அவளைத் தன்னுடன் ஹாஸ்பிடலில் பணிபுரியும் நர்ஸ் என்று அப்பெண்ணுக்கு அறிமுகம் செய்து அமைதியானாள்.

“யே, மேரீ பாபி ஹே…” என்று அவனது அண்ணியையும்  அவளுக்கு அறிமுகம் செய்ய அவன் எந்த அர்த்தத்தில் குழந்தையிடம் தன்னை சித்தி என்று கூறினான் என்று புரிய அவளுக்கு மீண்டும் கோபம் வந்தது.

அழகாய் கரிஷ்மா கபூருக்கு அக்கா போலிருந்த அவனது பாபி பொதுவாய் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு அகல, அவளிடம் தனிமையில் சிக்காமல் அண்ணியுடன் நகர்ந்த அர்ஜூன் கோபத்துடன் நிற்பவளைத் திரும்பிப் பார்த்து, “கூல் குலாபி…!” என்று கண் சிமிட்டிச் செல்ல கடுப்புடன் தனது கூடையை எடுத்துக் கொண்டு பில் கவுன்டருக்கு நகர்ந்தாள்.

“சாச்சியாம் சாச்சி… யாருக்கு யாரு சாச்சி…! மவனே, தனியா சிக்காமலா போயிருவ…! உனக்கு இருக்கு கச்சேரி…” என்றபடி பணத்தைக் கொடுத்துவிட்டு கிளம்பினாள்.

அந்த வாரம் முழுதும் அவளுக்கு இரவு டியூட்டி என்பதால் அர்ஜூனைக் காணாமலே கழிய அவளுக்கே ஒருமாதிரி இருந்தது. இருந்த கோபம் ஒருவாரமாய் காணாததில் காணாமல் போயிருக்க அவனைக் காண மனம் ஏங்கியது.

அடுத்தநாள் காலையில் டியூட்டிக்கு வந்தவள் அர்ஜூனைக் கண்டதும் இயல்பாய் புன்னகைக்க, அவனோ அவளை நோக்கி சிரிக்கக் கூட செய்யாமல் கர்மமே கண்ணாக டியூட்டி விஷயமாய் மட்டுமே பேசிவிட்டு நகர அவளுக்கு கடுப்பாக இருந்தது.

“ப்ச்… அந்த அர்ஜூனுக்குப் பெரிய இவன்னு நினைப்பு… நானே கோபத்தை விட்டு சிரிக்கிறேன், கண்டுக்காம போறான்… பெரிய டாக்டர்…! இனி நானும் அவனைப் பார்த்தா சிரிக்கப் போறதில்லை…” என நினைத்தபடி தனது வார்டில் அமர்ந்திருந்தவளின் தீர்மானம் அடுத்த நிமிடமே தவிடு பொடியாகப் போவதை அவள் அறியவில்லை.

“ரஞ்சனா சிஸ்டர், அர்ஜூன் டாக்டர் ஆப்கோ புலாதா ஹே…” என்றபடி வந்து நின்றான் வார்டு பாய்.

“டீக்கே… மெய்ன் ஆ ரஹா ஹூன்…” வருவதாய் சொல்லி அவனை அனுப்பிவிட்டு எழுந்தவள் டாக்டரின் காபினுக்கு  சென்று கதவைத் தட்ட, “கம்மின்…” என்றது கணீர் குரல்.

உள்ளே சென்றவள் “எஸ் டாக்டர்…” என,

“இந்த லிஸ்ட்ல உள்ள பேஷன்ட் ரிப்போர்ட்ஸ் சீப் டாக்டர் டேபிளுக்கு அனுப்பிடுங்க, சனா… ஜீவிகா டாக்டர் ஒரு ரிப்போர்ட் கொடுப்பாங்க, அதையும் சேர்த்துருங்க…” சரளமாய் ஹிந்தியில் சிரிக்காமல் சொன்னவனிடம் கடுப்புடன் தலையாட்ட சட்டென்று அவனது அலைபேசி அலறியது.

ரோஜா ரோஜா, ரோஜா ரோஜா…

ரோஜா ரோஜா, ரோஜா ரோஜா…

மேரி ரோஜா… ரோஜா ரோஜா…

என்றதை வேகமாய் சைலண்டில் போட்டவன், அவளை ஏறிட பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி நின்றாள் அவள்.

“அ..அது வந்து…”

“அப்பப்ப நீங்க ஒரு டாக்டர்னே மறந்திடறீங்க டாக்டர், இதெல்லாம் ஒரு ரிங் டோன்னு வச்சிருக்கீங்க, யாராச்சும் கேட்டா என்ன நினைப்பாங்க…?”

“என்ன நினைப்பாங்க…? எனக்கு ரோஜாவை ரொம்பப் பிடிக்கும்னு நினைப்பாங்க, அது உண்மைதானே…” என்றான் அவன் சிரிக்காமலே.

அதற்கு என்ன பதில் சொல்லுவதென்று தெரியாமல் முழித்தவள் அதற்கு மேல் பேச்சை வளர்த்தாமல் நகர்ந்தாள். அதற்குப் பிறகு வந்த நாட்களிலும் அவளைத் தொந்தரவு செய்யவில்லை. ஆனால் முன்பு அவளிடம் எடுத்துக் கொண்ட சலுகைகளை விட்டுக் கொடுக்கவும் இல்லை.

எல்லாரும் ரஞ்சனா சிஸ்டர் என்று அழைத்தால் அவன் மட்டும் முன்னில் உள்ள ‘ரஞ்’ பின்னில் உள்ள சிஸ்டரைக் கட் செய்துவிட்டு ‘சனா’ என்று தான் அழைப்பான். ஒருநாள் அவனது உடன் படித்த தோழியும் டாக்டருமான ஜீவிகா கூட அவனிடம் கேட்டுவிட்டாள்.

“என்ன அர்ஜூன், ரஞ்சனாவை மட்டும் சிஸ்டர் கட் பண்ணி கூப்பிடற… என்ன விஷயம்…?” கேட்டுவிட்டு குறுகுறுவென்று நண்பனைப் பார்த்தவளை நோக்கிப் புன்னகைத்தவன் அவள் காதில் கிசுகிசுப்பாய் சொன்ன பதிலைக் கேட்டு அவள் அடக்க மாட்டாமல் சிரித்துவிட்டாள்.

“ஹாஹா… என்னது…? ரஞ்சனா சிஸ்டரை மதர் ஆக்கப் பிளான் பண்ணறியா…? ராஸ்கல்…!” என்று கடிந்து கொண்டாலும் அவளால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.

“நான் ஜோக்குக்கு சொல்லலை ஜீவி, பர்ஸ்ட் டைம் அவளைப் பார்த்ததுமே என் மனசுல பதிஞ்சிட்டா…” அவன் சீரியஸாய் சொல்ல, யோசித்தாள் தோழி.

“இது ரஞ்சனாவுக்குத் தெரியுமா…?”.

“ம்ம்… அவளை எனக்குப் பிடிக்கும்னு தெரியும்… பட் என் காதலை இன்னும் சொல்லலை, அதுக்கான சமயம் இன்னும் வரலை… அவளுக்கும் என் மேல ஒரு விருப்பம் வந்த பிறகு தான் சொல்லணும்னு நினைக்கறேன்…”

“ம்ம்… சூப்பர், ரஞ்சனா உனக்கு பெஸ்ட் சாய்ஸ் தான், குட்லக்…” மனதார வாழ்த்தினாள் ஜீவிகா.

ஒரு வருடம் அப்படியே நகர ரஞ்சனா குவார்டர்ஸ்க்கு மாறி இருந்தாள். அதன்பின் ஒரு மெடிக்கல் கேம்புக்கு சென்றிருந்த அர்ஜூன் ஆறு மாதம் கழித்தே மும்பை வந்தான். அவனில்லாத நாட்களில் மனதில் ஒரு வெறுமையை உணர்ந்தாலும் அவனது நேசமும், நட்பும் அவ்வளவு தான் என நினைத்து ரஞ்சனாவும் அவனைப் பற்றிய எண்ணங்களை ஒரு ஓரமாய் மனதுக்குள் ஒதுக்கி விட்டு தனது வேலையில் மட்டுமே கருத்தாய் இருந்தாள்.

இந்த ஆறு மாதத்தில் இருவரும் கண்டு கொள்ளாததோடு போனில் கூடப் பேசவில்லை. அன்றும் ஆசுபத்திரிக்கு வந்தவள் வழக்கம் போல் வேலையைத் தொடங்க அர்ஜூன் டாக்டர் என்று நர்ஸ்கள் தம்மில் ஏதோ பேசிக் கொள்ளவும் ஒதுக்கி வைத்திருந்த அவனது நினைவுகள் மீண்டும் மனதுக்குள் நிறைந்துவிட அவனைக் காண ஆவல் எழுந்தது.

அவன் டியூட்டிக்கு வந்திருப்பது தெரிந்தாலும் காணும் சந்தர்ப்பம் அமையவில்லை. ஏதோ ஒரு முக்கியமான சர்ஜரிக்கு வேண்டியே அன்று அவன் வந்திருப்பதாக சொல்ல அவள் கண்ணில் படவேயில்லை. மாலையில் சோர்வுடன் கிளம்பியவள் பின்னிலிருந்து கேட்ட குரலில் மலர்ந்தாள்.

சட்டென்று திரும்பியவள் முன்னில் கண்ணில் குறும்பு வழிய புதிதாய் குறுந்தாடியுடன் முன்னைவிட ஹாண்ட்சமாய் அழகாய் நின்றிருந்தான் அர்ஜூன் கிஷோர். அவனை ஒரு நிமிடம் கண்களில் நிறைத்துக் கொண்டவள் எதுவும் பேசாமல் தன்வழியே நடக்கத் தொடங்கினாள்.

“சனா, நில்லு…” வேகமாய் முன்னில் வந்து இடைமறித்தான்.

“யார் நீங்க… எதுக்கு என்னை வழி மறிக்கறீங்க…?” படபடவென்று பொரிந்தவளை நிதானமாய் பார்த்தவன், “ஏய் குலாபி…! என் மேல கோபமா…?” என்றான் புன்னகையுடன்.

இடவலமாய் தலையாட்டி மறுத்தவள், “இல்லியே… சின்னதா ஒரு வருத்தம், அவ்ளோ தான்…” என்றாள் புன்னகையுடன்.

“என்ன வருத்தம்…?”

“இவ்ளோநாள் பழகின பிரண்ட்ஷிப்க்கு நீங்க இவ்ளோ தான் மதிப்பு கொடுத்திருக்கீங்கன்னு…”

“பிரண்ட்ஸா…?”

“பின்ன இல்லியா…? உங்களை பிரண்டா ஏத்துக்காம தான் குலாபி, சனான்னு எல்லாம் கூப்பிட சம்மதிச்சேனா…?” அவள் கேட்க, “ஆஹா, இது வேறயா…?” என்றான் மனதில்.

பதில் சொல்லாமல் அவளையே பார்த்தவன், “நீ என்னை ரொம்ப மிஸ் பண்ணியா சனா…” என்றான் ஆவலுடன்.

“சேச்சே, அதெல்லாம் இல்லை… விட்டது தொல்லைன்னு நிம்மதியா தான் இருந்தேன்…” என்றாள் விளையாட்டாக. அவனுக்கு அது பீல் ஆனதோ என்னவோ சட்டென்று முகம் மாறிப் போனது. அது அவளுக்கும் வருத்தத்தைக் கொடுக்க சமாதானமாய் பேச முயன்றாள்.

“சரி, எப்படி இருக்கீங்க…? அதைச் சொல்லுங்க…”

“ம்ம்… இருக்கேன், நான் உன்னை ரொம்ப தொல்லை பண்ணிட்டேனா…?” என்றான் அவனும் விடாமல்.

“ஹேய்… நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்…”

“அப்ப என்னோட ஒரு காபி சாப்பிட வர்றியா…? ப்ளீஸ்…” குழந்தை போல் கெஞ்சிய வளர்ந்த ஆண்மகனைக் கனிவோடு நோக்கியவள் தலையாட்டினாள். இருவரும் அருகிருந்த காபி ஷாப்புக்குள் நுழைந்து எதிரெதிரே அமர காபியைப் பருகிக் கொண்டே அர்ஜூன் சொன்னான்.

“ரெண்டு மாசம் லீவுல நெக்ஸ்ட் வீக் புனே போறேன் சனா, அப்பாக்கு கொஞ்சம் ஹெல்த் இஸ்யூஸ்…”

“ஓ… போயிட்டு வாங்க…”

“ம்ம்… உனக்கு ஆட்சேபனை இல்லன்னா நான் உனக்கு கால் பண்ணலாமா…?”

“எ..எதுக்கு கால்…? நமக்குள்ள இப்ப இருக்கிற நட்பே போதும், அதுக்கு மேல எந்த முன்னேற்றமும் வேண்டாம்னு நான் நினைக்கிறேன்…” அவள் சொன்ன பதிலில் அவன் முகத்தில் அப்பட்டமான ஏமாற்றம் தெரிந்தது.

“உனக்கு என் மேல எந்த ஒபீனியனும் இல்லியா சனா…?” வலியோடு ஒலித்தது அவனது குரல்.

“ஏன் அப்படி கேக்கறீங்க…? உங்கமேல எனக்கு நல்ல ஒபீனியன் இருக்கே… இவ்ளோ நாள் பழகியும் கண்ணியமா இருக்கற கிரேட் பர்சன் நீங்க, அதைவிட திறமையான ஒரு டாக்டர்…” புரிந்தும் புரியாதது போலவே பேசினாள் அவள்.

“ம்ம்… அவ்ளோதானா…?” அந்த வார்த்தையில் இருந்த ஏக்கமும், வலியும் அவளுக்குப் புரிந்தாலும் பதில் சொல்ல முடியாமல் அமைதியாய் இருந்தவள், “டைம் ஆச்சு, நான் கிளம்பறேன்…” என்று எழுந்து நடக்க வேதனையுடன் அவள் செல்லுவதைப் பார்த்திருந்தான் அர்ஜூன் கிஷோர்.

உன் நினைவுகளின்

அணிவகுப்பில் என் மனதில்

காதலின் படையெடுப்பு…

என் தயக்கங்கள் தகர்த்து

உன் மீதான மயக்கங்கள்

நான் சொல்லிடும்

காலங்கள் வாராதா…

Advertisement