Advertisement

சங்கீத ஸ்வரங்கள்



அத்தியாயம் 19



ஒரு சனிக்கிழமை மதியம் போல மாலினியின் அம்மா வீட்டுக்கு வந்திருந்தார். அன்று அர்ச்சனாவுக்கும் விடுமுறை என்பதால், அவளை வீட்டில் வைத்துவிட்டு, இவர் மட்டும் வந்திருந்தார்.


அவர் நேராக அவரின் மருமகன் வீட்டிற்குத் தான் சென்றார். அன்று விடுமுறை என்பதால், பாவனாவும் வீட்டில் இருந்தாள்.


காமாட்சி அவரை அழைத்துக் கொண்டு சென்று பேரனையும் திலோவையும் காட்டி விட்டு, மதிய உணவு நேரம் என்பதால், உடனே தங்கள் வீட்டிற்குத் திரும்பியும் விட்டனர்.


பாவனா சாப்பிட்டதும், சம்பந்திகள் இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டே சாப்பிட்டனர். அப்போது பாவனா கீழே சென்று விளையாடுகிறேன் என்று சொன்னதும், காமாட்சியும் பேச்சு மும்முரத்தில் எங்கே என்று கேட்காமல் அனுப்பி வைத்தார்.


பிறகு வெகு நேரம் சென்றுதான் பாவனா இன்னும் வீடு திரும்பவில்லை என்பதை உணர்ந்தார். காமாட்சிக்கு மின் தூக்கியில் செல்லத் தெரியாது என்பதால்… மாலினியின் அம்மாவும் உடன் சென்றார்.


கீழே பார்க்கில் சென்று இருவரும் தேட, பாவனா அங்கே இல்லை. இன்னும் ஒருமுறை நன்றாகத் தேடிப் பார்த்துவிட்டு, காமாட்சி ஒருவேளை திலோவின் வீட்டில் இருக்கிறாளோ என அங்கே பார்க்க சென்றார்.


பாவனா அங்கேயும் இல்லை. திலோ அப்போதுதான் மதிய உறக்கத்தில் இருந்து எழுந்து வந்திருந்தாள். காமாட்சி அவளிடம் விஷயத்தைச் சொல்ல, “அவ கீழதான் இருப்பா, வேற எங்கையும் சொல்லாம போகக்கூடாதுன்னு நான் சொல்லி வச்சிருக்கேன்.” என்றவள், வேகமாக உடை மாற்றி மகளைத் தேடிக் கொண்டு சென்றாள்.


திலோவும் அந்த அபார்ட்மெண்ட் முழுவதும் தேடித் பார்த்து விட்டாள், பாவனா எங்கேயும் இல்லை. அவளின் தோழிகளின் வீட்டிற்கு எல்லாம் நேரிலேயே சென்று கேட்டுவிட்டு வந்தாள். அன்று விடுமுறை தினம் என்பதால், நிறையப் பேர் வீட்டிலேயே இல்லை.


திலோ அரண்டு போனாள் என்று சொன்னால் அது மிகை அல்ல… வீட்டிற்கு ஓடி வந்தவள், பாவனாவை காணாத பதட்டத்தில் அவளுக்கு அழுகையாக வர… அந்த அபார்ட்மெண்ட்டின் மேனேஜரை தொடர்பு கொண்டு, தன் மகள் பாவனாவை காணவில்லை என்றும், உடனே அங்கிருக்கும் சிசிடிவி பதிவுகளைப் பார்க்கும்படி கேட்டாள்.


அவரிடம் பேசிவிட்டு திலோ தானும் அபார்ட்மெண்ட் அலுவலகத்திற்குக் கிளம்ப, அப்போது பார்த்து அவள் மகன் பசியில அழ, அதை அவள் உணரும் நிலையில் கூட இல்லை.


“நான் போய்ப் பார்கிறேன். நீ போய்க் குழந்தையைப் பாரு.” என வைதேகி சொன்னதைக் காதில் வாங்காமல் வெளியே சென்றுவிட்டாள்.


குழந்தை பசியில் ரொம்பவும் அழுதான். காமாட்சி தான், வீட்டில் இருக்கும் பாலில் கொஞ்சம் நீர் விட்டுக் காய்ச்சி தர சொல்லி, சங்கில் பேரனுக்கு ஊற்றினார்.


இதுவரையில் தாய்ப் பாலை மட்டும் குடித்திருந்ததால்… திலோவின் மகனுக்கு இந்தப் பால் பிடிக்காமல், எல்லாவற்றையும் துப்பி வைக்க, அவன் கத்த கத்த காமாட்சி இரண்டு சங்கு பால் ஊற்றி விட்டார். பிறகு அவனைத் தோளில் போட்டு தட்ட, கொஞ்சம் வயிறும் அவனுக்கு நிறைந்து இருக்க, அழுகையை நிறுத்தினான்.


அரவிந்தன் சனிக்கிழமை என்பதால்… அன்று சீக்கிரமே வீடு திரும்பினான். காமாட்சி பாவனாவைக் காணோம், அவளைத் தேடிக் கொண்டு திலோ சென்றிருக்கிறாள் எனச் சொன்னதும், அவனும் அங்கே சென்றான்.

அதே போல மாலினியின் அம்மா முகிலன் அர்ச்சனாவுக்குப் பதட்டமாக அழைத்துச் சொல்லி இருக்க, அவர்களும் ஒருபக்கம் கிளம்பி இருந்தனர்.


திலோ அலுவலகத்தில் சென்று சிசிடிவி பதிவுகளைப் போட சொல்லி பார்த்தாள். பாவனா நுழைவாயிலை விட்டு வெளியே செல்லவில்லை எனத் தெரிந்தது. அப்போது உள்ளே தான் இருக்கிறாள் என அடுத்த அடுத்தப் பதிவுகளைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.


அப்போதும் அரவிந்தனும் வந்துவிட, திலோத்தமாவுக்கு அப்படி ஒரு நிம்மதி.


“சொல்லாம போகமாட்டாளே.” அரவிந்தன் சொல்ல,

“அதுதான் எனக்கும் தெரியலை.” என்றாள் திலோ.


அவர்கள் அபார்ட்மெண்ட்டில் எல்லா இடத்திலும் காமெரா இல்லை. முக்கிய இடங்களில் மட்டுதான் இருக்கும். இவர்கள் ப்ளாக்கில் இருந்து, அவள் செல்வது மட்டும் பதிவாகி இருந்தது.


அவள் பார்க்கில் இருந்து எங்குச் சென்றாள் என எந்தப் பதிவும் இல்லை. இன்னொரு ப்ளக்கில் இருந்த கேமரா வேலை செய்யவில்லை. அநேகமாக அங்கேதான் சென்று இருக்க வேண்டும்.


இருவருக்கும் அவள் எந்த வீட்டில் இருக்கிறாள் எனத் தெரியவில்லை. எல்லா வீட்டையும் தட்டி பார்த்துவிடலாம் என்ற எண்ணத்தில் கணவன் மனைவி இருவரும் ஓடினார்கள்.


அப்போது முகிலனும் அர்ச்சனாவும் வர, அவர்களை ஒரு பக்கம் போகச் சொல்லிவிட்டு, இவர்கள் ஒரு பக்கம் தேடிக் கொண்டு சென்றார்கள்.


காமாட்சி அரவிந்தனை அழைத்து, அவன் மகன் அழுவதாகச் சொல்ல, அரவிந்தன் திலோவை வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.


“நீ போ, இங்கதான் இருப்பா… நான் பார்த்து கூடிட்டு வரேன்.” என அவளை வற்புறுத்தி அனுப்பி வைத்தான்.


வீட்டிற்கு வந்ததும், “உங்களுக்குக் கொஞ்ச நேரம் சமாளிக்க முடியாதா மா…” எனத் திலோ வைதேகியிடம் எரிந்து விழுந்தாள்.


“நாங்களும் வீட்ல இருக்கப் பாலை எல்லாம் ஊத்தி பார்த்திட்டோம். உன் பையன் குடிக்காம அழுகிறான். ரொம்ப அழுது எதாவது ஆகிட்டா, அதுதான் உன்னை வர சொன்னோம்.” என்றவர், பாவனாவைப் பற்றிக் கேட்க,


“யாரு வீட்டுக்கோ தான் விளையாட போய் இருக்கா… இவர் பார்க்க போய் இருக்கார்.” என்றாள் அழும் மகனை சமாதானம் செய்தபடி.


அவர்களுக்காக அப்படிச் சொன்னாலும், உள்ளுக்குள் பயந்து நடுங்கிப்போய்த் தான் இருந்தாள். பாவனா இதுவரை இப்படிச் செய்ததே இல்லை.


அழுகையை நிறுத்தி இருந்த மகனுக்குப் பால் கொடுக்க அறைக்குள் செல் திரும்பியவளின் நடை, பாவனா உள்ளே நுழைவதை பார்த்ததும் அப்படியே நிற்க, முதலில் மகிழ்ச்சியுடன் அவளிடம் சென்றவள், மகளைப் பார்வையால் ஆராய்ந்தாள். பாவனா எப்போதும் போலவே இருக்க, மனதில் ஒரு நிம்மதி.


“எங்கப் போன பாவனா.” என்றாள்.


“என்னோட புதுப் பிரண்ட் மீனு, அவ வீட்ல மொபைல்ல கேம் இருக்குன்னு காட்ட கூப்பிட்டா, அவளோட போனேன்.” என்றதும், திலோ கொடுத்த அறையில், பாவனா மட்டும் அல்ல, அப்போது வீட்டிற்குள் நுழைந்த அரவிந்தன், முகிலன், அர்ச்சனா அதோடு வீட்டில் இருந்த எல்லோருமே ஒரு நொடி அதிர்ந்துதான் போயினர்.


“நான் உன்னை யார் வீட்டுக்கும் போகக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்லை. அதுவும் நீ எப்படிச் சொல்லாம போவ…” எனத் திலோ மீண்டும் அடிக்கச் செல்ல, அரவிந்தன் வந்து அவளது கையைப் பிடித்துக் கொண்டான்.

“ஹே… திலோ, பாவனா இனிமே அப்படிப் பண்ண மாட்டா. நீ சொன்னாலே கேட்டுப்பா… இல்லையா டா…” அரவிந்தன் பாவனாவிடம் கேட்க,


“விடுங்க, இல்லைனா அடுத்த அடி உங்களுக்கு விழும். ஒரு நிமிஷம் நான் செத்துப் போயிட்டேன், தெரியுமா உங்களுக்கு.” திலோ ஆக்ரோஷமாகக் கத்த, அவளது நிலை உணர்ந்த அரவிந்தன் அமைதியாக நின்றான்.


அழுது கொண்டிருந்த பாவனாவிடம் சென்றவள், “நீ என்கிட்ட வந்து சொல்லிட்டு தானே போயிருக்கணும். அப்படியும் இல்லைனா, அவங்க வீட்ல இருந்து போன் பண்ணி இருக்கலாம். எவ்வளவு நேரமா உன்னைத் தேடுறோம் தெரியுமா?”


“நீ இன்னொரு தடவை இப்படிப் பண்றதுக்கு முன்னாடி, உனக்கு இன்னைக்கு விழுந்த அறை நியாபகத்துக்கு வரணும். அதுக்குதான் இந்த அறை கொடுத்தேன்.” என்றவள், எழுந்து அறைக்குள் சென்றுவிட்டாள்.


வீட்டிற்குள் புயல் அடித்து ஓய்ந்தது போல இருந்தது. பாவனா இன்னும் விசும்பிக் கொண்டு இருக்க, அவளிடம் வந்த மாலினியின் அம்மா, “அவ யாரு என் பேத்தியை அடிக்க. எல்லோரும் இருக்கும் போதே இப்படி அடிக்கிறாளே, நாங்க எல்லாம் இல்லைனா, இன்னும் எங்க பெண்ணை என்ன கொடுமை படுத்துவா?” என அவர் அடுத்தப் புயலை ஆரம்பித்து வைத்தார்.


முகிலன் அவரை அடக்குவதற்குள், அவர் சொன்னது கேட்டு திலோத்தமா வெளியே வந்தவள், “ஆமாம் நான் அப்படித்தான் அடிப்பேன், என்ன பண்ணுவீங்க? அவ என்னோட பொண்ணு, நான் அவளை அடிப்பேன். எனக்கு உரிமை இருக்கு.”


“நீங்க யாரு என்னைக் கேள்வி கேட்க?” எனக் கோபத்தில் அவள் கத்த,


“அத்தை, தண்ணி எடுத்திட்டு வாங்க என்ற அரவிந்தன், “திலோ நீ முதல்ல உட்காரு.” என்றவன், “உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. யாரு இல்லைன்னு சொன்னா, சொல்லப் போனா எங்க எல்லாரையும் விட அவளைக் கண்டிக்கிற உரிமை உனக்குத்தான் இருக்கு.” என்றபடி அவன் தண்ணீர் கொடுக்க, அதைப் பருகிய திலோவின் மனநிலை, அப்படியே கோபத்தில் இருந்து அழுகைக்குச் சென்றது.


“நான் எவ்வளவு பயந்து போனேன் தெரியுமா? நாட்டில இப்ப என்னென்ன நடக்குது. எதையெல்லாமோ யோசிச்சு எவ்வளவு பயந்திருப்பேன்?”


“இவ்வளவு பேசுற இந்த அம்மா, பாவனாவுக்கு எதாவது ஆகியிருந்தா, அப்பாவும் என்னைத் தானே கேட்பாங்க.”


“அவளுக்கு எதாவது ஆகி இருந்தா, என்னால நினைச்சு கூடப் பார்க்க முடியலை.” என அவள் ஒரே அழுகை.


வைதேகி அர்ச்சனா காமாட்சி என யார் சமாதானத்தையும் அவள் கேட்கும் நிலையிலேயே இல்லை.


“எனக்குத் தெரியும் உன்னைப் பத்தி, நீ யாருக்கும் உன்னை விளக்க வேண்டாம். அமைதியா இரு திலோ.” என அரவிந்தன் குரலை உயர்த்திய பிறகே திலோத்தமா அமைதியானாள்.


அதுவரை தன் அம்மம்மாவின் பிடியில் இருந்த பாவனா, திலோவின் கண்ணீரை பார்த்ததும் அவளிடம் சென்றாள்.


“சாரி மா… நான் இனிமே இப்படிப் பண்ணவே மாட்டேன். உங்ககிட்ட சொல்லாம எங்கையும் போக மாட்டேன்.” என அவளும் அழுக…


“இனிமே இப்படிப் பண்ணக்கூடாது சரியா. போ போய்த் தம்பியோட இரு.” என அவளை உள்ளே அனுப்பி வைத்தாள்.


“மகனுக்குப் பசிக்கக் கூட விடாம பால் கொடுப்பா… இன்னைக்கு அவன் பசியில அவ்வளவு அழுதும் கூட, அவனைப் பார்க்காம பாவனாவை தேடித் போனா…”


“ஆனா இந்த அம்மா கேட்கிறாங்க, என் பேத்தியை அடிக்க இவ யாருன்னு?”


“என் பொண்ணு இப்படியெல்லாம் பேச்சு கேட்க வரும்ன்னு தெரிஞ்சிருந்தா, நான் என் பெண்ணை உங்க வீட்ல கொடுத்தே இருக்க மாட்டேன்.”


“நான் என்ன என் பொண்ணுக்கு மாப்பிள்ளை கிடைக்காமலா உங்க வீட்ல கொடுத்தேன். என் பொண்ணு ஆசைபாட்டாளேன்னு கொடுத்தேன்.”


“சம்பந்தி அம்மா நீங்களே சொல்லுங்க, என் பெண்ணை உங்க பேத்திக்கு அம்மாவா கொண்டு போனீங்களா, இல்லைனா வேலைக்காரியா கொண்டு போனீங்களா?”


“என் மகளுக்கு அவளைக் கண்டிக்க உரிமை இல்லையா? அப்படி உரிமை இல்லாம எல்லாம் அவ ஏன் அங்க இருக்கணும். அதுக்கு அவ என் பொண்ணா, என் வீட்லயே இருந்திட்டு போகட்டும்.”


“மகள் தப்பு செஞ்சா அம்மா கண்டிக்கிறது நியாயம் தானே. அதை விட்டுட்டு, அந்தச் சின்னப் பொண்ணு முன்னாடியே, நீ யாரு என் பேத்தியை அடிக்கன்னு கேட்டு வச்சா, அவ எப்படி இனி திலோவை மதிப்பா? அவ மனசுல தப்பா தானே இந்த விஷயம் பதியும்.”


“இப்படி ஒவ்வொருத்தர் கேட்கிற கேள்விக்கும், பயந்து பதில் சொல்லனும்ன்னு என் பொண்ணுக்கு அவசியம் இல்லை.”


“ உங்களுக்கே நல்லா தெரியும், திலோ எப்படிப் பாவனாவை பார்த்துப்பான்னு, இனிமே இப்படி நடக்காதுன்னு நீங்க உறுதி கொடுக்காதவரை, நான் திலோவை உங்க வீட்டுக்கு அனுப்ப மாட்டேன்.” என வைதேகி உறுதியாகச் சொல்லிவிட, திலோ மறுப்புச் சொல்லாமல் இருந்ததிலேயே, அவளும் அதை ஆதரிக்கிறாள்  எனப் புரிந்தது.

“திலோ மட்டும் இல்லை நீங்களும் பாவனாவை ஒருநாளும் பிரிச்சு பார்க்க மாட்டீங்க எனக்கு தெரியாதா?” காமாட்சி சொல்ல,   


“அம்மா எதோ கோபத்தில பேசிட்டாங்க, நீங்க மனசுல வச்சுக்காதீங்க. திலோ பாவனாவை நல்லா பார்த்துகிறாங்க, எங்களுக்கு நல்லா தெரியும்.”


“எங்களால உங்க குடும்பத்தில பிரச்சனை வந்திடுச்சு, இனி இப்படி நடக்காது. நான் மன்னிப்புக் கேட்கிறேன்.” என முகிலன்  சொல்ல, வைதேகியும் திலோத்தமாவும் இறங்கி வருவதாகவே இல்லை.

அவர்கள் இருவரும் மெளனமாக இருக்க, “பரவாயில்லை முகிலன், நீங்க ஏன் மன்னிப்புக் கேட்கிறீங்க? அதெல்லாம் வேண்டாம்.” என அரவிந்தன் சொல்ல, திலோ அவனை முறைத்தாள்.


“பெண் குழந்தை அவ, எங்கப் போறா எங்க வரான்னு எனக்குத் தெரிய வேண்டாமா? உங்களுக்கே தெரியும், இப்ப நாட்டில எவ்வளவு நடக்குதுன்னு. நான் அதனாலதான் அவளை யார் வீட்டுக்கும் விட மாட்டேன். அங்க யாரு எப்படின்னு எனக்குத் தெரியாது.”


“எப்பவும் பார்க்ல தான் விளையாடுவா… டைம் சொல்லித்தான் அனுப்புவேன், இந்த டைம் குள்ள வரணும்ன்னு. இதுவரை அவ இப்படி யார் வீட்டுக்கும் போனதே இல்லை.”


“அப்ப ஒரு நிமிஷம் எனக்கு என்ன தோணும் சொல்லுங்க. எதுவும் ஆகாதுன்னு தைரியம் இருந்தாலும், கண்டது கேட்டது எல்லாம் நினைச்சு, மனசு எவ்வளவு துடிச்சது தெரியுமா?”


“எனக்கு என் பெண்ணோட பத்திரம் தான் முக்கியம்.”

“பொம்பளை பசங்களோ, ஆம்பிளை பசங்களோ, சின்ன வயசுல இருந்து ஒழுக்கம் ரொம்ப முக்கியம்.”


“என்னைப் பொறுத்தவரை சின்ன வயசுல இருந்து பசங்களுக்கு ஒழுக்கத்தைச் சொல்லித் தந்தாலே போதும், அவங்க பாதை மாறி போக மாட்டாங்க.”


“அதுக்காக நான் என் பசங்ககிட்ட கொஞ்சம் கடுமையாத்தான் இருப்பேன். அது பெண்ணா இருந்தாலும் சரி, பையனா இருந்தாலும் சரி.”


“அது உங்க கண்ணுக்கு எல்லாம் தப்பா தெரிஞ்சா, நான் ஒன்னும் பண்ண முடியாது. நான் இப்படித்தான் இருப்பேன்.” திலோ நிமிர்வாகச் சொல்ல,


“நீங்க சொல்றது தான் சரி திலோத்தம்மா. நான் சொல்றேன் என் தங்கை மாலினி இருந்திருந்தா கூட, உங்களை மாதிரி பாவனாவை வளர்த்திருக்க மாட்டா.”


“ஒழுக்கம் அது ரொம்ப முக்கியம். எங்களுக்கு அதோட அருமை தெரியும் திலோத்தமா.. இனி எங்க அம்மா அப்படிப் பேச மாட்டாங்க. உங்க பொண்ணு அவ, உங்க இஷ்ட்டபடி வளர்த்துக்கோங்க.” முகிலன் சொல்லும் போதே, அவன் குரல் தழுதழுக்க… அர்ச்சனா அவனை இழுத்துக் கொண்டு வெளியில் சென்றாள்.


அரவிந்தன் திலோவை முறைக்க, “முகிலன் கோபமா என் மேல.” எனத் திலோ கேட்க,


“இல்லை நிஜமா இல்லை. அரவிந்தன் ரொம்ப லக்கி. நீங்க முன்னாடியே அவன் வாழ்க்கையில வந்திருக்கலாம்.” எனச் சொல்லிவிட்டு முகிலன் விடைபெற்று செல்ல, அவனோடு அவன் அம்மாவும் மனைவியும் செல்ல, அரவிந்தனும் உடன் சென்றான்.


கீழே வந்ததும், “அம்மா திலோ சொன்னது கேட்டீங்களா? ஒழுக்கம் ரொம்ப முக்கியமாம். அது உங்க பொண்ணுகிட்ட இல்லாததுனால தான். நாம அந்தப் பாடுபட்டோம். பட்டும் உங்களுக்குப் புத்தி வரலையா?” முகிலன் கேட்டதும், மாலினியின் அம்மா அழுதே விட்டார்.


“அவ அடிச்சதும் கோபம் வந்திடுச்சு, அதுதான் அப்படிப் பேசிட்டேன். ஆனா திலோ சொல்ல சொல்ல, ஐயோ ! அப்படி ஆகி இருந்தான்னு, எனக்கும் மனசு பதறத்தான் செய்யுது.”


“ஆமாம் எனக்கு என் பெண்ணை ஒழுங்கா வளர்க்க தெரியலை தான். அதனால நம்ம குடும்பம் பட்ட பாடே போதும், அவ பெண்ணாவது திலோகிட்ட ஒழுக்கமா வளரட்டும். எனக்கு இனி பாவனாவை பத்தி கவலை இல்லை.” என்றவர், கண்ணைத் துடைத்துக் கொண்டு காரில் ஏற,


“திரும்பத் திரும்ப எங்களால உனக்குப் பிரச்சனை தான் வருது அரவிந்த்.” அர்ச்சனா சொல்ல, அரவிந்தன் அவளை முறைத்தான்.


“ஏன் இப்படிப் பிரிச்சு பேசுற? நாம எப்பவும் ஒரே குடும்பம் தான். பாவனா காணாம போனதுல திலோ ரொம்பப் பயந்துட்டா, அதுதான் அப்படிப் பேசிட்டா மனசுல வச்சுக்காதீங்க.”


“அவ சரி ஆனதும், நானே அவளை வீட்டுக்கு கூடிட்டு வரேன்.” என்றான்.


“நீ உன் பொண்டாட்டிக்கு ரொம்பச் சப்போர்ட் பண்ணாத, எனக்கு அவளைப் பத்தி தெரியும். கல்யாணத்துக்கு முன்னாடி பாவனா வேணா எங்களோடவே இருக்கட்டும்ன்னு நான் சொன்னதுக்கே, திலோ அவ்வளவு கோபப்பட்டா. அப்ப இப்ப கேட்கவே வேண்டாம்.”


“அவ பெண்ணா நினைக்கும்போது, நாம பிரிச்சுப் பேசினா கஷ்ட்டமாத்தானே இருக்கும்.”


“ஆமாம், நான் பார்த்துகிறேன், நீங்க கிளம்புங்க.” என்ற அரவிந்தன், “முகிலன், நான் மாலினி பத்தி எதுவும் திலோகிட்ட சொன்னது இல்ல… அவ சாதாரணமா பேசினதை, நீங்க யோசிச்சு கஷ்ட்டபடுத்திகாதீங்க.” என்றான்.


திலோ ஒழுக்கம் ஒழுக்கம் என அழுத்தி சொன்ன விதத்தில், ஒருநிமிடம் தங்களைத்தான் குத்தி காட்டி பேசுகிறாளோ என முகிலன் நினைத்து விட்டான். அது அரவிந்தனுக்கும் புரிந்தது.


எதுவும் தெரியாமலே இவ்வளவு பேசினா, தெரிஞ்சா என நினைத்தவன், “அரவிந்தா, உன் பொண்டாட்டிகிட்ட இனிமேயும் மாலினி பத்தி எதுவும் சொல்லிடாதப்பா, தெரிஞ்சா, எல்லாரையும் உட்கார வச்சு ஒழுக்கத்தை பத்தி கிளாஸ் எடுப்பா போல…” முகிலன் சொன்னதில், எல்லோருக்குமே சிரிப்பு வந்து விட்டது.


அவர்கள் சென்றதும் அரவிந்தனுக்கு வீட்டுக்கு செல்லவே பயமாக இருந்தது. பத்திரகாளி போல இருந்தாளே… இப்ப எப்படி இருக்களோ எனப் பயந்து கொண்டே சென்றான்.

Advertisement