காலையில் ராம் தன்னையும் மீறி உறங்கி விட்டான். அபர்ணாவும் தாமதமாகத்தான் கண்விழித்தாள். அவன் உறங்குவதைப் பார்த்து அவனைத் தொந்தரவு செய்யாமல் குளியல் அறை சென்று குளித்து விட்டு வந்தாள்.
அவளுக்குத் தன் உடல்நிலையைக் குறித்துக் கொஞ்சம் சந்தேகம் இருந்தது. ஆனால் இப்போது ராம் இருக்கும் நிலையில், அவனிடம் எதையும் சொல்ல முடியாது. அவனிடம் சொல்லாமல் வேறு யாரிடமும் முதலில் சொல்ல, அவள் விரும்பவில்லை.
இன்னைக்குக் கண்டிப்பாக அவன் வீட்டில் ஒரு ரகளைச் செய்வான் என எதிர்பார்த்தாள். அபர்ணா கீழே இறங்கி செல்ல, ஸ்வர்ணா டைனிங் டேபிளில் அமர்ந்து பழங்கள் நறுக்கிக் கொண்டு இருந்தார்.
அபர்ணாவுக்குப் பசிக்க வேறு செய்தது. தட்டை எடுத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்தாள். வெண் பொங்கல் வைத்து சாப்பிட்டவள், அங்கே நறுக்கி இருந்த பப்பாளியை தொடாமல் சென்றாள்.
ஸ்வர்ணா அவளை ஆச்சர்யமாகப் பார்த்தார். எப்போதும் பழங்களை விரும்பி சாப்பிடுவாள். அகிலாவும் கார்த்திக்கும் வந்து சாப்பிட அமர்ந்தனர். அப்போது ராம் அங்கே வந்தான். வந்தவன், அபர்ணாவிடம், “என்னை எழுப்ப மாட்டியா?” எனக் கடிந்து கொண்டான்.
“இங்க வாங்க சாப்பிடுங்க.” என அபர்ணா அழைக்க…இந்த நிலைமையில என்னைச் சாப்பிட சொல்றியா என்பது போலப் பார்த்தான்.
அவள் அவனைப் பார்த்துக் கொண்டே வெளியே செல்ல…. எதோ பேச அழைக்கிறாள் எனப் புரிந்து, அவள் பின்னே அவனும் சென்றான்.
ராம் வீட்டிற்குள் வந்தவன், நேராகச் சென்று சாப்பிட அமர்ந்தான்.
“அம்மா, நீங்களும் சாப்பிடுங்க.” என்றான். இப்போவே ஏன் சாப்பிட சொல்றான்? என ஸ்வர்ணா யோசித்தபடி சாப்பிட அமர்ந்தார். அபர்ணா சென்று பரிமாறினாள்.
“அம்மா, நீங்க செக் அப் எல்லாம் கரெக்டா போறீங்களா… ராம் சாப்பிட்டபடி கேட்க,
“அகிலா கல்யாணத்துக்கு முன்னாடி போனேன். அதுக்கு அப்புறம் இன்னும் போகலை.” என்றார்.
“அப்ப டாக்டர் என்ன சொன்னார்?”
“ஒன்னும் சொல்லலையே, எல்லாம் நார்மலா இருக்குன்னு சொன்னார்.”
“ஓ… சரி, இன்னைக்கு நாம செக் அப் போயிட்டு வந்திடலாமா?”
“நானே போயிப்பேன். நீ உன் வேலையைப் பாரு.”
“உங்களைப் பார்க்கிறது விட எனக்கு என்னமா முக்கியமான வேலை. நாம இன்னைக்குப் போறோம்.” என்றான் மறுக்க முடியாத குரலில்.
“நீங்க சாப்பிட்டு கிளம்புங்க.” என்றவன், அவன் அறைக்குச் செல்ல, அகிலா அண்ணனை தேடி சென்றாள்.
“அண்ணா என்ன திடிர்ன்னு ஹாஸ்பிடல் போகணும்ன்னு சொல்றீங்க?”
“எனக்கும் தெரியலை அகிலா, அம்மா எதோ மறைக்கிற மாதிரி இருக்கு.”
“எப்படிச் சொல்றீங்க?”
முன்தினம் அபர்ணா சொன்னதை ராம் அகிலாவிடம் சொல்ல, அவள் மிகவும் பயந்து போனாள்.
“நானும் ஹாஸ்பிடல் வரேன்.” என்றவள், கார்த்திக்கிடம் பேச சென்றாள்.
ஸ்வர்ணாவை அழைத்துக் கொண்டு ராம் ஹாஸ்பிடல் கிளம்ப, அகிலாவோடு அபர்ணாவும் கிளம்பினாள். கார்த்திக் அகிலாவிடம் போன் பண்ண சொல்லிவிட்டு, அலுவலகம் கிளம்பி சென்றான்.
காரில் செல்லும் போது, அகிலா ஸ்வர்ணாவின் மருத்துவக் குறிப்பை வாங்கி ஆராய்ந்தவள், கார் ஓட்டியபடி தன்னைப் பார்த்த ராம்மிடம், ஆமாம் என்பதாகத் தலையசைத்தாள்.
இவர்கள் சென்றதும், ஸ்வர்ணாவை முழுப் பரிசோதனை செய்ய அழைத்துச் சென்றுவிட, அகிலா அவருடன் சென்றாள். ராம்மும் அபர்ணாவும் மருத்துவர் அறை முன்பு காத்திருந்தனர்.
சிறிது நேரம் கழித்து இவர்களை உள்ளே அழைத்தனர். மருத்துவரிடம் ராம் ஸ்வர்ணாவின் பைல் கொடுத்தான், வாங்கிப் பார்த்தவர், “நான் இவங்களை அடுத்த மாசம் செக்அப் வர சொன்னேன். ஆனா நீங்க நாலு மாசம் கழிச்சு வந்திருக்கீங்க.” எனக் கோபப்பட்டார்.
ராம் அமைதி காக்க, அபர்ணாதான் பேசினாள், “வீட்ல இவர் தங்கை கல்யாணம். அடுத்து எங்க கல்யாணம்.”
இதெல்லாம் ஒரு காரணமா என்பது போல மருத்துவர் பார்க்க, “வீட்ல யார்கிட்டயும் அத்தை சொல்லலை. நேத்துதான் நாங்களா கண்டுபிடிச்சோம்.” என்றாள்.
மருத்துவரின் கோபம் கொஞ்சம் குறைய, “அவங்களை டெஸ்ட் பண்ணி ரிப்போர்ட் வரட்டும். அப்புறம்தான் எதுவும் சொல்ல முடியும்.” என்றார்.
மீண்டும் வெளியே வந்து அமர்ந்தனர். காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் கொடுமையாக இருந்தது. என்ன சொல்லப் போகிறார்களோ என அப்படி ஒரு பயம்.
அகிலா வந்து இவர்களோடு அமர… ராம் கையில் இருந்த பைலில் இருந்த தேதியைக் அவளிடம் காட்டினான்.
அகிலாவுக்கு என்ன சொல்ல வருகிறான் எனப் புரியவில்லை.
“நாம அந்தப் பொண்ணு பார்க்க போனோமே… நான் கூட வேண்டாம்ன்னு சொல்லிட்டு வெளிநாடு போனேனே… அப்பத்தான் நடந்திருக்கு.” என்றான். அவன் குரலில் அப்படி ஒரு வலி.
“நான் நிறைய நாள் யோசிச்சு இருக்கேன், அம்மா எப்படி எங்க கல்யாணத்துக்குச் சரின்னு சொன்னாங்கன்னு. இதுதான் காரணம் இல்லையா?”
என்ன சொல்கிறான், இவன் பெண் பார்க்க போனானா? என்பது போல அபர்ணா பார்க்க.. அதைக் கவனித்த அகிலா, ராம்மிடம் பேசாதே என்றாள்.
கார்த்திக்கும் அலுவலகத்திற்குச் சென்று முக்கியமான வேலைகளைப் பார்த்து விட்டு ஹாஸ்பிடல் வந்துவிட்டான். அகிலா அவனைத் தனியாக அழைத்துச் சென்று பேசினாள்.
சிறிது நேரம் சென்று மருத்துவர், இவர்களை அழைத்து ஆஞ்சியோகிராம் செய்து பார்க்க வேண்டும் என்றார். அதைக் கேட்டு அனைவரும் கலங்க, ராம் நொறுங்கியே போனான். அவனைத் தேற்றுவதுதான் பெரிய பாடாக இருந்தது.
“இன்னைக்கே அஞ்சியோ பண்ணிடலாம்.” என்றார் மருத்துவர்.
மாலையில் ஆஞ்சியோ செய்தனர். முடிந்ததும், ஸ்வர்ண வலியில் துடிப்பதை பார்த்து, ராம் அங்கே இருக்க முடியாமல் ,வெளியில் சென்று விட… அகிலாவும் அடக்க முடியாமல் கதறிவிட்டாள்.
வளர்ந்த ஆண் அழுதெல்லாம் அபர்ணா பார்த்ததே இல்லை. ராம் யார் இருக்கிறார்கள் இல்லை எனப் பார்க்காமல், இருக்கையில் குனிந்து உட்கார்ந்து அழுது கொண்டே இருந்தான்.
இவனைப் பார்ப்பதா ஸ்வர்ணாவை பார்ப்பதா என்றே அபர்ணாவுக்குத் தெரியவில்லை. அவன் அழுவது மனதை பிசைவது போல இருந்தது. கார்த்திக் அகிலாவை சமாதானம் செய்து கொண்டிருந்தான்.
ராம்மும் அகிலாவும் நிலைமையை எதிர்கொள்ளும் நிலையில் இல்லாததால்… அபர்ணாவும் கார்த்திக்கும் தாங்கள்தான் திடமாக இருந்து எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டும் என்று புரிந்து, அவர்களே எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டனர்.
இத்தனைக்கும் ராம்மும், அகிலாவும் சொந்தமாகத் தொழில் செய்பவர்கள், பலரை வைத்து வேலை வாங்குபவர்கள். ஆனால் இருவரும் இன்று அவர்களாகவே இல்லை. அவர்கள் அம்மா மட்டும் தான் மனதில் இருந்தார்.
கார்த்திக்கின் பெற்றோர், அபர்ணாவின் பெற்றோர் விஷயம் தெரிந்து மருத்துவமனைக்கு வந்து விட்டனர். அவர்கள் வந்த பிறகு ராம்மின் கண்ணீரும் ஓரளவு நின்றது. வேறு யாருக்கும் இன்னும் விஷயம் சொல்லப்பட வில்லை.
ராம் தன்னையே குற்றம் சொல்லிக்கொள்ள, அபர்ணாவுக்குத் தன்னால்தான் என மனதில் அழுத்தமாகப் பதிய ஆரம்பித்தது. தன்னுடைய பாவ கணக்குதான் ஏறிக்கொண்டே போவது போல இருந்தது.
“ரத்தக் குழாயில் அடைப்பு இருக்கிறது. ஆனால் ஆபரேஷன் தேவை இல்லை. மருந்து மாத்திரையால் சரி செய்துவிடலாம். நாளை காலை வீட்டிற்கும் போகலாம்.” என மருத்துவர் சொன்னதும்தான் எல்லோருக்கும் நிம்மதி வந்தது.
மதியம் யாருமே சாப்பிடவில்லை. இரவும் இவர்கள் சாப்பிடாமல் இருக்க, சுஜா எல்லோரையும் திட்டி சாப்பிட வைத்தார்.
சுகன்யாவும், சுஜாவும் வீட்டிற்குக் கிளம்பி செல்ல… “நீ போ… நான் போ…” என யாருமே வீட்டிற்குச் செல்லாமல், நான்கு பேருமே மருத்துவமனையில் இருந்தனர்.
அபர்ணாவுக்கு மிகுந்த சோர்வாக இருந்தது. ஆனால் சமாளித்து இருந்தாள். ராம்மிடம் பேச வேண்டும், ஆறுதல் சொல்ல வேண்டும் என மனம் துடித்தாலும், எல்லாம் உன்னாலதான் எனச் சொல்லி விடுவானோ எனப் பயமாகவும் இருந்தது.
ஸ்வர்ணா இருந்த அறையில் சோபாவில் அபர்ணா படுத்து இருந்தாள். இன்னொரு பக்கம் இருந்த ஒற்றைக் கட்டிலில் அகிலா படுத்து இருந்தாள். இடையில் கண்விழித்த ஸ்வர்ணா அபர்ணாவை பார்த்தவர், ராம்மை கையசைத்து கூப்பிட்டார். அவன் அங்கிருந்த இருக்கையில் உட்கார்ந்து இருந்தான்.
அம்மா அழைப்பது தெரிந்ததும் வேகமாக எழுந்து வந்தான்.
“நீ அபர்ணாவை கூடிட்டு வீட்டுக்கு போ… அகிலா இங்க இருக்கட்டும்.” என்றார்.
ராம் முடியாது எனச் சொல்ல… “எனக்கு ஒன்னும் இல்லை. நான் இப்ப நல்லா இருக்கேன்.” என்றார்.
“ஏன் மா எங்ககிட்ட மறைச்சீங்க? என் மேல கோபமா? நான் அபர்ணாவை கல்யாணம் பண்ணிகிட்டது பிடிக்கலையா?” என்றதும், அவர் அபர்ணா கேட்டு விட்டாளோ என்பது போலப் பார்த்தார். அவள் உறக்கத்தில் இருந்தாள்.
“நான் உன்கிட்ட விளக்கமா அப்புறம் சொல்றேன். நீ அபர்ணாவை எதுவும் பேசிடாத.” என்றார். அதற்கு முன்பே மகன் நிறைய உளறிவிட்டான் என அவருக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் அப்படிச் சொல்லியதும், ராம் கொஞ்சம் சுதாரித்தான்.
நிறையப் பேசினான் தான். ஆனால் அவளைப் பேசியதாக நினைவு இல்லை.
மீண்டும் ஸ்வர்ணா அவர்களைப் போகச் சொல்ல, “இனி எதுனாலும் என்கிட்டே சொல்லணும்.” அவன் சொன்னதற்கு ஸ்வர்ணா சம்மதமாகத் தலையாட்டிய பிறகே, கிளம்புவதற்கு ஒத்துக் கொண்டான்.