Advertisement

சங்கீத ஸ்வரங்கள்



அத்தியாயம் 16

மதிய உணவு முடியும் போதே… மூன்று மணி ஆகிவிட… பெரியவர்களைத் தவிர்த்து மற்றவர்கள், அவரவர் வீட்டிற்குச் சென்று, பிள்ளைகளுக்கு மட்டும் மாற்று உடை எடுத்துக் கொண்டு, தோட்டத்திற்குச் சென்றனர்.


இருப்பதிலேயே பெரிய தோட்டம் அரவிந்தனின் அப்பாவுடையது தான். அதனால் அங்கேதான் சென்றனர். வீட்டில் இருந்து தோட்டம் சற்றுத் தொலைவுதான், அதனால் காரில் சென்றனர்.


திலோத்தம்மா முதல் முறையாக வருவதால்… அரவிந்தன் அவளுக்குத் தோட்டத்தைச் சுற்றிக் காட்டிக் கொண்டிருந்தான். தென்னை, வாழை, தேக்கு என நிறைய வைத்திருந்தனர்.


இவர்கள் இருவரும் சுற்றிக் கொண்டிருக்க…. சின்ன வாண்டுகள் எல்லாம் அங்கிருந்த பம்ப்செட்டில் குளிக்க ஆரம்பித்திருக்க… அவர்களைப் பார்க்க சில பேர் அருகிலேயே இருக்க… மற்றவர்கள் அங்கங்கே வட்டமாக உட்கார்ந்து பேசிகொண்டு இருந்தனர்.

வீரா, பூரணி, வித்யா மூவரும் அங்கிருந்து வேப்ப மரத்திற்குக் கீழே தனியாக உட்கார்ந்து இருந்தனர்.


“இவங்க மாலினி அண்ணி மாதிரி இல்லை. நல்லாத்தான் எல்லார்கிட்டயும் பழகிறாங்க. நான் கூட இவ்வளவு படிச்சு இருக்காங்களே… எப்படி இருப்பாங்களோன்னு நினைச்சேன்.” பூரணி சொல்ல…


“இப்பத்தானே வந்திருக்காங்க, கொஞ்ச நாள் போனாத்தான் உண்மையான குணம் தெரியும்.” என்றாள் வித்யா.


“இல்லை இவங்க மாலினி அண்ணி மாதிரி கண்டிப்பா கிடையாது. மாலினி அண்ணி இருக்கும்போது, அண்ணன் எப்பவுமே தலைவலியில இருக்கிற மாதிரிதான் முகத்தை வச்சிட்டு சுத்திட்டு இருப்பாரு. ஆனா இப்ப நல்லா சிரிச்ச முகமா இருக்காரு.” வீரா சொல்ல…


“நான் கூடக் கவனிச்சேன். என்ன வேலையா இருந்தாலும், கொஞ்ச நேரத்துக்கு ஒரு தடவை அண்ணி என்ன பண்றாங்கன்னு அண்ணன் பார்த்திருக்கிறார். அதே போல அண்ணியும் கொஞ்ச நேரம் அண்ணனை காணோம்னாலும் தேடுறாங்க.” என்றாள் பூரணி.


இவர்கள் எல்லாம் தங்களைப் பற்றித் தான் அலசிக் கொண்டு இருக்கிறார்கள் எனத் தெரியாமல், அரவிந்தனும் திலோத்தமாவும் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.


“எல்லாம் சுத்தி பார்த்தாச்சா… இங்க உட்காருங்க.” எனப் பூரணி நகர்ந்து உட்கார,


“இருங்க ஒரு நிமிஷம், பாவனா என்ன பண்றான்னு பார்த்திட்டு வரேன். குளிச்சிட்டான்னா டிரஸ் எடுத்து கொடுக்கணும்.” எனத் திலோ செல்ல… அரவிந்தன் வீராவின் அருகே உட்கார்ந்தான்.


“பாவனாவை அண்ணி நல்லா பார்த்துகிறாங்க.” பூரணி அரவிந்தனிடம் சொல்ல…


“ஆமாம் பூரணி, திலோ வந்த பிறகு எனக்குப் பாவனாவை பத்தி எந்தக் கவலையும் இல்லை. சொல்லப் போனா என்னை விட அவ நல்லா பார்த்துக்கிறா.” என்றான்.


“இப்ப எல்லாம் நல்லாதான் பார்ப்பாங்க. அவங்களுக்கு ஒரு குழந்தை வந்த பிறகுதான் எப்படின்னு தெரியும்.” என வித்யா வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் சொல்ல…அரவிந்தனுக்கு அப்படி ஒரு கோபம் வந்தது. இதை மட்டும் திலோவோ பாவனாவோ கேட்டிருந்தால்…. அவர்கள் இருவர் மனமும் பாதிக்காதா?.


“இப்ப நீ என்ன சொல்ல வர வித்யா… திலோ குழந்தை பெத்துக்காம பாவனாவையே பார்த்திட்டு இருக்கனும்ன்னு சொல்ல வரியா?” எனக் கேட்டது அரவிந்தன் இல்லை வசந்தன்.


தன் கணவனின் குரல் கேட்டதும் வித்யா நடுங்கித்தான் போனாள். அவன் வந்தது தெரியாமல் பேசி இருந்தாள்.


“நான் அப்படிச் சொல்ல வரலை.” வித்யா இழுக்க…


“அப்ப என்னதான் சொல்ல வர…” வசந்தன் விடாமல் கேட்க,


“இருங்க வசந்தன்.” என்ற அரவிந்தன்,“உனக்கு ஆயிரம் சந்தேகம் வரும் வித்யா. நாங்க உனக்குத் தப்புன்னு நிருபிச்சிட்டே இருக்க முடியாது. இதே திலோ பாவனாவை கவனிக்கலைனா… இவ பெண்ணா இருந்தா இப்படி இருப்பாளான்னு கேட்டு இருப்ப…”


“நீ என்ன வேணா நினைச்சிக்கோ.. அது உன்னோட உரிமை. ஆனா தயவு செய்து எங்க பொண்ணு காது பட எதுவும் பேசி வைக்காத… அதனால எங்க குடும்பத்துக்குள்ள வீணா பிரச்சனை வருது.” என்ற அரவிந்தன் அங்கிருந்து எழுந்து சென்று விட…கூடவே பூரணியும், வீராவும் சென்றனர்.


வசந்தன் வித்யாவை முறைத்தான்.“என்ன பண்ணிட்டு இருக்க வித்யா. பாரு உங்க அண்ணன் உன்னால அவங்க குடும்பத்துல பிரச்சனை வருதுன்னு சொல்றார்.”


“உங்க அண்ணாவே இந்த அளவுக்குச் சொல்றாருன்னா, நீ என்ன பண்ண?” வசந்தன் கேள்விக்கு வித்யா பதில் சொல்லவில்லை.


“ஓ… எனக்கு இப்பதான் புரியுது. அன்னைக்கு நைட் பாவனா அழுது ஆர்ப்பாட்டம் பண்ண நீதான் காரணம் இல்ல…”


“உன்னால ஒரு குடும்பத்தில பிரச்சனை வருதுன்னு சொன்னா, அது உனக்கு மட்டும் இல்லை, எனக்கும் தான் அசிங்கம். இனிமே எப்பவும் உங்க அண்ணன் வீட்டுக்கு போகணும்ன்னு, நீ என்கிட்டே கேட்கவே கேட்காத.” என்றான் கோபமாக.


“நான் எதோ விளையாட்டா சொன்னேன். நீங்க விடுங்களேன்.” வித்யா சொல்ல..


“அடுத்தவங்க வாழ்க்கை உனக்கு விளையாட்டா? எதாவது பேசத் தெரியாம பேசி வைக்கிறது. உன்னை மாதிரி அரை வேக்காடுங்க தான் குடும்பத்தில பிரச்சனை வர காரணம்.”


“நானும் வந்ததுல இருந்து உன்னைப் பார்த்திட்டு தான் இருக்கேன். உன்னை உன் தம்பி சமைக்கக் கூப்பிட்டா, இஷ்ட்டம் இருந்தா போ.. இல்லைனா போகாத,.. அது என்ன திலோவை கூப்பிடுன்னு நீ சொல்றது?”

“சரி விடுங்க, இனிமே சத்தியமா நான் எதுவும் அவங்களைப் பத்தி பேச மாட்டேன்.”


“பேசித்தான் பாரேன், அப்புறம் உனக்குத் தெரியும் நான் யாருன்னு. நம்ம வீட்ல உன்னோட வாலை சுருட்டித்தானே வச்சிருக்க… இங்க மட்டும் ஏன் இவ்வளவு பேசுற?” வித்யா இப்போதும் பதில் சொல்லவில்லை.


“நான் காரணம் சொல்லட்டுமா? நீ வேண்டாம்ன்னு சொன்ன பெண்ணை உங்க அண்ணன் கல்யாணம் பண்ணிகிட்டார். அது உனக்குக் கவுர குறைச்சல் ஆகிடுச்சு. இப்ப உனக்குத் திலோ சரி இல்லைன்னு நிருபிக்கணும். அப்படி ஆகிட்டா, நான் அப்பவே சொன்னேன் இந்தப் பொண்ணு வேண்டாம்ன்னு, யாராவது கேட்டீங்களான்னு, உனக்குச் சொல்ல ஆசை. அதுதான் நீ இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க.”


“நீ நினைச்சது ஒன்னும் நடக்கப் போறது இல்லை. ஆனா உங்க குடும்பத்தில இருந்து உன்னைத் தள்ளி வைக்கப் போறாங்க. அதுதான் நடக்கப் போகுது.”


“இன்னொன்னு நியாபகம் வச்சுக்கோ… திலோ சரி இல்லைனா கஷ்ட்டப்படப் போறது உங்க அண்ணன் தான். உனக்கு அதுதான் வேண்டுமா?” என வசந்தன் கேட்டதும் தான்,


“ச்ச… நமக்கு ஏன் இது தோணாம போச்சு. அண்ணன் ஏற்கனவே ரொம்பக் கஷ்ட்டபட்டுடுச்சு… இனியாவது நல்லா இருக்கட்டும்.” என வித்யா நினைத்துக் தொடங்கினாள்.

அதன்பிறகு அரவிந்தன் பாவனாவை வித்யா இருக்கும் பக்கம் கூட விடவில்லை. “எல்லோரும் கிளம்புவோம், நாளைக்குக் கோவிலுக்குப் போக இன்னைக்கே எடுத்து வைக்கணும். சீக்கிரம் படுக்கணும், காலையில வேற சீக்கிரம் கோவிலுக்குப் போகணும்.” எனச் சொல்லி… எல்லோரையும் அங்கிருந்து கிளப்பிக்கொண்டு வந்துவிட்டான்.


மறுநாள் காலை நேராகக் கோவிலுக்கு வந்துவிடுவதாகச் சொல்லி… எல்லோரும் அவரவர் வீட்டிற்குச் சென்றனர். மதியம் வைத்த சாம்பாரே நிறைய இருக்க, அதோடு சட்னி மட்டும் செய்து, இட்லி அவித்து இரவு உண்டனர்.


பாவனா இன்று ஆடிய களைப்பில் சாப்பிட்டதும், ஹாலில் இருந்த மர கட்டிலில் உறங்கி விட… “நீங்களும் பாவனாவோடு படுத்துக்கங்க அத்தை.” என வைதேகியிடம் சொன்ன அரவிந்தன், மாடியில் இருந்த அவர்களது பெட்டிகளைக் கீழே எடுத்துக் கொண்டு வந்தவன், “வசந்தன், நீங்க மேலே போய்ப் படுங்க.” என்றான்.


“ஏன் நாங்க கீழே படுத்துப்போம்.” என்ற வித்யாவின் பேச்சை அவன் காதில் வாங்கவில்லை. கீழே இருந்த அறைக்குள் சென்று பெட்டிகளை வைத்து விட்டு வந்தான்.


“நான் அம்மாவோட ஹல்ல படுத்துப்பேன், அவர் பசங்களோட கீழ ரூம்ல படுத்துப்பார். நீ ஏன் இப்ப தேவை இல்லாம உன் பெட்டியை எடுத்திட்டு வந்த?” வித்யா கேட்க,


“சும்மா எல்லாத்துக்கும் உன்கிட்ட வாயடிட்டு இருக்க முடியாது. உனக்கு எங்க படுக்கனுமோ படு.” என வித்யாவிடம் எரிந்து விழுந்த அரவிந்தன், அறைக்குள் சென்று விட…. அண்ணன் கத்தியதும் வித்யா முகம் மாற… என்ன ஆச்சு இவருக்கு என்பது போலத் திலோத்தமா பார்த்துக் கொண்டு இருந்தாள்.


வசந்தன் பிள்ளைகளுடன் மாடிக்குப் படுக்கச் சென்று விட…. “நீங்களும் போய்ப் படுங்க.” எனக் காமாட்சி சொன்னதும், வித்யா மாடிக்கும், திலோத்தம்மா அரவிந்தன் இருந்த அறைக்கும் சென்றார்கள்.


அரவிந்தன் தரையில் மெத்தை விரித்துப் படுத்து இருந்தான். அந்த அறை கட்டிலைத்தான் வெளியே ஹாலில் போட்டிருந்தனர். அரவிந்தனின் அப்பா முற்றத்தில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொள்ள… கதவை பூட்டிவிட்டு வந்த காமாட்சி, தரையில் பாய் விரித்துப் படுத்துக் கொண்டார்.


அரவிந்தன் கண்ணை மூடி படுத்து இருந்தான். ஆனால் உறங்கவில்லை எனத் திலோவுக்குத் தெரியும். உடை மாற்றி நைட்டி அணிந்து வந்தவள், அவன் அருகில் நெருங்கி படுத்து, “அரவிந்த், நீங்க கோபமா இருக்கீங்களா? எனக் கிசிகிசுப்பாகக் கேட்க,


“இப்ப நாம பேசினா வெளிய கேட்கும். பேசாம தூங்கு.” என்றான். சின்ன அறை அது. அதனால் பேசினால் வெளியே கேட்கும்தான்.


அரவிந்தனின் வலது தோளில் தலை வைத்து படுத்தவள், காலையும் தூக்கி அவன் மீது போட்டுக் கொண்டு, அவனின் முகம் வருட…அரவிந்தன் கண் திறந்து பார்த்தான்.


அவனைப் பார்த்து புன்னகைத்தவள், அவன் நெற்றி கன்னம் என முத்தமிட…. அவள் பக்கம் திரும்பி படுத்து அவளை அணைத்தவன், “ஒழுங்கா தூங்கு.” என அவள் காதில் சொல்ல… திலோவும் காதில் எதோ சொல்லப் போகிறாள் என அவன் நினைக்க.. அவள் அவனின் காது மடலை… மெதுவாகத் தன் பற்களால் வலிக்காமல் கடிக்க…அரவிந்தனின் கட்டுப்பாடு எல்லாம் தகர்ந்து விட்டது.


திலோவின் இதழ்களை வன்மையாகச் சிறை செய்தவன், ஒரு பொட்டுச் சத்தம் கூட வெளியில் கேட்காமல், மனைவியோடு உறவு கொண்டான்.


அவள் அருகில் களைத்துப் போய்ப் படுத்தவனின் முகத்தில் இப்போது எரிச்சல் இல்லை. மாறாக ஒரு நிறைவு தெரிய… அதைப் பார்த்த திலோவுக்கு மகிழ்ச்சி. கணவனை அணைத்தபடி உறங்கி விட்டாள்.


மறுநாள் காலை காமாட்சி கதவு தட்டிய பிறகுதான் எழுந்து கொண்டனர். அது வெறும் அறை மட்டும் தான். வெளியே தான் குளியல் அறை இருக்கிறது.

திலோ சென்று குளித்து விட்டு வர… காமாட்சி மகளைத் தயார் செய்தார். பாவனா சென்று குளித்து விட்டு வந்ததும், திலோ தன் மகளைத் தயார் செய்தாள்.


காலை உணவே அவர்கள் எல்லோருக்கும் கோவிலில் தான். அதனால் எல்லோரும் நேரமே கிளம்பி கோவிலுக்குச் சென்றனர். முகிலன் அர்ச்சனா வர தாமதம் ஆகியதால்… அரவிந்தனும் திலோவும் அவர்களுக்காகக் காத்திருந்து அழைத்து வந்தனர்.


காலை உணவு தயராகிக் கொண்டு இருந்ததால்…. அதுவரை எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது கோவிலின் உள்ளே கார் வந்து நிற்க…. அரவிந்தனும் திலோத்தாமாவும் காரில் இருந்து இறங்கினர்.


இருவரும் தங்கள் திருமண உடையில் இருந்தனர். அதுவும் திலோத்தமாவை பார்த்ததும், எல்லோரும் தங்களை மறந்து அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.


எல்லோரின் கவனத்தையும் கவரும்படி, திலோத்தமா சர்வ லட்ச்சனமாக இருந்தாள். வைதேகி மகளை அவ்வளவு அழகாக அலங்காரம் செய்து இருந்தார்.


திலோவுக்கு அதெல்லாம் தெரியவில்லை. இவர்களைப் பார்த்ததும் பாவனா ஓடி வர…. நலுங்கி இருந்த அவளது ஆடைகளைச் சரி செய்து விட்டாள். பாவனாவுக்கும் தன்னுடைய நகைகளில் சின்னதாக இருந்தவைகளை அணிவித்து இருந்தாள்.


காலை உணவுக்குப் பிறகு…. குல தெய்வ பூஜை தொடங்கியது. காமாட்சி அம்மன் தான் அவர்களுது குல தெய்வம். சாமிக்கு அபிஷேகம், ஆராதனை முடிந்து… குடும்பமாகப் பொங்கல் வைத்தனர். மற்றொரு பக்கம் கடா வெட்டி விருத்து சமைத்துக் கொண்டு இருந்தனர்.


புது மருமகள் என்பதால்.. திலோத்தமா தான் சாமிக்கு விளக்குப் போடுவதில் இருந்து, பொங்கல் வைப்பது வரை எல்லாமே செய்தாள். உடன் இருந்து மற்றவர்கள் உதவி செய்தனர்.


“இப்ப நீங்க தான் அண்ணி கடாவும் வெட்டணும்.” என வீரா சொல்ல… திலோ அவன் சொல்வது உண்மை என நம்பி பயந்து போனாள்.


அவளின் அரண்ட தோற்றத்தைப் பார்த்து, அரவிந்தனுக்கும் மற்றவர்களுக்கும் ஒரே சிரிப்பு.


“சும்மா உங்களைக் கிண்டல் பண்றான் அண்ணி. அதெல்லாம் கடா அப்பவே வெட்டிட்டாங்க.” எனப் பூரணி சொல்ல.. அதன் பிறகே திலோ அமைதியானாள்.


நேற்றிலிருந்து அரவிந்தன் வித்யாவிடம் முகம் கொடுத்து பேசாமலே இருந்தான். நீதான இழுத்து விட்டுகிட்ட, இப்ப அனுபவி என வசந்தனும் முறைத்துக் கொண்டு இருந்தான்.


விளையாடிக் கொண்டிருந்த பாவனாவை வித்யா அழைக்க… “என்ன அத்தை?” என அவள் முன்பு வந்து நின்றாள்.


“இப்படி மத்த பசங்கலோடவே விளையாடுறியே… உனக்கே ஒரு தம்பி, இல்ல தங்கச்சி பாப்பா வேண்டாமா?” என வித்யா கேட்க,


“வேணும் தான், ஆனா எனக்கு இல்லையே என்ன பண்றது?” என்றாள் பாவனா பதிலுக்கு.


“உங்க அப்பாகிட்ட கேளு…. ரெடி பண்ணுவார்.” என வித்யா அரவிந்தனை கோர்த்து விட…


“ஹே… வித்யா அடங்க மாட்டியா டி நீ…” என்ற அரவிந்தனுக்கும் சிரிப்புதான். அதுவரை தங்கை மீது இருந்த வருத்தமெல்லாம்… மறைந்தே போனது.


“அப்பா, எனக்கு இப்பவே தம்பி இல்லை தங்கச்சி வேணும்.” எனப் பாவனா அடம்பிடிக்க…


“உங்க அப்பாகிட்ட மட்டும் கேட்டா பத்தாது. உங்க அம்மா கிட்டையும் கேளு, அவங்க தான் பெத்து தரணும்.” என வித்யா திலோவையும் இழுத்து விட…

ஏற்கனவே வித்யா செய்த கலாட்டவில் முகம் சிவந்து போய் இருந்த திலோ, பாவனா அவளை நோக்கி திரும்புவதைப் பார்த்தும், அந்த இடத்தில் இருந்து எழுந்து ஓடி விட்டாள். அதைப் பார்த்து எல்லோருக்கும் ஒரே சிரிப்பு.


பேத்தியை தன் அருகில் அழைத்த காமாட்சி. “. சீக்கிரம் தம்பி பாப்பா கொடுன்னு, நீ நம்ம சாமிகிட்ட நல்லா கும்பிடு. தம்பி பாப்பா வந்ததும், நாம இதே மாதிரி எல்லோரையும் கூப்பிட்டு வந்து, உன் தம்பிக்கு இங்க மொட்டை போடுறோம்ன்னு வேண்டிக்க. சாமி கண்டிப்பா கொடுப்பார்.” என அவர்  சொல்ல… அவர் சொன்னபடி பாவனா வேண்டிக்கொள்ள… வைதேகி எல்லாவற்றையும் நிறைவோடு பார்த்துக் கொண்டு இருந்தார்.


மதிய விருந்து முடிந்ததும், கோவிலில் இருந்தே அவரவர் ஊருக்கு கிளம்ப… அரவிந்தனும் திலோவும் எல்லோரையும் வழி அனுப்பி வைத்தனர்.


ஊருக்குப் போவதற்கு முன் தங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்து விட்டு பூரணி கிளம்பி சென்றாள்.


“டேய் அண்ணா ! இப்ப சந்தோஷமா?” என வித்யா கேட்க… அரவிந்தன் பதில் சொல்லாமல், தங்கையைத் தோளோடு சேர்த்து ஒருமுறை அனைத்து பிறகு விலக…. வார்த்தை சொல்லாததை அவனது செயல் காட்டியது. வசந்தனும் வித்யாவும் அப்போதே அவர்களும் ஊருக்கு கிளம்பினர்.


மாலை முகிலன் அர்ச்சனாவுடன் வைதேகியும் ஊருக்கு கிளம்பினர். அரவிந்தனும் திலோவும் இன்னும் இரண்டு நாட்கள் இங்கே இருப்பார்கள்.


இரவு அரவிந்தனும் திலோவும் மாடி அறைக்குப் படுக்கச் சென்றனர். இன்றைய இரவில் இருவரும் மனம் விட்டு பேசிக் கொண்டு இருந்தனர்.


“எல்லோர் கிட்டையும் எப்படி அரவிந்தன் இவ்வளவு பிரியமா இருக்கீங்க. உங்களை எல்லோருக்கும் பிடிக்குது இல்ல…”


“ஹே அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது. நீ என்ன உன் புருஷனை எல்லோருக்கும் பிடிக்கும்ன்னு நினைக்கிறியா? என்னை வேண்டாம்ன்னு எல்லாம் சொல்லி இருக்காங்க.” என்றான் சாதாரணமாக. அப்போது கூடத் திலோத்தமாவுக்கு அது மாலினி என நினைக்கத் தோன்றவில்லை.

“நீங்க யாரையாவது லவ் பண்ணி இருக்கீங்களா அரவிந்த்.” அவன் யாரையோ விரும்பி, அந்தப் பெண் அவனை மறுத்து விட்டதோ என நினைத்துக் கேட்டாள்.


அரவிந்தனுக்குச் சிரிப்புதான் வந்தது. “நீ ஏன் இப்ப இந்த ஆராய்ச்சி எல்லாம் பண்ற? நான் யாரையும் லவ் பண்ணது இல்லை.” என்றான்.

“ஹப்பாடா இல்லையா…” என திலோ நிம்மதியனவள், “அப்ப உங்களை யாருக்கு பிடிக்கலை?” என்றுதான் கேட்க வந்தாள். அதை உணர்ந்த அரவிந்தன், “வேற யாருக்கு என்னை பிடிச்சாலும் பிடிக்கலைனாலும் எனக்கு ஒன்னும் இல்லை. உனக்கு என்னை பிடிச்சிருக்கு. அது போதும் எனக்கு.”

“எனக்கும் என் திலோவை மட்டும் தான் பிடிக்கும்.” என்றவன், அவளை  அனைத்துக் கொண்டான். அதற்கு மேலே அவளைப் பேச என்ன? வேறு எதை பற்றியும் நினைக்க விடாமல்… அவளை அவன் முழுவதுமாக ஆக்ரமித்துக்கொள்ள….திலோவோ காதல் மயக்கத்தில்.

 

Advertisement