Advertisement

கண்ணான கண்ணே


அத்தியாயம் 6

சென்னைக்குச் செல்ல இருவரும் விமானத்தில் எரியும் விட்டனர். தாங்கள் கொண்டு வந்த கைப்பையை உரிய இடம் பார்த்து வைத்துவிட்டு, நியதியின் அருகே இருந்த இருக்கையில் உட்கார்ந்த நிருபன், நிம்மதி பெருமூச்சு விட,

“அப்படி என்ன வெட்டி முறிச்சீங்க?” என நியதி புன்னகைக்க,

“ஏன் கேட்க மாட்ட? உன்னைக் கிளப்பவே அவ்வளவு பாடு.” நிருபன் சொன்னதைக் கேட்டதும், நியதி முகம் மாறினாள்.

தான் அங்கே மூன்று வார விடுமுறையில் வருவதாகச் சொன்னதும், அவள் அம்மாவைத் தவிர யாரும் மகிழ்ச்சிக் கொள்ளவில்லை. எதற்குத் திடிரென்று வருகிறாள் என ஆராயும் மனநிலையில்தான் இருந்தனர்.

அவள் அப்பா கூட, “எதற்கு மா வீணா செலவு பண்ணிக்கிட்டு. வெட்டி அலைச்சல் தானே.” என்றார்.

“எனக்கு அங்க ஒரு வேலை இருக்கு. அதனால தான் வரேன்.” என நியதி முடித்துக் கொண்டாள்.

இப்படி அழைக்காத இடத்திற்குப் போக வேண்டுமா என மனதிற்குள் ஒரு சலிப்பு எழுந்தாலும், நிருபனுக்காக எதையும் பொறுத்துக் கொள்ளும் மனநிலைக்கு வந்திருந்தாள்.

“என்ன மேடம் யோசனை?” என்றவன், நியதியின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொள்ள,

நியதி என்னது இது என்பது போலப் பார்க்க,

“முன்னாடி தான் ஒதுங்கிப் போக எதோ காரணம் சொன்ன, இப்ப கல்யாணத்துக்குக் கேட்ட பிறகும், ஒரே ஓட்டம் தான். உன்னை நல்லா பார்க்க கூட முடியலை.”

“இப்ப என்கிட்டே நல்லா மாட்டினியா?”

“எனக்குச் சீட் மாத்திட்டு போக எவ்வளவு நேரம் ஆகும் நிருபன்.”

“ராட்சஸி, நான் கொஞ்சம் சந்தோஷமா இருந்தா உனக்குப் பிடிக்காதே…” என நிருபன் அவள் கையை விட்டு விட,

“சும்மா சொன்னேன்.” என்ற நியதிப் அவன் கையேடு கை கோர்த்துக் கொண்டாள். வீட்டில் சம்மதித்தால் தான் எனச் சொல்லிக் கொண்டாலும், இருவரின் மனமும் ஆசையை வளர்த்துக் கொண்டது என்னவோ உண்மை.

நிருபன் பொய்யாக அவளை முறைக்க, “வேலைக்கு வந்த பையனை இந்தப் பொண்ணு வளைச்சு போட்டதா உங்க வீட்ல நினைக்க மாட்டாங்களா…”

“இதுவரை நல்லா இருந்த எங்க பெண்ணை, இவன் வந்து மாத்திட்டான்னு, உங்க வீட்லயும் தான் என்னைப் பத்தி நினைக்கலாம்.”

“எதாவது கேட்டா அதுக்குப் பதில் சொல்லுங்க, பதிலுக்கு நீங்க ஒன்னு சொல்லாதீங்க.” நியதி முறுக்கிக்கொள்ள,

“இது தான் உன்னோட கவலையா?”

“நல்லா படிக்க வச்சு, நம்பிக்கையா வேலைக்கு அனுப்பினா, கல்யாணத்துக்கு மட்டும் நாமே பார்த்துக்கிறது தப்பு மாதிரி தோணுது நிருபன்.”

“நாம ஒன்னும் நேத்து பார்த்து இன்னைக்குக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கலை. நம்ம ரெண்டு பேருக்கும் ஆறு மாசமா ஒருத்தரை ஒருத்தர் தெரியும். ஒருத்தரை பத்தி ஒருத்தர் நல்லா புரிஞ்சு வச்சிருக்கோம்.”

“நான் ஏற்கனவே சொன்னது தான். அவங்களே பார்த்தாலும், நமக்குப் பிடிச்சிருக்கான்னு கேட்பாங்க இல்லையா… நமக்கு ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிச்சு இருக்கு. நாம அதைச் சொல்லுவோம், அவங்க என்ன பண்றாங்கன்னு பார்க்கலாம்.”

“ரொம்ப யோசிக்காத நியதி. என்கிட்ட விடு நான் பார்த்துகிறேன்.”

அதன்பிறகு இருவரும் பேசிக்கொண்டே வந்தனர். நிருபனின் கண்களில் அவ்வளவு களைப்புத் தெரிந்தது, இருந்தாலும் உறங்காமல் அவளோடு பேசிக் கொண்டே இருந்தான்.

“கொஞ்ச நேரம் தூங்குங்க நிருபன்.” நியதி சொல்ல, களைப்பையும் மீறி அவன் கண்களில் தெரிந்த எதோ ஒன்று நியதியின் மனதை தாக்க,

“நான் எங்கையும் போக மாட்டேன். வாழ்க்கை முழுக்க உங்களோட தான் பேசிட்டு இருக்கப் போறேன். இப்ப கொஞ்ச நேரம் தூங்குங்க.” என்ற வார்த்தைகள் அவளையும் மீறி வெளி வந்தது.

“ப்ராமிஸ்…” என அவன் நீட்டிய கைமேல் அவள் கையை வைக்க, அந்த நிம்மதியில் நிருபன் உறங்கிப் போனான்.

இவனுக்காகவாவது எல்லாம் சரியாக நடக்க வேண்டுமே என நியதியின் உள்ளம் தவிக்க, உறங்காமல் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டு வந்தாள்.

பிறகு அவள் எப்போது உறங்கினாளோ, விமானம் துபாயில் தரை இறங்கும் முன் தான் இருவரும் கண்விழித்தனர்.

துபாயில் இருந்து சென்னைக்கு ஆறு மணி நேரம் சென்றுதான் விமானம். அதனால் அங்கே விமான நிலையத்தில் இருவரும் சுற்றிக் கொண்டு இருந்தனர்.

அங்கே இருந்த நகைக்கடையில் நிருபன் நிரஞ்சனின் குழந்தைக்கு ஒரு தங்க செயின் வாங்கினான். பிறகு அவன் அம்மாவிற்கு ஒரு தோடு வாங்கினான்.

நியதிக்கு அவன் மோதிரம் பார்க்க, வேண்டாம் என அவள் மறுக்க மறுக்க அவன் வாங்கியே விட, நியதியும் நிருபனுக்கு ஒன்று வாங்கினாள்.

நிச்சியத்தின் போது, மாற்றிக்கொள்ளலாம் என அவரவர் வாங்கியதை அவரவரே வைத்துக் கொண்டனர். நிச்சயம் என்று ஒன்று நடந்தால் தானே…

பிறகு அங்கே இருந்த ஓய்வு அறையில் முகம் கைகால் கழுவி உடைமாற்றி அடுத்த விமானப் பயணத்திற்குத் தயார் ஆகினர்.

இருவரும் சென்னை வந்து இறங்கிய போது, அதிகாலை நான்கு மணி. நிருபனின் அம்மாவும் அண்ணனும் வந்திருந்தனர். அவர்கள் வருகிறார்கள் என நிருபனுக்கே தெரியாது.

அவர்களைப் பார்த்த மகிழ்ச்சியில் நிருபன் சென்று அவர்களோடு பேசிக் கொண்டு இருக்க, நியதி அவர்களுக்குச் சிறிது நேரம் கொடுத்து, பிறகுதான் அவர்கள் அருகில் சென்றாள்.

“நான்தான் யாரும் வர வேண்டாம்ன்னு சொன்னேன் இல்ல…”

“உன்னைப் யாரு பார்க்க வந்தா… நாங்க நியதியை பார்க்க வந்தோம்.” என நிரஞ்சன் நியதியைப் பார்த்து புன்னகைக்க, நியதியும் பதிலுக்குப் புன்னகைத்தாள்.

“நான் உனக்காகத்தான் டா வந்தேன். அப்படியே உன் பிரண்டையும் பார்க்க…” என்றார் ஜெயஸ்ரீ உடனே…

இன்னும் நியதியை மருமகளாக ஏற்றுக்கொள்ளவில்லை எனக் குறிப்புக் காட்டியவர்,

“பிரயாணம் எல்லாம் சவுகரியமா இருந்ததா மா… உங்க வீட்ல இருந்து யாரும் வரலையா?” என நியதியிடம் கேட்டார்.

“நான் தான் ஆன்டி பிளைட் முன்ன பின்ன வரும்ன்னு வரவேண்டம்ன்னு சொல்லிட்டேன். இங்க இருந்து டாக்ஸி பிடிச்சா, அரை மணி நேரத்தில போற தூரம்தான். எதுக்கு அவங்க வீணா அலையணும்.”

“ஓ… சரி கிளம்பலாமா நிரு.”

“இருங்க மா இன்னும் லக்கேஜ் வரலை. அந்தப் பக்கம் உட்காரலாம்.” என அங்கே காலியாக இருந்த இருக்கைக்கு அழைத்துச் சென்றான்.

நிரஞ்சன் நியதியிடம் அவளது வீடு படிப்பு எனக் கேட்டு தெரிந்து கொண்டான்.

அவளது தங்கைக்குத் திருமணம் ஆகிவிட்டது எனத் தெரிந்ததும், என்ன டா இது என ஒரு நிமிடம் அவன் முகத்தில் யோசனை வந்து போனது.

ஜெயஸ்ரீ வேறு எங்கோ வேடிக்கை பார்ப்பது போலத் தெரிந்தாலும், காதை இவர்கள் பக்கம் தான் வைத்து இருந்தார்.

நிரஞ்சன் நியதியிடம் பேசிவிட்டு நிருபனைப் பார்க்க, அவன் நியதியை அழைத்துக் கொண்டு லக்கேஜ் எடுக்கச் சென்றான்.

“உங்க அம்மாவுக்கு என்னைப் பிடிக்கலையா?” நியதி கேட்க,

“அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அவங்கதான் நிரஞ்சனை நச்சரிச்சு வந்திருக்காங்க. உன்னைப் பார்த்த உடனே கவுந்தா, மாமியாருன்னு அவங்க கெத்து என்ன ஆகிறது. அதுக்குதான் வேற ஒன்னும் இல்லை.”

“எங்க வீட்ல பிரச்சனை வந்தாலும், என்னால சமாளிக்க முடியும் நியதி.”

“நீ வீட்ல பேசிட்டு சொல்லு, நாங்க முறையா உங்க வீட்ல வந்து பேசுறோம்.”

“ம்ம்… சரி.”

“நான் கிளம்பட்டுமா?” நிருபன் கேட்டதும், நியதி அவனது முகம் பார்க்க,

“நல்லதே நடக்கும் நம்பிக்கைவை.” என்றவன், தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு அவளோடு வாயிலை நோக்கி சென்றான்.

“நீங்க திருச்சி போகணும் இல்லையா, இப்ப எப்படிப் போவீங்க?”  

“நிரஞ்சன் கார் எடுத்திட்டு வந்திருக்கான்.”

“ஓ சரி..” என்ற நியதி அவர்களிடம் விடைபெற்று கிளம்ப, அவளை டேக்ஸ்யில் ஏற்றிவிட்டு, நிரஞ்சனின் காரில் இவர்கள் ஏறி சென்றனர்.

காரில் ஏறி சிறிது தூரம் சென்றதும், “அந்தப் பொண்ணுகிட்ட நீங்க கொஞ்சம் நல்லா பேசி இருக்கலாம் மா… பாவம் அந்தப் பொண்ணு முகம் வாடி போச்சு.” என்றான் நிரஞ்சன்.

“நான் பேசக்கூடாதுன்னு நினைக்கலை… ஆனா எனக்கு ஏனோ பேச வரலை.”

“அவ என்னைத் தப்பா நினைச்சு இருப்பாளோ…” ஜெயஸ்ரீ சந்தேகம் கேட்க,

“இப்ப கேளுங்க, அவ தப்பா எல்லாம் நினைக்கலை… உங்க அம்மாவுக்கு என்னைப் பிடிக்கலையான்னு கேட்டா.”

“நீ என்ன டா சொன்ன?”

“அது மாமியார் கெத்து, இப்ப அவங்க கெத்து காட்டுவாங்க, கல்யாணத்துக்கு அப்புறம் நீ கெத்து காட்டுன்னு சொல்லி இருக்கேன்.”

“டேய் ! இப்படியா டா சொல்லுவா?” ஜெயஸ்ரீயின் கோபம் மகன்கள் இருவருக்கும் சிரிப்பையே தந்தது.

“ஆமாம் நீ எதோ நான் சம்மதிச்சா தான் கல்யாணம் சொன்ன, இப்ப அதுக்குள்ள மாமியார் மருமகள் சொல்ற.”

“அம்மா, உங்க மனசாட்சி தொட்டு சொல்லுங்க, உங்களுக்கு நியதியை பிடிக்கலை.”

“அவ நல்லாத்தான் இருக்கா, ஆனா அவங்க குடும்பத்தைப் பார்க்க வேண்டாமா.”

“உனக்கு என்ன டா தெரியும்? நீ சின்னப் பையன். பொண்ணு மட்டும் நல்லா இருந்தா போதுமா, அவங்க குடும்பம் எப்படி ஏதுன்னு விசாரிச்சிட்டு தான் சொல்ல முடியும்.”

“பெரிய பெண்ணை வச்சிக்கிட்டு எதுக்கு டா அவங்க வீட்ல சின்னவளுக்குக் கல்யாணம் பண்ணாங்க?”

“நியதி நல்லா படிச்சு பெரிய வேலையிலும் இருக்கா. அதனால முதல்ல சின்னப் பொண்ணுக்கு பண்ணி இருப்பாங்க. நியதியும் பணம் கொடுத்து இருப்பாளா இருக்கும்” என்றது நிரஞ்சன்.

நியதி அவள் குடும்பத்தைப் பற்றிச் சொன்னதை நிருபன் சொல்லவில்லை. எல்லாம் அவன் குடும்பத்தினருக்குத் தெரியவேண்டும் என்பது இல்லை. தேவையானது மட்டும் தெரிந்தால் போதும் என நினைத்தான்.

நியதி குடும்பத்தைப் பற்றித் தவறாக நினைத்து விடுவார்களோ என்ற அச்சமும் ஒரு காரணம்.

நியதி வீட்டிற்கு வந்தபோது, அவள் அம்மா மட்டுமே விழித்து இருந்தார். மகளை மகிழ்ச்சியுடன் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.

அவர்கள் இருப்பது பெரிய அபார்ட்மெண்டில் மூன்று படுக்கை அறை கொண்ட பெரிய வீட்டில். இருப்பதிலேயே பெரிய அறையில் நியதியின் அண்ணன் சேகர் குடும்பம் உறங்கிக் கொண்டு இருக்க, இன்னொரு அறையில் தங்கை சுமதி அவள் கணவருடன் உறங்கிக் கொண்டு இருந்தாள். மற்றொரு சிறிய அறைதான் அவளது பெற்றோருடையது. அதில் அவளது தந்தை உறங்கிக் கொண்டு இருந்ததால்… நியதி ஹாலில் இருந்த குளியல் அறைக்குச் சென்று குளித்து விட்டு வந்து, ஹாலில் அமர்ந்து அவள் அம்மாவுடன் பேசிக் கொண்டு இருக்க, முதலில் அவளது தந்தை பிறகு அண்ணன் அண்ணி தங்கை என ஒவ்வொருவராக எழுந்து வந்து அவளிடம் நலம் விசாரித்தனர்.

அண்ணி வசுமதி நிதானமாக எல்லோருக்கும் காபி கலந்து கொண்டு வந்து கொடுத்தாள்.

அண்ணன் பிள்ளைகள் அத்தையைச் சுவாரிசியமாகப் பார்க்க, நியதி அவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து வாங்கி வந்த விளையாட்டுப் பொருட்கள், சாக்லேட் என எடுத்துக் கொடுத்தவள், தங்கையின் ஒரு வயது மகளிடமும் கொடுத்தாள்.

பிறகு அண்ணிக்கும் தங்கைக்கும் வாங்கி வந்த கைப்பைகள் மற்றும் அலங்கார பொருட்களை எடுத்து வைத்தாள்.

“இதுதான் வாங்கிட்டு வந்தியா? இதெல்லாம் இங்கேயே கிடைக்குது. ஒரு டேப், லேப்டாப்ன்னு வாங்கட்டு வந்தா கூட ப்ரோஜனமா இருந்திருக்கும்.” எனச் சுமதி நொடித்துக்கொள்ள,

“அங்க என்னோட செலவு, இங்க வீடு காருன்னு லோன் கட்டினது, அதோட நீங்க அதை வாங்கிறேன் இதை வாங்கிறேன்னு இழுத்து வச்ச செலவு எல்லாம் போக, என்னால இதுதான் வாங்க முடியும்.”

“உனக்கு வேண்டாம்ன்னா வச்சிட்டு போ.” என நியதி நறுக்கென்று திருப்பிக் கொடுக்க, மொத்தக் குடும்பமும் அவளை ஹா எனப் பார்த்தது.

சுமதியின் கணவன் பிரபு நிதானமாக எழுந்து வெளியே வந்து அவளிடம் நலம் விசாரிக்க, நியதி அவனுக்குப் பதில் சொன்னாள்.

வசுமதி இட்லியும் சட்னியும் செய்திருக்க, காலை உணவு முடிந்ததும், பிரபுவும், சேகரும் அலுவலகம் கிளம்பி செல்ல, நியதி இன்னொரு பெரிய அறையில் சென்று தன் பெட்டிகளை வைத்தவள், கட்டிலின் மெத்தை விரிப்பை மாற்றிவிட்டு படுத்து நன்றாக உறங்கி விட்டாள்.

“அவ அந்த ரூமை எடுத்துகிட்டா. நான் எங்க இருக்கிறது?” சுமதி தன் தாயிடம் முறையிட,

“அவ கொஞ்ச நாள்தான் இங்க இருப்பா… நீ அதுவரை உங்க வீட்ல இரு. அப்புறம் அவ போனதும் இங்க வா…”

“உன் பையன் மட்டும் வசதியா இங்க இருப்பான். நான் மட்டும் போகனுமா?”

“நீயும் பாதி நாள் இங்க தான டேரா போடுற… எதோ இங்க வாராத மாதிரி சொல்ற.”

“வீட்டுச் செலவு எல்லாம் அப்பாவோட பென்ஷன் பணம். உன் பையனும் மருமகளும் மட்டும் இருந்து அனுபவிப்பாங்க. நான் மட்டும் ஏமாந்தவளா என்ன?”

“அதுதான் நீ விவரமா தான இருக்க, அப்புறம் ஏன் இங்க இருந்து ஒண்ணுமே வாங்காத மாதிரி பேசுற.”

“சரி நியதி எதுக்கு இப்ப திடிர்ன்னு வந்திருக்கான்னு விசாரிச்சு வை. நான் ரெண்டு நாள் கழிச்சு வரேன்.” என்ற சுமதி அவள் கணவன் வீட்டிற்குக் கிளம்பி சென்றாள்.

மதியத்திற்கு மேல் எழுந்த நியதி, கைப்பேசியை எடுத்து பார்க்க, தாங்கள் திருச்சி சென்று சேர்ந்துவிட்டதாக நிருபனிடம் இருந்து தகவல் வந்திருந்தது. அவனுக்குப் பதில் அனுப்பிவிட்டு, புன்னகை முகமாக எழுந்தவள், முகம் கழுவிக்கொண்டு அறையில் இருந்து வெளியே சென்றாள்.

மதிய உணவு கொஞ்சம் நன்றாகவே இருந்தது. நியதி சாப்பிட்டு விட்டு ஹாலுக்கு வர, “என்னமா ஆபீஸ் வேலையா வந்திருக்கியா?” என அவளின் அப்பா கேட்க.

“அப்படியெல்லாம் இல்லைப்பா… எனக்கு வரணும்ன்னு தோனுச்சு வந்தேன்.” என்றாள்.

அவர்களாகத் திருமணப் பேச்சை எடுக்கிறார்களா பார்க்கலாம். ஒருவேளை அவர்களே ஆரம்பித்தால்… பிறகு நிருபனை பற்றிச் சொல்லலாம் என நினைத்து இருந்தாள்.

அங்கே நிரஞ்சன் தனக்குத் தெரிந்த சென்னை நண்பனை பிடித்து நியதி வீட்டை பற்றி விசாரிக்கச் சொன்னான். வெளியே விசாரித்தவரை பெரிதாகப் பெயர் பெற்ற குடும்பம் இல்லையென்றாலும், விசாரித்தவரை நல்ல குடும்பம் தான் என்றனர்.

நியதி வீட்டில் உட்கட்சி விவகாரம் தான். வீட்டின் வெளியே பார்க்க நல்ல குடும்பம் தான்.

ஜெயஸ்ரீ தான் வேறு ஆட்கள் என யோசித்துக் கொண்டு இருந்தார். இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என நிரஞ்சன் அவரிடம் பேசிக் கொண்டு இருந்தான்.

நான்கு நாட்கள் சென்றுவிட, அவள் வீட்டினர் திருமணப் பேச்சை எடுக்கவே இல்லை. நியதி தானாகப் பேச வேண்டிய அவசியத்தை உணர்ந்தாள்.

Advertisement