Advertisement

சங்கீத ஸ்வரங்கள்



அத்தியாயம் 17



அடுத்த இரு நாட்கள் உறவினர்களின் வீட்டிற்குச் சென்றனர். ஒவ்வொரு வேளை உணவும் ஒவ்வொருவர் வீட்டில் உண்டனர். ரயில் ஏறுவதற்கு முன்பு, கோயம்புத்தூரில் இருந்த பூரணி வீட்டிற்கும் சென்று விட்டு வந்தனர். அடுத்த முறை இன்னும் அதிக நாட்கள் வருவதாகச் சொல்லி….சதோஷமாக எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டனர்.


சென்னை வந்ததும், மீண்டும் இயல்பு வாழ்க்கை தொடங்கியது. அந்த வார இறுதியில். மறுநாள் இருவருக்கும் விடுமுறை என்பதால்… அரவிந்தனும் திலோவும் இரவு உணவுக்குப் பிறகு ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.


“ஊர்ல எல்லார் கூடவும் நல்லா இருந்தது இல்ல… திரும்ப எப்ப லீவ் கிடைச்சு எப்ப போவோமா. அங்க பக்கத்தில இருந்தா ஊருக்கு அடிக்கடி போய்ட்டு வரலாம். இங்க இவ்வளவு தூரம் இருந்திட்டு எங்கையும் போகமுடியலை.” திலோ சொல்ல, அரவிந்தனும் அதையே நினைத்தான்.  


நாட்கள் வேகமாக செல்ல, அன்று காலையில் சமையல் செய்யும் பெண்மணி சாம்பார் செய்யப் பருப்பை வேக வைக்க… சமையல் அறைக்கு வந்த திலோவுக்கு, அந்த நெடி பிடிக்காமல், குமட்டிக் கொண்டு வர… அங்கே இருக்க முடியாமல் அறைக்குள் சென்றாள்.


பாவனாவை கிளப்பிக் கொண்டிருந்த அரவிந்தன் என்ன என்றான்.

“தெரியலை… ஒருமாதிரி குமட்டுது.” என்றவள், கல்லூரிக்கு செல்ல தயாரானாள். அதன் பிறகு அவள் நன்றாக இருக்க… அரவிந்தனும் பாவனாவை பள்ளிக்குக் கிளப்பிப் பஸ் ஏற்றிவிட்டு வந்தான்.


சமையல் பெண்மணி சென்றிருக்க…. சாதத்தில் சாம்பாரை ஊற்றி வாயின் அருகே கொண்டு சென்ற திலோவுக்கு, மீண்டும் குமட்டல் எடுக்க… வேகமாக எழுந்து சென்று வாந்தி எடுக்க, அரவிந்தன் சென்று அவளைத் தாங்கிக் கொண்டான்.


காலையில் குடித்த காபி வெளியே வந்திருக்க… தலை வேறு பாரமாக இருக்க… சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டாள்.


“நல்லாதானே இருந்த திடிர்ன்னு என்ன ஆச்சு?”


ஏற்கனவே களைப்பில் இருந்த திலோவுக்குக் கோபம் வந்தது. “நீங்க தான டாக்டர் என்னைக் கேட்கிறீங்க? என எரிந்து விழுந்தாள்.


“இப்ப எல்லாம் உனக்கு ரொம்பக் கோபம் வருது இல்ல..” என்றவன், அவள் நாடியை பிடித்துப் பார்த்தான்.


திலோ அவனை முறைக்க… “ஹே… பெண்களுக்கு ஹார்மனலஸ் மாறிட்டே இருக்கும். பிரியட்ஸ் டைம் இருந்தா கூடக் கொஞ்சம் எரிச்சலா இருக்கும். அதுதான் கேட்டேன். உனக்கு இப்ப பிரியட்ஸ் டைம்மா?”


“ஆமாம், ஆனா இன்னும் வரலை.”


“எப்பவும் உனக்குச் சரியா வருமா… இல்லைனா மாத்தி மாத்தி இருக்குமா?”


“ஐயோ ! நீங்க ஏன் இவ்வளவு கேள்வி கேட்கிறீங்க?”


“கேட்டா பதில் சொல்லு.”


“எனக்கு எப்பவும் ஒரே மாதிரி தான், இருபத்தியெட்டு நாள்ல வந்திடும். இந்தத் தடவைதான் மேல ஒரு வாரம் ஆகி இருக்கு.”


அவள் சொன்ன பதிலில் அரவிந்தனின் முகம் மலர…. அவன் முகம் பார்த்த திலோவுக்கும் புரிய ஆரம்பித்தது.


திருமணம் ஆகி இரண்டு மாதங்கள் வழக்கம் போலவே அவளுக்கு மாதவிடாய் வந்திருக்க…. அதனால் பெரிய எதிர்ப்பார்ப்பு எதையும் இருவருமே வைத்திருக்கவில்லை.


“ஹே… நமக்கு ஜூனியர் வரப் போகுதா?” அரவிந்தன் சந்தோஷமாகச் சொல்ல, திலோ ஆர்வம் பாதியும், தயக்கம் மீதியுமாக அவன் முகம் பார்த்தவள், “அரவிந்த், இது நிஜமாவே குழந்தை தான…” என்றவள், அவன் இடையைக் கட்டிக்கொண்டு, அவன் மார்பில் முகம் சாய்த்தாள்.


அவள் உச்சியில் இதழ் பதித்தவன், “எனக்கு அப்படித்தான் தோணுது. நாம எதுக்கும் வீட்லயே டெஸ்ட் பண்ணி பார்த்திடலாம்.” என்றான்.


“ம்ம்…”


“நீ சமத்தா எதாவது சாப்பிடுவியாம். நான் மருந்து கடை வரை போயிட்டு வரேன்.” என்றவன், உள்ளே சென்று தனது பர்சை எடுத்துக் கொண்டு சென்றான்.
அவன் திரும்பி வந்த போது, சாதத்தில் ரசம் ஊற்றி திலோ சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள்.


அவள் சாப்பிட்டு முடித்து அவன் சொன்னது மாதிரி செய்து பார்க்க… குழந்தை என்று உறுதி ஆனது. இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.


அரவிந்தன் எத்தனை முத்தம் திலோவுக்குக் கொடுத்தான், திலோ பதிலுக்கு எத்தனை முத்தம் அவனுக்குக் கொடுத்தாள் எனக் கணக்கே இல்லை. வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்லும், அந்த முக்கியமான தருணத்தை இருவருமே பூரணமாக அனுபவித்தனர்.


“நான் இன்னைக்குக் காலேஜ்க்கு லீவ் சொல்லிட்டேன்.” திலோ சொல்ல,


“நான் இன்னைக்கு லீவ் எடுக்க முடியாது. ஆனா சயந்திரம் சீக்கிரம் வரேன்.” என்ற அரவிந்தன் மருத்துவமனைக்குச் செல்லும் முன், திலோவை அவள் அம்மா பொறுப்பில் விட்டுச் சென்றான்.


திடிரென்று மகள் வந்து நின்றதும், வைதேகிக்கு ஒன்றும் புரியவில்லை.
“ஏன் டி காலேஜ் போகலை.?” என்றார்.


எப்படி இந்த விஷயத்தைச் சொல்வது என யோசித்த திலோ, “எனக்கு ஒரே வாந்தி மா..” என்றாள்.


வருத்தப்படுவார் எனப் பார்த்தால்… “இதுக்குதான் நான் உன்னோட சமையல் சாப்பிடுறது இல்லை.” என வைதேகி சொல்ல… அரவிந்தன் அடக்க முடியாமல் சிரித்து விட்டான்.


“போ… நான் உனக்கு ஒரு சந்தோஷமான விஷயம் சொல்ல வந்தேன். இப்ப சொல்ல மாட்டேன் போ…” எனத் திலோ முறுக்க…


வாந்தி, சந்தோஷமான விஷயம் இரண்டையும் சேர்த்து பார்த்த வைதேகிக்கு புரிந்து விட்டது.


“உண்டாகி இருக்கியா?” என்றவர், தம்பதிகளின் மகிழ்ச்சியான முகத்தைப் பார்த்து, அதுதான் விஷயம் எனப் புரிந்து கொண்டவர், உள்ளே சென்று இனிப்பு எடுத்து வந்து இருவருக்கும் கொடுத்தார்.


முதலில் மருமகனுக்கு இனிப்பைக் கொடுத்தவர், அடுத்து மகளிடம் “உன்னை மாதிரி வாலா இல்லாம… என் மருமகன் மாதிரி அடக்கமா, அமைதியா, நல்ல குணமான குழந்தை பிறக்கட்டும்.” என அவள் வாயில் இனிப்பை ஊட்ட… திலோ கோபிக்கப் போகிறாள் என நினைத்தால்… சரி மா என்றாள் மகிழ்ச்சியாக.


“ரெஸ்ட் எடு.” என்ற அரவிந்தன் விடைபெற்று செல்ல… அவளால் எங்கே ஓய்வு எடுக்க முடிந்தது, எதைச் சாப்பிட்டாலும் வாந்தி எடுத்தாள்.


ஒரு நாளிலேயே அவள் சுருண்டு விட… மாலையில் வந்து மனைவியைப் பார்த்த அரவிந்தனும் கவலைப் பட்டான்.


அரவிந்த அர்ச்சனாவுக்குக் கைபேசியில் அழைத்துச் சொல்ல.. அவள் உடனே புவனோடு இங்கே வந்து விட்டாள். அவளுக்கு மிகவும் மகிழ்ச்சி.


“சில பேருக்கு மசக்கை படுத்தித் தான் எடுக்கும். ஒன்னும் பண்ண முடியாது. மாத்திரை போடலாம் தான், ஆனா அவ்வளவு நல்லது இல்லை. ரொம்ப முடியலைனா மட்டும் போடு.” என வாந்திக்கு மாத்திரை எழுதி கொடுத்தாள்.


“வாந்தி வருதுன்னு சாப்பிடாம இருக்காத. அடுத்த வாரம் ஹாஸ்பிடல் வாங்க, ஸ்கேன் பண்ணிடலாம்.” எனச் சொல்லிவிட்டு சென்றாள்.


திலோ மாத்திரை எல்லம் போட்டுக் கொள்ளவில்லை. அப்படியே சமாளித்தாள். வாந்தி இருந்ததால் வேலைக்கும் போக முடியவில்லை. விடுமுறை எடுத்து வீட்டில் இருந்தாள்.


அரவிந்தனும் முடிந்தவரை மருத்துவமனையில் இருந்து சீக்கிரம் வந்து அவளைப் பார்த்துக் கொண்டான். திலோவால் சாப்பிட முடியவில்லை என்று அவனும் பசிக்கு மட்டுமே சாப்பிட…


“நீங்க ஏங்க இப்படி இருக்கீங்க?” திலோ கேட்க,


“நீ சாப்பிடாத போது, நான் மட்டும் ருசியா எப்படிச் சாப்பிடுறது. என்னால உன்னோட வேதனையோ, வலியோ வாங்கிக்க முடியாது. இதாவது பண்றேனே.” என்றான்.


இவனுக்காகவாவது தனக்குச் சீக்கிரம் சரி அக வேண்டும் எனத் திலோ நினைத்துக் கொண்டாள். பாவனாவுமே முதலில் பயந்து போய்த் தான் இருந்தாள். கொஞ்ச நாளில் சரி ஆகி விடும் என்றதும் சமாதானமாகி விட்டாள்.


“எப்ப பாப்பா வரும்?” என அவள் அடிக்கடி கேட்க,


“இன்னும் நிறைய டைம் இருக்கு. வந்ததும் நான் உன்கிட்ட கொடுத்திடுறேன், நீயே வளர்த்துக்கோ.” என்றாள் திலோ.


“அம்மா வயித்துக்குள்ள இருக்கிற பாப்பா எப்படிப் பா வெளிய வரும்.” பாவனா அரவிந்தனிடம் கேட்க,


“அதுக்கு ஒரு வழி இருக்கு டா… அந்தப் பக்கமா தான் வரணும். சில நேரம் அப்படி வரலைனா… வயித்துல கொஞ்சமா வெட்டி தான் வெளிய எடுப்பாங்க. நீ பெரிசாகும் போது உனக்குப் புரியும்.” என அவன் மருத்துவனாகப் பதில் சொல்ல… திலோ அவனை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.


“குழந்தைங்க கிட்ட பொய்யான காரணங்கள் சொல்லக் கூடாது. முடிஞ்ச வரை அவங்களுக்குப் புரியற மாதிரி உண்மைதான் சொல்லணும்.” என்றான். அதுவும் சரிதான் என திலோ நினைத்தாள்.


மூன்று மாதங்கள் முடிந்த பிறகுதான் திலோவுக்கு வாந்தி நின்றது. அதன் பிறகும் அவளை வேலைக்குச் செல்ல வைதேகி விடவில்லை.


“அப்படியெல்லாம் நீ கஷ்ட்டப்பட்டு வேலைக்குப் போக வேண்டாம். ஒன்னுக்கு இப்ப ரெண்டு குழந்தை ஆச்சு. பசங்க வளர்ந்து பெரிசானதும் போ…” என்றுவிட்டார்.


அரவிந்தன் மனைவியைக் கண்ணுக்குள் வைத்து தாங்கினாலும், சில விஷயங்களில் கெடு பிடியாகவே இருப்பான். தினமும் காலையில் அவளை அழைத்துக் கொண்டு சிறிது தூரம் நடந்துவிட்டு வருவது, ஒரேடியாகத் திலோ அதிகம் உண்ணாமல் பார்த்துக் கொள்வது.


அதே போல் வீட்டிலேயும் அவள் தரையில் தான் உட்கார வேண்டும். கீழ உட்கார்ந்து எழுந்திரு, அதுவே நல்ல பயிற்சி என்பான். சில உடற்பயிற்சி எல்லாம் சொல்லிக் கொடுத்து அவளைத் தினமும் செய்ய வைப்பான்.

எப்படியாவது மனைவிக்குச் சுகப் பிரசவம் ஆக வேண்டும் என நினைத்தான்.


அரவிந்தன் இருக்கும் நேரம் எல்லாவற்றையும் சிரத்தையாகச் செய்பவள், அவன் வீட்டில் இல்லையென்றால்… எதையும் செய்ய மாட்டாள்.


“பாவனா இவ பண்றதை நீ உங்க அப்பாகிட்ட சொல்லு.” வைதேகி சொன்னாலும், பாவனா ஒருநாளும் திலோவை காட்டிக் கொடுக்க மாட்டாள்.


வளைக்காப்பை ஊரில் வைக்க வேண்டும் எனத் திலோ ஆசைப்பட, “அவ்வளவு தூரம் போகனுமா, இங்கயே வைக்கலாமே.” என்ற வைதேகியின் பேச்சையும்,

 

“ரெண்டாவது குழந்தை தானே.. வீட்டு வரை செஞ்சா போதுமே…” என்ற காமாட்சியின் பேச்சையும், அரவிந்தன் கேட்கவே இல்லை. திலோ ஆசைப்பட்டபடி தான் செய்வேன் எனச் சொல்லிவிட்டான்.


ஏழாம் மாதம் அவர்களின் ஊரில், எல்லோரையும் அழைத்து. மண்டபத்தில் திலோவின் வளைகாப்பை, அரவிந்தன் சிறப்பாகச் செய்தான்.


மீண்டும் சென்னைக்கு வந்த பிறகு, ஒருநாள் இரவு கணவனும் மனைவியும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அரவிந்தன் திலோவிடம், “நீ சந்தோஷமா இருக்கியா திலோ?” எனக் கேட்டான்.


“ஏன் இப்ப உங்களுக்கு இந்தத் திடீர் சந்தேகம்?”


“கேட்டதுக்குப் பதில் சொல்லு?”


“நிஜமாவே எனக்கு உங்களை நினைச்சா ஆச்சர்யம் தான் அரவிந்த். நீங்க கல்யாணத்துக்கு ஓகே சொல்லும் போது கூட , முழு மனசா சொல்லலை. ஆனா கல்யாணம் பண்ண பிறகு என்னோட முழு மனசோட தான் வாழ்ந்தீங்க.”


“உங்களுக்கு இது ரெண்டாவது கல்யாணம் தான். ஆனா அதுக்காக என்னை எப்போதும் நீங்க அலட்சியமா நடத்தினதே இல்லை.”


“நான் என் கூட வேலை பார்க்கிற லேடீஸ் சொல்லி கேட்டிருக்கேன். அவரைப் பத்தி தான் யோசிப்பார், என்னைப் பத்தி யோசிக்கவே மாட்டார். எனக்கும் ஒரு மனசு இருக்கு, ஆசை இருக்குன்னு எல்லாம் நினைக்கவே மாட்டாருன்னு சொல்லி புலம்புவாங்க.”


“நான் கூட நினைச்சு இருக்கேன். இது உங்களுக்கு ரெண்டாவது கல்யாணம். அதனால நாம நிறைய விஷயத்துல விட்டுக் கொடுக்க வேண்டியது வரும்ன்னு.”


“என் பிரண்ட்ஸ் கூடச் சொன்னாங்க. ஏன் நீ இப்படிக் கல்யாணம் பண்ற? என்ன இருந்தாலும், இது உனக்கு முதல் கல்யாணம் மாதிரி பீல் இருக்காதுன்னு சொன்னங்க. ஆனா நான் அப்படி எதையும் இழந்ததா நினைக்கவே இல்லை.”


“நீங்க ஒருநாளும் எனக்கு ரெண்டாவது கல்யாணம், எதோ கல்யாணம் பண்ணிக்கனுமேன்னு பண்ணிகிட்டேன், வாழனுமேன்னு வாழறேன், அந்த மாதிரி நீங்க இருந்ததே இல்லை.”


“நீங்க எப்பவும் என்னை ஸ்பெஷல்லா தான் உணர வச்சு இருக்கீங்க. என்னோட பக்கம் இருக்கும் ஆசைகளையும், தேவைகளையும், நீங்க உணர்ந்து தான் எப்பவும் நடந்துக்கறீங்க.”


“இனிமே நான் சந்தோஷமா இருக்கேனான்னு கேட்காதீங்க. நான் ரொம்பச் சந்தோஷமா இருக்கேன்.” என்றாள் திலோ நிறைவாக.


ஒரு வேளை மாலினிக்கு அவனிடம் உண்மையான அன்பு இருந்து, அவர்கள் இருவரும் மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்து இருந்திருந்தால்….பிறகு சந்தர்ப்ப சூழ்நிலையால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு இருந்தால்… ஒருவேளை அரவிந்தனும் மற்றவர்கள் போலத்தான் இருந்திருப்பான்.


அவனோ அன்புக்காக ஏங்கி போய் இருந்தவன், திலோ மாதிரி அன்பு காட்டும் மனைவி கிடைத்தால்… அவளைக் கண்ணுக்குள் வைத்து தாங்க மாட்டானா என்ன?


திலோ தன்னிடம் வெளிப்படையாக இருக்கிறாள். நாம் அப்படி இருக்கிறோமா… அவள் எதோ என்னை மனதில் பெரிய அளவில் வைத்துக் கொண்டாடுகிறாள். ஆனால் தான் அவளிடம் உண்மையாக இல்லையோ… என அரவிந்தன் மனதிற்குள் தன்னையே வருத்திக்கொள்ள அராம்பித்தான்.


அதன் பிறகு வந்த நாட்களில், அவன் உற்சாகம் குறைந்தே காணப்பட்டான். சிரிக்கும் போது கூட, அந்தச் சிரிப்பு அவன் கண்களை எட்டவில்லை. எந்நேரமும் எதோ யோசனையிலேயே இருந்தான்.


அரவிந்தனின் நடவடிக்கையில், என்ன ஆச்சு இவங்களுக்கு எனத் திலோ குழம்பிப் போனாள். இன்னும் பிரசவத்திற்குச் சில நாட்களே இருந்த நிலையில்…


“நீங்க ஏன் இப்படி இருக்கீங்க? எனக்குக் கஷ்ட்டமா இருக்கு. என்னால நிம்மதியாவே இருக்க முடியலை.” திலோ சொல்ல…


“உன்கிட்ட ஒன்னு சொல்லணும். நான் என்னோட முதல் திருமணத்தில தோத்துப் போயிட்டேன் திலோ.” என்றவன்,


“மாலினி இறந்து போறதுக்கு முன்னாடியே என்னை வேண்டாம், டிவோர்ஸ் பண்ணிக்கலாம்ன்னு சொல்லி இருந்தா? நான்தான் டிவர்ஸ் கொடுக்க ஒத்துக்கலை… அதுக்குள்ள அவளுக்கு விபத்து நடந்து இந்த மாதிரி ஆகிடுச்சு.” என்றான்.


“ஹே… இத்தனை நாள் இதைத் தான் மனசுக்குள்ள வச்சு குழப்பிட்டு இருந்தீங்களா?” திலோ கேட்க, அரவிந்தன் ஆமாம் என்றான். அப்போது கூட மாலியை பற்றி வேறு எதுவும் அவன் சொல்லவில்லை. அதை அவன் சொல்லவும் மாட்டான்.


“நீங்க என்னோட அரவிந்த், அதனாலதான் அவங்க உங்களை வேண்டாம்ன்னு சொல்லி இருக்காங்க. ஒருவேளை மாலினி உயிரோட இருந்து, நீங்க டிவேர்ஸ் பண்ணி இருந்தாலும், நான் உங்களைத் தான் கல்யாணம் பண்ணி இருப்பேன்.”


“மாலினி டைவேர்ஸ் கேட்டத்துக்கு, என் மேல கூடத் தப்பு இருக்கலாம்ன்னு உனக்குத் தோணலையா?”


“அவங்க டைவர்ஸ் கேட்டதுக்கு, நீங்க கண்டிப்பா காரணமா இருக்க மாட்டீங்க. எனக்கு உங்களைப் பத்தி தெரியும்.”


“நீங்க மாலினியை பத்தி என்கிட்டே சொன்னது இல்லை. ஆனா வித்யா அண்ணி, அர்ச்சனா, அப்புறம் இன்னும் மத்தவங்க பேச்சுல இருந்து என்னால ஓரளவு அவங்களைப் பத்தி ஊகிக்க முடிஞ்சது. அப்புறம் உங்க பக்கம் தப்பு இருந்திருந்தா, முகிலனும் அர்ச்சனாவும் கண்டிப்பா உங்க பக்கம் நின்னு இருக்க மாட்டாங்க.”


“நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறதுல, அவங்க ரெண்டு பேரும் எவ்வளவு அக்கறை காட்டினாங்கன்னு எனக்குத் தெரியும்.”


“சும்மா எதோ வில்லன் ரேஞ்சுக்கு நீங்க சீன் போடாதீங்க. உங்களுக்கு அதெல்லாம் வராது.” என திலோ கண்ணை உருட்ட… அரவிந்தன் புன்னகைத்தான்.  


“ஓ… உனக்கு என்னை அவ்வளவு நல்லா தெரியுமா? வேற என்ன என்னைப் பத்தி தெரியும்?”


“ம்ம்… உங்களுக்கு எங்கெங்கே மச்சம் இருக்குன்னு வேணா  சொல்லட்டுமா?” என திலோ கண்சிமிட்ட,


அவளின் வாயைப் பொத்தியபடி, “அடிப்பாவி, நீ பார்க்க மட்டும் தான் டி அமுல் பேபி… பண்றது எல்லாம்…” என முடிக்காமல் அரவிந்தன் சிரிக்க…


“என்ன பண்ணாங்க உங்களை. இந்த வயிறை வச்சிக்கிட்டு ஒண்ணுமே பண்ண முடியலை.” எனத் திலோ தன் பெரிய வயிற்றைத் தடவ….


“அச்சச்சோ… ஓவர் பீலிங்க்ஸா இருக்கே.. கவலைப்படாதே குழந்தை பிறந்து கொஞ்ச மாசம் ஆனதும், எல்லாத்துக்கும் சேர்த்து சரிகட்டிடலாம்.”


“யாரு நீங்க தானே? ஒன்னு இருக்கும் போதே, ரூம் போட்டு யோசிச்சிட்டு இருந்தீங்க. இப்ப ரெண்டு வேற…. இன்னும் எவ்வளவு மாசம் ஆகுமோ?”


திலோவின் கவலையைப் பார்த்து அரவிந்தன் சிரிக்க… “இப்படித்தான் எப்பவும் இருக்கணும். நான் இருக்கேன் உங்களுக்கு, வேற எதைப் பத்தியும் நினைக்கக் கூடாது. எனக்கு ப்ராமிஸ் பண்ணுங்க.” திலோ கைநீட்ட, அவள் கையை இழுத்து முத்தமிட்டவன், பிறகு கையை அப்படியே அவன் நெஞ்சில் வைத்துக் கொண்டான்.


திலோ அரவிந்தனை கட்டிபிடிக்க முயன்று முடியாமல், தன் வயிற்றின் மீது கை வைத்து, “ஹலோ உள்ள யார் இருக்கீங்க. கொஞ்சம் சீக்கிரம் வெளிய வாங்களேன். என்னால என் புருஷனை கட்டிபிடிக்க முடியலை?” என அவள் சொல்ல, அதைக் கேட்டு அரவிந்தன் சிரிக்க…அந்த நேரம் குழந்தை வயிற்றில் ஒரு உதை கொடுக்க…


“பாருங்களேன் பாப்பா உதைக்குது.” என்றாள் திலோ மகிழ்ச்சியாக.


“அதுவும் உன்னை மாதியே வாலு போலிருக்கு.” என்ற அரவிந்தன் கீழே மண்டியிட்டு அமர்ந்து, திலோவின் வயிற்றில் அழுத்தமாக முத்தமிட்டான்.


எப்போது வேண்டுமானாலும் அவளுக்கு வலி வரலாம் என்று, அவள் வயிற்றைப் பார்த்ததும் அவனுக்குப் புரிந்தது. அவள் வயிறு நன்றாக இறங்கி இருந்தது. ஆனால் அவளிடம் எதுவும் சொல்லவில்லை. அவளை அழைத்துச் சென்று படுக்க வைத்தவன், தானும் பக்கத்தில் படுத்து, அவளை அனைத்து உறங்க வைத்தான்.

“கடவுளே, அவளுக்குப் பிரசவம் சுகமா இருக்கணும். என் திலோவுக்கு ரொம்ப வலியைக் கொடுக்காதே.” என வேண்டியபடி இருந்தான்.

அதிகாலையில் திலோவுக்கு வலி எடுக்க…. உடனே மருத்துவமனை சென்றனர். காமாட்சி இருந்ததால், அவர் பாவனாவை பார்த்துக் கொண்டார். அரவிந்தன் திலோவுடனே இருந்தான். அன்று மதியம் திலோவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தனர்.

 

 




Advertisement