பனி சிந்தும் சூரியன்

அத்தியாயம் 38

பணியாளர்கள் தங்கி இருந்த இடத்திற்கு அருகிலேயே, இரண்டு பெரிய அறையாகத் தடுத்து, இரண்டு ஆசிரியர்களும் போட்டு, அங்கேயே பாடம் நடத்த ஆரம்பித்து விட்டனர். கொஞ்சம் பெரிய பிள்ளைகளை, பக்கத்தில் இருந்த பள்ளியில் சேர்த்து விட்டனர்.

பிள்ளைகள் பாடம் படிக்கச் சென்றதால்… அவர்களுக்காக வீட்டில் இருந்த பெண்களும் வேலைக்கு வந்தனர். எந்தப் பக்கமும் பாதிப்பு இல்லாமல் அபர்ணா நிலைமையைத் திறமையாகவே கையாண்டாள்.

வீட்டிலேயே இருந்தால்… பொழுதும் போகவில்லை. அதோடு ராம்மை வேறு சீக்கிரம் வா என்று உயிரை எடுப்பதற்கு, எதாவது உபயோகமாகச் செய்வோம் என, இவர்கள் உதவும் இல்லத்திற்கும் அடிக்கடி ஸ்வர்ணாவோடு சென்று வந்தாள்.

அங்கே அந்த இல்லத்தின் தலைவியிடம், “உங்களுக்கு எப்படி இப்படி ஒரு இல்லத்தை ஆரம்பிக்கணும்னு தோனுச்சு.” என ஸ்வர்ணா கேட்க,

“நான் இந்த இல்லத்தை ஆரம்பிக்கலை… இதை ஏற்கனவே சச்சிதானந்தம் அய்யா பார்த்திட்டு இருந்தாங்க. நான் இங்க வந்து அவரோட சேர்ந்துகிட்டேன்.  இப்ப அவர் காலத்திற்கு பிறகு நான் பார்த்துகிறேன்.”

“உங்களுக்கு ஒன்னும் வயசு அதிகமா இல்லையே… அதுதான் கேட்கிறேன். எப்படி இங்க வந்தீங்க?”

அந்த இல்லத்தின் தலைவி சித்ரா முகத்தில் ஒரு கசந்த முறுவல்.

“நான் ரொம்ப ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவ. எங்க அப்பா பையன் வேணும்னு சொல்லி, நிறையக் குழந்தைகள் பெத்துகிட்டார். நாங்க அக்கா தங்கைகள் ஆறு பேர்.”

“நாங்களே கஷ்ட்டப்பட்டு அரசாங்க பள்ளி, கல்லூரி இப்படின்னு எப்படியோ படிச்சோம். அப்ப எனக்கு ஒரு வரன் வந்தது. ரொம்பப் பெரிய இடம். என்னடா இவ்வளவு பெரிய இடத்தில் இருந்து வந்து நம்மைக் கேட்கிறாங்கன்னு ஒரே ஆச்சர்யம்.”

“நீ அழகா இருக்க இல்ல… அதுதான். அவங்களுக்குப் பணம் பெரிசு இல்லைன்னு. எங்க அம்மா சொன்னாங்க. எப்படியோ கல்யாணம் நடந்தது.”

“மாப்பிள்ளை வெளிநாட்டில வேலை பார்க்கிறார். இங்க அவங்க அம்மா மட்டும் இருக்காங்க. அவங்களோட நான் இருக்கணும். அப்புறம் அவர் அடிக்கடி வந்திட்டு போவாருன்னு சொன்னாங்க.”

“என்னையும் அழைச்சிட்டு போங்கன்னு நான் சொன்னதுக்கு. அது சரி வராது மா… அம்மாவும் இங்க தனியா இருப்பாங்க. அம்மா காலத்துக்கு அப்புறம் வேணா பார்க்கலாம்.” என்றார்.

“கல்யாணம் முடிஞ்சு பத்து நாள் கூட இருந்தவர், அதுக்குப் பிறகு வெளிநாடு போயிட்டார். அந்தப் பத்து நாளும் என்னை ராணி மாதிரிதான் பார்த்துகிட்டார்.”

“அவர் வெளிநாடு போனதும், நானும் என் மாமியாரும்தான். என் வீட்டு ஆளுங்க யாரையும் என் மாமியார் சேர்க்க மாட்டாங்க. மத்தபடி என்கிட்டே நல்லாத்தான் இருந்தாங்க. அவங்களுக்கு அப்பவே கொஞ்சம் உடம்பு முடியலை. அதனால வேலை எதுவும் செய்ய முடியாது.”

“நான்தான் வேலை எல்லாம் செய்வேன். ஆனா நான் மேல படிக்கிறதுக்கு அவங்க எதுவும் தடை சொல்லலை. நான் கரஸ்பாண்டன்ஸ் மேலே படிச்சேன்.”

“என் வீட்டுக்கார் வருஷத்துக்கு ரெண்டு தடவைதான் வருவார். பத்து நாள் இருப்பார். போய்டுவார். குழந்தையும் எதுவும் இல்லை. பின்னாடிதான் தெரிஞ்சிது குழந்தை வராம அவர் பார்த்துகிட்டாருன்னு.”

“நாலு வருஷம் கழிச்சு, என் மாமியார் இறந்துட்டாங்க. அதுக்கு வந்தவர், நீ தனியா இருக்க வேணாம். உங்க அம்மா வீட்ல இருன்னு சொல்லிட்டுப் போனார். நானும் எங்க அம்மா வீட்ல இருந்தேன்.”

“அப்புறம் ஒரு ஆறு மாசம் கழிச்சு வந்தார். நான் இனிமே வெளிநாட்டிலேயே இருக்கப் போறேன். நம்ம ரெண்டு பேருக்கும் ஒத்து வராது, அதனால பிரிஞ்சிடலம்ன்னு சொன்னார்.”

“எங்க அப்பா அம்மாகிட்ட ரெண்டு லட்சம் பணம் கொடுத்து, விடுதலை பத்திரத்தில கையெழுத்து கேட்டார்.”

“எங்க அப்பா அம்மாவும் அவர்தான் பணம் கொடுக்கிறார் இல்ல. கையெழுத்து போட்டுடுன்னு சொன்னாங்க. அவங்களுக்கு அந்தப் பணம் பெரிசா தெரிஞ்சிது.”

“அப்ப எனக்குப் புரிஞ்சுது, இவருக்குப் பொண்டாட்டியா என்னைக் கல்யாணம் பண்ணிக்கலை… இவங்க அம்மாவை பார்த்துக்க ஒரு வேலைக்காரியா, என்னைக் கல்யாணம் பண்ணி இருக்காருன்னு.”

“நான் அதை அப்படியே அவர்கிட்ட சொல்ல, மறுக்காமல் ஆமாம்.” என்றார்.

“அவருக்கு வெளிநாட்டில் ஏற்கனவே வேறு ஒரு குடும்பம் இருக்குன்னு தைரியமா சொன்னார். உன்னை ஒன்னும் நான் சும்மா விடலையே… பணம் தான் கொடுக்கிறேன்னே… இத்தனை நாள் எங்க வீட்ல நீ கஷ்ட்டமா பட்ட, சொகுசா தானே இருந்தேன்னு.” திமிரா வேற பேசினார்.

“அந்த நிமிஷம் எனக்கு எப்படி இருந்திருக்கும். ஏழைங்கன்னா அவங்க வாழ்க்கையில் எப்படி வேணா விளையாடலாமா? அவருக்கு ஒரு பாடம் புகட்ட நினைச்சேன்.”

“நான் அவர் கொடுத்த விடுதலை பத்திரத்தில கையெழுத்து போடலை. இந்த மாதிரி பாதிக்கப்பட்ட பெண்களுக்காக வாதாடுற வக்கீல் சஹானாவை போய்ப் பார்த்தேன்.(நம்ம வல்லமை தாராயோ ஹீரோயின்)

“தைரியமா கேஸ் போடுங்க, அந்த ஆளை ஒருவழி ஆக்கலாம். இனிமே பொண்ணுங்க வாழ்க்கையில விளையாட யாருக்கும் தைரியம் வரக் கூடாதுன்னு சொன்னாங்க. நான் அதே மாதிரி கேஸ் கொடுத்தேன்.”

“கோர்ட்ல அந்த ஆளை கூண்டுல நிற்க வச்சு, சும்மா விட்டு விலாசிட்டாங்க சஹானா. எங்க கிட்ட இருக்கிற ஆதாரத்தை எல்லம் கோர்ட்ல கொடுத்து, நான் அவரோட சட்டபடியான மனைவின்னு ப்ரூப் பண்ணி. வெறும் ரெண்டு லட்சத்டோட தப்பிக்கப் பார்த்த அவர்கிட்ட இருந்து, முக்கால்வாசி சொத்தையும் பிடிங்கிட்டாங்க. அதோட அவருக்கு ஜெயில் தண்டனையும் வாங்கிக் கொடுத்தாங்க.”

“அப்புறம்தான் இந்த இல்லத்துக்கு வந்தேன். ஒரு கல்யானதுனால முட்டாள் ஆக்கப்பட்ட நான், திரும்ப கல்யாணம் பண்ணிக்க விரும்பலை. மிச்சம் மீதி வாழ்க்கையை மத்தவங்களுக்கு உபயோகமா கழிக்கலாமேன்னு இந்த இல்லத்தில அந்து சேர்ந்தேன். நான் இங்க வந்து ஆறு வருஷம் ஆச்சு.

சித்ரா சொல்லி முடித்ததும் , இப்படியெல்லாம் கூட மனிதர்கள் இருக்கிறார்களா என அதிர்ச்சியாக இருந்தது. அந்த நிலையில் சித்ராவின் துணிச்சலும், அவர் அதிலேயே தேங்கி விடாமல், மற்றவர்களுக்காகத் தன்னுடைய வாழ்க்கையை வாழ்வதும், ஸ்வர்ணாவுக்குப் பிரம்பிப்பாக இருந்தது. திரும்ப வரும் வழியில் அதையே யோசித்துக் கொண்டு வந்தார்.

“என்ன அத்தை ஒரு மாதிரி இருக்கீங்க.” அபர்ணா கேட்க,

“நான் என்னோட பிரச்சனையிலேயே தேங்கி நின்னுட்டேன். எனக்கு ஏன் இந்தச் சித்ரா மாதிரி மத்தவங்களைப் பத்தி நினைக்கத் தோணலை.” என்றார் வருத்தமாக.

“உங்களுக்கு ரெண்டு பசங்க இருந்தாங்க அத்தை. நீங்க அவங்களையும் பார்க்கணும் இல்லையா?”

“நீ சொல்றது சரிதான். ஆனா ஒரு வயசுக்கு மேல ராம் அகிலா அவங்க படிப்பு, வேலைன்னு பிஸியா இருந்தாங்க. நான் அப்பவாவது இதுமாதிரி யோசிச்சு இருக்கலாம்.”

“இப்ப கூட ஒன்னும் லேட் இல்லை அத்தை. நாம இனி செய்யலாம். இந்த மாதிரி பாதிகப்பட்ட பெண்கள், திரும்பத் தங்கள் வாழ்க்கையை மறுசீரமைப்புச் செய்ய நாம உதவலாம்.”

“நமக்கு ஹெல்ப் பண்ண சித்ரா இருக்காங்க. சஹானாவையும் நம்மோட சேர்த்துக்கலாம்.” அபர்ணா நம்பிக்கையாகச் சொல்ல, அதைக் கேட்டு ஸ்வர்ணாவுக்கும் நம்பிக்கை வந்தது.

அபர்ணா சொன்னது போலச் சித்ராவையும் ,சஹானாவையும் வரவழைத்து பேசினாள். சஹானாவை பார்த்ததும், இந்தச் பெண்ணிற்கு எப்படி இவ்வளவு துணிச்சல் என ஸ்வர்ணா வியந்தே போனார்.

அபர்ணா ராம்மை சஹானாவுக்கு அறிமுகம் செய்ய, “எல்லாச் சக்திகளும் ஒண்ணா சேர்ந்திட்டீங்க போலிருக்கு, கலக்குங்க.” என்றான்.

“எல்லாச் சக்திகளும் சொன்னீங்களே? அதுல காளி யாருன்னு சொன்னா நல்லா இருக்கும்.” எனச் சஹானா வேண்டுமென்றே கேட்க,

“அதுல என்ன டவுட்? அது என் பொண்டாட்டிதான்.” என்றான்.

அபர்ணா அவனை முறைத்தாலும், “அது உங்களுக்கு மட்டும். ஆனா உண்மையிலேயே அது சஹானாதான்.” என்றாள்.

“அசுரனை வதம் செய்யும் காளி போல… கலியுகத்தில் அசுரர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பது அவள் தானே.”

அபர்ணா அவர்கள் தொடங்கும் திட்டம் பற்றி சொல்ல, “நல்லா பண்ணுங்க, என்ன ஹெல்ப் வேணும்னாலும் என்னைக் கேளுங்க.” ராம் சொல்ல, இடையில் புகுந்த அபர்ணா, “அப்படியே என் பொண்டாட்டியை பிஸியா வச்சுக்கோங்க, நான் நிம்மதியா இருப்பேன்னு சேர்த்து சொல்லுங்க.” எனச் சொல்ல,

“அதுதான் நீயே சொல்லிட்டியே. உன்னை விட என்னை யாரும் புரிஞ்சு வச்சிருப்பாங்களா.” என்றவன், புன்னகையுடன் விடைபெற்றுச் சென்றான்.

சித்ராவின் இல்லத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான, ‘பெண்கள் நலவாழ்வு’ மையம்,  தொடங்கப்பட்டது. கணவரால் கைவிடப் படும் அல்லது பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவுவதே அவர்களின்  முக்கிய நோக்கம்.

அபர்ணா கர்ப்பமாக இருப்பதால்… முடிந்தவரை அவளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, ஸ்வர்ணா தான் சென்று பார்த்துக் கொள்வார்.

இங்கே கார்த்திக்கு, சுஜா சொன்னதை நினைத்து ஒரே குழப்பம். அகிலாவுக்கும் குழந்தை வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனால் அவனது பிடிவாதத்தைக் கைவிட்டான்.