Advertisement

சங்கீத ஸ்வரங்கள்



அத்தியாயம் 20



அரவிந்தன் வீடு வந்தபோது, வீடு அமைதியாக இருந்தது. ஹாலில் உட்கார்ந்து காமாட்சியும் வைதேகியும் பேசிக்கொண்டு இருந்தனர்.


அரவிந்த சென்று திலோ இருந்த அறையின் கதவை தட்ட, பாவனா வந்து கொஞ்சமாகத் திறந்து நின்று, “தம்பி பால் குடிக்கிறான்.” என்றாள்.


“சரி, ஒரு நிமிஷம்,” என்றவன், கதவை இன்னும் கொஞ்சம் திறந்து பார்க்க, கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து மேலே ஒரு துண்டை போட்டுக் கொண்டு, திலோ மகனுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள்.


அவன் நிற்பது தெரிந்தும், அவள் அவனை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. கோபமாக இருக்கிறாள் எனத் தெரியும். இப்போது பேசினால் பிரச்சனை ஆகும் என உணர்ந்தவன், “திலோ நான் போய்க் குளிச்சிட்டு வரேன்.” என்றான். அப்போதும் பதில் இல்லை.


அங்கிருந்து நகர்ந்தவன், “அம்மா, வாங்க வீட்டுக்கு போகலாம்.” என்றான்.


அவர் பாவனா என்றதும், “பாவனா வீட்டுக்கு வரியா?” அரவிந்தன் சத்தமாகக் குரல் கொடுக்க, பாவனா திரும்பி திலோத்தமாவை பார்க்க,


“நான் என் பெண்ணை இனி யாரை நம்பியும் விடுறதா இல்லை.” என உள்ளே இருந்து திலோவின் குரல் உரத்துக் கேட்க,

கோபித்துக் கொள்ளப் போகிறார்கள் என வைதேகி பார்க்க, காமாட்சியும் அரவிந்தனும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.


“அவ பொண்ணு அவளே பார்த்துக்கட்டும், வா போகலாம்.” எனக் காமாட்சி சொன்னதும், அரவிந்தனும் கிளம்பினான்.


“அத்தை, அவளுக்கு எதாவது சாப்பிட கொடுங்க.” எனச் சொல்லிவிட்டுச் சென்றான்.


அரவிந்தன் வீட்டிற்குச் சென்று நிதானமாகக் குளித்து விட்டு வந்து சாப்பிட அமர்ந்தான். காமாட்சி அவனுக்குத் தோசை சுட்டுக் கொடுத்தபடி, இன்று மாலினியின் அம்மா வந்ததில் இருந்து நடந்த அனைத்தையும் சொன்னார்.


“எப்பவும் திலோ பாவனாவை கேட்டுத்தான் அனுப்புவா, எங்கப் போற? எப்ப வருவேன்னு? நான்தான் அவங்க பாட்டியோட பேசிட்டே கவனிக்காம விட்டுட்டேன்.”


“நான் போய்ச் சொன்னதும், பாவம் உடனே தேடி ஓடினா… மாலினியோட அம்மா கொஞ்சம் நிதானமா யோசிச்சு பேசி இருக்கலாம்.”


“இப்ப காலம் அப்படித்தானே இருக்கு. நீங்க எல்லாம் லீவ் விட்டா வீட்லயே இருக்க மாட்டீங்க. நாங்களும் பசிச்ச வருவாங்கன்னு இருப்போம்.”


“இப்ப காலம் அப்படியா இருக்கு, பசங்க டைம்க்கு வீட்டுக்கு வரலைனா, கண்டதையும் தானே நினைக்கத் தோணுது.”


“என்னவோ இந்தியா வல்லரசு, நல்லரசுங்கிறாங்க. ஆனா பொண்ணுங்க வெளிய கூட நிம்மதியா போயிட்டு வர முடியலை.”


“ஆமாம் மா, இப்ப நாடு அப்படித்தான் இருக்கு. அதுதான் திலோ பாவனாவை கராத்தே கிளாஸ்ல கூடச் சேர்த்து விட்டா.”


“ம்ம்.. நாமதான் பார்த்து இருந்துக்கணும்.”


“அம்மா அவ இனி பாவனாவை யாரை நம்பியும் விட மாட்டா. அப்பாவும் அங்க தனியா இருக்கார், நீங்க ஊருக்கு கிளம்புங்க.”


“நானும் அதுதான் நினைச்சேன். இன்னும் ஒரு மாசம் போகட்டும் அப்புறம் உங்க வசதி பார்த்து நீ திலோவையும் பிள்ளைங்களையும் அங்க கொண்டு வந்து விடு.”


“சரி மா…”


“வரும் போது திலோவோட அம்மாவையும் கூடிட்டு வா, நம்ம வீட்ல வச்சே பேர் வச்சிடலாம்.”


“சரி, நாளைக்குப் போறதுக்கு உங்களுக்கு டிக்கெட் போட்டுடுறேன்.”


காமாட்சிக்கு ஊருக்கு செல்ல டிக்கெட் போட்டுக் கொண்டு இருக்கும் போது, திலோவின் எண்ணில் இருந்து அழைப்பு, அரவிந்தன் ஆவலாக எடுக்க, ஆனால் பேசியது மனைவி அல்ல மகள்.


“அப்பா, என்னோட டிரஸ் ஸ்கூல் பாக் எல்லாம் கொண்டு வந்து குடுப்பீங்கலாம்.” என்றாள்.


“சரி எடுத்திட்டு வரேன்.” என்றவன், பாவனாவுக்குத் தேவையான பொருட்கள் எடுத்துக் கொண்டு கிளம்பினான்.


“அம்மா, நீங்க சாப்பிட்டு படுத்துக்கோங்க. என்கிட்டே சாவி இருக்கு.” எனச் சொல்லிவிட்டுச் சென்றான். அவனே அங்கே செல்ல வேண்டும் என்றுதான் இருந்தான்.


இவன் அங்கே சென்றபோது திலோ சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள். உள்ளே கட்டிலில் மகன் படுத்திருக்க, பாவனா அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.


அரவிந்தன் உள்ளே சென்று கட்டிலில் அமர்ந்தான். “அப்பா நான் என் ப்ரண்ட் வீட்டுக்கு போனேன் இல்ல… அப்ப இவன் என்னைத் தேடி அழுதானாம். அம்மா சொன்னாங்க.”


“அப்படியா ! பாரு, தம்பி கூட உன்னைக் காணோம்ன்னு தேடி இருக்கான். நீ ஏன் அம்மாகிட்ட சொல்லாம போன?”


“மீனு சொன்னா பார்த்திட்டு உடனே வந்திடலாம்ன்னு. ஆனா மொபைல் வச்சு விளையாடிட்டே இருந்தோமா, அதுல மறந்தே போச்சு.”


“எங்க போனாலும் சொல்லிட்டு போகணும் டா… நம்ம அபார்ட்மெண்ட்ல நூறு வீட்டுக்கு மேல இருக்கு. எங்கப் போய் உன்னைத் தேடுறது சொல்லு.”


“உன்னை யாரோ தூக்கிட்டு போயிடாங்கன்னு நினைச்சு அம்மா பயந்திட்டா.”


“ஆமாம் என் பிரண்ட் கூடச் சொல்லி இருக்கா, அவளோட கசின்னை யாரோ தூக்கிட்டுப் போயிட்டாங்களாம். இப்பவரை கிடைக்கலையாம்.”


“பார்த்தியா, இதுக்குதான் அம்மாவுக்கு அவ்வளவு கோபம் வந்துச்சு. யாரும் தெரியாதவங்க வந்து பேசினா பேசக்கூடாது. உங்க அப்பாவுக்கு விபத்து, அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை, இப்படி எதாவது சொல்லி கூப்பிடுவாங்க. அதையெல்லாம் நம்பி யார் கூடவும் போகக் கூடாது.”


“உனக்கு அப்பா நம்பர் தெரியும், அம்மா நம்பர் தெரியும், எதுனாலும் எங்களுக்குப் போன் பண்ணி பேசணும். ஸ்கூல்லை விட்டு தனியா வெளிய வரக் கூடாது.”


“உன்னை யாரவது தொந்தரவு பண்ணா, அப்பா அம்மாகிட்ட உடனே சொல்லணும். ஸ்கூல்ல இருந்த டீச்சர்கிட்ட சொல்லணும். சொல்லாம மட்டும் இறுகக் கூடாது.”


“சொல்லாம இருந்தா, அவங்க பண்ற தப்புக்கு நீயும் துணை போறேன்னு அர்த்தம். புரியுதா?” அரவிந்தன் கேட்க, பாவனா புரிந்ததாகத் தலையாட்டினாள்.


“அப்பா, இங்க பாருங்களேன், இவன் நான் போற பக்கமெல்லாம் பார்ப்பான்.”

என்றாள் தம்பியைக் காட்டி. அதே போலப் பாவனா எந்தப் பக்கம் செல்கிறாளே, அந்தப் பக்கம் உடலை திருப்பி அந்தச் சின்ன வாண்டு பார்க்க,


“பாருடா, அக்காவை ஒருத்தன் வளைச்சு வளைச்சுப் பார்க்கிறான்.” அரவிந்தன் சொல்ல, பாவனாவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.


“இன்னும் உனக்குத் தலையே நிற்கலை, அதுக்குள்ள என்ன ஆட்டம் உனக்கு.” என்றவன், “பாவனா இங்க வா..” என மகளை அழைத்து, அவள் கன்னம் மற்றும் காதை தடவி பார்த்துச் சோதித்தான்.


“காது எதுவும் வலிக்குதா பாவனா?” அரவிந்தன் கேட்க, வெளியே உட்கார்ந்து இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த திலோவின் உடல் விரைத்தது.


“இல்லைப்பா வலிக்கலை.” என்றாள்.


“அப்பா, தம்பி உச்சா போயிட்டான்.” என்றவள், ஓடிசென்று மடித்து வைத்திருந்த துணியை எடுத்துக் கொண்டு வந்தாள்.


“இரவில் உறங்குவதற்கு முன்பு மட்டும்தான் டையபர் போடுவது, மற்ற வேளைகளில் துணி தான் கட்டி விடுவாள்.”


“தம்பியின் இடையில் இருந்த துணியை எடுத்து விட்டு, ஈரமான டிஷு பேப்பரை வைத்து அவனுக்குத் துடைத்து விட்டு, துவைத்து மடித்திருந்த துணியை லாவகமாக அவனது இடையில் கட்டிவிட்டாள்.”


“அக்கா செய்வதையே வாயில் கை வைத்து சப்பியபடி தம்பிக்காரன் பார்த்துக் கொண்டு இருந்தான்.”


குழந்தைகள் இருவரையும் அப்போது பார்ப்பதே அரவிந்தனுக்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. முத்தான இரண்டு பிள்ளைகள், இதைவிட வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும் என்றுதான் தோன்றியது.


“பாவனா குட்டிக்கு எல்லாம் தெரியுதே….” அரவிந்தன் பாராட்டாகச் சொல்ல,

“அம்மா பண்ணும் போது, நான் பார்த்திட்டே இருப்பேன்.” என்றவள், ஈரத் துணியைக் கொண்டு போய்க் குளியல் அறையில் போட்டுவிட்டு வந்தாள்.


பிள்ளைகள் பெற்றவர்களைப் பார்த்துதான் நிறைய விஷயம் கற்றுக் கொள்வார்கள். பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் என்றால், முதலில் நாம் ஒழுக்கமாக இருக்க வேண்டும்.


பாவனா இரவு உடையை அணிந்தவள், அழுக்கு துணியை அங்கிருந்த கூடையில் போடு விட்டு, பல் துலக்கி முகம் கை கால் கழுவி வந்து, கட்டிலில் படுத்துக் கொண்டாள். அவள் செய்வதை எல்லாம் பார்க்க, குட்டி திலோ போலத்தான் இருந்தது.


அடுத்து திலோ வந்து, அவளும் முகம் கைகால் கழுவி, உடைமாற்றி, கட்டிலில் பாவனாவின் அருகே படுத்துக் கொண்டாள். அரவிந்தன் கட்டிலில் படுத்து அவளையே தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.


பாவனா மட்டும் உறங்கி விட்டாள். மகன் இன்னும் உறங்கவில்லை. “ஊரே தூங்கினாலும் உனக்குத் தூக்கம் வராது டா… இன்னொரு கோட்டா உங்க அம்மாகிட்ட குடிச்சாதான் தூக்கம் வரும்.” என்றவன், எழுந்து சென்று திலோவின் அருகே கட்டிலில் உட்கார்ந்தான்.


திலோ பாவனாவின் கன்னத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டிருந்தாள்… அவள் கண்கள் கண்ணீரை பொழிய….


“எதுக்கு அப்படி அடிக்கணும்? ஏன் இப்ப இப்படி உட்கார்ந்திட்டு அழணும்.”


“நான் அடிச்சது அவ காதை எதுவும் பாதிச்சிடாது இல்ல…”


“அந்தப் பயம் அடிக்கிறதுக்கு முன்னாடி இருந்திருக்கணும்.”


“நான் எதோ வேணும்னே அடிச்ச மாதிரி சொல்றீங்க.”


“திரும்ப டென்ஷன் ஆகாத. நான் உனக்கு உரிமை இல்லைனோ… நீ அடிச்சது தப்புன்னோ சொல்லலை. ஏன் அடிக்கனும்ன்னு தான் கேட்கிறேன்?”


“அடிக்கனும்ன்னு தேவை இல்லை. நீ சொன்னாலே அவ கேட்பா… இப்ப அடிச்சிட்டு நீதான் அழற…”


அம்மா அடித்தாலும் பிள்ளைகள் அம்மாவிடம் தான் செல்லும். அதே போலப் பிள்ளைகளை அடித்தாலும், அதன் பிறகு பெற்றவர்களுக்குத் தான் மன உளைச்சல். அடித்ததை நினைத்தே அழுது கரைவார்கள். யாரும் பிள்ளைகளை விரும்பி அடிப்பதில்லை.


“இன்னைக்கு நீ இருந்த டென்ஷன் எனக்குப் புரியுது, அடிச்சுட்ட பரவாயில்லை. ஆனா அதுக்கு ஏன் டி நீ விளக்கம் எல்லாம் சொல்ற?”


“அந்த அம்மா எப்படிப் பேசினாங்க.”


“அவங்க பேசினது தப்புதான், நான் இல்லைன்னு சொல்லலை. அதுவும் பாவனாவை வச்சிட்டு பேசினது ரொம்பத் தப்பு. ஆனா நீயும் பதிலுக்கு அப்படிப் பேசி இருக்க வேண்டாம்.”


“அவங்க தான் இறங்கிப் போனா… நீயும் இறங்கிப் போவியா? நாம முகிலன் அர்ச்சனாவுக்குக்காகப் பார்க்கணும் இல்ல…”


“இந்த மாதிரி ஆயிரம் பேர் பேசுவாங்க. நீ ஒவ்வொருத்தர் கிட்டயும் போய்ச் சண்டை போட்டுட்டு இருப்பியா?”


“இந்த மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் நீ வார்த்தையால பதில் கொடுக்கக் கூடாது. பாவனா வளர்ந்து அவங்க முன்னாடி நிற்பா பார்த்தியா? அப்ப பார்த்துக்கோங்க, நான் என் பெண்ணை எப்படி வளர்த்திருக்கேன்னு, நீ அவங்களுக்குக் காட்டணும்.”


“உண்மையா சொல்றேன் திலோ…. பாவனா பண்றது எல்லாம் பார்த்தா, நீதான் நினைவுக்கு வர… அவ குட்டி திலோவா தான் தெரியுறா… குட்டி மாலினியா எங்கேயும் தெரியவே இல்லை.”


“அவ உன்னை ரொம்பக் கவனிக்கிறா, உன்னை மாதிரிதான் எல்லாம் பண்றா. மாலினி வேணா அவளைப் பெத்து இருக்கலாம். ஆனா அவ திலோவோட பொண்ணா தான் வளர்றா.”


“நீ அதையும் இதையும் போட்டு குழப்பிக்காத. பேசுறவங்க பேசத்தான் செய்வாங்க. நாம அவங்களுக்கு எல்லாம் பதில் கொடுத்திட்டே இருக்கனும்ன்னு அவசியம் இல்லை. பாவனா உன்னைப் புரிஞ்சிக்கணும். நீ அவளுக்கு நல்லது மட்டும் தான் செய்வேன்னு அவளுக்குப் புரிஞ்சா போதும், மத்தவங்களைப் பத்தி நமக்கு என்ன?”


அரவிந்தன் சொல்லச் சொல்ல திலோ யோசிக்க ஆரம்பித்தாள். மனதிற்குள் ஒரு வைராக்கியம் எழுந்தது. நான் என் பெண்ணை நல்லா வளர்த்து காட்டுவேன் என நினைத்துக் கொண்டாள். இனி யார் என்ன பேசினாலும், அது அவளைப் பாதிக்காது.


படுத்திருந்தவள் உட்கார்ந்து இருந்த அரவிந்தனை தன்னை நோக்கி இழுத்தாள். அரவிந்தன் அவளுக்கு அழுத்தம் கொடுக்காமல், மென்மையாக அவள் மார்பில் சாய்ந்து கொண்டான்.


“என்னால தான உனக்கு இவ்வளவு கஷ்ட்டம். நீ உங்க அம்மா பார்த்த மாப்பிளையைக் கல்யாணம் பண்ணி இருந்தா… உனக்கு இப்படி யார் பேச்சையும் கேட்கிற நிலைமை எல்லாம் வந்திருக்காது.” அரவிந்தன் சொல்லியபடி திலோவின் முகம் பார்க்க, அவள் அவன் வாயிலேயே ஒன்று போட்டாள்.


“இன்னும் என்னை அடி திலோ, என்னால தான் எல்லாம். என்னைப் பார்த்ததுனால தான் இந்தக் கஷ்ட்டம் உனக்கு.”


“எனக்கு உங்களைத் தான பிடிச்சிருக்கு.” என்றவள், அவன் இதழில் முத்தமிட, அரவிந்தன்னும் அவள் முகம் முழுவதிலும் முத்தமிட, அந்நேரம் அவர்கள் மகன் குரல் கொடுத்து, தான் இன்னும் விழித்திருப்பதாகக் காட்டினான்.


“பேசிட்டு இருக்கும் போது எல்லாம் சும்மாத்தானே இருந்த, இப்ப மட்டும் ஏன் டா அழற?” என்றபடி அரவிந்தன் சென்று மகனை தூக்கி வந்து திலோவின் கையில் கொடுக்க, திலோ புன்னகையுடன் மகனை கையில் வாங்கினாள்.


திலோ திரும்பி உட்கார்ந்து பால் கொடுக்க, “இப்ப மட்டும் பாவனா முழிச்சு இருக்கணும். என்னை ரூமை விட்டு வெளியே துரத்தி இருப்பா… எதோ அவ உனக்குச் செக்யூரிட்டி ஆபிசர் ரேஞ்சுக்கு இருக்கா.”


திலோ சிரித்தபடி, “அவ எங்க அம்மாவையே உள்ள விட மாட்டா. அவளும் திரும்பி உட்கார்ந்துப்பா தெரியுமா, ரொம்பச் சமத்து.”


“நான் சமத்து எல்லாம் இல்லைப்பா….” என அரவிந்தன் சிரிக்க,


“தெரியும், அதுதான் நான் திரும்பி உட்கார்ந்துட்டேன்.” எனத் திலோவும் குறும்பாகப் புன்னகைத்தாள்.


“நாளைக்கு அம்மா ஊருக்கு போறாங்க திலோ.”


“என் மேல கோபமா?”


“இல்லை… நான்தான் அப்பா தனியா இருக்காருன்னு போகச் சொன்னேன். பாவனாவுக்கு லீவ் விட்டதும், உன்னையும் பசங்களையும் கொண்டு போய் விடுறேன்.”


“ஊருக்கு போகும் போது, அப்பவே இவனுக்குப் பேரும் வச்சிடலாம். இங்க எல்லாரையும் கூப்பிட்டு பண்ண முடியாது.”


“சரிங்க.”


“அம்மா ஊருக்கு போயிட்டா உனக்கு ஒன்னும் கஷ்டமா இருக்காதே, உன்னால பாவனாவை பார்த்துக்க முடியுமா?”


“அவ காலையில ஸ்கூல் போனா சாயங்காலம்தான் வருவா… வந்து கொஞ்ச நேரம் விளையாட போவா… அப்புறம் படிச்சிட்டு, சாப்பிட்டுத் தூங்கதான் நேரம் சரியா இருக்கும்.”


“நம்ம வீட்ல சமைக்கிறவங்களை எப்போதும் போல, அவளுக்குச் சாப்பாடு மட்டும் கட்டிட சொல்லுங்க. மத்தவேளை அவ இங்கயே சாப்பிடட்டும்.”


“உங்க அம்மாவுக்குச் சிரமம் இல்லாம பார்த்துக்கோ.”


“ம்ம்… நான் இப்ப கூட நம்ம வீட்டுக்கு வருவேன். ஆனா அம்மா வருத்தபடுவாங்க. இன்னும் ஒரு மாசம் தானே… ஊருக்கு போயிட்டு வந்து அங்க வந்திடுறேன்.”


“நீ நம்ம வீட்டுக்கு வந்தாலும், உங்க அம்மாதான் இங்கயும் அங்கேயும் அலைவாங்க. அதுக்கு பேசாம ஆறு மாசம் வரை, நீ இங்கேயே இரு.”


“அவ்வளவு நல்லவரா நீங்க?” திலோ ஆச்சர்யப்பட…


“நைட் மட்டும் தூங்க அங்க வந்திடு.” என அரவிந்தன் கண் சிமிட்ட… “அது தானே பார்த்தேன்.” என்றாள் திலோ புன்னகையுடன்.



Advertisement