அதே போல் ஏஜென்சியில் சொல்லி, ஒருவரை முழு நேரத்திற்குக் காவலுக்கு வைத்துக் கொண்டாள். வீட்டிற்குப் பின்புறம் ஒரு அறையும் பாத்ரூமும் உண்டு. அதனால் பிரச்சனையை இல்லை. பகலில் அவர் கேட் அருகில் உட்கார்ந்து இருப்பார். இரவு அவரை முன் வரண்டாவில் படுக்கச் சொல்லிவிட்டாள். டைகர் அவரது பொறுப்பு. அவருக்குக் காலை, மதியம் உணவு வீட்டில் இருந்து கொடுக்கப்பட்டது. இரவு அவர் வெளியில் பார்த்துக் கொள்வார்.

ராம் அவர்கள் வீட்டை மிகவும் பாதுக்காப்பாகக் கட்டி இருந்தான். அப்படி யாரும் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து விட முடியாது. வீட்டில் அதிகமாக நகைகளை வைப்பதும் இல்லை. பேங்க் லாக்கரில் இருந்து தேவைப்படும்போது எடுத்துக் கொள்வது தான். சும்மா எதற்காக இரண்டு பேர், எப்போதும் வாயிலில் நின்று கொண்டு என நினைத்தாள்.

அன்று இரவில் இருந்து அவளே சமைக்க ஆரம்பித்தாள். முதல் நாள் எண்ணெய் இல்லாத ரொட்டியும், பன்னீர் குருமாவும் செய்தாள். யாரும் எந்தக் குறையும் சொல்லவில்லை.

“இவ சமைக்கிறதா இருந்தா…. இனி என்னால ரிஸ்க் எடுக்க முடியாது. நான் நைட்டும் எங்க அம்மா வீட்ல சாப்பிட போறேன்.” எனக் கார்த்திக் அலட்ட… அபர்ணா அப்போதே சுஜாவை அழைத்துச் சொல்ல, “அவனுக்கு இங்க எல்லாம் சாப்பாடு இல்லைன்னு சொல்லிடு.” என்றார்.

“எங்க அம்மா போதும், என்னை டேமேஜ் பண்ண.” என்றான் அவன். அதைக் கேட்டு எல்லோரும் சிரித்தனர்.

“சரி நாளைக்கு என்ன வேணும் சொல்லுங்க. உங்களுக்குப் பிடிச்சதே பண்ணிடலாம்.” என அபர்ணா கார்த்திக்கை கேட்க, எதாவது கஷ்ட்டமா சொல்வோம் என நினைத்த கார்த்திக், “அடை தோசை பண்ணு.” என்றான்.

“எங்க அம்மா முன்னாடி எல்லாம் அடை தோசைக்கு அவியல் பண்ணுவாங்க. அப்படி ஒரு டேஸ்ட்டா இருக்கும்.” ராம் ரசித்துச் சொல்ல, அகிலாவும் ஆமாம் என்றாள்.

ஸ்வர்ணா தன் பிள்ளைகளைப் பார்த்தார். ஒரு காலத்தில் எவ்வளவு வேலையாட்கள் இருந்தாலும், அவர் கையால் பிள்ளைகளுக்குச் செய்து கொடுத்தால்தான் அவருக்குத் திருப்தி. ஆனால் அவருக்கும் கணவருக்கும் பிரச்சனை வந்தபிறகு, எல்லாவற்றிலும் இருந்த பற்று அவருக்கு விட்டுப் போய் விட்டது.

மறுநாள் காலை உணவுடன் இருந்த பழங்களைப் பார்த்து விட்டு, காலையில எப்படிச் சாப்பிடுறது என ராம் கேட்க, ஒரு இட்லி கம்மியா சாப்டிட்டு, கொஞ்சம் பழங்கள் சாப்பிடுங்க.” என்றாள். அவள் சொன்னபடியே செய்து விட்டுச் சென்றான்.

மதியம் டிரைவரிடம் அவனுக்குக் கேரியரில் உணவு கொடுத்து அனுப்பினாள். அவன் பிசைந்து சாப்பிட நேரம் இல்லை என்றதால்… சாத்தத்தில் குழம்பை பிசைந்தே அனுப்பினாள். தனியாகக் கொஞ்சம் தயிர் சாதம் வேறு.

மாலை அபர்ணா அடை தோசைக்கு ஊற வைத்தாள். சமையல் அறைக்கு வந்த ஸ்வர்ணா, “தொட்டுக்க, நான் அவியல் பண்ணறேன்.” என்றார். அபர்ணா அவர் செய்யட்டும் என வெளியே வந்துவிட்டாள்.

சாப்பிடும் நேரத்திற்கு அபர்ணா எல்லோருக்கும் அடை தோசை வார்க்க… அவியலோடு சாப்பிட அமிர்தமாக இருந்தது.

“அத்தை, உங்க சமயல் சூப்பரா இருக்கு. இனி ராத்திரிக்கு நீங்களே சமையல் பண்ணுங்க.” என்றான் கார்த்திக்.

அபர்ணா சாப்பிடும் போது ஸ்வர்ணா தோசை ஊற்ற செல்ல… அவரைத் தடுத்து, “ என் தங்கச்சிக்கு நான் ஊற்றிக் கொடுக்கிறேன்.” எனக் கார்த்திக் ஊற்றிக் கொடுத்தான்.

இத்தனை நாள் அங்கே ஒரு வீடு இருந்தது. ஆனால் இப்போதுதான் அந்த வீட்டுக்கு ஒரு களை வந்தது.

வெகு நாட்களாக அகிலாண்டேஸ்வரி ராம்மையும், அபர்ணாவையும் அழைத்துக் கொண்டு இருந்தார். அதனால் அந்த வார ஞாயிறு மாலை ஸ்வர்ணாவையும் அழைத்துக் கொண்டு சென்றனர்.

இவர்கள் வந்ததும் வீட்டு உறுப்பினர்கள், அனைவரும் அங்கே ஹாலில் கூட… வீடே கலகலவென்று இருந்தது. அஞ்சலியும் வந்திருந்தாள்.

“அபர்ணா உனக்குப் புது இடம் எப்படி இருக்கு. வீடெல்லாம் செட் ஆகிடுச்சா?” காயத்ரி கேட்க,

“அவதான் வீட்டையே செட் பண்றா? நீங்க அவளைப் போய்க் கேட்கிறீங்க. எங்களைப் பார்த்து கேளுங்க. உங்களை அபர்ணா நல்லா வச்சிருக்காளா அப்படின்னு.” என்றான் ராம் கேலியாக.

“அதுதான் பார்த்தாலே தெரியுதே… ஸ்வர்ணா முகம் கூட இப்ப தெளிவா இருக்கே.” என்றார் அகிலாண்டேஸ்வரி.

அங்கே வீட்டில் நடந்த மாற்றம் எல்லாம் அவருக்குத் தெரியும். ஸ்வர்ணா எல்லாவற்றையும் தன் மாமியாரிடம் சொல்லி விடுவார். மற்றவர்கள் பேசிக்கொண்டு இருக்க, அபர்ணா ராம்மை மாடிக்கு அழைத்துச் சென்றாள். அவர்கள் இருவரும் முதன்முதலில் சந்தித்த இடத்தில் நின்று பேசினர்.

“இங்க அப்படி உனக்கு என்ன பார்க்கணும்?”

“ம்ம்… இங்கதானே நான் உங்களை முதல் தடவை பார்த்தேன். நீங்கதான் வந்து என்கிட்டே பேசினீங்க. அப்புறம் கண்டுக்காமலும் இருந்தீங்க.”

தான் அப்போது நடத்துக் கொண்டது, அவளை மிகவும் பாதித்து இருக்கிறது என ராமிற்குப் புரிந்தது.

“லிப்ட்ல இருந்து வெளியே வந்தா… எதிர்ல தேவை மாதிரி ஒரு பொண்ணு, நிஜமாவே நான் ஸ்தம்பித்துத் தான் போயிட்டேன். அப்ப நான் இந்தப் பொண்ணு மேல, இப்படிப் பைத்தியம் ஆவேன்னு எல்லாம் நினைக்கலை.” ராம் அபர்ணாவை அனைத்துக் கொண்டு கிறக்கமாகச் சொல்ல…

“யாரு? நீங்க என் மேல பைத்தியமா இருக்கீங்க? வேலை வேலைன்னு ஓடிட்டே இருக்கீங்க. எனக்கு உங்களோட கொஞ்ச நேரம்தான் கிடைக்குது. நாம அந்தக் காட்டிலேயே இருந்திருக்கலாம். நீங்க எப்பவும் என் பக்கத்தில இருந்திருப்பீங்க.”

“ஓ… நம்ம ஹனிமூன் ஸ்பாட் உனக்கு அவ்வளவு பிடிச்சிடுச்சா?”

“எங்கையோ கூப்பிட்டுப் போய்த் தொலைங்க. நீங்க பக்கத்தில இருப்பீங்க இல்ல.”

“சரி விடு, வேற எங்கையாவது சீக்கிரம் இன்னொரு ஹனிமூன் ப்ளான் பண்ணலாம்.

“அப்புறம் அபர்ணா உன்கிட்ட ஒன்னும் கேட்கணும்ன்னு நினைச்சேன். இந்த அஞ்சலியோட பார்வையே சரி இல்லையே? அவன் என்னை எப்பவும் முறைச்சிட்டு தானே இருப்பா? இப்ப என்ன பாசமா பார்க்கிறா?”

ராம் கேட்டதும், தானும் சோனாவும் அஞ்சலியிடம் பேசியதை பற்றி அபர்ணா சொல்லி விட,

“மண்ணாங்கட்டி, உங்களை யாரு அவகிட்ட எல்லாத்தையும் சொல்ல சொன்னது. ஏற்கனவே அவ யாரையும் மதிக்க மாட்டா. இனி அவ இஷ்டத்துக்கு ஆடுவா. அவ அப்பா அம்மா பேச்சையும் கேட்க மாட்டா?” என்றான் ராம், அஞ்சலியை பற்றித் தெரிந்தவனாக.

‘என்ன டா இவரு, நாம நல்லது நினைச்சு சொன்னா, இப்படிப் பேசுறார். அதெல்லாம் ஒன்னும் ஆகாது.’ என அபர்ணா நினைக்க, ராம் சொன்னதுதான் நடந்தது.

மறுநாள் வழக்கம் போல் ஸ்வர்ணா ஹாலில் உட்கார்ந்து டிவி பார்க்க, அபர்ணா அவள் லேப்டாப்பில் எதோ பார்த்துக் கொண்டு இருந்தாள். மதிய உணவு முடிந்ததும், நாடகம் பார்க்கும் ஆர்வத்தில் ஸ்வர்ணா மாத்திரை சாப்பிட்டுவிட்டு, அங்கேயே அந்த மருந்து டப்பாவை மறந்து வைத்துவிட்டார்.

அவர் உறங்க சென்ற பிறகே அபர்ணா அதைக் கவனித்தாள். என்ன மாத்திரை என எடுத்து பார்த்தால்… அவளுக்குத் தெரியவில்லை. உடனே தனது லேப்டாப்பில் அந்த மாத்திரை பெயரை டைப் செய்தாள்.

எந்த மாத்திரையாக இருந்தாலும் உடனே அதைப் பற்றி நெட்டில் ஆராய்ச்சி செய்வது அவளது வழக்கம். அந்தப் பழக்கத்தில் இப்போதும் பார்க்க தோன்றியது. ஒன்று பிரஷர் மாத்திரை, இன்னொன்று கொழுப்பு சத்து மாத்திரை. கடைசியாக இன்னொரு மாத்திரையின் பெயரை போட்டால்… அது இதயச் சம்பந்தமான பிரச்சனைகானது என வர, அவள் யோசனையில் இருந்தாள்.

ராம் இதுவரை தன் அம்மாவுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது எனத் தன்னிடம் சொன்னதே இல்லை. அவன் வரட்டும் கேட்போம் என நினைத்தாள்.

இரவு அவன் வெகு தாமதமாக வர… கொஞ்ச நேரம் இருவரும் சண்டை பிடித்தனர். இருவரும் படுக்க வந்த பிறகுதான் அபர்ணாவுக்கு நினைவு வர, “ராம், அத்தைக்கு ஹார்ட்ல எதுவும் பிரச்சனை இருக்கா?” எனக் கேட்டாள்.

அபர்ணா அப்படிக் கேட்டதும் ராமிற்குக் கோபம் வந்துவிட்டது. “எதாவது உலராத.” என்றான்.

அபர்ணாவுக்குக் கோபம் வந்தாலும், “இல்லை… அவங்க சாப்பிடுற மாத்திரை வச்சு கேட்டேன்.” என்றாள்.

ராமிற்குப் பயங்கிற அதிர்ச்சி, “என்ன மாத்திரை?” என்றான்.

அபர்ணா விவரம் சொன்னதும், “அம்மாவுக்கு எப்பவும் கொஞ்சம் பிரஷர் இருக்கு, மத்தபடி அவங்களுக்கு வேற எந்தப் பிரச்சனையும் இல்லை.” என்றான்.

“நான் போய் அம்மாவை கேட்டுட்டு வரேன்.” என அவன் எழுந்துகொள்ள,

“அவங்க இப்ப தூங்கி இருப்பாங்க. வீணா அவங்களைப் பயப்படுத்தாதீங்க. காலையில பார்ப்போம்.” என அபர்ணா தடுத்தாள்.

ராம், அவள் சொன்னது கேட்டு இருந்தாலும், அன்று இரவு முழுவதும் அவன் உறங்கவே இல்லை. அபர்ணா விழுத்து பார்க்கும் போது எல்லாம், அவன் உறங்காமல் விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி படுத்து இருந்தான்.

இவன்கிட்ட போய் இப்ப ஏன் சொன்னோம், காலையில் சொல்லி இருக்கலாம் என அபர்ணா நினைத்தாள். அவளுக்கு அவன் போல விழித்துக் கொண்டு இருக்க முடியவில்லை.

அவளுக்கு இப்போது எல்லாம் ரொம்ப உறக்கம் வருகிறது. ஏன்னென்று தெரியவில்லை. ஆனால் ராம் விழித்திருக்கிறான் என்ற எண்ணம், அவளை அசந்தும் தூங்க விடவில்லை. உறங்குவதும் விழித்து அவனைப் பார்ப்பதுமாக இருந்தாள்.