Advertisement

 அத்தியாயம் – 13

ரஞ்சனா களைப்புடன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தாள். நொடிக்கு நொடி விழிகள் பேருந்து வருகிறதா எனப் பார்த்துக் கொண்டிருந்தன. மனம் வேகமாய் கணவனிடம் செல்ல துடித்துக் கொண்டிருந்தது.

“கடவுளே…! இன்னும் பஸ்ஸை காணமே… அவர் வேற என்னைக் காணோம்னு தவிச்சிட்டு இருப்பார்…” யோசித்தபடி தனியார் பேருந்து வந்தால் டிக்கட் எடுப்பதற்கு சில்லறையை பாகில் தேடி எடுத்துக் கொண்டாள். அரசுப் பேருந்தில் தான் மகளிர்க்கு கட்டணமில்லை என்று அரசு அறிவித்து விட்டதே.

கவலையுடன் நிமிர்ந்தவள் முன்பு டொயோட்டாவின் கறுப்பு நிற போர்ட்யூனர் வந்து நிற்க, அதைக் கண்டதும் அவள் முகம் அதிர்ச்சிக்குப் போக டிரைவிங் சீட்டில் அமர்ந்திருந்த அர்ஜூன் கண்ணாடியை இறக்கினான்.

“ஹேய் குலாபி, கம் இன்சைட்… நான் உன்னை வீட்டுல டிராப் பண்ணறேன்…” என்றான் கூலர் அணிந்த விழிகளுடன்.

“இ..இல்ல… நான் பஸ்சுல…” என்றவள் பேருந்து வருவதைக் கண்டதும் மலர்ந்து, “பஸ் வந்திருச்சு…” என்றபடி ஓடிச்சென்று பின்னில் நின்ற பேருந்தில் ஏறிக் கொண்டாள். அர்ஜூனின் இதழ்கள் புன்னகைத்தாலும் விழிகளில் ஒரு  வலி ஒட்டிக் கொண்டிருந்தது.

பேருந்தில் கூட்டம் இருக்கவே ரஞ்சனாவுக்கு சீட் கிடைக்கவில்லை. கசகசப்பாய் வியர்வை சுமந்த மனிதர்களை விலக்கி உள்ளே நுழைந்து ஒரு சீட்டில் சாய்ந்து நின்றவள் நெற்றியில் பொடித்திருந்த வியர்வையை துப்பட்டாவால் ஒற்றிக் கொண்டாள். வேகத்தில் துடிக்கத் தொடங்கியிருந்த இருதயம் இயல்புக்குத் திரும்பி இருந்தது.

“கடவுளே…! அர்ஜூனை வேறு இங்கே அனுப்பி எதற்கு என்னை சோதிக்கிறாய்…? பிரபாவை அவரிடமே சிகிச்சைக்கு அழைத்து வந்தால் என்னாகும்…? எதையாவது உளறிக் கொட்டி முன்னமே மனம் உடைந்திருக்கும் பிரபாவை மேலும் வருத்தம் கொள்ள செய்து விடுவானா…? எதற்கு இப்படி அடுக்கடுக்காய் எனக்கு பிரச்சனைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்…?” மனதுக்குள் கடவுளிடம் மன்றாடியபடி நின்றவளின் அருகிருந்த பெண்மணி அடுத்த நிறுத்தத்தில் இறங்குவதற்காய் எழுந்து கொள்ள ரஞ்சனா அமர்ந்தாள்.

மாலை நேரக் காற்று சுகமாய் அவள் தலை முடியைக் கலைத்து விளையாட எப்போதும் அதை ரசிப்பவள் மனம், களைப்பிலும், கவலையிலும் சோர்ந்திருந்ததால் இன்று எதையும் ரசிக்கும் நிலையில் இல்லை. பேருந்தில் ஒலித்த அவளுக்கு மிகவும் பிடித்தமான இளையராஜா பாடல்கள் கூட கவனத்தில் நிலைக்கவில்லை.

பேருந்து காற்றை செல்லமாய் கிழித்துக் கொண்டு மிதமான வேகத்தில் பாதையைத் தேடி ஓடிக் கொண்டிருக்க அவள் மனதும் பழைய நினைவுகளைத் தேடி ஓடியது.

மூன்று வருடங்களுக்கு முன்பு.

மும்பையில் நடந்த மலர்க் கண் காட்சி ஒன்றில் தான் முதன் முதலாய் ரஞ்சனா அர்ஜூன் கிஷோருக்கு அறிமுகம் ஆயிருந்தாள்.

லட்சக் கணக்கான பூச்செடிகளும், அலங்காரச் செடிகளும் பொது மக்களின் தரிசனத்திற்காய் அணிவகுத்து நின்றன. அவற்றின் மணமும், வண்ணமும் காண்பவர் மனதை நிறைக்க, பூக்களுக்குப் போட்டியாய் அலங்கரிக்கப் பட்டிருந்த வண்ண விளக்குகளும் காண்பவர் கண்களை இழுத்தது.

கண் காட்சியில் 200 ரகங்களில், மொத்தம் 15000 மலர்த் தொட்டிகளில் ஓரியண்டல் லில்லி, ஏசியாடிக் லில்லி, இன்கோ மேரிகொல்டு, பிரெஞ்சு மேரிகொல்டு, பிளாக்ஸ், பெட்டூனியா, பெகொனியா செம்பர் புளோரன்ஸ், ஆஸ்டர், பால்சம், க்ரைசாந்திமம், ஜினியா மலர்களோடு இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து ரக கார்னேஷன் மலர்களும் வைக்கப்பட்டிருந்தன.

அவை எல்லாவற்றுக்கும் கிரீடம் வைப்பது போல் உலகத்தில் உள்ள அனைத்து வர்ண ரோஜாக்களையும் வரிசை வரிசையாய் அணிவகுத்து நிக்க வைத்திருந்தனர்.

கண்களில் விரிந்த அற்புதக் காட்சியை காமிராவில் சுருட்டும் முயற்சியில் வருபவர்கள் அங்கங்கே நின்று பூக்களுடன் புன்னகைத்து போட்டோ எடுத்துக் கொண்டனர்.

வரிசையாய் ஒரே வண்ணத்தில் இருந்த ரோஜாக்களின் முன்னே நின்று இளம் பெண்கள் சிலர் செல்பி எடுக்க,  ரோஜா ஒன்றைக் கைகளில் ஏந்தி என் புன்னகையை விட ‘இந்தப் பூ அழகா…’ என்பதுபோல் புன்னகைத்துக் கொண்டிருந்தாள் பெண்ணொருத்தி.

அவள் அணிந்திருந்த ரோஜா வண்ணக் குர்தியும், சிவந்த, மலர்ந்த இதழ்களும் அவள் பூவா…? இல்லை, உயிருள்ள பூவையா…? என்று சந்தேகத்தை ஏற்படுத்த தேன் உண்ண வந்த வண்டுகளும் தடுமாறிப் போயின.

கையிலிருந்த டிஜிட்டல் காமிராவால் கண் கவர்ந்த மலர்களைக் கிளிக்கிக் கொண்டு வந்த அர்ஜூன், ரோஜாக்களுக்குப் போட்டியாய் பெரிய மலராய் மலர்ந்திருந்த பெண்ணவளைக் கண்டதும் திகைத்தான்.

“வாவ்…! குலாபி…”

அவனது இதழ்கள் வியந்து உச்சரிக்க வேகமாய், பூக்களுடன் நின்று தோழியர் எடுக்கும் போட்டோவுக்காய் போஸ் கொடுத்துக் கொண்டிருந்த பூவையின் உருவத்தையும் காமிராவுக்குள் சுருட்டிக் கொண்டான்.

அவனை கவனித்து விட்டவள் முகத்தில் கோபம் தெரிந்தது. அடுத்து அவளது தோழி ஒருத்தி அதே இடத்துக்கு சென்று பூக்களுடன் போஸ் கொடுக்க அவர்களைக் கடந்து வேகமாய் இவனை நோக்கி வந்தாள். அதை கவனித்து விட்ட அர்ஜூன் அங்கிருந்து நழுவ முயல பின்னிலேயே வந்தவள் அவனுக்கு முன்னால் நின்று வழி மறித்தாள்.

“ஹலோ மிஸ்டர்…! வாட் ஆர் யு டூயிங்…?” கோபத்தில் மேல்மூச்சு வாங்கக் கேட்டவளை சுவிங்கம் மெல்லும் உதட்டுடன் ஏறிட்டான் அர்ஜூன்.

“ஹேய் குலாபி… கூல்…!”

“குலாபியா…? அப்படின்னா ரோஸ் தானே…?” தனக்குத் தெரிந்த அரைகுறை இந்தியை மனதுக்குள் ஓட்டிப் பார்த்து தெளிவு படுத்திக் கொண்டு நிமிர்ந்தவள் முறைத்தாள்.

“கியா…? குலாபி…! தும்நே முஜே குலாபி க்யூங் கஹா..?”

“ஏன்னா, நீ அந்த ரோஜாப் பூவை விட ரொம்ப அழகா பெரிய குலாபி போல இருக்க…” அவன் தமிழில் முணுமுணுக்க வியப்புடன் நிமிர்ந்தாள்.

“நீங்க தமிழா…?” அந்நிய மாநிலத்தில் தனது தாய்மொழியைக் கேட்டதும் கோபம் குறைந்து ஆர்வமாய் கேட்டாள்.

மறுப்பாய் புன்னகையுடன் தலையாட்டினான் அர்ஜூன்.

“நான் தமிழ் இல்லை… அர்ஜூன், அர்ஜூன் கிஷோர்…!” குறும்பாய் கண் சிமிட்டி பதில் சொன்னவனைக் கண்டு கோபப்படுவதற்கு பதிலாய் திகைத்தாள் அவள்.

“ஓ… அர்ஜூன்னு பேர் வச்சா எந்தப் பொண்ணை வேணும்னாலும் போட்டோ எடுக்கலாம்னு யாராவது சட்டம் போட்டுட்டாங்களா என்ன…?”

“நீங்க இன்னைக்கு சிக்ஸ் ஓ கிளாக் நியூஸ் பாக்கலியா…?”

“இது என்ன..? சம்மந்தமில்லாமல் கேட்கிறான்…” என்ற யோசனையுடனே, “நியூஸ்க்கு என்ன…?” என்றாள் அவள்.

“அதுல கூட சொன்னாங்க… அழகைக் காணும் ரசிகர்கள் பூக்களைப் போட்டி போட்டு போட்டோ எடுக்கிறாங்கன்னு… நானும் சிறந்த ரசிகன், அழகை எங்க கண்டாலும் ரசிப்பேன்… பிளவர்ஸ்னா எனக்கு ரொம்பப் புடிக்கும், அதுவும் குலாபின்னா ரொம்பப் பிடிக்கும்…” என்று குலாபியில் ஒரு அழுத்தம் கொடுத்து புன்னகையுடன் சொன்னவனை முறைத்தாள் அவள்.

“ஹலோ, அதுக்காக யாரோ ஒரு பொண்ணை போட்டோ எடுப்பீங்களா… தமிழ்ல பேசறீங்க, நாகரிகமா நீங்களே அதை டெலீட் பண்ணிட்டா பரவால்ல…”

“அதுக்கு நான் தப்பா எதையும் போட்டோ எடுக்கலியே…”

“ப்ச்… விளையாடாதீங்க, நீங்க போட்டோ எடுத்ததை நான் பார்த்தேன்… தயவுசெய்து டெலீட் பண்ணிடுங்க பிளீஸ்…”

“ஹேய் ரஞ்சு…! யஹாங் கியா கரே…? யே கோன் ஹே…?”” அவளது தோழியர் வந்து இங்கே என்ன செய்கிறாய், இவர் யாரென்று கேட்க ஏனோ அவனை அவர்களிடம் குறைச்சலாய் சொல்ல மனம் வரவில்லை அவளுக்கு.

“குச் நஹி… தும் ஜாவோ, மேய்ன் ஆவூங்கா…” என அவர்களைப் போகச் சொல்ல,

“டீக்கே… ஜல்தீ ஆனா…” என்றவர்களின் பார்வை அர்ஜூனை ஆவலுடன் அளவிட்டு நகர அவன் குறுகுறுவென்று அவளையே பார்த்தபடி நின்றான்.

“ப்ளீஸ் மிஸ்டர் அர்ஜூன், சொன்னாப் புரிஞ்சுக்கங்க… இப்படி யாரு என்னன்னு தெரியாத ஒருத்தரை போட்டோ எடுக்கிறது தப்பு… போலீஸ்ல கம்ப்ளெயின்ட் பண்ணா பிடிச்சு உள்ள போட்டிருவாங்க… நான் அதெல்லாம் செய்ய விரும்பல, நீங்க போட்டோவை டெலீட் பண்ணிருங்க போதும்…” அவள் தன்மையாய் அவனிடம் சொல்ல புன்னகைத்தான்.

“மிஸ் குலாபி, நான் எந்த போட்டோவை டெலீட் பண்ணனும்னு சொல்லறீங்க… எனக்குப் புரியலியே…”

“யாருக்கும் தெரியாம என்னை போட்டோ எடுத்திங்களே, அதைத்தான் டெலீட் பண்ண சொல்லறேன்…” அவளும் விட மாட்டேன் என்று நிற்க சம்மதித்தான் அர்ஜூன்.

“டீக்கே, பட் ஏக் கண்டிஷன்…”

“என்ன கண்டிஷன்…?” மனதில் எரிச்சல் வந்தாலும் வார்த்தைகளில் காண்பிக்க முடியவில்லை அவளால்.

“துமாரா நாம் கியா ஹே…”

“ப்பூ… இவ்ளோ தானா…?” என்பது போல் பார்த்தவள்,

“என் பேரு ரஞ்சனா…! ப்ளீஸ்…” என்று காமிராவைக் கை நீட்ட, புன்னகையோடு அவளைப் பார்த்தான் அர்ஜூன்.

“ரஞ்சனா…! நைஸ் நேம், ஷார்ட்டா சனா…! உனக்கு ஓகேவா…?” என்றவனை புரியாமல் பார்த்தாள் அவள்.

“இவன் என்ன லூஸா… தினமும் என்னைப் பார்த்து பழகப் போறவன் போல பேரை எல்லாம் சுருக்கிப் பார்த்திட்டு இருக்கான்…” என நினைத்தவள் தோழியர் கை காட்டவே,

“சரி, சனாவோ, சால்னாவோ… ஏதோ ஒண்ணு, சீக்கிரம் டெலீட் பண்ணுங்க…” என்றாள் அவசரத்துடன்.

“ஜஸ்ட் எ மினிட்…” என்றவன் காமிராவின் சுருளுக்குள் இருந்த போட்டோக்களைப் பார்த்து ஒரு போட்டோவை அவளிடம் காட்ட அவள் இருந்ததைக் கண்டவள், “ம்ம்… இதான்…” என்று சொல்ல அவள் கண் முன்னாலேயே அர்ஜூன் அதை டெலீட் செய்யவும் தான் நிம்மதியானாள்.

“ம்ம்… தேங்க்ஸ், இனியாச்சும் இப்படி பேரு தெரியாத பொண்ணுங்களை போட்டோ எடுக்கிறதை விட்டுடுங்க…” என அவள் எச்சரிக்கையாய் சொல்லி நகர,

“எனக்கு தான் உங்க பேரு தெரியுமே சனா…” என்றவனை அவள் திரும்பிப் பார்த்து முறைத்து விட்டு முன்னே நடக்க, அவன் குதூகலமாய் விசிலடித்தபடி வந்தான்.

சனா சனா, து ஹி பதா…

ராஸ் ரூப் கா ஹே கியா…?

மெய்ன் நியூட்டன், நியூட்டன் கா சக்யா…

தில் யே கஹே தோல் தின் ராடியா…

தேரி ஆன்க்ஹோன் கி ஜில்மில் கா ராஸ் ஹே க்யா

ராஸ் ரூப் கா ஹே கியா..?

அவன் ஹிந்தி ரோபோ பாடலை முணுமுணுப்பாய் பாடிக் கொண்டு நகர அதைக் கேட்டவளின் இதழ்களில் மென்னகை. தோழிகளை நெருங்கியவள் வளைவில் திரும்பிப் பார்க்க அவனைக் காணவில்லை. அவனது கம்பீரத் தோற்றமும், சதா விழிகளில் எட்டிப் பார்க்கும் குறும்பும், வேடிக்கையான பேச்சும் கண்ட முதல் சந்திப்பிலேயே அவள் மனதில் ஆழமாய் பதிந்து போனது.

ரஞ்சனா மும்பையில் வேலைக்கு சேர்ந்து சில நாட்கள் தான் ஆகி இருந்தது. வார விடுமுறை அன்று ஹாஸ்டலில் உடன் இருந்த தோழியரின் வற்புறுத்தலால் மலர்க் கண்காட்சிக்கு வந்திருந்தாள். இங்க்லீஷ் மீடியத்தில் விருப்பப் பாடமாய்  ஹிந்தி படித்திருந்தாலும் இங்கே பேச்சு வழக்கில் வித்தியாசம் இருக்க, சற்றுத் திணறலாய் இருந்தாலும் யோசித்து சமாளித்துக் கொண்டிருந்தாள்.

மறுநாள் காலையில் இன்முகத்துடன் மருத்துவமனைக்குள் நுழைந்தவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. லெட்ஜரில் கையெழுத்திட்டு டியூட்டி டாக்டரின் அறைக்கு சென்று கதவைத் தட்டி அனுமதி கேட்க, உள்ளே வருமாறு  பெண் குரல் சொல்லவும் உள்ளே நுழைந்தாள்.

நடுநாயகமாய் இருந்த மேஜைக்குப் பின்னே அழகான வடக்கிந்திய பியூட்டி டாக்டர் அன்று டியூட்டியில் இருக்க, அவரது பளிச்சென்ற கோதுமை நிறமும், இதழில் உறைந்திருந்த புன்னகையும் சிரிக்கும்போது தெரிந்த தெத்துப் பல்லும், சினிமா நடிகைகளுக்கு சவால் விடுவது போல் இருந்தாலும் கண்களில் ஒரு கனிவு ஒட்டிக் கொண்டிருந்தது. கோட்டில் இருந்த பேட்ஜில் பெயர் ‘ஜீவிகா’ என்றது.

“குட் மார்னிங் டாக்டர்…” சொன்னவளின் பார்வை எதேச்சையாய் டாக்டருக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவனிடம் செல்ல, அர்ஜூனைக் கண்டதும் திகைப்புடன் நின்று விட்டாள்.

உடுத்தியிருந்த வெள்ளைக் கோட் அவன் யாரென்று சொல்ல, அணிந்திருந்த கண்ணாடிக்குள் இருந்த விழிகளுக்குப் போட்டியாய் இதழ்களும் மலர்ந்தன. திரும்பியவன் அவள் திகைப்பைப் பார்த்து புருவத்தைத் தூக்கி, கண்ணைச் சிமிட்ட ரஞ்சனாவுக்கு நாக்கு உலர்ந்து ஒட்டிக் கொண்டது.

“வா ரஞ்சனா, இவர் டாக்டர் அர்ஜூன் கிஷோர்… ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட், இவ்ளோ நாள் லீவுல இருந்தார்… நேத்து தான் லீவு முடிஞ்சு ஜாயின் பண்ணார்…”

“ஓ…! ஹ..ஹலோ டாக்டர்…!”

“ஹாய்…” கணீரென்று ஒலித்த குரல் அடுத்து சப்தமின்றி, ‘குலாபி…’ என உதட்டை மட்டும் அசைத்து சொல்ல புரிந்து கொண்ட ரஞ்சனாவின் முகம் சிவந்து போனது.

“கிஷோர், இது ரஞ்சனா… புது நர்ஸ், பட் டெடிகேட்டட்…”

“ஹோ, நைஸ்… ஓகே ஜீவி, நான் ஆர்த்தோ வார்டுல ரவுண்ட்ஸ் முடிச்சிட்டு வந்துடறேன்… பேஷண்ட்ஸ் ரெகார்ட் எல்லாம் செக் பண்ணனும், இவங்களை என்னோட அனுப்ப முடியுமா…?” எழுந்தபடி கேட்டான் அர்ஜூன் கிஷோர்.

“ஓ…ஷ்யூர்…! ரஞ்சனா, கிஷோருக்கு ஹெல்ப் பண்ணு…” என்ற ஜீவிகாவும் எழுந்து கொள்ள, தலையாட்டினாள். அர்ஜூன் ரஞ்சனாவை பார்த்து கள்ளச் சிரிப்புடன் முன்னே நடக்க, தயக்கத்துடன் பின் தொடர்ந்தாள். நடந்து கொண்டிருந்தவன் சட்டென்று ஒரு இடத்தில் நிற்க, திகைப்புடன் ஏறிட்டாள்.

“சனா, எதுக்கு இப்படி டென்ஷனா வர்ற…? கூல்…!”

“அ… அதுக்கில்ல டாக்டர், நேத்து நான் உங்ககிட்ட…”

“இட்ஸ் ஓகே… ஆக்சுவலா உங்களைப் போல எல்லாப் பெண்களும் அலர்ட்டா இருக்கணும்கிறது தான் என் ஆசை…”

“இருந்தாலும், நீங்க யாருன்னு தெரியாம ரொம்பப் பேசிட்டேன்… ஐ ஆம் சாரி…”

“ஹேய்…! அதுக்கு நீ சொன்னதை நான் ஒரு விஷயமா  எடுத்துக்கவே இல்லையே…”

“அப்போ என் மேல கோபம் இல்லியா…?”

“உன் மேல எதுக்குமா நான் கோபப்படணும்…? ஆக்சுவலா உன் பர்மிஷன் இல்லாம போட்டோ எடுத்த என் மேல நீ தான கோபப்படணும்…? ஹூம்…?” என்றவன் புருவத்தைத் தூக்கிக் கேட்டுவிட்டு நடக்க அவள் பின்னில் ஆசுவாசத்துடன் தொடர்ந்தாள்.

“தேங்க்ஸ் டாக்டர்…!”

“அதுக்காக ரொம்ப சந்தோஷப்பட வேண்டாம்… உன் ஒரு போட்டோவை தான் நான் டெலீட் பண்ணேன்…” என்றவன் குறும்புடன் சொல்ல அவள் திகைத்து நின்று விட்டாள்.

“ஹேய் கம்மான், குலாபி…!” அவனது குரல் அழைக்க வேகமாய் வந்தவளின் முகம் சிறுத்திருந்தது. தான் அத்தனை முறை கெஞ்சி டெலீட் பண்ண சொல்லியும் ஒரு படத்தை மட்டும் டெலீட் செய்தேன் என்றால் என்னை நிறைய படம் எடுத்திருக்கிறானா…?” மனதுக்குள் கோபம் பொங்க சிவந்த முகத்துடன் வந்தாள்.

வார்டுக்கு வந்தவன் சின்சியர் சிகாமணியாய் பேஷண்டுகளைப் பரிசோதித்து கேஸ் ஹிஸ்டரியில் நோட் பண்ணிக் கொடுக்க அவளும், அவனைப் ‘பின்னர் கவனித்துக் கொள்வோம்…’ என்று யோசனையைத் தள்ளி வைத்தாள்.

நிஜ முகத்தை

நெஞ்சில் பதித்துவிட்டு

நிழல் படத்தை

அழிக்க சொல்கிறாய்…

அனுமதிகள் கேட்பதில்லை

ஆசை கொண்ட நெஞ்சம்…

விழிகளில் எனைக் களவாடி

இதழ்களில் இம்சிக்கிறாய்…

Advertisement