Advertisement

 அத்தியாயம் – 14

நாட்கள் அழகாய் நகரத் தொடங்கின.

ரஞ்சனா கையில் காபிக் கோப்பையுடன் ஜன்னலோரமாய் நின்று வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். தலையிலிருந்து துளித்துளியாய் சொட்டிய நீர்த்துளிகள் அவள் அப்போதுதான் குளித்திருக்கிறாள் என்றது.

அன்று அவளுக்கு இரவு ஷிப்ட் என்பதால் காலையில் மெதுவாய் எழுந்து நிதானமாய் குளித்து கையில் காபியுடன் ரசித்து குடித்தபடி வெளியே வேடிக்கை பார்த்து நின்றாள்.

தோழியர் யாரும் இல்லாமல் எப்போதாவது கிடைக்கும் அந்தத் தனிமை அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஹாஸ்டலின் பின்புறம் இருந்த மரத்தில் அமர்ந்திருந்த கிளிகள் ரெண்டும் மூக்கால் கொஞ்சிக் கொண்டிருக்க அதைக் கண்டவளின் இதழில் புன்னகை மலர்ந்தது.

அதைப் பார்த்தபடி காபியைக் குடித்து முடித்து இறுதித் துளியையும் நாக்கில் சரித்துக் கொண்டபோது அலைபேசி குழந்தையாய் சிணுங்கி தன்னை எடுக்கச் சொன்னது.

டிஸ்பிளேயில் தெரிந்த தந்தையின் எண்ணைக் கண்டதும் ஆவலுடன் எடுத்தாள் ரஞ்சனா. அன்னை தினமும் அழைத்தாலும் எப்போதாவது அழைக்கும் அப்பாவின் அழைப்பு அவளுக்கு ஸ்பெஷலாகவே தோன்றும்… தந்தை என்றும் பெண் பிள்ளைகளின் முதல் ஹீரோ அல்லவா…?

“அப்பா, நல்லாருக்கீங்களா…?”

“இருக்கேன்டா தங்கம்… உனக்கு இன்னைக்கு நைட் ஷிப்ட், ஹாஸ்டல்ல தான் இருப்பேன்னு அம்மா சொன்னா… அதான் கூப்பிட்டேன், தூங்கும்போது ஒண்ணும் தொந்தரவு பண்ணிடலியே…” கரிசனத்துடன் கேட்டார் நல்லசிவம்.

“இல்லப்பா…! அதெல்லாம் எழுந்து குளிச்சு காபி குடிச்சாச்சு…”

“ம்ம்… வேலை எல்லாம் சவுகர்யமா இருக்கா…? ஒண்ணும் பிரச்சனை இல்லையே…?”

“இல்லப்பா, சஞ்சு காலேஜ் கிளம்பிட்டாளா..?

“ஆமாம் மா, நானும் கடைக்குக் கிளம்பிட்டேன்… அதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான விஷயம் உன்கிட்ட பேசிடலாம்னு கூப்பிட்டேன்…”

“என்னப்பா, என்ன விஷயம்…?” என்றாள் யோசனையுடன்.

“என் பிரண்டு ஒருத்தர் மகனுக்கு பொண்ணு தேடிட்டு இருக்கார், அவரும், மனைவியும் ஒரே காலேஜ்ல வேலை பார்க்கிறாங்க… ரொம்ப நல்ல குடும்பம்…! ஒரே பையனும் படிச்சிட்டு பெங்களூர்ல வேலையா இருக்கான், எந்த பிக்கல் பிடுங்கலும் இல்லாத சந்தோஷமான குடும்பம்… அதான் எனக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்காங்களேன்னு யோசிச்சு உன்னைப் பத்திக் கேட்டான், நீ என்னமா நினைக்கற…?”

“நா..நான் என்ன நினைக்கிறது ப்பா… உங்களுக்கே தெரியும், ரொம்ப கஷ்டப்பட்டு இப்போதான் நான் நினைச்ச போல வேலை கிடைச்சிருக்கு… அதுக்குள்ள கல்யாணம்னா எப்படிப்பா…? குறைஞ்சது ரெண்டு வருஷமாச்சும் ஆகட்டும், நான் இப்படி சொல்லறேன்னு தப்பா நினைச்சுக்க வேண்டாம்ப்பா… உங்களுக்கு என்னைப் புரியும்னு நினைக்கறேன்…” என்றவளின் குரலில் தந்தையின் விருப்பத்துக்கு சம்மதிக்காத வருத்தம் இருந்தாலும் சொன்ன விஷயத்தில் தீர்மானம் இருந்தது.

“ஓகே டா தங்கம்… அப்பாக்கு உன் மனசு தெரியும், இருந்தாலும் அம்மாவோட வற்புறுத்தலுக்கு வேண்டி கேட்டேன்… நல்ல சம்மந்தத்தை விட வேண்டாமேன்னு அவ யோசிக்கிறா, அவ சொன்னா நீ மறுத்திடுவியோன்னு தான் என்னைப் பேச சொன்னா… உன் மனசு போல சர்வீஸ் பண்ணு, ரெண்டு வருஷம் கழிச்சு சம்மந்தம் பார்க்கலாம்…”

“வாவ்…! மை ஸ்வீட் அப்பா… அப்பான்னா அப்பாதான், என்னை நல்லாப் புரிஞ்சு வச்சிருக்கீங்க…” குதித்தாள் மகள்.

“ஹாஹா, ஹாஸ்டல்ல சாப்பாடெல்லாம் பரவால்லியா…?”

“ம்ம்… ஏதோ இருக்குப்பா, நம்ம ஊரு சாப்பாடு சாப்பிடணும் போல இருக்கு, இங்க எப்பவும் கோதுமைல செய்த உணவுங்க தான்…” சலித்துக் கொண்டாள்.

“ம்ம்… உனக்கு குவார்ட்டர்ஸ் கிடைக்கும்னு சொன்னியே, எப்போ கிடைக்கும் மா…?”

“எழுதிக் கொடுத்திருக்கேன், கொஞ்ச நாள்ல கிடைச்சிரும் நினைக்கிறேன்ப்பா… போனதும் கொஞ்சம் பொருள் எல்லாம் வாங்கி நம்மூரு சமையலா சமைச்சு சாப்பிடப் போறேன்…”

“ஹாஹா… பார்த்துடா கண்ணா, சாப்பிடற ஆசைல வயிறு உன்னோடதுன்னு மறந்துடாத…”

“அதெல்லாம் பரவால்லப்பா, என் கைவசம் தான் மாத்திரை இருக்கே…” மகள் சொல்ல சிரித்தார்.

இனி ரெண்டு வருடத்திற்குப் பிரச்சனையில்லை என்ற நிம்மதியுடன் சிறிது நேரம் பேசி விட்டு போனை வைத்தாள்.

மனம் சலனமின்றி இருக்க ஒரு பாடலை முணுமுணுத்தபடி துணிகளை அலமாரியில் வைப்பதற்காய் திறந்தவள் கண்களில் அழகான ரோஜா வண்ணப் பிரேமுக்குள் சிக்கியிருந்த அந்த புகைப்படம் விழ ரோஜாப் பூக்களுக்குப் போட்டியாய் சிரித்துக் கொண்டிருந்தாள் ரஞ்சனா. இரண்டு நாட்கள் முன்பு அவளது பிறந்த நாளன்று டியூட்டி ஓய்வு நேரத்தில் அவளது மேசையைத் திறந்தவள் திகைத்தாள்.

அழகாய் ஒரு பூங்கொத்துடன் கில்ட் பேப்பர் சுத்திய பாக்ஸ் ஒன்றில் ஹாப்பி பர்த்டே குலாபி என்று எழுதப்பட்டிருக்க, அதைக் கண்டவுடனே யார் வைத்திருப்பார்கள் என்று அவளுக்குத் தெரிந்துவிட்டது. அர்ஜூன் யாரென்று தெரிந்தபிறகு அடாவடியாய் பேச முடியாமல் ரஞ்சனா அமைதியாகி விட்டாலும் அன்று எடுத்த தனது போட்டோ எல்லாவற்றையும் அவன் அழிக்கவில்லை என்றது அவளுள் கோபத்தை உண்டாக்கியது.

அதன்பிறகு வேலை விஷயமாய் மட்டும் பேசிவிட்டு அவனிடம் பிடி கொடுக்காமல் ஓடியவளை தனிமையில் சந்திக்கும் வாய்ப்பு அவனுக்கும் கிடைக்கவில்லை.

அந்தப் பரிசுப் பொருளை எடுத்துத் திறந்தவள் விழிகள் வியப்பில் மலர்ந்தது. ரோஜா வண்ண பிரேமுக்குள் ரோஜாத் தோட்டத்தில் பெரிய ரோஜாவாய் மலர்ந்து சிரித்து நின்றாள் இப்பூவை. மிகவும் ரசனையோடு எடுக்கப்பட்டிருந்த புகைப்படம் மிகவும் அழகாய் வந்திருக்க சுற்றிலும் இருந்த ரோஜா வண்ண பிரேம் இன்னும் அழகு சேர்த்தது. அதைக் கண்டவளுக்கு தான் இத்தனை அழகா என்ற வியப்பு வந்தது.

“ரசிகன்…! மிகவும் அழகான கோணத்தில் எடுத்திருக்கிறான்…” என மனதுக்குள் புகைப்படம் எடுத்தவனைப் பாராட்டவும் செய்தவள் சில நிமிடங்கள் அதையே ரசித்துப் பார்த்திருந்துவிட்டு நிமிர அவளுக்கு எதிரே அழகான புன்னகையுடன் அவளையே பார்த்து நின்றான் அர்ஜூன்.

சட்டென்று எழுந்தவள் “ட… டாக்டர்…” எனத் தந்தியடிக்க, அவளை நோக்கி வந்தான் அர்ஜூன். கழுத்திலிருந்த ஸ்டெதஸ் அவன் நடையில் பூநாகமாய் அசைந்தது.

“ஹேய்…! கூல் குலாபி, பர்த்டே பேபி கோ மேரா கிப்ட் கைஸா ஹே…?” கண்ணைச் சிமிட்டியபடி தனது கிப்ட் எப்படி என்று கேட்க அவள் தயக்கமாய் குனிந்து கொண்டாள்.

“பஹுத் சுந்தர் ஹே, தேங்க்ஸ்…” என்றாள் உண்மையான சந்தோஷத்துடன் நிமிர்ந்து அவனை நோக்கி.

புன்னகைத்தவன், “இப்பவும் என் மேல் கோபம் இருக்கா…?” என பதிலுக்குப் புன்னகைத்தவள், “இப்ப கோபம் போயிருச்சு, இருந்தாலும் என்னோட பர்மிஷன் இல்லாம என்னை போட்டோ எடுத்தது தப்பு தான்…” என்றாள் விடாமல்.

“அரே குலாபி… இவ்ளோ அழகான போட்டோவை டெலீட் பண்ண மனசு வரலை, நான் வேணும்னா அந்த காமெராவே கொண்டு வந்து உன்கிட்டே கொடுத்திடட்டுமா…?”

“அதெல்லாம் வேண்டாம், இனி யாரையும் பர்மிஷன் இல்லாம போட்டோ எடுக்காம இருந்தாப் போதும்…”

“நோ சனா, மெய்ன் கியா லேதா ஹூ…?” இனி எதுக்கு எடுக்கிறேன் சனா… என வாய்க்குள் முனங்கியவன், நர்ஸ் ஒருவர் வருவதைக் கண்டதும் வேறு ஏதோ சொல்லிவிட்டு நகர்ந்தான். அதற்குள் ரஞ்சனாவும் சுதாரிப்புடன் அந்த புகைப்படத்தை டிராவுக்குள் வைத்து மூடி இருந்தாள்.

அதற்குப் பிறகு வந்த நாட்களில் அவனை எதிரே கண்டால் புன்னகைக்க அவள் தயங்கவில்லை. அவனும் வேண்டாமல் எதுவும் பேசாமல் புன்னகைத்து நகர்ந்திடுவான். யாரும் இல்லாத நேரங்களில் ‘குலாபி’ என அழைத்து கண் சிமிட்டுவதை மட்டும் அவன் விடவில்லை.

அவனிடம் தன்னை அப்படி அழைக்க வேண்டாமென்று சொன்னவளிடம், “எனக்கு உன்னைக் கண்டால் ரோஜாப்பூ தான் முதலில் நினைவில் வருகிறது, யாரும் இல்லாத நேரத்தில் தானே அழைக்கிறேன்… ப்ளீஸ்…” என்று அவன் அழகாய் தலை சாய்த்து வேண்டுகோள் வைக்க அவளால் மறுக்க முடியவில்லை.

கையிலிருந்த போட்டோவை அலமாரிக்குள் வைத்துவிட்டு உடை மாற்றி வெளியே கிளம்பினாள் ரஞ்சனா. அவளுக்கு சில பொருட்கள் வாங்க வேண்டி இருந்ததால் அருகிலுள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஒன்றுக்கு சென்றாள்.

கூடை ஒன்றில் தேவையான பொருட்களை எடுத்து போட்டுக் கொண்டிருக்க அழகான பெண் குழந்தை ஒன்று அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருப்பதைக் கண்டவளுக்கு அந்த முகம் பரிச்சயமாய் தோன்ற இதழ்கள் புன்னகைத்தது.

“ஹேய் சனா, பாஹோ மத் ருக்கோ…!” என்ற பரிச்சயமான குரலில் திரும்பியவள் திகைத்தாள். அர்ஜூன் தான் அந்த குட்டி சனாவின் பின்னால் ஓடாதே நில்லு…! என்றபடி குழந்தையைப் பிடிக்க வந்து கொண்டிருந்தான்.

அவனது கால்களைக் கட்டிக் கொண்டு குழந்தை அழகாய் சிரிக்க, அப்படியே அர்ஜூனின் சிரிப்பை ஒத்திருந்தது. குட்டி சனாவை எடுத்து அவன் அணைத்துக் கொள்ள அது சிணுங்கியபடி அவனிடம் சொன்னது.

“கிஷோ… முஜே ஐஸ்கிரீம் சாஹியே…!” துருதுருவென்ற கரும் திராட்சைக் கண்கள் குறும்புடன் துள்ள, அழகான கிராப்பும், புஸ்சென்ற கன்னங்களுமாய் கொள்ளை அழகாய் இருந்தது அந்த மூன்று வயதுக் குழந்தை.

“டீக்கே…” என்றவன் குழந்தையுடன் திரும்ப அவர்களையே திகைப்புடன் பார்த்து நின்ற ரஞ்சனாவைக் கண்டதும் அவன் விழிகள் விரிந்தது.

Advertisement