Advertisement

சங்கீத ஸ்வரங்கள்



அத்தியாயம் 13



ஞாயிற்றுக்கிழமை சமையல் செய்யும் பெண்மணிக்கு விடுமுறை. திருமணதிற்கு முன்பே அப்படித்தான். மதிய உணவுக்கு வைதேகி அழைத்திருந்தார். அதனால் அங்குச் சென்றனர்.


சாப்பிட்டதும் பாவனா கீழே பார்க்கில் பிள்ளைகள் விளையாடுகிறார்கள், தானும் போக வேண்டும் என அடம் பிடித்துச் சென்று விட்டாள். அரவிந்தனும் திலோவும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.


“எப்பவும் உங்க அம்மாவே நமக்குச் சமைக்கனும்ன்னு இல்லை. நீயும் உங்க அம்மாவுக்குச் சமைக்கலாம்.” என்ற அரவிந்தன், “அத்தை, இனி நைட்டுக்கு நீங்க அங்க வந்து சாப்பிடுங்க.” என்றான்.


“ஏன் மாப்பிள்ளை உங்களுக்கு நான் நல்லா இருக்கிறது பிடிக்கலையா?” என்றவர், “ஒரு பூரி சுடுறதுகுள்ள கையைச் சூட்டு வச்சாச்சு.” என வைதேகி மகளைப் பார்த்து நொடிக்க…


“என்னவோ நான் வேணும்னே சுட்டுகிட்ட மாதிரி சொல்றீங்க மா?” என்றாள் திலோ கடுப்பாக.


“யாருக்கு தெரியும், அப்பத்தான் இனிமே சமையல் செய்ய வேண்டாம்ன்னு சொல்வாருன்னு நினைச்சியோ என்னவோ?”


“பெத்த பொண்ணையே நம்பாத அம்மா நீங்கதான்.”


அவர்கள் அம்மா பெண் பேசுவது அரவிந்தனுக்குச் சிரிப்பாக இருந்தாலும், “பாவம் கவனிக்காம தான் சுட்டுகிட்டா.” என்றான், மனைவிக்குப் பரிந்து கொண்டு.


திலோவுக்கு முகம் கொள்ளா பெருமை, பார்த்துக்கோ என்பது போல… தன் அம்மாவிடம் ஜாடை செய்தாள். வைதேகிக்கும் சிரிப்பு தான்.


“சமையல் தானே அத்தை சீக்கிரம் பழகிப்பா. எனக்கு இருந்த கவலையெல்லாம் பாவனாவுக்கும் இவளுக்கும் ஒத்து போகுமான்னு தான். பாவனா எதாவது சொன்னா கூடப் பெரிசு பண்ண மாட்டேங்கிறா. என்னையும் பாவனாவையும் நல்லா புரிஞ்சு நடந்துகிறா.” அரவிந்தன் மாமியாரிடம் தன் மனைவியைப் பற்றிப் பெருமையாகச் சொல்ல…


“அது இவ அவ அப்பாகிட்ட பண்ணாத அழிச்சாட்டியமா… அதனாலதான் வேற ஒண்ணுமில்லை.” என்றார் வைதேகி.


“ஆமாம், அவங்க அப்பாவை பத்தி சொன்னா… இவகிட்ட ரொம்பப் பாசமா இருப்பாராமே? இன்னொரு குழந்தை கூட வேண்டாம்ன்னு சொல்லிட்டாராம்?” அரவிந்தன் சொல்ல,


“அப்படிச் சொன்னாளா இவ.” என்ற வைதேகி கொலை வெறியுடன் திலோத்தமாவை பார்த்தவர்,


“அவர் எங்க வேண்டாம்ன்னு சொன்னாரு. இவதான் சொல்ல வச்சா… இவளைத் தவிர வேற யாரையும் அவர் தூக்க கூடாது, கொஞ்சக் கூடாது. இன்னொரு குழந்தை வந்தா, மகள் மனசுல ஏங்கிப் போயிடுவான்னு, இவங்க அப்பா பழியை அவர் மேல போட்டுகிட்டார்.”


வைதேகி எல்லாவற்றையும் தன் மருமகனிடம் பிட்டுபிட்டு வைக்க….


“ஹே… நீ என்கிட்டே என்ன சொன்ன?” அரவிந்தன் சிரிப்பை அடக்கியபடி கேட்க,


“என் அப்பா என்கிட்டே அப்படித்தான் சொன்னார்.” என்றாள் திலோ அப்பாவியாக.


உண்மையும் அதுதான். சின்ன வயதில் திலோ, அவள் அப்பாவை வேறு யார் வீட்டு குழந்தையையும் தூக்க விட மாட்டாள். அதை வைத்து தான் இன்னொரு குழந்தை வேண்டாம் என அவள் அப்பா முடிவு எடுத்தார். ஆனால் மகளிடம் அப்படிச் சொன்னது இல்லை. அவருக்குமே மகள் மட்டும் போதும் என்ற எண்ணம்.


சாப்பிட்டு சிறிது நேரம் சென்று அரவிந்தன் திலோவை அழைத்துக் கொண்டு தங்கள் வீட்டிற்கு வந்துவிட்டான்.


“அம்மா, பாவனா வந்தா, அங்க வர சொல்லுங்க.” எனச் சொல்லிவிட்டு திலோ அவனுடன் சென்றாள்.


வீட்டிற்கு வந்து தங்கள் அறையில் ஏசி போட்டுக் கதவை சாத்தியவன், மனைவியைத் தன் கைவளைவுகுள் கொண்டு வந்தான்.


அவனின் கன்னக் குழியும், பல்வரிசையும் தூரத்தில் இருக்கும் போதே திலோவை வசியம் செய்யும், இன்று இவ்வளவு அருகில் நிற்கும்போது கேட்கவும் வேண்டுமா… ஆர்வம் தாங்காமல், அவன் கன்னக் குழியைத் தனது சுட்டு விரலால் திலோ தொட்டுப் பார்க்க…அரவிந்தனின் நிலை சொல்லவும் வேண்டுமா?


அவள் விரலால் தான் தொட்டாள். ஆனால் இவன் அவள் கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதிக்க… திலோ அவனுக்கு மறுபக்க கன்னத்தையும் காட்ட… அங்கேயும் அழுத்தமாக முத்தமிட்டான்.


நிமிர்ந்து மனைவியின் முகம் பார்த்தவன்,“பார்க்க அமுல் பேபி மாதிரி இருக்க. ஆனா ரொம்ப அட்டகாசம் பண்ணுவ போலையே…” என்றான் கண்களில் குறும்பு மின்ன.


“ம்ம்… ஆமாம் அப்படித்தான் இப்ப என்ன?” எனத் திலோத்தமா சவாலாகக் கேட்க, அரவிந்தனின் முகத்தில் புன்னகை பெரிதாக விரிந்தது.


“உங்க அப்பா பொண்ணுக்கு இடையில நான் வரலை. ஆனா எனக்கு அப்புறம் தான் உங்களுக்கு மத்த யாரும். அதை யாருக்கும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்.”


“என் மாலினியோட அப்படி வாழ்ந்தேன், இப்படி வாழ்ந்தேன்னு எதாவது கதை சொன்னீங்க அவ்வளவு தான்.”


“எனக்கு அந்த மாதிரி எந்தக் கதையும் கேட்க வேண்டாம் சரியா?” திலோ சொல்ல…


“ச்ச… உனக்கு ஒரு ரொமான்ஸ் கதை சொல்லலாம்ன்னு நினைச்சேன், வேண்டாமா?” என்றவன், அவள் முறைப்பதை பார்த்து, அவளை இறுக்கமாகக் கட்டிக் கொண்டான்.


மாலினியை பற்றி உண்மையையும் அவனால் சொல்ல முடியாது. அவள் உயிரோடு இல்லையென்றாலும், திலோத்தமாவிடம் கூட அவளைப் பற்றிச் சொல்ல மனம் வரவில்லை. அதே போலப் பொய்யாகவும் எதையும் சொல்ல விரும்பாமல் தான், இதுவரை மாலினியைப் பற்றிச் சொல்லாமல் இருந்தான். திலோவே இப்படிச் சொன்னதும், அவனின் மனப் போராட்டத்தில் இருந்து, அவனுக்குப் பெரிய விடுதலை.


மாலினியோடு அவன் வாழ்க்கை முடிந்து விட்டது. அது திலோத்தமாவுக்குத் தெரிவதால் மட்டும் என்ன ஆகி விடும். மாலினியை பற்றிச் சொல்லி, திலோவின் பார்வையில் அவளைக் கீழே இறக்க அவனுக்கு விருப்பம் இல்லை. அதே போலத் தன்னை அவள் பாவமாகப் பார்ப்பதையும் அவன் விரும்பவில்லை.


கணவன் வேறு எதோ சிந்தனையில் இருக்கிறான் எனத் திலோவுக்குப் புரிந்து விட, மெல்ல அவனிடம் இருந்து விலகினாள்.


“என்ன யோசிக்கிறீங்க?”


“இல்லை…. கல்யாணத்துக்கு முன்னாடியே ப்ரூப் பண்ண சொன்ன… ஆனா கல்யாணம் ஆகி ரெண்டு வாரம் ஆகிடுச்சு. அதுதான் இன்னைக்காவது எதாவது நடக்குமான்னு யோசிக்கிறேன்.”


“நீங்க இப்படியே ரூம் போட்டு யோசிச்சிட்டு இருங்க.” எனக் கிண்டலாகச் சொல்லிவிட்டு திலோ செல்ல, அவள் கைபிடித்துச் சுண்டி இழுத்தவன், “ஹே… நீ இப்ப என்ன சொல்ல வர? நான் லேட்டுன்னா?”


“நான் ஒன்னும் சொல்லைப்பா…”


“உன்னை நினைச்சுதான் திலோ விலகி இருந்தேன். அதுவும் நீ பாவனாவோடரொம்ப ஒன்றிப் போய் இருந்த. என்னைக் கண்டுக்கவே இல்லை.” அரவிந்தன் வேண்டுமென்றே சொல்ல..


“ஹே… பொய் சொல்லாதீங்க. நான் ஒன்னும் உங்களைக் கண்டுக்காம இல்லை.” என்றாள் திலோ


அரவிந்தன் விளையாட்டுக்குத்தான் அப்படிச் சொன்னான். திலோ இவன் வருவதற்குள் உறங்கி விட்டாலும், அவன் வரும்வரை ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்ல மாட்டாள். அவன் வரும் நேரம் மனதில் இருக்குமோ என்னவோ.. ஒருமுறை விழித்து வந்துவிட்டானா எனப் பார்த்து விட்டுத்தான் உறங்குவாள். அது அரவிந்தனுக்கும் தெரியும்.


“சும்மா சொன்னேன்…” என்றவன், மனைவியின் முக வடிவை தன் விரலால் அளந்து கொண்டே…“கல்யாணம் பண்ணிகிட்டோம் கடமைக்கு வாழ்ந்தோம்ன்னு இருக்கக் கூடாது.”


“சில விஷயங்கள் ஸ்பெஷல்லா இருக்கணும்… அதுவும் என்னோட திலோவுக்கு ரொம்ப ஸ்பெஷல்லா இருக்கணும்.” என்றவன், மயங்கி நின்ற மனைவியின் இதழில் முதலில் மிருதுவாக முத்தமிட… பிறகு அதுவே அழுத்தமாக, ஆழமாக என மாறியதே ஒழிய… முடிவுக்கு வந்த பாடு இல்லை.


பாவானா வந்துதான் இருவரையும் நிகழ் காலத்திற்குக் கொண்டு வந்தாள். மூவரும் சிறிது நேரம் படுத்து உறங்கினர். மாலையில் அர்ச்சனா வீட்டிற்குச் சென்றனர்.


திருமணம் முடிந்து இன்னும் அங்கே செல்லவே இல்லை. செல்வதற்கு முன்பே போன் செய்து இருந்ததால்… இவர்களுக்காக அங்கே எல்லோரும் ஆவலாகவே காத்திருந்தனர்.


அரவிந்தனும் திலோவும் சகஜமாகப் பேசிக் கொள்வதையும், இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் கிண்டலடித்துக் கொள்வதையும் பார்த்து, முகிலனுக்கும் அர்ச்சனாவுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.


எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டனர். அரவிந்தன் ஊரில் வைக்கும் விருந்தைப் பற்றி அவர்களிடம் சொன்னான். அவர்களும் குடும்பமாக வந்து கலந்து கொள்ள வேண்டும் என அழைத்தான்.


“சரி அரவிந்த், முன்னாடியே சொல்லிடு. நாங்க வரோம்.” என்றான் முகிலன்.


“ரொம்ப நாள் தள்ளிப் போனா நல்லா இருக்காது. சீக்கிரம் வைக்கணும்.” என்றான் அரவிந்தனும்.


அவர்கள் கிளம்புவதற்கு முன் மாலினியின் அம்மா, “பாவனாவை இங்க விடுறதுன்ன கூட விட்டுடுங்க. நாங்க பார்த்துக்கிறோம்.” என்றார்.


திடிரென்று அவர் அப்படிச் சொன்னதும், எல்லோரின் முகமுமே மாற.. திலோவின் முகம் கடு கடுக்கவே ஆரம்பித்தது. அதைக் கவனித்தவர், “இல்லை நீங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போறீங்க. உங்களுக்குப் பாவனாவை பார்க்க கஷ்ட்டமா இருக்கும். அதனால சொன்னேன்.” என்றார்.


பாவனா முகத்தில் ஒரு கலக்கம். அதைக் கவனித்த திலோ, “நாங்க கிளம்புறோம்.” என உடனே எழுந்து கொண்டவள், எல்லோரிடமும் பொதுவாகத் தலையசைத்து விட்டு, வெளியே சென்றுவிட்டாள்.


“பாவனா நீ பாட்டிகிட்ட சொல்லலையா? உன்னைத் திலோ அம்மா நல்லா பர்த்துகிறாங்க தானே… நீயே சொல்லு உனக்கு எங்க இருக்க இஷ்ட்டம்?” அரவிந்தன் கேட்க…


“எனக்கு அப்பாவோட தான் இருக்கணும்.” என்றாள் பாவனா.

“அவ நல்லா இருக்கா. நீங்க கவலைப்படாம இருங்க.” எனச் சொல்லிவிட்டு அரவிந்தனும் மகளை அழைத்துக் கொண்டு சென்றான்.


அவர்கள் சென்றதும் முகிலன், “ஏன் மா உங்க வாயை வச்சிட்டு சும்மா இருக்க மாட்டீங்களா? உங்களுக்கு அரவிந்தைப் பற்றித் தெரியாதா… திலோத்தமா வேற கோவமா இருக்க மாதிரி இருக்கு.”


“ஏற்கனவே நாம அரவிந்துன்னுக்கு நிறையக் கஷ்ட்டம் கொடுத்திட்டோம். இனிமேயாவது அவன் சந்தோஷமா இருக்கட்டும்.” என அவன் சொன்னதற்கு, அவன் அம்மாவும் சரி சரியெனத் தலையை ஆட்டிக் கொண்டார்.


அன்று இரவு அரவிந்தனுக்கும் திலோத்தமாவுக்கும் இடையே அதைக்குறித்து வாக்கு வாதம் நடந்தது.


“அந்த அம்மாவுக்கு எதாவது சொல்லனும்ன்னா பாவனா இல்லாத போது சொல்லனும்ன்னு கூட அவங்களுக்குத் தெரியாதா?”


“அவங்க பேத்தி திலோ அது. அவங்க எதோ ஆதங்கத்தில கேட்டுட்டாங்க விடு.”


“அவங்க மட்டும் பேசலை, ஏன் உங்க தங்கை வித்யா கூடத்தான் பேசினாங்க. எனக்கு அது தெரியாதுன்னு நினைச்சிட்டு இருக்கீங்களா?”


அவள் சொன்னதைக் கேட்டு அரவிந்தன் திகைத்துத்தான் போனான். ஆனால் எப்படித் தெரியும் என ஆச்சர்யப்படவில்லை. பாவனாதான் சொல்லி இருப்பாள் எனத் தெரியும்.

“இப்படியே ஆளாளுக்கு எதாவது பேசி வைக்கட்டும். அவ என்கிட்டே இருந்து விலகி தான் போவா… அப்ப எல்லோருக்கும் சந்தோஷமா?”


அவள் கோபப்படுவதிலும் நியாயம் இல்லாமல் இல்லை. அர்ச்சனா வீட்டிற்குச் சென்று வந்ததில் இருந்து, பாவனா திலோவுடன் முகம் கொடுத்து பேசவில்லை. அரவிந்தனிடம் தான் ஓட்டிக் கொண்டு இருந்தாள்.


“திலோ, வித்யா இனிமே பேச மாட்டா… நான் அம்மாகிட்ட சொல்லிட்டேன். நீ எதுவும் மனசுல வச்சுக்காத.”


“நீங்க பயப்படாதீங்க. அவங்கதான் வயசுக்கு ஏத்த மாதிரி நடந்துக்களைனா, நானும் அப்படி நடந்துக்க மாட்டேன்.”


“எனக்குத் தெரியும் திலோ உன்னைப் பத்தி. பாவனாவும் சீக்கிரம் உன்னைப் புரிஞ்சிப்பா.” என்றான்.


அன்று இருவரின் மனநிலையுமே சரி இல்லாததால்.. வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் படுத்துக் கொண்டனர்.


மறுநாள் திங்கட்கிழமை என்பதால்… காலை வேளை பரபரப்பாக இருந்தது. அரவிந்தன் பாவனாவை பள்ளிக்கு கிளப்ப… திலோ மதியத்திற்கான உணவை மூவருக்கும் எடுத்து வைத்து விட்டு தானும் கல்லூரிக்கு கிளம்பினாள்.


மாலை பாவனா வழக்கம் போலக் கீழே பார்க்கிற்கு விளையாட சென்றவள், சிறிது நேரம் சென்று அழுது கொண்டே வந்தவள், கட்டிலில் சென்று படுத்துக் கொண்டாள்.


“என்ன பாவனா?” எனத் திலோ நிறைய முறை கேட்ட பின்னரே விஷயத்தைச் சொன்னாள்.

இவள் அவள் தோழிகளுடன் விளையாடும் போது, ஒரு பையன் வந்து, இவர்களிடம் வம்பு செய்து இருக்கிறான். அவனுக்கும் இவர்கள் வயது தான். இவர்கள் சென்று அவன் அம்மாவிடம் சொல்ல… அவரோ இவர்களைத் திட்டு அனுப்பி இருக்கிறார்.


“நீ என்னோட வா…” எனத் திலோ பாவனாவை அழைத்துக் கொண்டு கீழே பார்க்கிற்குச் சென்றாள்.


அங்கே அந்தப் பையனின் அம்மா இன்னும் கத்திக் கொண்டு இருந்தார். அவர்கள் வட நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர் திலோவை பார்த்ததும் இன்னும் சத்தம் போட…


“நீங்க கத்தி பேசினா, நீங்க சொல்றது உண்மையாகிடாது.” என்ற திலோத்தம்மா,


“பாவனா, இனிமே அவன் வம்பு செஞ்சா என்கிட்டே அழுதிட்டு வந்து சொல்லக் கூடாது. அவனை அடிச்சிட்டு வந்து சொல்லு. நான் பார்த்துகிறேன்.” என்றாள் சத்தமாக. அதைக் கேட்டு அந்தப் பையனின் அம்மா திகைத்துப் போய் நிற்க…


“உங்க பையனை நீங்க கண்டிச்சு வைக்கலைனா… ஒருநாள் அவன் மத்தவங்ககிட்ட தான் அடிவாங்குவான். அந்த நிலைமையை அவனுக்குக் கொண்டு வந்திடாதீங்க.” என்றாள் அவரைப் பார்த்து.


பாவனாவுக்கு அப்படி ஒரு சந்தோஷம், அவளின் தோழிகளின் அம்மாக்கள், அந்தப் பையனின் அம்மாவுடன் பேச முடியாமல்… தங்கள் பிள்ளைகளைத்தான் கண்டித்து அழைத்துச் சென்று இருந்தனர். திலோத்தமாவும் இவளைத் தான் எதாவது சொல்வாள் என நினைத்து இருந்தாள். ஆனால் திலோத்தமா நடந்து கொண்ட முறையில் மிகவும் மகிழ்ந்து போய் விட்டாள்.

அந்த நேரம் திலோத்தமா அவளது அம்மா என்பதே அவளுக்குப் பெருமையாக இருக்க… “அம்மா…” என்றபடி வந்து திலோவின் இடையைக் கட்டிக் கொண்டாள்.


திலோவுக்கும் மகிழ்ச்சி. “நீ இருந்து விளையாடிட்டு வா.” என்றவள், அங்கிருந்து தன் அம்மாவிடம் பார்த்துக்கச் சொல்லி கண்ணைக் காட்டிவிட்டு வந்தாள்.


அன்றிலிருந்து பாவனாவிடம் நிறைய மாற்றம். திலோத்தமாவுடன் மிகவும் ஒட்டிக் கொண்டாள். திலோத்தமா மகளைக் கராத்தே கிளாஸில் சேர்த்து விட்டாள்.


பாவனாக்கு பதிய வேண்டும் என்றே திலோவை அவளிடம் அம்மா என்றுதான் அரவிந்தன் சொல்வான். இப்போது மகளே “திலோ மா…” என அழைக்க ஆரம்பித்து இருந்தாள்.


“இது எப்போ இருந்து.” என அரவிந்தன் ஆச்சர்யப்பட… திலோ பதில் சொல்லாமல் புன்னகைத்தாள்.











Advertisement