Advertisement

உப்புக் காற்று 


அத்தியாயம் 18

ரோஜா நின்று கொண்டிருப்பதைப் பார்த்த அருள். அவளுக்கு உட்காரவும் இருக்கை இல்லாததால்… “வா ரோஜா இப்படி உட்காரு.” என்றவன், தரையில் அமர்ந்து சுவற்றில் சாய்ந்து கொள்ள… ரோஜாவும் கணவனின் அருகில் உட்கார்ந்து கொண்டாள். 

“உங்க அப்பா உடம்பு முடியாம இருந்தாரா?” என மாதவன் மரியதாஸ் பற்றி ரோஜாவிடம் கேட்க, ரோஜா இல்லை என்றவள், அன்று நடந்ததைச் சொல்ல.. திடிரென்று இருந்த ஒரு உறவும் இறந்து போனால், அவளுக்கு எப்படி இருந்திருக்கும் என அவனுக்குப் புரிந்தது. 

“அப்ப கூட அவங்க அப்பா இறந்ததை எனக்குச் சொல்லலை மாப்பிள்ளை.” என்றான் அருள் குறையாக. 

“உங்களுக்குக் காரணம் தெரியும்.” என்றவள், பவித்ரா அக்கா கல்யாணத்துக்குப் பத்திரிகை அடிச்சாச்சு. எப்படிச் சொல்றது? அதுதான் சொல்லலை…” ரோஜா சொல்ல… 

“நீ என்ன முறைய மாத்துற… பவித்ரா உனக்கு அண்ணி. அதோட என்னோட செல்ல பொண்டாட்டி வேற…” என மாதவன் வேண்டுமென்றே சொல்ல… பவி முறைக்க… ரோஜாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. 

பவி கொஞ்சம் எழுதுக்கிறியா? என, எதற்கு என்று தெரியாமலே பவித்ரா எழுந்து நிற்க, கட்டிலில் சென்று உட்கார்ந்த மாதவன், “கார்ல வந்தது டயர்டா இருக்கு. நான் கொஞ்சம் படுத்துகிறேன்.” என அவன் படுத்துக் கொள்ள…
இவன் என்ன இப்படி நீட்டி நிமிர்ந்து படுத்துட்டான் என நினைத்த பவித்ரா நாற்காலியில் உட்கார்ந்தாள். 

“ரோஜா உனக்கு நல்லா சமைக்கத் தெரியுமா?” மாதவன் கேட்க, ரோஜா அருளைப் பார்க்க… 

“நீ என்ன உன்னைக் கேள்வி கேட்டா அவனைப் பார்க்கிற… அப்ப அவன்தான் சமைக்கிறானா…” என்றதற்கு.
.
“இல்லை… நான்தான்.” என ரோஜா பதட்டமாக… 

“சொல்லாம வந்ததுனாலதான் நான் மதியம் இங்க சாப்பிடலை… நைட் இங்க சாப்பிட்டு தான் கிளம்புவேன். எனக்கு இந்த மீன், நண்டு, இரால் எல்லாம் ரொம்பப் பிடிக்கும். செஞ்சு தரியா?” எனக் கேட்க, 

இது வேறையா என்பது போலப் பவித்ரா பார்க்க… மாதவன் அவளைக் கண்டுகொண்டால் தானே… 

நம்ம வீட்ல எல்லாம் இவங்க சாப்பிட மாட்டாங்க என அவள் நினைத்தற்கு மாறாக மாதவன் இப்படிக் கேட்கவும், ரோஜாவுக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. 

அவள் சார்பாக அருள் தான். “அதெல்லாம் நல்லா சமைப்பா…. ஆனா ராத்திரியில் நீங்க கார் எடுத்திட்டு போக வேண்டாம். பக்கத்து ரெசார்ட்ல ரூம் போட்டு தூங்கிட்டு காலையில போங்க.” என்றான். 

சரி என்ற மாதவன் நன்றாக உறங்கி விட… உட்கார்ந்து இருந்த நாற்காலி வசதியாக இல்லை எனக் கணவனின் அருகில் கட்டில் உட்கார்து டிவி பார்த்த பவித்ராவும், சிறிது நேரத்தில் உறங்கி விட… அதன் பிறகே அருளும் ரோஜாவும் உண்டனர். 

சமையல் அறையில் உட்கார்ந்து உண்ணும் போது, “அவங்க நிஜமாவே இங்க சாப்பிடுவாங்களா?” ரோஜா கேட்க, 

“அவர் தானே சொன்னார் சாப்பிடுறேன்னு.” 

“மேல புதுக் குக்கர், பாத்திரம் எல்லாம் இருக்கு எடுத்து தாங்க கழுவி வைக்கிறேன். அதுல சமைக்கலாம்.” 

அருள் அவள் கேட்ட பாத்திரங்களை எடுத்துக் கொடுத்துவிட்டு, ஹாலில் தரையில் படுத்துக்கொள்ள… ரோஜா பாத்திரங்களைக் கழுவி வைத்துவிட்டு வந்தவள், சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தபடியே இருந்தாள். 

மாலை அருளை ரோஜா எழுப்ப… மாதவனுக்கும் விழிப்பு வந்துவிட்டது. அவன் எழுந்ததும் பவித்ராவும் எழுந்து கொண்டாள். 

“டீ போடவா…” ரோஜா கேட்க, மாதவன் சரி என்றான். 

ரோஜா டீ போட்டு, இரண்டு கண்ணாடி கப்பில் எடுத்து வந்து மாதவனுக்கும் பவித்ராவுக்கும் கொடுக்க… இருவரும் வாங்கிக் குடித்தனர். அருளுக்கும் எடுத்து வந்து கொடுத்தவள், அப்படியே அவன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். 

“நீ டீ குடிக்கலையா?” எனக் கேட்க வந்த மாதவன், அருள் பாதிக் குடித்துவிட்டு ரோஜாவிடம் கொடுப்பதைப் பார்த்து, கேட்காமலே நிறுத்திக் கொண்டான். 

அருள் யாரிடம் எப்போது சொன்னான் என எதுவும் தெரியவில்லை. பெரிய மீன், நண்டு, இறால் எனப் பாண்டி நிறையக் கொண்டு வந்தான். 

“அக்கா அண்ணனோட தங்கச்சி தான நீங்க. திரும்ப வந்ததுல இருந்து, அருள் அண்ணன் உங்களைப் பத்திதான் நிறையப் பேசி இருக்கார்.” என்றான் பாண்டி பவித்ராவிடம். 

“ஏன் கா இப்படி வீட்லயே உட்கார்ந்து இருக்கீங்க? கடற்கரை பக்கம் போக வேண்டியது தான… ரொம்ப நல்லா இருக்கும்.” என வேறு அவன் சொல்ல… மாதவனும் பவித்ராவும் வெளியே கிளம்பினர். 

கடற்கரைக்கு வழிகாட்ட பாண்டியும் உடன் சென்றான். ரோஜாவுக்கு உதவ வேண்டும் என அருள் செல்லவில்லை. 

அவர்கள் சென்றதும் அருள் எல்லாவற்றையும் நறுக்கிக் கொடுக்க… ரோஜா சமைக்க ஆரம்பித்தாள். 

கடற்கரையில் விட்டுவிட்டு பாண்டி சென்றுவிட…. மாதவனும், பவித்ராவும் அங்கேயே மணலில் உட்கார்ந்தனர். 

“இந்த இடம் செம்மையா இருக்கு இல்ல….” 

“ம்ம்… ஆமாம் நீங்க என்ன ஊருக்கு கிளம்பாம இங்க உட்கார்ந்து உங்க தங்கச்சிகிட்ட பாச பயிர் வளர்த்திட்டு இருக்கீங்களா…” 

“ஹே…. வந்திட்டு உடனே கிளம்ப நாம யாரோ இல்லை. அதோட உங்க அண்ணனும் வருத்தபடுவார். நமக்கு வசதி இல்லை… அதனால தான் இருக்கலைன்னு நினைப்பாங்க.” 

“நாம அவங்க வீட்ல சாப்பிட மாட்டோம்ன்னு நினைச்சு தான் ,உங்க அண்ணன் நம்மை வெளிய சாப்பிட வச்சு கூடிட்டு வந்தார்.” 

“ரோஜா டீ போடுறதுக்குள்ள பத்து தடவை கையையும், கப்பையும் கழுவி இருப்பாள்.” 

“இப்ப இருக்கிற ஏற்ற தாழ்வுல, நாம இப்ப அவங்களை விட்டு விலகி நின்னா… அவங்க மொத்தமா நம்மகிட்ட இருந்து விலகிடுவாங்க.” 

“நாமதான் ரெண்டு பக்கமும் பேசி, இவங்களை ஒன்னு சேர்த்து வைக்கணும்.”
இருட்டும் வரை அங்கிருந்து விட்டு மாதவனும் பவித்ராவும் வீடு திரும்பினர். ஏழு மணிக்கெல்லாம் இரவு உணவு பரிமாறப்பட்டது. 

பெரிய தழை வாழை இலையில், சூடாகச் சாதம் வைத்து மீன் குழம்பு, வறுவல், இறால் தொக்கு, நண்டு வறுவல் என ரோஜா பரிமாற…. 

“அசத்திட்ட போ…. அடுத்தத் தடவை எனக்குக் கருவாட்டுக் குழம்பு வச்சுக் கொடு.” என்றபடி மாதவன் உன்ன… 

“இவன் என்ன முன்ன பின்ன இதெல்லாம் சாப்பிட்டது இல்லையா என நினைத்தபடி அலட்சியமாக உண்ட பவித்ராவுமே… உணவின் சுவையில் நன்றாகவே உண்டாள்.
“செம சாப்பாடு ரோஜா. தேங்க்ஸ் மா.” என்றான் மாதவன். 

அவர்கள் இருவரும் உண்டதும், அருள் சென்று அவர்களை ரெசார்டில் விட்டு வந்தான். பேசியபடி ரோஜா அவனுக்கு உணவு பரிமாறினாள். 

“உங்க தங்கச்சியும் புதுசா கல்யாணம் ஆனவங்க தான. நம்ம வீட்டுக்கு முதல் தடவை வந்திட்டு போகும் போது, வெறுங்கையோட அனுப்ப கூடாது.” 

“அவங்க ரெண்டு பேருக்கும் டிரஸ், அப்புறம் கொஞ்சம் இனிப்புக் காரம் எல்லாம் நல்ல கடையில வாங்கிக் கொடுத்து அனுப்பனும்.” 

“உனக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்?” 

“ஸ்டெல்லா அவங்க அக்கா வீட்டுக்கு விருந்துக்குப் போன போது, அவங்க வீட்ல இதெல்லாம் செஞ்சு அனுப்பினாங்க.” 

“சரி காலையில வாங்கலாம்.” 

“பணம் இருக்கா… என்கிட்ட கொஞ்சம் இருக்கு. நான் துணி தச்சு சேர்த்து வச்சது.” 

“இப்ப என்கிட்டே இருக்கு ரோஜா, தேவைனா வாங்கிக்கிறேன். நீயும் சாப்பிடு.” 

“இந்த மீன் எங்க அப்பாவுக்கு ரொம்பப் பிடிக்கும். அதுவும் வறுத்து தந்தா, ரொம்பப் பிடிக்கும். ம்ம்… நமக்குக் கல்யாணம் ஆன பிறகு, அவரையும் கூட வச்சு நல்லா பார்த்துக்கணும்ன்னு நினைச்சேன்.” 

“அதுக்குக் கூட நான் கொடுத்டுவைக்களை.” எனச் சொல்லும் போதே அவள் கண்கள் கண்ணீரை சிந்தி விட… 

“எனக்கு உங்க அப்பாவை நல்லா தெரியும். அவர் இருந்திருந்தா கூட, அப்படியெல்லாம் நம்ம கூட வந்திருக்க மாட்டார். நீ நல்லா இருக்கனும்ன்னு மட்டும் தான் நினைச்சாரே தவிர… மத்தவன் காசுல உட்கார்ந்து சாப்பிடணும்ன்னு எல்லாம் உங்க அப்பாவுக்கு எண்ணம் இல்லை.” 

“என்ன அவர் இருந்திருந்தா… நம்மோட இருக்கலைனாலும் பக்கத்தில இருந்திருப்பார். நாம போய் வர இருந்திருப்போம்.” 

அருள் சொல்வது உண்மைதான். மரியதாஸ் ஏழை என்றாலும் ரோஷமான மனிதர். 

அப்பாவின் நினைவில் ஒழுங்காகச் சாப்பிட மாட்டாள் என நினைத்த அருள், அவனே அவளுக்கு உணவை அள்ளிக் கொடுக்க… ரோஜாவும் உண்டாள். 

உண்டு முடித்ததும் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு வெளியே சென்ற ரோஜா, பக்கத்து வீட்டு சிறுவன் அழுவதைப் பார்த்து, “ஏன் டா அழுவுற?” என்றதற்கு, அவன் அம்மா தான் பதில் சொன்னார். 

“சாயங்காலம் ஸ்கூல்ல இருந்து வந்து தூங்கிட்டான் ரோஜா… இப்பத்தான் எழுந்தான். பசியில அழுவுறான். இவன் அப்பன்காரன் என்னனா குடிச்சது போக, மீதி காசு கொண்டு வந்து இப்பத்தான் கொடுத்தான். அரிசி உலையில இருக்கு.” 

“ஒ அப்படியா…” என்றவள், உள்ளே சென்று தட்டில் சோறு போட்டு, மீன் குழம்பு வறுவல் வைத்துக் கொண்டு வந்து, அந்தச் சிறுவனிடம் சென்று கொடுத்துவிட்டு வந்தாள். 

உள்ளே வந்த மனைவியைப் பார்த்த அருள். “உங்க அப்பாக்கு சாப்பாடு போட முடியலைன்னு கஷ்ட்டபட்ட… இப்ப அதை அந்தப் பையனுக்குக் கொடுத்திட்ட, இப்ப மனசு திருப்தி ஆச்சா…” எனக் கேட்க, ரோஜா புன்னகையுடன் தலையசைத்தாள். 

வேலையை முடித்துக் கொண்டு, இருவரும் படுத்துக் கொண்டனர். இன்னும் ரோஜா அவள் அப்பா நினைவில் இருந்து வெளி வரவில்லை. அவரைப் பற்றி நினைத்தாலே… கண்ணீர் வந்திவிடும் அவளுக்கு. அருளுக்கும் இனி என்ன செய்வது? என உறுதியாக முடிவெடுக்க முடியாத நிலை… அதனால் மனதில் இப்போதைக்கு வேறு எண்ணங்கள் எழவில்லை. அவரவர் சிந்தனையில் இருந்த இருவரும், அப்படியே உறங்கி போயினர். 
மறுநாள் காலை இருவரும் கிளம்பி நாகைபட்டினம் சென்றனர். அங்கே தான் பெரிய கடைகள் இருக்கும். 

திருமணத்திற்கு உடைகள் வாங்க மாதவனுடன் சென்றிருந்ததால்…அருளுக்கு அவன் என்ன அணிவான் என்பது தெரியும். அவன் அணிவது போல உடை மற்றும் பவித்ராவுக்கு ஒரு நல்ல டிசைனர் புடவை எடுத்துக் கொண்டு, அங்கிருந்து பிரபல இனிப்பகத்தில் இனிப்பும், காரமும் நிறையவே வாங்கிக் கொண்டு நேராக மாதவன் பவித்ரா தங்கி இருந்த ரெசார்ட் சென்றனர்.

அவர்கள் இருவரும் தாமதமாகதான் எழுந்து இருந்தனர். அதனால் அப்போது தான் காலை உணவை முடித்திருந்தனர். இவர்கள் சென்றதும் மாதவன் அவர்களுக்கு ஜூஸ் தருவித்துக் கொடுத்தான். 

அருள் தங்கையிடம் தான் வாங்கி வந்தவைகளைக் கொடுக்க… அதன் பிறகே தாங்கள் அவர்களுக்கு ஒன்றும் வாங்கி வரவில்லை என மாதவனுக்கும் பவித்ராவுக்கும் தோன்றியது. அவர்கள் ஊருக்கு செல்ல கிளம்ப… அருள் ரோஜாவை அழைத்துக் கொண்டு அந்த ரெசார்ட்டை சுத்தி காண்பிக்கச் சென்றான். 

“பாரு எப்படி இருந்தாலும், உங்க அண்ணனும் அண்ணியும் அவங்க செய்ய வேண்டிய முறையை மறக்கலை இல்லையா… இதுக்குப் பணம் மட்டும் இருந்தா போதாது. செய்யணும்கிற மனசும் வேணும்.” 

“நாம இங்க வந்த மனநிலையில ஒன்னும் வாங்கிட்டு வரணும்ன்னு தோணலை… நாமும் அவங்க கல்யாணத்துக்குச் செய்யணும் இல்ல… பணமா கொடுத்திடலாமா, அவங்களுக்குத் தேவைப்படலாம்.” 

“வேண்டாம், நாம இப்ப எது கொடுத்தாலும், அது தப்பா தோணும். நாம அப்புறம் எதாவது பொருளா வாங்கிக் கொடுக்கலாம்.” 

பவித்ரா கிளம்பும் போது ஒரே அழுகை. “அண்ணா எங்களோட வந்திடு.” என அவள் அழுதது. அருளுக்கு மட்டும் அல்ல ரோஜாவுக்கும் கஷ்ட்டமாக இருந்தது. 

அருளும் மாதவனும் அவளை நிறையச் சமாதானம் செய்தனர். “நீ வெளிநாடு போகும் போது, அண்ணன் கண்டிப்பா உன்னை வழியனுப்ப வருவேன்.” எனச் சொல்லி அவர்களை அனுப்பி வைத்தான். 

அவர்கள் சென்ற பிறகு, வீட்டிற்கு வந்த தம்பதிகளுக்கு வீடே வெறுமையாகத் தோன்றியது. அருள் எதோ யோசனையில் இருக்க, ரோஜாவை அவன் கவனிக்கவே இல்லை. 

வெகு நேரம் சென்று, “நான் மட்டும் இல்லைனா… நீங்க இந்நேரம் உங்க வீடல் உங்க சொந்தங்களோட சந்தோஷமா, நிம்மதியா இருந்து இருப்பீங்க இல்ல…” 

“இப்ப எல்லாம் என்னால தான். உங்க தங்கச்சி வேற அழுதுகிட்டே போறாங்க.” 

“என்னால உங்களுக்கு எப்பவும் கஷ்ட்டம் தான்.” என்றாள் ரோஜா.
 
அருளுக்கு முதலில் ரோஜா மீதுதான் கோபம் வந்தது. பிறகு அவள் இடத்தில் இருந்து யோசிக்கும்போது, நடப்பதையெல்லாம் பார்த்தால், அவளுக்கு அந்த எண்ணம் வருவதில் ஆச்சர்யம் இல்லை.  

ரோஜா இப்படி நினைக்கத் தானும் ஒரு காரணம் என நினைத்தவனுக்கு, தான் எதோ தவறு செய்கிறோம் என புரிந்தது. அருளுக்கும் பரத்துக்கும் இடையே தான் கிடந்தது அல்லாடுகிறோம் என தெரிந்தது.  

“நான் பரத்துன்னு தெரியறதுக்கு முன்னாடியே நமக்குக் கல்யாணம் ஆகி இருந்தா, அப்ப என்ன பண்ணி இருப்ப? என் வீட்டு ஆளுங்களுக்கு இஷ்ட்டம் இல்லைன்னு, விவாகரத்து பண்ணி இருப்பியா?” 

“எதாவது கிறுக்குத்தனமா யோசிக்காம, வேற வேலை இருந்தா போய்ப் பாரு.” 

“நான் கடலுக்குப் போறேன். ராத்திரிக்கு வந்திடுவேன்.” என அருள் சொன்னதும், இயல்புக்கு வந்த ரோஜா,

“முன்னாடியே சொல்லி இருக்கலாம் இல்ல… நான் சோறாக்கி இருப்பேன்.” என்றாள்.

“பரவாயில்லை… பசங்க சாப்பாடு கொண்டு வருவாங்க. நீ சோறாக்கி வை, நான் ராத்திரிக்கு வந்து சாப்பிடுறேன்.” எனச் சொல்லிவிட்டு அருள் உடை மாற்றிக் கொண்டு செல்ல… ரோஜாவும் தைக்கத் துணி இருந்ததால்… உட்கார்ந்து தைக்க ஆரம்பித்தாள். 

தின வாடகைக்கு மீன் பிடிக்க படகு பேசி வைத்திருந்தனர். அருள், ஜோசப் மற்றும் பாண்டி மூவரும் தான் அந்தப் படகில் கடலுக்குச் சென்றனர். ஸ்டெல்லா கர்ப்பமாக இருப்பதால்… நாள் கணக்கில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என ஜோசப்பும் நினைத்ததால்…. இவர்களோடு சேர்ந்து கொண்டான். 

அதோடு வேலை செய்யாமல் இருக்க முடியாது, கை செலவுக்குப் பணம் வேண்டும் எனத் தின வாடகைக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அன்றே திரும்பும் தூரம் வரை சென்றவர்கள், படகு நிறைய மீன்களைப் பிடித்துக் கொண்டு கரைக்கு வந்தனர். இதில் எல்லா நாட்களும் மீன் கிடைக்கும் எனச் சொல்ல முடியாது, வந்தவரை லாபம் அவ்வளவு தான். 

திரும்பும் வழியிலேயே மீன்களைத் தரம் வாரியாகப் பிரித்துக் கூடையில் வைத்திருந்தனர். கரைக்குத் திரும்பியதும் எடை போட்டுப் பணத்தை வாங்கிக் கொண்டு, படகு வாடகையைக் கொடுத்து விட்டு, மறுநாளுக்கும் படகு வேண்டும் எனச் சொல்லிவிட்டு வீடு திரும்பினர். 

அருள் வந்ததும் குளித்தவன், முகம் நிறைய மலர்ச்சியுடன் சாப்பிட உட்கார்ந்தான். வெகு நாட்கள் கழித்து, இன்றுதான் அவன் அவனாக இருந்தது போல உணர்ந்தான். 

ரோஜா சூடாகச் சாதம் வைத்து சாம்பார் ஊற்றி பொரியல் வைக்க… “ஹே சாம்பரா இன்னைக்கு. எனக்கு ரொம்பப் பிடிக்கும்.” என்றவன், இதே போலத் தினமும் பொரியல் வச்சு சோறாக்கு.” என்றான் உண்டபடி. 

அருள் நல்ல உழைப்பாளி, அவனுக்கு எங்கே எப்படி மீன் பிடிக்க வேண்டும் என நன்றாகத் தெரிந்திருந்தது. அதோடு வேறு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாததால்… சம்பாதிக்கும் பணத்தைச் செலவு போகச் சேமிக்கவும் முடிந்தது. 

அவன் மனைவியும் அவனைப் போலத் திறமையானவள், சிக்கனமாகச் செலவு செய்ததோடு, அவளும் துணி தைத்துக் கொடுக்க… கையில் கணிசமான தொகை சேர்ந்தது. 
பவித்ரா எதாவது சொன்னாலும், அருள் இப்போது பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை. இதுதான் நான், உன்னால் என்னை ஏற்றுக்கொள்ள முடிந்தால் ஏற்றுக்கொள் என்பது போல இருந்தான். 

ஒரே பாட்டில் பணக்காரன் ஆவது எல்லாம் நிஜத்தில் அல்ல, சினிமாவில் தான் சாத்தியம்.

Advertisement