Advertisement

உப்புக் காற்று – அத்தியாயம் 3

ரோஜா கண்ணைவிட்டு மறைந்ததும், “படகை தயார் பண்ணு…. நாளைக்குக் கடலுக்குப் போகணும்.” என அங்கிருந்து பாண்டியிடம் சொல்லிவிட்டுச் சென்றான்.


ஒருமுறை கடலுக்குச் சென்று வந்தால்… உடனே அடுத்த முறை கடலுக்குள் செல்ல மாட்டார்கள். பாண்டி என்ன செய்வது என்பது போல ஜோசப்பை பார்க்க… அருள் முடிவு செய்தால் மாற மாட்டான் என அவனுக்குத் தெரியும். அதனால் அவன் சொன்னபடி தயார் செய் என்றான்.


அதன் பிறகு அன்று முழுவதும், படகை தயார் செய்வதிலேயே சென்றது. பதினைந்து நாட்களுக்குத் தேவையான உணவு பொருட்கள், குடிக்கத் தண்ணீர், மீனைப் பத்தப்படுத்த ஐஸ் என ஒருநாள் முழுவதும் வேலை இருந்தது.


எப்போது கடலுக்குச் சென்றாலும், அருள் ரோஜாவிடம் சொல்லாமல் செல்ல மாட்டான். வழியில் சாப்பிட ரோஜா எதாவது செய்து தருவாள். இந்த முறை அவளிடம் சொல்லவில்லை. அவள் மேலிருந்த கோபத்தில் தானே கடலுக்கே செல்கிறான்.


மறுநாள் விடியலில் மரியதாஸ் கடலுக்குச் சென்றதும், ரோஜா வாசலில் நின்று கொண்டு இருக்க… அப்போது பாண்டி ஒரு பையுடன் வருவதைப் பார்த்தவள், அவனைக் கேள்வியாகப் பார்க்க,


“இன்னைக்குக் கடலுக்குப் போறோம்.” என்றான்.


“யார் கூட?”


“எப்பவும் யார் கூடப் போவேன்?” எனத் திருப்பிக் கேட்டவன், சிறு புன்னகையுடன் அவளைக் கடந்து சென்றான்.


வீட்டின் கதவை மூடிவிட்டு ரோஜா படகு துறையை நோக்கி கிட்டத்தட்ட ஓடினாள். படகில் எல்லாம் சரியாக இருக்கிறதா எனப் பார்த்துக் கொண்டிருந்த அருளின் முன்பு மூச்சு வாங்க நின்றவள், “என்கிட்டே சொல்லிட்டு போகணும்ன்னு கூடத் தோணலை இல்ல… நான் அப்படி என்ன தப்பு பண்ணேன்? உரிமையா உங்களை ரெண்டு வார்த்தை நான் பேசக் கூடாதா?”


“உரிமை இல்லைன்னு நான் சொல்லலை.. உங்க அப்பா தான் சொல்றார். நான் உன் மனசை கலைக்கிறதா உங்க அப்பா நினைக்கிறார்.”


“நீ அனதைன்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்றார். நான் அனாதை ஆனதுக்கு நான் காரணம் இல்லை. இந்தக் கடல் தான் காரணம்.”


“நானும் எத்தனையோ தடவை இந்தக் கடலைப் பார்த்து கேட்டு இருக்கேன். ஏன் என்னை அனாதை ஆக்கினேன்னு? ஆனா எனக்கு எந்தப் பதிலும் கிடைக்கலை.”


“என்னையும் இந்தக் கடலு கொண்டு போயிடாதான்னு தான் பார்க்கிறேன். ஆனா அப்படியும் நடக்க மாட்டேங்குது.”


அருள் பேசியதில் பதறிப் போய் அவன் வாயை தன் கையால் மூடியவள், “ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க? நான் இருக்கிறவரை நீங்க அனாதை இல்லை.” என்றாள். பதிலுக்கு அருளிடம் இருந்து விரக்கதியான புன்னகை மட்டுமே.


ஜோஸப், பாண்டி மற்றும் பீட்டர் வந்து படகில் ஏற, “சரி நீ வீட்டுக்கு போ… நாங்க கிளம்பனும்.” என்றான்.


கண்ணீர் நிரம்பிய விழிகளால் அவனை ஏறிட்டுப் பார்த்தவள், முடிந்தவரை அவனைக் கண்களில் நிரப்பிக் கொண்டு, படகில் இருந்து இறங்கி நடந்தாள். அவள் கண்ணீருடன் செல்வது அருளின் மனதை பிசைந்தது. ஆனால் தன் உணர்ச்சியை மற்றவர்களுக்குக் காட்டாது. படகை செலுத்த ஆரம்பித்தான்.


ரத்தத்தில் ஊறிப்போன விஷயம் என்பதால்… கைகள் தன் பாட்டில் படகை செலுத்திக் கொண்டு இருந்தாலும், மனம் பின்னோக்கி சென்றது. இப்போது நினைத்தாலும் மனம் நடுங்கிப் போகும் அவனுக்கு.


நிறையப் பேரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட சுனாமியின் கோரத்தாண்டவத்தில் அருளும் பாதிக்கபட்டவன். அவனுடைய பதினோராவது வயதில் இருந்து தான் அவன் அறிவான். அதற்கு முன்பு தான் யார்? என்பது அவனுக்குத் தெரியாது.


சுனாமியால் எங்கிருந்தோ அடித்துக் கொண்டு வந்தவனை, ஒரு மீனவர் பிடித்துக் காப்பாற்றி இருந்தார். இரண்டு நாட்கள் நினைவு இல்லாமல் இருந்தவன், மூன்றாம் நாள் கண்திறந்த போது, முன்னர் நடந்த எதுவுமே நினைவு இல்லை.


ஒரு பயங்கிற அதிர்ச்சியின் விளைவாக அவனது மூளை பாதிக்கப்பட்டிருக்க… அவன் தனது கடந்த காலத்தை மறந்து இருந்தான். காப்பாற்றிய அந்த மீனவரும், இறந்தவர்களின் உடல்களை எல்லாம் அவனை அழைத்துச் சென்று காட்டினார். ஆனால் அவனுக்கு யாரையும் தெரியவில்லை.


ஒரு வேளை அவன் பெற்றோரையோ, அல்லது அவனுக்குத் தெரிந்தவர்களையோ பார்த்து இருந்தால்… அவன் நினைவு திரும்பி இருக்குமோ என்னவோ… ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.


சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு முகாமில் இருந்தவன், பத்தாவது வரை படித்ததான். பிறகு எங்குத் தனது வாழ்க்கையைத் தொலைத்தானோ.. அங்கேயே தேட ஆரம்பித்தான். இன்னும் தேடிக் கொண்டு தான் இருக்கிறான்.


கடற்கரையை ஒட்டியிருந்த உச்சி பாரையில் நின்று, அவன் படகு கண்ணை விட்டு மறையும் வரை பார்த்திருந்துவிட்டு, ரோஜா வீடு திரும்பினாள்.


அவன் சாதாரணமாகக் கடலுக்குச் செல்லும் நாட்களிலேயே தவித்துப் போவாள்.. அதுவும் இந்த முறை அவன் மனம் சரி இல்லாமல் சென்றிருப்பது அவளுக்குப் பெரும் சஞ்சலத்தைக் கொடுக்க… உணவு கூட அருந்தும் எண்ணம் இல்லாமல் படுத்துக் கொண்டாள்.


அவன் பெண்ணென்று கேட்டு வரும் வரை, அப்படி ஒருவன் ஊரில் இருப்பதே அவளுக்குத் தெரியாது.


அவர்கள் ஊர்ப் பள்ளியில் பத்தாவது வரை மட்டுமே இருக்கிறது. அது வரை படித்தவள், பிறகு வெளியூருக்கு சென்று படிக்கும் வசதி இல்லாததால்… வீட்டிலேயே இருந்து விட்டாள்.


அருளுக்குக் கடலை விட்டால் தன் நண்பர்கள் மட்டுமே உலகம். எப்போதும் அவர்களோடுதான் இருப்பான்.


ஸ்டெல்லாவின் சகோதரி திருமணத்தில் தான் முதல்முறையாக ரோஜாவை பார்த்தான்.

ஸ்டெல்லா வீட்டில் ஆண் வாரிசு இல்லாததால்… அருளும் அவன் நண்பர்களும் தான் திருமண வேலைகளைப் பார்த்துக் கொண்டனர்.


சர்ச்சில் வைத்துத் திருமணம் முடித்த பிறகு, வெளியே பந்தல் அமைத்து வரவேற்பு போல வைத்தனர். பந்தி பரிமாறும் வேலையை அருளும் அவன் நண்பர்களும் செய்ய…. ஸ்டெல்லாவோடு சேர்ந்து ரோஜாவும் பந்தி பரிமாறினாள்.


பிறகு அவளும் ஸ்டெல்லாவும் உணவு அருந்த உட்கார… அருள் அவர்களுக்குப் பரிமாறினான். ஸ்டெல்லாவோடு சலசலத்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தாள்.


அதுவரை திருமணத்தைப் பற்றியே யோசிக்காமல் இருந்த அருளுக்கு ரோஜாவை பார்த்ததும் திருமணம் செய்துகொள்ள ஆசை வர… அவள் யாரென்று விசாரிக்க ஆரம்பித்தான். அப்போது அவனுக்கு இருபத்தி மூன்றும் ரோஜாவுக்குப் பதினெட்டு வயதும் முடிந்து இருந்தது.


அவள் குடும்பத்தைப் பற்றிய விவரம் அவனுக்குத் திருப்தியாக இருக்க… ஸ்டெல்லாவின் பெற்றோரிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்தான். அந்த நேரம் ஸ்டெல்லா வீட்டில் இருந்ததால்… ஆர்வ கோளாரில் ரோஜாவிடம் சென்று விஷயத்தைச் சொல்ல… ரோஜாவுக்கு அவன் யாரென்று நினைவு வரவில்லை. யாராக இருக்கும் என யோசித்து மண்டை குழம்பிப்போனாள்.


மறுநாள் மரியதாஸ் வெளியே சென்றிருந்த வேளையில் ஸ்டெல்லா அவளிடம் வந்து, தன் பெற்றோருடன் வந்து அருள் பெண் கேட்க இருப்பதாகச் சொல்ல… ரோஜா தன்னிடம் இருந்த நல்ல புடவையை எடுத்து கட்டிக் கொண்டு தலை வாரி பூ சூடி காத்திருந்தாள்.


அவளுக்கு அருளைப் பற்றி அறிந்து கொண்டது வரை திருப்திதான். ஆனால் அவளுக்குமே அப்போது அவன் கடந்த காலம் தெரியாது.


தனது நண்பர்களுடன் அரட்டையில் இருந்த மரியதாஸிடம் விஷயத்தைச் சொல்லி, ஸ்டெல்லாவின் அப்பா மோசஸ் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வர… ஏற்கனவே அவர் மனைவி, ஸ்டெல்லா மற்றும் அருள் அங்கே இருந்தனர்.


இருந்தது பெரிதாக ஒரே அறைதான். அதில் ஒரு பக்கம் சமையலுக்கு ஒதுக்கி இருக்க… அங்கே ஸ்டெல்லாவோடு நின்றிருந்த ரோஜா அருளை நன்றாகப் பார்த்துக் கொண்டாள்.


அவனைக் கருப்பு என்றும் சொல்ல முடியாது மாநிறம் என்றும் சொல்ல முடியாது. இரண்டுக்கும் இடைப்பட்ட நிறத்தில் இருந்தான். நெடுநெடுவென்று உயரமாக, உயரத்திற்கு ஏற்ற உடல்வாகுடன், பார்க்க நன்றாகவே இருந்தான்.


ரோஜா தன்னை ஆராய்வதை அருளும் உணர்ந்தே இருந்தான். அது அவன் முகத்தை மலர செய்ய…அவளை பார்த்தும் பார்க்காதது போல இருந்தான்.


ஸ்டெல்லாவின் தந்தை மரியதாஸுடன் உள்ளே நுழைய… அருள் எழுந்து நின்றான்.


“உட்காருப்பா…” என்றவர், அவன் எதிரில் அமர்ந்தார்.


மரியதாஸுக்கு அருளை தெரியும். ஆனால் இதற்கு முன் பேசி இருக்கவில்லை. ஒருமுறை மிகவும் இக்கட்டான நிலையில், அருள் அவருக்கு உதவி இருக்கிறான். ஆனால் அதை இப்போது நினைவுபடுத்திப் பேசும்படியான விஷயம் இல்லை என்பதால்… இருவருமே அதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்தனர்.


மோசஸ் அருளைப் பற்றி விவரம் சொல்ல, சந்தோஷமாகத் திருமணத்திற்குச் சரி என்று சொல்வார் என நினைத்திருந்த அனைவரையும் ஏமாற்றும் வகையில், “இல்லை, நான் என் பெண்ணை ஒரு மீனவனுக்குக் கொடுக்க மாட்டேன்.” என்றார் மரியதாஸ்.


இது எல்லோருக்குமே அதிர்ச்சியாக இருக்க.. “உனக்குப் புத்திகித்தி எதுவும் பிசங்கி போச்சா.. நீயே ஒரு மீனவனா இருந்திட்டு, இப்படிச் சொல்லலாமா?” என மோசஸ் தன் ஆதங்கத்தைச் சொல்ல,


“நானும் ஒரு மீனவானா இருக்கிறதுனாலதான் சொல்றேன். இந்த நிலை இல்லாத வாழ்க்கை என் பெண்ணுக்கு வேண்டாம். அவளை வேற வேலையில இருக்கிற மாப்பிள்ளைக்குப் பார்த்து கட்டிக் கொடுக்கலாம்ன்னு இருக்கேன்.” என்றார்.


“அருள் நம்மைப் போல இல்லை. ரொம்பத் திறமையானவன், நம்மை விட நல்லா சம்பாதிகிறான். உன் பெண்ணை நல்லா பார்த்துப்பான்.”


“இல்லை வேண்டாம், நான் என் பெண்ணைக் கொடுக்க மாட்டேன். நீங்க வேற எதாவது பேசுங்க.” என்றதும், அருள் விருட்டென்று எழுந்து அங்கிருந்து சென்று விட… ரோஜாவின் முகம் வாடி போய்விட்டது. அவளுமே அவள் தந்தை இப்படிப் பேசுவார் என எதிர்பார்க்கவில்லை.


“நீ சம்மதிப்பேன்னு நினைச்சு தான் அவனை வீடு வரை கூடிட்டு வந்தேன்.”


“அருள் மட்டும் ஸ்டெல்லாவை கேட்டு இருந்தான்னு வை… நான் கண்ணை மூடிட்டு கொடுத்து இருப்பேன்.”


“நம்ம ஆளுங்கள்ள குடிக்காதவனை விரல் விட்டு எண்ணிடலாம். ஆனா அருள் கிட்ட எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. தங்கமான பையன். நீ நல்ல சம்பந்தத்தை விடுற, எதுக்கும் நல்லா யோசிச்சிக்கோ.” என மோசஸின் எந்தப் பேச்சுக்கும் மரியதாசிடம் இருந்து எந்தப் பிரதிபலிப்பும் இல்லாததால்… ஏமாற்றத்துடன் மோசஸின் குடும்பம் கிளம்பி சென்றது.


“ஏன்ப்பா வேண்டாம்ன்னு சொன்னீங்க?” ரோஜா தன் ஆதங்கத்தை மறைக்காமல் கேட்டு விட…


“ஏன் மா இதை விட உனக்கு நான் நல்ல மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் பண்ணி வைப்பேன்னு உனக்கு நம்பிக்கை இல்லையா?” என்றார்.


“இதே நல்ல இடம் தானே பா… நானும் இங்க பக்கத்தில இருந்தா தானே உங்களையும் பார்த்துக்க முடியும்.”


“என்னைப் பார்த்துக்க ஒரு ஆள் வேணுமா? நீ சின்னப் பொண்ணு, உனக்கு இது எல்லாம் புரியாது.” என்றவர், வெளியே சென்று விட… ரோஜாவுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. அவளுக்கு அருளை மிகவும் பிடித்து இருந்தது.


இதுவரை அவளை யாரும் பெண் என்று பார்க்க வந்தது இல்லை. அதுவரை திருமணத்தைப் பற்றி எந்த எண்ணமும் அவளுக்கு இல்லை. ஆனால் அருளைப் பார்த்ததும் மிகவும் பிடித்து விட்டது. இந்த இடமே தனக்கு முடிந்து விடும் என நம்பிக்கை வளர்த்து இருந்தாள்.


தன் தந்தையின் பேச்சில் அவளுக்கு எரிச்சல் தான் வந்தது. இவனை விட வேறு யார் அப்படி வந்துவிடப் போகிறார்கள்? இவனே நன்றாகத்தானே இருக்கிறான்.


இந்த அப்பாவுக்கு அறிவே இல்லை என மனதிற்குள் தான் அவளால் புலம்ப முடிந்தது.


மறுநாள் மரியதாஸ் கடலுக்குச் சென்றதும், குளித்து வேறு நல்ல ஆடை அணிந்து அருளை தேடி சென்றாள். நேற்று ஸ்டெல்லவே அவனைப் பற்றி எல்லாமும் சொல்லி இருந்தாள்.


காலை அவன் நண்பர்களுடன் கடற்கரையில் தான் இருப்பான் என்பதால் அங்குச் சென்றாள். அவள் அப்படியெல்லாம் எங்கும் செல்பவள் இல்லை. அதனால் தான் இத்தனை நாள் அருளை பார்த்திருக்கவில்லை.


தன் நண்பர்களுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவனின் பார்வையில் விழும் படி ரோஜா நின்று கொண்டிருக்க…. முதலில் வேறு எதற்கோ வந்திருக்கிறாள் என நினைத்து அலட்ச்சியாமாக இருந்தான்.


பின்னர் அவள் தன்னையே பார்ப்பது உணர்ந்து, “இருங்க டா வரேன்.” என நண்பர்களிடம் சொல்லிவிட்டு எழுந்து சென்றான்.


அவன் வருவதைப் பார்த்ததும் ரோஜா மெதுவாக மறுபக்கம் நடக்க, “என்னய்யா பார்க்க வந்த?” எனக் கேட்டவன். அவளோடு இணைந்து நடந்தான்.


காற்றில் பரந்த கூந்தலை ஒதுக்கியபடி “ஆமாம்.” என்றாள்.


“சீக்கிரம் சொல்லு நான் போகணும்.”


“நான் உங்ககிட்ட ஒன்னு கேட்க வந்தேன்.”


“என்ன கேட்கணும்?”


“ஸ்டெல்லாவோட அப்பா சொன்னார், நீங்க அவர் பெண்ணைக் கேட்டா, அவர்   கண்ணை மூடிட்டு கொடுத்திடுவாராம்.”


“அதுக்கு?”


“இல்லை… நீங்க அவர்கிட்ட அப்படிக் கேட்டுட மாட்டீங்க தான…”


அவள் என்ன சொல்ல வருகிறாள் என அருளுக்கு முதலில் புரியவே இல்லை. புரிய ஆரம்பித்ததும், அதுவரை முகத்தில் இருந்த சுணக்கம் மறைய… மெல்லிய சிரிப்பில் அவனின் முகம் இன்னும் களையாக இருக்க… ரோஜா அதை ரசித்துப் பார்த்து இருந்தாள்.


“ஸ்டெல்லா அப்பாகிட்ட மட்டும் கேட்க கூடாதா… இல்லை வேற எந்தப் பொண்ணோட அப்பாகிட்டயும் கேட்க கூடாதா?”


அருள் கேட்ட தினுசில் ரோஜாவுக்கும் சிரிப்பு வந்துவிட… “உங்களுக்குப் புரியுது தானே, அப்புறம் என்ன கேள்வி?” என்றாள்.


“எனக்குப் புரியுது, ஆனா உங்க அப்பாவுக்குப் புரியுமா?”


“புரிய வைக்கணும். ஆனா அதுக்குக் கொஞ்சம் டைம் வேணும்.”


“நீ எனக்கு இருக்கேன்னு சொல்லு, காலமெல்லாம் நான் காத்திருப்பேன்.” என்றான் அருள்.


“கண்டிப்பா இருப்பேன். அதுல உங்களுக்குச் சந்தேகம் வேண்டாம்.” என்றவள், அங்கேயே மணலில் உட்கார… காலை வேளை என்பதால் அப்போது கடற்கரையில் யாரும் இல்லை. அருள் சற்று இடைவெளி விட்டு அமர்ந்தான்.


அருள் தன்னைப் பற்றி அனைத்தையும் அவளிடம் சொல்லி விட… கேட்ட ரோஜாவுக்கு மிகுந்த வருத்தம் ஆகிவிட்டது.


அவள் வருந்துவது பொறுக்காமல்… “இத்தனை நாள் கஷ்ட்டமாத்தான் இருந்தது. ஆனா இப்பத்தான் நீ இருக்கியே.” என்றவனின் புன்னகை கூட அவளை வசீகரித்தது.


“இதெல்லாம் உண்மையாவே நடக்குதா?” என அருள் நம்பமுடியாமல் பார்க்க…


அவன் கையில் நறுக்கென்று கிள்ளியவள், “இப்ப நம்புறீங்களா?” எனக் கேட்டு அழகாகப் புன்னகைக்க…


“சரியான வாலா இருப்ப போலிருக்கு.” என்றவன்,


“சரி கிளம்பு, கடலுக்குப் போனவங்க திரும்பி வர்ற நேரம் ஆச்சு.” என அவன் எழுந்துகொள்ள… ரோஜா அவனை நோக்கி கையை நீட்டினாள். அவளைப் பார்த்து முறைத்தாலும் கைகொடுத்து எழுப்பி விட்டவன், “இனிமே இப்படியெல்லாம் தனியா எங்கையும் வரக் கூடாது. உன் கூடப் பேசணும்ன்னா, நானே உங்க வீட்டுக்கு வரேன்.” என அவளை வழி அனுப்பி வைத்தான்.


“நீங்க ரொம்ப நல்லவன்.” எனக் கடுப்புடன் சொல்லிவிட்டு ரோஜா செல்ல, அருளின் முகத்திலோ புன்னகை.


அன்றிலிருந்து இந்த இரண்டு வருடமாக மரியதாஸின் சம்மதத்திற்காகக் காத்திருக்கின்றனர். மரியதாஸின் மறுப்பைப் பொருட்படுத்தாமல் இருவரும், காதல் உலகில் சஞ்சரிக்க… தனது ஆத்திரத்தை எல்லாம் அருளை திட்டி தீர்ப்பதில் காட்டிக்கொண்டு இருந்தார் மரியதாஸ்.


பழைய நினைவுகளில் முழ்கி கிடந்தவள், அப்படியே உறங்கி இருக்க… மரியதாஸ் வந்து கதவை தட்டியதும் தான் பதறி போய் எழுந்தவள், அவருக்குக் கதவு திறந்து விட்டு, சமைக்கச் சென்றாள்.


“இன்னும் சோறு ஆக்கலையா?” எனத் தந்தையின் கேள்விக்குப் பதில் சொல்லாமல், அவள் வேலை செய்து கொண்டிருக்க… மரியதாஸ் அவளை ஒருமாதிரி பார்த்தார்.


“என்ன ஆச்சு உனக்கு?’


“உங்க பேச்சாலையே அவரைக் கடலுக்கு விரட்டிடீங்க, இப்ப உங்களுக்குச் சந்தோஷமா?” என ஆத்திரமாக முறைத்துக் கொண்டு நின்றாள்.


அவர் மட்டுமா பேசினார்? இவளும் தானே பேசினாள். வசதியாக அதை மறந்துவிட்டாள்.

Advertisement