பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் 37
அஞ்சலி முன்பு ஒளித்து, மறைத்து உமேஷை சந்தித்துக் கொண்டு இருந்தாள். அவள் பெற்றோரை பற்றித் தெரிந்ததில் இருந்து பயமே கிடையாது. அவனோடு தைரியமாக வெளியே சுற்றிக் கொண்டு இருந்தாள்.
நீலிமாவிற்கு விஷயம் தெரிய, மகளைக் கண்டித்தாள்.
“அந்த உமேஷ் எல்லம் ஒரு ஆளுன்னு, நீ அவன் பின்னாடி சுத்திட்டு இருக்கியா?”
“ஏன் அவனுக்கு என்ன? அவனுக்கு முன்னாடி கல்யாணம் கூட ஆகலையே” அஞ்சலி சொல்லிதான் முடித்து இருப்பாள், அதற்குள் நீலீமாவின் கை அவள் கன்னத்தைப் பதம் பார்த்து இருந்தது.
“என்ன திமிரா? நம்ம குடும்பத்தோட சம்பந்தம் பண்ண அவங்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை. உங்க அப்பா ஒத்துக்க மாட்டார். வீணா பிரச்சனை பண்ணாத.”
“இங்க இருக்கிற அளவுக்கு அங்க பணம் இல்லை. அவ்வளவு தானே… எனக்கு அதைப் பத்தி கவலை இல்லை.”
அஞ்சலி பிடிவாதமாக இருக்க, நீலீமாவிற்கு என்ன செய்வது எனத் தெரியாமல், அவளை வீட்டிற்குள் சிறை வைத்தாள். அதோடு அவளின் செல் போன்னையும் பறித்து வைத்துக் கொண்டாள். வெளியே செல்ல வேண்டியது வந்தாலும், அவளே அழைத்துச் சென்று கூட்டி வந்தாள். இதெல்லாம் பிரகாஷிற்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டாள்.
அபர்ணா கர்ப்பமாக இருப்பது அறிந்து சுஜா மிகவும் சந்தோஷப்பட்டார். ஆனால் கார்த்திக்கிடம் கொஞ்சம் சடவாகவே காட்டிக் கொண்டார்.
“என்ன மா ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?”
“மருமகள் மாசமா இருக்கிறதுக்கு ஸ்வர்ணா விருந்து கொடுத்திருக்காங்க. எனக்கும் கொடுக்க ஆசையா இருக்காதா? உங்களுக்குத் தானே அவங்களுக்கு முன்னாடி கல்யாணம் ஆச்சு.”
“அம்மா, குழந்தை பெத்துகிறது எல்லாம் அவங்கவங்க சொந்த விஷயம். நீங்க விருந்து கொடுக்க, நாங்க பெத்துக்க முடியாது.”
“அபர்ணாவுக்கு இருப்பதிமூன்னு வயசுதான். ஆனா அகிலாவுக்கு இருபத்தி ஏழு ஆகுது. காலாகாலத்தில குழந்தை பெத்துக்க வேண்டாமா?”
“முதல் குழந்தைக்கே இவ்வளவு லேட் பண்ணா, அடுத்தக் குழந்தை எப்ப பெத்துபீங்க?”
“அவங்க பெத்துகிட்டா, நாங்களும் பெத்துக்கனுமா? எங்களுக்குத் தோணும் போதுதான் பெத்துப்போம்.” எனக் கார்த்திக்கும் பிடிவாதமாக இருந்தான்.
இதெல்லாம் அகிலா இல்லாத போது தான் நடந்தது. சுஜா இப்படிப் பேசியதில் கார்த்திக் கொஞ்சம் மூட் அவுட் ஆகி இருந்தான். இரவு வீட்டிற்கு வந்தவனிடம், எப்போதும் இருக்கும் கலகலப்பு இல்லை.
அவன் அமைதியாகச் சாப்பிட்டு, அவன் அறைக்குச் செல்ல, அகிலா என்ன என்று கேட்டாள்.
“ம்ம்… உன் மாமியாருக்கு நாம அவசரமா குழந்தை பெத்து கொடுக்கணுமாம்.” என்றான் நக்கலாக.
ஒரு வருடம் சென்று குழந்தை பெற்றுக் கொள்வோம் என்பது இருவரின் விருப்பமே…
“பெரியவங்க அப்படித்தான் நினைப்பாங்க. இதுக்கு ஏன் டென்ஷன் ஆகிறீங்க. என்னையும் தான் எல்லோரும் கேட்கிறாங்க.” என்றாள் அகிலா.
அவர்கள் அறையில் அபர்ணா ராம்மிடம், “இன்னைக்குக் கார்த்திக் அண்ணா சரியே இல்லை. எதோ யோசிச்சிட்டே இருந்தாங்க.” என்றாள்.
“வேலையில எதாவது டென்ஷன் இருக்கும். எப்பவும் ஒரே மாதிரி இருக்க முடியாது.” என்றான் ராம்.
ஆனால் காலையிலும் கார்த்திக் அமைதியாகவே இருக்க. ராம்மும் அபர்ணாவும் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தனர். அதுவும் அபர்ணா அவன் எதிரில் உட்கார்ந்து, கன்னத்தில் கைவைத்தபடி அவனையே பார்க்க, கொஞ்ச நேரத்தில் கார்த்திக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
“ஏய், காலங்காத்தால உனக்கு வேற வேலை இல்லையா? ஏன் என்னையே பார்த்திட்டு இருக்க?”
“ம்ம்.. நீங்க ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?”
“நாம ஒரு முடிவு எடுத்திருப்போம், அதை வேற யாராவது மாத்த நினைச்சா கடுப்பாகுது.” என்றான் எரிச்சலாக.
“நீங்க எடுத்த முடிவு சரியானதுன்னு உங்களுக்கு நம்பிக்கை இருந்தா… வேற யார் என்ன சொன்னாலும், அது உங்களை டிஸ்டர்ப் பண்ணக் கூடாது.” என்றாள் அபர்ணா.
அவள் வெகு சாதரணமாகச் சொல்லிவிட்டு சென்று விட்டாள். ஆனால் கார்த்திக் யோசிக்க ஆரம்பித்தான்.
அபர்ணா கர்ப்பமாக இருப்பது தெரிந்து, ஸ்வர்ணாவின் புகுந்த வீட்டினர், அவளைப் பார்க்க வந்தனர். அகிலாண்டேஸ்வரிக்கு மிகவும் சந்தோஷம். எங்கே ராம் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து விடுவானோ என அவருக்கு ஒரு கவலை இருந்தது. திருமணம் முடிந்து இப்போது குழந்தையும் வரப் போகிறது என்றதும், அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி.
முதலில் தன்னைக் கொள்ளுப்பாட்டி ஆக்கப்போவது அவன் வாரிசுதான் என்பதில், இன்னும் கூடுதல் மகிழ்ச்சி. அதோடு ஸ்வர்ணாவின் இந்த மாற்றம். அவரை இன்னும் வியக்க வைத்தது.
எப்போதும் மற்றவர்கள் பேச்சுக் கேட்டுத்தான் எதையும் செய்வார். இப்போது அவராகவே முடிவு எடுத்துச் செய்வது நன்றாக இருந்தது. அதுவும் அபர்ணா எதற்கும் தன் மாமியாரை கேட்டு விட்டே செய்வது இன்னும் நிறைவாக இருந்தது. இவர்கள் இருவருக்கும்தான் எப்படி ஒத்துப் போகுமோ எனக் கவலையில் இருந்தார்.
அவர் அதைப் பற்றி அபர்ணாவிடம் கேட்க, “அத்தை நான் எதாவது சொன்னா, சரியா இருந்தா, சரின்னு தான் பாட்டி சொல்வாங்க. மத்தவங்க மாதிரி மருமகள் சொன்னா… ஏத்துக்கக் கூடாதுன்னு எல்லாம் நினைக்க மாட்டங்க.”
“ஒரு வேலை அவங்க ஏட்டிக்கு போட்டியா இருந்திருந்தா… எனக்கு எதுவும் அவங்ககிட்ட கேட்கனும்னு தோணி இருக்காதோ என்னவோ.” என்றாள் மனதை மறையாது.
இங்கேதான் நிறைய மாமியார்கள் தவறு செய்வார்கள். மருமகள் எதாவது செய்தால்… வேண்டுமென்றே குற்றம், குறை கண்டு பிடிப்பது. சில நாட்களில் அந்த மருமகளுக்கு, இவங்க நாம என்ன செஞ்சாலும், குறைதான் சொல்லப் போறாங்க. எதுக்கு இவங்களுக்கு மரியாதை கொடுக்கணும் என்ற எண்ணம் வந்துவிடும்.
அதே போல அகிலாண்டேஸ்வரி ஸ்வர்ணாவிடம் கேட்க,
“மாமியார்களுக்கு மருமகள் மேல ஏன் ஒரு வெறுப்பு வருதுன்னா… நம்ம பையனை நம்மகிட்ட இருந்து பிரிச்சிடுவாங்கலோன்னு ஒரு பயம் இருக்கிறதுனாலதான். அபர்ணா அப்படிச் செய்ய மாட்டான்னு எனக்கு நல்லா தெரியும்.”
“இத்தனைக்கும் ராம் மேல ரொம்ப அன்பு வச்சிருக்கா, ஆனா அதே சமயம் எங்க பாசத்தையும் அவ குறைவா நினைக்கிறது இல்ல…எங்களையும் புரிஞ்சு நடந்துகிறா… அதனால் எங்களுக்குள்ள நீ பெரிசா, நான் பெரிசான்னு போட்டி இல்லை.” என்றார்.
ஸ்வர்ணா சொல்வதை அகிலாண்டேஸ்வரி அனுபவத்தில் கண்டே இருக்கிறார். ஸ்வர்ணா அவர் வீட்டுக்கு மருமகளாக வந்த பிறகு, அவருக்கும் ஸ்வர்ணவுக்கும் இடையே அப்படி ஒத்துப் போனது. ஆனால் அதே காயத்திரியும், சுமாவும் வந்த பிறகு, அவர்கள் மருமகள் எனக் கெத்து காண்பிக்க, இவரும் மாமியார் என்ற அதிகாரத்தைக் காட்டி கொண்டிருக்கிறார்.
சும்மாவே காயத்ரியும் சுமாவும் அபர்ணாவை ஓட்டுவார்கள். இப்போது கேட்கவே வேண்டாம்.
“பரவாயில்லை அபர்ணா, நாங்க அன்னைக்குப் பண்ண அலங்காரம் எல்லாம் வீண் போகலை. சொன்ன மாதிரி கரெக்ட்டா உன் வேலையைப் பண்ணிட்ட, அதே மாதிரி சரியா டெலிவர் பண்ணிடுமா.” என அபர்ணாவை கேலி செய்ய,
“எனக்கு ஒன்னும் பாராட்டு இல்லையா…” என ராம் தானாகவே வந்து தலையைக் கொடுத்தான்.
“வா டா நல்லவனே… கல்யாணம் வேண்டாம் வேண்டாம்ன்னு சொல்லிட்டு, ஒரே மாசத்தில கல்யாணம் பண்ணி, குழந்தையும் ரெடி பண்ணவன் தானே நீ…” என அவனையும் ஒட்டி எடுத்தனர்.
பிரவீணாவும் அவளை ஒப்புக்கு பார்க்க வந்தார். “நீ நினைச்ச மாதிரி, சீக்கிரம் இந்தக் குடும்பதுக்கொரு வாரிசு கொடுத்து, உன்னோட உரிமையை நிலைநாட்டிட்ட.” என்றார் குத்தலாக. அதற்கு அபர்ணா பதில் சொல்லாமல் இருக்க… அகிலா அவளை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.
பிரவீணா சென்றதும், “இந்த மாதிரி ஆளுங்ககிட்ட எல்லாம் பேசி, நாமே பெரிய ஆள் ஆக்கி விடக்கூடாது. அவங்க முன்னாடி நல்லா வாழ்ந்து காட்டனும். தானாவே வயிறு எரிஞ்சு செத்து போயிடுங்க.” என்றாள்.
யாரை எந்த அளவில் வைக்க வேண்டும் என அவளுக்கு நன்றாகத் தெரிகிறது என ஸ்வர்ணா நினைத்துக் கொண்டார். உண்மையாக சொல்லப் போனால், மருமகளிடம் இருந்து பாடம் படித்தார்.
ஸ்வர்ணாவும் அகிலாவும் சேர்ந்து ஷாப்பிங் சென்று அபர்ணாவுக்கு நிறையப் புடவைகள், நகைகள் வாங்கிக் கொண்டு வந்தனர்.
எல்லாவற்றையும் மாடி ஹாலில் உட்கார்ந்து கடை பரப்பி, அபர்ணாவுக்குக் காட்டிக் கொண்டு இருந்தனர்.
“உனக்குப் பிடிச்சிருக்கா. இல்லேன்னா மாத்திக்கலாம்.” என அகிலா கேட்க, “எல்லாமே நல்லா இருக்கு அகிலா.” என்றாள் அபர்ணா.
“இவங்களே எல்லாத்தையும் வாங்கினா. நான் என்ன வாங்கிறது?” எனக் கவலைப்பட்ட ராம், “உனக்கு என்ன வேணும்ன்னு சொல்லு.” என அபர்ணாவையே கேட்டான்.
“என்ன கேட்டாலும் தருவீங்களா?”
“கண்டிப்பா.” என்றான் ராம் யோசிக்காமல்,
“எனக்கு என்ன வேணும் தெரியுமா, நீங்க சாயங்காலம் சீக்கிரம் வரணும்.” என அபர்ணா அவனைப் பார்த்து கேட்க,
“அடிப்பாவி ! இப்படி மாட்டி விட்டுடாளே… இதுக்குதான் யோசிக்காம பேசக் கூடாது.” என்றவன், “சீக்கிரம் வரப் பார்கிறேன்.” என்றான்.
“அதெல்லாம் இல்லை, நீங்க சொல்லிடீங்க. இனி சீக்கிரம் வரணும்.” என அபர்ணா ஆர்டர் போட,
“நான் சீக்கிரம் வீட்டுக்கு வந்து உட்கார்ந்திட்டா, இந்த நகை புடவை எல்லாம் எப்படி வாங்கிறது?” என்றான்.
“எனக்கு இதெல்லாம் வேண்டாம். நீங்க நாம இப்ப வாழுதற்குச் சம்பாதிக்கலை… இன்னும் நாம இருபது வருஷம் கழிச்சு ஆடம்பரமா வாழுறதுக்குச் சம்பாதிக்கிறீங்க.” அபர்ணா குற்றம் சொல்ல,
“அபர்ணா, பணம் மட்டும் இல்ல டி, நாம இந்தப் பிசினஸ்ல பேர் வாங்கிட்டோம். நிறைய வாடிக்கையாளர்கள் வர்றாங்க. இனிமே நாமே நினைச்சாலும், பின்னாடி போக முடியாது புரியுதா… நான் போகவும் விரும்பலை. இது என்னோட பேஷன். நான் இதை விட முடியாது.”
“குழந்தை பிறந்த பிறகு நீ என்னோட ஆபீஸ் வந்திடு. நீ ஆபீஸ் பார்த்துக்கோ… நான் வெளியே வேலைகள் பார்த்துகிறேன். ரெண்டு பேரும் சீக்கிரம் வீட்டுக்கு வந்திடலாம். ஓகே வா.” என்றான். நல்லது என அபர்ணா எழுந்து அவர்கள் அறைக்குள் சென்றாள்.
“அவ உன்னைச் சீக்கிரம் வீட்டுக்கு வர சொன்னா… நீ அவளையும் சேர்த்து ஆபீஸ் கூப்பிடுற.” ஸ்வர்ணா சொல்ல,
“அவ பிஸியா இருந்தா தான், என்னைச் சீக்கிரம் வீட்டுக்கு வான்னு சொல்ல மாட்டா.” என்றான்.
“உன் ஆபீஸ்ல அவளுக்கு என்ன டா வேலை தெரியும், பேசாம அகிலாவோட பாத்துக்கட்டும்”
“அது சரி வராது கார்த்திக், அபர்ணா டாமினேடிங் பெர்சனாலிட்டி. அவ இருக்கிற இடத்தில அவதான் தெரிவா, அகிலாவோட இடத்தில் அகிலாதான் தெரியனும். அபர்ணா விரும்பினா, நான் அவளுக்குப் பிடிச்சது செஞ்சு கொடுப்பேன்.” என்றான்.
“தங்கச்சியும் விட்டுக் கொடுக்காம, பொண்டாட்டியும் விட்டுக் கொடுக்காம, நீ நல்லா மானேஜ் பண்ற டா…” எனக் கார்த்திக் சிரித்தான்.
ஒரு நாள் மாலை நான்கு மணிக்கே ராம் வீட்டிற்கு வர, அபர்ணா அவனை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.
“நான் சைட் விசிட் போறேன். போக ஒரு மணி நேரம், வர ஒரு மணி நேரம் ஆகும், கார்ல பேசிட்டே போகலாம் வரியா.” என்றான்.
அபர்ணா ஸ்வர்ணாவிடம் சொல்லிவிட்டு அவனோடு கிளம்பினாள். காரில் அவளைச் சாய்ந்து உட்கார வைத்து, சீட் பெல்ட் போட்டு பாதுக்காப்பாக அழைத்துச் சென்றான்.
“இது எனக்கா உங்க பாப்பாவுக்கா?”
“ம்ம்.. ரெண்டு பேருக்கும் தான். கொஞ்சம் அடங்கு.” என்றான்.
இருவரும் பேசிக்கொண்டே காரில் சென்றனர். அங்கே போய் அவளைப் பத்திரமாக ஒரு இடத்தில் உட்கார வைத்துவிட்டு, அவன் மட்டும் கட்டிடத்தைப் பார்க்க சென்றான்.
இப்போதுதான் புதிதாக ஆரம்பிக்கபட்ட கட்டுமான பணி. நிறையப் பேர் வடநாட்டினர் குடும்பம் குடும்பமாக அங்கே தங்கி இருந்தனர். எல்லோருக்கும் இரண்டு மூன்று எனக் குழந்தைகள் இருந்தது.
“என்ன படிக்கிறாங்க?” என அவள் விசாரிக்க,
“நாங்களே ஊர் ஊரா போய்ட்டு இருக்கோம். எப்படி ஸ்கூல் சேர்க்கிறது?” என்றனர்.
“இது என்னடா கொடுமை. அப்ப இவங்க எல்லாம் படிக்காம இப்படியே இருப்பாங்களா?” என வருத்தப்பட்டாள்.
திரும்பக் காரில் வரும்போது, “இவங்க எல்லாம் படிக்காம, இப்படியே வளர்ந்து, கொஞ்ச நாள்ல உங்ககிட்டயே வேலைக்கு வந்திடுவாங்க. நல்லா இருக்கு உங்க திட்டம்.” என்றாள் கோபமாக.
“அம்மா தாயே ! நீ எதையாவது கிளப்பி விட்டு, என் பிசினஸ் இழுத்து மூட வச்சிடாத.”
“நான் அவங்களைப் படிக்க வேண்டாம்ன்னு சொல்லலை. நாங்க பதினெட்டு வயசு கீழே யாரையும் வேலைக்கு எடுக்கிறதும் இல்லை.”
“குடும்பத்தைச் சொந்த ஊர்ல விட்டுட்டு, இவங்க மட்டும் வேலைக்கு வந்தா… அடிக்கடி போய்க் குடும்பத்தைப் பார்க்கிற தூரமும் இல்லை. அதனால இப்படிக் குடும்பமா வந்து இருக்காங்க. ஓரளவு சம்பாதிச்சிட்டு ஊர் பக்கம் போய்டுவாங்க. நீ சொல்றது சரிதான். படிக்காம இருந்தா திரும்ப அவங்க பசங்களும், இந்த வேலைக்குதான் வரணும்.”
“இடம் மாறிட்டே இருக்கிறதுனால ஸ்கூல்லையும் சேர்க்காம இருக்காங்க. நானே என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டுத்தான் இருக்கேன். உனக்கு எதாவது ஐடியா இருந்தா சொல்லு.”
“நான் யோசிச்சு சொல்றேன்.”
“ஆனாலும் ஒரு சின்னப் பையனை நீ ரொம்ப மிரட்டுற, நல்லாயில்லை சொல்லிட்டேன்.”
“நீங்க சின்னப் பையனா? அப்புறம் எப்படி உங்களுக்கு ஒரு குழந்தை வரப்போகுது?” அபர்ணா முக்கியமான சந்தேகம் கேட்க,
“ம்ம்… அது சொல்ல முடியாது. நைட் டெமோ காட்டுறேன்.” என்றதும், அபர்ணாவின் முகம் சிவக்க, “ நீங்க பெரிய பையன்தான் ஒத்துகிறேன்.” என்றாள்.
“இவ்வளவு தானா உன் தைரியம்.” என ராம் சிரித்தான்.
இரவு ஒன்றாக இருவரும் வீட்டிற்குள் நுழைய, “வீட்ல இருந்தா சீக்கிரம் வான்னு உயிரை எடுப்பான்னு ,இவளையும் கூடிட்டு போனியா?” கார்த்திக் கேட்க,
“சரியா சொன்ன டா மாப்பிள்ளை.” என ராம் அவனுக்கு ஹைபை கொடுத்தான்.
“அண்ணா, நாங்க நாளைக்கு எங்க வீட்டுக்கு போகலாம்ன்னு இருக்கோம்.” அகிலா ராம்மிடம் சொல்ல, அதைக் கேட்டு கணவன் மனைவி இருவரின் முகமும் மாறியது. அபர்ணா கார்த்திக்கை பார்க்க,
“ஹே… என்ன என்னைப் பார்த்து முறைக்கிற? நான் ஒன்னும் சொல்லலை.. அவளா தான் சொல்றா.” என்றான் கார்த்திக்.
அவள் ஒருநாள் போகத்தான் வேண்டும் அல்லவா, அதனால் “உன்னோட விருப்பம்.” என்றான் ராம்.
“இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு போங்களேன்.” அபர்ணா அகிலாவிடம் சொல்ல,
“இருக்கட்டும் அபர்ணா, அவங்களைச் சந்தோஷமா அனுப்பி வை.” என்றார் ஸ்வர்ணா.
“சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை இங்க வந்திடனும். ஓகே வா…” அபர்ணா கார்த்திக்கிடம் கேட்க,
“சரி.” என்றான் அவன். அதன் பிறகே அபர்ணாவின் முகம் மலர்ந்தது. தங்கை நாளை அவர்கள் வீட்டிற்குச் செல்கிறாள் என்றதும், ராம் கொஞ்சம் சோர்ந்துதான் போனான்.
“நாளைக்கு ஒரு அழுகாச்சி சீன் இருக்கு. எதுக்கும் கையில கர்சிப் ரெடியா வச்சிக்கணும்.” என அபர்ணா ராம்மை கேலி செய்து, அவனைத் திசை திருப்பிக் கொண்டு இருந்தாள்.
மறுநாள் நல்ல நேரத்தில் கார்த்திக்கும், அகிலாவும் அவர்கள் வீட்டிற்குக் கிளம்ப, தங்கைக்குப் புதுக் கார் பரிசளித்து, அதில்தான் ராம் இருவரையும் அனுப்பி வைத்தான்.
அவர்கள் இல்லாமல் வீடு கலகலப்பாகவே இல்லை என அதையே சொல்லி அபர்ணா புலம்ப, “நீ ரெண்டு நாள் ராம்மை அழைச்சிட்டு உங்க வீட்டுக்கு போய்ட்டு வா.” என்றார் ஸ்வர்ணா.
“நீங்க தனியா இருப்பீங்களே…” அபர்ணா தயங்க,
“நான் அத்தை வீட்டுக்கு போய் ரெண்டு நாள் அவங்களோட இருந்து பேசிட்டு வரேன். இங்க தான் காவலுக்கு ஆள் இருக்கு இல்ல, அதனால ஒன்னும் பிரச்சனை இல்லை.” என்றார்.
அவர் காரில் கிளம்பி சென்றதும், ராம்மும் அபர்ணாவும் கிளம்பி சென்றனர்.
“என்ன ஸ்வர்ணா அதிசயமா வந்திருக்க?” எனக் கேட்ட தன் மாமியாரிடம்,
“கார்த்திக்கும் அகிலாவும் கிளம்பி போனதும், அபர்ணா ரொம்பச் சோர்வா இருந்தா…. அதுதான் அவளை அவங்க வீட்டுக்கு அனுப்பிட்டு, நான் ரெண்டு நாள் உங்களோட இருக்க வந்தேன்.” என்ற மருமகளை மெச்சுதலாகப் பார்த்தார் அகிலாண்டேஸ்வரி.
மாலை ஹாலில் உட்கார்ந்து எல்லோரும் பேசிக் கொண்டிருக்க, பிரகாஷும் நீலிமாவும் அகிலாண்டேஸ்வரியை பார்க்க வந்தனர்.
எப்போதும் அவர்களைப் பார்த்தால் ஒதுங்கி போய் விடும் ஸ்வர்ணா, இன்று நிமிர்ந்து உட்கார்ந்து மற்றவர்களோடு பேசிக் கொண்டிருக்க, எல்லோருக்குமே ஆச்சர்யமாக இருந்தது.
உங்களால் எனக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை எனக் காண்பித்தார். நீலீமா தான் அந்த இடத்தை விட்டு சென்றாள். ப்ரகாஷ் ஸ்வர்ணாவின் முன்பு சங்கடமாக அமர்ந்து இருந்தார். ஸ்வர்ணாவின் நிமிர்வு, ‘வீழ்வேன் என நினைத்தாயோ’ என அவரைக் கேட்பது போல இருந்தது.