Advertisement

கண்ணான கண்ணே


அத்தியாயம் 8

“உங்களுக்குக் கொஞ்சம் கூட அறிவே இல்லை. இப்படியா அவங்ககிட்ட பேசி வைப்பீங்க.” என வசுமதி சேகரை கடிந்துகொள்ள,

“நம்ம பொண்டாட்டியா இது? இவள் இவ்வளவு நல்லவ இல்லையே…” என்பது போலச் சேகர் பார்க்க, அதை உண்மை ஆக்குவது போல, “எதையும் உங்களுக்கு மாட்டிக்காம செய்யத் தெரியாதா? இப்படி எல்லோரையும் வச்சிகிட்டா பேசி வைப்பீங்க.” என்றவள்,

“எனக்கு என்ன பேச தெரியாமலா பேசாம இருந்தேன். எதை எப்படிச் செய்யணும்ன்னு அறிவு வேண்டாம். இனி உங்க தங்கை கிட்ட இருந்து ஒரு பைசா வாங்க முடியாது.” என்றாள் எரிச்சலாக.

“இப்ப என்ன பண்றது?” சேகர் கவலையாகக் கேட்க,

“என்னைக் கேட்டா? உங்க அப்பா அம்மா வேற என்ன சொல்வாங்களோ?”

அப்போது நாதனும் பத்மாவும் வந்த சத்தம் கேட்டு, சேகரும் வசுமதியும் அறைக்குள் இருந்து வெளியே வந்தனர்.

“சேகர் சுமதி உங்க ரெண்டு பேருக்காக நான் நியதிக்குச் செய்ய வேண்டிய கடமையைக் கூடசெய்யாம இருந்தேன். ஆனா நீங்க ரெண்டு பேரும் அவளுக்கு என்ன பண்ணி இருக்கீங்க?”

“தப்பு என்னோடது தான். என்னால உங்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதைதான் செஞ்சிருக்கணும். நியதி தலையில எல்லாத்தையும் போட்டது தப்பு.”
“இப்ப அந்தப் பையன் வீட்ல என்ன சொல்வாங்களோ?”

“அவங்க என்ன வேணா முடிவு எடுக்கட்டும். ஆனா எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம் பா….” நியதி சொல்ல, மொத்த குடும்பமும் அவளை அதிர்ச்சியாகப் பார்த்தது.

“ஏன் நியதி?” பத்மா கேட்க,

பிறந்த வீட்ல இருந்து புகுந்த வீட்டுக்கு போற பொண்ணு, சீர் வரிசை கொண்டு போகலைனாலும், மரியாதையா போகணும். நம்ம குடும்பத்து மேல அவங்களுக்கு என்ன மரியாதை இனி இருக்கும் சொல்லுங்க?”

“நிருபன்கிட்ட நம்ம வீட்டை பத்தி எல்லாமே சொன்னேன். அப்போ அவர் என்ன சொன்னார் தெரியுமா?”

“உங்க வீட்ல படிக்க வச்சதுனாலதான் நீ இவ்வளவு சம்பாதிக்கிற. நீயா எதுவும் கேட்காத. அவங்க செய்றது செய்யட்டும்ன்னு தான் சொன்னார்.”

“அவர் வீட்ல அவர் மூச்சு கூட விடலை. ஏன் நம்ம குடும்பத்தைப் பத்தி தப்பா நினைக்கக் கூடாதுன்னு தான். ஆனா நாமே நம்மைக் கேவலப்படுத்திட்டோம்.”

“நீங்க இனி எவ்வளவு சீர் செஞ்சு என்னை அங்க அனுப்பினா கூட, அவங்களுக்கு நம்ம குடும்பத்து மேல மரியாதையே வராது.”

“நீயா எதுவும் முடிவுக்கு வராத நியதி. அவங்க என்ன முடிவு பண்றாங்கன்னு பார்க்கலாம்.” என்றார் நாதன்.

“என்னால இனி எப்படிப்பா அவங்க முகத்தை எல்லாம் பார்க்க முடியும். என்னால கண்டிப்பா அந்த வீட்டுக்கு மருமகளா போக முடியாது.”

நியதி பேசியதைக் கேட்டு, பெற்றவர்கள் தான் வருந்தினார்கள். ஆனால் சேகர் வசுமதி சுமதி முவரின் முகங்களிலும் தாங்கள் நினைத்தது நடந்துவிட்ட திருப்தி.

“நான் கூட உங்க அண்ணனை திட்ட தான் செஞ்சேன். எப்ப எதைப் பேசுறதுன்னு விவஸ்த்தையே கிடையாது. நீ சொல்றதும் சரிதான். இனி நீ அந்த வீட்டுக்கு போனா மரியாதையா இருக்காது தான்.”

“இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு, வேற நல்ல இடம் பார்க்கலாம்.” வசுமதி நடிக்கிறாள் என எல்லோருக்குமே தெரிந்தது. நியதியிடம் இருந்து கசப்பான புன்னகை மட்டுமே.

இப்படி நல்ல இடம் வந்து விட்டுவிட்டோமே என நியதியின் பெற்றோர் தான் தவித்துப் போனார்கள்.

“நான் இதுக்கு முன்னாடி பண்ண முட்டாள் தனத்தை இனிமேயும் பண்றதா இல்லை.”

“இது நியதியோட வீடு. நாம நம்ம பழைய வீட்டுக்கே போவோம். இதுல இருந்து வர்ற வாடகை நியதிக்கு லோன் கட்டவாவது உதவும்.”

“இனி யாருக்காகவும் நான் நியதியை வருத்திறதா இல்லை.”

“அப்பா, நான் எதுவும் உங்ககிட்ட கேட்டேனா என்ன?”

“இல்லமா அவங்கவங்க கஷ்ட்டபட்டுதான் வாழ்க்கையில முன்னேறணும். நீயும் கூடப் பிறந்தவங்களுக்காக எவ்வளவு செய்வ?”

“தங்கச்சிங்களைப் பத்தி கவலைப்படாம உங்க அண்ணன் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தான். அவன் கடனை நீதான் அடைச்ச, தங்கை கல்யாணத்துக்கு உங்க அண்ணன் ஒரு பைசா தரலை. ஆனா நீதான் கல்யாண செலவு பண்ண.”

“அதுக்கு மேலையும் நிறையச் செஞ்சிட்ட, உங்க அண்ணன் வீடு வாங்கலாம்ன்னு சொன்ன போது கூட, உன் பேர்ல ஒரு சொத்து தானேன்னு நினைச்சேன். ஆனா அதை அனுபவிக்க ஆரம்பிச்சதும், அதை விட்டுக் கொடுக்க மனமில்லாம தானே இன்னைக்கு இப்படிப் பேசிட்டான்.”

“நான் உன்னை மாதிரிதான், உங்க அண்ணனையும், உன் தங்கச்சியையும் படிக்க வச்சேன். ஆனா அவங்க அதைப் பயன்படுத்திக்களை… அதுக்காக நாம என்ன செய்ய முடியும்?”

“இனி அவங்கவங்க வாழ்க்கையை அவங்கவங்க தான் பார்த்துக்கணும்.”

“நான் இன்னைக்கே நம்ம வீட்ல வாடகைக்கு இருக்கிறவங்களை ஒரு மாசத்துல காலி பண்ண சொல்றேன். உங்க அண்ணன் எங்களோட வரதுனாலும் சரி, இல்லை தனிக் குடித்தனம் போரதுனாலும், அது அவனோட விருப்பம்.”

தங்கள் கனவு பலிக்கவில்லை என்றதும் சேகர், வசு, சுமதி மூவரின் முகமும் கருத்து போய் விட, நியதி அதைக் கண்டுகொள்ளும் நிலையில் எல்லாம் இல்லை. மனம் நிருபனையே சுற்றி வந்தது.

அவள் எழுந்து அறைக்குள் சென்றாள். அந்த நேரம் கைப்பேசி அழைக்க எடுத்துப் பார்த்தால் நிருபன்.

ஹோட்டலுக்குச் சென்று அவர்கள் உடமையை எடுத்துக் கொண்டு அப்போதே திருச்சி செல்வதாக இருந்தது. காவ்யா குழந்தைக்குப் பசியாற்ற, அந்த இடைவெளியில் வெளியே வந்து நியதியை அழைத்து இருந்தான்.

“ஹே… உன் அண்ணன் தங்கச்சிக்கு எல்லாம் அறிவே இல்லையா?”

“எப்படிப் பேசுறதுன்னு தெரியாதா?”

“உன் குடும்பத்துக்கு மரியாதைன்னா என்னன்னே தெரியாதா?”

“இப்ப எங்க வீட்ல இருக்கிறவங்களை நான் எப்படிப் பார்ப்பேன்?”

“இதுதான் நீயா பார்த்துக்கிற லட்சனமான்னு கேட்டா, நான் எங்க போய் என்னோட முகத்தை வைப்பேன்.”

“உங்க கஷ்ட்டம் புரியுது நிருபன். நானும் இப்ப அதுதான் எங்க வீட்ல சொன்னேன்.”

“சீர் வரிசை எல்லாம் அப்புறம், முதல்ல ரெண்டு குடும்பத்துக்குள்ள மரியாதை இருக்கணும்.”

“விட்டுடலாம், நம்ம ரெண்டு குடும்பத்துக்கும் ஒத்து வராது. நீங்க உங்க வீட்ல பார்க்கிற பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கோங்க.”

நியதி சொன்னதைக் கேட்ட நிருபனுக்குக் கண்முன் தெரியாத கோபம் வர, “அது எனக்குத் தெரியாதா? முதல்ல நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லு. உங்க அண்ணன் ஏன் அப்படிப் பேசினான்?”

“எனக்குத் தெரியாது நிருபன். ஆனா நம்ம ரெண்டு குடும்பத்துக்கும் ஒத்து வராது, அது மட்டும் தெரியும்.”

அதுவரை கோபத்தில் இருந்த நிருபனுக்கு, இப்போது தான் நியதி சொல்வது புரிய ஆரம்பித்தது. அவனுக்கு மிகுந்த வலியை தர, அந்த நேரம் அவன் குடும்பத்தினர் அறையில் இருந்து வெளியே வர, “நாங்க திருச்சிக்கு கிளம்புறோம் நியதி. நான் உன்கிட்ட நாளைக்குப் பேசுறேன்.” என்றான்.

“நீங்க எப்ப பேசினாலும் என் முடிவு இதுதான். நீங்க உங்க வீட்ல சொல்றது கேளுங்க நிருபன்.” என நியதி போன்னை வைத்து விட்டாள்.

நிருபனுக்குத் தலை வலிப்பது போல இருந்தது. இயந்திரத்தனமாகக் காரை ஓட்டிக் கொண்டு வந்தான்.

நியதியிடம் தான் கத்தினானே தவிர, அவன் வீட்டினரிடம் விட்டுக் கொடுக்கவில்லை.

“அந்தப் பெண்ணும் பையனும் எப்படிப் பேசினாங்க?” என ஜெயஸ்ரீ ஆரம்பிக்க,

“நீங்க அதைகேட்டுட்டு சும்மா இருந்தீங்களா… இல்லையே, நீங்கதான் நல்லா பதில் கொடுத்தீங்களே. அப்புறம் என்ன?”

“அதோட அவங்க எல்லாம் எப்படி இருந்தா என்ன? நியதி தான் நமக்கு முக்கியம்.” என அவன் அடித்துப் பேச, ஜெயஸ்ரீ வாய் மூடிக் கொண்டார்.

நியதியிடம் அப்படிக் கத்திவிட்டு, இங்க எப்படிப் பேசுகிறான் பாரு எனச் சிரித்த நிரஞ்சன், “ஹப்பா சாமி, நாங்க பத்திரமா வீடு போய்ச் சேரனும், நீ இருக்கிற மூட்ல வண்டி ஓட்ட வேண்டாம்.” என அவனிடம் இருந்து காரை வாங்கித் தான் ஓட்டிக் கொண்டு வந்தான். நள்ளிரவில் திருச்சி வந்து சேர்ந்து விட்டனர்.
செல்லும் போது இருந்த உற்சாகம் இப்போது யாரிடமும் இல்லை.

மறுநாள் காலை நிருபன் அழைக்க, நியதி முதலில் எடுக்கவே இல்லை. பிறகு அவன் மீண்டும் அழைக்கவும் எடுத்தாள்.

“என்ன நிருபன்?”

“எனக்கு உன்கிட்ட கோபத்தைக் காட்ட உரிமை இல்லையா நியதி?”

“நான் கோபப்பட்டா நீயும் பதிலுக்குக் கோபப்படு. அதை விட்டு உடனே விட்டு போகணும்ன்னு நினைப்பியா?”

“எனக்குக் கோபம் எல்லாம் இல்லை நிருபன். நீங்க உண்மையைத் தான் சொன்னீங்க. இது நீங்க நேத்து பேசுறதுக்கு முன்னாடியே நான் எடுத்த முடிவு.” என்றவள், தன் பெற்றோரிடம் சொன்னதை அப்படியே சொன்னாள்.

“நீ லூசாகிட்ட நியதி. இந்தப் பிரச்சனைக்கு எல்லாம் யாராவது கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்வாங்களா.”

“நான் அதுக்கு மட்டும் சொல்லலை நிரஞ்சன். உங்க வீட்லயும் முழு மனசா சம்மதிக்கலை…. உங்களுக்காகத்தான் பார்க்கிறாங்க.”

“வேண்டாம் நிருபன். நாம அவங்களைக் கஷ்ட்டபடுத்தி எல்லாம் சேரவே வேண்டாம்.”

“நீ பண்றது நியாயமே இல்லை நியதி. எனக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கிற?”

“தண்டனை உங்களுக்கு இல்லை நிருபன், எனக்குத்தான். எல்லாரும் எல்லாத்துக்கும் ஆசைப்படக் கூடாது நிருபன்.” என அனைப்பைத் துண்டித்து விட்டாள்.

நிருபன் எதையோ தொலைத்தவன் போலச் சுற்றிக் கொண்டு இருக்க…

“நாங்க யாரும் ஒன்னும் சொல்லலையே… உன் தம்பி ஏன் இப்படிச் சோகமா இருக்கான்?” என ஜெயஸ்ரீ சொல்ல, நிரஞ்சன் நிருபனை தனியே அழைத்துச் சென்று பேசினான்.

அவன் நியதி சொன்னதைச் சொல்ல, “விடு பேசி பார்க்கலாம்.” என்றான்.

“நான் நிறைய தடவை பேசிட்டேன். அவ ரொம்பப் பிடிவாதமா இருக்கா. அங்க யூ. எஸ் ல இருக்கிற வீட்டை கூட மாத்திட்டுப் போகப் போறாளாம்.”

“அவ இல்லாம நான் எப்படி அங்க இருக்கப் போறேன்.” சொல்லும் போதே நிருபனின் கண்கள் கலங்கி விட, பின்னந்தலையில் கைகளைக் கோர்த்துக் கண்களை மூடிக் கொண்டான்.

“நமக்கு அவ அண்ணனும் தங்கையும் எப்படி இருந்தா என்ன? நீ இவ்வளவு அவளுக்காகக் கஷ்ட்டபடுறியே, அதுக்கு அவ தகுதியா? அது மட்டும் சொல்லு.”

“அவ அண்ணனும் தங்கையும் அப்படி நடந்துகிட்டதுக்குத் தான் பொறுப்பு இல்லைன்னு இருந்திருக்கலாம் இல்லையா…”

“அதோட அவ வீட்டு ஆளுங்களை நாம மதிக்க மாட்டோம்ன்னு ஒரு பயமும் இருக்கு. இதுல இருந்து உனக்கு அவ குணம் புரியலையா?”

“எங்க ரெண்டுபேருக்கும் ஒருத்தர் மேல ஒருத்தர் நிறைய அன்பு இருக்கு. நாங்க கல்யாணம் பண்ணிகிட்டா சந்தோஷமாத்தான் இருப்போம். அதுல ஒன்னும் எனக்குச் சந்தேகம் இல்லை.”

“சரி இனிமே நான் பார்த்துகிறேன்.” என்றான் நிரஞ்சன்.

“என்ன டா சொன்னான் உன் தம்பி. நாங்க ஒன்னும் இந்தக் கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லலையே… அப்புறம் ஏன் இவ்வளவு ஸீன் போட்டுட்டு இருக்கான்.” ஜெயஸ்ரீ பெரிய மகனிடம் கேட்க,

“நீங்க சொல்லலை. ஆனா நியதி இந்தக் கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்றா போலிருக்கு.” என்றான்.

“ஏன் டா?” ஜெயஸ்ரீ அதிர்ந்து போய்க் கேட்க, மற்றவர்களும் அதற்குக் குறையாத அதிர்ச்சியில் தான் இருந்தனர்.

“ரெண்டு குடும்பத்துக்கும் இடையே பேச்சு வார்த்தை முத்திடுச்சு இல்லையா… இனிமே கல்யாணம் நடந்தாலும், அவ குடும்பத்துக்கு மரியாதையா இருக்குமான்னு யோசிக்கிறா போலிருக்கு.”

நியதி இப்படி நினைப்பாள் என ஜெயஸ்ரீ நினைக்கவே இல்லை.

“ச்ச…. நானாவது பேசாம இருந்திருக்கலாம். அவங்க அண்ணன் என்ன பேசினா என்னன்னு நான் கண்டுக்காம இருந்திருக்கணும்.”

“அவ குடும்பத்துக்குச் செய்றது எல்லாம் அவ இஷ்ட்டம். அதை எல்லாம் நான் சொல்லிக் காட்டி இருக்கக் கூடாது.”

“நான் வேணும்ன்னு பேசலை…. அந்தப் பையன் பேசப் பேச அவன் பொண்டாட்டி வேற நக்கலா பார்த்து சிரிச்சாளா….அது எனக்கு இன்னும் கோபம் ஆகிடுச்சு. அதுதான் நானும் பதிலுக்குப் பேசிட்டேன்.”

“நாம சில நேரம் யோசிக்காம பேசிடுறோம். அப்புறம் வருத்தபட்டு என்ன பயன்?” என்றார் நிரஞ்சனின் தந்தை.

வெளியே சுற்றிவிட்டு இரவு தாமதமாக வந்த இளைய மகனிடம்.

“என் மேல கோபமா நிரு. அந்தப் பையன் பேசினா, நானும் அப்படி இறங்கிப் போய்ப் பேசி இருக்க வேண்டாம் இல்ல…”

“இப்ப நியதி கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்றாளாமே.” என்றார் ஜெயஸ்ரீ கவலையாக.

இப்படி இந்த இடத்தில் செய்ய வேண்டுமா என ஜெயஸ்ரீ யோசித்துக் கொண்டு தான் இருந்தார். ஆனால் நியதியே வேண்டாம் என்றதும், அவருக்கு மனம் பதறியது என்னவோ உண்மை.

மகனை எப்படியோ வளைத்து போட்டுத் திருமணம் செய்துகொள்வாள் என்றே நினைத்தார். அவளே வேண்டாம் என்றதும், அவள் மீது பிடித்தம் என்று ஏற்பட்டது. அதுவும் மகன் வருந்துவதைப் பார்த்து அவருக்குப் பொறுக்கவில்லை.

“நான் அவகிட்ட பேசட்டுமா?” ஜெயஸ்ரீ சொல்ல,

“அவ மட்டும் அவ வீட்டுக் கவுரவத்தைப் பார்க்கிறா இல்லை.. நீங்க மட்டும் ஏன் மா உங்க கௌரவத்தை விட்டுக் கொடுத்து பேசணும். நீங்க ஒன்னும் அவகிட்ட பேச வேண்டாம்.” என்றான்.

“இங்க பாரு செல்லம். புருஷன் பொண்டாட்டிகுள்ள கவுரவம் எல்லாம் பார்க்க கூடாது.” என அவனின் பாட்டி புத்தி சொல்ல,

“அவளுக்கு அவ வீட்டு ஆளுங்க பெரிசுன்னா, எனக்கும் என் வீட்டு ஆளுங்க பெரிசுதான்.” என நிருபனும் வீம்பு பிடித்தான்.

என்ன இவன் இப்படிப் பேசுறான், இப்படி இருந்தா கல்யாணம் எப்படி நடக்கும் எனக் கவலையில் அனைவரும் அவனைப் பார்க்க, நிரஞ்சன் மட்டும் சிரித்துக் கொண்டு இருந்தான்.

தன் கணவனின் முகம் பார்த்த காவ்யா, “அத்தை, இவங்க ரெண்டு பேரும் எதோ முடிவு பண்ணிட்டு பேசுறாங்கன்னு எனக்குத் தோணுது.” என்றாள் கலக்கமாக.

Advertisement