Advertisement

சங்கீத ஸ்வரங்கள்



அத்தியாயம் 14



பாவனாவின் மற்ற வகுப்புக்களுக்குத் திலோத்தமாவும் அவளுடன் கூடவே சென்று, அங்கே காத்திருந்து அழைத்து வருவாள். நிறைய வகுப்புகளிலும் சேர்க்கவில்லை. பாவனாவை காரத்தேயிலும், பாட்டு கிளாஸிலும் மட்டும் சேர்த்து இருந்தனர்.


எல்லாவற்றிற்கும் பாவனாவுக்குத் திலோத்தமா கால அட்டவணை போட்டுக் கொடுத்து விடுவாள். இந்த நேரம் விளையாட்டு, இந்த நேரம் படிப்பு, இந்த நேரம் டிவி என… அதனால் பாவனாவுக்கும் ஒரே மாதிரி இல்லாமல்… நேரம் சுவாரசியமாகச் சென்றது.


இருவரும்தான் அதிக நேரம் இருப்பதால், திலோ பாவனாவுக்கு இடையே நெருக்கமும் அதிகரித்தது. காலை பாவனாவை பள்ளிக்கு கிளப்பும் அரவிந்தனிடம், அவன் மகள் எல்லாவற்றையும் ஒப்பித்து விடுவாள்.


“உங்க அப்பா உன்னை என்ன பார்த்துகிறார்? எங்க அப்பா என்னை எப்படிப் பார்த்துப்பார் தெரியுமா? அதே உங்க அப்பாவை எப்ப கேளு நேரம் இல்லை.” எனத் திலோ பாவனாவிடம் அரவிந்தனைப் பற்றிப் போட்டுக் கொடுக்க…


“ஆமாம் மேடம், எனக்கு டைம் இல்லை. என்னால பார்த்துக்க முடியலை. அதுதான் நீங்க இருக்கீங்க இல்ல மேடம். அப்புறம் அம்மான்னா சும்மாவா.” என்றான்.


“இதெல்லாம் அம்மா தானே டா பண்ணனும்.” அவன் பாவனாவிடம் கேட்க, அவள் ஆமாம் என்றாள்.


இருவரும் பாவனா முன்பே செல்ல சண்டை போட்டு, அவளையே பஞ்சாயத்திற்கு வேறு கூப்பிடுவார்கள். அவள் இவர்கள் இருவர் அடிக்கும் கூத்தை பார்த்து சிரித்துக்கொள்வாள்.


அன்று மாலை அவள் தோழிகளை வீட்டிற்கு அழைத்து வந்து, அவள் அறையில் உட்கார்ந்து, பாவனா விளையாடிக் கொண்டு இருந்தாள்.


“ஹே உன்னோட ரூம் ரொம்ப நல்லா இருக்கு.” எனத் தோழிகள் சொல்ல, பாவனாவுக்கு மகிழ்ச்சி.


“எங்க வீட்ல நான் இது மாதிரி கட்டில் கேட்டேன் வாங்கியே தரலை. உன்னோடது அழகா இருக்கு, நீ இதுலையா தூங்குவ.” என்றதும், பாவனா இல்லை எனச் சொல்ல…


“ஐயோ நீ வேஸ்ட். அப்புறம் எதுக்கு உனக்குன்னு தனியா ரூம். நாங்க எல்லாம் தனியா எங்க ரூம்ல தான் தூங்குவோம். ஏன் உனக்குப் பயமா?” எனத் தோழிகள் சீண்ட….


அன்று இரவு, “நான் இனிமே என்னோட ரூம்ல தூங்கப் போறேன்.” என்றாள் பாவனா.


“ஏன் இந்தத் திடீர் முடிவு?” திலோத்தமா கேட்க,


“நானும் இப்ப பெரிய பொண்ணு ஆகிட்டேன் இல்ல… அதோட என்னோட கட்டில் இன்னும் கொஞ்ச நாள்ல சின்னது ஆகிடும். அதனால நான் அதுலயே தூங்கிக்கிறேன்.” என்றாள்.


தன்னைப் போலப் பெற்றோரை சார்ந்து இருக்காமல்… அவளாவது தைரியமாக வளரட்டும் என நினைத்த திலோ சரி என்றாள்.


பாவனா அவள் அறையில் சென்று படுத்துக் கொள்ள… அவள் உறங்கியதும், தங்கள் அறையில் வந்து படுத்த திலோவும் படுத்ததும் உறங்கி விட்டாள்.


வழக்கமாக விழிப்பது போல அரவிந்தன் வந்துவிட்டானா என அவள் கண் திறந்து பார்க்க.. பக்கத்தில் அவன் இல்லை. அறைக்கு வெளியே வந்து தேட… அவன் வீட்டுக்கு வந்த சுவடே இல்லை. நேரம் அப்போதே பதினோரு மணி.


ஏன் இன்னும் வரவில்லை. திலோவுக்குக் கொஞ்சம் பதட்டமாகி விட .. உடனே அவனைக் கைபேசியில் அழைத்தாள்.


“வீட்டு கிட்ட வந்துட்டேன் திலோ. இன்னைக்கு ஒரு எமர்ஜன்சி. அதுதான் லேட். நீ தூங்கி இருப்பேன்னு தான் போன் பண்ணலை.” என்றான்.


அவன் வந்துவிடுவான் என்றதும், திலோ உறங்காமல் அவனுக்காக விழித்து இருந்தாள். உணவை எடுத்து சூடு செய்து வைத்தாள்.


தன்னிடமிருந்த சாவியால் கதவைத் திறந்து கொண்டு வந்தவன், ஹாலில் மனைவி உட்கார்ந்திருப்பதைப் பார்த்து திகைத்துத்தான் போனான்.


“ஹே…நீ திரும்பப் படுத்து தூங்கி இருப்பேன்னு நினைச்சேன்.”


“இன்னைக்குப் பாவனா சீக்கிரம் தூங்கினாளா, நானும் சீக்கிரமே தூங்கிகிட்டேன். இப்ப எழுந்ததுக்கு அப்புறம் தூக்கம் வரலை.” என்றாள்.


இரவில் பாவனா அறையில் குளிப்பதுதான் அவனது வழக்கம், இரவில் இவர்கள் இருவரும் உறங்கி இருப்பார்கள், தொந்தரவாக இருக்கும் என்றே அங்கே சென்று குளிப்பான்.


இன்றும் அது போல அந்த அறைக்குச் சென்றவன், அங்கே மகள் உறங்குவதைப் பார்த்து, கதவை மூடிக் கொண்டு வந்தவன், “இவ என்ன இங்க தூங்கிட்டு இருக்கா?” என்றான்.


“இனிமே அங்க தான் தூங்க போறேன்னு சொன்னா.”


“பார்ப்போம் எத்தனை நாளைக்கு?” என்றவன், தங்கள் அறையில் சென்று குளித்து விட்டு வந்தான்.


அவன் சாப்பிடும் வரை திலோத்தமா அவன் அருகிலேயே இருந்தாள். சாப்பிட்டதும் உடனே தூங்க மாட்டான். அன்று அவளுக்காக உடனே படுக்கை அறைக்கு வந்துவிட்டான்.


பாவனா சில சமயம் எழுந்து வந்தாலும் வரலாம் என்று அறைக் கதவை தாழிடாமல் வெறுமனே சாத்தி மட்டும் வைத்து இருந்தான்.


இந்த அறையில் இன்றுதான் இவர்கள் இருவர் மட்டுமே இருக்கிறார்கள். திலோ உறங்காமல் புரண்டு புரண்டு படுக்க…


“என்ன?” என்றான் அவளிடம் திரும்பி,


“தூக்கம் வர மாட்டேங்குது.” என்றாள்.


“அப்புறம் ஏன் கஷ்ட்டப்பட்டுத் தூங்கிற? என்னோட பேசிட்டு இரு.” என்றான்.


திலோ அவன் பக்கம் திரும்பி படுக்க… அரவிந்தன் அவளை இன்னும் சற்று நெருங்கி படுத்து அனைத்துக் கொண்டான்.


“என்ன பேசுறது?” திலோ கேட்க,


“என்னோட பேசு…” என்றவனுக்கும், இப்போதும் பேசும் எண்ணமில்லை.


வெகு அருகில் அதுவும் அணைத்தபடி படுத்து இருக்கவும், அரவிந்தனுக்கு வேறு எண்ணங்கள் தலைத் தூக்க ஆரம்பிக்க… திலோவை அன்று போல முத்தமிட ஆரம்பித்தான். திலோவும் அவன் இதழ் தீண்டலில் மயங்கிப் போய் இருக்க…


அவளிடம் இருந்து விலகி, “திலோ, இன்னைக்கு லேட்டா தூங்கினா பரவாயில்லையா…” என அவன் அனுமதி கேட்க,


அவளையும் தூண்டி விட்டுவிட்டு, இப்படிக் கேள்வி வேறு கேட்டு வைத்தால், அவளுக்குக் கோபம் வராது. அவள் அவனைப் பார்த்து முறைத்து வைக்க,


“ரொம்பச் சொதப்புறேனோ…” எனச் சிரித்தவன், எழுந்து சென்று அறைக் கதவை நன்றாக மூடிவிட்டு வந்தான்.


அவள் அருகில் பட்டும் படாமல் படுத்து, பார்வையால் அவளை ரசித்து, விரல்களால் வருடி… அவள் நெற்றியில் இருந்து இதழ் ஒற்றலை, அரவிந்தன் மென்மையாக ஆரம்பிக்க… மயக்கத்தில் திலோ கண்களை மூடிக் கொண்டாள்.


அவளின் வெட்கம், தயக்கங்கள், பயங்களை எல்லாம் அவனின் மென்மையான அணுகுமுறையில், மறைய செய்து, அவர்களின் கூடலின் ஒவ்வொரு நொடியையும் அவனும் ரசித்து, அவளையும் ரசிக்க வைத்துக் கொண்டிருந்தான்.


முடிந்தும், உடனே உறங்கி விடாமல், இருவரும் ஒருவரையொருவர் தழுவியபடி பேசிக் கொண்டே இருந்தனர்.


“பிடிச்சுதா உனக்கு.” அரவிந்தன் திலோவின் முகம் பார்க்க, அவனின் அடர்த்தியான மீசையை இழுத்து விளையாடியவள், வார்த்தையால் பதில் சொல்லாமல், அவன் இதழில் அழுத்தமாக இதழ் ஒற்ற…இன்னும் அவளைத் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.


“சாரி திலோ, உன்னை ஹனிமூன் மாதிரி எங்கையும் கூடிட்டு போக முடியலை.”


“நான் ஹனிமூன் போகணும்ன்னு உங்ககிட்ட கேட்டேனா? எனக்கு அந்த மாதிரி எதிர்ப்பார்ப்பு எல்லாம் இல்லை. நான் உங்களோட சந்தோஷமா இருக்கேன் அரவிந்த்.


“நிஜமாவே இன்னைக்கு இப்படி நடக்கும்ன்னு கூட நான் எதிர்ப்பர்க்களை.”


“போதும் தூங்கலாம், நாளைக்கு எனக்குக் காலேஜ் போகணும்.” என்றவள், அவன் தோளில் தலை சாய்த்துக் கண் மூடினாள்.


பாவனா அதே அறையில் இருந்ததால்.. இருவரும் தயங்கி தள்ளிப் போட்டுக் கொண்டே சென்றது. இன்று பாவனாவின் புண்ணியத்தால் தான் இருவரும் ஒன்று சேர்ந்தனர்.


காலை எழுந்ததில் இருந்து அரவிந்தன் திலோவின் பின்னே சுற்றிக் கொண்டு இருந்தான். “எனக்கு இன்னைக்கு லீவ், நீயும் லீவ் போட்டுக்கோ திலோ.”


“லீவ் போடணும்னா முன்னாடியே சொல்லணும்.”


“ப்ளீஸ்… ப்ளீஸ்…” எனப் பாவனாவுக்குத் தெரியாமல் கெஞ்சிக் கொண்டு இருந்தான்.


முதலில் அரவிந்த சென்று பாவனாவை பள்ளி பஸ்சில் ஏற்றி விட்டு வர…. திலோ கல்லூரி செல்ல தயராக இருந்தாள்.


அவள் கிளம்பி இருப்பதைப் பார்த்து, அவன் முகம் மாற… “முதல் ரெண்டு கிளாஸ் போய்யே ஆகணும் அரவிந்த். பத்தரை மணிக்கு முடிஞ்சிடும். அப்புறம் வீட்டுக்கு வந்திடுறேன் ஓகே வா…”


அரவிந்தன் பதில் சொல்லாமல் அவளை இறுக அனைத்துக் கொண்டான். அவன் கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்தவளும், மனமே இல்லாமல் தான் கிளம்பி சென்றாள்.


பத்தரை மணிக்கு அவள் கல்லூரி வாசலில், அரவிந்தன் காரோடு நின்று கொண்டிருந்தான். வெளியே இருந்து அவள் கைப்பேசிக்கு அழைக்க…


“இப்பதான் கிளாஸ் முடிஞ்சது. கே புக் பண்ணி வந்திடுறேன்.”


“வேண்டாம், நான் வெளியேதான் இருக்கேன்.” என்றதும், திலோவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.


“நீங்க என் பேர் சொல்லிட்டு உள்ள வந்திடுங்க. இங்க இருந்து கேட் ரொம்பத் தூரம்.” என்றவள், கணவனைப் பார்க்க ஆவலாகக் காத்திருந்தாள்.


கார் வந்து நின்றதும் விரைந்து வந்து காரில் ஏறிக் கொண்டாள்.


“நீங்க வரேன்னு என்கிட்டே சொல்லவே இல்லை.”


“வீட்ல தனியா இருக்க ரொம்பப் போர் அடிச்சுது. சரி உன்னைக் கூடிட்டு போகலாம்ன்னு வந்திட்டேன்.” என்றான்.


அடுத்த ஒரு மணி நேரத்தில் இருவரும் வீட்டில் இருந்தனர். அவளை உடைமாற்ற கூட அரவிந்தன் விடவில்லை. நேற்று இரவு ஆரம்பித்த காதல் பாடத்தை, மீண்டும் தொடர ஆரம்பித்தனர்.


இன்று கூடல் முடிந்ததும், களைப்பில் இருவருமே உறங்கி விட… பசிக்க ஆரம்பித்ததும் திலோத்தமாவின் தூக்கம் களைய… கண் திறந்தவள், பக்கத்தில் அசந்து உறங்கிக் கொண்டிருந்த அரவிந்தனின் தலையைக் கோதினாள்.


பிறகே அறையின் வெளிச்சம், இது விடியல் அல்ல எனப் புரியவைக்க… வேகமாகப் போர்வைக்குள் இருந்தபடியே, அவள் நேரத்தை பார்க்க, நேரம் அப்போது மதியம் மூன்று மணி. இன்னும் ஒரு மணிநேரத்தில் பாவனா வந்துவிடுவாள்.


“அரவிந்த்…” என அவள் போட்ட சத்தத்தில் அரவிந்தன் அலறி அடித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான்.


“என்ன?”


“மணி மூன்னு பாவனா வந்திடுவா?”


“ஈஸி… இப்ப ஏன் நீ இவ்வளவு டென்ஷன் ஆகுற?” என்றபடி கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த அவளின் ஆடைகளை எடுத்துக் கொடுத்தான்.


“நீங்க வெளியப் போங்க.” திலோ சொல்ல… அவன் அவளை முறைக்க…


“ப்ளீஸ்…” திலோ விழிகளால் கெஞ்ச…அரவிந்தன் அறையில் இருந்து வெளியே வந்துவிட்டான்.


திலோ வேகமாகக் குளித்து, கட்டிலில் இருந்த போர்வை எல்லாம் மாற்றிவிட்டு, அறையை ஒழுங்கு படுத்திவிட்டு வெளியே வர… அரவிந்தனும் பக்கத்து அறையில் குளித்து விட்டு வந்து சாப்பிட அமர்ந்து இருந்தான்.


திலோ சாப்பிடாமல் தலையைக் காய வைக்க…. “முதல்ல நீ வந்து சாப்பிடு.” அவன் போட்ட அதட்டலில் சாப்பிட உட்கார்ந்தாள்.


“பாவனா வந்து காலேஜ் போகலையான்னு கேட்டா என்ன சொல்றது அரவிந்த்?” அவள் உண்டபடி கேட்க,


“கிளாஸ் முடிஞ்சு சீக்கிரம் வந்திட்டேன்னு சொல்லு.”


“நாம பண்றது தப்பு இல்லையா?” என்றதும், கோபமே வராத அரவிந்தனுக்குக் கூடக் கோபம் வந்து விட்டது.


அவள் சுடிதாருக்குள் கைவிட்டு, அவன் தாலியை வெளியே எடுக்க… “என்ன பண்றீங்க?” என்றாள் பதட்டமாக.


“நான் உன்னைக் கல்யாணம் தான பண்ணி இருக்கேன். தள்ளிட்டு ஒன்னும் வரலையே. அதுதான் செக் பண்றேன்.” என்றதும், திலோவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.


பெத்தவங்க ரொம்ப அந்தரங்கமா இருக்கிறதை பார்த்தாலும் , பசங்க மனசு பாதிக்கும். பெத்தவங்களே அப்படிங்கும் போது, நீயும் நானும் சேர்ந்து இருக்கிறதைப் பார்த்தா.. அவ இன்னும் குழம்பி போய்டுவா.


ஏற்கனவே வித்யா வேற அவகிட்ட உளறி வச்சிருக்கா… எங்கே நாம அவளை விட்டுடுவோமோன்னு, பாவனா கொஞ்சம் பயந்து போய்த் தான் இருக்கா.. இதுல நாம அந்தரங்கமா இருக்கிறதை வேற பார்த்தா அவ்வளவுதான். அதனால் தான் நான் தள்ளி போட்டுட்டே இருந்தேன்.


இப்ப அவளே அந்த ரூமுக்கு போயிட்டா… அப்ப அவளுக்கு ஒன்னும் தோணாது. இதே நாம வேற ரூமுக்கு போய் இருந்தா. அவ கண்டிப்பா ஏன்னு யோசிச்சு இருப்பா.


அவளுக்குப் புரிஞ்சிக்கிற வயசும் இல்லை. அதே போல ஒண்ணுமே புரியாத வயசும் இல்லை.


“நாம சந்தோஷமா இருக்கனும்ன்னு, நாம அவளை எங்காவது அனுப்பினோமா… இல்லை நாம எங்கையாவது தனியா போனோமா?”


“நம்ம வீட்ல அதுவும் அவ இல்லாத நேரத்தில தானே… அதைக் கூட நீ தப்புன்னு நினைச்சா எப்படித் திலோ?” என அரவிந்தன் விளக்கி சொன்னதும், திலோவுக்கும் புரிந்தது.


“ஒழுங்கா சாதாரணமா இரு. நீயே எங்க அப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு காட்டி கொடுப்ப போல…”


“போதும் அடங்குங்க.” என்றவள், சாப்பிட்டு தலையைக் காய வைக்க.. அரவிந்தன் மகளை அழைக்கச் சென்றான்.


பாவனா அவனைப் பார்த்ததும், “திலோ அம்மா எங்க காணோம்.” என்றுதான் முதல் கேள்வியே கேட்டாள்.


“அம்மா இன்னைக்குச் சீக்கிரம் வந்திட்டாங்க. உனக்காக வீட்ல வெயிட் பண்றாங்க.” என்றான்.


பாவனா வரும் போது திலோ அவளுக்காகப் பால் காய்ச்சி கொண்டு இருந்தாள்.


“நீங்க இன்னைக்குச் சீக்கிரம் வந்துடீங்களா? ஏன் உடம்பு சரி இல்லையா?” பாவனா கேட்க,


“இல்லை… காலையில கிளாஸ் முடிஞ்சது. அப்புறம் ப்ரீயாதான் இருந்தேன். அதுதான் வீட்டுக்கு வந்திட்டேன்.”


“நீங்க இப்படியெல்லாம் வரலாமா? ஆனா நான் அப்படி ஸ்கூல்ல இருந்து வர முடியாது.” என்ற பாவனாவின் கவலையைப் பார்த்து, அவள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சிரிப்புதான் வந்தது.


அன்று மகளை அரவிந்தே வகுப்புக்கு அழைத்துச் சென்றான். திலோ அவள் அம்மாவை பார்க்க சென்று இருந்தாள்.


“என்ன டி எப்பவும் காலேஜ் முடிஞ்சு வருவ… இன்னைக்கு இவ்வளவு லேட்டா வர…”


“நான் இன்னைக்குக் காலேஜ்ல இருந்து சீக்கிரம் வந்திட்டேன் மா.. வீட்ல அவர் இருந்தாரு.” என்றாள். வைதேகிக்கு புரிந்து விட… அவர் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.


பாவனா வகுப்பில் இருந்து வந்ததும், அன்று அரவிந்தன் மகளைப் பாடம் படிக்க வைக்க.. திலோ சமையல் செய்தாள்.


அன்று மூவரும் சேர்ந்தே உணவு உண்டவர்கள். பிறகு மூவரும் குடும்பமாக உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.


“உனக்கு இன்னைக்குக் கிளாஸ்ல என்ன பாட்டு சொல்லிக் கொடுத்தாங்க.” அரவிந்தன் கேட்க, பாவனா பாடிக் காட்டினாள்.


“அப்பா நல்லா பாடுவாங்க.” பாவனா சொல்ல…


“அப்படியா அரவிந்த், ப்ளீஸ் எங்களுக்காகப் பாடுங்க.” என்றதும், அரவிந்தன்னும் பாடினான்.


“கண்ணான கண்ணே கண்ணான கண்ணே…
என் மீது சாய வா…
புண்ணான நெஞ்சை…
பொன்னான கையால்…
பூ போல நீவ வா…
நான் காத்து நின்றேன் காலங்கள் தோறும்…
என் ஏக்கம் தீருமா…”


அரவிந்தன் பாடி முடித்ததும் அம்மாவும் மகளும் கைதட்டினர்.


“ஓ… நீங்க இவ்வளவு நல்லா பாடுவீங்களா… அதுதான் உங்க பொண்ணும் நல்லா பாடுறா.” என்றாள் திலோ மகிழ்ச்சியாக.


“என்ன மேடம் இன்னைக்கு எங்க?” அரவிந்தன் பாவனாவிடம் கேட்க,


“நான் என்னோட ரூம்ல தான் தூங்குவேன்.” என்றாள்.


மகளை அவள் அறையில் உறங்க வைத்து விட்டு, கணவனும் மனைவியும் தங்கள் அறைக்கு வந்தனர்.


“அப்புறம் மேடம், நீங்க சொல்லுங்க, உங்களுக்கு எப்படி?” அரவிந்தன் புன்னகையுடன் கேட்க,


“எனக்கு நாளைக்குக் காலேஜ் லீவு பா…” என்ற மனைவியை அரவிந்தன் ஆசையுடன் தழுவி கொண்டான்.


மறுநாள் சனிக்கிழமை என்பதால்… நிதானமாகவே எழுந்தனர். அரவிந்தன் மட்டும் மருத்துவமனை சென்று வந்தான். மறுவாரம் ஞாயிற்றுக் கிழமை ஊரில் விருந்து வைப்பது என்று முடிவாக. அதற்குச் செல்ல குடும்பவே ஆவலாகக் காத்திருந்தது.


அவன் பெற்றோர் அழைத்திருந்தாலும், அரவிந்தனும் தன் சொந்த பந்தத்தைப் போனில் அழைத்தான்.

Advertisement