Advertisement

கண்ணான கண்ணே


அத்தியாயம் 9


“டேய் ! என்னடா பண்ணப் போறீங்க?” என ஜெயஸ்ரீ பயந்து போய்க் கேட்க,

“இங்க பாருங்க பா… ஊருக்குள்ள நம்ம குடும்பத்துக்குன்னு பேரும் மரியாதையும் இருக்கு. அதுக்கு ஒரு குறையும் வரக் கூடாது.”

“அந்தப் பெண்ணோட பேசுங்க. எதுனாலும் முறைப்படிதான் செய்யணும்.” என்றார் அவர்களின் தந்தை ராஜ மாணிக்கம்.

“சரிப்பா நான் பார்த்துகிறேன். நீங்க ஒரு பத்து நாளுக்குள்ள கல்யாணம் வைக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணுங்க பா…” என்ற நிரஞ்சன், “நியதிக்கும் உனக்கும் அதுவரை லீவ் இருக்குமா டா…” என்றான் தம்பியிடம்.
“நியதிக்கு பிரச்சனை இல்லை. அவ இதுவரை லீவ்வே போட்டது இல்லை. அதனால அவளுக்கு இருக்கும், எனக்குத்தான் லீவ் கிடைக்கிறது கஷ்ட்டம். இங்க இருந்தே வேலைப் பார்க்கிறேன்னு சொல்றேன்.”
“அதுக்குள்ள எப்படி டா கலயனத்தை வைக்க முடியும்? சொந்தக்காரங்க எல்லாம் கேட்பாங்களே அவங்களுக்கு என்ன சொல்றது?”

“என் பையன் வெளிநாடு போனா திரும்ப வர வருஷம் ஆகும். அதனால உடனே வச்சிடோம்ன்னு சொல்லுங்க.”

“எல்லாம் பக்கத்து பக்கத்தில தான் இருக்காங்க. நாலு நாள்ல நானும் நிருபனும் பத்திரிகை வச்சி முடிச்சிடுவோம்.”

“நீங்களும் காவ்யாவும் போய் ஜவுளி எடுத்திட்டு வந்திடுங்க. அப்படியே தாலியும் வாங்கிடுங்க.”

இவனுங்க என்ன இவ்வளவு ஈஸியா சொல்றாங்க, இதெல்லாம் எப்படி நடத்தி முடிக்கப் போகிறோம் என வீட்டினருக்கு மலைப்பாக இருந்தது.

“இந்த மட்டுக்கும் முறையா பன்றோம்ன்னு சொல்றாங்களே. நான் போய் மண்டபம் எதாவது கிடைக்குதான்னு பார்க்கிறேன். இந்த மாசம் வேற முஹுர்த்த மாசம்.” என ராஜ மாணிக்கம் சென்றார்.

மறுநாள் நிரஞ்சன் நியதியை பார்க்க சென்னை செல்ல, உடன் வர நிருபன் மறுத்து விட்டான்.

“நான் வரலை, நீ போயிட்டு வா…”

“சரி நானே போயிட்டு வரேன்.” என நிரஞ்சனும் கிளம்பி விட்டான்.

திடிரென்று காலை நிரஞ்சன் வந்து நிற்கவும், நியதிக்கும் அவள் பெற்றோருக்கும் ஒன்றுமே புரியவில்லை. வீட்டில் அப்போது வேறு யாரும் இல்லை.

“வாங்க…” என அவனை வரவேற்று உட்கார வைத்து, வெயில் நேரம் என்பதால், நியதி ஜூஸ் போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள்.

“நான் உன்கிட்ட தான் பேச வந்தேன் நியதி.” நிரஞ்சன் சொல்ல,

“சொல்லுங்க அண்ணா…” என்றாள் மரியாதையாக, ‘அண்ணாவா…’ என நிரஞ்சனுக்குச் சிரிப்பு வந்தாலும், அதை அடக்கிக் கொண்டவன், “ஏன் நியதி கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்ன? நிருபனைப் பத்தி யோசிச்சியா?” என்றான்.

“அவருக்கு என்ன ?இன்னும் என்னை விட நல்ல பெண்னே கிடைக்கும்.”

“கண்டிப்பா கிடைக்கும், ஆனா அதுக்கு அவன் விரும்ப வேண்டாமா?”

“நீ பாட்டுக்கு எதோ ஒரு காரணம் சொல்லி, கல்யாணத்தை வேண்டாம்ன்னு சொல்லிட்ட… அவனைப் பத்தி நினைச்சு பார்த்தியா, அவன் பித்துப் புடிச்சவன் போலச் சுத்திட்டு இருக்கான்.”

“நீ இருக்கிற அதே ஊர்ல, இனி அவனால யாரோ போல ஒதுங்கி இருக்க முடியுமா? நான் வேலையை விட்டுடுறேன்னு சொல்லிட்டு இருக்கான்.”

“எங்க அப்பாவுக்கு எவ்வளவு பெருமை தெரியுமா, மகன் வெளிநாட்டில வேலை பார்க்கிறது. இதுக்கா அவனைக் கஷ்ட்டப்பட்டுப் படிக்க வச்சார்.”

“உங்க அண்ணன் பேசினார், எங்க அம்மாவும் பேசினாங்க. அது அதோட முடிஞ்சிடுச்சு. உங்க வீடு இருக்கிறது சென்னையில, நாங்க இருக்கிறது திருச்சியில. அதோட நீங்க கல்யாணம் பண்ணிட்டு வெளிநாடு போயிட போறீங்க. இதுல யாரு யாருக்கு மரியாதை செஞ்சிட்டே இருக்கப் போறான்னு நீ நினைக்கிற… மரியாதை குறைவா நடக்கவும் வாய்ப்பு இல்லை.”

“குடும்பம் நடத்த போறது நீயும் நிருபனும். அவனுக்கும் உனக்கும் பிடிச்சிருக்கு. எங்க வீட்லயும் வேண்டாம்ன்னு சொல்லலை…. உங்க வீட்ல…” என அவன் நியதியின் பெற்றோரை பார்க்க,

“நாங்களும் நல்ல இடம் விட வேண்டாம்ன்னு தான் தம்பி சொல்றோம். இவ தான் கேட்க மாட்டேங்கிறா?” என்றார் பத்மா.

நியதி இன்னும் யோசனையிலேயே இருக்க, “எந்த நம்பிக்கையில நீ அவனுக்கு மோதிரம் வாங்கின நியதி. கல்யாணம் நடக்கும்ன்னு தானே….”

“உன்னுடைய வறட்டு கவுரவத்துக்காக என்னோட தம்பியோட வாழ்க்கையை நான் வீணடிக்க விட மாட்டேன்.”

“நீ இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டுத்தான் ஆகணும். உனக்குப் பிடிக்குதோ பிடிக்கலையோ…..” என நிரஞ்சன் தோளைக் குலுக்க,

“என்ன மிரட்டுறீங்களா நீங்க.” என நியதி கேட்க,

“ஆமாம் அப்படித்தான். சொல்லிப் புரியலைனா வேற என்ன பண்றது.” என்றான் அலட்சியமாக.

“நாங்க அவகிட்ட பேசுறோம் தம்பி.” என்ற நாதன் நியதியை அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்றார்.

“இங்க பாரு நியதி, நீ தேவை இல்லாம வர்ற நல்ல சம்பந்தத்தை விடுற…”

“உன் அண்ணனும் தங்கையும் இந்தக் கல்யாணம் நடக்கக் கூடாதுன்னு தான் நினைச்சாங்க. நீ இப்ப அவங்களை ஜெயிக்க வச்சு, நிருபனை தான் தண்டிக்கிற.”

“நீ எந்த முடிவு எடுத்தாலும் சரி, நான் அந்தத் தம்பி கிட்ட கல்யாணத்துக்குச் சம்மதம்ன்னு தான் சொல்லப் போறேன்.” என்றவர், அறையில் இருந்து வெளியே வந்து, “எங்களுக்குக் கல்யாணத்துக்குச் சம்மதம் தம்பி.” என்றார்.

“சரிங்க மாமா, சந்தோஷம். வர்ற பதினாறாம் தேதி நல்ல நாள், அன்னைக்கே கல்யாணத்தை வச்சிடலாம். எங்க பக்கம் நிறையப் பேர், அதனால கல்யாணத்தைத் திருச்சியில வச்சா, எங்களுக்கு ஏற்பாடு செய்ய வசதியா இருக்கும்.”

“சரிங்க உங்க விருப்பம்.”

“அதுக்குள்ள வா…” என்றாள் நியதி.

“இப்ப போனா திரும்ப எப்ப லீவ் கிடைச்சு வருவீங்க. அதோட கல்யாணம் பேசின பிறகு, நீங்க ரெண்டுபேரும் அங்க தனியா இருக்கிறது சரி வராது. கல்யாணம் பண்ணிட்டே போங்க.” என்ற நிரஞ்சன்,

“இன்னைக்கு நல்ல நாள்தான். இன்னைக்கே முஹுர்த்த பத்திரிகை எழுதிடுவோம். உடனே அச்சுக்கு கொடுத்து வாங்கினா, நாளைக்கே பத்திரிகை வைக்க ஆரம்பிக்கலாம்.” என்றவன், பேப்பரும், பேனாவும் கேட்க, நியதி சென்று எடுத்து வந்து கொடுத்தாள்.
“கொஞ்சம் மஞ்சள் எடுத்திட்டு வா நியதி.” என்றவன், தாளின் நான்கு முனைகளிலும் மஞ்சள் தடவிவிட்டு மங்களகரமாக ஆரம்பிக்க, அது எல்லோருக்கும் மனதில் நிறைவை கொடுத்தது.

நிரஞ்சனும் நாதனும் பேச, அறைக்குள் சென்ற நியதி நிருபனை அழைத்தாள்.

“என்ன உங்க அண்ணனை விட்டு என்னை மிரட்டுறீங்களா?”

“நாங்க மிரட்டுறதா எல்லாம் இல்லை. உன்னைத் தூக்கிறதா தான் இருந்தோம். எங்க அப்பா அம்மா தான் பேசிட்டு வர சொன்னாங்க.”

“அவங்களுக்காகத்தான், இல்லைனா உன்கிட்ட எல்லாம் பேசிட்டு இருக்க மாட்டோம்.”

“நான் உங்ககிட்ட முன்னாடியே சொன்னேன் இல்ல நிருபன். நம்ம வீட்ல ஒத்துகிட்டாதான்னு.”

“எங்க வீட்ல உங்க வீட்ல எல்லாம் இஷ்ட்டம் தான். நீ தான் தேவை இல்லாம பிரச்சனை பண்ணிட்டு இருக்க.”

“அப்ப அன்னைக்கு எங்க அண்ணன் பேசினது, உங்க அம்மா பேசினது எல்லாம் ஒன்னும் இல்லை.”

“ஒன்னும் இல்லை.”

“அப்புறம் ஏன் அன்னைக்கு என்னைப் போன் பண்ணி கத்தினீங்க. மரியாதை தெரியாத குடும்பம்ன்னு வேற சொன்னீங்க.”

“அப்படிதாண்டி சொல்வேன். உடனே நீ கல்யாணம் வேண்டாம் சொல்வியா? உன் மேல செம காட்டத்தில இருக்கேன். பேசாத வச்சிடு.”

“டி யா? இருங்க, உங்களை அப்புறம் பார்த்துகிறேன்.” என்றவள், போன்னை வைத்து விட்டாள்.

நிரஞ்சனும் நாதனும் பத்திரிகை எழுதினர். நியதி அவள் அம்மாவோடு பேசிக்கொண்டே சமையலை முடித்தாள். நல்லவேளை வசுமதி அவள் அம்மா வீட்டிற்குச் சென்றிருந்தாள்.

“நீங்க உங்க சொந்தக்காரங்களோட கல்யாணத்துக்கு முன்னாடி நாள் திருச்சி வந்திடுங்க. நீங்க அங்க தங்க நாங்க ஏற்பாடு பண்ணிடுறோம்.”

“மண்டபம் ஓகே, கல்யாண் பத்திரிகை எழுதியாச்சு. கல்யாண ஜவுளி எங்க வீட்ல வாங்கிடுவாங்க. தாலி நாங்கதான் செய்வோம். இனி பத்திரிகை அடிச்சு கொடுக்க வேண்டியது தான். அப்ப நான் கிளம்புறேன்.” என நிரஞ்சன் எழுந்துகொள்ள,

“இருங்க சாப்பிட்டு போகலாம்.” எனப் பத்மா சொல்ல, நிரஞ்சன் மறுக்காமல் உணவு அருந்தினான்.

“நல்லா இருக்கு சாப்பாடு.” என அவன் சொல்ல,

“நான் காய் தான் நறுக்கிக் கொடுத்தேன், நியதி தான் சமையல் செஞ்சா.” என்றார் பத்மா பெருமையாக. நிரஞ்சன் நியதியைப் பார்த்து புன்னகைத்தான்.

சாப்பிட்டு முடித்து நிரஞ்சன் உடனே கிளம்ப, “இருங்க உங்ககிட்ட பேசணும்.” என நியதி சொல்ல, அவன் சோபாவில் உட்கார நியதி எதிரே உட்கார்ந்தாள்.

“கல்யாணம் உங்க ஊர்ல நடந்தாலும், கல்யாண செலவு நாங்களும் கொடுக்கிறது தானே முறை. அதனால் எவ்வளவுன்னு சொன்னீங்கன்னா பாதி நாங்களும் கொடுத்திடுறோம்.”

“கல்யாணம் முடிஞ்சு கிளம்பும் போது, செலவுல பாதிக் கொடுத்திடலாம்ன்னு இருந்தேன்.” என்றார் நாதனும்.

“இப்பவே எப்படித் தெரியும் நியதி. அதோட எங்க ஊர்ல நடக்கிறதுனால ,நாங்க செலவு செய்றது தான் முறை. எங்க பக்கம் ஆளுங்க தான் நிறைய வருவாங்க.”

“உங்க பக்கம் எத்தனை பேர் வருவாங்க.” நிரஞ்சன் நாதனிடம் கேட்க,

“ஒரு நூறு பேர் வருவாங்க.” என்றார்.

எங்க பக்கம் அறநூறு பேர் வருவாங்க. அப்புறம் எப்படிப் பாதி வாங்கிக்க முடியும் நியதி. நாளுல ஒரு பங்கு வேணா நீங்க கொடுங்க.

“சரி, அப்புறம் நாங்க திருச்சியில தங்கிறதுக்குப் புக் பண்ற ரூமுக்கு நாங்க பணம் கொடுத்திடுறோம்.” என்றவள், உள்ளே சென்று செக்பூக் எடுத்து வந்து, காசோலையில் கையெழுத்துப் போட்டு நிரஞ்சனிடம் கொடுத்தாள்.

“நீங்களே எவ்வளவு செலவு ஆகுதோ அதை எடுத்துக்கோங்க.”
வாங்கவில்லை என்றால் கோபித்துக் கொள்வாள், “இங்க வாங்கி அங்கே நிருபனிடம் கொடுப்போம். அவன் இஷ்ட்டம்.” என நினைத்தவன், காசோலையை வாங்கிக் கொண்டு விடைபெற்றான்.

இரவே நிரஞ்சன் திருச்சி வந்துவிட்டான். வீட்டிற்கு வந்தும் சாப்பிட அமர்ந்தவன், “நீங்க ரெண்டு பொம்பளைங்களும் என்ன சமைக்கிறீங்க? இன்னைக்கு நியதி சமையல் எவ்வளவு நல்லா இருந்தது தெரியுமா?”

“நான் நினைக்கிறேன் இவன் அவ சாப்பாடு சாப்பிட்டுத்தான், கல்யாணம் பண்ணிக்கிற முடிவு எடுத்திருப்பானோ.” எனச் சொல்ல,

“அவ சமையல் மட்டும் இல்லை. எது பண்ணாலும் நல்லாத்தான் இருக்கும். ஆனா என்ன ரொம்ப ஒழுக்கம் எதிர்பார்ப்பா, அது ஒன்னு தான்.” என்றான் நிருபன்.

“அது தெரியும் டா… கல்யாண செலவுக்குன்னு சொல்லி செக் எழுதி கையில கொடுத்திட்டா….”

“நான்தான் சொன்னேன் இல்ல… அதெல்லாம் அவ சுயமரியாதை சுந்தரி….” என்றான் நிருபன்.

“என்ன டா புதுப் பட்டம் எல்லாம் கொடுக்கிற?” ஜெயஸ்ரீ சொல்ல,

“அது மட்டும் இல்லமா, முன் ஜாக்கிரதை முத்தம்மா, காரியத்தில் கண்னாத்தான்னு, பட்டம் கொடுத்திட்டே போகலாம். ஆனா என் பாடு தான் திண்டாட்டம்.” என்றான் நிரூபன் கவலையாக.

“உனக்கு எல்லாம் அப்படிப் பொண்டாட்டி அமைஞ்சா தான் நல்லது.”

“என் பையன்கிட்ட ரொம்பக் கண்டிஷனா இருக்காத, கொஞ்சம் விட்டுப் பிடின்னு உங்க சின்ன மருமகள்கிட்ட சொல்லி அனுப்புங்க மா…”

“ம்ம்… வழிக்கு வரலைன ரெண்டு போடுன்னு வேணா சொல்லி அனுப்புறேன்.”

“என்ன மா இப்படி மருமகள் பக்கம் சாஞ்சிடீங்க?”

“அவ குடும்பம் எப்படி இருந்தாலும், அவ விட்டுக் கொடுக்கிறாளா? நீயும் அவளைப் பார்த்து கத்துக்கோ.”

“சரி கத்துகிறேன்.”

நியதி கொடுத்த காசோலையை எடுத்து நிரஞ்சன் கொடுத்துவிட்டு அவள் பேசியதையும் சொல்ல, “நீயே வச்சுக்கோ, எவ்வளவு அவங்க பங்கோ… அதை எடுத்திடு. இல்லைனா நியதி விட மாட்டா.” என்றவன், இரவு தனது அறைக்கு வந்ததும், நியதியை அழைத்தான்.

“எல்லாம் உங்க இஷ்ட்டம் தான் இல்லை நிருபன். இப்படித் திடிர்ன்னு கல்யாணத்தைப் பத்து நாள்ல வச்சிருக்கீங்க.”

“இப்ப என்ன உனக்குப் பிரச்சனை?”

“நான் உங்க வீட்டுக்கு வெறுங்கையை வீசிட்டு வர முடியுமா?”

“என்ன வெறுங்கைய வீசிட்டு வரப்போற… லட்ச்சத்துல சம்பாதிக்கிற மா நீ… அதெல்லாம் எனக்குத் தானே.” என நிருபன் கேலி செய்ய,

“இருந்தாலும் கல்யாணத்துக்குன்னு சில முறை இருக்கு இல்ல… அப்பா சொல்லிட்டாங்க வீடு நீயே வச்சுக்கோன்னு… ஆனா அதை விக்கனும்ன்னா கூட உடனே முடியுமா?”

“நீ வீடு வேணும்ன்னு கேட்டியா?”

“நான் எதுவும் கேட்கலை…. அப்பா தான் சொன்னாங்க.ஆனா அண்ணாவும் சுமதியும் வீட்ல பங்கு கேட்டாங்க. அது முழுசா நியதியோட பணம் உங்களுக்குப் பங்கு கொடுக்க முடியாதுன்னு அப்பா சொல்லிட்டார்.”

“வீடு வேணா நீங்களே எடுத்துக்கோங்க, ஆனா எனக்கு நான் லோன் கட்டின பணத்தைத் திரும்பக் கொடுங்கன்னு கேட்டேன். அதுக்கு அவங்க ஒத்துக்கலை.”

“அப்பா பேர்ல ஒரு இடம் இருக்கு. அதை வித்துக் கல்யாணம் பண்ணலாம்ன்னு சொன்னார். ஆனா பத்து நாள்ல எப்படி விற்க முடியும்.”

“இடம் எல்லாம் விற்க வேண்டாம் சொல்லு.”

“அதுக்கும் நான்தான் பணம் கொடுத்தேன்.”

“விடு பரவாயில்லை.. அது உன் அண்ணாவும் தங்கையும் எடுத்துகிட்டோம்.”

“நானும் அப்படித்தான் நினைச்சேன். என்கிட்டே கொஞ்சம் பணம் இருக்கு. ஆனா அதுல கொஞ்சம் தான் நகை வாங்க முடியும்.”

“நியதி நான் ஒன்னு சொல்வேன் குதிக்காம கேட்பியா?”

“என்னன்னு முதல்ல சொல்லுங்க.” அவளது குரலே எச்சரிக்கையாகத் தான் ஒலித்தது.

“சென்னையில நமக்கு ஒரு வீடு இருக்கிறது நல்லது தானே. நாம திரும்ப வந்தாலும், சென்னையில தான் செட்டில் ஆவோம்.”

“இருக்கிற வீட்டை வித்திட்டு திரும்ப வாங்கிறதுக்கு, இந்த வீடே இருக்கட்டும்.”

“இதே நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் வீடு வாங்கினா, நாம ரெண்டு பேரும் தானே பணம் போட்டிருப்போம். நான் என் பங்குக்குக் கொஞ்சம் பணம் தரேன். அதை வச்சு நீ உனக்கு நகை வாங்கு.”

நியதி யோசித்துப் பார்த்தாள். நிருபன் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படி இருந்தது.

“சரி நீங்க சொல்ற மாதிரியே பண்ணலாம்.”

“ஹப்பாடா ! நான் இப்பவே பணம் அனுப்பி விடுறேன். நீ எனக்கு உன்னோட வங்கி கணக்கு அனுப்பி வை.”

“ம்ம் சரி.” என்றவள், “நான் எவ்வளவு நகை வாங்கட்டும்.” என அவனிடமே கேட்டாள்.

“அண்ணி நூறு பவுன் போட்டு வந்தாங்க. ஆனா உனக்கு அவ்வளவு வேண்டாம். அது தான் வீடு வேற இருக்கே. நீ ஒரு நாற்பது பவுன் வாங்கு போதும். கல்யாணத்துக்குக் கிராண்டா போடுற மாதிரி ஒரு செட் வாங்கிக்கோ… மத்தது உன் விருப்பம்.”

“ம்ம்.. சரி.”

“இப்ப டென்ஷன் எல்லாம் போச்சா மேடம். இப்படிப் பேசி தீர்க்கிறது விட்டு, நீ எப்படி நியதி கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்ல போச்சு.?”

“என் மேல உனக்கு அவ்வளவு தான் நம்பிக்கை இல்ல…”
அவன் வருத்தம் அவளுக்குப் புரியாமல் இல்லை. நியதி எதோ சொல்ல வர,
“சரி விடு…” என்றவன், “நான் பணம் அனுப்புறேன். நாளைக்கே போய் நகை வாங்கிடு.” என வைத்து விட்டான்.

தான் திருமணம் வேண்டாம் என்றதில், நிருபன் இன்னும் கோபமாகத்தான் இருக்கிறான் என்று அவளுக்குப் புரிந்தது. ஆனால் சீக்கிரம் சரியாகி விடுவான் என நம்பிக்கையும் இருந்தது.

Advertisement