“ரஞ்சனா, இப்பதான் அவருக்கு உடைஞ்ச முதுகெலும்பை ஜாயின்ட் பண்ண ஆப்பரேஷன் பண்ணிருக்கோம்… ஸ்கேன் ரிப்போர்ட்ல இடுப்பு எலும்புல ஒரு விரிசல் தெரியுது, ஆனா அதுக்கான ஆப்பரேஷனை உடனே பண்ண முடியாது… முதுகெலும்பு செட் ஆகணும், அதுக்கு முன்னாடி அடுத்த ஆப்பரேஷனை உடம்பு தாங்காது… முதுகெலும்பு செட்டாக குறைஞ்சது மூணு மாசம் ஆகலாம், அதுவரை உக்காரவோ, குனியவோ கஷ்டமா இருக்கும்… முதுகெலும்பு செட் ஆனதும் ஸ்கேன் எடுத்துப் பார்த்திட்டுதான் இதுக்கு என்ன பண்ணலாம்னு யோசிக்கணும்…”

“ம்ம்… அது வரைக்கும் அவருக்கு இந்த வலி இருந்துட்டே இருக்குமா டாக்டர்…?”

“வலிக்கும்போது மெடிஸின் எடுத்துக்கணும், கொஞ்சம் பொறுத்து தான் ஆகணும்…” என்றார் அவர் வருத்தத்துடன். அதைக் கேட்டு அவள் நெஞ்சம் வலிக்க திரும்பினாள்.

பத்து நாட்களுக்குப் பிறகு பிரபஞ்சனை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பினர். அதுவரை எப்படியோ அனைவரும் சமாளித்து நின்றனர். அதற்குமேல் அவள் பிறந்த, புகுந்த வீட்டாரும் கிளம்ப வேண்டி இருந்ததால் ரஞ்சனாவுக்கு தைரியம் சொல்லி படுக்கையில் இருந்த பிரபஞ்சனுக்கு ஆறுதல் சொல்லி கோவை கிளம்பத் தயாராயினர்.

ஆசுபத்திரியில் மருந்துக்கும், சிகிச்சைக்குமாய் பெரிய ஒரு தொகை செலவாகி இருந்தது. துர்கா கொண்டு வந்த பணம் போதாமல் போக ராதிகாவின் வங்கிக் கணக்கில் பரிமளம் பாட்டி சின்ன மகனிடம் பணம் போட சொல்லி அவர் ஒரு அம்பதாயிரம் அனுப்பி இருக்க அதுவும் கரைந்து போயிருந்தது. பிரபஞ்சன் வேலை செய்தது தனியார் வங்கி என்பதால் ஒரு மாதம் சம்பளத்துடன் விடுப்பு கொடுத்து அடுத்த மாதம் முதல் சம்பளமில்லா விடுமுறை எடுத்துக் கொள்ளுமாறு கூறினர்.

பிரபஞ்சன் வீட்டுக்கு வந்தாலும் தொடர்ந்து மருந்து எடுத்துக் கொள்ளவும் அவ்வப்போது ஆசுபத்திரிக்கு பரிசோதிக்க செல்லவும் என்று தண்ணீராய் பணம் கரைந்தது. தனது நகைகளை அடமானம் வைத்து எப்படியோ சமாளித்துக் கொண்டிருந்தாள் ரஞ்சனா.

பிரபஞ்சனுக்கு முதுகில் பெல்ட் போட்டிருந்ததால் எழுந்து நடக்க முடியாமல் அவனது இயற்கை உபாதைகளுக்கும், தேவைகளுக்கும் கூட ரஞ்சனாவே பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. அவளும் முகம் சுளிக்காமல் கணவனைக் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டாள்.

ஆனால் பட்டாம் பூச்சியாய் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த ஒருவனின் நிலை படுக்கையே கதி என்று மாறிப் போனால் எப்படியிருக்கும்…?

ரஞ்சனாவுக்கு தான் ஒரு பாரமாய் மாறி விட்டோமோ என்று பிரபஞ்சனின் மனம் தவிக்கத் தொடங்கியது. ஒரு மாதம் அவளும் விடுமுறை எடுத்திருக்க அதிகம் பிரச்சனை இல்லாமல் சென்றது. விடுமுறை முடிந்து அடுத்தநாள் அவள் வேலைக்கு செல்ல வேண்டும் எனும் போதுதான் இருவருக்குள்ளும் கலக்கமானது.

“பிரபா, காபி தரட்டுமா…?”

“ப்ச்…”

“மதியமும் சரியா சாப்பிடலை, நிறைய ஆன்டிபயாட்டிக் எடுத்துக்கறதால நல்லா சாப்பிடணும்ல…”

“ப்ச்…” அதற்கும் இதுவே அவனது பதிலானது.

அவன் அருகே வந்தவள் தலையணையை சற்று சரித்து சாய்வாய் அமர வைத்தாள். அருகே நின்று தலை கோதிக் கொடுக்க அமைதியாய் அவள் வயிற்றில் முகத்தைப் பதித்தான் பிரபஞ்சன். வெகு நாட்களுக்குப் பிறகு அவனது நெருக்கமான தீண்டலில் சட்டென்று அவள் தேகமெங்கும் ஒரு சிலிர்ப்பு எழுந்து அடங்கியது.

“என்னப்பா…?”

“ப்ச்…”

“எல்லாத்துக்கும் இப்படி ப்ச் னே சொல்லிட்டு இருந்தா…”

“ரஞ்சு, கடைசில நானும் உனக்கு பாரமாயிட்டேன்ல…” அவனது வலி தாங்கிய வார்த்தைகள் அவள் இதயத்தைத் தைக்க கண்களில் நிறைந்த கண்ணீரை சட்டென்று உள்ளே இழுத்துக் கொண்டாள். இருவர் மனதிலும் எத்தனை ஆசைகளும், எதிர்கால நம்பிக்கைகளும் இருந்தன. எல்லாவற்றையும் இந்த விபத்து புரட்டிப் போட்டு விட்டதே… பிரபஞ்சன் வாங்கிய லோனுக்கான வட்டியைக் கூட இனி ரஞ்சனா தான் கட்ட வேண்டுமென்ற சூழ்நிலை.

அவனது வீட்டுக்கு, தந்தையின் வைத்திய செலவுக்கு, அவனது மருத்துவ செலவுக்கு எல்லாவற்றுக்கும் இவள் முன்னை விட அதிகமாய் ஓடத் தானே வேண்டும்… யோசிக்கும் போதே மலைப்பாய் இருந்தது. ஆனாலும் கணவனுக்கு சீக்கிரமே சரியாகி தன்னோடு இணைந்து நடக்கும் நாள் வரும் என்ற நம்பிக்கை தைரியம் தந்தது.

“நாளைக்கு நான் டியூட்டிக்குப் போகணும்…”

“ம்ம்…”

“காலைல நான் உங்களுக்கு எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு ஹாஸ்பிடல் போவேன்… சரிதாக்கா வீட்டுக்காரர் மதியம் சாப்பிட வரும்போது உங்களுக்கு சாப்பாடு, மாத்திரை தர, ஹெல்ப் பண்ண வருவாங்க…”

“ம்ம்…”

“பிரபா, ப்ளீஸ் பீல் பண்ணாதீங்க…”

“முடியல, இப்படிலாம் நடக்கும்… உனக்கு நானே பாரமாப் போவேன்னு நினைக்கவே இல்ல…” அவன் மீண்டும் வருத்தமாய் அவள் வயிற்றில் கிசுகிசுக்க வருந்தினாள்.

இப்படியே பேசினால் வருத்தப்படுவான் என்று தோன்ற சற்று விளையாட்டாய் பேசி சகஜமாக்க நினைத்து, “டேய் புருஷா…” என அவனிடம் பதிலில்லை.

“நீங்க இந்த அளவுக்கு பிழைச்சு சரியாகி வர்றதுக்கே நாம கடவுளுக்கு நன்றி சொல்லணும், நீ வேணும்னா பாருடா புருஷா, இன்னும் கொஞ்ச நாள்ல உனக்கு எல்லாம் சரியாகி பழைய போல எழுந்து என்னைக் கொஞ்சப் போற…”

“என்னடா புருஷா, பதில் சொல்ல மாட்டீங்கறிங்க…?” மீண்டும் அவளது கேள்விக்கு பதிலின்றிப் போக சூடாய் அவள் வயிற்றில் ஈரம் உணர்ந்தவள் பதைத்துப் போய் அவன் முகத்தை விலக்க கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவனுக்குத் தெரியும் அவள் மனதில் காதல் கூடுகையில் தான் அவனை டா என அழைப்பாள். அப்படி அழைக்கையில் இருவரும் சிணுங்கலும், சீண்டலுமாய் கழிந்த நிமிடங்கள் மனதுக்குள் வந்ததாலேயே கண் கலங்கி இருந்தான்.

“நான் ஒரு யூஸ்லெஸ்…” உதட்டுக்குள் முனங்கினான்.

“பிரபா… என்ன இது, குழந்தையாட்டம்…? நம்ம ரெண்டு பேரோட அன்பைப் பார்த்து விதியே கண்ணு வச்சிருச்சோ என்னவோ, இப்படில்லாம் ஆயிருச்சு… ஆனாலும் எனக்கு நீங்க இந்த அளவுக்கு திரும்பி கிடைச்சதுக்கு கடவுளுக்கு ஒவ்வொரு நிமிஷமும் நன்றி சொல்லிட்டு இருக்கேன்… உங்களுக்கு சீக்கிரம் சரியாகிடும்கிற நம்பிக்கைல தான் இப்பவும் தளராம ஓடிட்டு இருக்கேன்… நீங்க என்னோட இருந்தா எந்தப் பிரச்சனையும் என்னால சமாளிக்க முடியும்… நீங்கதான் என் தைரியம், நீங்க கலங்கினா அப்புறம் நானும் தளர்ந்திடுவேன்… ப்ளீஸ் பிரபா, கலங்காதீங்க…” சொன்னவள் அவன் கண்ணைத் துடைத்துவிட சற்று அமைதியானான்.

அடுத்த நாள் காலை மூன்று மணிக்கெல்லாம் ரஞ்சனா எழுந்து காலை, மதிய சமையலை தொடங்கி விட்டாள். உறங்காமல் கண்ணை மூடிப் படுத்திருந்த பிரபஞ்சன் எல்லாவற்றையும் அறிந்து கொண்டு அவளுக்கு உதவ முடியா தனது கையாலாகா நிலையை நினைத்து வருந்திக் கொண்டு படுத்திருந்தான்.

சமையலுக்கு நடுவே பிரபஞ்சன் உணர்ந்திருப்பதைக் கண்டு காலைக் கடனை பெட்பான் உதவியுடன் முடித்து, பல்லு விளக்க வைத்து சுடுநீரில் அவன் உடலெங்கும் துடைத்து வேறு உடை மாற்றிவிட்டு காபி கொண்டு வந்து கொடுக்க குடித்தான். சமையல் முடித்து எல்லாம் எடுத்து வைத்து, குளித்து உடை மாற்றி கிளம்பத் தயாரானவள் அவனுக்கும் தனக்குமாய் இட்லியை ஊட்டிக் கொண்டு வாயைக் கழுவி விட்டு மாத்திரை கொடுத்து தண்ணீர் பாட்டில் நிறைத்து, சார்ஜரில் இருந்த மொபைலை எடுத்து அவனருகில் வைத்து என எல்லாவற்றையும் செய்து முடித்து மனசில்லா மனதுடன், வாடிப் போய் வருத்தமாய் அமர்ந்திருந்தவனுக்கு என்ன தேவை என்றாலும் போன் செய்யுமாறு சொல்லி,  அவன் நெற்றியில் முத்தமிட்டு வேலைக்கு கிளம்பினாள்.

வெளியே வந்தவள் சரிதாவிடம் மீண்டும் சொல்லி விட்டு கீழே வந்து செக்யூரிட்டியிடமும் அவ்வப்போது போய் அவனைப் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லி சென்றாள். அரக்கப் பறக்க பேருந்து நிலையத்துக்கு செல்ல அவள் செல்ல வேண்டிய பேருந்து ஜஸ்ட் மிஸ் எனும்படி கண்ணுக்கு முன்னே போய்க் கொண்டிருந்தது. அடுத்த பேருந்துக்கு எப்படியும் பதினைந்து நிமிடமாவது ஆகுமென்று கவலையுடன் கையிலிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள். ஆட்டோவில் செல்லலாமா என யோசித்தவள் அந்தப் பணமிருந்தால் காய்கறி வாங்கலாம் என்று அதைத் தவிர்த்து பேருந்துக்கு காத்திருந்து வந்ததும் கிளம்பினாள்.

ஒருவழியாய் பத்து நிமிடத் தாமதத்தில் மருத்துவமனையை அடைந்தவளை எதிர்ப்பட்ட சக பணியாளர்கள், பிரபஞ்சனைப் பற்றி நலம் விசாரிக்க அவர்களுக்கு நின்று பதில் சொல்லி பதிவு ரெக்கார்டில் கையெழுத்திட்டு வார்டுக்கு சென்றாள். ஹெட் நர்ஸைக் கண்டு தனக்கான டியூட்டி ஷெட்யூலை வாங்க செல்ல அங்கே எந்த நர்ஸ்களையும் காணவில்லை. எதிர்ப்பட்ட அட்டன்டரிடம் விசாரித்தாள்.

“ஸ்டாப் ரூம்ல யாரையும் காணலியே…? எல்லாரும் எங்கிருக்காங்க…?”

“எல்லாரையும் சீப் டாக்டர் ரூமுக்கு வர சொன்னார், அங்கே தான் போயிருக்காங்க… நீங்களும் போங்க சிஸ்டர்…” என்றார்.

“ஓ… சரி…!” என்றவள் சீப் டாக்டரின் அறைக்கு செல்ல எல்லாரும் அங்கே நிற்பது தெரிந்தது. திரும்பிய லாவண்யா இவளைக் கண்டதும் புன்னகைத்து அருகே அழைத்து நிறுத்தி நலம் விசாரித்தாள். “என்ன மீட்டிங் லாவண்யா…?” “அது, புது டாக்டருக்கு எல்லாரையும் அறிமுகப்படுத்த சீப் டாக்டர் வர சொன்னார், அதோ வந்துட்டாங்க…” என்று  பின்னில் கண் காட்ட திரும்பிய ரஞ்சனா அதிர்ந்தாள்.

வெள்ளை நிற டாக்டர் கோட்டை ஸ்டைலாய் கையில் பிடித்தபடி, பரமசிவன் கழுத்தை சுற்றிய பாம்பு போல் கம்பீரமாய் ஸ்டெதஸ்கோப் அவன் கழுத்தில் வளைந்திருக்க, ஆறடி உயரத்தில் சினிமா ஹீரோக்களுடன் போட்டியிடும் நிஜ ஹீரோவாய் பளிச்சென்ற வெள்ளைப் புன்னகையுடன் வந்து கொண்டிருந்தான் அர்ஜூன் கிஷோர்.

என் வலிகளில் விழிகள்

உடைப்பெடுக்கவில்லை…

உன் ஆறுதல் பார்வை எனை

வருடும் போதெல்லாம்

உடைந்து போகிறேன் நான்…

ஏனெனில் உணர்வற்ற உள்ளத்தில்

கண்ணீர் உற்பத்தியாவதில்லை…

உனக்கோர் பாரமாய் நானென்று

நினைக்கையில் வருகின்ற

கண்ணீரோ நிற்பதில்லை…