Advertisement

அத்தியாயம் – 1

 

“கெட்டிமேளம்… கெட்டிமேளம்…”

புரோகிதரின் குரலைத் தொடர்ந்து ஒலிக்கத் தொடங்கிய மங்கள வாத்தியங்களின் ஓசை மண்டபத்தை நிறைக்க, அனைவரும் அட்சதை தூவி வாழ்த்த பிரபஞ்சன், தன் அருகே அமர்ந்திருந்த ரஞ்சனாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளைத் துணைவியாக்கிக் கொண்டான்.

புன்னகையுடன் அவள் முகத்தை ஏறிட அவளோ கல்யாணப் பெண்ணுக்குரிய எந்த பாவமும் இன்றி யோசனையுடன் அமைதியாய் நிலம் நோக்கி அமர்ந்திருக்க குழம்பினான்.

“ரஞ்சு…” காதருகே கிசுகிசுத்த அன்னை துர்காவின் குரலில் விசுக்கென உணர்வுக்கு வந்தவள் மெல்லிய புன்னகையை செயற்கையாய் உதட்டில் ஒட்ட வைத்துக் கொள்ள, அடுத்து அவள் வகிட்டில் குங்குமம் வைக்க நெருங்கிய பிரபஞ்சனின் முகம் அவள் புன்னகையைக் கண்டதும் தெளிந்தது.

அடுத்து புரோகிதர் சொன்ன சடங்கு, சம்பிரதாயங்கள் அனைத்தையும் இருவருமாய் செய்யத் தொடங்க, அடிக்கடி பிரபஞ்சனின் விழிகள் ஆவலுடன் அருகே நிற்கும் ரஞ்சனாவின் முகத்தைத் தழுவி மீண்டன. பிரம்மா மிகவும் உற்சாக மனநிலையோடு இருக்கும்போது அவளைப் படைத்திருக்க வேண்டும்.

அளவான உயரத்தில், எடுப்பான தோற்றத்துடன், அழகான நெளிவு, சுளிவுகளுடன் இயற்கையிலேயே அழகாய் இருப்பவளை மணப்பெண் அலங்காரமும் சேர்ந்து பேரழகாய் காட்ட முகத்தில் மட்டும் மலர்ச்சி குறைவாக இருப்பது போல் தோன்றியது பிரபஞ்சனுக்கு.

“இவள் முகம் ஏன் யோசனையிலேயே இருக்கிறது…? ஒருவேளை, கல்யாணத்துக்கு அவள் வீட்டில் வரதட்சணை கேட்டது பிடிக்கவில்லையோ, அவள் தந்தையைக் கஷ்டப் படுத்திவிட்டோம் என்று நினைக்கிறாளா, இல்லை, இந்தக் கல்யாணமே இவளுக்குப் பிடிக்கவில்லையா…?”

பலவாறாய் தனக்குள் யோசித்துக் குழம்பிக் கொண்டிருந்த பிரபஞ்சனும் அவள் அருகே நிற்கையில் சற்றும் தோற்றத்தில் குறை வைக்கவில்லை. நல்ல உயரமும், அதற்கேற்ற உடல்வாகும், மாநிறமாய் இருந்தாலும் லட்சணமான முகத்துடனும் இருந்தான்.

இருவரும் அக்னியை வலம் வந்ததும், “பெரியவா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கங்கோ…” புரோகிதர் சொல்ல அவர்களிடம் சென்றனர்.

“முதல்ல பாட்டி கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கங்க…” அவனது அன்னை ராதிகா சொல்ல, மணமேடையில் ஓரமாய் ஒரு  நாற்காலியில் அமர்ந்திருந்த பாட்டி பரிமளத்தின் காலைத் தொட்டு வணங்க அவர் வாழ்த்தினார்.

“ரெண்டு பேரும் சகல சௌபாக்கியத்தோட, ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு அனுசரிச்சு நீண்டகாலம் நல்லாருக்கணும்…” பல்லில்லா வாயுடன் காதில் தம்பட்டம் ஆட வாழ்த்தினார்.

அடுத்து பிரபஞ்சனின் பெற்றோர் சிவகுமார், ராதிகாவின் காலிலும், ரஞ்சனாவின் பெற்றோர் நல்லசிவம், துர்காவின் காலிலும் விழுந்து ஆசி வாங்கிக் கொண்டனர்.

பிறகு மணமக்கள் பொதுவாய் சபையோரை நோக்கி கை கூப்பி வணங்கி விட்டு அமர்ந்தனர்.

“ரெண்டு பேருக்கும் ஜோடிப் பொருத்தம் பிரமாதம்…” பெரியவர் ஒருவர் சொல்ல,

“ஜோடிப் பொருத்தம் மட்டுமா, பிரபஞ்சன், ரஞ்சனா பெயர் பொருத்தம் கூட ரெண்டு பேருக்கும் அமோகமா இருக்கே…” என சிலாகித்தார் அருகே அமர்ந்திருந்த அவரது மனைவி.

“ம்ம்… இந்த பொருத்தத்தோட ரெண்டு பேருக்கும் நல்ல மனப் பொருத்தமும் அமைஞ்சு, ஒருத்தருக்கு ஒருத்தர் புரிதலோட சந்தோஷமா வாழட்டும்…” அவர் மனதார சொல்ல புன்னகைத்தார் மனைவி.

“அதெல்லாம் நம்ம ரஞ்சுவோட சுபாவத்துக்கு ரொம்பவே நல்லா வாழ்வாங்க… மாப்பிள்ள வீட்டுக்காரங்களும் பண விஷயத்துல கொஞ்சம் கறாரா இருந்தாலும் மத்தபடி நல்ல ஆளுங்க போலத்தான் தெரியுறாங்க…”

“ம்ம்… மாப்பிள்ளயோட தங்கச்சி வைஷாலிக்கும் அடுத்த மாசமே கல்யாணம் வச்சிருக்கிறதா சொன்னாங்க…”

“ஆமாங்க, துர்கா சொல்லிட்டு இருந்தா…”

“அக்கா, நல்லாருக்கீங்களா…” அருகே ஒரு பெண்குரல் கேட்க திரும்பியவர் புன்னகைத்தார்.

“நல்லாருக்கேன் வாசுகி, நீ எப்படி இருக்க…” என்றவர் பிறகு பொதுவான நல விசாரிப்புகளுடன் குசலம் பேசத் தொடங்க மணமக்களை மேடைக்கு சென்று ஒவ்வொருத்தராய் வாழ்த்தி பரிசளித்து இறங்கிக் கொண்டிருந்தனர். வீடியோ வெளிச்சம் அவர்கள் மேல் விடாமல் விழுந்து கொண்டிருக்க உதட்டில் ஒட்ட வைத்த புன்னகையை அழிக்காமல் அப்படியே நின்றிருந்தாள் ரஞ்சனா. மனதுக்குள் ஒரு ஏமாற்றக் குரல், “என்னை ஏமாத்திட்டியே ரஞ்சு…” எனக் கேட்டுக் கொண்டிருக்க முகத்தில் காட்டிக் கொள்ளாமல் இயல்பாய் இருக்க முயன்றவளுக்கு அவளது செவிலியர் பணியில் கிட்டிய அனுபவம் மிகவும் உதவி செய்தது.

ரஞ்சனாவின் வீடு கோவை கணபதியில் இருக்க செவிலியர் படிப்பு முடித்து தனியார் மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்து பல முயற்சிகளுக்குப் பிறகு இராணுவ மருத்துவமனையில் மும்பையில் வேலை கிடைத்தது. வீட்டில் அனுப்ப மாட்டோம் என்று மறுக்க, எத்தனையோ பாடுபட்டு சம்மதம் வாங்கி, மும்பை சென்று அங்கே நர்ஸ் குவாட்டர்சில் தங்கி பணியாற்றிக் கொண்டிருக்கிறாள்.

பிரபஞ்சனுக்கு சென்னையில் ஒரு தனியார் வங்கியில் வேலை என்பதால் இப்போது சென்னைக்கு மாற்றல் கேட்டு விண்ணப்பித்திருக்கிறாள். பிரபஞ்சனின் வீடும் கோவையில் தான் இருந்தது. அவனும் பெற்றோரை விட்டு சென்னையில் ஒரு சிங்கிள் பெட்ரூம் பிளாட்டில் வாடகைக்கு இருந்தபடி வங்கியில் வேலைக்கு சென்று கொண்டிருந்தான்.

“அக்கா, மாமா… நான் ஒரு செல்பி எடுத்துக்கறேன், ஸ்டேட்டஸ் போடணும்…” சொன்ன ரஞ்சனாவின் தங்கை சஞ்சனா இருவரின் நடுவிலும் தலையை நுழைத்து மொபைலை வைத்து செல்பி எடுக்க முயல அவளுக்கும் ஒரு புன்னகையைக் கொடுத்துவிட்டு அமர்ந்தனர்.

சென்னையிலிருந்து வந்திருந்த பிரபஞ்சனின் நண்பர்கள் மேடைக்கு செல்ல அவர்களை அறிமுகப் படுத்தினான். அவர்கள் விலகியதும் பிரபாவின் பெற்றோர் வந்தனர். ராதிகாவின் கை மகள் வைஷாலியின் கையை இழுத்துப் பிடித்து வைத்திருந்தது.

“எங்களை ஒரு பாமிலி போட்டோ எடுங்க…” புகைப்படம் எடுப்பவரிடம் அதிகாரமாய் சொல்லிவிட்டு, மகளை மணமக்கள் நடுவில் நிறுத்தி அவர்கள் இருபுறமும் நின்று போட்டோவுக்காய் புன்னகைக்க கிளிக்கிக் கொண்டார். அதைக் கண்டு ரஞ்சனாவின் பெற்றோரும் தங்கை சஞ்சனாவுடன் வந்து குடும்ப போட்டோ எடுத்தனர்.

“அம்மா, அப்பாக்கு மாத்திரை கொடுத்தீங்களா…” மகள் அன்னையிடம் குரலைக் குறைத்து அந்த நேரத்திலும், தந்தை மேல் பாசம் கொண்ட மகளாய், மனித்தன்மை நிறைந்த செவிலியாய் விசாரிக்க பதறினார் துர்கா.

“அச்சோ மறந்துட்டேன், இப்பவே எடுத்துக் கொடுக்கிறேன்… ஏய் சஞ்சு, அப்பாவோட மாத்திரையை உன்கிட்ட தான கொடுத்தேன்… அவருக்கு நாலு மணி நேரத்துக்கு ஒருமுறை மாத்திரை போடணும்னு தெரியாதா, போயி எடுத்திட்டு வா…” என்றவர் கணவனை அழைத்துச் சென்று அமர வைத்தார்.

சிறிது நாள் முன்புதான் அவருக்கு இதயத்தில் ஒரு மேஜர் ஆப்பரேஷன் முடிந்திருந்தது. தந்தையின் இதயத்தில் பிரச்சனை இருப்பது தெரிந்து வீடே ஆடிப் போக, அலறியபடி ஊருக்கு சென்ற ரஞ்சனாவிடம் பிரபஞ்சனின் சம்பந்தத்தைப் பற்றிக் கூறி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கியபிறகே அமைதியானார் நல்லசிவம். அதுவரை இப்போது கல்யாணம் வேண்டாமென்று தள்ளிப் போட்டுக் கொண்டு இருந்தவளுக்கு இப்போது தந்தையின் விருப்பத்தை மீறவோ, தனது விருப்பத்தைப் பெரிதாக எண்ணவோ முடியவில்லை.

தந்தை நல்ல சிவத்திற்கு ஒரு வாரத்திற்குள் மேஜர் ஆப்பரேஷன் செய்ய வேண்டுமென்று டாக்டர் சொல்ல, அதற்கான செலவுக்கும், பிரபஞ்சனின் வீட்டார் வரதட்சணையாய் கேட்ட இரண்டு லட்சம் ரூபாய்க்கும், கல்யாண செலவுக்கும் என்று குடியிருக்கும் வீட்டின் மேல் லோன் எடுத்திருந்தனர்.

ரஞ்சனாவின் ஒரு மாத விடுமுறை முடிவதற்குள் கல்யாணத்தை நடத்திவிட வேண்டுமென்று நினைத்தவர், ஆப்பரேஷன் முடிந்து அடுத்த வாரத்திலேயே கல்யாணத்துக்கும் ஏற்பாடு செய்துவிட்டார். ஒரு ஈவன்ட் மேனேஜ்மென்டிடம் கல்யாணப் பொறுப்பைக் கொடுக்க, அவர்கள் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து பார்த்துக் கொள்ள எதுவும் தடங்கலின்றி நல்லபடியாய் முடிந்தது.

ரஞ்சனாவின் தந்தை டவுனில் சின்னதாய் ஒரு பாத்திரக்கடை வைத்திருந்தார். கணவனுக்கு ஒத்தாசையாய் துர்காவும் அடிக்கடி கடைக்கு சென்று பார்த்துக் கொள்வார்… மோசமில்லாத வருமானத்தில் குடும்ப சொத்தில் பங்காய் கிடைத்த இடத்தில் ஓரளவுக்கு பெரிய வீடாகவே லோன் இல்லாமல் கட்டி இருந்தார் நல்லசிவம்.

பெரியவள் ரஞ்சனாவின் விருப்பப்படி நர்ஸிங் படிக்க வைத்தவர் சின்ன மகளின் விருப்பம் போல் அவளை எஞ்சினியரிங்கில் சேர்த்திருந்தார். அவள் மூன்றாம் வருடம் கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் படித்துக் கொண்டிருக்கிறாள்.

மணமக்களை பல விதத்தில் நிற்க வைத்து போட்டோ, வீடியோகிராபர் காமிராவுக்குள் சுருட்டிக் கொண்டிருக்க ராதிகா வந்து சின்னதாய் அதட்டினார்.

“போதும் போட்டோ எடுத்தது… பாவம், அவங்களை சாப்பிட அனுப்புங்க…” என சாப்பிட அனுப்பினர்.

அங்கேயும் விருந்து சாப்பிடுபவர்களையும், மணமக்களையும் வளைத்து வளைத்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.

“டேய் பிரபா… என்னடா உன் இலைல வச்ச ஸ்வீட்டை நீயே சாப்பிடற, சிஸ்டருக்கும் எடுத்து ஊட்டி விடு…” பிரபஞ்சனின் நண்பன் ஒருவன் சொல்ல மற்றவர்கள் கலகலப்பாய் சிரித்து தலையாட்டினர்.

பிரபா சிறிது பைனாப்பிள் கேசரியை எடுத்து மனைவியின் உதட்டுக்கு கொண்டு செல்ல வாங்கிக் கொண்டாள் ரஞ்சு.

“என்ன சிஸ்டர், நீங்க வாங்கி சாப்பிட்டு சைலன்ட் ஆகிட்டீங்க, பிரபாவுக்கு ஊட்டி விடுங்க…” அந்த நண்பன் மீண்டும் தொடங்க, மறுக்காமல் எடுத்து ஊட்டினாள்.

“ஹே, இனி நீங்க சாப்பிடுங்க…” என்று உற்சாக ஆரவாரம் செய்தவர்கள் தங்கள் இலையை கவனிக்க மணமக்களும் சாப்பிட்டு முடித்தனர்.

சிறிது நேரத்தில் அங்கே வந்த ராதிகா, “நல்ல நேரம் முடியறதுக்கு கொஞ்ச நேரம் தான் இருக்கு, இப்பவே வீட்டுக்கு கிளம்பிடலாம்…” என அதற்குத் தயாராயினர்.

பெற்றோரிடம் விடை பெற வந்தனர் மணமக்கள்.

“அம்மா, அப்பாவை நல்லா கவனிச்சுக்கங்க… நேரத்துக்கு மருந்து கொடுங்க…” என்ற மகளைக் கண் கலங்க நோக்கிய துர்கா அவள் கையைப் பற்றி தனியே அழைத்துச் சென்றார்.

Advertisement