Advertisement

சங்கீத ஸ்வரங்கள்



அத்தியாயம் 12


ஹோட்டலில் சாப்பிட்டு வீட்டுக்கு வரும் வழியிலேயே பாவனா உறங்கி விட… காரை நிறுத்திவிட்டு அவளை எழுப்பி நடக்க வைத்து கூட்டி வந்த அரவிந்த், மகளை உடை மாற்ற வைத்து, பாத்ரூம் சென்று வந்த பிறகே உறங்க விட்டான்.


அதற்குள் திலோத்தமாவும் பக்கத்து அறையில் நைட்டி மாற்றி வந்திருந்தாள். அரவிந்தன் உடைமாற்றி விட்டு, பாவனா இருந்த அறைக்கதவை மூடி விட்டு வந்தவன், திலோத்தமா சமையல் அறையில் இருப்பதைப் பார்த்து அங்குச் சென்றான்.


“ஆமாம் நீயும் இந்நேரம் தூக்கத்தில சாமி ஆடுவியே. இன்னைக்கு மட்டும் எப்படி முழிச்சு இருக்க.” என்றான்.


“அது நான் மத்தியானம் படுத்து நல்லா தூங்கினேன்.” என்றவள், சமையல் அறையை ஒதுங்க வைத்து விட்டு வெளியே வந்தாள்.


“நாளைக்கு லீவ் தானே லேட்டா தூங்கினா பரவாயில்லை தான… நாம கொஞ்ச நேரம் பேசலாமா?” என்றான்.


“ம்ம்… பேசலாமே.” என்றவள், அங்கிருந்த திவானில் சென்று அமர… அரவிந்தன் அவளுக்கு எதிரில் பீன் பேகில் உட்கார்ந்து கொண்டான்.


“நீ சொல்லு முதல்ல, உங்க அப்பா பத்தி சொல்லு?”


“என்னோட அப்பா…” அவள் சொன்ன அப்பா என்னும் வார்த்தையே தொண்டையில் இருந்து வரவில்லை. அடிவயிற்றில் இருந்துதான் வந்தது.


“எங்க அப்பா மாதிரி ஒரு அப்பா கிடைக்க எல்லாம் நான் கொடுத்து வச்சிருக்கணும். இன்னொரு குழந்தை வந்தா… பாசத்தைப் பங்கு போட்டு தரணுமேன்னு, எங்க அப்பா எனக்கு அப்புறம் இன்னொரு குழந்தை வேண்டவே வேண்டாம்ன்னு சொல்லிட்டாராம்.”


“என்னைத் திலோத்தமான்னு அழுத்தி கூட அவர் கூப்பிட்டது இல்லை. எப்பவும் திலோ மா தான்.”


“தினமும் அப்பாவே தான் என்னைக் கொண்டு போய் ஸ்கூல்ல விடுவார். திரும்ப வரும் போது அம்மாவோட வருவேன்.”


“எப்பவும் ஸ்கூல்லுக்கு ஸ்நாக்ஸ் கூட அவர்தான் வைப்பார். எங்க அம்மாவை நம்பி கூடக் கொடுக்க மாட்டார். எந்தெந்த சீசன்ல என்னென்ன பழங்கள் கிடைக்குமோ, எல்லாமே எங்க வீட்ல இருக்கும்.”


“கடைப் பக்கம் போனேன்னு சொல்லி, வாரம் எதாவது ஒரு டிரஸ் எனக்கு எடுத்திட்டு வந்து நிற்பார். இதனால எங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை வந்திட்டே இருக்கும்.”


“நாங்க ஒன்னும் பெரிய பணக்கார குடும்பம் இல்லை. ஆனா என்னை ஒரு இளவரசி மாதிரிதான் எங்க அப்பா வளர்த்தார்.”


“எனக்குக் கஷ்ட்டம்ன்னா என்னன்னே தெரியாது. அப்படி வளர்த்திட்டு, ஒரு நாள் திடிர்ன்னு ஹார்ட் அட்டாக்ல, எங்களைத் தவிக்க விட்டுட்டு போயிட்டார்.”


“அதுவரை எனக்கு வெளி உலகமே என்னன்னு தெரியாது. நான் தனியா எங்கையும் போனதே இல்லை.” அதைச் சொல்லும்போதே அவள் கண்கள் கண்ணீரை சிந்திவிட, அரவிந்தன் எழுந்து அவள் அருகில் அமர்ந்து, ஆறுதலாக அவள் தோள் மீது கைபோட்டுக் கொண்டான்.


“யாரையும் எங்க அப்பா மனசு நோக பேசினதே இல்லை. எல்லோருக்கும் அவ்வளவு நல்லது பண்ணி இருக்கார். ஆனா எங்க அப்பாவை ஏன் கடவுள் அவ்வளவு சீக்கிரம் எடுத்தார், எனக்குப் புரியவே இல்லை. ரொம்ப நல்லவங்களாவும் இருக்கக் கூடாதோ என்னவோ?”


“அவர் இருக்கும் போதே, எனக்கு வரன் பார்த்திட்டு இருந்தாங்க. எங்க அப்பா இருந்திருந்தா, எனக்கு எப்பவோ கல்யாணம் பண்ணி இருப்பார். அப்பா இல்லாம கல்யாணம் பண்ணிக்கவும் பிடிக்கலை. அப்புறம் அம்மாவை தனியா விடவும் மனசு இல்லை. அதனாலதான் கல்யாணத்தைத் தள்ளி போட்டுட்டே வந்தேன்.


“நீங்க பாவனாவை பார்த்திக்கிறது, எனக்கு எங்க அப்பாவைதான் நினைவு படுத்துச்சு. எங்க அப்பாவும் உங்களைப் போலத்தான், வேண்டாம்ன்னு சொல்றது கூட மனசு நோகாமத்தான் சொல்வார். அதனால்தான் உங்களை ரொம்பப் பிடிச்சது. நானே வந்து உங்ககிட்ட கல்யாணத்துக்குக் கேட்டேன்.”


அவள் அப்பாவைப் பற்றிச் சொல்லிவிட்டு திலோத்தமா அரவிந்தன் முகத்தைப் பார்க்க, அவன் கண்களும் கலங்கிதான் இருந்தது.


அதைப் பார்த்ததும் திலோத்தமா தன் விழிகளைத் துடைத்தவள், “நமக்கு அப்பாவே இல்லை.. இனி எப்படி இருக்கப்போறோம்ன்னு அப்படித் தவிச்சிருக்கேன். ஆனா எங்க அம்மாவுக்காக நானும், எனக்காக எங்க அம்மாவும், அவரை மனசுல தள்ளி வச்சிட்டு வாழ கத்துகிட்டோம்.”


“இப்ப நல்லத்தான் இருக்கோம். நீங்க பீல் பண்ணாதீங்க.” என்றாள்.


“அவளுடைய அவ்வளவு கஷ்ட்டத்திலும், அவள் தனக்காகப் பேசுவது நினைத்து, அரவிந்தனுக்கு வியப்பாக இருந்தது.”


“எதோ கொஞ்சம் புண்ணியம் பண்ணி இருக்கேன் திலோ… இல்லைனா, நீ என் லைப்ல வந்திருக்க மாட்ட.” என்றான் மனதிலிருந்தது.


“போதும் என்னைப் பத்தி பேசினது, நீங்க உங்களைப் பத்தி சொல்லுங்க.” என்றதும், மாலினியைப் பற்றிக் கேட்கிறாளோ என நினைத்து விட்டான்.


“உங்க சின்ன வயசுப் பத்தி சொல்லுங்க. நீங்க அப்பவும் இப்படித்தான் அமைதியா?”


அவள் கேட்டதில் தன் சிறு வயது வாழ்க்கைக்குச் சென்றவன், முகத்தில் புன்னகை பெரிதாக விரிய… அவள் முகம் பார்த்து பேச… மீண்டும் எதிரில் சென்று அமர்ந்தான்.


“எங்க ஊர் கிராமம். அப்பா விவசாயி…எங்களுக்கு ஒரு முப்பது ஏக்கர் இருக்கு. ஆனா அது மொத்தமா வாங்கினது இல்லை. எங்க அப்பா குருவி சேர்கிற மாதிரி பணத்தைச் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமா வாங்கிப் போட்டது.”


“ஊருக்கே சோறு போடுற விவசாயி கையில காசு இருக்குமா… எங்க அப்பாவோட நிலைமையும் அப்படித்தான். நான் படிச்சது எல்லாம் கவர்ன்மென்ட் ஸ்கூல், காலேஜ் தான்.”


“எங்க அப்பா நான் பத்தாவது படிக்கும் போதே சொல்லிட்டார். எனக்கு விவசாயத்தைத் தவிர வேற எதுவும் தெரியாது. நான் இருக்கிற வரை இதைப் பண்றேன். ஆனா உனக்கு இது சரிபட்டு வராது. நீ நல்லா படிச்சிக்கோ… படிப்புதான் உன்னைக் காப்பாத்தும்ன்னு.”


“ஆடம்பரமா வாழத்தான் பணம் இல்லையே தவிர. மத்தபடி நாங்க சந்தோஷமாதான் இருந்தோம். எங்க ஊர் சூப்பரா இருக்கும் தெரியுமா.. அதுவும் எனக்குப் பெரியப்பா, சித்தப்பா பசங்க எல்லாம் நிறையப் பேர். நாங்க எல்லாம் சேர்ந்தா, எப்பவும் ஒரே ஆட்டம் தான்.”


“போர் அடிச்சா கிணத்துல குளிக்கப் போய்டுவோம். மழை பெஞ்சு ஆத்துல தண்ணி வந்தா… அங்கயும் போய் ஆட்டம் போடுவோம், ஆத்துல மீன் பிடிப்போம்.”


வீட்டுப் பறவை திலோ, அவளுக்கு அரவிந்தன் சொல்வதைக் கேட்க ஆச்சர்யமாக இருந்தது.


“உங்க வீட்ல தேட மாட்டாங்களா?”


“ஏன் தேடுறாங்க. பசிச்சா தானா வீட்டுக்கு வருவோம்ன்னு அவங்களுக்குத் தெரியும். அதுவும் கிராமம் தானே… இன்னாரு வீட்டு பசங்கன்னு எல்லோருக்கும் தெரியும். தொலைஞ்சு எல்லாம் போக முடியாது.”


“உங்களுக்கு இவ்வளவு சொந்தக்காரங்க சொல்றீங்க. ஆனா ஏன் அவங்க எல்லாம் கல்யாணத்துக்கு வரலை.”


“எல்லோரும் இப்ப அதே ஊர்ல இல்ல திலோ. நான் படிச்சு சென்னைக்கு வந்த மாதிரி, அவங்களும் ஆளுக்கு ஒரு பக்கம் இருக்காங்க.”


“நம்ம கல்யாணத்துக்கு வர ஆசைப்பட்டாங்க தான். வந்தா குடும்பமா தான் வருவாங்க. அதுதான் ஊர்ல ஒரு விருந்து மாதிரி வச்சிடலம்ன்னு, அங்க பார்த்துக்கலாம்ன்னு சொல்லிட்டோம்.”


அரவிந்தன் தான் உட்கார்ந்திருந்த இருக்கையில் நன்றாகச் சாய்ந்து, கால்களைத் தூக்கி திலோ உட்கார்ந்திருந்த திவானில் போட்டு, கைகளைத் தளிக்குப் பின் கோர்த்து, கிட்டதட்ட படுத்தபடி தான் பேசிக்கொண்டிருந்தான், திலோவும் திவானின் நன்றாகச் சாய்ந்து அமர்ந்து கதை கேட்டுக் கொண்டிருந்தாள்.


அவள் சென்னைப் பெண். வீடு தான் அவளது உலகம். ஒன்றிரண்டு முறை தோழிகளோடு வெளியே சென்று இருக்கிறாள். உறவினர் திருமணம் என்றால் கூடப் பெற்றோர் மட்டும் தான் செல்வார்கள். இவள் படிப்பைக் காரணம் காட்டி எங்கேயும் செல்ல மாட்டாள்.


திலோவுக்கு அப்படியே எதிர்மறையானது அரவிந்தனின் வாழ்க்கை முறை. அதனால் அவன் சொல்வதை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டு இருந்தாள்.


“டாக்டர் ஆகணும்ன்னு எனக்கு ரொம்ப ஆசை. எங்களுக்கு முன்னாடி தலைமுறை வரை, எங்க குடும்பத்தில காலேஜ் போனவங்களே இல்லை.”


“எங்க தலைமுறையில தான் காலேஜ் போய்ப் படிக்கப் போனோம். எங்க வீட்ல எங்க பெரியவங்கதான் படிக்கலை… ஆனா பசங்க எங்க எல்லோரையும் நல்லா படிக்க வச்சிருக்காங்க.”


“நாங்க எல்லாமே நல்லா படிச்சோம். என்னோட பெரியாப்பா பையன் ஒருத்தர் சித்தா டாக்டர், அண்ணி mbbs. இன்னும் ரெண்டு சித்தப்பா பசங்க இன்ஜினியரிங் முடிச்சு இருக்காங்க. அதுல ஒருத்தன் வெளிநாட்டில இருக்கான். இன்னொருத்தன் பெங்களூர்ல இருக்கான். இன்னொரு சித்தப்பா பசங்க கோயம்புத்தூர்ல பிஸ்னஸ் பண்றாங்க.”


“எங்க வீட்ல பொண்ணுங்க எல்லாம் டிகிரி மட்டும் தான் படிச்சாங்க. படிச்சதும் கல்யாணம் பண்ணி கொடுத்திட்டாங்க. வித்யா போல எனக்கு இன்னும் ரெண்டு தங்கைங்க இருக்காங்க. ஒருத்தி கோயம்புத்தூர்ல இருக்கா… இன்னொருத்தி தஞ்சாவூர்ல இருக்கா?”


“இவ்வளவு பேரா? நான் எப்ப அவங்களை எல்லாம் பார்ப்பேன்?” திலோ ஆர்வமாகக் கேட்க, “உனக்கு நாலு நாள் சேர்ந்து லீவ் வரும் போது சொல்லு ஊருக்குப் போகலாம். ஊருக்கு போயிட்டு நாலு நாள் கூட இருக்கலைனா நல்லா இருக்காது. அதுவும் எல்லார் வீட்டுக்கும் வேற கூப்பிடுவாங்க.”


“லீவ் வேணா போட்டுக்கலாம் அரவிந்த்.” எனத் திலோ சொன்னதிலேயே அவள் ஊருக்கு வர விரும்புகிறாள் என அரவிந்தன் புரிந்து கொண்டான்.


“சரி எனக்கு எப்ப லீவ் போட முடியும்ன்னு பார்த்து சொல்றேன்.”


“ம்ம் சரி அம்மாவையும் கூடக் கூடிட்டு போகலாமா?”


“கண்டிப்பா… ஊர்ல விருந்து எல்லாம் இருக்கு. அவங்களும் வரணும் தானே.”


மேலும் அவனின் ஹாஸ்டல் கதைகளை வேறு அரவிந்தன் சொல்ல…திலோ அவளின் கல்லூரிக் கதைகளைச் சொல்ல, இருவரும் பேசிப் பேசி நேரத்தை பார்த்தால்… விடியற்காலை மூன்று மணி ஆகி இருந்தது.


இவ்வளவு நேரமா பேசினோம் என வியந்தபடி இருவரும் படுக்கச் சென்றனர். இவ்வளவு பேசிய அரவிந்தன் மாலினியைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. திலோவும் அதைக் கேட்க விரும்பவில்லை.


காலையில் இவர்கள் இருவரும் அசந்து உறங்க… பாவனா வழக்கத்திற்கு மாறாக அன்று சீக்கிரமே எழுந்து கொண்டாள். பள்ளி விடுமுறை நாட்களில் பிள்ளைகள் எழுப்பாமலே எழுந்து கொள்வார்கள். இதே பள்ளி நாட்களில் எழுப்பினாலும் எழுந்து கொள்ள மாட்டார்கள்.


அவள் அரவிந்தனை எழுப்ப… “இன்னைக்கு லீவ் தான டா… இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு.” என அவளை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டு, அவன் தன் தூக்கத்தைத் தொடர… அவன் சத்தத்தில் திலோ எழுந்து கொண்டாள்.


பாவனாவிற்கு ஜாடை காட்டி வெளியே அழைத்து வந்தவள், “அப்பாக்கு இன்னைக்குத் தானே லீவ். அவர் தூங்கட்டும். அவரை எழுப்ப வேண்டாம்.” என்றவள், பாவனாவை பல் துலக்க வைத்து, முகம் கழுவி அழைத்து வந்தாள்.


அரவிந்தன் வீட்டில் இருந்தால்…. பாவனா எல்லாவற்றிற்கும் அவனிடம் தான் செல்வாள். அவன் இல்லையென்றால் தான் திலோத்தமா.


பாவனா ஹாலில் உட்கார்ந்து விளையாட… திலோ அவளுக்குப் பால் கொடுத்துவிட்டு, தான் சென்று குளித்து விட்டு வந்தாள்.


திலோத்தம்மா சமையல் அறையில் இருக்க, எட்டு மணி போல் எழுந்து வந்த அரவிந்தன், “என்ன இங்க நின்னு படிச்சிட்டு இருக்க?” என்றான்.


பின்னே நோட்டும் கையுமாக நின்றால், அவன் என்ன நினைப்பான். அவனை முறைத்த திலோ, “இது என்னோட சமையல் குறிப்பு நோட். பூரி செய்யப் பார்த்திட்டு இருக்கேன்.” என்றாள்.


“நீ எப்ப படிச்சு முடிச்சு? எப்ப பண்ணுவ?” எனக் கிண்டலாகக் கேட்டவன், சமையல் மேடையின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். இன்றைக்குத் தானே வீட்டில் இருக்கிறான். அதனால் இன்றுதான் அவள் படித்துச் சமைப்பது அவனுக்குத் தெரியும்.


“நீ இந்த யூ ட்யுப் எல்லாம் பார்த்து சமைக்க மாட்டிய?” (செல்வி அக்கா கேட்டதை நாமும் கேட்டு வைப்போம்.)


“இது எங்க அம்மாவோட சமையல் குறிப்பு. உங்க மாமியார் யூ ட்யுப்ல போட்டிருக்கங்களா?”


“ஓ…. ஓகே… நான் வேணா பூரி பண்றேன். நீ வேணா மசால் பண்ணு.” என்றான். திலோ அவனுக்குக் கலந்து கொடுத்த காபியை குடித்து விட்டு, பூரிக்கு மாவு பிசைய ஆரம்பித்தான்.


“பூரிக்கு மாவு கெட்டியா பிசையணும் தெரியும் இல்ல…” திலோ கேட்க, அவள் பக்கம் திரும்பியவன், “கொஞ்சம் இங்க வா.” என்றான்.


“எதோ சொல்ல கூப்பிடுகிறான் என நினைத்து அருகில் சென்றால்….. மாவை எடுத்து அவள் இரண்டு கன்னங்களிலும் பூசியவன், “பேசாம இருக்கணும். இல்லைனா இப்படித்தான்.” என்றான்.


திலோவும் மாவை எடுத்து அவனுக்குப் பூச செல்ல.. அவளின் இரண்டு கைகளையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.


“கையை விடுங்க, நீங்க மட்டும் பூசினீங்க இல்ல…”


“முடிஞ்சா பூசிக்கோ…” என்றவன் கையை விட்டால் தானே…


“ஆள் பார்த்தா ஒல்லியா இருக்கீங்க. ஆனா கொஞ்சம் கூட உங்களை அசைக்க முடியலையே? எல்லாம் எலும்புல சேர்த்து வச்சிருக்கீங்க போலிருக்கு.”


இவர்களின் சத்தம் கேட்டு பாவனா வர… சட்டென்று இருவரும் சமையல் மேடை பக்கம் திரும்பி நின்று கொண்டனர்.


அரவிந்தன் மட்டும் திரும்பி, “பாவனா குட்டிக்கு பசிக்குதா… இன்னும் கொஞ்ச நேரத்தில ரெடி ஆகிடும்.” என்றான்.


“என்ன டிபன்?” பாவனா கேட்க, “பூரி.” எனத் திலோ திரும்பாமல் சொல்ல…


“பூரியா ஓகே…” எனச் சென்றுவிட்டாள்.


திலோ முறைத்தபடியும், அரவிந்தன் சிரித்தபடியும் தங்கள் வேலையைப் பார்த்தனர்.

திலோ மசாலா செய்து முடித்தவள், பாவனாவை ஒரு பார்வை பார்த்து விட்டு அரவிந்தன் அருகில் சென்றவள், தன் இரண்டு கன்னங்களில் இருந்த மாவையும் அவன் அணிந்திருந்த டி ஷர்ட்டின் பின்புறம், அப்படியே முகத்தை வைத்து தேய்த்து துடைக்க…


முதலில் அவள் செய்வது புரியாமல் திகைத்தவன், புரிந்ததும், சிரித்துக் கொண்டு அவளைப் பார்த்தானே தவிரத் தடுக்கவில்லை. “இங்கையும் வேணா துடைச்சுக்கோ.” என்றான் முன்புறம் திரும்பி….


“ஹான்… ரொம்ப ஆசைதான்.” என்றவளை, அரவிந்தன் பிடிக்கச் செல்ல, அவன் கைகளில் சிக்காமல்… வெளியே சென்று பாவனா அருகில் அமர்ந்து கொண்டாள்.


அவள் அங்கிருந்து அரவிந்தனைப் பார்க்க… “நீ மாட்டுவ இல்ல… அப்ப இருக்கு.” என அங்கிருந்து ஜாடையில் அவன் காண்பிக்க…


“பூரி ரெடியா?” எனத் திலோத்தமா சத்தமாகக் கேட்க,


“ம்ம்… ரெடி ரெடி…” என்றவன், தான் அணிந்திருந்த பனியனை கழட்டி. திலோ மேல் தூக்கி போட்டு விட்டு, வேறு உடை அணிய சென்றான். திலோ சிரிப்பை அடக்கிக் கொண்டு இருந்தாள்.


உடை மாற்றி வந்து அவன் பூரிக்கு தேய்க்க… திலோ சூட்டு எடுத்தாள்.

ஒருமுறை கவனமில்லாமல், மாவை உயரத்தில் இருந்து, எண்ணெயில் தொப்பென அவள் போட்டுவிட.. எண்ணெய் அவள் கை மேலேயே தெரித்து விட்டது.


“அறிவு இருக்கா உனக்கு.” என அரவிந்தன் கத்த… பாவனா பதறி அடித்து ஓடி வந்தாள்.


அரவிந்தன் அடுப்பை அனைத்து விட்டு, திலோவின் கைகளை நீரில் காட்ட… திலோவுக்கு எரிச்சல் தாங்கவில்லை.


ஹாலுக்கு அழைத்து வந்து அவளை உட்கார வைத்தவன், மருந்து எடுக்கச் செல்ல… திலோவின் கையில் தோல் வழன்று, அந்த இடம் சிவந்து போய் விட… வலியில் திலோ கண் கலங்கினாள்.


“ரொம்ப வலிக்குதா… வலிக்குதா…” எனக் கேட்டுப் பாவனா தான் தவித்துப் போனாள்.


“அப்பா சீக்கிரம் வாங்க. மம்மிக்கு வலிக்குது.” அவள் கத்த, எடுத்து வந்த மருந்தை அரவிந்தன் தடவி விட்டான்.


“வலி போயிடுச்சா?” பாவனா கேட்க, போய் விட்டது என்பது போலத் திலோ தலையசைக்க…


“அதெல்லாம் அதுக்குள்ள போகாது.” என்ற அரவிந்தன், “சமைக்கும் போது கவனமா இருக்க வேண்டாமா… எண்ணெய் தெரிச்சதுக்குப் பதில், அந்தச் சட்டி கவுந்து இருந்தா?” என்றதும், திலோ அவனைப் பயந்து போய்ப் பார்க்க…


“சரி இனிமே கவனமா இரு.” எனச் சமையல் அறைக்குச் சென்றவன், பூரி சுட்டுக் கொண்டு வந்தான்.


வலது கை மணிக்கட்டில் தான் திலோவுக்குக் காயம். பாவனாவுக்கு ஒரு தட்டில் பூரியை வைத்துக் கொடுத்த அரவிந்தன், திலோத்தமாவுக்கு அவனே ஊட்ட…பாவனா இருப்பதைப் பார்த்து திலோ தயங்கினாள்.


“அம்மாவுக்குக் காயம் அதனால்தான்.” அரவிந்தன் காரணம் சொல்ல…


“அப்படினா எனக்கும் நீங்கதான் ஊட்டணும்.” என்றாள்.


நல்லவேளை ஊட்டி விட வேண்டாம் எனச் சொல்லவில்லை.


அரவிந்தன் இருவருக்கும் மாறிமாறி ஊட்ட… தன் வயிறு நிறைந்ததும், “அப்பா போதும்.” என்றவள், அவன் திலோவுக்குக் கொடுக்கச் செல்வதைப் பார்த்து, “அம்மாவுக்கும் போதும்.” என்றாள்.


“அச்சச்சோ… அம்மாவுக்கு இதெல்லாம் பத்தாது. அப்புறம் அம்மா சரியா சாப்பிடாம ஒல்லியானா வச்சுக்கோ… அவங்க அப்பா மேல இருந்து என்னைக் கோவிச்சுப்பார்.” என அரவிந்தன் திலோவை பார்த்து சிரிக்க…


“கண்டிப்பா… எங்க அப்பா பார்த்திட்டேதான் இருப்பார்.” என்றாள் திலோத்தமாவும் கண்களை அழகாக உருட்டியபடி.


பாவனாவுக்கு இன்னும் முழு மனதாகத் திலோத்தமாவை அம்மாவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அரவிந்தனுக்கும் அது புரிந்தது. மனைவி மகளோடு இனி அதிக நேரம் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான்.

Advertisement