பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் 33
இரவு தாமதமாக வந்ததால்… காலையும் எட்டு மணியாகியும் அபர்ணா எழுந்துகொள்ளாமல் உறங்கிக் கொண்டே இருக்க… ஏற்கனவே எழுந்து தன் வேலைகளை முடித்தவன், அவள் அருகில் படுத்து அவள் உறக்கத்தைக் கலைக்க ஆரம்பித்தான்.
“தூங்க விடுங்க.” என அபர்ணா திரும்பி படுக்க,
“மேடம், நாம ஹனிமூன்ல இருந்து திரும்பி வந்தாச்சு. இது வீடு நியாபகம் இருக்கா?” என அவன் கேட்டதும், எழுந்து அமர்ந்தாள்.
“நான் இன்னைக்கு ஆபீஸ் போகனும் அபர்ணா.”
ஒரு வராதிற்கும் மேல் ஒன்றாகவே இருந்துவிட்டு, இன்று அவன் ஆபீஸ் போகிறான் என்றதும், அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது.
அவள் எழுந்து பல் துலக்கி முகம் கழுவி வர, “உனக்கு ஒன்னு காட்டுறேன். வா.” எனக் கீழே அழைத்துச் சென்றான்.
கீழே யாரும் இல்லை. முன் பக்கம் பெரிய புல்வெளியில் போடபட்டிருந்த இருக்கைக்கு அழைத்துச் சென்றான். அந்தப் பெஞ்சில் அமர்ந்ததும், அவன் விசில் அடிக்க, கன்றுக்குட்டி உயரத்திற்கு ஒரு நாய் ஓடி வந்தது.
அதன் உயரத்தையும் அதன் வேகத்தையும் பார்த்தவளுக்கு அடிவயிறு கலங்க, கால்களைத் தூக்கி மேலே வைத்து, அன்று போல் இன்றும் தன் கணவனைக் கட்டிக் கொண்டாள்.
“பயத்தை வெளிய காட்டாத, அவன் குஷி ஆகிடுவான். சாதாரணமா இரு.” அவன் சொன்னபடி, அபர்ணா கால்களை இறக்கி உட்கார…. அதற்குள் அந்த நாய் அவர்கள் அருகில் வந்திருந்தது.
வந்த வேகத்தில் கால் இரண்டையும் தூக்கி ராம்மின் தொடையில் வைத்து நின்றது. அதைப் பார்த்தே அபர்ணா அரண்டுவிட்டாள். அவள் எழுந்து ஓடி விடலாமா என நினைக்கும் போதே… அவள் என்னத்தை அறிந்தது போல், ராம் தன் இடது கையால், அவள் இடையில் கைகொடுத்து, தன்னோடு இறுக்கிக் கொண்டான்.
“டைகர்…” என அவன் மறுகையால் அவன் நாயை தடவிக் கொடுக்க, வெகு நாட்கள் கழித்து அவனைப் பார்த்ததால்… அது அவனிடம் கொஞ்சி விளையாடியது.
“டைகர் இங்க பாரு. நம்ம ப்ரண்ட்.” என அவன் நாயிடம் சொல்ல… பிறகே அபர்ணாவை பார்த்தது.
“ப்ரண்ட், ஷேக்கன் கொடு.” ராம் சொல்ல, இவளுக்கு எல்லம் கொடுக்க வேண்டுமா என்பது போல, டைகர் பார்த்து வைக்க,
“ஹே ரொம்பப் பெரிய ஆளா நீ… மூஞ்சியைப் பேத்திடுவேன்.” என அபர்ணா மெதுவாகத் திட்ட, ராமிற்கு அப்படியொரு சிரிப்பு.
“தைரியம் இருந்தா சத்தமா சொல்லேன்.” என்றான்.
“எனக்கு எல்லம் இதோட பிரண்ட்ஷிப் வேண்டாம்.”
“கோட்டை தாண்டி நீயும் வாராத, நானும் வர மாட்டேன்.” என டைகரை பார்த்து சொன்னவள், “வாங்க போகலாம்.” என ராம்மை இழுத்துக் கொண்டு செல்ல, டைகரும் அவர்களோடு வந்தது.
பயத்தில் அபர்ணா ராம்மோடு ஒண்டிக்கொண்டே நடக்க, அவனும் அவளை அணைத்தபடி கூட்டி வர, டைகருக்குப் புரிந்தது, அவள் தன் எஜமானருக்குச் சொந்தம் என்று… அதோடு அவர்களை விட்டு வேறுபுறம் சென்றது.
ராம் ஹாலில் அமர்ந்து பேப்பர் படிக்க, அபர்ணா சமையல் அறைக்குச் சென்று வேலையால் கலந்து கொடுத்த காபீயை கொண்டு வந்தாள்.
காபி குடிந்ததும் இருவரும் அறைக்குத் திரும்ப, ராம் குளிக்கச் செல்ல, அபர்ணா அறையை ஒழுங்கு செய்தாள். அவன் குளித்துவிட்டு வந்ததும், இவள் அவசரமாகக் குளிக்கச் செல்ல, ராம் அவள் கைபிடித்துத் தடுத்தான்.
“நான் கிளம்புற வரை என்னோட பேசிட்டு இரு. நான் அம்மாவை டிபன் எடுத்து வைக்கச் சொல்லி சாப்பிடுறேன். அவங்கதான் எப்பவும் வைப்பாங்க. நான் அவங்களோட பேசுற நேரமும் அப்போதுதான்.” என்றான்.
அவன் அம்மாவோடு செலவு செய்யும் நேரம், அதை மாற்றாதே என்கிறான். அது அவளுக்குப் புரிந்தது. என் கணவனுக்கு நானேதான் எல்லாம் செய்யவேண்டும் என அவளுக்கு எண்ணமும் இல்லை.
ராம் கிளம்பும் வரை அவனோடு பேசிக்கொண்டு இருந்தாள். ராம் கிளம்பியதும், “இது உன் வீடும்தான் அபர்ணா. அதனால ப்ரீயா இரு.” என்றவன், அவளை அனைத்து முத்தமிட்டே சென்றான்.
ராம் கீழே வந்தபோது ஸ்வர்ணா ஹாலில் இருந்தார். “எப்படி மா இருக்கீங்க?”
“நல்லா இருக்கேன்.”
நேற்று இரவு இவர்கள் வரும்போது, அவர் உறங்கி இருந்தார்.
“மாமா அத்தை எல்லாம் அன்னைக்கே கிளம்பிட்டாங்களா?”
“நீங்க போன அடுத்த நாள் கிளம்பினாங்க.”
ராம் மேலும் அவருடன் பேசிக்கொண்டே இருக்க, ஸ்வர்ணாவுக்குத் தெரியும், இது அவன் உணவு அருந்தும் நேரம் என்று. ஆனால் அபர்ணா வந்து எடுத்து வைப்பாள் என அவர் செய்யாமல் இருந்தார்.
“அம்மா, எனக்கு டைம் ஆச்சு. சாப்பாடு எடுத்து வைங்க.” சொல்லிக்கொண்டே ராம் எழுந்து உணவு மேஜைக்குச் செல்ல, ஏற்கனவே மேஜையில் தயாராக இருந்த உணவுகளை, ஸ்வர்ணா அவன் தட்டில் பரிமாறினார்.
அவரோடு பேசியபடியே சாப்பிட்டவன், சாப்பிட்டதும் அவன் லாப்டாப் பையை எடுத்துக் கொண்டு, அப்படியே அலுவலகத்திற்கும் கிளம்பிவிட்டான்.
அபர்ணா குளித்துவிட்டு, அறையின் ஜன்னல்களைத் திறந்துவிட்டாள். அவர்கள் அறை ஜன்னலில் இருந்து வெளி வாயிலை பார்க்க முடியும். ராம் காரில் செல்வது அவளுக்கு அங்கு இருந்து தெரிந்தது. அவள் கீழே வந்தபோது, அகிலாவும், கார்த்திக்கும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.
“ஹாய் புதுப் பொண்ணு.” கார்த்திக் அவளைப் பார்த்ததும் உற்சாகமாகக் குரல் கொடுக்க…
“ஹாய் கார்த்திக் பையா?” என்றபடி அவன் எதிரில் அமர்ந்தாள். அவள் சொன்னதைக் கேட்டு அகிலாவுக்குச் சிரிப்பு.
“அப்புறம் எப்படி இருந்தது உங்க ஹனிமூன்?” கார்த்திக் கேட்க, அவனுக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டவள், அதை மட்டும் கேட்காதே என்றாள்.
அகிலா, “நீயும் சாப்பிடு அபர்ணா.” என்றதும், “அத்தை சாப்பிட்டாங்களா?” என அவள் கேட்க, அகிலா இன்னும் இல்லை என்று சொல்ல, “அப்ப நான் அவங்க சாப்பாடும் போது சாப்பிட்டுகிறேன்.” என்றாள்.
சாப்பிட்டு கார்த்திக்கும் அகிலாவும் ஒன்றாகவே அலுவலகத்திற்குக் கிளம்பி விட, ஸ்வர்ணாவோடு சேர்ந்து அபர்ணா காலை உணவு சாப்பிட்டாள். ஒன்றாக இருவரும் சாப்பிட்டாலும், அவரும் எதுவும் பேசவில்லை… இவளும் பேசவில்லை.
ஸ்வர்ணாவுக்கு எதோ தடுத்தது. அபர்ணா அதை உணர்ந்து அவளும் அமைதியாக இருந்தாள். ஸ்வர்ணா அபர்ணாவை ராம்மின் மனைவியாகப் பார்த்தார்… அவரின் மருமகளாகப் பார்க்க தவறினார்.
வீட்டின் மற்ற வேலைகள் பார்க்கும் பெண்கள் வந்தனர். ஒருவர் தூசி தட்டி வீட்டை பெருக்கி துடைக்க, இன்னொரு பெண் துணி துவைத்து விட்டு, கீழே இருந்த அறையில் உட்கார்ந்து முன் தினம் துவைத்த துணிகளுக்கு இஸ்த்திரி போட்டு மடித்து வைத்தாள். ஸ்வர்ணா ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டு
இருந்தார்.
சமையல் அறையில் சமையல்காரர் சமைக்க, அவருக்கு இன்னொரு பெண்மணி காய் நறுக்கி உதவினார். அவர்தான் பத்திரம் கழுவது, மற்றும் ஸ்வர்ணா சொல்லும் மற்ற எடுபிடி வேலைகளைச் செய்வது. காலையில் வந்தால், இரவுதான் செல்வார். சமையல்காரர் சமையல் மட்டும்தான் செய்வார்.
மதியம் பன்னிரண்டு மணிக்குள் சமைத்துவிட்டு வீட்டிற்குக் கிளம்பி விடுவார். திரும்ப மாலை ஏழு மணிக்கு வந்து இரவுக்குச் சமைத்து விட்டு செல்வார். இதுதவிர வாயில் காவலாளிகள். ஒருவர் பகலுக்கு இன்னொருவர் இரவுக்கு.
அபர்ணா ஹாலில் உட்கார்ந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளுக்கு அங்கே செய்ய ஒன்றுமே இல்லை. வீட்டு வேலைக்கே மாதம் அறை லட்சதிற்கும் மேல் சம்பளம் கொடுப்பார்கள் போல என நினைத்துக் கொண்டாள்.
ஸ்வர்ணா டிவியில் நாடகம் பார்க்க, அபர்ணாவும் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். ரொம்பவும் கொடுமையாக இருப்பது போல உணர்ந்தாள். ஒரு கதையிலும் லாஜிக் என்பதே இல்லை. இதைப் போய் எப்படிப் பார்கிறார்கள் என இருந்தது.
மதியம் ஸ்வர்ணாவோடு சாப்பிட்டாள். அவர் மதிய உறக்கத்திற்குச் சென்றுவிட… இவளுக்கு ரொம்பவும் போர் அடித்தது. ராமிற்குப் போன் செய்தாள்.
“என்ன டா?”
“என்ன பண்றீங்க?”
“ஒரு கிளைன்ட் மீட்டிங்.”
“நான் போய் அம்மாவை பார்த்திட்டு வரட்டா?”
“சரி போய்ட்டு வா.”
“எதுல போக?”
“டிரைவர் இருப்பார் பாரு. அவரோடகார்ல போ…”
“நானே ஓடிட்டு போகவா.”
“நோ… இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும். அவரோட போ… நான் வந்து நைட் கூப்பிடுகிறேன்.”
அவன் வந்து அழைக்கிறேன் என்றதும், மகிழ்ச்சியாகச் சரி என்றாள். ஸ்வர்ணாவிடம் சென்று சொல்லிவிட்டு, உடனே கிளம்பி விட்டாள்.
இவள் திடிரென்று வந்து நின்றதும், சுகன்யாவுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. மகளைப் பாசமாக வரவேற்றார். இருவரும் ஹாலில் உட்கார்ந்து கதை பேசினர்.
“அங்க ரொம்பப் போர் அடிக்குது மா… நான் பேசாம அகிலா ஆபீஸ்க்கு போகப்போறேன். இங்க சும்மா இருக்கிறதுக்கு, அங்க போனாலாவது எதாவது பண்ணலாம்.”
“இரு அவசரப்படாத கல்யாணம் ஆகி கொஞ்சநாள்தான் ஆகுது. அவர்தான் நிற்க நேரமில்லாமல் இருக்காருன்னா… நீயும் அப்படியே இருப்பியா… உனக்குக் கண்டிப்பா வீட்ல செய்றதுக்கு எதாவது இருக்கும், அதை நீதான் கண்டுபிடிக்கணும்.”
தன் அம்மா சொன்னது போல, அப்படி அந்த வீட்டில் என்ன வேலை செய்வது என யோசிக்கத் தொடங்கினாள்.
“இப்ப எதுவும் குழந்தை வேண்டாம்ன்னு இருக்கீங்களா?” சுகன்யா மெல்ல கேட்க, அபர்ணா இல்லை என்று தலையாட்டினாள். அதைக் கேட்டு முகம் மலர்ந்தவர், “குழந்தையெல்லாம் வந்திட்டா… உனக்குத் தானா டைம் போயிடும்.”
“உனக்கு வேலைக்குப் போகணும்ன்னு அவசியம் இல்லை. உன் குடும்பத்தை நல்லா பார்த்துக்கோ.” என்றார்.
சுகன்யா சொல்வதும் சரிதான். அதே சமயம் தான் வேலைக்குச் சென்றுவிட்டால், ஸ்வர்ணா தன்னோடு ஒட்டாமலே இருந்துவிடுவாரோ என அந்தப் பயமும் அவளுக்கு இருந்தது.
மகள் வந்திருப்பது தெரிந்து, ஸ்ரீகாந்த அன்று சீக்கிரமே வீட்டுக்கு வந்துவிட, அருணும் கல்லூரியில் இருந்து வந்ததும், குடும்பமாக உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டு இருந்தனர்.
இரவு உணவுக்கு மாப்பிள்ளை வருவதால்.. சுகன்யா ஒரு மினி விருந்து தயார் செய்ய… அபர்ணா சென்று அவருக்கு உதவினாள். இருவரும் பேசிக்கொண்டே வேலை செய்தனர்.