முதல் இரண்டு மாதங்கள் கொஞ்சம் எதிர்பார்த்து ஏமாந்தனர். ஆனால் மூன்றாம் மாதம் அகிலா கருவுற்றாள். சுஜாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி, மருமகளைத் தாங்கு தாங்கு என்று தாங்கினார்.

அபர்ணாவுக்கு இப்போது ஆறு மாதங்கள், அவள் வயிறு இப்போது நன்றாகத் தெரிய, கொஞ்சம் உடம்பு வைத்து, இன்னும் அழகாக இருந்தாள். ராம்மிற்கு அவளிடம் இருந்து பார்வையைத் திருப்புவதுதான் சிரமமாக இருக்கும்.

அஞ்சலியை தேடி உமேஷ் தைரியமாக வீட்டிற்கே வர… பிரகாஷிற்கு விஷயம் தெரிய வந்தது. அவர் அஞ்சலியை கண்டிக்க. நீலீமாவிடம் பேசியதை போலவே அவள் பேசி வைக்க, ப்ரகாஷ் அவளைப் பெல்ட் எடுத்து விலாசினார்.

அப்போதும் அஞ்சலி பிடிவாதமாகவே இருக்க, நீலீமா மகள் விருப்பத்திற்கு ஆதரவு தர… அதில் பிரகாஷின் கோபம் நீலீமாவின் மீது திரும்பியது.

தினமும் இருவருக்கும் இடையே சண்டை, வாக்குவாதம் எனப் பிரச்சனை வலுக்க ஆரம்பித்தது.

“நான் தவறு செய்து விட்டேன். கடைசியில உங்க புத்தியை காமிச்சிடீங்க.” என ப்ரகாஷ் சொல்ல,

“நீங்க என்னை ஏமாத்திடீங்க. உங்களுக்குக் கல்யாணம் ஆனதை மறைச்சு, டைவர்ஸ் பண்றதா பொய் சொல்லி ஏமாத்திட்டீங்க.” என்றாள் நீலீமா.

“எனக்குக் கல்யாணம் ஆனது சொன்னப் பிறகுதானே உன்னோட வாழ ஆரம்பிச்சேன். ஏன் நீ அப்பவே போய் இருக்க வேண்டியது தானே.” என ப்ரகாஷ்அலட்சியமாகக் கேட்க,

இப்படி அவர் கேட்பார் என எதிர்ப்பார்க்காத நீலீமா அதிர்ச்சி அடைந்தாள். இவர்தானே போக விடாமல் தடுத்தது. அதை வசதியாக மறந்துவிட்டு பேசினார்.

ஒரு நாள் நீலீமா அலுவலகத்திற்கு வந்தபோது, அபர்ணா சட்டமாக ராம்மின் இருக்கையில் அமர்ந்து, எதோ தீவிரமாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

ராம் வேறுவேலையாக இருந்தாலும், அடிக்கடி மனைவியைப் பார்வையால் வருடவும் தவறவில்லை. அதில் காதல், அக்கறை, பெருமிதம் எல்லாமே இருந்தது.

போன் பேசிக் கொண்டிருந்தவன், அபர்ணா உட்கார்ந்திருந்த இருக்கை ஆடுவதைப் பார்த்து, பதறி அவளிடம் சென்றான். அவளை எழுப்பி, வேறு ஒரு இருக்கை கொண்டு வந்து, அவளை உட்கார வைத்தான்.

நீலீமாவும் தினமும் இந்த அலுவலகத்திற்கு வருகிறாள்தான், அவளால் பிரகாஷின் இருக்கையில் இப்படி அதிகாரமாக உட்கார முடியுமா என்றால்… முடியாது. தான் எங்கையோ தோற்று விட்டது போல இருந்தது.

நீலீமா அன்றிலிருந்து அலுவலகம் செல்வது இல்லை. அதைக் குறித்து ராம்மும் வீட்டில் ஆச்சர்யபட்டான். அகிலாண்டேஸ்வரி சொல்லி, அஞ்சலி வீட்டில் பிரச்சனை செய்வது இவர்களுக்குத் தெரியும்.

அபர்ணாவின் வளைகாப்பை வீட்டிலேயே செய்தனர். அகிலாவும் கருவுற்றிருப்பதால்… அவளைத் தவிர மற்றவர்கள் கலந்து கொண்டனர். அதனால்  அபர்ணா அகிலா இருவருக்குமே வருத்தம். இருவரும் எதிரெதிரே பார்த்துகொள்ளக் கூடாது என்பதால்தான்.

குழந்தை பிறப்பதற்கு முன் கடைசி ஒரு மாதம் அபர்ணா தாய் வீட்டில் இருக்க, அவளோடு ராம்மும் அங்குதான் இருந்தான். இங்கே அகிலா பிறந்த வீட்டிற்குச் சீராட வந்திருந்தாள்.

அபர்ணாவிற்கு ஒரு நாள் அதிகாலை வலியெடுக்க, அவளுக்குச் சிங்க குட்டி பிறந்தது. எல்லோரும் மகிழ்ச்சியில் இருக்க. அபர்ணா, “ஐயோ ! புலிக் குட்டி மிஸ் ஆகிடுச்சே.” என வருத்தம் கொள்ள,

“கவலைப்படாதே, நாம புலிக்குட்டி வர்ற வரை விடுறது இல்லை.” என்றான் ராம்.

“எஸ், நாம அந்தக் காட்டுக்கே இன்னொரு தடவை போறோம்.” என்றாள் அபர்ணா.
அவர்கள் இருவரும் பேசுவதைப் பார்த்த சுஜா, “என்ன இதுங்க பையன் பிறந்திருக்கான், ஆனா புலி சிங்கம்ன்னு பேசுதுங்க. எதாவது ஜூ வைக்கப் போதுங்களா…” எனக் கேட்க,

“அதுங்க ரெண்டும் ஹனிமூன் போயிட்டு வந்ததுல இருந்து, இப்படிதான் மா லூசு மாதிரி பேசிட்டு இருக்குங்க.” என்றான் கார்த்திக். அவன் சொன்னதைக் கண்டுகொண்டால் தானே, ராம் அபர்ணா இருவரும் அவர்கள் உலகில் இருந்தனர்.

அபர்ணா ஒரு மாதம் முடிந்ததும், குழந்தையைத் தூக்கிக் கொண்டு இவர்கள் வீட்டிற்கு வந்துவிட்டாள். ஏழு மாதத்தில் அகிலாவுக்கு வளைகாப்புச் செய்து, அவளையும் வீட்டிற்கு அழைத்துக் கொண்டாள். அகிலா வந்தால்… கார்த்திக்கும் இங்குத் தானே இருப்பான்.

“குழந்தை பிறந்து மூன்று மாதம் கழிச்சுதான், அகிலாவை நாங்க  அனுப்புவோம்.” என அவள் சுஜாவிடம் சொல்ல,

“நீ மட்டும் ஒரு மாசத்தில வருவ, ஆனா என் மருமகளை மட்டும் மூன்னு மாசம் கழிச்சு அனுப்புவியா? நீ நடத்து, அதுக்குப் பிறகாவது அனுப்பினா சரிதான்.” என்றார் அவர்.

வீடு இப்போது பழைய கலகலப்பிற்குத் திரும்பியது. அபர்ணா கார்த்திக்கின் அளப்பரையோடு, குழந்தையின் வரவு கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுக்க, ராம்மும் இப்போது சீக்கிரமே வீடு திரும்ப ஆரம்பித்தான். அகிலா எப்போதும் போல அதிக அலட்டல் இல்லாமல்…இனிமையாக நடந்து கொண்டாள்.

ஸ்வர்ணா ரொம்பப் பிஸியாக இருந்தார். காலை பத்து மணிக்கு இல்லத்துக்குச் சென்றால்… மதிய உணவு நேரத்திற்குத்தான் வீட்டிற்கு வருவார். வீட்டில் இருக்கும் நேரம் பேரனோடு சென்றது.

அகிலா தனக்குக் குழந்தை பிறக்கும் நாளை எண்ணிக் கொண்டு இருந்தாள். அண்ணன் மகனை அவள் பார்த்துக்கொள்ள, கார்த்திக் வந்துவிட்டால் அவனும் சேர்ந்து பாத்துக் கொள்வான்.

இரவு உணவுக்குப் பிறகு ராம் அபர்ணா இருவரும் மாடி பால்கனி தோட்டத்துக்குச் சென்று விடுவார்கள். ராம் அபர்ணா மடியில் தலைவைத்து கதை பேசிக் கொண்டு இருப்பான். அல்லது அவளைத் தன் மடி சாய்த்து இருப்பான்.

இவர்கள் இருவரையும் கவனித்த கார்த்திக், “நாம என்ஜாய் பண்ண முடியாதுன்னு தானே குழந்தை பெத்துகிறதை தள்ளி வச்சோம். ஆனா இதுங்க பாரு… எந்தச் சூழ்நிலை வந்தாலும், இதுங்க ரொமான்ஸ்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.” என்றான்.

“உங்களை யாரும் ரொமான்ஸ் பண்ண வேண்டாம்ன்னு சொன்னாங்களா?” அகிலா சிரிப்புடன் கேட்க,

“அதைச் சொல்லு, குழந்தையை உங்க அம்மாகிட்ட கொடுத்திட்டு வா… நாமும் முயற்சி பண்ணுவோம்.” என்றான்.

அகிலாண்டேஸ்வரி விருப்பத்திற்கு இணங்கி, ஐந்தாம் மாதம் குழந்தையின் பெயர் சூட்டு விழாவை, பெரிய வீட்டிலேயே வைத்தனர். வீட்டை நன்றாக அலங்கரித்து, நிறையப் பேரை அழைத்துச் சிறப்பாகச் செய்தனர். ப்ரகாஷ் மட்டும் வந்திருந்தார்.

தங்கள் வீட்டில் நடக்கும் விழா என்பதால்… வீட்டின் இளையபட்டாளதிற்குக் கொண்டாட்டம். அகிலாவுக்கு ஒன்பதாம் மாதம் என்பதால்… ஒரு சேரில் உட்கார்ந்து இருந்தாள். கார்த்திக் விருந்தினரோடு பேசிக் கொண்டு இருந்தான். சோனாவும் கர்ப்பமாக இருப்பதால்… விழாவுக்கு வரவில்லை. அவள் பிரசவத்திற்குக் காயத்திரி லண்டன் செல்கிறார்.

தேக்கு மரத்தில் செய்த பெரிய தொட்டில். அவர்கள் பரம்பரை தொட்டில் அது. அதை நடு ஹாலில் வைத்து, மலர்களால் அலங்கரித்து, ஸ்வர்ணாவின் பட்டு புடவையை அதில் விரித்து இருந்தனர்.

ராம்மும் அபர்ணாவும் தங்கள் திருமண உடையில் பொருத்தமான ஜோடியாக ஜொலிக்க, குழந்தை கொழுக் முழுக் என அழகாக இருக்க, அவனுக்குப் பேன்ட் மாடலில் வேஷ்ட்டியும், தங்க நிறத்தில் குர்தா மாடல் சட்டையும் அணிவித்து இருந்தனர்.

கழுத்தில் தங்க செயின், கையில் வைர காப்பு, காலில் தங்க கொலுசு எனக் குழந்தை ராஜக்களையில் இருந்தது. ஐந்து மாதங்கள் ஆனதால்.. எல்லோரின் முகம் பார்த்து, தன் பொக்கை வாய் தெரிய அழகாகச் சிரித்தது.

ஸ்வர்ணா பட்டுபுடவையில் கம்பீரமாக வளம் வந்தார். மனதின் மாற்றம் உடலிலும் தெரிந்தது. முன்போல் இல்லாமல் இப்போது உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருந்தார். அதோடு முகம் கொள்ளா மகிழ்ச்சி… அவரை இன்னும் அழகாகக் காட்டியது.

“நல்ல நேரத்தில் குழந்தையைத் தொட்டிலில் போடுங்க.” அகிலாண்டேஸ்வரி குரல் கொடுக்க, அபர்ணா ஸ்வர்ணாவிடம் குழந்தைக் கொடுத்தாள்.

“நீங்க தான் போடணும்.” ஸ்வர்ணா தயங்க,

“நீங்க போட்டாலும், நாங்க போட்டாலும் ஒன்றுதான்.” என்றாள். ராம்மும், “நீங்க போடுங்க மா.” என்றான்.

ஸ்வர்ணாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி, குழந்தையைக் கையில் வாங்கியவர், அதை அனைத்து முத்தமிட்டு, பின்பே தொட்டிலில் மெதுவாகப் படுக்க வைத்தார்.

“நீங்களே பேர் சொல்லுங்க.” என்றதும், அவர் தேர்வு செய்த பெயரான,

‘ரிஷிகேஷ் ஈஸ்வரன்’ என்ற பெயரை மூன்று முறை குழந்தையின் காதில் சொல்லி, பேரனுக்கு வாயில் தேன்தடவி, அட்சதை தூவினார்.

அடுத்து சுகன்யா ஸ்ரீகாந்த், அதன் பிறகு ராம் அபர்ணா என எல்லோரும் வரிசையாக வாழ்த்தினர். விழா முடிந்ததும், குழந்தையைத் தூக்கி வைத்து விதவிதமாகப் போட்டோ எடுத்தனர்.

ப்ரகாஷ் எல்லாவற்றையும் ஓரமாக உட்கார்ந்து பார்த்துக் கொண்டு இருந்தார். தான் எதோ பெரிதாக இழந்துவிட்டது போல இருந்தது.

“சரி போய் வந்தவங்களைக் கவனிங்க.” என அகிலாண்டேஸ்வரி குழந்தையை வாங்கி வைத்துக் கொண்டார்.

அவர் அறைக்குள் செல்லும் போது, பிரகாஷை ஒரு பார்வை பார்த்து செல்ல, சிறிது நேரம் சென்று ப்ரகாஷ் உள்ளே சென்றார்.

கட்டிலில் படுத்து இருந்த தன் பேரன் கையும் காலும் ஆட்டுவதைப் பார்த்து அவர் பரவசப்பட…

“எப்பேர்ப்பட்ட சந்தோஷத்தை நீ இழந்திருக்கன்னு இப்பவாவது உனக்குப் புரியுதா?” அகிலாண்டேஸ்வரி கண்ணீருடன் தன் மகனைப் பார்த்து கேட்க,

“ரொம்பத் தப்புப் பண்ணிட்டேன் மா… இவனைப் பார்க்கும் போது, என் ரத்தம்ன்னு என் மனசு தவிக்குது. இவனைத் தூக்கி கொஞ்சனும்ன்னு ஆசையா இருக்கு.” என்றவர், பேரனை கையில் தூக்கிக் கொண்டார்.

“இவன் அப்படியே ராம் மாதிரி இருக்கான்.”

“உன் பையன் உன்னை மாதிரி இருக்கான். அவன் பையன் அவனை மாதிரி இருக்கான்.”

ப்ரகாஷ் குழந்தையைத் தூக்கி பிடித்து ரசிக்க, “உரிமையா கொஞ்ச வேண்டியவன, இப்படித் திருட்டுத்தனமா கொஞ்சுறியே டா…” என அகிலாண்டேஸ்வரி வருத்தப்பட்டார்.

பிள்ளைகளிடம் கண்டிப்பு காட்டி வளர்க்கும் பெற்றோர் கூட, தங்கள் பேர பிள்ளைகளுக்கு அதிகமாகச் செல்லம் கொடுப்பர். வீராப்பாகத் பேசி திரியும் ஆண்கள் கூடப் பேரப் பிள்ளைகளிடம் தோற்றுப் போவார்கள். பேர்க் குழந்தைகளிடம் மயங்காதவர்கள் யாரும் இருக்கிறார்களா என்ன? பிரகாஷும் விதிவிலக்கு அல்ல.

“சரி நீ வெளிய போ. ராம் பார்த்தா பிரச்சனை ஆகும்.”

ப்ரகாஷ் மனமே இல்லாமல் குழந்தையைக் கட்டிலில் விட்டு சென்றார்.
அவர் அறைக்குள் சென்றதை ராம் பார்த்தே இருந்தான். அவன் முகம் இறுகி இருக்க, அபர்ணா அதைப் பார்த்து பயந்து போய் இருந்தாள். ப்ரகாஷ் வெளியே வந்ததும், இருவரும் உள்ளே சென்றனர்.

“என்ன உங்க மகன் வந்தார் போல…” என அகிலாண்டேஸ்வரியிடம் அவன் கேட்க,

“அவன் ரொம்ப வருத்தபட்டான் டா…” என்றார்.

“அதுக்குதானே பாட்டி இங்க விசேஷத்தை வைக்க ஒத்துகிட்டேன். நாங்க அப்பா இருந்தும் இல்லாம இருந்தோமே, அந்தக் கஷ்ட்டத்தை அவரும் உணர வேண்டாம்.”

“இப்படி ஒரு பேரனை, இனி அவர் எப்பவும் தூக்கவோ கொஞ்சவோ முடியாது. இன்னைக்கு அவனைப் பார்த்ததை நினைச்சே, அவர் காலம் எல்லாம் ஏங்கணும்.” ராம் கொஞ்சம் கூட இறக்கம் என்பதே இல்லாதது போலப் பேச…

“அடப்பாவி ! வேணுமுன்னே தான் பண்ணானா? நாம வேற இது தெரியாம பயந்து போய் இருந்தோமே.” என அபர்ணா நினைத்தாள்.

குழந்தையைத் தூக்கியவன், “இவன் எங்க மகன். ஸ்வர்ணாவோட பேரன்.” எனச் சொல்லிவிட்டுச் சென்றான்.