Advertisement

கண்ணான கண்ணே – இறுதி அத்தியாயம்


வெகு நேர யோசனைக்குப் பிறகு, தவறு தன்னுடையது என்பதை நிருபன் உணர்ந்தான். திருமணதிற்கு அவசரப்பட்டது அவன்தான். அவர்கள் சூழ்நிலையும் அப்படி இருந்தது.


திருமணதிற்குப் பிறகும் அவன் வேலையின் காரணமாக நியதியிடம் நெருங்கி பழகவும் முடியவில்லை. அலுவலக வேலையே அவன் மனதை முழுவதும் ஆக்ரிமித்திருக்க, வேலையைச் சரியான நேரத்தில் முடித்துக் கொடுக்க வேண்டும் என மனதில் இருந்த அழுத்தம் வேறு காரணம்.


என்ன டா இப்படி சொதப்புற? இப்படியே இருந்தா வேலைக்கு ஆகாது என நினைத்தவன், மடிக்கணினியை எடுத்து எதோ செய்துவிட்டுப் படுத்தான்.


காலை அவன் கண் விழிக்கையில், நியதி அவன் அருகில் படுத்து இருப்பதைப் பார்த்தான். அவளின் அருகில் நெருங்கி படுத்து, அவளைத் தன் பக்கம் திருப்பி அனைத்துக் கொண்டான்.


நியதியும் விழித்துத் தான் இருந்தாள். இரவு அறையிலேயே உறங்கி இருக்க, காலையில் தான் எழுந்து வந்து, அவன் அருகில் படுத்து இருந்தாள்.


“என் மேல கோபமா?” நியதி விலகி நிருபனின் முகம் பார்க்க,


“சாரி நியதி தப்பு என் மேலதான்.”


“நீங்க என்ன பண்ணீங்க? எல்லாம் என்னோட தப்புதான்.”


“நியதி கொஞ்சம் என்னைப் பேசவிடு.”


“நம்ம கல்யாணம் நிதானமா நடந்திருந்தா, இந்தப் பிரச்சனை எல்லாம் தவிர்த்து இருக்கலாம்.”


“ஒரு மூன்னு மாசம் கழிச்சோ இல்ல ஆறு மாசம் கழிச்சோ கல்யாணத்தை வச்சிருந்தா, நிதானமா திட்டம் போட்டுக் கல்யாணம் பண்ணி இருக்க முடியும். அப்ப உங்க வீட்ல பணம் புரட்ட சவுகரியமா இருந்திருக்கும். ஆனா அப்படி செய்ய முடியலை.”

“நாம இங்க இருந்திட்டு, நம்ம வீட்டு ஆளுங்களை மட்டும் நமக்கு கல்யாணம் பேச சொல்லி இருந்தா… அப்பவும் இதே மாதிரி ரெண்டு பக்கமும் பேசி, பிரச்சனயை வளர்த்து, நம்ம கல்யாணம் நடக்காம கூடப் போய் இருக்கும்.”


“நாம ரெண்டு பேரும் அங்க இருந்ததுனாலதான், அவசரமா நடந்தாலும், நம்ம கல்யாணம் நல்லபடியா நடந்துச்சு. அதனால இனிமே அதைப் பத்தி பேச வேண்டாம்.”


“இன்னொன்னு உங்க வீட்டை பத்தி. உங்க வீட்ல உன்னை நல்லா படிக்க வச்சாங்க, நீ நல்லா சம்பாதிச்சு உங்க வீட்டுக்கு கொடுத்த, அது எல்லாம் தப்பே கிடையாது.”


“வீடும் உனக்குன்னு சொல்லிட்டாங்க. என்பது லட்சத்துக்கு வாங்கினது, இன்னைக்கு ஒரு கோடி போகும். அதுக்கு இதுவரை பாதிப் பணம் நீதான் கட்டி இருக்க. அதனால இனிமே எதோ நீ ஒண்ணுமே கொண்டு வராத மாதிரி நினைக்காத.”


“நமக்குக் கல்யாணம் ஆனதும், நம்ம பிறந்த வீட்டை விட்டுடோமோன்னு உனக்கு நினைப்பு.”


“நீ எப்பவும் அவங்களைத் தூக்கி சுமக்க முடியாது. அதை நினைவுல வை… இன்னொன்னு அவங்களைக் கஷ்ட்டப்பட விட்டு நாம பார்த்திட்டும் இருக்க மாட்டோம்.”


“இதுவரை நீ அவங்களுக்கு நல்லா செஞ்சிட்ட, இப்ப நீ செஞ்சுதான் ஆகனும்ங்கிற நிலைமையில அவங்க இல்லை. அப்படி அவங்களுக்குத் தேவைப்படும் போது கண்டிப்பா செய்வோம்.”


“நீங்க சொல்றது எல்லாம் சரிதான். ஆனா உங்களுக்கு எங்க வீட்டை அவ்வளவா பிடிக்கலை தான…. உங்க வீட்லயும் உங்களுக்காகத்தான் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க இல்ல….” நியதி சொல்ல,


“இப்ப உன்னை அழுத்திட்டு இருக்க விஷயம் இதுதான்.”


“நான் உன் வீட்டை கீழா பார்கிறேன்னு நினைக்கிற.”


“பெண் பார்க்க வந்த அன்னைக்கு, உன் அண்ணனும் தங்கையும் பேசின பேச்சுல தான் அவங்க மேல கோபமே தவிர, வசதி குறைவு, அந்தஸ்த்து குறைவுன்னு எல்லாம் நான் எதுவும் நினைக்கலை.”


“நீ உன் வீட்டு ஆளுங்க மேல காட்டுற அக்கறை, அவங்க உன்கிட்ட காட்டலைங்கிற வருத்தம் எனக்குக் கண்டிப்பா இருக்கு.”


“அதுக்காக நான் எப்பவும் அப்படியே இருப்பேன்னு சொல்ல முடியாது. அவங்க நம்மகிட்ட நல்லா நடந்துகிட்டா, நானும் நல்லா நடந்துப்பேன்.”


நிருபனின் பேச்சில் நியதியன் முகம் தெளிய, “இப்ப எல்லாம் தெளிவாகிடுச்சுன்னு நினைக்கிறேன். என்றான்.


“ம்ம்…” என்றவள், அவனை அனைத்துக் கொண்டாள்.


“இப்ப வேற ஏதேதோ பண்ணனும்ன்னு தான் தோணுது, ஆனா அதுக்கு டைம் இல்லையே…” என்றவன், சீக்கிரம் எழுந்து கிளம்பு, நாம ரெண்டு நாள் அவுடிங் போறோம்.” என்றான்.


“எனக்குப் போக வேண்டாம்.” என்ற நியதி நிருபனை நெற்றியில் முத்தமிட…


“ஏய் மனுஷனை சோதிக்காத. நான் ஏற்கனவே புக் பண்ணீட்டேன்.” என்றதும், கோபமாக எழுந்தவள், யாரைக் கேட்டு புக் பண்ணீங்க.” என்றாள்.


“நியதி செல்லம் எதுக்கு இவ்வளவு கோபம்? ரெண்டு பேரும் மூட் சரி இல்லாம இருந்தோம், வெளிய போயிட்டு வந்தா நல்லா இருக்கும்.”


நிருபன் இவ்வளவு விளக்கியும், நியதி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருக்க, நம்ம ஹனிமூன்னு நினைச்சுக்கோ பேபி.” என்றதும், சரி எனக் கிளம்பச் சென்றாள்.


இருவரும் குளித்துக் கிளம்பி, காலை உணவை ஜேனின் உணவகத்தில் முடித்துக் கொண்டு, ரயிலில் இரண்டு மணி நேர பயணத்தில், கடற்கரை தீவு ஒன்றிருக்கு சென்றனர்.


அந்தத் தீவில் இருக்கும் ரெசார்ட் ஒன்றில் அறை பதிவு செய்திருந்தான். அதற்குப் படகில் தான் போகவேண்டும்.


“வாவ்…. இங்கயா இருக்கப் போறோம். நான் இத்தனை வருஷம் இங்க இருக்கேன். எனக்கு இது தெரியாது, உங்களுக்கு எப்படித் தெரியும்?”


“இந்த இடம் தெரிஞ்சிருந்தாலும் நீ வந்திருக்க மாட்ட.”


“ஏன் அப்படி?”


“இது லவர்ஸ் ஸ்பெஷல் ரெசார்ட். தனியா எல்லாம் இங்க வர முடியாது.இது காதலர்களுக்கு மட்டுமேயான இடம்.” என நிருபன் கண்சிமிட்ட,

“ம்ம்…” என்றவள், தன் சிவந்த முகத்தை மறைக்க சிரமபட்டாள்.


யார்கள் சென்று சேர மதியம் ஆகி விட்டதால்… அறைக்குச் சென்று உடமைகளை வைத்து விட்டு சாப்பிட சென்றனர். சாப்பிட்டு முடித்து, வேறு என்ன எல்லாம் இருக்கிறது எனச் சுற்றிப் பார்த்தனர்.


அப்போது வெயிலாக இருந்ததால்…. மாலையில் கடற்கரைக்குச் செல்லலாம் என நினைத்து அறைக்குத் திரும்பினர்.


நியதி அணிந்திருந்த ஜீன்சை மாற்றிவிட்டு, பிங்க் நிறத்தில் முழங்கால் வரை இருக்கும் கவுனை அணிந்து கொண்டு கட்டிலில் படுக்க, நிருபனும் ஷார்ட்ஸ் மாற்றிக் கொண்டு வந்து அவளோடு இணைந்துக் கொண்டான்.


பயணக் களைப்பில் நியதி இருக்க, நிருபன் முத்தமிட்டே அவளை உறங்க விடாமல் செய்து கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் அவனுக்கு முத்தம் மட்டுமே போதாது எனத் தோன்ற ஆரம்பிக்க, அவன் மேலும் முன்னேற, நியதியின் பெண்மை விழித்துக் கொண்டது.


“ப்ளீஸ் இப்ப வேண்டாம் நைட்…” என அவள் பலவீனமாக மறுக்க,


“நமக்குக் கல்யாணம் ஆகி ரெண்டு வாரம் ஆகுது. ஏற்கனவே நிறைய நாள் வேஸ்ட் பண்ணியாச்சு. இனிமே ஒரு நிமிஷம் கூட நான் வேஸ்ட் பண்ண மாட்டேன்.” என்றவன் மேலும் முன்னேற, நியதி அவனைத் தடுக்க, நிருபனின் முகம் மாறியது.


கணவனின் கண்களில் தெரிந்த ஏமாற்றத்தை உணர்ந்த நியதி, அவனுக்காக விட்டுக் கொடுத்தாள். நிருபன் மகிழ்ந்து போனான்.

அதன் பிறகு அவனை எங்கே நிறுத்த முடிந்தது. கணவனின் செய்கையில் இத்தனை நாள் இவன் எப்படி சும்மா இருந்தான் என நியதிக்கு எண்ணம் தோன்றியது.


களைத்து போய் கட்டிலில் படுத்தவன், “தேங்க்ஸ் நியதி.” எனப் பத்து தடவையாவது சொல்லி இருப்பான். அவளுக்கு அவனைப் பார்க்கவே வெட்கமாக இருக்க, திரும்பி படுத்து உறங்க முயன்றாள். அவள் நிலை  உணர்ந்து, நிருபனும் அவளை அணைத்தபடி உறங்கினான். மாலை மங்கும்  நேரத்தில் தான் இருவரும் கடற்கரைக்குச் சென்றனர்.


அங்கே நிறைய பேர் நீச்சல் உடையில் ஜோடி ஜோடியாகக் கடற்கரையில் படுத்து இருக்க, நிருபனும் நியதியும் கடல் அலையை பார்ப்பது போல அமர்ந்தனர்.  


அங்கே மற்ற ஜோடிகள் தாங்கள் மட்டுமே தனிமையில் இருப்பது போல, அனைத்தும், முத்தமிட்டும் கொள்ள, நியதிக்குச் சங்கடமாக இருந்தது. நிருபனிடம் போகலாமா என்றாள்.


“நீ ஏன் அவங்களைப் பார்க்கிற?” என்றவன், அவளை அனைத்து மிருதுவாக அவள் இதழில் முத்தமிட்டான்.


“என்ன பண்றீங்க?” நியதி பதட்டமாக.


“இங்க வேற எதுக்கு வந்தோம்.” என்றவன், அவளைப் பார்த்து மோகமாக புன்னகைத்தான்.

இருட்டியதும் நிருபன் மணலில் படுத்து, நியதியையும் பிடித்து இழுக்க,  அவள் அவன் தோளில் தலைவைத்துப் படுத்துக்கொள்ள, இருவரும் வானில் தெரிந்த நட்சத்திரங்களை ரசித்துப் பார்த்துக்கொண்டு இருந்தனர்.


ஒரு பக்கம் அங்கே கடைகரையிலேயே பெரிய திரை அமைத்து, திரைப்படங்களை ஓட விட்டு இருந்தனர். இரவு உணவும் அங்கேயே அருந்த ஏற்பாடு செய்து இருந்தனர்.


மேஜையில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டே இரவு உணவை அருந்தினார்கள். பிறகு மற்ற ஜோடிகள் போல, மணலில் படுத்துப் படத்தைப் பார்த்தனர்.


வேறு எண்ணங்கள் தலைத் தூக்க ஆரம்பிக்க, ரூமுக்கு போகலாமா என நிருபன் நச்சரிக்க ஆரம்பித்து விட்டான். நியதி படத்தில் ஆழ்ந்து போய் இருந்ததால்…இருங்க முடிஞ்சதும் போகலாம் என்றாள்.


“நீ படம் பார்க்கதான் இங்க வந்தியா?” என்றவன், அங்கேயே அவளை முத்தமிட வர….


“வாங்க போகலாம்.” என நியதி உடனே எழுந்து கொண்டாள்.


அந்த இரவு மட்டும் அல்ல… அதன் பிறகு வந்த ஒவ்வொரு மணித்துளியும் உல்லாசமாகச் சென்றது. மனதளவில் ஏற்கனவே ஒருவரையொருவர் தெரிந்து கொண்டவர்கள், இப்போது உடல் அளவிலும் எதையும் மிச்சம் வைக்காமல் கற்று தேர்ந்தனர்.


கூடல் கொள்ளும் நேரத்தில் மட்டும் அல்ல, மற்ற நேரங்களிலும் இருவரும் சேர்ந்தே இருந்தது, அவர்களின் அன்பை, அன்னியோன்யத்தை இன்னும் அதிகமாக்கியது.


அந்தத் தீவில் இருந்து கிளம்ப மனமில்லாமல், மேலும் இரண்டு நாட்கள் அங்கேயே தங்கினர்.


அங்கிருந்து கிளம்பும் தினம், காலையில் இருவரும் கடற்கரைக்கு வந்திருந்தனர். இங்கு வந்ததில் இருந்து, காலையில் நேரம் கழித்துத் தான் இருவரும் எழுவார்கள். அதனால் இன்று சூரியன் உதிப்பதை பார்க்க வேண்டும் எனக் காலையே கிளம்பி வந்திருந்தனர்.


நியதி நீல நிறத்தில் கவுன் அணிந்து இருக்க, அதற்குப் பொருத்தமாக அவளுக்கு அங்கிருந்த மலர்களைக் கொண்டு, நிருபன் மலர் கிரீடம் செய்து, அவளுக்கு அணிவித்தான். இருவரும் விதவிதமாகப் புகைப்படம் எடுத்து கொண்டனர்.


அவளுக்காக முன்பு வாங்கிய மோதிரத்தை நிருபன் எடுத்துக் காட்ட, தான் அவனுடையதை கொண்டு வர வில்லை என நியதி முகம் வாட… இன்னொரு கையில் மறைத்து வைத்திருந்த, தன்னுடைய மோதிரத்தை அவளிடம் கொடுத்தான்.


அந்த ஆளில்லாத கடற்கரையில், நீல வானத்தையும், உதிக்கும் சூரியனையும், கடல் அலையையும் என இயற்கையை மட்டும் சாட்சியாக வைத்து, மோதிரம் மாற்றிக் கொண்ட இருவரும், பிறகு ஒருவரையொருவர் தழுவி முத்தமிட்டுக் கொண்டனர்.


அவர்களின் அந்தப் பயணத்திற்குப் பிறகு, அவர்களிடையே நல்ல புரிதல் வந்திருந்தது. வெறும் திருமணத்தால் மட்டும் தம்பதிகளிடையே புரிதல் வந்துவிடாது. அவர்கள் சேர்ந்து வாழும் போதுதான், ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.

நாட்கள் இருவருக்கும் நன்றாக சென்றது. திருமணதிற்கு முன்பே ஒருவர் மீது ஒருவர் அன்பும் நம்பிக்கையும் கொண்டவர்கள், இப்போது இன்னும் அவர்கள் அன்பும் அக்கறையும் அதிகமாகியது.

அவர்களுக்குள் சின்னச்சின்ன சண்டைகள் வராமல் இல்லை. ஆனால் புரிதல் இருந்ததால்… அதெல்லாம் பெரிதாக்கப் படவில்லை.

ஒரு வருடம் வரை குழந்தை வேண்டாம் என இருந்தவர்கள், பிறகே அழகான பெண் குழந்தைக்குப் பெற்றோர் ஆனார்கள். ஜெயஸ்ரீ, பத்மா என இருவரும் மாறி மாறி வந்து உடன் இருக்க, அவர்களின் கவனிப்பில் மகளை வளர்த்தனர்.

நியதியின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்ய, இவர்கள் தான் பணம் கொடுத்தனர். வயதான காலத்தில் நாதனும் பத்மாவும் தனியாக இல்லாமல்…. சேகர் அவர்களுடன் இருப்பதே போதும், பணம் தானே நாம் கொடுத்துவிட்டு போவோம் என்பது நிருபன் நியதி இருவரின் எண்ணமும்.

நிரஞ்சனும் காவ்யாவும் தங்கள் மகனுடன் ஒருமுறை வந்து, இவர்களுடன் வெளிநாட்டில் ஒரு மாதம் தங்கி இருந்துவிட்டு சென்றனர். அப்போது நிறைய இடங்கள் சேர்ந்து சுற்றிப் பார்த்தனர்.

ஐந்து வருடங்கள் அங்கே இருந்து நன்றாகச் சம்பாதித்துக்கொண்டு, நிருபனின் குடும்பம் சென்னைக்குத் திரும்பியது.


அவர்களின் மகள் பிரியங்கா சென்னையில் பெற்றோரோடு இல்லை. திருச்சியில் தனது தாத்தா பாட்டியிடம் வளர்ந்தாள். நிருபனும் நியதியும் வார இறுதியில் மகளைச் சென்று பார்த்து வந்தனர். மகளை விட்டு இருக்கிறோம் என வருத்தமெல்லாம் இல்லை.


இங்கே இருவரும் வேலைப் பார்ப்பதால்…. சில நேரங்களில் மகள் தனியாக இருக்க நேரிடும், அங்கே என்றால் பார்த்துக்கொள்ள நிறையப் பேர் உண்டு.

அதோடு நிரஞ்சனும், காவ்யாவும் அவளுக்கு இன்னொரு அப்பா அம்மா தான். பிரியங்கா அவர்களை ரஞ்சன் அப்பா, காவ்யா அம்மா என்றுதான் அழைப்பாள். தங்களை விட அவர்கள் நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என தெரியும். அதனால் மகளைப் பற்றி கவலையில்லாமல் இருந்தனர்.


அதே போல நிரஞ்சன் காவ்யாவின் மகன் பிரவீனும், இவர்களைச் சித்தி சித்தப்பா என அழைக்க மாட்டான். நிரு அப்பா, நியதி அம்மா என்றுதான் அழைப்பான்.


ஐந்து வருடங்கள் சென்னையில் இருந்த நிருபனும் நியதியும், தங்கள் வேலையை விட்டுவிட்டு திருச்சிகே வந்துவிட்டனர்.


இப்படி நன்றாகச் சம்பளம் தரும் வேலையை விட்டு போகிறாளே என நியதியின் உடன்பிறந்தவர்கள் அவளைக் கேலியாகப் பார்க்க, நியதி அவர்களுக்குப் புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தாள். எல்லோருக்கும் பணம் மட்டுமே சந்தோஷத்தை தருவதில்லை.


திருச்சியில் நிருபன் தனக்காகப் புதிதாகத் தொழில் தொடங்க, தன்னுடைய வெகு நாட்கள் ஆசையாக, நியதி வீட்டில் இருந்தாள். ஜெயஸ்ரீக்கு இப்போது தான் மகிழ்ச்சியாக இருந்தது.


தன் மகன்கள் இருவரும், ஒரே குடும்பமாக வாழ வேண்டும் என்பதே அவருடைய ஆசை. அவர் அதற்காகத்தான் வேண்டிக் கொண்டு இருந்தார்.


இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ளவில்லையா என யாராவது கேட்டால்…. எதுக்கு இன்னொரு குழந்தை? எங்களுக்குத்தான் மகன் மகள் இருவரும் இருக்கிறார்களே…. எனக் காவ்யாவும் நியதியும் முடித்து விடுவார்கள்.


நிருபன் ஏழு மணிக்கெல்லாம் வீடு திரும்பி விடுவான். அதன் பிறகு நியதியை வம்பு இழுப்பதுதான் அவனுடைய முழு வேலை.


நியதி நிறைய நேரம் பொறுமையாக இருப்பாள், சில நேரங்களில் பொறுமை போய் விட்டால், “அத்தை, இதுக்கு மேல பேசினா நான் அடிச்சிடுவேன். அப்புறம் மருமகள் அடிச்சிட்டான்னு நீங்க சொல்லக் கூடாது.” என ஜெயஸ்ரீயிடம் சொன்னால்,


“ஏன் என்கிட்டே சொல்ற, அடிக்க வேண்டியது தானே.” என்பார்.  


“நீங்க எல்லாம் பெத்த தாயா? மருமக மகனை அடிப்பேன்னு சொல்றா, அடின்னு சொல்றீங்க. அவ உள்ள வச்சு எப்படி குத்துவான்னு தெரியுமா? நீங்க வாங்கிப் பாருங்க.” என நிருபன் வடிவேலு போலப் பேசிக் காட்டுவான், அது அந்த வீட்டின் குட்டி வாரிசுகளுக்குச் சிரிப்பாக இருக்கும்.


அன்றும் நிருபன் நியதியை வம்பு இழுக்க, “நீங்க ஒழுங்கா ரூமுக்கு போங்க.” என நியதி சொல்ல, “நீயும் வா…” என்றான். அவள் அவனை முறைத்து விட்டு செல்ல, நிருபனைப் பார்த்து நிரஞ்சன் கேலியாகச் சிரித்தான்.


“எதுக்குச் சிரிக்கிற?”


“இல்லை நீ கல்யாணம் ஆன புதுசுல எப்படி இருந்தேன்னு நினைச்சு பார்த்தேன்.” நிரஞ்சன் வாய்க்குள் புன்னகையை அடக்கிக் கொண்டு சொல்ல,


“அதை வேற நியாபகப்படுத்திடாத… அவ்வளவு தான் என் பொண்டாட்டி முருங்கை மரம் ஏறிடுவா.” என்றான் நிருபன்.


“அப்ப நியதியை பேயுன்னு சொல்றியா?” என்ற நிரஞ்சன் “நியதி, இவன் உன்னை என்னவோ சொல்றான் பாரு.” எனப் போட்டுக் கொடுக்க,


“ஏன் ப்ரதர் நல்லாதானே போய்ட்டு இருக்கு.” என்றவன் நியதியிடம், “நம்ம வீட்லயே நீதான் மா நல்லா சமைக்கிறேன்னு சொன்னேன்.” என்றான்.


“அப்ப நாங்க நல்லா சமைக்கலையா?” எனக் காவ்யா கேட்க, “அது தானே…” என ஜெயஸ்ரீயும் கூடச் சேர்ந்துகொள்ள.


இப்போ உனக்குச் சந்தோஷமா என்பது போல நிருபன் நிரஞ்சனைப் பார்க்க,


“அவர் என்னைத்தான் எதோ சொல்லிட்டு இப்ப சமாளிக்கிறார்.” என்றாள் நியதி சரியாக.


நிருபன் நியதியிடம் பார்வையால் மன்னிப்பு வேண்ட, அப்புறம் உங்களை வச்சுகிறேன் என நியதி கண்களால் மிரட்ட… அதைப் பார்த்து வீட்டினர் சிரித்தனர்.


அன்பாலே அழகாகும் வீடு,
ஆனந்தம் அதற்குள்ளே தேடு,
சொந்தங்கள் கை சேரும் போது,
வேறொன்றும் அதற்கில்லை ஈடு.

Advertisement