Advertisement

கண்ணான கண்ணே


அத்தியாயம் 7

ஐந்தாவது நாள் காலை சேகர் வழக்கம் போல அலுவலகம் கிளம்பி விட, பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வசுமதியும் பள்ளிக்கு சென்றுவிட, வீட்டில் பெற்றோர் மட்டுமே இருந்தனர். அப்போது நியதி அவளது பெற்றோரிடம் தனது திருமணம் குறித்துப் பேச்சை ஆரம்பித்தாள்.

உடனே அவளது அம்மா, “நீயே உன் கல்யாணத்தைப் பத்தி பேசுற அளவுக்கு ஆகிடுச்சு. நானும் அவளுக்கு வயசாகுதுன்னு சொல்லிட்டே தான் இருக்கேன். யாரு காது கொடுத்து கேட்கிறா.”

“என்னமோ எனக்கு அக்கறை இல்லாத மாதிரி பேசாத. உன் பெரிய பையனும் சின்னப் பொண்ணும் ஒண்ணுத்துக்கும் ஆக மாட்டாங்க.”

“நியதி சம்பாதிக்கிறதை வச்சு தான் ஓரளவுக்கு இப்ப நல்ல நிலைமைக்கு வந்திருக்கோம். இதே கல்யாணத்துக்கு அப்புறம் நாம அவகிட்ட எதுவும் கேட்க முடியுமா?”

“அதுதான் கொஞ்சம் பொருத்துக் கல்யாணம் பண்ணுவோமேன்னு நினைச்சேன். ஆனா நியதிக்கு இப்ப கல்யாணம் பண்ணிக்க எண்ணம் இருந்தா, நான் தடுக்க மாட்டேன்.”

“மத்த பசங்களுக்காக இவளை சம்பாதிச்சு போட்டுட்டே இருன்னு சொல்ல முடியுமா? அவளுக்கும் காலாகாலத்தில கல்யாணம் ஆகணும் இல்ல..”

“இப்பவே என்னால சொந்தக்காரங்க கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்ல முடியலை. மூத்த பெண்ணை வச்சிக்கிட்டு ஏன் ரெண்டாவது பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணீங்கன்னு கேட்கிறாங்க.”

“சரி முடிச்சிடலாம் விடு.” என்ற நியதியின் தந்தை சொல்ல, தாயின் முகத்திலும் மகிழ்ச்சி.

“அப்பா, நான் இப்ப ஒரு விஷயம் சொல்றேன். உடனே காதலிக்கிறேனான்னு கேட்காதீங்க. நான் இருக்கிற இடத்தில, நிருபன்னு நம்ம ஊர்க்காரர் பார்த்தேன். அவரும் என்னைப் போல வேலையில தான் இருக்கார்.”

“அப்புறம் நாங்க ரெண்டு பேரும் ப்ரண்ட்ஸ் ஆகிட்டோம். அவங்க வீட்லயும் பொண்ணு பார்க்கிறாங்க. அவர் வேற யாரையோ பண்ணிக்கிறதுக்கு, நல்லா தெரிஞ்ச நாம கல்யாணம் பண்ணிக்கலாமேன்னு சொல்றாரு. நான் வீட்ல பேசிட்டு சொல்றேன்னு சொன்னேன்.”

“உனக்கு அவரைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இருக்கு. அதுதான் நீ வீட்ல பேசுறேன்னு சொல்லி இருக்க.” என அவள் தந்தை நாதன் சொல்ல,

“நீங்க சும்மா அதையும் இதையும் சொல்லாதீங்க, உங்க பையன் கல்யாணம் பண்ணிக்கிட்டு தான் நம்மகிட்ட சொன்னான்.”

“இவ வேலை பார்க்கிற ஊர்ல… நமக்கு மாப்பிள்ளை அமையணுமே…அதுக்கு அவ சொல்ற பையனை முடிச்சிட்டு போகலாம்.” என நியதியின் அம்மா பத்மா சொல்ல,

“இரு கல்யாண விஷ்யத்தில அவசரப்படாதே.. நாம முதல்ல அந்தப் பையன் வீட்டை பத்தி தெரிஞ்சிக்கலாம்.”

நிருபனைப் பற்றி எல்லா விவரங்களையும் அவள் தந்தை கேட்க, நியதி தனக்குத் தெரிந்த வரையில் சொன்னாள்.

சரி நான் யார்கிட்டவாவது சொல்லி விசாரிக்கச் சொல்றேன் என எழுந்து கொண்ட நாதன், “நீ பாட்டுக்கு இதைப் பத்தி யார்கிட்டயும் உளறி வைக்காத. அப்புறம் நான் பார்த்து சொல்லிகிறேன்.” எனத் தன் மனைவியிடம் சொல்லிவிட்டு சென்றார்.

நியதிக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவள் அறைக்குச் சென்று நிருபனை அழைத்து, தன் தந்தை பேசிய எல்லாவற்றையும் சொன்னாள்.

எங்க வீட்லயும் வேற ஆளுங்கன்னு சொல்லி அப்பா அம்மா யோசிச்சாங்க. நாட்ல அப்படி நடக்குது, இப்படி நடக்குதுன்னு, ஏதேதோ கதை சொல்லி நிரஞ்சன் சரிகட்டி வச்சிருக்கான்.

“உங்க வீட்ல ஓகே சொன்னா… அடுத்த வாரமே எங்க வீட்ல இருந்து வந்து பேச வருவாங்க.”

எல்லாம் கைக்கூடி நன்றாக நடக்க வேண்டுமே என நியதிக்குப் பதைபதைப்பு. ஆனால் தானே தான் இந்தத் திருமணத்தை வேண்டாம் என்று சொல்லுவோம் என அவள் அப்போது நினைத்து பார்த்திருப்பாளா என்ன?

திருச்சியில் இருந்த தங்கள் உறவினர் மூலம் நிருபனின் குடும்பத்தைப் பற்றி நாதன் விசாரிக்க, நிருபனின் குடும்பம் அந்தப் பக்கம் செல்வாக்கான குடும்பம் என அவர்கள் சொன்னார்கள்.

நாதன் அதைத் தன் மனைவியிடமும் மகளிடமும் சொல்லி மகிழ்ந்தார். அவர்களை வந்து முறைப்படி பேச சொல்லும்படி அவர் நியதியிடம் சொல்ல, நியதி அதை நிருபனுக்குச் சொல்ல,

அவன் அதை வீட்டினரிடம் சொல்லி, மறுவாரம் வெள்ளிக்கிழமை பெண் பார்க்க வருவதாக நியதியை அழைத்துச் சொன்னான்.

அன்று மாலை தன் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு, நியதிக்கு வரன் வந்திருப்பதைப் பற்றி நாதன் சொல்ல… சேகர் சுமதி வசுமதி மூன்று பேருக்குமே அதிர்ச்சி தான்.

“என்னப்பா திடிர்ன்னு சொல்றீங்க? நாம நியதிக்கு இன்னும் நகை எதுவும் சேர்க்கலையே… நகை எல்லாம் சேர்த்திட்டு ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு பண்ணலாமே.” என்றான் சேகர்.

“நானும் அப்படித்தான் நினைச்சு இருந்தேன். ஆனா இப்ப வந்திருக்க இடத்தை ரெண்டு வருஷம் காத்திருங்கன்னு சொல்ல முடியுமா?”

“அது என்ன அப்படி இந்த இடத்திலேயே செய்யணும்ன்னு.” என்ற சுமதி, “இவ லவ் பண்ணிட்டு எதோ கதை சொல்றா.” என்றாள்.

“இதோ பாரு, நீ நம்பினா நம்பு நம்புலைனா போ… எனக்கு ஒன்னும் இல்லை.” என்றாள் நியதி.

“இத்தனை நாள் மாமனாரின் பென்ஷன் பணம் மற்றும் நியதியின் பணத்தை வைத்துச் செலவு செய்ததால்.. தன் கணவனின் பணத்தை அப்படியே சேமிக்க வசுமதியால் முடிந்தது. இப்போது நியதிக்குத் திருமணம் ஆகிவிட்டால்… வெறும் மாமனாரின் பென்ஷன் பணத்தை வைத்து ஓட்ட முடியுமா என்ற கவலையில் இருந்தவள், “அவங்க நல்ல இடம்ன்னு சொல்றீங்க. நாமும் அந்த அளவுக்குச் செஞ்சாத்தானே நல்லா இருக்கும். ஒரு ரெண்டு வருஷம் பொருத்து செய்வோமே.” என்றாள்.

“அந்தப் பையன் அவ இருக்கிற இடத்திலேயே வேலை பார்கிறான். நாம அப்படித் தேடி பிடிக்க முடியுமா… எதாவது செஞ்சு கல்யாணத்தை முடிப்போம்.” என்றார் பத்மா.

“இப்ப இருக்கிற வீடு நியதியோடது தானே… அதை மாப்பிள்ளை வீட்ல சொல்லுவோம். இப்ப ஒரு இடம் வாங்கிப் போட்டோமே அதை வித்துக் கல்யாணம் பண்ணலாம்.” என நாதன் யோசனை சொல்ல,

“என்னபா உங்களுக்கு நாங்க மூன்னு பசங்க இருக்கோம், வீடு அவளுக்குன்னு சொல்றீங்க.”

“நான் என்னோட சம்பாதியத்துல வாங்கின வீட்டை சொல்லலை. இந்த வீட்டுக்கு நீங்க யாரும் காசு போட்டீங்களா என்ன? நியதியோட சம்பாதியத்துல ஒரு சேமிப்பு இருக்கட்டுமேன்னு தான் இந்த வீட்டை வாங்கினேன்.”

“இது முழுக்க அவளோட பணம். இதுல எப்படிமா நீங்க பங்கு கேட்பீங்க?”

“கல்யாணத்துக்கு முன்னாடி வாங்கினா அது எல்லோருக்கும் பொதுத் தானே…” எனச் சேகரும் வழக்காட…

“இந்த வீடு எனக்கு வேண்டாம். நீங்களே வச்சுக்கோங்க. இன்னும் ஆறு வருஷம் லோன் கட்டனும், அதை நீங்களே கட்டிடுங்க. ஏற்கனவே நான் கட்டின லோன் பணத்தை எனக்குக் கொடுத்திட்டு. வீட்டை நீங்களே எடுத்துக்கோங்க.” நியதி சொல்ல, சேகரும் சுமதியும் விழித்தனர்.

அவ்வளவு பணத்திற்கு இருவரும் எங்கே போவார்கள். வீடும் இவ எடுத்துப்பா, இடத்தையும் இவளுக்கு வித்துக் கல்யாணம் பண்ணா, அப்ப எங்களுக்கு என்னதான் மிஞ்சும்.

“இங்க பாரு சுமதி, நீ ஏன் உன்னையும் சேர்த்துக்கிற? உனக்குச் செய்ய வேண்டியதை உன் கல்யாணத்தோட நாங்க செஞ்சாச்சு. நியதிக்கு போட வேண்டிய நகையும் சேர்த்து உனக்கே போட்டு, அத்தனை சீர்வரிசையும் செஞ்சுதான் கல்யாணம் பண்ணிக் கொடுத்தோம்.”

“உங்க அப்பா பேர்ல இருக்கிற வீடு, எங்களை எந்தப் பிள்ளை பார்குதோ அந்தப் பிள்ளைக்குத்தான் கொடுப்போம்.” என்றார் பத்மா. அவருக்குத் தெரியும் அந்த வீட்டிற்காகவாவது வசுமதி தங்களோடு இருப்பாள் என்று.

இத்தனை நாள் சேகர் வசுமதி சுமதி மூவரும் ஒரு மாயவலையில் இருந்தனர். அது அறுபட்டதும் அவர்களுக்குத் தாங்க முடியவில்லை.

அவர்களைக் கண்டுகொள்ளாமல் நாதனும் பத்மாவும் திருமணதிற்குத் திட்டமிட ஆரம்பித்தனர்.

நியதி தன் அம்மாவுடன் ஆர் எம் கேவி சென்று, தனக்குச் சில பட்டுப் புடவைகளும் சுடிதார்களும் வாங்கினாள். அதோடு வீட்டினருக்கும் பட்டுப்புடவையும் மற்ற உடைகளும் வாங்கிக் கொண்டுதான் வந்தாள்.

நியதி வீட்டை தானே சுத்தம் செய்து பார்த்து பார்த்து அலங்கரித்து வைத்தாள்.
வெள்ளிக்கிழமை காலை திருச்சியில் இருந்து காரில் நிருபனின் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் வந்தனர். சொல்லக் சொல்லக் கேட்காமல் நிரஞ்சனின் மனைவி காவ்யா, தன் மூன்று மாத கைக் குழந்தையுடன் அவளும் வந்திருந்தாள்.

ஜெயஸ்ரீ கூட வேண்டாம் என்று சொன்னார். “அம்மா எனக்கு இருக்கிறது ஒரு தம்பி மா… அவனுக்கு நடக்கிற எல்லா விஷேஷத்லேயும் நாங்க இருக்க வேண்டாமா?”

“அவ வரணும்ன்னு ஆசைப்படுறா, கார்ல தானே போறோம் வரட்டும்.” என்றான் நிரஞ்சன்.

நடுவழியில் இருக்கும் போது, நியதி நிருபனை அழைத்தாள். “எங்க இருக்கீங்க?”

“பாதி வழி வந்திட்டோம். அண்ணி கார்ல குழந்தைக்குப் பால் கொடுக்கிறாங்க. அதனால நாங்க எல்லாம் வெளிய நின்னுட்டு இருக்கோம்.”

“ச்ச பாவம் கஷ்ட்டம் இல்ல.. சின்னக் குழந்தையைத் தூக்கிட்டு வர சிரமமா இருக்கும்.”

“ம்ம்.. காரை நான் மெதுவா தான் ஓட்டிட்டு வரேன். அண்ணியும் அம்மாவும் மெத்தையில வச்சு தான் மடியில படுக்க வச்சிக்கிறாங்க. அவன் அழுகாமல் தான் இருக்கான்.”

“சரி பார்த்து பொறுமையாவே வாங்க.” என நியதி தொடர்பை துண்டித்தாள்.
மதியம் போல் சென்னையை அடைந்தவர்கள், ஹோட்டலில் அறை எடுத்து சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு, பின் நியதியின் வீட்டிற்குச் செல்ல கிளம்பினர்.

நியதியின் தந்தை சென்று நல்ல தரமான இனிப்பு மற்றும் கார வகைகளை வாங்கி வந்தார்.

நியதி மாலை ஒருமுறை வீட்டை மீண்டும் சுத்தம் செய்து, குளித்து அவள் வாங்கி இருந்த இள ரோஜா வர்ண புடவையில் தயாராகி, கூந்தளில் இருபக்கமும் வழியும் படி மல்லிகை பூவை வைத்துக் கொண்டு வர…. சுமதியும், வசுமதியும் அவளைக் குறுகுறுவென்று பார்த்துக் கொண்டு இருந்தனர்.

அவர்கள் இருவரின் பார்வையில் பொறாமை வெளிப்படையாகத் தெரிந்தது. இவள் மட்டும் பெரிய இடத்தில் மருமகளாகப் போகிறாளே என்ற வயிற்றெரிச்சலில் இருந்தனர்.

மாலை ஐந்து மணிப்போல நிருபனின் குடும்பம் வீட்டிற்குள் நுழைந்தது. எல்லோரையும் நாதன் வரவேற்று ஹாலில் உட்கார வைத்தார்.

பத்மாவும் நியதியும் அவர்களும் வரவேற்று முதலில் குடிக்க நீர் கொண்டு வந்து கொடுத்தனர். சேகர், சுமதி, வசுமதி மூவரும் பட்டும்படாமல் தான் நடந்து கொண்டனர்.

நியதியும் அவள் அம்மாவும் இனிப்புக் காரங்களை ஆளுக்கு ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வந்து கொடுத்தனர். அப்போது நிரஞ்சனின் மகன் அழுக, “உள்ள வாங்க.” எனக் காவ்யாவையும் குழந்தையையும் நியதி தான் பயன்படுத்தும் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

காவ்யா கட்டிலில் உட்கார்ந்து தன்னை மறைத்துக் கொண்டு பால் கொடுக்க, நியதி அங்கே இருந்து வெளியே செல்ல முயன்றாள்.

“நீ இருக்கலாம் நியதி.” காவ்யா சொல்ல, நியதி அங்கேயே அமர்ந்தாள்.

“அப்புறம் என்ன சொன்னார் என்னோட கொழுந்தனார்.” எனக் காவ்யா ஆவலாகக் கேட்க,

“அவர் எங்க நினைச்சது எல்லாம் சொல்றார். எனக்குத்தான் டைம் கொடுக்க மாட்டேங்கிறார்.”

“அப்படி என்ன சொன்னார்?” காவ்யா குறும்பாகக் கேட்க,

“கல்யாணம் பண்ணிக்கலாம், நாம ஊருக்கு போறோம், எங்க வீட்ல பேசுறோம், இன்னைக்குப் பொண்ணு பார்க்க வரோம் எல்லாம் உங்க கொழுந்தனார் முடிவு தான்.”

“நிருபனை விட என் வீட்டுக்காரர் இன்னும் வேகம். நிருபனாவது சொல்லிட்டு பண்றார், என் வீட்டிக்காரர் பண்ணிட்டு தான் சொல்வார்.” எனக் காவ்யா சிரிக்க,

“அப்ப உங்களை விட நான் பரவாயில்லை.” என நியதியும் சிரித்தாள்.

நியதி சென்று தான் குழந்தைக்கு வாங்கி வந்த பரிசை கொடுத்து, “நான் நிருபன் கிட்ட கொடுத்தேன். அவர் நான்தான் கொடுக்கணும்ன்னு சொல்லிட்டார்.” எனச் சொல்லிக் கொடுக்க, காவ்யாவும் பந்தா பண்ணாமல் வாங்கிக் கொண்டாள்.

“இவனை இங்கயே படுக்க வச்சிடலாம்.” எனக் காவ்யா மெத்தையில் மகனை படுக்க வைத்து விட்டு ,இருவரும் ஹாலுக்குச் சென்றனர்.

அப்போது தான் நியதி நிருபனை நன்றாக நிமிர்ந்து பார்த்தாள். அவனும் அவள் எப்போது பார்ப்பாள் எனக் காத்திருந்தான் போல, புருவத்தை உயர்த்தி என்ன என்றான். நியதி அவனுக்குப் புன்னகையைப் பதிலாகத் தந்துவிட்டு, ஹாலில் மற்றவர்கள் பேசுவதைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

அதுவரை இரண்டு குடும்பத்தைப் பற்றித் தான் பேசிக் கொண்டு இருந்தனர்.

“நாங்க நியதிக்கு இப்போ கல்யாணம் பன்றதாவே இல்லை. இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு, பெரிய இடமா பார்க்கலாம்ன்னு இருந்தோம்.” எனச் சேகர் பெரிய இவன் போலப் பேச,

“ஓ… ஆனா நியதியோட தங்கைக்குக் கல்யாணம் ஆகிடுச்சு போலவே.” என்றான் நிரஞ்சன்.

“ஆமாம் அது அப்போ சுமதியை விரும்பி கேட்டாங்களா… அதனால் கொடுத்திட்டோம்.” எனச் சேகர் சமாளித்தான்.

“இப்ப நாங்களும் நியதியை விரும்பித்தான் கேட்கிறோம்.” என நிரஞ்சன் புன்னகைக்க,

“நல்லா படிச்சு பெரிய வேலையில நல்ல சம்பளம் வாங்குறா… அப்புறம் விரும்பாம எப்படி?”

“அப்ப பணத்துக்காக நாங்க உங்க தங்கையைக் கேட்கிறோம்ன்னு சொல்றீங்களா” என ஜெயஸ்ரீ நேரடியாகச் சேகரிடம் கேட்க,

“அதுவும் காரணமா இருக்கலாம், அதுல ஒன்னும் தப்பு இல்லைன்னு தான் சொல்ல வரேன்.” எனச் சேகரன் உள்குத்து வைத்து பேச… அது எல்லோருக்கும் புரிந்தது.

“உங்க தங்கை வேலைக்கே போகலைனாலும், எங்களுக்குப் பிரச்சனை இல்லை. மருமகளை வேலைக்கு அனுப்பணும்னு எங்களுக்கு அவசியம் இல்லை.” என்றார் ஜெயஸ்ரீ.

“இப்ப எல்லாம் அப்படித்தான் சொல்வீங்க. யாராவது வர்ற பணத்தை வேண்டாம்ன்னு சொல்வாங்களா?” எனச் சுமதி வேறு எடுத்துக் கொடுக்க,

“எனக்கு அது தெரியாது மா… உனக்குத்தான் தெரியும். அக்காவுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிக்கிட்டு போன நீ சொன்னா ஒருவேலை சரியா இருக்கலாம்.” என்றார் ஜெயஸ்ரீயும் பதிலுக்குக் குத்தலாக.

ஏன் இப்படி என்பது போல நிருபன் நியதியைப் பார்க்க, அவனிடம் கண்களால் மன்னிப்பு வேண்டியவள், தன் அப்பாவை குர்மையாகப் பார்த்தாள். அதில் இப்போது நீங்கள் பேசவில்லை என்றால் நான் பேசுவேன் என்ற செய்தி இருந்தது.

“சுமதி நீ பேசாத சொல்லிட்டேன். சேகர் நீயும் பேசாத. நாங்க பெரியவங்க பேசிக்கிறோம்.” என நாதன் சொல்ல,

“நாங்க எங்க பையன் விருப்பத்தை மதிச்சு வந்தோம். அது தப்புன்னு சொல்ற மாதிரி இருக்கு உங்க பையன் அப்புறம் பொண்ணோட பேச்சு.”

“நாங்க ஒன்னும் விசாரிக்காம உங்க வீட்டுக்கு வரலை. எங்க பசங்க எங்ககிட்ட சொல்லலைனாலும், எங்களுக்கு எல்லாம் தெரியும்.”

“உங்க பையன் கல்யாணம் எப்படி நடந்தது. உங்க பொண்ணு சம்பாதியத்துல தான் உங்க குடும்பம் இந்தளவுக்கு முன்னேறி இருக்குன்னு உட்பட….. எல்லாம் தெரிஞ்சு தான் வந்திருக்கோம்.”

“இந்த மாதிரி மரியாதை இல்லாம பேசுறது, குத்தலா பேசுறது எல்லாம் எனக்குப் பிடிக்காது.” என ஜெயஸ்ரீ ஆணி அடித்தது போலப் பேச…. சேகர் சுமதி வசுமதி என மூவரின் முகமும் கருத்து போனது.”

“எங்க பையனுக்குப் பொண்ணு தர நான் நீன்னு போட்டி போடுறாங்க. ஆனா நாங்க எங்க பையனுக்க்காகத்தான் பார்க்கிறோம்.” என எல்லாவற்றையும் பேசிவிட்டுத்தான் ஜெயஸ்ரீ விட்டார்.

“நீங்க எதுவும் மனசுல வச்சுக்காதீங்க.” நாதன் சொல்ல,

“சரிங்க சின்னப் பசங்க அவங்க பேசினது விட்டுடலாம். எங்களுக்கு நியதியை பிடிச்சிருக்கு, உங்களுக்கும் எங்க வீட்ல செய்ய இஷ்ட்டம்ன்னா சொல்லுங்க, நாம மேற்கொண்டு பேசலாம். இப்ப நாங்க கிளம்புறோம்.” என நிருபனின் தந்தை எழுந்துகொள்ள, மற்றவர்களும் எழுந்து கொண்டனர்.

காவ்யா தன் மகனை தூக்க அறைக்குள் செல்ல, கலங்கிய கண்களை அடக்கியபடி நியதி அவளைப் பார்த்து புன்னகைத்தாள்.

“கல்யாணம்னா எதாவது பிரச்சனை வரத்தான் செய்யும். கவலைப்படாதே எல்லாம் நல்லபடியா நடக்கும்.” என நியதிக்கு சொல்லிவிட்டுக் காவ்யா குழந்தையைத் தூக்கியவள், மறக்காமல் நியதி கொடுத்த பரிசையும் எடுத்துக் கொண்டு தான் சென்றாள்.

அதைத் தான் வைத்து விட்டு சென்றால் நியதிக்கு வருத்தமாக இருக்கும் என்றே எடுத்து சென்றாள்.

அவளுக்கு இருக்கும் பெருந்தன்மை கூட, எப்படித் தன் கூடப் பிறந்தவர்களுக்கு இல்லாமல் போனது என நியதிக்கு ஆற்றாமையாக இருந்தது.

அவர்களுடன் கீழே கார் வரை சென்ற பத்மா, “நீங்க எதுவும் மனசுல வச்சுக்காதீங்க. நியதி ரொம்ப நல்ல பொண்ணு. கூடப் பிறந்தவங்களா இருந்தாலும் செய்றதுக்கு ஒரு மனசு வேணும். அது அவளுக்கு இருந்தது.” என ஜெயஸ்ரீயிடம் சொல்ல,

“நாங்க உங்க பொண்ணு வேண்டாம்ன்னு எல்லாம் நினைக்கலைங்க. எங்க பையன் விருப்பம் தான்.” என ஜெயஸ்ரீ சொல்ல, அதை அவர் கணவரும் ஆமோதித்தார்.

நிருபன் முகம் அப்போது கடுகடுவென இருந்தது. அதைப் பார்த்த நிரஞ்சன், “வீட்ல போய்ப் பேசிட்டு, நாங்க சொல்றோம்.” என்றான்.

அவர்கள் விடைபெற்று செல்ல, “நாம ரொம்பத் தப்பு பண்ணிட்டோம் பத்மா. மத்த ரெண்டு பசங்களைப் பார்த்து நியதிக்குக் கொடுமை பண்ணிட்டோம். மாப்பிள்ளை பையன் முகமே சரியில்லை. அவன் என்ன முடிவு எடுப்பனோ தெரியலையே….” என நாதன் கவலையுடன் சொல்ல, அதே கவலை பத்மாவுக்கும் இருந்தது.

அவர்கள் மகளே இந்தத் திருமணம் வேண்டாம் என்றுதான் சொல்லுவாள் என நினைக்கவில்லை.

Advertisement