Advertisement

சங்கீத ஸ்வரங்கள்

இறுதி அத்தியாயம்

அரவிந்தனுக்குக் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றல் கிடைக்க, அவன் குடும்பம் அங்கே குடிபெயர்ந்தது. அது அரவிந்தனாக கேட்டு வாங்கியது தான்.

“என்ன டா, எங்க தொல்லை வேண்டாம்ன்னு வேற ஊருக்கு போறியா?” என அர்ச்சனா கூடக் கிண்டலாகக் கேட்பது போல, தன் மனத்தாங்கலை கேட்டு விட்டாள்.
“ஹே… அப்படியெல்லாம் எதுவும் இல்லை. எங்க ஊருக்கு பக்கத்தில இருக்கனும்ன்னு திலோ ஆசைப்பட்டா… அதுதான் வேற ஒன்னும் இல்லை.”
“பக்கத்தில இருந்தா அப்பா அம்மாவையும் அடிக்கடி போய்ப் பார்த்துக்கலாம்.”
“இப்ப என்ன நீ ஊருக்கு வரும்போது, எங்க வீட்டுக்கு வா…. ரொம்பத் தூரமா என்ன?” அரவிந்தன் சொல்ல,
“அது தானே, இங்க இருக்கக் கோயம்புத்தூர், நாம நினைச்ச போய்ப் பார்த்துக்கலாம்.” என்றான் முகிலனும்.
கோயம்புத்தூர் வந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது நரேஷுக்கு ஆறு வயது. திலோ அங்கே ஒரு பிரபல கல்லூரியில் வேலைக்குச் சென்று வந்தாள்.
வார இறுதியில், திலோ தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு, தங்கள் சொந்த ஊருக்கு சென்று விடுவாள். வேலை இல்லாத போது, அரவிந்தனும் அவர்களுடன் சேர்ந்து கொள்வான். இல்லையென்றால் வீராவிடம் சொல்லிவிட்டால், ஒன்று அவனே வந்து அழைத்துச் செல்வான், இல்லையென்றால் வண்டி அனுப்பி வைப்பான்.
அங்கே இங்கே விஷ்ஷங்களுக்குச் செல்லும் போது, சிலர் நல்லதும் சொல்வார்கள், பொல்லாததும் சொல்வார்கள். எல்லாவற்றையும் கடந்து வர திலோ கற்றுக் கொண்டாள்.
சில வேலை வெட்டி இல்லாதவர்கள், வாழ்ந்தாலும் தூற்றுவார்கள், தாழ்ந்தாலும் தூற்றுவார்கள். அவர்களுக்கு எல்லாம் நாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களைத் தள்ளி நிறுத்த தெரிந்தால் போதும்.
வைதேகி பொறுப்பாக வீட்டை பார்த்துக்கொள்ள, அரவிந்தன் திலோவால் நிம்மதியாக வேலைக்குச் சென்று வர முடிந்தது. அதுவும் நரேஷை பாவனா பார்த்துக் கொள்வாள். அதனால் நேரத்துக்கு அவர்கள் வயிற்ருக்குக் கொடுப்பது மட்டுமே வைதேகியின் வேலை. சில நாட்கள் காமாட்சியும் வந்து இங்கே இருப்பார். இருவருமாகச் சேர்ந்து பார்த்துக் கொள்வார்கள்.
“இனிமே அழுதிட்டு வரக் கூடாது. அடிச்சிட்டு வந்து சொல்லு, நான் பார்த்துகிறேன்.” எனத் திலோத்தமா மகளுக்குச் சொன்னது போல, ஒரு முறை தெரியாத்தனமாக, அதே வார்த்தையைப் பாவனா தன் தம்பியிடம் சொல்லிவிட்டு மாட்டிக் கொண்டாள்.
அன்றிலிருந்து தினம் ஒரு பஞ்சாயத்து தான். பள்ளியிலும் சரி, அவர்கள் இருக்கும் குடியிருப்பிலும் சரி, நரேஷ் யாரையாவது அடித்து வைத்து விடுவான், திலோத்தமாவுக்குத் தெரியாமல் பாவனாவே நிலைமையைச் சமாளிப்பாள்.
திலோத்தமா கண்டிப்பான தாய். மகள் மகன் என்ற பாகுபாடெல்லாம் அவளுக்குக் கிடையாது. யார் தவறு செய்தாலும் விட்டு விளாசி விடுவாள். இருவரையும் ஒழுக்கமாக வளர்த்துக் கொண்டு வந்தாள்.
வளர வளர ஆண் பிள்ளை என்பதாலோ என்னவோ, நரேஷ் நிறையச் சேட்டை செய்வான். சாப்பிடவும் படுத்தி வைப்பான். நன்றாக வக்கணையாக இருந்தால் தான், உணவு அவன் தொண்டையில் இறங்கும்.
“எல்லாம் உன் அக்கா கொடுக்கிற செல்லம்.” என வைதேகி சொல்லிவிட்டால், நரேஷுக்கு அப்படி ஒரு கோபம் வரும்.
“என் அக்காவை பத்தி பேசாதீங்க.” என்பவன், சமத்தாக உட்கார்ந்து சாப்பிடுவான்.
பாவனாவை சொன்னால் அவன் வழிக்கு வருவான் என வைதேகி அறியாதவரா என்ன? அதனால் அவள் பேரைச் சொல்லி காரியம் சாதித்துக் கொள்வார்.
நரேஷ் சின்ன வயதில் எல்லாம் தனி அறையில் தான் தூங்கினான். ஆனால் இப்போது வளர்ந்த பிறகு, திலோவுடன் தான் உறங்குவான்.
அவன் திலோவோடு கட்டிலில் உறங்க, தரையில் மெத்தை விரித்து அரவிந்தன் உறங்குவான்.
மகன் உறங்கியதும், சிறிது நேரம் அரவிந்தன் அருகில் படுத்து, திலோ பேசிக்கொண்டு இருப்பாள்.
“இந்தப் பையன் இங்க வந்து படுத்து, நம்ம வாழ்க்கையில இப்படி நைட் ஷோவே இல்லாம பண்ணிட்டானே.”
கணவனின் வருத்தம் பார்த்து திலோவுக்குச் சிரிப்பு வந்து விட்டது. “நை ஷோ இல்லைனா என்ன? அதுதான் மார்னிங் ஷோ இருக்கே.”
“அது இவனுக்கு ஸ்கூல் இருக்க நாள்ல தான். இவனுக்கு வேற எப்ப பாரு ஸ்கூல் லீவ் விட்டு தொலையறாங்க. முதல்ல ஸ்கூல்ல மாத்தனும்.”
“நைட் ஸ்கூல் வேணா எங்காவது இருக்கா பார்க்கலாமா?” திலோ குறும்பாகக் கேட்க, “பார்க்கலாமே…” என்ற அரவிந்தன் மனைவியை ஆசையுடன் தழுவி கொண்டான்.
தங்கள் ஊருக்கு வந்து செல்லும் போது, அரவிந்தன் விவசாயத்திலும் ஆர்வம் காட்ட, மகனுக்குப் பார்க்க சுலபமாக, தங்கள் தோட்டம் முழுவதிலும் மரக்கன்றுகள் வைத்துக் கொண்டு வந்தார் அவனின் தந்தை.
தேக்கு, கொய்யா, சவுக்கு மரங்கள் என வைத்தால்… அரவிந்தனுக்குப் பிற்காலத்தில் பார்க்க எளிதாக இருக்கும் என நினைத்தார்.
அவர்கள் ஊருக்கு வரும் வேளையில், தோட்டத்திற்கும் வந்து ஒருநாள் முழுவதும் இருந்து விட்டுச் செல்வார்கள். தோட்டத்தில் சின்ன ஓட்டு வீடும் உண்டு. அங்கிருக்கும் பம்செட்டில் குளித்து, அங்கேயே மதியம் சமைத்து, எல்லோருமாகச் சேர்ந்து சாப்பிட்டுத்தான் செல்வார்கள்.
நரேஷ் அங்கிருக்கும் கோழி, ஆடுகள் பின்னால் சுற்றிக் கொண்டு இருப்பான். பாவனா தன் தம்பியின் பின்னால் சுற்றிக் கொண்டு இருப்பாள்.
ஒருநாள் அரவிந்தன் தான் படித்த பள்ளிக்கு திலோத்தமாவுடன் சென்று இருந்தான். அங்கே இருந்த மாணவர்கள் அவனுடன் ஆர்வமாக வந்து பேசினர். அதுவும் அந்தப் பள்ளியில் படித்து, அவன் மருத்துவராக இருப்பதில், அவர்களுக்கு மிகவும் ஆச்சர்யம்.
“எங்களுக்குக் கூட டாக்டருக்கு படிக்க ஆசை. ஆனா நீட்டுக்கு எல்லாம் படிக்க வசதி இல்லை.” எனக் குறைப்பட்டனர். அந்த வருத்தம் அரவிந்தனுக்கும் உண்டு எனத் திலோவுக்குத் தெரியும்.
“நாம எதாவது பண்ணலாமா அரவிந்த். இங்க கிளாஸ் மாதிரி எதாவது நடத்த ஏற்பாடு பண்ணலாமா?” திலோ கேட்க, அரவிந்தன் சரி என்றான்.
அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரை சந்தித்து, மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்குத் தனியாகப் பயிற்சி கொடுக்கலாம் என முடிவு செய்தனர்.
அந்த ஊரில் பிறந்து வளர்ந்து, நன்றாகப் படித்து, நல்ல வேலையில் இருக்கும் இன்னும் சிலரும் இவர்களோடு சேர்ந்துகொள்ள, வார இறுதியில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான வகுப்புகள், அதற்குரிய ஆசிரியர்களை வைத்துத் தொடங்கப்பட்டது.
திலோ முழுப் பொறுப்பையும் எடுத்துக்கொள்ள, தகவல் தெரிந்து சுற்று வட்டாரத்தில் இருந்த கிராமத்தில் இருந்து எல்லாம் பிள்ளைகள் படிக்க வந்தனர்.
அரவிந்தன் திலோவைப் பார்த்து, நாங்களும் எங்கள் கிராமத்தில், இது போலச் செய்கிறோம் என இன்னும் சிலரும் முன் வந்தனர்.
நன்றாக வாழ்வது என்பது, இருக்கும் வீட்டையோ வசதியையோ பெருக்கிக் கொண்டே போவது அல்ல… நாம் நலமாக வாழ்வதோடு, நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் நன்றாக வாழ வைப்பது தான்.
அரவிந்தன் திலோத்தமா அப்படியான வாழ்க்கையைத் தான் வாழ்ந்தனர். தான் தன் குடும்பம் என்று மட்டும் இல்லாமல், தங்களைச் சுற்றி உள்ளவர்களின் நலனிலும் அக்கறை காட்டினர்.
பாவனா வளர்ந்து, அவள் ஆசைப்பட்டது போல மருத்துவப் படிப்பில் சேர்ந்தாள். அதன் பிறகு, அவள் வீட்டில் இருக்கும் நேரமும் குறைவுதான். வீட்டில் இருந்தாலும், படித்துக் கொண்டுதான் இருப்பாள். நரேஷும், அவள் படிக்கும் நேரம் இவனும் உட்கார்ந்து படிக்க, சுட்டியாக இருந்தாலும், படிப்பில் கெட்டியாக இருந்தான்.
அவர்கள் ஊர் கோவில் கும்பாபிஷேகம், உள்ளூர் மற்றும் வெளியூரில் இருப்பவர்கள் எல்லோரும் குடும்பத்துடன் வந்திருந்தனர். அரவிந்தனின் குடும்பமும் முதல் நாளே சென்றது.
இவர்கள் வீட்டின் முன்புதான் நிறைய இடம் இருக்கும். அதனால் அன்றும் இவர்கள் வீட்டில் தான் எல்லோரும் சேர்ந்து வெளியில் வைத்து சமைத்தனர்.
பெரிய பாத்திரத்தில் பூரணி சொல்லச் சொல்ல, திலோ ஒவ்வொன்றாக நறுக்கி வைத்த காய் மற்றும் மசாலா பொருட்களைச் சேர்க்க, அரவிந்தன் பெரிய கரண்டியை பிடித்துக் கிளறிக் கொண்டு இருந்தான்.
பிறகு திலோவும் அவனோடு சேர்ந்து கிளற, “அண்ணி உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்.” என வீரா சொல்ல, எல்லோரும் அவனை ஆர்வமாகப் பார்க்க,
“எது எப்படி அண்ணி, நீங்களும் சமைக்கிற மாதிரியே பாவனைப் பண்றீங்க. அது வேற யாருக்கு தெரியாம, எங்க அண்ணன் வேற முட்டுக் கொடுக்கிறார்.”
“ஒவ்வொரு விசேஷத்துக்கும், நீங்க ரெண்டு பேரும் இப்படித்தான் பண்றீங்க. அது எப்படி அண்ணி?” வீரா சொன்னதற்கு, “அதுதான் நல்லா கேளு.” என்றாள் வித்யா.
அதைக் கேட்டு எல்லோரும் சிரிக்க, அரவிந்தனுக்கும் சிரிப்புதான். ஆனால் திலோவின் முகத்தைப் பார்த்து வாய்க்குள் அடக்கியவன், “ஹே, ரொம்பப் பேசினேன்னு வை… உங்க அண்ணி ஒரு கணக்கு கொடுத்து போட சொல்வா, பரவாயில்லையா?” அவன் கிண்டலாகக் கேட்க,
“ஐயோ ! நமக்கு இந்தக் கணக்கு எல்லாம் வராது பா… உங்க பொண்டாடிக்கு கணக்கு வர்ற அளவு, சமையல் வராதுன்னு சொல்றீங்க, ரைட் விடுங்க.” என்றான் வீரா.
இவன் நம்மை இப்ப காப்பாதினான்னா, இல்லை டேமேஜ் பண்ணானா எனச் சந்தேகத்தில் திலோ அரவிந்தனை புரியாமல் பார்க்க, அவன் அவளைப் பார்த்துக் கண் சிமிட்டினான்.
“அத்தான் எப்படி அவரு பொண்டாட்டியை காப்பாத்துறாரு பாருங்க. நீங்களும் இருக்கீங்களே….” என வீராவின் மனைவி ஆரம்பிக்க,
“போச்சு, நாமே வாயைக் கொடுத்து மாட்டினோம் போல….” என வீரா தலையில் கைவைத்தான்.
“அது தானே நல்லாக் கேளு…” என்றாள் வித்யா.
“நீ இப்ப எதுக்கு எல்லோரையும் கோர்த்து விடுற?” வசந்த் கேட்க,
“வந்ததுக்கு நாம எதாவது செஞ்சதா இருக்கணும் இல்ல…” வித்யா தத்துவம் பேச…
“அதுக்கு நாங்கதான் கிடைச்சோமா?” என்றான் வீரா. எல்லோரும் ஒருவரையொருவர் கேலி கிண்டல் செய்து பொழுதை போக்கினர்.  
மறுநாள் விடியலில் எழுந்து கிளம்பி கோவிலுக்குச் சென்றனர். பாவனா பாவாடை தாவணியிலும், அதே நிறத்தில் திலோ பட்டுப் புடவையும்  அணிந்து இருக்க, அப்பாவும் மகனும் ஒரே மாதிரி பட்டு வேஷ்ட்டி சட்டையில் இருந்தனர்.
மகள் மகனோடு, மனைவியின் தோல் உரசும்படி நெருங்கி நின்று கோபுர தரிசனம் செய்த அரவிந்தனுக்கு, மனதிற்குள் அவ்வளவு சந்தோஷம். தனக்கு நிறைவான வாழ்க்கையைக் கொடுத்த மனைவின் முகம் பார்த்தான்.
தீவிரமாகச் சாமி கும்பிட்டுக் கொண்டு இருந்தவள், கணவனின் பார்வையை உணர்ந்து, அவனைக் கேள்வியாகப் பார்க்க,
அரவிந்தன் ஒன்றும் இல்லை எனத் தலையசைக்க, திலோ அவனை நம்பாமல் பார்க்க, அவள் தோளை சுற்றி அணைத்தவன், “இந்தப் பொண்ணு மட்டும் என் வாழ்க்கையில வரலைனா என்ன ஆகி இருக்கும்ன்னு நினைச்சு பார்க்கிறேன்.” எனச் சொல்ல,
“அப்படியெல்லாம் தப்பிக்க விட்டுடுவோமா நாங்க.” எனத் திலோ மலர்ந்து சிரிக்க, அவள் வார்த்தை அரவிந்தனுக்கு அவ்வளவு நிம்மதியைக் கொடுத்தது.
பாவனா கடை வீதிக்குச் செல்வதாகச் சொல்ல, நரேஷ் அவளுடன் சென்றான்.
“அம்மா சொல்லி இருக்காங்க, நான் பெரிசாகிட்டேனாம், இனி நான் உங்களைப் பார்த்துக்கணுமாம்.” நரேஷ் பெரிய மனிதனாகச் சொல்ல, தன் குட்டி தம்பியைப் பார்த்து, பாவனாவுக்குப் பெருமிதம் பொங்கியது.
அன்பு செலுத்துவதில், அக்கா இன்னொரு தாய் என்றால்…. அவளைப் பாதுக்காப்பதில் சகோதரன் என்பவன், இன்னொரு தந்தை அல்லவோ… அதை இந்த இருவரும் நிருபித்தனர்.
இவ்வளவு நாட்கள் வெளிநாட்டில் இருந்த அர்ச்சனாவும், குடும்பத்துடன் கும்பாபிஷேகத்துக்கு வந்திருக்க, வளர்ந்து நின்ற தன் மருமகளைப் பார்த்து, முகிலனுக்கு அவ்வளவு பெருமை.
அரவிந்தன் திலோத்தமா தம்பதியருக்கு அந்த ஊரில் அவ்வளவு பேரும், மரியாதையும் இருந்தது. அப்படியிருந்தும் கூட இருவரிடமும் தலைகனமோ, கர்வமோ இல்லை.
இருவரிடத்திலும் அன்பும் பண்புமே நிறைந்து இருந்தது. அது அவர்களுக்கு ஒரு தனி அழகைக் கொடுத்தது.
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதற்கு ஏற்ப, எப்போதும் மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அரவிந்தனும் திலோவும் இருப்பார்கள்.

Advertisement