Advertisement

சங்கீத ஸ்வரங்கள்



அத்தியாயம் 21



விடுமுறைக்கு ஊருக்கு சென்று வந்ததில் இருந்து, அக்காவும் தம்பியும் மிகவும் நெருக்கமாகி விட்டனர். அங்கே முழுவதும் பாவனா அவனோடு தான் இருந்தாள்.

வீட்டிலேயே சொந்தங்களை அழைத்து, அரவிந்தன் திலோ தம்பதியரின் மகனுக்கு நரேஷ் எனப் பெயரிட்டிருந்தனர். திரும்ப ஊருக்கு வந்தும் நாட்கள் வேகமாகச் சென்றது.


அன்று காலையில் எழுந்த மகனுக்குப் பால் கொடுத்து விட்டு, கட்டிலில் பாவனாவின் அருகே போட்டுவிட்டு திலோ குளிக்கச் சென்று விட, தம்பியின் தளிர் கரங்கள் பட்டதில் கண்விழித்தவள், அருகில் இருந்த தம்பியைப் பார்த்ததும், முகம் மலர்ந்தபடி எழுந்து உட்கார்ந்தாள்.


அக்காவை பார்த்து தன் பொக்கை வாய் காட்டி தம்பிக்காரன் சிரிக்க, அந்த அழகில் மயங்கிப் போனவளோ, தன் முகத்தை அருகில் கொண்டு சென்று அவனைக் கொஞ்ச, தன் பிஞ்சு கரங்களால் தமக்கையின் முகம் தடவி பார்த்தான்.


பாவனா அவன் கை பிடித்து முத்தமிட, இன்னும் குஷியாகிப் போனான் அந்தக் குட்டிக் கண்ணன். கைகால்களை வேகமாக உதைத்து, விதவிதமாகச் சத்தம் வேறு கொடுத்தான்.


குளித்து விட்டு வந்த திலோவிடம், “அம்மா. இவன் தான் என்னை எழுப்பி விட்டான்.” எனப் பாவனா சொல்ல, “அப்படியா…” என வியந்தவள், “டேய் வாலு அக்காவை எழுப்பி விட்டியா?” என மகனிடமும் கேட்க, தன் அம்மாவைப் பார்த்தும் ஒரு சிரிப்பு சிரித்து வைத்தான்.


“சிரிச்சே மயக்கிடு டா…” என்றவள், தன் வேலையைப் பார்க்க சென்றாள்.

பாவனா இப்போது வெளியே கூட அதிகம் விளையாட செல்வது இல்லை. தம்பியோடு தான் விளையாட்டு.


திலோ நரேஷை குளிக்க வைத்துக் கொண்டு வந்தால்…. அவளே பௌடர் போட்டு, பொட்டு வைத்து, உடையும் போட்டு விடுவாள். இப்போது ஐந்து மாதம் ஆவதால்… அவனை நன்றாகத் தூக்கவும் தெரிந்தது.


இப்போது தம்பி நரேஷ் தான் அவளது உலகம். அவனுக்குமே அக்காள் பள்ளியில் இருந்து வரும் நேரம் எப்படித் தெரியுமோ…. அவள் வீட்டிற்குள் நுழைந்த நொடி, தொட்டிலில் இருந்து தலையை வெளியே நீட்டி எட்டிப் பார்க்கும், அந்தச் சின்னச் சிட்டு.


பாவனாவை பார்த்து விட்டால் போதும், அவளைத் தூக்க சொல்லி, தொட்டிலிலேயே ஒரு ஆட்டம் போட்டுவான். வேகமாக உடை மாற்றி முகம் கை கால் கழுவிகொண்டு பாவனா ஓடிவருவாள், தன் தம்பியை தூக்க.


இன்னும் மூன்று மாதங்கள் சென்றிருக்க, நரேஷ் நன்றாகத் தவழ ஆரம்பித்தான். அக்காவும் தம்பியும் ஒளிந்து விளையாடுவார்கள். பாவனா சென்று ஒளிந்து கொள்ள, தவழ்ந்து சென்றே நரேஷ் அவளைக் கண்டு பிடிப்பான்.


அந்த விளையாட்டு நரேஷுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. குஷியில் சிரித்துக் கொண்டு வீடெங்கும் தவழ்ந்து செல்வான்.


பாவனாவுக்கும் நரேஷுக்கும் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் வித்யாசம். ஆனால் இருவரும் சமவயதினர் போலச் சேர்ந்து விளையாடுவார்கள்.அதையே திலோவும் அரவிந்தனிடம் சொல்லி ஆச்சர்யப்பட்டாள்.


“நிறைய வயசு வித்தியாசம் ஆச்சே, எப்படி விளையடுவாங்கன்னு பார்த்தா, இதுங்க ரெண்டும் சேர்ந்து என்ன ஆட்டம் போடுதுங்க.”


“அது நம்ம வீட்ல இருக்கிறதுலேயே பாவனா தான சின்னவ, அதுதான் அவகிட்ட ஒட்டிகிட்டான்.”


“இப்படித் தவழ்ந்தா காலு வலிக்காது.” திலோ கவலைப் பட, “வலிச்சா அவனே நிறுத்திடுவான்.” என்றவன், அவனைச் சென்று தூக்கிக்கொண்டு “நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து அக்காவை கண்டுபிடிக்கலாம்.” என அவனும் சேர்ந்து விளையாடினான்.


பாவனா படிக்கப் புத்தகத்தோடு உட்கார்ந்தாலே, நரேஷ் சென்று அவள் புத்தகத்தை இழுப்பான். இவளும் புத்தகத்தை வைத்துவிட்டு, அவனோடு விளையாட ஆரம்பித்து விடுவாள்.


“பாவனா, நீ பெரிசாகி என்ன ஆகப் போற?” திலோ ஒரு நாள் கேட்க,


“எனக்கு அப்பா மாதிரி டாக்டர் ஆகணும்.” என்றாள் பாவனா.


“நீ இப்படிப் படிச்சேனா கம்பௌண்டர் கூட ஆக மாட்ட.”


“கம்பௌண்டர்னா என்னப்பா?” பாவனா கேட்க,


“நாங்க படிச்ச டாக்டர், அவங்க படிக்காத டாக்டர்.” என அரவிந்தன் கேலியாகச் சிரிக்க,


“நான் அப்ப அதே ஆகுறேன்.” பாவனா சொல்ல, திலோ இருவரையும் முறைத்தாள்.


“ஹே… நீ உங்க அம்மாகிட்ட எனக்கு அடி வாங்க வைக்காம விட மாட்டியா. ஒழுங்க படி, அப்பத்தான் டாக்டர் ஆக முடியும்.” என்றான் அரவிந்தன்.


“நாளையில இருந்து இவனைக் கொண்டு போய்ப் பாட்டிகிட்ட விட்டுட்டு வரேன். அப்பத்தான் நீ ஒழுங்கா படிப்ப.” திலோ மிரட்ட…


“ப்ளீஸ் வேண்டாம் மா…” பாவனா கெஞ்ச, திலோ அதைக் கேட்கவில்லை. மறுநாளில் இருந்து பாவனா படிக்கும் நேரம், நரேஷ் அவன் பாட்டியோடு இருந்தான். பாவனாவும் ஒழுங்காகப் படித்தாள்.


சாப்பிடுவதற்குள் நரேஷ் திலோவை அந்தப் பாடு படுத்திவைப்பான். வாயே திறக்க மாட்டான். அதே பாவனா கொடுத்தால்… சத்தம் போடாமல் சாப்பிடுவான்.


“டேய் ! உனக்கு என்னைப் பார்த்தா எப்படி டா தெரியுது?” திலோ மகனிடம் கேட்க, அவனுக்கு என்ன புரியும் சிரித்து வைத்தான்.


“நான் வேணா சொல்லட்டா?” அரவிந்தன் வம்பிழுக்க,


“வேண்டாம் வாயை மூடிட்டு இருங்க.” எனத் திலோ முறைத்தாள். அவன் என்ன சொல்லுவான் என அவளுக்கா தெரியாது.


நரேஷ் அவன் வயதுக்கு அதிகச் சுறுசுறுப்பு. அவனாகக் களைப்படைந்தால் தான் உண்டு. அதுவரை ஒரு இடத்தில் இருக்க மாட்டான். திலோவை ஒருவழியாக்கி விடுவான்.


நரேஷின் வால்த்தனம் எல்லம் திலோவிடம் தான் வைதேகியிடம் செல்லாது.


“டேய், என் பெண்ணைப் போட்டு என்ன பாடு படுத்துற, இப்ப மட்டும் அவங்க அப்பா இருந்திருக்கணும். என் பெண்ணைப் போட்டு இந்தப் பாடு படுத்திறியான்னு உனக்கு ரெண்டு போட்டிருப்பார்.” என்பார்.


அதோடு வைதேகி அவனைச் செல்லவிடாமல், கால்களுக்குள் அமுக்கி வைத்து உணவையும் ஊட்டி விடுவார். அதனால் வைதேகி பாட்டியை நரேஷுக்கு பிடிக்காது.


“நீ சாப்பிடலையா, இதோ பாட்டி வராங்க.” என்றால், வேண்டாம் என வேகமாகத் தலையை ஆட்டுவான்.


“என்னடா ரொம்ப அட்டகாசம் பண்ற, திலோ நீ இவனை என்கிட்ட விட்டுட்டு வேலைக்குப் போ…. நான் இவனைப் பார்த்துகிறேன்.” என்பார் வைதேகி.


அவர் சொல்வது புரியவில்லை என்றாலும், பாட்டி எதோ தன்னைத் திட்டுகிறார் என்ற அளவில், அந்தக் குட்டி கள்வனுக்குப் புரியும். உடனே வாயில் விரல் வைத்து ஷு என்பான்.


“என்னையே மிரட்டுறியா நீ… இன்னும் ஒரு வருஷம்தான், அதுக்குப் பிறகு உங்க அம்மா என்கிட்ட விட்டுதான் வேலைக்குப் போவா… அப்ப உன்னைப் பார்த்துகிறேன்.” என மிரட்டுவார்.


அன்று அரவிந்தன் சற்று முன்னதாகவே வீடு திரும்பினான். வீடு இவ்வளவு அமைதியாக இருக்கிறதே, இது நம்ம வீடு தானா என அவனுக்குச் சந்தேகமே வந்துவிட்டது.


தாய் மக்கள் என மூவரும் படுக்கை அறையில் இருந்தனர். அதுவும் அக்காவும் தம்பியும் ஒரு இடத்தில் படுத்து இருந்தது, அவனுக்கு ஒரே ஆச்சர்யம்.


“என்ன ஆச்சு?”


“நரேஷுக்கு இன்னைக்குத் தடுப்பு ஊசி போட்டுட்டு வந்தோம். அந்த டாக்டர் சொல்லித்தான் அனுப்பினார். இந்த ஊசி கொஞ்சம் வலிக்கும், லேசா காய்ச்சலும் இருக்கும்ன்னு சொன்னார்.”


“தம்பிக்கு வலிக்குத்துன்னு அக்காவும் அழுதிட்டு இருக்கா… சாப்பிடவும் இல்லை.” என்றால் திலோ.


அரவிந்தன் பாவனாவின் முகம் நிமிர்த்திப் பார்க்க, முகம் முழுக்கக் கண்ணீர் தான்.


“தம்பி நல்லதுக்குத் தான் டா ஊசி போடுறது. அப்பத்தான் பின்னாடி எதுவும் உடம்புக்கு வராம இருக்கும். ஒருநாள் தான் அப்படி இருப்பான். நாளைக்குச் சரி ஆகிடுவான்.”


“வலிக்காம ஊசி போட முயாதா பா… பாவம் அவனால தவழவே முடியலை.” என்றால் நரேஷின் தொடையை வருடியபடி.


அரவிந்தன் மகனைப் பார்க்க பாவமாகப் படுத்திருந்தான். “எங்க வாலு குட்டி இப்படியெல்லாம் ஒரு இடத்தில இருக்கவே இருக்காதே, எங்க பட்டுக்கு வலிக்குதா.” என்றபடி மகனை மெதுவாகத் தூக்கியவன், மிருதுவாக அவன் கன்னத்தில் முத்தமிட்டான்.


பாவனாவை ஐஸ் எடுத்து வர சொல்லி, மெதுவாக ஊசி போட்ட இடத்தில் ஒத்தடம் கொடுக்க, முதலில் நரேஷ் கொஞ்சம் அழுதான், பிறகு அமைதியானான்.


திலோவிடம் பால் கொடுக்கச் சொல்லி கொடுத்தவன், பாவனாவை அழைத்துச் சென்று சாப்பிட வைத்தான்.


“நாளைக்குத் தம்பி நல்லா ஆகிடுவான். நீ இப்ப சமத்தா தூங்குவியாம்.” என்றவன், அவள் அறைக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்தான்.


பால் குடித்தபடி நரேஷ் உறங்கி விட… அவனைக் கட்டிலில் படுக்க வைத்த திலோ, அவளும் அருகில் படுத்துக் கொண்டாள். அரவிந்தன் வந்து அவளைச் சாப்பிட அழைத்துச் சென்றான்.


“ரெண்டு பேரும் படுத்தினாங்களா உன்னை.”


“இல்லையில்லை…. ஒரே பாசமா மலர் படம் தான் காட்டினாங்க.”


“இவ என்னவோ உனக்கு வலிக்காத ஊசி அக்கா கண்டுபிடிக்கிறேன்னு சொல்றா… அவன் எல்லாம் புரிஞ்ச மாதிரி ம்..ம்ன்னு சவுண்டு கொடுக்கிறான்.”
“முடியலை… இன்னும் கொஞ்ச நாள் போனா, பாவனாவே அவ தம்பியை வளர்த்திடுவா… இப்பவே நான் விட்டா அவ எல்லாமே பண்ணுவா… நான்தான் கொடுக்கிறது இல்லை.”


“அவன் அழுதா போதும், எனக்கு முன்னாடி இவ துடிச்சிட்டு ஓடுவா…இவனும்தான் அவ அக்கா ஸ்கூல்ல இருந்து வர கொஞ்சம் லேட் ஆகிடுச்கினாலும், வாசலை வாசலைப பார்த்திட்டு கடப்பான். ஓவர் லவ்ஸ்ல போயிட்டு இருக்கு ரெண்டுத்துக்கும்.” குறையாகச் சொல்வது போலச் சொன்னாலும், திலோவின் குரலில் இருந்தது பெருமிதமே… அரவிந்தனுக்கும் மிகவும் மகிழ்ச்சி.


இரண்டு நாள் சென்று காலையில், இன்னும் ஊசி போட்ட வலியின் நினைவில், நரேஷ் தவழ பயந்து, உட்கார்ந்தபடியே காலை இழுத்துக் கொண்டே வர… அதைப் பார்த்து திலோ வருந்த… அவன் அப்படி வருவதைப் பார்க்க பொறுக்காமல், பாவனா ஓடி வந்து அவனைத் தூக்கிக் கொண்டாள். அக்கா என்பவள் இன்னொரு தாய் தானே…


“கால் வலிக்குதா டா…” எனத் தம்பியிடம் அவள் உருக…


அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த அரவிந்தன், “ஆமாம் இன்னும் வலிக்கும் உன் தம்பிக்கு.” என்றவன், “டேய் பயந்தவனே… உனக்கு வலிக்காது சரியா…சரி ஆகிடுச்சு உனக்கு.” என்றபடி, நடைவண்டியின் முன்பு நரேஷை நிறுத்த, அதைப் பிடித்தபடி நரேஷ் நன்றாக நடக்க… அதைப் பார்த்த பிறகுதான் பாவனாவுக்கு நிம்மதி.


அன்றிலிருந்து நரேஷ் தவழ்வதை விட்டு நடக்க ஆரம்பித்தான். முதலில் அப்பா அம்மா எல்லாம் வரவில்லை. அக்கா தான் அவன் முதன் முதலில் உதிர்த்த சொல், அதை எதிர்ப்பார்த்தே இருந்ததால்… அரவிந்தனுக்கும் திலோவுக்கும் மகிழ்ச்சி தான். பாவனாவை கையில் பிடிக்க முடியவில்லை.


“அப்பா அம்மான்னு முதல்ல சொல்லக் கூடாதுன்னு தான் சொல்வாங்க. ஆனா பாட்டின்னு சொன்னா என்ன டா? நீ தேஞ்சா போயிடுவ?” வைதேகி பொய்யாகப் பேரனின் குமட்டில் குத்த,


“அம்மா, ஏற்கனவே அவன் உங்களை விரோதியை பார்க்கிற மாதிரி பார்த்து வைப்பான். இதுல ஏன் மா அவனை வம்பு இழுக்குறீங்க? நானே உங்ககிட்ட தான் அவனை விட்டுட்டு வேலைக்குப் போகணும். அது உங்களுக்கு நியாபகம் இருக்கட்டும்.”


“நான் ஏன் பார்த்துக்கணும் இவனை? அவ அக்காவையே பார்த்துக்கச் சொல்லு. அவளைத் தானே பிடிக்கும் இவனுக்கு.”


“அவளும் சொல்லிட்டுதான் இருக்கா… அவ படிக்கிற ஸ்கூல்ல தான் இவனையும் போடணுமாம். லஞ்ச டைம்ல போய்த் தம்பியை பார்த்துப்பாளாம்.”


“நான் அதுதான் சொன்னேன், நீ உன் தம்பியையே பார்த்திட்டுப் படிக்கப் போறது இல்லைன்னு.”


திலோ சொன்னதைக் கேட்டு வைதேகி சிரித்துக் கொண்டார். “தினமும் ரெண்டு போரையும் உட்கார வச்சு சுத்தி போடு, நம்ம கண்ணே பட்டுடும் போல இருக்கு.” என்றார்.


அன்று இரவு திலோ குளித்து நைட்டி அணிந்து வர, அரவிந்தனோடு மெத்தையில் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்த நரேஷ், அம்மாவைப் பார்த்ததும் அவளிடம் பாய்ந்தான்.


“இதுக்கு மட்டும் உனக்கு நான் வேணும். போடா…” என்றவள், அவனைத் தூக்காமல் சென்று படுத்துக் கொண்டாள்.
நரேஷ் அவள் மீது சென்று விழுந்து, அவள் மார்பை முட்டினான்.


“ஏன் டி பிள்ளையைத் தவிக்க விடுற? ஒழுங்கா பால் கொடு.” என அரவிந்தன் சொல்ல,


“செல்லத்துக்குப் பால் வேணுமா… அம்மாவுக்கு ஒரு கிஸ் கொடு…” என்றதும், நரேஷ் திலோவின் கன்னத்தில் முத்தமிட, பதிலுக்கு மகனை முத்தமிட்டவள், அவனைத் தன் பக்கத்தில் படுக்க வைத்துக் கொண்டு பால் கொடுத்தாள்.
மகனை தலை முதல கால்வரை திலோ வருடிக் கொடுக்க, பால் குடித்தபடி நரேஷ் உறங்கிவிட்டான்.


கீழே இருந்த மெத்தையில் அவனை அரவிந்தன் படுக்க வைத்தான். கட்டிலில் என்றால் உருண்டு விடுவான் அல்லது இவர்களுக்குத் தெரியாமல் கட்டிலில் இருந்து இறங்குகிறேன் எனக் கீழே விழுந்து வைப்பான். அதனால் அவனைக் கீழேதான் படுக்க வைப்பது.


விளக்கணைத்து மனைவியின் பக்கம் படுத்தவன், “திலோ, உனக்கு நான் இருக்கேன் டா… நீயேன் அந்த ரவுடி பேபி உன்னைக் கண்டுக்கலைன்னு பீல் பண்ற.” என்றான்.


“நான் ஒன்னும் பீல் பண்ணலை… ரொம்ப விளையாட்டு உங்க பையனுக்கு, நான் சொல்றது கேட்கிறதே இல்லை.”


“சின்னக் குழந்தை டா அவன், இப்ப அபப்டித்தான் இருப்பான். கொஞ்சம் பெரிசானா கேட்பான்.”


“ம்ம்…”


“ஆனா அந்த ரவுடி பேபி பிறந்த பிறகு, என்னோட அமுல் பேபி தான் இளைச்சு போயிட்டா….”


“எங்க தினம் ஒரு அலமாரியை இழுத்துப் போடுறான். அதைத் திரும்ப அடுக்கவே நேரம் சரியா இருக்கு.”


“உன்னை மாதிரியே வாலு.”


“என்னை மாதிரி ஒன்னும் இல்லை. உங்களை மாதிரி தான். அத்தை சொல்றாங்க, நீங்களும் சின்னதுல இப்படித்தான் இருப்பீங்களாம்.”


“நான்தான் அமைதின்னு நினைச்சு ஏமாந்திட்டேன்.”


“அது சின்னதுல வாலா இருக்கிறவங்க, பெரிசானதும் அமைதி ஆகிடுவாங்க. உன்னைப் போல அமுல் பேபி எல்லாம் ரவுடி பேபி ஆகிறது இல்லையா? அது போல….” என அரவிந்தன் சிரிக்க,


வழக்கம் போல அவனது சிரிப்பில் விழுந்த கன்னத்துக் குழியை ரசித்தவள், அவன் மீசையைப் பிடித்து வலிக்கும் படி இழுத்தாள்.


“உன்னை…” என்றவன், அவள் இதழ்களைச் சிறை செய்ய… அதன் பிறகு அங்கே பேச்சுக்கு இடம் எது?


நரேஷுக்கு ஒரு வயது ஆனதும், அவனுக்குத் தாய்ப் பால் கொடுப்பதும் நிறுத்தப்பட… அக்காவும் தம்பியும் ஒரே அறையில் தரையில் மெத்தை விரித்துப் படுத்துக் கொண்டார்கள். அவர்களுக்குக் காவலாகப் பெற்றவர்கள் இருவரும் ஹாலில் படுக்கும்படி ஆனது.


கணவனும் மனைவியும் காதல் பயிர் வளர்த்தால்… அக்காவும் தம்பியும் பாசப் பயிர் வளர்த்தார்கள்.








Advertisement