அவன் சென்று அபர்ணாவை எழுப்ப… அவள் பதறி எழ, “ஒன்னும் இல்லை பயப்படாத… வா வீட்டுக்கு போகலாம்.” என அவளை அழைத்தான்.
அவள் ஏன் என்று புரியாமல் பார்க்க… அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஸ்வர்ணா, “நீ போ…” எனக் கை காட்டினார்.
அவரிடம் வந்தவள், “அத்தை எப்படி இருக்கீங்க? ரொம்ப வலிக்குதா?” என்றாள்.
“இப்ப பரவாயில்லை வலியும் குறைஞ்சு இருக்கு. நீயும், அவனும் வீட்டுக்கு போங்க.” என்றார்.
“நீங்க ரொம்பப் பேசக் கூடாது. தூங்குங்க.” என்றாள். அவள் சொன்னதைக் கேட்டு அவர் கண்ணை மூடிக் கொண்டார்.
வெளியே இருந்த கார்த்திக்கிடம் இருவரும் சொல்லிவிட்டு கிளம்ப, அவன் உள்ளே வந்து சோபாவில் படுத்துக் கொண்டான். அந்த அறை மிகவும் பெரியதுதான். அகிலா உறங்கிக் கொண்டு இருந்ததால்… இவர்கள் கிளம்பியது அவளுக்குத் தெரியாது.
இவர்கள் கார் வந்த சத்தத்தில், காவலாளி எழுந்து வந்து கேட்டை திறந்து விட்டார். ராம் கிளம்பும் போதே அவருக்குப் போன் செய்து இருந்தான்.
காலையில் கிளம்பும் போதே வேலை செய்பவர்களை அனுப்பிவிட்டு கதவை பூட்டிக் கொண்டே சென்று இருந்தனர். ராம் தன்னிடம் இருந்த சாவியால் கதவை திறக்க… வீடு இருட்டாக இருந்தது. அவன் விளக்கை போட… இருவரும் உள்ளே சென்றனர்.
“இன்னைக்குக் கீழே இருக்கிற ரூம்லயே படுத்திப்போம்.” ராம் சொன்னதும், ஸ்வர்ணா அறையைத் தவிர இருந்த இன்னொரு அறையில் போய் அபர்ணா கட்டிலில் படுத்துக் கொண்டாள்.
அவள் உடை மாற்றாமல் படுத்திருந்ததைப் பார்த்து, “டிரஸ் மாத்திக்கலையா?” என்றான்.
“என்னோட டிரஸ் எல்லாம் மேல இருக்கு.” என்றாள் சோர்வாக.
“என்னைக் கேட்க வேண்டியதுதான. நான் எடுத்திட்டு வரேன்.” என்றவன், வேகமாக மேலே சென்று, உடல்கழுவி, உடை மாற்றிவிட்டு, அவளுக்குத் தேவையானது எடுத்துக் கொண்டு வந்தான்.
அவன் வந்தபோது, அபர்ணாவும் குளித்துக் கொண்டுதான் இருந்தாள். இவன் கதவை தட்டி உடைகள் கொடுக்க, கதவை கொஞ்சமாகத் திறந்து வாங்கிக் கொண்டாள்.
குளித்துவிட்டு வெளியே வந்ததும் அபர்ணாவுக்குப் பசிக்க, சமையல் அறை சென்று என்ன இருக்கிறது எனப் பார்த்தாள். காலை காய்ச்சிய பால் பிரிட்ஜில் இருந்தது. அதை எடுத்து சூடு செய்தவள், தனக்கும் ராமிற்கும் எடுத்துக் கொண்டு சென்றாள்.
அவன் கட்டிலில் படுத்து விட்டத்தை வெறித்துக் கொண்டு இருந்தான். இவள் சென்று பாலைக் கொடுத்ததும் வாங்கிக் குடித்தான்.
இருவரும் கட்டிலில் படுத்துக் கொண்டனர். “அம்மாவைப் போய் ஏன் இந்தக் கடவுள் மேலும், மேலும் சோதிக்கணும் அபர்ணா. அவங்க வாழ்க்கையைத்தான் பறிச்சிகிட்டார். அவங்களுக்கு நல்ல ஆரோகியத்தையாவது கொடுக்கக் கூடாதா.”
அதே வருத்தம்தான் அபர்ணாவுக்கும். அவர் விரும்பியதை சாப்பிட்டு வாழும் வரத்தை கூட, ஏன் இந்தக் கடவுள் கொடுக்கவில்லை.
“அவங்க வாழ்க்கையில என்ன சந்தோஷம் இருந்துச்சு?”
அவன் பக்கம் திரும்பி படுத்தவள், “இப்ப ஒன்னும் இல்லை. ஹார்ட் அட்டாக் வர்றதுக்கு முன்னாடி நாம பார்த்திட்டோம். இனி கவனமா இருக்கலாம். அதெல்லாம் அவங்க நல்லா இருப்பாங்க.”
அபர்ணா ராமிற்கு ஆறுதல் சொல்ல, “நிஜமா அவங்களுக்குச் சரி ஆகுமா.” என்றான் தவிப்பாக.
“எங்க அப்பாவுக்கும் ஹார்ட் ப்ராப்லம் இருக்கு ராம். அவர் வேலைக்குப் போயிட்டு வந்திட்டு தானே இருக்கார். அதெல்லாம் நல்லா இருப்பாங்க. நாம அவங்களை பார்த்துக்கலாம்.” என்றாள் அபர்ணா நம்பிக்கையாக.
அவள் தந்த தைரியத்தில் ராம்மின் விழிகள் மூட, சிறிது நேரத்தில் உறங்கியும் விட்டான். அபர்ணாவும் உறங்க ஆரம்பித்தாள். காலையில் வேலை செய்யும் பெண் வந்தபோதுதான், அபர்ணா எழுந்து கொண்டாள். அடுத்து சமையல்காரர் வந்தார்.
அவரை இட்லி சட்னி சாம்பார் செய்ய வைத்து, டிரைவரிடம் ஹாஸ்பிடலுக்குக் கொடுத்து அனுப்பினாள். அதற்குள் ராம்மும் கிளம்பி வந்துவிட்டான்.
“நீ வீட்ல இரு. நான் போய் அவங்களை டிஸ்சார்ஜ் பண்ணி கூடிட்டு வரேன்.” என்றான்.
தன்னைத் தவிர்க்கவே அப்படிச் சொல்கிறானோ என அபர்ணா அவனைச் சந்தேகமாகப் பார்க்க, “அம்மாவுக்கு முடியலைன்னு எல்லோருக்கும் தெரிஞ்சிடுச்க்சு அபர்ணா, காலையில இருந்து எனக்கு ஒரே போன். நான் அவங்க யாரையும் ஹாஸ்பிடல் வரக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன். எல்லோரும் வீட்டுக்குத்தான் வருவாங்க. நீதான் அவங்க எல்லோரையும் கவனிக்கணும். அதனால அவங்க வர்ற வரை, நீ வீட்ல ரெஸ்ட் எடு.” என்றான்.
அவளைப் பற்றி ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் நேற்றும் வீட்டு வேலைகள் எதுவும் செய்யவில்லை… இன்று ஸ்வர்ணா வீட்டிற்கு வருவதற்குள், வீட்டு வேலைகளை முடித்து விட்டால் நல்லது என நினைத்தவள், வீட்டிலேயே இருந்து கொண்டாள்.
வேலை ஆட்களைக் கொண்டு வீட்டு வேலைகளைச் சீக்கிரம் செய்ய வைத்தாள்.
ராம் ஹாஸ்பிடல் சென்றதும், கார்த்திக் வீட்டிற்கு வந்துவிட்டான். அவன் குளித்து உடைமாற்றி வந்து சாப்பிட உட்கார, அபர்ணா அவனுக்குப் பரிமாறினாள்.
“என்னாலதான அவங்களுக்கு இப்படி ஆச்சு?” சொல்லும் போதே கட்டுப்படுத்த முடியாமல், அவள் கண்கள் கண்ணீரை சிந்தி விட்டது.
“லூசு மாதிரி பேசாத. நீ உன்னாலன்னு சொல்ற, அவன் அவனாலன்னு சொல்றான்.”
“நான்தான் எல்லாத்தையும் ஆரம்பிச்சு வச்சேன்.”
“இப்பதான் அவன் தெளிஞ்சு இருக்கான். அடுத்து நீ ஆரம்பிக்கிற போல, நீதான் அவன் வேண்டாம்ன்னு சொல்லி போயிட்டியே… அவங்கதானே உன்னைத் தேடி வந்தாங்க.”
“உடம்பு சரியில்லாம போறது எல்லாம் சகஜம். ராம் வேற யாரையாவது கல்யாணம் பண்ணி இருந்தா, அத்தைக்கு இப்படி வந்திருக்காதுன்னு உன்னால சொல்ல முடியுமா?”
“பிரச்சனை வந்தா சரி செய்யப்பாருங்க. தேவையில்லாது எல்லாம் ஆராய்ச்சி பண்ணாதீங்க.” என்றான் கார்த்திக்.
அபர்ணாவால் இதை ராம்மிடம் சொல்ல முடியாது. அவன் அப்படித்தான் என்றுவிட்டால், அவளால் தாங்கவே முடியாது. கார்த்திக்கிடம் பேசியதும் கொஞ்சம் ஆறுதலாக உணர்ந்தாள். கைகழுவிட்டு வந்தவன், “கண்டதையும் யோசிக்காத.” என அவள் தலையை ஆறுதலாக வருடிவிட்டுச் சென்றான்.
அதற்குப் பிறகு எதைப் பற்றிச் சிந்திக்கவும் அபர்ணாவுக்கு நேரம் இல்லை. ஸ்வர்ணா வீட்டிற்குள்தான் நுழைந்து இருப்பார். அவர் மாமியார் வீட்டினர் அனைவரும் அங்கு இருந்தனர்.
ராம்மும் அகிலாவும் ஸ்வர்ணாவோடு இருந்து அவர் அதிகம் பேசாமல் பார்த்துக் கொண்டனர். அதனால் வந்தவர்களைக் கவனிக்கும் பொறுப்பை அபர்ணா பார்த்துக் கொண்டாள். அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்து உபசரிப்பது, பேசிக் கொண்டு இருப்பது எல்லாம் அவள் பொறுப்பு.
ராம் ஏற்கனவே சொல்லிவிட்டான். “முன்னாடியே அம்மாவுக்கு இந்தப் பிரச்சனை இருக்கு, அவங்க யார் கிட்டையும் சொல்லாதது எல்லாம் நமக்கு மட்டும் தெரிஞ்சா போதும், வேற யாருக்கும் தெரிய வேண்டாம்.” என்று. அதனால் இப்போது செக் அப் செல்லும் போது தெரிந்ததாகதான் காட்டிக் கொண்டனர்.
அதற்கே பிரவீணா, “நான் பார்த்த பொண்ணைக் கட்டி இருந்தா, இப்படி ஆகி இருக்குமா? எல்லாம் இவ வந்த ராசிதான். வந்ததும், மாமியாரை படுக்க வச்சிட்டா.” என்றார்.
அவர் இப்படிப் பேசவில்லை என்றால் தான் ஆச்சர்யம். அபர்ணா ஒன்றும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அவர் அப்படிப் பேசியதற்கு ராம்மும் ஸ்வர்ணாவும் அவரைக் கண்டித்தனர். ஸ்வர்ணாவுக்கு இப்படி ஆனதில் அகிலாண்டேஸ்வரிக்கு மிகுந்த வருத்தம்.
யாரும் சாப்பிடவெல்லாம் செய்யவில்லை. வந்ததும், கொஞ்ச நேரம் இருந்துவிட்டு சென்றுவிட்டனர். காயத்ரியும், சுமாவும், “எதாவது தேவைனா எங்களைக் கூப்பிடு.” எனச் சொல்லிவிட்டு சென்றனர்.
ஸ்வர்ணாவை சாப்பிட வைத்துவிட்டு, இவர்கள் எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டனர். மதியம் சிறிது ஓய்வுக்குப் பின், ஸ்வர்ணாவின் பிறந்த வீட்டினர் வந்து விட்டனர்.
அவர்கள் ஏற்கனவே அபர்ணாவை குரோதமாகத்தான் பார்ப்பார்கள், அதுவும் இப்போது ஸ்வர்ணாவுக்கு முடியவில்லை என்றதும், கேட்கவே வேண்டாம். அவர்கள் வந்ததில் இருந்து அபர்ணாவை எதுவும் செய்யவிடாமல், அவர்களே ஸ்வர்ணாவுக்கு எல்லாம் பார்த்துக் கொண்டனர்.
இவர்களும் வந்துவிட்டதால்… ராம்மும், அகிலாவும் மறுநாளில் இருந்து அலுவலகம் செல்ல ஆரம்பித்தனர். அபர்ணாவும் ஒதுங்கி இருந்து கொண்டாள்.
வேலையாட்களைக் கண்காணித்து விட்டு, வேலை முடிந்துவிட்டால்… அவள் அறைக்குச் சென்று விடுவாள். ராம் அலுவலகத்தில் இருந்து வந்தால்… தன் அம்மாவுடனே நேரம் செலவழிப்பான். இரவு படுக்கத்தான் அறைக்கு வருவான். வந்தாலும், அவன் அம்மாவைப் பற்றிதான் அவளிடம் கேட்பான்.
வேறு எதுவும் பேச முடியவில்லை. எதுவாக இருந்தாலும், அவன் வாயில் இருந்தே வரட்டும் என நினைத்து, அபர்ணா அமைதியாக இருந்தாள்.
பிரவீணா வரும்போதெல்லாம் அபர்ணாவை குத்திக் காட்டி பேசுவார், ஸ்வர்ணாவின் அம்மாவும், அண்ணியும் அதைப் பார்வையாலையே உணர்த்துவார்கள்.
இவர்கள் பேசுவது எல்லாம் எனக்கு ஒன்றும் இல்லை, இந்த வீட்ல இருக்கவங்க என்னைப் பேசட்டும், நான்தான் காரணம்ன்னு சொல்லட்டும் எனப் பெட்டிக் கட்ட அபர்ணா தயாராகவே இருந்தாள்.
அவர்கள் யார் வாயில் இருந்தும், அந்த வார்த்தை வரவே வராது. அவள் இல்லாமல் அந்த வீடோ, வீட்டினரோ இல்லை. அந்த அளவுக்கு அவள் அங்கே, அவர்கள் மனதில் இடம் பிடித்து இருந்தாள்.