Advertisement

“ரஞ்சுமா, அம்மா மேல உனக்கு கோபம் எதுவும் இல்லையேடா…”

“எதுக்குமா… என் விதி இதுதான்னு கடவுள் எழுதி இருக்கும் போது உங்க மேல கோபப்பட்டு என்ன பண்ணுறது…”

“எனக்குத் தெரியும் டா… நீ எந்த சூழலுக்கும் பொருந்திப் போற பொண்ணு, உன்னோட ஆசைகளை விட குடும்ப நன்மையும், விருப்பமும் தான் உனக்குப் பெருசு… உன் நல்ல மனசுக்கு நிச்சயம் நீ நல்லாருப்ப, மாப்பிள்ளையும் ரொம்ப நல்லவராத் தெரியுறார்… அவர் மனசு கோணாம புரிஞ்சு பக்குவமா நடந்துக்க டா…”

“ம்ம்… சரிம்மா…”

“நிஜமா அம்மா மேல உனக்கு கோபம் இல்லயா…” மீண்டும் கண்ணீருடன் கேட்ட தாயிடம்

“ஆமாம், கோபம் தான்… உங்கள் மேல் அல்ல, என் விதியின் மீது…” என்று சொல்ல அவள் மனதில் வார்த்தைகள் வந்தாலும் இதழ்கள் பூட்டிக் கொண்டது.

“ரெண்டு நாள் கழிச்சு விருந்துக்கு வீட்டுக்கு வந்திருங்கடா, மாப்பிள்ள வீட்டுல சொல்லிருக்கேன்…” என்ற அன்னையிடம் அமைதியாய் தலையாட்ட, மகளையே கண்ணெடுக்காமல் பார்த்த துர்கா சட்டென்று அவளைக் கட்டிக் கொண்டார்.

“அம்மா, வருத்தப்படாதீங்க… நான் சந்தோஷமா இருக்கேன்…”

உதட்டில் புன்னகையும் கண்களில் வருத்தத்தையும் சுமந்து வந்த வார்த்தைகள் அந்த பெற்றவளுக்கா புரியாது… மகளின் கன்னத்தில் முத்தமிட்டு கையைப் பற்றி அழைத்துக் கொண்டு கணவனிடம் வந்தாள்.

“ரஞ்சுமா…” மனதின் நேசத்தையும், அவள் பிரிந்து புகுந்த வீடு போகும் வருத்தத்தையும் ஒன்றாய் தேக்கி உடைந்து போன குரலில் மகளை அழைத்த தந்தையின் கையைப் பற்றிக் கொண்டவள் விழியிலிருந்து கண்ணீர்த் துளிகள் அவர் கையில் உருண்டு விழ, அமைதியாய் மகளை நெஞ்சில் சாய்த்துக் கொண்டார் அந்த தந்தை.

“ரஞ்சுமா, உனக்கு அப்பா சொல்லி எதுவும் தெரிய வேண்டியதில்லை, உன் வாழ்க்கையை அழகா, அமைதியா கொண்டு போக உனக்குத் தெரியும்… உன் பொறுமைக்கும், அமைதியான குணத்துக்கும் நல்லாருப்படா தங்கம்… லீவு கிடைக்கும்போது மாப்பிள்ளையைக் கூட்டிட்டு அப்பப்போ வீட்டுக்கு வந்திட்டுப் போடா…” என்றார் கண்கலங்க.

“சரி சரி, போதும், போதும்… கிளம்பும்போது அக்காவை அழ வச்சு அனுப்பாம சந்தோஷமா அனுப்பி வைங்க…” சின்னவள் சஞ்சனா பெரிய மனுஷியாய் அதட்ட புன்னகைத்தனர்.

“மாமா, எங்க கண்ணையே உங்ககிட்ட ஒப்படைக்கிறோம்… அதுல வெங்காயம் கட் பண்ணும்போது கூட தண்ணி வராமப் பார்த்துக்க வேண்டியது உங்க பொறுப்பு… சரியா…?” என்று பிரபாவையும் அவள் வம்புக்கு இழுக்க சிரித்தான்.

“அம்மா தாயே…! உன் அக்காவை செய்ய வைக்காம அந்த வெங்காயத்தை நானே கட் பண்ணிக்கிறேன், போதுமா…?” என்று பிரபாவும் மச்சினியை பதிலுக்கு சீண்டினான். எல்லாரும் சிரிக்க தங்கையிடம் வந்தாள் ரஞ்சனா.

“ஏய் வாண்டு, இனி நீதான் அம்மா, அப்பாவோட தேவைகளை எல்லாம் பக்கத்துல இருந்து பார்த்துக்கணும், ஒழுங்கா படிக்கணும்…” என்று தங்கையின் கையைப் பற்றி ரஞ்சனா உபதேசிக்க சிரித்தாள் சின்னவள்.

“சரிக்கா, நீ சந்தோஷமா உன் புது வாழ்க்கையை வாழத் தொடங்கு, ஆல் தி பெஸ்ட் மாமா…” வாழ்த்தினாள்.

“மாப்பிள…” என்று பிரபஞ்சனின் கையைப் பற்றிக் கொண்ட நல்லசிவத்திடம், “மாமா, கவலைப் படாதீங்க… என் மனைவியை நல்லபடியா பார்த்துக்க வேண்டியது என் கடமை, நீங்க உடம்பைப் பார்த்துக்கங்க…” என்றான்.

“சரி டைம் ஆச்சு, கிளம்பலாம்…” ராதிகா குரல் கொடுக்க அனைவரும் வெளியே வந்தனர். மணமக்களுடன் வைஷாலியும் ராதிகாவும் காரில் ஏறிக் கொள்ள, சிவகுமார் வேறு காரில் ஏறிக் கொண்டார்.

சிறிது நேரத்தில் பிரபஞ்சனின் வீடு இருந்த துடியலூரை அடைந்தவர்கள், வீட்டு வாசலில் மணமக்களை நிறுத்தி ஆரத்தி எடுத்து, வலது காலை எடுத்து வைத்து புகுந்த வீட்டுக்குள் நுழைந்த மருமகளை அழைத்துச் சென்று பூஜையறையில் விளக்கேற்ற வைத்தார் ராதிகா.

“அம்மா ரஞ்சனா, இதுதான் இனி உன் வீடு… இந்த வீட்டு சந்தோஷமும், துக்கமும் எல்லாம் இனி உன்னோடதும் கூட… இங்கே எது நடந்தாலும் அந்த சூழ்நிலைக்கு ஏற்ப வீட்டு மருமகளா எல்லாத்துலயும் பொறுப்பா இருக்கணும்…”

“சரி அத்தை…”

“பிரபா, நல்லபடியா கடவுளை வேண்டிட்டு வாங்க… பால், பழம் எடுத்து வைக்கிறேன்…” சொன்னவர் அங்கிருந்து நகர, அவர் செல்வதையே பார்த்து நின்ற மனைவியை நோக்கி பிரபஞ்சன் புன்னகைத்தான்.

“என்ன ரஞ்சு… என் அம்மாவையே பார்த்திட்டு இருக்க…”

“இ..இல்ல, அத்தை இயல்பா பேசறாங்கன்னு யோசிச்சேன்…”

“ம்ம்… அம்மா ரொம்ப நல்லவங்க, சில நேரம் கட் அண்ட் ரைட்டாப் பேசுவாங்க… ஆனா அதுக்கு காரணம் இருக்கும்…”

“ம்ம்…”

“சரி, சாமி கும்பிடுவோம்…”

இருவரும் கண் மூடி கடவுளைப் பிரார்த்தித்து விட்டு ஹாலுக்கு வர சோபாவில் அமர வைத்தனர்.

வீட்டுப் பெரியவர்கள் இருவருக்கும் பால், பழம் கொடுத்து அந்த சடங்கை முடித்து வைத்ததும், “ரஞ்சனா, நீ போயி இந்த சேலை, நகை எல்லாம் மாத்திட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடு… அப்புறமா வீட்டை சுத்திப் பார்க்கலாம், வைஷூ, அண்ணியை உன் ரூமுக்கு அழைச்சிட்டுப் போயி ஹெல்ப் பண்ணு…” என்று மகளுக்கு ஆணையிட, “வாங்கண்ணி…” என்றவள் ரஞ்சனாவை அழைத்துச் சென்றாள்.

பிரபஞ்சனின் தந்தை சிவகுமார் ஒரு காலத்தில் சொந்தமாய் அரிசி ஆலை, கரும்பு ஆலை என்று வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்தவர். அந்த நேரத்தில் சகல வசதியோடு குட்டி பங்களா போன்ற வீட்டைக் கட்டியிருந்தார். அதிகப் பணமும், தவறான சகவாசமும் அவரை சீட்டு, குதிரை ரேஸ் என்று தவறான பாதையில் செல்ல வைக்க சம்பாதித்ததை எல்லாம் இழக்கத் தொடங்கினார். அரிசி ஆலை, கரும்பு ஆலை என்று ஒவ்வொன்றாய் கை விட்டுப் போக ஒரு கட்டத்தில் சுதாரித்துக் கொண்ட ராதிகா, தன் பெயரில் இருந்த வீட்டை மட்டும் விற்க மறுத்துவிட்டார்.

தொழிலும் நஷ்டமாகி, கையில் பணமும் இல்லாமல் போனதும் கூடா நட்புகள் விலகிச் செல்ல, கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பது போல் எல்லாம் போன பின்னர் சிவகுமாருக்கு புத்தி வந்தது. அதற்குப் பின்னர் சிறிது காலம் வேலைக்கு சென்றவரை சுகர், பிரஷர், கொலஸ்ட்ரால் என்று உடல் உபாதைகள் கஷ்டப்படுத்த மகன் தலையெடுத்ததும், வேலையை விட்டவர் மனைவி சொல் ஒன்றே மந்திரம் என்று வீட்டில் அமைதியாய் இருக்கிறார்.

பிரபஞ்சனின் தங்கை வைஷாலி அவனை விட ஆறு வயது சின்னவள். கல்லூரிப் படிப்பை முடித்ததும் ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் வேலைக்கு சென்றவள் வீட்டு சுமையைக் குறைப்பாள் என ராதிகா நினைக்க, அவளோ வயிற்றில் புதுச் சுமையோடு வந்து கண்ணைக் கசக்க அதிர்ந்து போனது குடும்பம். விசாரிக்கையில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தும் வினோத்தை ஒரு வருடமாய் காதலிப்பதாய் சொல்லி பிரஷரை ஏற்ற, இரு குடும்பத்தாரும் சேர்ந்து பேசி உடனே கல்யாணத்தை வைக்க முடிவு செய்ய அந்த வினோத் வீட்டில் கல்யாணத்துக்கு முப்பது பவுன் நகையாவது பொண்ணுக்குப் போட வேண்டுமென்று கூறினர்.

பிரபஞ்சனுக்கு 29 வயதுக்குள் கல்யாணத்தை முடிக்க வேண்டுமென்று ஜோசியர் சொல்லவே அப்போதுதான் ரஞ்சனாவின் சம்பந்தம் வந்து ஜாதகம் சேர்ந்திருக்க, வேறு வழியில்லாமல் அவர்களிடமே வரதட்சணையாய் ரெண்டு லட்சம் கேட்க முடிவு செய்தனர். ராதிகா மகளுக்காய் மாற்றி வைத்திருந்த தனது நகைகளைக் கொடுக்க, மீதிப் பணத்தை பிரபஞ்சன் சரி செய்து தங்கை கல்யாணத்துக்கு நகை செய்ய,  கல்யாண ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினர்.

“வைஷூ… நீ பி எஸ் சி தானே…?” ரஞ்சனா கேட்க, அவள் கழுத்தில் இருந்த நகையை கழற்றிக் கொண்டிருந்த வைஷாலி, “ஆமா அண்ணி, பிஎஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ்…” என்று பதில் சொன்னாள்.

“ம்ம்…”

“இந்த ஆரம் ரொம்ப அழகாருக்கு அண்ணி…” என்றவள் மாங்காய், மாங்காயாய் அழகாய் கோர்க்கப்பட்டிருந்த ரஞ்சுவின் ஆரம் ஒன்றை கழுத்தில் வைத்துப் பார்க்க, “ம்ம்… உனக்கும் இதே போல ஒண்ணு கல்யாணத்துக்கு செய்துடலாம்…” என்று புன்னகைத்தாள்.

“அய்யய்யோ, அதெல்லாம் வேண்டாம் அண்ணி, சும்மா சொன்னேன்… எனக்கான நகை எல்லாம் ஆல்ரெடி அம்மாவும், நானும் ஆர்டர் கொடுத்துட்டோம்…”

“ஓ… சரி, இதை என் பரிசா உன் கல்யாணத்துக்கு வச்சுக்க…”

“வேண்டாம் அண்ணி… ஆல்ரெடி அண்ணன் நிறைய பண்ணிட்டார்… கல்யாணமாகி வந்ததும் உங்க நகையைத் தூக்கி எனக்குக் கொடுத்திங்கன்னு தெரிஞ்சா அம்மாவும், அண்ணனும் திட்டுவாங்க… இப்ப வேண்டாம், கொஞ்ச நாள் கழிச்சு கொடுங்க… வாங்கிக்கறேன்…” வைஷாலி சொல்ல,

“ம்ம்… இதெல்லாம் பத்திரமா எடுத்து வை, நான் குளிச்சிட்டு வந்துடறேன்…” சொன்னவள் மாற்று உடையை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் நுழைய அவள் நகைகளை ஒவ்வொன்றாய் கழுத்தில் போட்டு அழகு பார்த்தபடி இருந்தாள் வைஷாலி.

“வைஷூ…” சட்டென்று கேட்ட அதட்டல் குரலில் திரும்ப அன்னை ராதிகா உள்ளே வந்தார்.

“என்ன பண்ணிட்டு இருக்க… இன்னும் உன் நகை மோகம் குறையலையா, அதான் உனக்குப் பிடிச்ச போல நகை செய்ய சொல்லிருக்கே… இதை எதுக்குப் போடற…?”

“அது சும்மா, ஒரு ஆசைக்குப் போட்டுப் பார்த்தேன் மா…”

“ம்ம்… ஆசை…! எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா… நீ தானே மாப்பிள்ள கிட்ட சொல்லி பத்து பவுன் போடலாம்னு இருந்த எங்ககிட்ட முப்பது பவுன் நகை வேணும்னு கேக்க வச்ச, பாவம்… பழி அவங்களுக்கு…”

“ஐயோ, அம்மா சத்தமாப் பேசாத… யார் காதுலயாச்சும் விழப் போகுது…” பதறினாள் மகள்.

“ம்ம்… இனியும் இப்படி பார்க்கிறதுக்கு எல்லாம் ஆசைப்படாம கிடைச்சதை வச்சு சந்தோஷமா இருக்கப் பழகு, நீ கிளம்பு, நான் எடுத்து வச்சுக்கறேன்…” மகளை விரட்டினார் ராதிகா.

நீரில்லா நீச்சல் தான்

வாழ்க்கையோ…

நிறைவேறா நேசம் தன்னை

மறந்தோ மறைத்தோ தான்

வாழ்ந்திட வேண்டுமோ…

தேங்கிடாத நீரோடையாய்

வாழ்க்கையின் ஓட்டம்…

Advertisement