பனி சிந்தும் சூரியன்அத்தியாயம் 12நித்யாவிற்கு வளைகாப்பு, இரண்டாவது குழந்தை என்பதால் நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்திருந்தனர். கார்த்திக் ராம்மை அழைக்க… பெண்கள் விழா என்பதால் அவன் அகிலாவை போகச் சொன்னான்.


அண்ணன் பேச்சை தட்ட முடியாது, அகிலாவும் விழாவுக்குச் சென்றாள். வீட்டில்தான் விழா ஏற்பாடு செய்திருந்தனர். முன்புறம் தோட்டம் இருக்க… வெள்ளை நிறத்தில் அழகான வேலைப்பாடு செய்யப்பட்ட பெரிய மாளிகை.


விழா முடியும் நேரத்தில்தான் அபர்ணா உள்ளே நுழைந்தாள். நித்யாவின் மாமியார் அவளையும் வளையல் போட சொல்ல… அவர் சொன்னது போலச் செய்தவள், கொண்டு வந்த பரிசையும் நித்யாவிடம் கொடுத்து, “அழகான ஒரு பட்டுக் குட்டி பிறக்கட்டும்.” என வாழ்த்தியவள், நித்யாவை தழுவி அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.


ஏற்கனவே அபர்ணாவின் ரகளையை அறிந்தவர்கள் ஆயிற்றே… அதனால் எல்லோரும் அவளை ரசனையுடனே பார்க்க… அகிலா மட்டும் ஆச்சர்யமாகப் பார்த்தாள். இவங்களை இவ்வளவு தெரியுமா என்பது போல…


வந்திருந்த உறவினர்கள் சாப்பிட செல்ல…. அவர்களைக் கவனிக்க மகேந்திரன் சென்றுவிட… நித்யாவோடு அபர்ணாவும், அகிலாவும் இருக்க… சிறிது நேரத்தில் கார்த்திக்கும் வந்து இணைந்து கொண்டான்.


“ஹாய் மிஸ் இந்தியா.” எனக் கார்த்திக் அழைத்ததும், அபர்ணா இடுப்பில் கை வைத்தபடி நின்று அவனை முறைத்தாள்.


பீச் நிறத்தில் டிஸைனர் புடவையும், நெட்டட் ரவிக்கையும் அணிந்து இருந்தாள். காதில் கற்கள் வைத்த பெரிய தொங்கட்டானும், ஒரு கையில வாட்சும், மற்றொன்றில் கற்கள் பதித்த ப்ரேஸ்லெட் …. முகத்திற்கு எளிமையான அலங்காரம் மட்டுமே. அதற்கே அவ்வளவு அழாக இருந்தாள்.


அவள் தோற்றத்திற்கு எடுத்துக் கொண்ட அக்கறை வீண் போகவில்லை. உடல் நன்றாக இளைத்து, முகத்திற்கு ஈடாக விரித்து விட்டிருந்த கூந்தளும் பளபளத்தது.


“ரொம்ப அழகா இருக்க.” என்றான் கார்த்திக். அபர்ணா சிரிக்க… அகிலா இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தாள்.


“கண்டிப்பா ஜெயிச்சிடுவா இல்ல கார்த்திக்?” நித்யா கேட்க, கார்த்திக் அதை அமோத்தித்தான்.


“நீங்க போட்டிக்கு வந்திருக்க மத்தவங்களை இன்னும் பார்க்கலை…. ஒவ்வொருத்தரும் எப்படி இருக்காங்க தெரியுமா…. காட் ! நான் என்ன ஆகப் போறேனோ எனக்கே தெரியலை.” என்றாள் அபர்ணா நிஜமான படபடப்புடன்.


மகேந்திரன் உடன் வந்த பணியாளர்கள்… நால்வரிடமும் ஆளுக்கு ஒரு பெரிய மெகா சைஸ் தட்டை கொடுத்துவிட்டு செல்ல, “உங்களுக்குப் பசிக்குமேன்னு கொண்டு வந்தேன்.” என மகேந்திரன் சொல்ல, நித்யா கணவனை ஆசையாகப் பார்க்க,


“பாருடா அக்கறையை. உங்க பொண்டாட்டிக்காகன்னு சொல்லுங்க. நெல்லுக்குப் பாயிறது, கொஞ்சம் இந்தப் புல்லுங்களுக்கும் பாயட்டும்.” என்றாள் அபர்ணா. மகேந்திரன் புன்னகைத்தபடி அங்கிருந்து சென்றான்.


வளைகாப்பு என்பதால்… ஐந்து வகையான சாதமும், அவியல், பொரியல், பாயசம் எனக் குட்டி குட்டி கிண்ணங்களில் இருக்க, பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊர்வது போல இருந்தது.


அபர்ணா கண்களில் இருந்த ஆசையைக் கவனித்த கார்த்திக், அவள் தட்டை பிடுங்கிக் கொடண்டவன், “நீ இப்ப டியட்ல இருக்க… இதெல்லாம் சாப்பிட கூடாது.” என்றான்.


“ஒருநாள் சாப்பிட்டா ஒன்னும் ஆகாது கொடுங்க.” என அபர்ணா சிணுங்க, கார்த்திக் சிரித்தபடி தட்டை அவளிடம் கொடுத்தான்.


தட்டில் இருந்த கேசரியை எடுத்து சுவைத்தபடி, “கார்த்திக், அன்னைக்கு நித்யா அக்கா சொன்னது உண்மையா. நீங்க நிஜமாவே அஞ்சு வருஷமா ஒரு பெண்ணை லவ் பண்றீங்களா?” என அபர்ணா கேட்க, கார்த்திக் உடனே அகிலாவைத்தான் பார்த்தான். அவள் முகம் உடனே மாறியது.

“இப்ப உனக்கு அதுல என்ன ஆச்சர்யம்?”


“ரெண்டு பக்கமும் ஓகேன்னா பரவாயில்லை. ஆனா என்ன நம்பிக்கையில அஞ்சு வருஷமா ஒரு பெண்ணை லவ் பண்றீங்க?”


“அவ என்னைக்காவது கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணா என்னைத்தான் பண்ணிப்பா… அந்த நம்பிக்கையில்தான்.”


“கிரேட் கார்த்திக், அவங்களைப் பத்தி எவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்கீங்க. ஆனா அவங்களுக்கு ஏன் கல்யாணம் பண்ணிக்க இஷ்ட்டம் இல்லை?”


“அது ஒரு லூசுத்தனமான காரணம்.” கார்த்திக் சொல்ல, அகிலா அவனை முறைத்தாள்.


“ஆனா கார்த்திக், நீங்க எனக்கு நிஜமாவே இன்ஸ்பிரேஷன் தெரியுமா…. நானும் உங்களை மாதிரி எத்தனை வருஷமானாலும் என் காதல் ஜெயிக்கக் காத்திருப்பேன்.”


அபர்ணா சொன்னதும், அகிலா இன்னும் அவனை முறைக்க, அவளைக் குழப்பமாகப் பார்த்த கார்த்திக், அபர்ணாவிடம் திரும்பி, “உன் லவ்வர் இன்னும் உன் லவ்வை ஏத்துக்கவே இல்லையா…. இதுக்குத்தான் அன்னைக்கு அவ்வளவு பில்ட் அப் கொடுத்தியா.” என்றதும், அபர்ணாவும் அவனை முறைக்க,


“சரி விடு, உனக்கும் என் ராசித்தான் போலிருக்கு.” என்றான்.


“ஐயோ ! அதுக்காக உங்க அளவுக்குப் பொறுமை எல்லாம் எனக்கு இல்லை பா…. நான் ஓரளவுக்குத்தான் பார்ப்பேன். இல்லைனா கடத்திட்டு போயிட்டே இருப்பேன்.” அபர்ணா சொன்னதும், அகிலாவுக்கு வயிற்றில் புளியை கரைத்தது போல் இருந்தது.


“சரி நான் கிளம்புறேன்.” எனத் தட்டை வைத்துவிட்டு அகிலா எழுந்து கொள்ள…


“இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாமே அகிலா…” நித்யா சொல்ல,


“இல்லை எனக்கு வேலை இருக்கு, ஆபீஸ் போகணும்.” என்றாள்.


அவள் மற்றவர்களிடமும் விடைபெற்று கிளம்ப, அவளை வழியனுப்புவது போலக் கார்த்திக் உடன் சென்றான்.


“அப்புறம் என்ன முடிவு பண்ணி இருக்க?”


“எதைப் பத்தி.”


“தெரியாதது போலக் கேட்டா என்ன சொல் முடியும்?”


“நீங்க தேவையில்லாம பிடிவாதம் பிடிச்சா, நானும் என்ன பண்ண முடியும்?”


“நீ வேண்டாம்ன்னு சொல்லியும், நான் பின்னாடி வர்ற திமிர்ல பேசுறியா அம்மு.”


“உங்களை யார் பின்னாடி வர சொன்னது? அதுதான் அபர்ணாவை அந்தப் புகழ் புகழ்ந்தீங்களே… அவளையே கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான.” அகிலா வாய்விட, கோபத்தில் கார்த்திக்கும் கையை ஓங்கி விட்டான்.


“அடிச்சேன்னு வச்சுக்கோ பல் எல்லாம் கொட்டிடும். ” என்றவன், பிறகே இருக்கும் இடம் உணர்ந்து கையைக் கீழே இறக்கினான். இருவரும் பேசியபடி காரின் அருகே வந்திருந்தனர். அங்கே யாரும் இல்லை.


அவன் அபர்ணாவின் அழகை புகழ்ந்தது, அகிலாவின் மனதை பாதித்தே இருந்தது. வேறு யாரும் என்றாள் கண்டு கொண்டிருக்க மாட்டாள். அது கார்த்திக் என்பதால்தான் கோபம். அவளின் அப்பாவும் அழகை பார்த்துதானே இன்னொரு பெண்ணின் பின்னால் போனார். அந்தப் பாதிப்புத்தான் அவளை அப்படிப் பேச வைத்தது.


“சாரி.” என முதலில் கார்த்திக்தான் சொன்னான்.


அப்போதும் அகிலா மன்னிப்புக் கேட்கவில்லை. “உங்களுக்கு இப்ப புரியுதா என்னோட நிலைமை. காலமெல்லாம் இதைதான் உங்களுக்கு அனுபவிக்கனுமா… என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டா, உங்க நிம்மதியும் போயிடும்.”


இதுவரை கார்த்திக் கூட அகிலாவின் மறுப்பை, சாதாரணமாகத்தான் எண்ணி இருந்தான். இப்போது உண்மையாகவே அவனுக்குப் பயம் வந்துவிட்டது.


“உன்னால நான் செத்தாலும் பரவாயில்லை டி…. ஆனா என்னால மனசை மாத்திக்க முடியாது. நான் அபர்ணாவை புகழ்ந்தா, உனக்கு ஏன் கோபம் வருது? யோசிச்சு பாரு. உன் மனசு உனக்கே புரியும்.” என்றான்.


அகிலாவுக்குப் புரிந்துதான் இருந்தது. ஆனால் முழுமையான நம்பிக்கை என்பது அவளுக்கு வரவே வராது. காதலிலும், திருமணத்திலும், ஒருவர் மீது மற்றவர் கொண்டுள்ள நம்பிக்கைதான் அவர்கள் வாழும் வாழ்விற்கே அஸ்த்திவாரம் போல… இங்கே அஸ்திவாரமே ஆட்டம் கண்டது.


அகிலா சென்றதும், இப்போது யாரோடும் பேச பிடிக்காத கார்த்திக், தனது அறைக்கு நழுவ, அபர்ணா மாலை வரை இருந்து நித்யாவுடன் அரட்டை அடித்து விட்டே சென்றாள்.


அன்று இரவு தனிமையில், ‘அபர்ணாவை போய் எப்படிக் கார்திக்கோடு இணைத்து பேசினோம்.’ என இப்போது யோசிக்கும் போது, அவளுக்கே முட்டாள்தனமாகத் தோன்றியது.


அபர்ணா யாரையோ விரும்புவதாகச் சொன்னாளே… ஒருவேளை அண்ணனாக இருக்குமோ? ஐயையோ ! அண்ணனா இருந்தா என்ன ஆகும் என இதுவரையில் இருந்த கவலை வேறு பக்கம் திரும்பிவிட்டது.


மறுவாரத்தில் ஒருநாள் புது ப்ராஜெக்ட் விஷயமாக ராம் லண்டன் செல்லவிருந்தான். அவன் துபாய் சென்று அங்கிருந்து மற்றொரு விமானத்தில் லண்டன் செல்வதாக இருந்தது.


துபாய் செல்வதற்காக விமான நிலையத்தை அடைந்தவன், அங்கே அபர்ணாவை பார்த்தான். அவள் யாரோ சிலருடன் நின்று பேசிக்கொண்டு இருந்தாள். சிறிது முன்னேறியவனுக்கு, அது அவளது குடும்பத்தினர் என்று புரிந்தது.


அபர்ணா முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. வெள்ளை நிற முழு நீள ஆடையில் இருந்தவள், அப்படியும் இப்படியும் சுழன்று, எப்படி இருக்கிறேன் என்று கேட்க, சுகன்யா முகத்தில் அவ்வளவு பூரிப்பு. வெகு நாட்கள் கழித்து மகளைப் பார்த்த சந்தோஷம். அவர் மகளின் கன்னம் வழித்துத் திருஷ்டி கழித்தார்.


அவள் தம்பி எதோ கேலி செய்ய, அவனை அடித்தவள், தன் அப்பாவிடம் செல்லம் கொஞ்சினாள். அவரும் மகளைத் தோளோடு அனைத்துக் கொண்டார். அழகான குடும்பம் அவர்களுடையது. ஒரு குடும்பமாக அவர்கள் அனைவரும் சேர்ந்து இருப்பதைப் பார்ப்பதற்கே நன்றாக இருந்தது.


இப்படி நம் குடும்பமும் இருந்திருக்கிறதா என யோசித்த போது, சின்ன வயதில் நடந்த மங்கலான நினைவுகள் மட்டுமே…. தன் குடும்பம் என்னும் கூடு ஏன் கலைந்து போனது?


கேள்விக்கான பதில் கிடைத்ததும், அதுவரை மென்மையாக இருந்த முகம், இப்போது இறுகியது.


அவன் குடும்பம் சிதைந்து போனதற்கு, அந்தக் குடும்பத்தில் இருந்த ஒருவர்தான் காரணம் என அறிவுக்கு உரைத்த நொடி… அங்கு நிற்கவே முடியவில்லை. அங்கிருந்து விரைந்து சென்றான்.


அடுத்த நாள் முழுவதும் ஓய்வு எடுத்து விட்டு. அதற்கு அடுத்தநாள் கொண்டு வந்த பெட்டிகளைப் பிரித்துச் சுகன்யாவும், அபர்ணாவும் பேசியபடி, உரிய இடத்தில் அடுக்கிக் கொண்டு இருந்தனர்.


“நல்லா இளைச்சதும், பார்க்க ரொம்பச் சின்னப் பொண்ணா தெரியிற அபர்ணா.” த அம்மா சொன்னதைக் கேட்ட அபர்ணா, பக்கென்று சிரித்து விட…


“என்ன அது சொன்னா நானும் சிரிப்பேனே?” சுகன்யா கேட்க,


“போன வாரம் காலேஜ்ல ஒரு பையன் வந்து என்னை ப்ரொபோஸ் பண்ணான். யாரு என்னன்னு கேட்டா. யுஜி இரண்டாவது வருஷம்ன்னு சொன்னான். டேய் ! நீ எனக்கு ஜூனியர்ன்னு சொன்னா…. பரவாயில்லை இருக்கட்டும்ன்னு சொல்றான்.”


“டேய் ! போடா, நானே நொந்து போய் இருக்கேன். நீ வேற படுத்ததேன்னு… அவனுக்குப் புரிய வைக்கிறதுக்குள்ள நான் பட்டபாடு.”


மகள் சொன்னதைக் கேட்டுச் சுகன்யா சிரிக்க… அங்கிருந்த கட்டிலில் உட்கார்ந்து இவர்கள் பேசுவதைக் கவனித்த பாட்டி முகம் மாறினார். அதைக் கவனித்த சுகன்யா மகளைக் குளிக்க அனுப்பினார்.


“என்ன அம்மா?”


“நீ பண்றது கொஞ்சம் கூடப் பிடிக்கலை சுகன்யா. ஒரு அம்மாகிட்ட பேசுற மாதிரியா உன் பொண்ணு பேசுறா. நீயும் கேட்டு ரசிச்சிட்டு இருக்க.”


“என் பொண்ணு என்கிட்டதான் மா மனசு விட்டு பேச முடியும்.”


“அவ என்கிட்டே ரொம்ப நல்லவ மாதிரி காட்டிகிட்டு, எனக்குத் தெரியாம தப்பு பண்ணா உங்களுக்கு ஓகே வா.”


“நாம பண்ற தப்பு என்ன தெரியுமா? பசங்களுக்குத் தேவையானது எல்லாமே பார்த்து பார்த்துச் செய்வோம். சிலர் தேவைக்கு அதிகமானது கூடச் செய்வாங்க. ஆனா பிள்ளைங்ககிட்ட மனசுவிட்டு மட்டும் பேச மாட்டாங்க. அதுவே பெத்தவங்க பிள்ளைங்க நடுவுல ஒரு இடைவெளி வந்திடும்.”


“வீட்ல பேச முடியாததுனால… இந்தப் பசங்க போய் வெளிய போய் ப்ரண்ட்ஸ்கிட்ட பேசுங்க. அவங்களும் அதே வயசுல இருக்கும் போது… என்ன தெரியும் அந்தப் பசங்களுக்கு? நீ செய்றதுதான் சரின்னு சொல்லுங்க.”


“இது நம்ம வீடு, இங்க நாம உரிமையா இருக்கலாம் அப்படிங்கிற மாதிரி, இவங்க என்னைப் பெத்தவங்க, இவங்ககிட்ட நாம எதுனாலும் பேசலாம் அப்படிங்கிற சுதந்திரம் பசங்களுக்கு இருக்கணும்.”


“சொந்த வீட்லயே மனம் விட்டு பேசலைனா… வேற எங்க பேச முடியும்?”


“அப்படி மனம் விட்டு பேசும் போது, பெத்தவங்களுக்குத் தெரியாம எதையும் மறைச்சுச் செய்ய அவங்க விரும்ப மாட்டாங்க. அதுவே அவங்க தப்பு வழிக்கு போகாம இருக்க வைக்கும்.”


மகள் சொன்னதைப் பொறுமையாகக் கேட்ட அவளது அம்மா. “எனக்கு அபர்ணா மேல நம்பிக்கை இல்லாம இல்லை. ஆனா அவங்க அத்தையைப் போல இவளும் தப்பா எந்த முடிவும் எடுத்திட கூடாது. அதுதான் எனக்குக் கவலை.” என்றார்.


“நீலீமாவும் முதல்லையே வீட்ல மறைக்காம விஷயத்தைப் பேசி இருந்தா, இப்படி ஆகி இருக்காது.”


“உடனே யாரு பையன்? என்ன? ஏதுன்னு? விசரிச்சிருப்போம். அப்பவே அவர் ஏற்கனவே கல்யாணம் ஆனவர்ன்னு தெரிய வந்திருக்கும்.”


“எல்லாத்தையும் மறைச்சு வச்சு… கடைசியில குழந்தையும் வயித்துல வந்த பிறகுதான் வீட்ல தெரியும்.”


“அப்புறம் யாராலையும் எதுவும் பண்ண முடியாத சூழ்நிலை.”


“இவர் அதுலதான் மனசுவிட்டு போயிட்டார். இங்க யாரையும் பார்க்க முடியலை. பார்க்கிறவங்க எல்லாம் உன் தங்கச்சி ரெண்டாம் தாரமா கல்யாணம் பண்ணிகிட்டாளாமேன்னு கேட்டாங்க.”


“இன்னொரு குடும்பம் கலைஞ்சு போக, தன் தங்கை காரணம் ஆகிட்டாளேன்னு குற்ற உணர்வு வேற… அதனாலதான் துபாயில வந்த வேலையை வாங்கிட்டு போயிட்டோம்.”


“ரொம்ப நாள் தங்கச்சிகிட்ட பேசாமதான் இருந்தார். கூடப்பிறந்த பாசம் ரொம்பவும் விலக்கி வைக்கவும் முடியலை…. அவளா வந்தபோது, வராதேன்னு சொல்லவும் மனசு வரலை.”


“இப்பவும் ஒட்டவும் முடியாம, வெட்டவும் முடியாமதான் தவிச்சிட்டு இருக்கார்.”


“நான் வந்த பிறகு, உன் நாத்தனார் இங்க வரவே இல்லையே…”


“அவளுக்குத் தெரியும் மா, உங்களுக்கு அவளைப் பிடிக்காதுன்னு… அதுதான் வந்திருக்க மாட்டா.”


“உன் பொண்ணுக்கு தெரியுமா அவங்க அத்தையைப் பத்தி.”


“அவ சின்னக் குழந்தை அப்போ அதனால தெரியாது. வளர்ந்த பிறகு சொல்லி இருக்கணும். ஆனா உங்களுக்குத்தான் அபர்ணாவை பத்தி தெரியுமே… மனசுல ஒன்னும் வச்சுக்க மாட்டா… நேரடியா ஏன் இப்படிப் பண்ணேன்னு கேட்டுடுவா? அப்புறம் அவங்க அப்பாவுக்குதான் சங்கடமா போயிடும்.”


“அவ என்கிட்ட அவ அத்தையைப் பத்தி இதுவரை பேசலை…”


“உங்களுக்கு நீலீமாவை பிடிக்காதுன்னு சொல்லி இருந்தேன்.”


“பரவாயில்லை, உன் பொண்ணு சொன்னா புரிஞ்சிக்கிறா.”


தன் அம்மா சொன்னதற்குச் சிறிது நேரம் யோசித்த சுகன்யா, “தான் செய்ற விஷயம் தப்பு இல்லைன்னு நினைச்சா… அது யார் சொன்னாலும் விட்டும் கொடுக்க மாட்டா மா… அந்தப் பிடிவாதமும் அவகிட்ட இருக்கு.” என்றார்.

இது ஒரு நல்ல குணம்தான். நாம் செய்வது தவறு இல்லையென்றால்… பிறகு ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்?


அபர்ணாவும் விட்டுக் கொடுக்க மாட்டாள். ராம்மும் அவன் அம்மாவை விட்டுக் கொடுக்க மாட்டான். என்ன நடக்கப் போகுதோ?