இரவு ஏழு மணி போல் ராம்மும் வந்துவிட, அவனைப் பார்த்ததும் அபர்ணா முகத்தில் அப்படியொரு மலர்ச்சி. இங்கே அவனது உடைகள் இருப்பதால்… குளித்துவிட்டே சாப்பிட அமர்ந்தான்.
“அருண் அன்னைக்குக் கல்யாண மண்டபத்தில எதுக்கு அழுத, உங்க அக்கா போறதை நினைச்சு அழுதியா… இல்லைனா என்னை நினைச்சு அழுதியா?” என ராம் வேண்டுமென்றே அபர்ணாவை சீண்ட,
சிறிது நேரம் சென்று இருவரும் வீடு திரும்ப, அங்கே அகிலா கார்த்திக் சாப்பிட்டுவிட்டு ஹாலில் அமர்ந்து இருந்தனர். ஸ்வர்ணாவும் உட்கார்ந்து இருந்தார். ராம் அவர்கள் சாப்பிட்டு விட்டார்களா என விசாரித்தான்.
“டேய் ! ஹனிமூன் போக உனக்கு வேற இடமே கிடைக்கலையா?” கார்த்திக் ஆரம்பிக்க,
“நல்லா கேளுங்க.” என்றாள் அபர்ணா சடவாக.
“ஏன் அந்த இடத்துக்கு என்ன குறை? அபர்ணா, திரும்பவும் இன்னொரு முறை போவோமா.” ராம் கேட்க, “நீங்க ஒரு ஆணியும்…” எனச் சொல்லிவிட்டு ஸ்வர்ண இருந்ததால்… மேலும் தொடராமல் விட்டாள்.
அவள் சொல்ல வந்தது புரிந்து ராம்மும் கார்த்திக்கும் சிரித்தனர்.
எல்லோருமாகச் சேர்ந்து பேசிக் கொண்டு இருந்துவிட்டு, படுக்கச் சென்றனர்.
மறுநாள் காலை அலுவலகம் செல்வதற்கு முன், இன்னைக்கு நம்ம கல்யாணத்துக்காக, ஆசரமம் ஒன்னுக்கு மதிய சாப்பாடு கொடுக்கிறோம். அதனால நாமும் போகணும்.” என்றான்.
அபர்ணாவுக்கு ரொம்ப மகிழ்ச்சி, வீட்டில் சும்மா இருப்பதற்கு அங்காவது செல்லலாமே என்று இருந்தது. “அத்தையும் கூடக் கூடிட்டு போகலாமா… அவங்களும் சும்மா தானே இருக்காங்க.”
அபர்ணா சொன்னதை யோசித்துப் பார்த்த ராம், ஸ்வர்ணாவிடம் சென்று சொல்லவும், முதலில் வரவில்லை என்றவர், அவன் வற்புறுத்தவும், சரி என்றார்.
ராம் தான் அங்கே நேராக வந்துவிடுவதாகச் சொல்ல, பன்னிரெண்டு மணியானதும், மாமியாரும், மருமகளும் வீட்டில் இருந்து காரில் கிளம்பி சென்றனர். அபர்ணா ஆடம்பரமாக உடை அணியாமல், காட்டன் சேலை அணிந்து வந்தாள்.
ஆசரமத்தில் ராம் இவர்களுடன் சேர்ந்து கொண்டான். அது வெறும் அநாதை ஆசரமம் மட்டும் அல்ல… வசதி இல்லாதவர்களுக்கான முதியோர் இல்லமும் தான்.
அந்த இல்லத்தை நடத்தும் பெண்மணிக்கு நடுத்தர வயதுதான் இருக்கும். ரொம்பக் கனிவாக இருந்தார். இவர்களை வரவேற்று அழைத்துச் சென்று, எல்லாக் குழந்தைகள் மற்றும் பெரியவர்களைச் சேர்ந்து, இவர்கள் திருமணதிற்கு வாழ்த்து தெரிவிக்க வைத்தார்.
பிறகு எல்லோருக்கும் அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. சைவம் அசைவம் இரண்டுமே இருந்தது. அதோடு கடைசியில் எல்லோருக்கும் ஐஸ்கிரீம் வேறு. ராம் அபர்ணா இருவருமே தாங்களும் பணியாளர்களுடன் சேர்ந்து பரிமாறினர்.
ஐஸ்கிரீம் கொடுப்பவனிடம், “எவ்வளவு கேட்டாலும் இல்லைன்னு சொல்லாம கொடு.” என்றான் ராம். அவர்கள் அனைவரும் வயிறார சாப்பிட்டார்கள் என்பதை, அவன் நேரடியாகப் பார்த்தே திருப்தியுற்றான்.
இவர்களும் அந்த ஆசாரம தலைவியுடன் சாப்பிட்டு விட்டு, வீடு திரும்பினர். இவர்கள் வந்த காரை அனுப்பிவிட்டு, ராம் தன்னுடைய காரில் இருவரையும் அழைத்துச் சென்றான்.
அவன் நினைத்து இருந்தால்… காசை கொடுத்துவிட்டு இருந்திருக்கலாம். தாங்கள் கொடுப்பது அவர்களுக்கு உண்மையில் கிடைத்ததா… அவர்கள் வாயிறாற சாப்பிட்டார்களா எனத் தன் நேரத்தை செலவழித்து, அவன் நேரில் வந்து பார்க்க வேண்டும் என எந்த அவசியமும் இல்லை.
அவனுடைய அந்தச் செயல் அபர்ணாவை மிகவும் கவர்ந்தது. எத்தனை பேர் மற்றவர்களுக்காக யோசிக்கிறார்கள்.
அபர்ணா தன்னவனையே காதலாகப் பார்த்துக் கொண்டு வர… தன் அம்மாவை வைத்துக் கொண்டு, பதில் பார்வை பார்க்க முடியாமல் ராம்தான் திணறி விட்டான்.
வீட்டிற்கு வந்ததும் ஸ்வர்ணா ஓய்வு எடுக்கச் சென்று விட… அவர் செல்லும் வரை ஹாலில் இருந்தவன், அவர் சென்றதும் தங்கள் அறைக்கு விரைந்தான்.
அபர்ணா அப்போதுதான் புடவையைக் கழட்டிக் கொண்டு இருந்தாள். அவளை அப்படியே அள்ளிக் கட்டிக் கொண்டவன், “ஹே… ஏன் டி என்ன அப்படிப் பார்த்த?” என்றான்.
“எப்படிப் பார்த்தேன்?”
“என்னை முழுங்கிற மாதிரி?”
அப்படியா பார்த்து தொலைச்சோம் என அபர்ணாவுக்கு முகம் சிவக்க…. “நீ ரொம்ப நல்லவன் டா…” என்றாள்.
காதலாக அனைத்துக், அதை கூடலில் முடித்து, இருவரும் களைப்பில் உறங்கியும் விட்டனர். மாலை அலுவலகத்தில் இருந்து போன் வந்ததும், தலைதெறிக்கக் கிளம்பினான்.
“உன் கூட இருந்தா, நான் எல்லாத்தையும் மறக்கிறேன். இனிமே பகல்ல வீட்டுக்கே வரக் கூடாது.” என அவன் சொல்லிவிட்டு செல்ல, அபர்ணா சிரித்துக் கொண்டாள்.
இருவருக்கும் இடையில் சண்டைகளும் வராமல் இல்லை. அவன் சில நாட்கள் இரவு தொடர்ந்து தாமதமாகவே வர…
“நீ இப்ப எல்லாம் என்னைக் கண்டுக்கவே மாட்டேங்கிற.” என அபர்ணா குற்றம் சொல்ல…
“எப்பவும் உன்னைக் கொஞ்சிட்டே இருக்க முடியாது டி.” என அவனும் பதிலுக்குப் பேச… என அவ்வபோது இப்படிச் சின்னச் சண்டைகளும் வந்தது.
அந்த வார இறுதியில், தொழில்துறை நண்பர் கொடுத்த விருந்துக்கு, ராம் அபர்ணாவையும் அழைத்துச் சென்றான். அவள் நன்றாக உடை அணிந்து வந்தாள். இவர்கள் செல்லும்போது ஆதித்யாவும் வர, அவன் இவர்களைப் பார்த்து பார்க்காதது போலச் சென்றான்.
இருவரும் எப்போதுமே விழுந்து பழகமாட்டார்கள். ஆனால் எங்காவது பார்த்தால்… ஹாய் ஹலோ சொல்லிக் கொள்வார்கள். இன்று அவன் பதறி அடித்துச் செல்வது போல ராமிற்குத் தோன்றியது. இவன் வீட்டினர் பத்திரிகை கொடுத்தும், ஆதித்யா இவர்கள் வரவேற்புக்கும் வரவில்லை.
“நான் சொல்ல மாட்டேன். என்னால சொல்ல முடியாது.” என்றாள் அபர்ணா. அவள் முகம் அப்படிக் கருத்து, சிறுத்து விட்டது.
உணவு முடிந்து கிளம்பும் சமயம், ஆதித்யா தனியாகப் பின்புறம் செல்வதைக் கவனித்த ராம், அபர்ணாவிடம், “ஒரு நிமிஷம் வந்திடுறேன்.” எனச் சொல்லிவிட்டுச் சென்றான்.
ஆதித்யா ரெஸ்ட் ரூமில் இருந்து வெளியே வர, ராம் அவன் சட்டையைப் பிடித்து, “அபர்ணாவை என்ன டா பண்ண?” என ஆக்ரோஷமாகக் கேட்க, ராம்மின் கையை விலக்கியவன், முன்பு நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தான்.
“உன்னோட நான் எப்பவும் போட்டி போடுவேன். அது உனக்கே தெரியும். நான், நீ அபர்ணாவை லவ் பண்ணி, கல்யாணம் பண்ணிப்பேன்னு எல்லாம் நினைக்கலை.”
“உனக்கு முன்னாடி அவளை என்னோட கேர்ள் ப்ரண்ட் ஆக்கிகனும்ன்னு நினைச்சேன்.”
“அவ என்கிட்டே பிரண்டா தான் பழகிட்டு இருந்தா. நான்தான் அவளைப் போர்ஸ் பண்ணி வெளிய கூப்பிடுவேன். ஆனா அவ சாமான்யமா ஒத்துக்க மாட்டா. எப்பவாவது தான் வருவா.”
“என்னை அவ பின்னாடி சுத்த வைக்கத்தான் அப்படிப் பண்றான்னு நினைச்சேன்.”
“ஒருநாள் அவ வேலை முடிஞ்சு போகும்போது, வரியா கோவா வரை ட்ரிப் போகலாம்ன்னு கேட்டேன்.”
ஆதித்யா சொன்னதை கேட்ட ராமிற்கு, இதெல்லாம் தான் அவளை மறுத்து, தன் அம்மாவை பெண் பார்க்க சொன்னபிறகு நடந்ததுதான் என புரிந்தது. அபர்ணா நினைத்து இருந்தால்…. அதித்யாவை திருமணம் செய்து கொண்டு சென்று இருக்கலாம். இப்படிப்பட்டவளை தான் எவ்வளவு வருத்தினோம் என அவனுக்கு கஷ்டமாக இருந்தது.
ஆதித்யா செய்த தப்பை நினைத்து அவனே வருந்துகிறான், அதைச் சரி செய்யவும் பார்த்து இருக்கிறான். அவனிடம் போய்க் கோபப்பட்டால், அது செத்த பாம்பை அடிப்பதற்குச் சமம்.
“அபர்ணாவை இனிமே அவ இவன்னு எல்லாம் சொல்லாத. அவ என்னோட பொண்டாட்டி. புரிஞ்சுதா?” என்ற ராம்மிடம், “நீ ரொம்ப லக்கி.” என்றான் ஆதித்யா. இருவரும் ஒன்றாகவே திரும்ப…. அவர்கள் இருவரையும் பார்த்து அபர்ணா முறைத்தாள்.
காரில் திரும்பும் போது அவள் அமைதியாக வர… “அவன் எதோ அப்பாவையும் நீலீமாவையும் மனசுல வச்சு, உன்கிட்ட அப்படிக் கேட்டிருக்கான். அவனே ரொம்பப் பீல் பண்றான். இனி உன் விஷயத்துல வரமாட்டான்.” என ராம் அபர்ணாவுக்குச் சமாதானம் சொல்ல…
“அவன் மட்டும் தான் என்னை அப்படி நினைச்சானா…நீங்க என்னைப் பத்தி ரொம்ப நல்லா நினைச்சீங்களா? நீங்களும் தானே என்னைப் பத்தி கேவலமா நினைச்சீங்க. என்கிட்டையே நீங்க கேட்கலை… உன் குடும்பமே இப்படித் தான் இருப்பீங்களான்னு.” அபர்ணா தன் மீது பாய்வாள் என ராம் எதிர்ப்பார்க்கவே இல்லை.
‘இதுதான் எங்கையோ போற மாரியாத்தா, என் மேல வந்து ஏறு ஆத்தான்னு சொல்வாங்களா…” என நினைத்தவன்,
“அபர்ணா, என் மனசால சொல்றேன். உன்னை நான் எப்பவும் தப்பா நினைச்சதே இல்லை. உன்னை நான் கோபப்படுத்த மட்டும்தான் அப்படிப் பேசினேன். உன்னைப் பத்தி தப்பா நினைச்சா… நான் உன்னைக் கல்யாணம் பண்ணி இருப்பேனா?” ராம் தன் மனதின் ஆழத்தில் இருந்து சொல்ல,
“எனக்கே தெரியலை… எதைப் பார்த்து நான் உன்னைக் காதலிச்சேன், எதுக்காக உன்னைக் கல்யாணம் பண்ணேன்னு. ஆனா இனிமேல் என்னைக்காவது நீ என்னைப் தப்பா பேசினேன்னு வை… அன்னைக்கு உன்னை விட்டு நான் போயிட்டே இருப்பேன்.” என்றாள்.
“ஏன் டா செல்லம் இப்படி எல்லாம் பேசுற? அப்படி எல்லாம் எதுவும் நடக்காது.” என்றவனுக்கு, உள்ளுக்குள் கொஞ்சம் பயம் வந்தது என்னவோ உண்மை.
மகனே ! கோபத்தில கூட எக்குத் தப்பா பேசி வச்சிடாத டா ! என அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டான்.