Advertisement

 

சங்கீத ஸ்வரங்கள்



அத்தியாயம் 15



ஞாயிறு தான் விருந்து, இவர்கள் சனிக்கிழமையே சென்றுவிட்டனர். இரயிலில் தான் கோயம்புத்தூர் வரை சென்றனர். உடன் வைதேகி, அர்ச்சனா முகிலன் மற்றும் புவன். எல்லோரும் சேர்ந்து ரயிலில் செல்வதே மகிழ்ச்சியாக இருந்தது.


விடியற்காலை கோயம்பத்தூரில் சென்று இறங்க…. அங்கே ரயில் நிலையத்தில், இவர்களுக்காக அரவிந்தனின் சித்தப்பா மகன் வீரா காத்திருந்தான்.


ரயிலில் இருந்து இறங்கியவர்களை அவன் வரவேற்க… “டேய் வீரா எப்படி இருக்க? நானே வரேன்னு தானே சொல்லி இருந்தேன். நீ ஏன் வீணா அலையற?” என்றான் அரவிந்தன்.


“நீங்க என்ன அண்ணா அடிக்கடியா வர்றீங்க. அதுவும் அண்ணி பாப்பா எல்லாம் வர்றாங்க. நம்ம வண்டியிலேயே ஊருக்கு போயிடலாம்ன்னு வந்தேன்.” என்றவன், “வாங்க அண்ணி நல்லா இருக்கீங்களா.” என்றான் திலோவிடம்.
வீரா சட்டென்று உறவு முறை சொல்லி அழைத்து விட… திலோத்தமா தான் திணறிப் போனாள்.


“நல்லா இருக்கேன், நீங்க நல்லா இருக்கீங்களா?” என ஒருவழியாகக் கேட்டு விட்டாள்.


“நல்லா இருக்கேன் அண்ணி. எல்லோரும் வாங்க.” என அழைத்துக் கொண்டு அவனுடைய காருக்குச் சென்றான். இன்னோவா தான் எடுத்து வந்திருந்தான். அதனால் எல்லோருக்கும் தாராளமாக இடம் இருந்தது.


கோயம்புத்தூரில் இருந்து நாற்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கிராமம் தான் வள்ளியூர். அரவிந்தனின் சொந்த ஊர். செல்லும் வழியாவும் பச்சை பசேல் எனக் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்தது.


ஊருக்குள் நுழைத்ததும், பஸ் ஸ்டாண்டில் முகிலனும் அர்ச்சனாவும் தங்கள் மகனுடன் இறங்கிக் கொண்டனர். அர்ச்சனா ஊரும் அது தானே.


“நாளைக்குக் காலையில சீக்கிரம் நம்ம வீட்டுக்கு வந்திடுங்க.” எனச் சொல்லி, அரவிந்தன் அவர்களுக்கு விடைகொடுத்தான்.


“அண்ணி, பாருங்க இது தான் நம்ம ஊரு கோயிலு, இதுதான் நம்ம ஊரு ஸ்கூல்லு…” என வீரா திலோவுக்கு ஒவ்வொன்றாகக் காட்ட…


“இந்த ஸ்கூல்லையாங்க நீங்க படிச்சீங்க.” திலோ ஆர்வமுடன் அரவிந்தனிடம் கேட்க, “ஆமாம், இருக்கிறதே ஒரு ஸ்கூல் தான்.” என்றான் அரவிந்தன் சிரித்தபடி.


“வீரா நீங்க என்ன பண்றீங்க?”


“நமக்கு உங்க வீட்டுக்காரர் மாதிரி வேலைக்குப் போக எல்லாப் பிடிக்காது அண்ணி. நான் கோயம்புத்தூர்ல சொந்தமா ட்ராவல்ஸ் வச்சிருக்கேன். அப்பா அம்மா இங்கத்தான் இருக்காங்க.” என்றான். திலோ அக்கறையாக கேட்டுக் கொண்டாள்.


அவர்களுக்காகக் காமாட்சி வீட்டின் வெளியவே நின்று கொண்டு இருந்தார். இவர்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக வரவேற்றார்.


“அப்பா எங்க மா தோட்டதுக்கா?” அரவிந்தன் தன் அன்னையிடம் கேட்க,


“ஆமாம் பா… கொஞ்ச நேரத்தில வந்திடுறேன்னு சொல்லிட்டு போனார்.” என்றவர், “வாங்க அண்ணி.” என அவர் வைதேகியை உள்ளே அழைத்துக் கொண்டு செல்ல… “வா திலோ…” என அரவிந்தன் அழைக்க… திலோத்தம்மா பாவனாவோடு உள்ளே நுழைந்தாள்.


வீடு பெரிதாக இருந்தது. பழைய காலத்து வீடுதான். ஆனால் இன்றைய தேவைக்கு ஏற்ப கொஞ்சம் மாற்றம் மட்டும் செய்து இருந்தனர்.


ஹால் நீளமாக இருக்க… அதை ஒட்டி சமையல் அறையும், ஹாலின் பக்க வாட்டில் ஒரு படுக்கை அறையும் இருந்தது.


பாவனாவுக்கு அந்தத் தெருவில் நிறையத் தோழிகள் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்ததும் பாவனா அவர்களோடு விளையாட சென்றுவிட்டாள்.


இவர்கள் வழியிலேயே பல் துலக்கி காபி குடித்து வந்திருந்ததால்… “அம்மா குளிச்சிட்டு வந்திடுறோம்.” எனச் சொல்லிவிட்டு அரவிந்தன் திலோத்தமாவை அழைத்தான்.


எங்க என்பது போல அவள் பார்க்க… ஹால் மூலையில் மரப்படிகட்டுக்கள் இருக்க…அரவிந்தன் அதில் இவர்கள் பெட்டியுடன் ஏற… திலோவும் இன்னொரு பையை எடுத்துக் கொண்டு, அவன் பின்னே சென்றாள்.


ஏறியதும் ஒரு சின்ன ஹாலும், அதை ஒட்டி ஒரு படுக்கை அறையும் இருந்தது. படுக்கை அறை பெரிதாக இருக்க… அதை ஒட்டியே குளியல் அறையும் இருந்தது. அதைத் தவிர இன்னொரு கதவு இருக்க… அரவிந்தன் அதைத் திறந்து விட… அது வெளி மெத்தாக இருந்தது. அந்தப் பக்கம் இருந்து காற்று சிலுசிளுவென்று வந்தது.


“உங்க ஊரு… உங்க வீடு எல்லாமே நல்லா இருக்கு அரவிந்த்.” திலோ சொல்ல…


“உனக்குப் பிடிச்சிருந்தா சரிதான்.” என்றவன், “நம்மைப் பார்க்க யாராவது வீட்டுக்கு வந்திட்டே இருப்பாங்க. நீ போய் முதல்ல குளிச்சிட்டு வா… அடுத்து நான் போறேன்.” என்றான்.


திலோ அவன் சொன்னது போலச் செய்ய… இருவரும் சீக்கிரமே கிளம்பி கீழே வந்துவிட்டனர்.


திலோ கீழே வரும்போது என்ன உடையில் இருக்கிறாள் எனக் காமாட்சி கவனித்துப் பார்த்தார். மருமகள் சில்க் காட்டன் புடவை அணிந்து வர… பரவாயில்லை நாம சொல்லாமலே புடவை கட்டி இருக்கா என நினைத்துக் கொண்டார்.


அவர்கள் தயாராகி வரும் போது வைதேகியும் கீழே இருந்த குளியல் அறையில் குளித்துத் தயாராக இருந்தார். நெருக்கமாகக் கட்டிய மல்லிகை பூவைக் கொண்டு வந்து காமாட்சி திலோவிடம் கொடுக்க….. இவ்வளவா என்பது போல அவள் பார்க்க…


“புதுசா கல்யாணம் ஆன பொண்ணு. தலை நிறையப் பூ வைக்கணும்.” என்றார்.


“அவங்கதான் சொல்றாங்க இல்ல…” என்ற வைதேகி அதை வாங்கி மகளுக்கு அழகாக வைத்து விட்டார்.


பக்கத்திலேயே இன்னொரு வீட்டில் இருந்த அரவிந்தனின் சித்தப்பாவும் சித்தியும், இவர்கள் வந்தது தெரிந்து பார்க்க வந்து விட்டனர். அரவிந்தன் திலோவை அவர்களுக்கு அறிமுகம் செய்ய… சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தனர்.


“சாப்பிடு மா…” காமாட்சி சொல்ல… “இதோ வரேன் அத்தை.” என்ற திலோ பாவனாவை தேடி வெளியில் சென்றாள்.


தெருவில் தான் பாவனா விளையாடிக் கொண்டு இருந்தாள். திலோவைப் பார்த்ததும் விரைந்து வந்து, அவள் இடையைச் சுற்றி அனைத்தபடி, “என்னோட அம்மா.” என்றாள் அவளின் தோழிகளிடம். திலோ பாவனாவின் தோழிகளைப் பார்த்து புன்னகைத்தவள், “நீ குளிச்சிட்டு சாப்பிட்டு வந்து விளையாடு.” என்றாள்.


“இல்ல நான் விளையாடனும்.”பாவனா வர மறுக்க, திலோ விடவில்லை. வீட்டுக்கு இழுத்துக் கொண்டு வந்துவிட்டாள்.


கீழே இருந்த குளியல் அறையில் பாவனா குளித்துவிட்டு வர… திலோ அவளுக்கு உடை அணிவித்துத் தலை வாரி பொட்டு வைத்து விட்டாள்.


வீட்டினர் அவள் செய்வதையே பார்த்துக் கொண்டு இருந்தனர். பாவனா வெளியே ஓட துடிக்க… “நீ சாப்பிட்டுதான் போகணும்.” எனத் திலோ கண்டிப்பாகச் சொல்ல…


உடனே பாவனா அரவிந்தை பார்க்க… “அம்மா சொல்றது கேளு.” என்றவன், “சாப்பிட்டுப் போனாதான் ரொம்ப நேரம் விளையாடலாம்.” என்றதும், பாவனா சாப்பிட உட்கார்ந்தாள்.


காமாட்சி பொங்கல், இட்லி, வடை ,சட்னி, சாம்பார் என நிறையச் செய்து இருந்தார். “எதுக்கு அத்தை இவ்வளவு பண்ணி இருக்கீங்க?” திலோ கேட்க,


“விசேஷ வீடு இல்லையா மா…. நம்ம வீட்டுக்கு எல்லாம் வந்து போய் இருப்பாங்க.” என்றார்.


ஏற்கனவே அவன் சித்தப்பா, சித்தி, வைதேகி மூவரும் சாப்பிட்டு இருந்தனர். திலோ அரவிந்தனுக்கும் பாவனாவுக்கும் பரிமாற… தங்கள் வீட்டில் குளித்து விட்டு வந்த வீரா, அரவிந்தன் அருகில் உட்கார்ந்தவன், அவனே இலையை எடுத்து போட்டுக் கொண்டவன், திலோவுக்கும் இலை போட்டு அவனே உணவு பரிமாறினான்.


“சாப்பிடுங்க அண்ணி… இப்ப சாப்பிடலைனா… பதினொரு மணி வரை சாப்பிட முடியாது.” என்றான். அரவிந்தனும், “ஆமாம் திலோ எங்களோடவே சாப்பிடு.” என்றான்.


நிஜமாகவே வீரா சொன்னது போல… அந்தப் பிறகு திலோவுக்கு எதற்குமே நேரம் இல்லை. இவர்கள் வந்த தகவல் கசிய, இவர்களைப் பார்க்க உள்ளுரில் இருந்த சொந்தபந்தமெல்லாம் இங்கே படை எடுக்க… அதில் நிறையப் பேருக்கு காலை உணவே இங்கே தான்.


அவர்களுடன் பேசி, பரிமாறி எனத் திலோ களைத்தே போனாள். வீட்டில் செய்தது பத்தாமல், வெளியே இருந்து வேறு உணவு வாங்கி இருந்தனர். வந்தவர்கள் சாப்பிடாமல் விடவே இல்லை.


திலோத்தமாவுக்கு மிகுந்த ஆச்சர்யம், நகர வாழ்க்கையில் வீட்டிற்கு வந்தவர்களுக்கு ஒரு காபி கொடுத்தாலே ஆச்சர்யம். ஆனால் இங்கே உபசரிப்புப் பிரமாதம்.


திலோ மட்டும் பரிமாறவில்லை. அரவிந்தன் வீரா என மூவரும் சேர்ந்து தான் பரிமாறினர். அதோடு சற்றுத் தாமதமாக வந்த அரவிந்தனின் பெரியப்பா சித்தப்பா மக்களும் இவர்களுடன் சேர்ந்து கொண்டனர்.


சின்ன முகம் சுணுக்கம் கூடக் காட்டாது, திலோ அவர்களுடன் சேர்ந்து வேலைப் பார்ப்பது, அவர்களுக்கு ஆச்சர்யம் தான்.


மாலினி இப்படி ஒருநாளும் யாரோடும் கலந்து பழகியதே இல்லை. ஒதுங்கியே இருப்பாள். இதில் மாடி அறையில் வேறு சென்று உட்கார்ந்து கொள்வாள். ஒவ்வொன்றிற்கும் அவளை அழைத்துக் கொண்டு இருக்க வேண்டும்.


அரவிந்தனின் முதல் மனைவி மாலினி, அவளின் நடத்தையால் வெகு பிரசித்தம் என்பதால்… அடுத்து வந்த திலோத்தமா எப்படி இருப்பாளோ என்ற எதிர்ப்பார்ப்பில், எல்லோருமே திலோவை சற்று அதிகம் தான் நோட்டம் விட்டனர். ஆனால் இதெல்லாம் தெரியாத திலோத்தமா சிரத்தையுடன், வேலை செய்து கொண்டு இருந்தாள்.


ஒருவழியாகப் பதினோரு மணிக்கு ஆட்களின் வரத்து நின்று விட… அதன்பிறகே இவர்களுக்கு உட்கார முடிந்தது. அதன் பிறகே தனது சித்தப்பா, பெரியப்பா மற்றும் அத்தையின் மக்களை அரவிந்தன் முறையாகத் திலோவுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.


“மதியத்துக்கு வேணா, சமைக்க ஆள் வச்சிடுவோமா மா?”அரவிந்தன் காமாட்சியிடம் கேட்க, அவர் வீராவை பார்த்தார். லோக்கலில் என்ன செய்வது என்றாலும் அவனைத் தான் கேட்பர்.


“நாளைக்கு முஹுர்த்த நாள்,  இன்னைக்கு அங்க சமைக்கப் போய் இருப்பானுங்க. ஒரு பயலும் இருக்க மாட்டான். இனி வெளி ஆளுங்க வரமாட்டாங்க. நாம வீட்டு ஆளுங்க தான். நாமலே செஞ்சிடுவோம்.” வீரா சொல்ல…


கோயம்புத்தூரில் கல்யாணம் செய்து கொடுத்திருந்த அரவிந்தனின் சித்தப்பா பெண் பூரணி, “நாமலே செஞ்சிடுவோம் அண்ணே… வீரா, நீ போய்ப் பாத்திரம், பெரிய அடுப்பு மட்டும் எடுத்திட்டு வா… வெளிய வச்சு ஒரு மணி நேரத்தில சமையலை முடிச்சிடலாம்.” என்றாள்.


அரவிந்தனின் அப்பாவின் உடன் பிறந்தோர் நான்கு ஆண்கள் ஒரு பெண். அவர்களின் குடும்பம், பிள்ளைக் குட்டிகள், பேரன் ,பேத்திகள் என வீட்டு ஆட்களே ஐம்பது பேர் தாராளமாக இருப்பர்.


ஐம்பது பேருக்கு எப்படிச் சமைப்பது? திலோவுக்குக் கலக்கமாக இருக்க… அது அப்படியே அவள் முகத்தில் தெரிய, அரவிந்தனுக்கு மனைவி என்ன நினைக்கிறாள் என நன்றாகவே புரிந்தது. நாலு பேருக்கு மேல் இருந்தால்.. டீ போடவே அவளுக்குத் தெரியாது.


அவளிடம் வந்த அரவிந்தன், “நீ ஏன் டென்ஷன் ஆகுற? உன்னைச் சமைக்கச் சொல்ல மாட்டாங்க. நீ காய் மட்டும் நறுக்கிக் கொடு.” என்றான் மெதுவாக. திலோவும் நிம்மதியாக இருந்தாள்.


மதுரையில் இருந்து காரில் வந்ததால்… வித்யா தாமதமாகத்தான் வந்து சேர்ந்தாள். திலோ எதையும் காண்பித்துக் கொள்ளாமல், அவளிடம் நன்றாகவே பேசினாள்.


வீரா சமையலுக்குத் தேவையான பாத்திரங்களுடன் வந்து விட… வெளியே வீட்டிற்கு முன்புறம் இருந்த காலி இடத்தில் அடுப்பை வைத்து, ஒரு பக்கம் சோறு பொங்க ஆரம்பிக்க… மறுபக்கம் எல்லோருமாகச் சேர்ந்து உட்கார்ந்து காய் நறுக்கினார்கள்.


மதியம் சாம்பார், ரசம், முட்டைகோஸ் கூட்டு, உருளைக் கிழங்கு வறுவல், பாயசம், இதுதான் செய்வது என ஒருமனதாக முடிவு செய்து இருந்தனர்.


திலோ கத்தியை வைத்து முட்டைகோசுக்கு வலிக்குமோ என்பது போல மெதுவாக நறுக்க… “கொடுங்க அண்ணி.” என அவளிடம் இருந்து கத்தியை வாங்கிய வீரா… சர சரவென்று வேகமாக நறுக்கி தள்ளினான். அரவிந்தன் ஒரு பக்கம் பூரணியிடம் இருந்து தேங்காய் துருவியை வாங்கி, ஒரு காலில் வைத்து அழுத்தி உட்கார்ந்து, கூட்டுக்குத் தேவையான தேங்காய்களைத் துருவிக் கொடுத்தான்.


அவனை அப்போது யாரவது பார்த்தால்… மருத்துவன் என நம்பக் கூட மாட்டார்கள். அவ்வளவு சாதரணமாக இருந்தான். அவன் மட்டும் அல்ல… அவன் குடும்பத்தில் எல்லோருமே அப்படித்தான் இருந்தனர். வெளிநாட்டில் இருக்கும் அவனது தம்பி, இந்த விருந்துக்காக மெனக்கெட்டு வந்திருந்தான்.


“எல்லாரையும் சேர்த்து பார்க்க கிடைச்ச வாய்ப்பை ஏன் விடணும்? அதுதான் வந்திட்டேன்.” என்றான். எதோ பக்கத்து ஊரில் இருந்து வந்தது போல…


அவர்கள் எல்லாம் படித்துப் பெரிய வேலையில் இப்போது இருந்தாலும், உறவுகளை மதித்தனர். ஆண் பெண் பாகுபாடு எல்லாம் அங்கே இல்லை.
காய் நறுக்கி முடித்ததும், குழம்பு பொரியல் செய்யத் தொடங்கினர். “வித்யா அக்கா வா…” என வீரா அழைக்க…


“நான் எதுக்கு, என்னைத் தான் கட்டி கொடுத்து அனுப்பிட்டீங்க இல்ல… வீட்டு மருமகள் தான் வேலைப் பார்க்கணும், அதோ உன்னோட புது அண்ணி இருக்காங்க பாரு. அவங்களைக் கூப்பிடு.” என்றாள் வித்யா திலோவை காட்டி,


“ஏன் என் பொண்டாட்டி பண்ண மாட்டாளா… வா திலோ…” என அரவிந்தன் அழைக்க… உள்ளுக்குள் கலக்கமாக இருந்தாலும், கணவன் மீது இருந்த நம்பிக்கையில் திலோ எழுந்து சென்றாள்.


மாட்டேன் என்று சொல்லாமல் அவள் எழுந்து செல்வதே எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருக்க… காய்ந்து கொண்டிருந்த எண்ணையில் வீரா ஒவ்வொன்றாகப் போட்டவன்,” கிண்டுங்க அண்ணி.” என்றான்.


என்னத்தை கிண்டுவது? திலோவினால் அந்தக் கரண்டியை தூக்க கூட முடியவில்லை. என்ன செய்வது என அவள் யோசிக்கும் போது, பின்னால் இருந்து கரண்டியோடு சேர்த்து, அரவிந்தன் அவள் கையைப் பிடித்துக் கிளற ஆரம்பித்தான். திலோ லேசாகத் திரும்பி தன் கணவன் முகம் பார்க்க… அரவிந்தன் அவளைப் பார்த்துக் கண்சிமிட்டினான்.


இன்னொரு பக்கம் கரண்டி எடுத்து வீராவும் கிண்ட ஆரம்பிக்க… இப்படின்னா நல்லாவே சமைக்கலாமே எனத் திலோ மகிழ்ந்து போனாள்.


அரவிந்தன் வேறு வேலையாக அங்கிருந்து நகர்ந்தாலும், திலோ இரண்டு கையால் கரண்டியை பிடித்து விடாமல் கிளறிக் கொண்டு இருந்தாள்.


பூரணி நின்று அளவு சொல்ல… மிளகாய் தூள், உப்பு எல்லாம் எடுத்து வீரா போட… சாம்பார் கொதித்து முடிக்கவும், “அண்ணி எல்லாம் சரியா இருக்கா பாருங்க.” என்றான் வீரா.


“எல்லாம் சரியா இருக்கு.” திலோ ருசி பார்த்து சொல்ல… அடுத்து மடமடவென்று பொரியல் செய்து முடித்தனர். பாயசமும், அப்பளமும் மட்டும் வீட்டிற்குள் வைத்துக் காமாட்சி செய்து விட்டார்.

இப்படி எல்லாம் தான் இவ்வளவு பேரோடு சேர்ந்து இருப்போம் என திலோ கனவு கூட கண்டது இல்லை. மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தாள்.


அண்ணன் தம்பிகளே பந்தி பரிமாறினார்கள். முதலில் சின்னப் பிள்ளைகளுக்கு உணவு பரிமாற அழைக்க…. எல்லாம் சேர்ந்து ஆடி விட்டு, கரி வண்டி போல வந்து நிற்க… பாவனாவை அழைத்துக் கொண்டு சென்ற திலோ, முகம், கை, கால் கழுவி, வேறு உடை மாற்றி அழைத்து வந்து சாப்பிட உட்கார வைத்தாள்.


அவர்கள் இருவரையும் யார் பார்த்தாலும், அம்மா மகள் என்றுதான் சொல்வார்கள். வித்தியாசமாகத் தெரியவே இல்லை. மற்றவர்களுகாக அதிகபடியாகப் பாவனாவை கவனிக்கவும் இல்லை… அதே போல, நீ எப்படியோ போ என்றும் இருக்கவில்லை. வெகு இயல்பாகத் திலோ நடந்து கொண்டாள். பாவனாவும் எது செய்வதாக இருந்தாலும், வந்து திலோவிடம் சொல்லி விட்டே செய்வாள்.

அந்தக் குடும்பத்தினருக்கு திலோ மீது நல்ல அபிப்பிராயம் வந்தது. எல்லோர் மனதிலும் திலோத்தமா நல்ல விதமாகவே இடம் பிடித்தாள்.

 

Advertisement