கடிகாரத்தில் சின்ன முள் இரண்டைத் தாண்டி நகர்ந்து கொண்டிருக்க பெரிய முள் மெல்ல நொண்டியடித்து மூன்றை தாண்டிக் கொண்டிருந்தது.
அடிக்கொரு முறை சமயம் பார்த்து கலக்கத்துடன் அலைபேசியில் கணவனை அழைக்க முயன்று தோற்று பதட்டத்தில் நடை பயின்றாள் ரஞ்சனா. அவனது எண் பதில் எதுவுமின்றி டு டு டு என்ற ஓசையுடன் அழைப்பு கட்டானது.
“பிரபா ஏன் இன்னும் வரலை, போனும் போக மாட்டிங்குது, கடவுளே…! எதுவும் தப்பா இருக்கக் கூடாதே…” கடவுளிடம் பிரார்த்தனை வைக்கையில் நேரம் கடந்து போயிருந்தது. தவிப்போடு இருந்தவளை புதிய எண்ணிலிருந்து வந்த அழைப்பு ஏர்போர்ட்டிலிருந்து வரும் வழியில் உங்க கணவருக்கு சின்ன ஒரு விபத்து, உடனே ஜிஎச் கிளம்பி வருமாறு சொல்ல அழக் கூடத் தோன்றாமல் அதிர்ந்து போனாள். எப்படியோ அடித்துப் பிடித்து கிளம்பியவள் வெளியே வருகையில் சரிதா இவளது பேயறைந்த தோற்றம் கண்டு விவரம் கேட்க அரைகுறையாய் அவளிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள்.
ஆட்டோவில் ஆசுபத்திரியை அடைந்து ஜனத் திரளைக் கடந்து ரிசப்ஷனில் சென்று விசாரிக்க, “ஏர்போர்ட்ல இருந்து வர்ற வழில பிரேக் பிடிக்காம டாங்கர் லாரி, டாக்ஸில மோதின கேஸா…?” எனக் கேட்டு பீதியைக் கூட்டி எமர்ஜன்சி பிரிவில் பிரபஞ்சன் அனுமதிக்கப் பட்டிருப்பதாகக் கூறினர்.
இதயம் தாறுமாறாய்த் துடிக்க கணவனைக் கண்டு அவனுக்கு பெரிதாய் எதுவுமில்லை என்று எப்படியாவது மனதுக்கு செய்தியனுப்பும் ஆவலில் பதட்டத்துடன் எமர்ஜன்சி பிரிவுக்கு ஓடினாள் ரஞ்சனா.
அப்போதுதான் ஆம்புலன்சில் ஆசுபத்திரிக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். ரத்தத்தில் குளித்து நினைவின்றி மயங்கிக் கிடக்கும் பிரபஞ்சனை ஸ்ட்ரச்சரில் வைத்து எமர்ஜன்சி அறைக்கு கொண்டு சென்று கொண்டிருந்தனர்.
கணவனை அந்த நிலையில் கண்டதும் அதிர்ந்து போனாள். அப்படியே இதயத்தில் கை வைத்து அமர்ந்தவளுக்கு பிறகு அங்கே நடந்த எதுவும் கருத்தில் பதியவில்லை. எண்ணம் முழுக்க கடைசியாகக் கண்ட கணவனின் ரத்தம் தோய்ந்த உடலின் மீதே நிலைத்திருக்க அதற்குள் சரிதா அவள் கணவனுடன் அங்கே வந்திருந்தாள்.
அவர் டாக்டரிடம் விசாரித்து அவர்கள் சொன்ன மருந்தை எல்லாம் உடனே வாங்கிக் கொடுக்க அழக் கூட முடியாமல், நடந்த சம்பவத்தை மூளை ஏற்றுக் கொள்ள முடியா அதிர்ச்சியில் உறைந்துபோய் உணர்வற்று எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தாள் ரஞ்சனா.
திடுமெனத் தோன்றும் துயரங்களில் சிலநேரம் அப்படித்தான். அழவே தோன்றாது. பின்னிருந்து அவள் பெயர் சொல்லி யாரோ அழைக்கிறார்கள். உள்ளம் எல்லாம் நடுநடுங்கத் திரும்பிப் பார்க்கிறாள்.
தியாவும், காலுக்கு முடியாத நிலையிலும் அவள் அன்னையும் வந்திருந்தனர். ராதிகாவுக்கு சரிதா விஷயம் சொல்ல பதறித் துடித்துக் கொண்டு அவர் துர்காவுக்கு விஷயம் சொல்ல அவர்களும் டாக்ஸியில் சென்னை நோக்கிக் கிளம்பி இருந்தனர்.
யாருடைய ஆறுதலும், பயப்பட வேண்டாமென்ற நம்பிக்கை வார்த்தைகளும் ரஞ்சனாவின் மனதில் கலக்கத்தையோ, அதிர்ச்சியையோ சற்றும் குறைக்கவில்லை. ஒரு நர்ஸாய் எத்தனையோ ரத்தம் வழியும் உடல்களைக் கண்டிருந்தாலும் தன்னவனை அந்த நிலையில் கண்டதை உள்கொள்ள அவளால் முடியவில்லை. முதலுதவி செய்து ஸ்கேன் ரிப்போர்ட் வந்ததும் இடுப்பெலும்பு உடைந்திருக்கிறது, உடனே அதற்கான ஆப்பரேஷனை செய்ய வேண்டுமென்று டாக்டர் சொல்ல அவளிடம் கையெழுத்து வாங்குவதற்காய் வந்த சரிதாவின் கண்களும் கலங்கியிருந்தது.
அப்போதுதான் தியாவின் அன்னை கூறினார்.
“ரஞ்சனா மிலிட்டரி ஹாஸ்பிடலில் தானே ஒர்க் பண்ணறா, பிரபாவை அந்த ஹாஸ்பிடலுக்கு மாற்றலாமே…” என்று சொல்ல அதற்கான ஏற்பாடுகளை செய்து ரஞ்சனா வேலை செய்யும் ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றனர்.
அவன் கண் மூடிக் கிடந்த பொழுதுகளில் சற்றும் கண் மூடவில்லை ரஞ்சனா. ராதிகாவும், துர்காவும் எத்தனையோ சொல்லியும் கணவனை விட்டு நீங்காமல் அன்று உடுத்த அதே உடையுடன் குளிக்காமல் சாப்பிடாமல், மனம் விட்டு அழாமல் அவன் அருகிலேயே அமர்ந்திருந்தாள்.
வலது கையிலும் காலிலும் பிராக்சர் இருந்ததால் கட்டுப் போட்டிருந்தனர். இடுப்பு எலும்பு சற்று மோசமாய் சிதைந்து இருந்ததால் ஆப்பரேஷன் முடிந்து பெல்ட் போட்டிருந்தனர்.
டாக்டர்களின் முயற்சியால் பிரபஞ்சன் இரு முழுமையான பகல்களை முழுங்கிவிட்டு மாலையில் மெல்லக் கண் திறந்தான். ஆனால் அவனால் அசைய முடியவில்லை.
தலையில் பெரிதாய் அடி படாவிட்டாலும் சின்னதாய் காயமிருக்க அங்கேயும் பேண்டேஜ் சுத்தி வைத்திருந்தனர். விழிகளை சுற்றிலும் சுழற்றியவன் பார்வையில், வெள்ளமின்றி வெயிலில் வாடித் துவண்டு கிடக்கும் கொடியாய் சோபாவில் அமர்ந்தபடி அவனையே பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சனாவின் முகமே கிடைத்தது. அவன் கண் திறந்தது கூடத் தெரியாமல் எண்ணங்களை எங்கோ சிதறவிட்டு பார்வையை மட்டும் அவனில் நிலைத்திருந்தாள்.
அவளைக் கண்டதும் உலர்ந்த இதழ்களில் ஒரு புன்னகை விரிய புண்ணாகிக் கிடந்த உதடுகள் தீயாய் எரிந்தன. இருண்டு போன எதிர்காலத்தை மீட்டுக் கொடுக்கும் வெளிச்சம் இருந்தது அப்புன்னகையில்.
மெல்ல நாவால் நனைத்துக் கொண்டு அழைத்தான்.
“ர..ஞ்சு..மா…” குரலில் பாதியைக் காற்று கொண்டு போக சன்னமாக ஒலித்தது அவன் குரல். இருந்தாலும் அந்தக் குரல் அவள் காதுக்குள் பாய்ந்து இதயத்தை அடைந்திருக்க வேண்டும். விலுக்கென்று நிமிர்ந்தவள் விழிகள் அவனது திறந்திருந்த விழிகளை அப்போதுதான் கவனித்தது. திகைத்து எழுந்தவள் அவனருகே வந்து அந்த முகத்தையே குறுகுறுத்துப் பார்த்தாள். இத்தனை நேரம் அடைத்து வைத்திருந்த அழுகை வெடிக்க சட்டென்று உடைந்து போய் கதறத் தொடங்கினாள் ரஞ்சனா.
அறைக்கு வெளியே அமர்ந்திருந்த ராதிகாவும், துர்காவும் சத்தம் கேட்டு உள்ளே ஓடிவர பிரபஞ்சன் கண் விழித்ததைக் கண்டு அவர்களும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். ராதிகா கண்ணீருடன் மகனின் கையை ஆறுதலாய் பற்றிக் கொள்ள துர்கா ஓடிச் சென்று டியூட்டியில் இருந்த லாவண்யாவை அழைத்து வந்தார். அவள் பரிசோதித்து விட்டு அழுது கொண்டிருந்த ரஞ்சனாவின் தோளில் ஆறுதலாய் தட்டிவிட்டு டாக்டரை அழைக்க சென்றாள்.
பிரபஞ்சனின் தந்தை சிவகுமாருக்கு நீண்டதூர யாத்திரை முடியாத காரணத்தாலும் நேரத்துக்கு உணவும், மருந்தும் கொடுத்து கவனிக்கப்பட வேண்டிய சிகிச்சை சூழலில் இருந்ததாலும் அவரை அழைத்து வந்திருக்கவில்லை. பரிமளம் சமையல் வேலையைப் பார்த்துக் கொண்டாலும் மகன், அன்னை இருவருக்குள்ளும் பேச்சு வார்த்தை இல்லையென்பதால் வைஷாலியிடம் வீட்டுக்கு வந்து தந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டினார் ராதிகா. அவள் புகுந்த வீட்டிலிருந்து விட்டால் போதுமென்று பிறந்த வீட்டுக்கு வந்திருந்தாள்.
துர்கா குடும்பத்துடன் வந்திருந்தாலும் நல்லசிவம் இப்போதும் மருந்தின் உதவியால் இதயத்தை பலப்படுத்திக் கொண்டிருக்க அவரைக் கூட்டிக் கொண்டு அதிகம் அலைய முடியாமல் சின்ன மகளைத் துணைக்கு வைத்து மகளின் பிளாட்டில் விட்டிருந்தார்.
மிகவும் கடினமான நேரங்கள் கலைந்து போக, கணவன் மீண்டு விடுவான் என்ற நம்பிக்கை வெளிச்சம் அவள் விழிகளுக்கு தெம்பைக் கொடுக்கத் தொடங்குகையில், ஒரு வாரம் படுக்கையில் இருந்தவனுக்கு அன்று முதுகில் பயங்கர வலி ஏற்படவே மீண்டும் ஒரு ஸ்கேன் எடுத்தனர்.
“ரஞ்சனா, உன்னை டாக்டர் வர சொன்னார்…” லாவண்யா வந்து அழைக்க பரிதவிப்புடன் கணவனின் கையைப் பற்றியபடி அமர்ந்திருந்த ரஞ்சனா எழுந்து சென்றாள்.
தவிப்பும், பயமுமாய் ரஞ்சனா டாக்டர் அறைக்குள் நுழைய அவளை நோக்கி மென்மையாய் புன்னகைத்த டாக்டர், “உக்காரு மா…” என்றதும் அமர்ந்தாள். அவரது மேஜை மீதிருந்த நேம் பிளேட் பெயர் ஆனந்தராஜ் என்று சொல்ல இன்னும் சில மாதங்களில் அவர் ஓய்வெடுக்கும் வயதை எட்டிவிடுவார் என்று தோற்றம் கூறியது.
“ரஞ்சனா, நீ ரொம்ப நெர்வஸா இருக்க போலருக்கு… கொஞ்சம் ரிலாக்ஸ்டா இரு மா, நீ ஒரு அனுபவம் வாய்ந்த நர்ஸ், நம்ம பீல்டுல இதெல்லாம் உனக்குப் புதுசில்லை… நீ கொஞ்சம் தைரியமா இருந்தா தான் எனக்கு என்னன்னு சொல்ல வசதியா இருக்கும்…” அவர் சொல்ல கலங்கிய கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு தன்னை நிதானப்படுத்தி நிமிர்ந்தாள் ரஞ்சனா.
“அவருக்கு என்ன பிரச்சனைன்னு ஓப்பனா சொல்லுங்க டாக்டர், ஸ்கேன்ல ஏதாச்சும் காம்ப்ளிகேட்டட் விஷயமா…?”
“காம்ப்ளிகேட்டட் இல்லன்னு நான் பொய் சொல்ல முடியல, பட்… கொஞ்சம் பொறுமையா இருந்தா சரி பண்ணிடலாம்…”