Advertisement

சங்கீத ஸ்வரங்கள்



அத்தியாயம் 18



“என்ன டி குழந்தையையே பார்த்திட்டு இருக்க?”


“ம்ம்… உங்களை மாதிரி அவனுக்கும் கன்னத்துல குழி விழுதான்னு பார்க்கிறேன்.”


“பிறந்து பத்து நாள் ஆன குழந்தைக்கு அதுக்குள்ளே எப்படித் திலோ குழி விழும்.”


“விழாதா…” திலோ அப்பாவியாகக் கேட்க, அரவிந்தன் புன்னகைத்தான்.


கணவன் மனைவி இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்களின் மகன் மெதுவாகக் கண் திறந்து சோம்பல் முறிக்க….


“பாருங்க பிள்ளைக்கு எவ்வளவு அலுப்புன்னு, பால் குடிக்கிற, தூங்கிடுற, இதுல என்ன டா சோம்பல் முறிக்கிற அளவுக்கு உனக்கு அலுப்பு?” எனத் திலோ மகனிடம் கேட்க,


“அது மட்டுமா, நீயும் உன் பொண்ணும் தூக்கி வச்சிக்கிறேன்னு அவனைப் போட்டு என்ன பாடு படுத்துறீங்க, அது தான் அவனுக்கு அவ்வளவு அலுப்பு.” என்றார் வைதேகி.

தன் அம்மாவை முறைத்த திலோ, “எங்களுக்குத் தூக்கி வச்சுக்க ஆசையா இருக்காதா?” என்றவள்,


“பாருங்க என்ன அழகா கொட்டாவி விடுறான்.” என வியக்க,


“உன் கண்ணே குழந்தை மேல பட்டுடும் போல இருக்கு. குழந்தையை இப்படியே பார்த்திட்டே இருக்கக் கூடாது.” வைதேகி சொல்ல,


“என்ன மா கஷ்ட்டப்பட்டுப் பெத்தது நான், என் குழந்தையை ரசிக்கக் கூடக் கூடாதா. நீங்க சொல்றது எல்லாம் கேட்க முடியாது என்றவள், “வா டா நாம உள்ள போய்டலாம். இங்க இருந்தா உன் அம்மம்மா எதாவது சொல்லிட்டே இருப்பாங்க.” என்றவள்,


குழந்தையைத் தூக்கிக்கொண்டு அறைக்குள் செல்ல, அரவிந்தனும் வைதேகியும் புன்னகைத்துக் கொண்டனர்.


திலோத்தமாவின் முழு நேரமும் குழந்தையுடன் தான். அம்மாவும் மாமியாரும் இருந்ததால்… அவளுக்கு எந்தக் கவலையும் இல்லை. காமாட்சி மகனையும் பேத்தியையும் பார்த்துக் கொள்ள, இங்கே வைதேகி மகளையும் பேரனையும் பார்த்துக் கொண்டார்.


பாவனா பள்ளியில் இருந்து வந்ததும், முகம் கழுவி உடைமாற்றி இங்கே வந்துவிடுவாள். கொஞ்ச நேரம் தம்பியை வைத்துக் கொண்டு இருப்பாள், பிறகு கீழே அவள் நண்பர்களுடன் விளையாட சென்று விடுவாள்.


விளையாடிவிட்டு மீண்டும் இங்கேதான் வருவாள். திலோத்தம்மா அவளை வீட்டுப் படம் செய்ய வைத்து, படிக்க வைத்து முடிக்கவும், காமாட்சி வந்து அழைத்துச் செல்வார்.


பாவனாவுக்குத் தன் தம்பியைப் பற்றி நிறையக் கேள்விகள் இருக்கும்.


“இவன் ஏன் படுத்திட்டே இருக்கான். எப்ப எழுந்து என்னோட விளையாடுவான். பால் மட்டும் தான் குடிப்பானா? அவனுக்குப் பசிக்குதுன்னா எப்படிச் சொல்வான்?”


அந்தக் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல அரவிந்தனுக்குதான் பொறுமை இருக்கும். ஏனோதானோ எனப் பதில் சொல்லாமல், ஒவ்வொன்றுக்கும் சரியான விளக்கம் வேறு கொடுப்பான்.


எப்படித்தான் இவ்வளவு பொறுமையோ எனத் தன் கணவனை நினைத்து, திலோ வியந்து தான் போவாள்.


பதினாறாம் நாள் வீட்டிலேயே வைத்துப் புண்ணியாதானம் செய்தனர். மூன்று மாதத்தில் எல்லோரையும் அழைத்துப் பெயர் சூட்டுவதாக இருந்தது.


குழந்தை பிறந்த மறுநாள் வித்யாவும் அவள் கணவரும் மட்டும் வந்து குழந்தையைப் பார்த்துவிட்டு சென்றிருந்தனர்.


“அம்மா ஒரு மாசம் ஆகிடுச்சு இல்ல… நான் அங்க போகட்டுமா…” திலோ மெதுவாகத் தன் அம்மாவிடம் கேட்டு பார்க்க,


“குழந்தை பெத்துக்கிறது என்ன விளையாட்டு விஷயமா. மூன்னு மாசமாவது ரெஸ்ட் எடுக்கணும். நீ அங்க போனா இங்க இருக்கிற மாதிரி அங்க இருக்க முடியாது. அதோட மூன்னு மாசமாவது புருஷன் பொண்டாட்டி சேரவே கூடாது. அங்க போனா, நீங்க ஒரே ரூம்ல தான் தூங்குவீங்க. அதனால நீ இங்கயே இரு.”


“அம்மா, உங்களுக்கு உங்க மாப்பிள்ளையைப் பத்தி தெரியாது. அவரே ஒரு ரூல்ஸ் ராமானுஜம், பின்ன ஏன்மா பயப்படுறீங்க?”


“எனக்கு அவரை நினைச்சுப் பயம் இல்லை. உன்னை நினைச்சுதான் பயம்.” என வைதேகி சொல்லிவிட்டு வெளியே சொல்ல, திலோ முகம் அஷ்ட்டகோணல் ஆனது.


“வாயை வச்சிட்டு சும்மா இருந்திருக்கலாம். நீயே உன்னை இப்படி டேமேஜ் பண்ணிக்கிறியே திலோ.” என அவளே அவளைக் கேட்டுக் கொண்டாள்.


ஒரு மாதம் முடிந்து விட்டதால், இப்போது திலோவும் சில வேலைகள் செய்ய ஆரம்பித்தாள். வைதேகி குழந்தையைக் குளிப்பாட்டி மட்டும் கொடுக்க, திலோ தான் மகனை துடைத்து பவுடர் போட்டு உடை அணிவித்து விடுவாள். பாவனா இருந்தால்… அவளும் சேர்ந்து செய்வாள்.


திலோ மகனை அழவே விட மாட்டாள். அவள் அழும் முன் பாலைக் கொடுத்து விடுவாள்.


“ஏன் டி அவன் கண்ணைத் திறந்ததும் பாலைக் கொடுக்கிற, கொஞ்சம் அவனை நல்லத்தான் எழுந்துக்க விடேன்.” என வைதேகி கூடச் சொல்லுவார். ஆனால் திலோ கேட்கமாட்டாள்.


ஒரு முறை அப்படிக் கொடுக்கும்போது, குழத்தைக்கு வாயில் மூக்கில் எல்லாம் பால் வெளியே வந்துவிட, திலோ பயந்து போனாள். காமாட்சியும் அப்போது அங்குதான் இருந்தார்.


அவர் குழந்தையை வாங்கித் தோளில் போட்டுக் கொண்டார். குழந்தை எப்போதும் போலத்தான் இருந்தான். திலோதான் பயந்து விட்டாள். உடனே அர்ச்சனாவுக்கு அழைத்துக் கேட்டாள்.


“ஒன்னும் பயப்பட வேண்டாம். அவன் நல்லா பசிச்சு அழுததும் பால் கொடு. திரும்ப அப்படியானா போன் பண்ணு.” என வைத்து விட்டாள்.


திலோ அடுத்து அரவிந்தனுக்கு வேறு அழைத்துச் சொல்லி வருத்தப்பட, “அவன் நல்லாதானே இருக்கான், அப்ப ஒன்னும் பயமில்லை. நான் கொஞ்ச நேரத்தில் வரேன்.” எனச் சொன்னது போல, வீட்டுக்கு வந்தும் விட்டான்.


காமாட்சி கொஞ்ச நேரம் பேரனை வைத்துக் கொண்டு நடந்தவர், பிறகு தரையில் மெத்தை விரித்து அதில் அவனைப் படுக்க வைத்தார். குழந்தை கைகாலை நன்றாக ஆட்ட, “அவனுக்கு ஜீரணம் ஆகாம இருந்திருக்கு, அதுல இன்னும் பால் குடிச்சதும் அப்படி ஆகிடுச்சு.”


“நல்லா கை காலை அசைக்கட்டும், அப்புறம் பசிச்சு அழுததும் பால் கொடு.” என்றார்.


“அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்ன்னு பழமொழியே இருக்கு, இவ எங்க சொன்னா கேட்கிறா.” என வைதேகி வேறு மகளை வறுத்து எடுக்க,

திலோத்தமா முகம் வாடிப் போனாள். விட்டால் அழுது விடுபவள் போல இருந்த மனைவியைப் பார்த்த அரவிந்தன், “ அவளுக்குத் தெரியலை பாவம் என்ன பண்ணுவா? இனிமே கவனமா இருப்பா.” என்றான்.


அன்று அவள் மிகவும் பயந்து போனதால்… அரவிந்தன் இரவு அங்கேயே தங்கினான்.


இரவ மகன் பால் குடித்து முடித்ததும், அரவிந்தன் அவனைத் தோளில் போட்டுக் கொண்டு சிறிது நேரம் நடந்தான். மகன் உறங்கியதும் அவனைக் கட்டிலில் படுக்க வைத்தான்.


திரும்ப அந்த மாதிரி ஆகி விடுமோ என்ற பயத்தில் திலோ மகனையே பார்த்துக் கொண்டு இருக்க,


“ஏய் நீ இப்ப எதுக்கு இப்படி இருக்க?” அரவிந்த கேட்க, திலோ தன் பயத்தைச் சொன்னாள். இப்ப பால் குடிச்சு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகிடுச்சு. இனிமே அப்படி ஆகாது ஒழுங்கா படு.” என்றான்.


திலோ முகம் தெளியாமல் இருக்க, மகனை தூக்கி தொட்டிலில் போட்டவன், விடி விளக்கை எரியவிட்டுக் கட்டிலில் மனைவியின் அருகே படுத்து அவளைத் தன் பக்கம் திருப்பினான்.


“நீங்க முதல்ல கையை எடுங்க. எங்க அம்மா என்னவோ நீங்க ரொம்ப உத்தமர், நான்தான் உங்க பின்னாடி மயங்கி போய்ச் சுத்துற மாதிரி நினைக்கிறாங்க.”


“அது உண்மை தான” என அரவிந்தன் புன்னகைக்க, திலோ அவனை முதலில் முறைத்தாள்.

பிறகு அவளே, “ஆனாலும் எல்லோருக்கும் தெரியிற மாதிரியா நான் இருக்கேன்.” என்றாள்.


அரவிந்தன் பதில் சொல்லாமல் சிரிக்க, “சிரிக்காம சொல்லுங்க. அப்படியா?”  

“இப்ப தெரிஞ்சு என்ன பண்ணப் போற?”


“ம்ம்… இனிமே உங்க கிட்ட இருந்து தள்ளி இருக்கப் போறேன்.”


“அது உன்னால முடியாது டி செல்லக் குட்டி.” மனைவியைப் பற்றித் தெரிந்தவனாக அரவிந்தன் சொல்ல, “ஆமாம் என்னால முடியாது தான். யார் என்ன நினைச்சாலும் பரவாயில்லை.” என்றவளை தன்னோடு சேர்த்து அனைத்துக் கொண்டான்.


கணவன் மனைவி என்ன அன்னியோன்யமாக இருந்தாலும், சில நேரங்களில் பிரச்சனை என்பது வந்துதான் தீரும். சண்டை சச்சரவு இல்லாத குடும்பங்கள் ஏது? கணவன் மனைவி இடையே சரியான புரிதல் இருந்தால்….எதையும் கடந்து வர முடியும்.


சிறிது நேரம் சென்று விலகியவன், “குழந்தை பெத்ததும் இன்னும் அழகா இருக்க திலோ, மெத்து மெத்துன்னு வேற இருக்க டி… உன்னை என்னென்னவோ பண்ணனும்ன்னு தோணுதே… ஆனா ஒன்னும் பண்ண முடியாதே.” என அரவிந்தன் மனைவியை ஏக்க பார்வை பார்த்து வைக்க,


“இதுக்குதான் எங்க அம்மா மூன்னு மாசம் வரை ஒரே ரூம்ல படுக்க வேண்டாம்ன்னு சொன்னாங்க போல…”  என்றாள் திலோ.


“ம்ம்…. சரி, நாம பேசிட்டு இருக்கலாம்.”

“அம்மா உன்னை ஊருக்கு கூடிட்டு போகணும்ன்னு நினைக்கிறாங்க திலோ. மூன்னு மாசம் முடிஞ்சதும், நீயும் பசங்களும் போயிட்டு வர்றீங்களா.”


“நானே உங்களைக் கொண்டு போய் விட்டுட்டு, நானே திரும்பக் கூப்பிட வரேன்.”


“ஆனா எனக்கு எதுவும் இன்னும் தனியா பண்ணத் தெரியாதே அரவிந்த்.”


“அம்மா பார்த்துப்பாங்க. அதோட பக்கத்தில சித்தி, அத்தை எல்லாம் இருக்காங்க. உனக்குக் கவலையே வேண்டாம். நீ போய் ஜாலியா இருந்திட்டு வரலாம்.”


“அப்ப ஓகே. எனக்கு உங்க ஊர் ரொம்பப் பிடிக்கும். அங்க போய் இருக்கிறது எனக்குச் சந்தோஷம்தான்.”


“அங்க எல்லாம் நீ ஒரு வாரம் இருப்ப, அதுக்கு மேல உன்னால இருக்க முடியாது.”


“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. நாம இங்க இருந்து என்ன பண்ணறோம் சொல்லுங்க. ஒரே மாதிரி ஓடிட்டு இருக்கோம். முதல்ல படிப்பு பின்னாடி, அப்புறம் வேலை பின்னாடி. வாழ்க்கையை நின்னு நிதானமா அனுபவிக்கிறோமா கிடையாது.”


“ஆனா அதே அங்க பாருங்க, அவங்ககிட்ட பணம் மட்டும் தான் இல்லை. மத்தபடி வாழ்க்கையை அனுபவிச்சு வாழறாங்க.”


“விரும்பினதை சாப்பிடுறாங்க, நினைச்சதைப் பேசுறாங்க, எதாவது விஷேசம்ன்னா ஒன்னு கூடி சந்தோஷமா இருக்காங்க. ஆனா அதே நாம இங்க இருந்து ஒரு விசேஷத்துக்கும் போகக் கூட முடியலை. எல்லாத்தையும் மிஸ் பண்றோம்.”


“நாம என்ன அனுபவிக்கிறோம் சொல்லுங்க, மால்ல ஒரு சினிமா அப்புறம் ஷாப்பிங் அதையும் விட்டா ஹோட்டல். இதுக்குள்ளதான் சுத்தி வரோம்.”


“வாழ்க்கையில நிறைய இழக்கிறோம் அரவிந்த்.”


“சிட்டி லைப் வேற வில்லேஜ் லைப் வேற? இங்க இருக்க மாதிரி படிப்பெல்லாம் அங்க இருக்காது.”


“நீங்க அந்தச் சின்ன ஊர்ல படிச்சு டாக்டர் ஆகலையா?”


“நான் படிச்ச போது இருந்த நிலைமை வேற, இப்ப வேற? இனி கிராமத்துல இருக்கப் பசங்க டாக்டர் ஆகணும்ன்னு ஆசைப்படுறது கூடக் கனவாவே போயிடும் போல…”


“தகுதி தேர்வு தப்புன்னு சொல்றீங்களா?”


“தப்புன்னு சொல்லலை… வசதி இருக்கவன் கோச்சிங் போவான், வசதி இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க?”


“முதல்ல கல்வி எல்லோருக்கும் ஒரே மாதிரி கிடைக்குதா? அதைக் கொடுக்காம பரீட்சை மட்டும் ஒரே மாதிரி வச்சா?”


“நீங்க சொல்றது சரிதான்.”


“நம்ம நாட்டில நிறைய மாறணும். அதுக்கு அரசாங்கமும், அதிகாரிகளும் முதல்ல சரியா இருக்கணும்.”


“ஒரு மாவட்டத்துக்கு ஒதுக்கப்படுற நிதியை கூட, சரியான முறையில உபயோகிக்காம வீணடிக்கிறாங்க. தன்னோட லாபத்தைத் தான் பார்க்கிறாங்களே தவிர, தன்னுடைய பதவியையும் அதிகாரத்தையும் வச்சு மக்களுக்கு என்ன நல்லது செய்யலாம்ன்னு யோசிக்கிறதே இல்லை.”


“நண்டு கதை மாதிரித்தான். ஒரு நண்டு வெளிய வர முயற்சி பண்ணா, மத்த நண்டு அதை இழுத்து விடுமாம். நல்லது செய்யணும்ன்னு நினைக்கிறவங்களையும், எதாவது பிரச்சனையைக் கிளப்பிப் பண்ண விட மாட்றாங்க.”


“இந்த மாதிரி ஆளுங்களை வச்சிட்டு என்ன செய்றது சொல்லு?” அரவிந்தன் தன் ஆதங்கத்தை கொட்ட,


“நம்ம மாதிரி ஆளுங்க வாயை மூடிட்டு இருக்கோம். அதுதான் அரவிந்த் எல்லாத்துக்கும் காரணம். கேள்வி கேட்கணும், அப்பத்தான் ஒரு பயம் இருக்கும். நாமதான் கேள்வியே கேட்கிறது இல்லையே, அதுதான் அவங்களுக்குப் பயம் இல்லை.”


“நீ சொல்றது சரிதான். நேரடியா பாதிக்காத வரை, நாம எதையும் பெரிசா எடுத்துகிறது இல்லை. ரெண்டு நாள் பேசிட்டு மறந்திடுறோம்.”


“எல்லோரையும் மாத்த முடியாது. ஆனா நாம சுத்தி இருக்கிறவங்களையாவது மாத்தனும், தப்புப் பண்ணா கேள்வி கேட்கணும். லஞ்சம் வாங்கிறது மட்டும் தப்பு இல்லை. கொடுக்கிறதும் தப்புதான்.” திலோ சொல்ல,


“நாம சில விஷயங்கள்ள உறுதியா இருந்தா… கண்டிப்பா சில மாற்றங்கள் வரும்.” என்றான் அரவிந்தன். இருவரும் பேசிக் கொண்டிருந்தாலும் அடிக்கடி மகனையும் பார்த்துக் கொண்டனர்.
“சரி இப்ப நம்மைப் பத்தி பேசலாம். இப்ப நீ என்ன சொல்ற திலோ? நாம ஊருக்கு போகலாம்ன்னு சொல்றியா?”


“நான் அப்படிச் சொல்லலை… எனக்கும் சரியா தெரியலை அரவிந்த். ஆனா அங்கேயே இல்லைனாலும் பக்கத்திலாவது அடிக்கடி போயிட்டு வர மாதிரி இருந்தா நல்லா இருக்கும்.”


“உங்க அம்மா இங்கயே பழகிட்டாங்க. அவங்க வருவாங்களா… அவங்களை இங்கே தனியாவும் விட முடியாது.”


“அவங்களுக்கு நான்தான் முக்கியம், நான் எங்கே இருக்கேனோ, அங்கே அவங்களும் இருப்பாங்க.”


“நீ சொல்றது எனக்கும் நல்லா இருக்கும்ன்னு தான் தோணுது. ஆனா அது எவ்வளவு சீக்கிரம் நடக்கும்ன்னு தெரியலை.”


இருவரும் பேசியபடி உறங்கி போனார்கள். அதன் பிறகு நாட்கள் இனிமையாகவே சென்றது. மாலினியின் அம்மா வராத வரை. பாவனா காணாமல் போகாதவரை, திலோ அவளை அடிக்காமல் இருந்த வரை.


இதில் அரவிந்தன் நிலைதான் பரிதாபம். மனைவிக்குப் பேசுவதா அல்லது மகளுக்குப் பேசுவதா எனப் புரியாமல் நின்றான்.

Advertisement