Advertisement

கண்ணான கண்ணே


அத்தியாயம் 4


மறுநாள் மதியம் பன்னிரண்டு மணி போல நண்பர் வீட்டிற்குச் செல்வதற்காகக் கிளம்பி இருவரும் வெளியே வந்தனர். நியதியை இதுவரை வெஸ்டர்ன் உடைகளில் தான் நிருபன் பார்த்திருக்கிறான்.

இன்று காட்டன் சில்க் சுடிதார் அணிந்து, காதில்பெரிய கம்மல், முகத்திற்கு லேசாக ஒப்பனை, நெற்றியில் கல் வைத்த பொட்டு எனச் சர்வ லட்சனமாக அவள் கிளம்பி வர…. நிருபன் அவளையும் தன்னையும் அடிக்கடி பார்த்துக் கொண்டான்.

“இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை?” நியதி நடந்து கொண்டே கேட்க,

“இல்லை…. உனக்கு நான் மேட்ச்சா இருக்கேனான்னு பார்க்கிறேன். நீ கலக்கலா இருக்க. நான் சுமராவாவது இருக்கேனா?”

“எப்படித்தான் இப்படியெல்லாம் உங்களுக்குச் சந்தேகம் வருதோ… நீங்களும் நல்லாத்தான் இருக்கீங்க.”

“ஹப்பா தப்பிச்சேன்டா…” என நிம்மதி கொண்டான்.
இருவரும் பஸ்சில் ஏறி, இறங்க வேண்டிய இடம் வந்ததும் இறங்கி, சிறிது தூரம் நடந்து சென்றனர்.

அந்தத் தெருவில் எல்லா வீடுகளும் ஒரே மாதிரி தான் இருந்தது. அதில் ஒரு வீட்டிற்குள் இருவரும் நுழைய.. அந்த வீட்டினர் வந்து இருவரையும் வரவேற்றனர்.

நியதி நிருபனை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். பிறகு கொண்டு வந்திருந்த தயிர் சாதத்தை எடுத்து உணவு மேஜையில் வைத்தாள். இரண்டு பாத்திரங்களில் கொண்டு வந்திருந்தாள். ஒன்றில் வெங்காயம், வெள்ளரி கலந்து மோர் மிளகாய் போட்டுத் தளித்தது. இன்னொன்றில் வெறும் தயிர் சாதம் இருந்தது. தனியாகக் கொண்டு வந்த மாதுளை முத்துக்களை, அதில் கலந்து வைத்து விட்டு வந்தாள். முன்பே கலந்து வைத்தால்… சாதத்தில் நீர் விட்டு விடும்.

நிரூபன் அவள் அருகில் நின்று அவள் செய்வதையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவனும் அவன் கொண்டு வந்த ஜூஸ்சை எடுத்து வைத்தான்.

நியதி அங்கே ஏற்கனவே வந்த மற்றவர்களுக்கு நிருபனை அறிமுகம் செய்து வைத்தவள்,

“அங்க பாருங்க ட்ரிங்க்ஸ் பண்றாங்க. வேணும்னா நீங்களும் அவங்களோட சேர்ந்துக்கலாம்.” என்றாள்.

“ஓ இதெல்லாம் வேற உண்டா….” என்றபடி நிருபன் அந்தப் பக்கம் செல்ல, அவனுடன் நியதியும் வந்தாள்.

நிருபன் எனென்ன இருக்கிறது என்று பார்த்தான். பீர் குடித்தாலே மட்டையாகும் ஆள் அவன். ஆனால் நியதி முன்பு சும்மா பந்தா காட்ட என்று பார்த்துக் கொண்டிருந்தான்.

“இது குடிச்சா மனசு லேசா இருக்கும்ன்னு சொல்றாங்களே உண்மையா?” என நியதி கேட்க,

“அதெல்லாம் பொய்… ஆமாம் நீ ஏன் கேட்கிற?”

“இல்லை சும்மா ட்ரை பண்ணி பார்க்கலாம்னு…” நியதி இழுக்க,

“ஒன்னும் வேணா வா போகலாம்.”

“நீங்க பசங்க குடிச்சா மட்டும் தப்பு இல்லை. நாங்க பொண்ணுங்க மட்டும் குடிக்கக் கூடாதா?”

“அம்மாடி பொண்ணுங்களும் இப்ப குடிக்காம இல்லை. அங்க பாரு…” என அவன் காட்டிய திசையில் பெண்கள் சிலர் வைன் குடித்துக் கொண்டு இருந்தனர்.

“என்னைக்கோ ஒருநாள் சும்மா கொஞ்சம் டேஸ்ட் பார்த்தா தப்பு இல்லை. மனசு சரியில்லைன்னு குடிக்க ஆரம்பிச்சா… அதுக்கு அப்புறம் அதை நிறுத்தவே முடியாது. அது ஆம்பிளையா இருந்தாலும் சரி, பொம்பளையா இருந்தாலும் சரி.”

“உனக்குப் புரியுதா, விளையாட்டுக்கு கூட அந்த மாதிரி யோசிக்காத.” நிருபன் சொல்ல, நியதி சிரித்து விட்டாள்.
“நீ சும்மா என்கிட்டே போட்டு வாங்கிற இல்ல…. என்னைப் பார்த்தா உனக்குக் காமெடி பீஸ் போல இருக்கா…”

“நீங்களும் தான் என்கிட்டே பயந்தது போல நடிச்சீங்க. அப்ப நான் காமெடி பீசா?”

“அம்மா தாயே ! உன்கிட்ட எல்லாம் பேசி ஜெயிக்க முடியாது.” என்றவன், அங்கே பேசிக் கொண்டிருந்த அவன் வயது ஆண்களோடு சேர்ந்து உட்கார்ந்து கொண்டான். நியதி பெண்கள் பக்கம் சென்றாள்.

ஓரளவுக்கு எல்லோரும் வந்ததும், உணவு உன்ன அழைத்தனர். நிருபன் நியதி இருவரும் ஒன்றாகவே சென்று, அவர்களுக்குத் தேவையானது எடுத்து வந்து உண்டனர்.

நிருபன் நன்றாகச் சாப்பிடுகிறானா என நியதி பார்த்துக் கொண்டாள்.

“கோங்குரா மட்டன் இருக்கு எடுத்துக்கோங்க.”

“ஒரே நேரத்தில நிறையச் சாப்பிட முடியாது. திரும்ப நைட் வந்து சாப்பிடலாமான்னு கேட்டு சொல்லு.” என்றதும், நியதி பொய்யாக நிருபனை முறைத்தாள்.

கடைசியாக இருவரும் சென்று டெசெர்ட் எடுத்துக் கொண்டு வந்து பொறுமையாகப் பேசிக் கொண்டே சாப்பிட்டனர்.

எல்லோரும் சாப்பிட்டு மீண்டும் அரட்டையில் இறங்க, அந்த வீட்டினருக்கு நியதி உதவி கொண்டு இருந்தாள்.

“நானும் உதவி பண்ணட்டா?” என வந்த நிருபனிடம், அவள் தேய்த்துக் கழுவிய தட்டுக்களை கொடுத்து,  துணி கொண்டு துடைத்து வைக்கச் சொன்னாள்.

“சாப்பிட்ட சாப்பாடுக்கு வேலைப் பார்க்கணுமா?” நிருபன் நியதிக்கு மட்டும் கேட்கும்படியாகக் கிண்டல் செய்ய,

“இங்க வேலைக்கு எல்லாம் ஆள் கிடைக்காது. அதுதான் இப்படி உதவி  பண்றது.”

“தெரியும், சும்மா கிண்டலுக்குக் கேட்டேன்.”

இருவரும் உதவி விட்டு ஹாலுக்கு வர… அடுத்த மாதம் யார் வீட்டில் கூடுவது என முடிவு செய்து, அதோடு யார் என்ன உணவு வகை என முடிவு செய்து கொண்டு, ஒவ்வொருவராக விடைபெற்றனர்.

நியதி அவள் பாத்திரத்தை எடுக்கச் செல்ல, அவளுடைய தயிர் சாதம் முழுவதும் காலியாகி இருக்க, அந்தப் பாத்திரத்தில் கோழி குழம்பு வைத்து, அந்த வீட்டு பெண்மணி அவளிடம் கொடுத்தார். அவரிடம் நன்றி சொல்லிவிட்டு நியதியும் நிருபனும் வெளியே வந்தனர்.

“நேத்து ஷாப்பிங் பண்ணலை… இப்ப போய் அடுத்த வாரத்துக்குத் தேவையான காய் வாங்கிட்டு வீட்டுக்கு போகலாம்.” என வழியில் இருந்த மாலுக்குச் சென்ற இருவரும், அவரவருக்குத் தேவையானது வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்றனர்.

குழம்பு இருந்ததால்… நியதி இருவருக்கும் சேர்த்து சப்பாத்தி செய்ய, அவள் வீட்டுப் பால்கனியில் உட்கார்ந்து இருவரும் சாப்பிட்டனர்.

“இன்னைக்கு நாள் நல்லா இருந்துச்சு இல்ல…” நியதி சொல்ல,

“நம்ம ஊர்ல சொந்தகாரங்க ஒரே ஊர்ல இருந்தாலும், ஒருத்தர ஒருத்தர் பார்த்திகிறது அதிசயம். வீட்டுக்கு வரவான்னு கேட்டா, இந்த வாரம் ஊர்ல இல்லைன்னு சொல்லிடுவாங்க. ஆனா இங்க வெளிநாட்டில தெரியாதவங்க எல்லாம் ஒண்ணா கூடி இருக்காங்க.”

“எப்பவுமே இருக்கும் போது அதோட அருமை தெரியாது இல்லையா… இங்க எப்படா நம்ம ஆளுங்களைப் பார்ப்போம்ன்னு இருப்போம், அதுதான் வேற ஒன்னும் இல்லை.”

“ம்ம்… கிட்ட இருந்தா வளராத பாச பயிர், தூர இருந்தா வளரும்னு சொல்ற.” நிருபன் சோம்பல் முறித்தபடி சொல்ல,

“ஆமாம், அப்படித்தான். உங்களுக்குத் தூக்கம் வருதுன்னு நினைக்கிறேன்.”

“ஏன் என்னை அதுக்குள்ள விரட்டுற?” எனக் கேட்டாலும், நிருபனும் எழுந்து கொண்டான். நியதி ஒரு எல்லையில் நின்றுதான் மற்றவர்களிடம் பழகுகிறாள். அதை அவன் இன்று விருந்துக்குச் சென்ற போது கூடக் கவனித்து இருந்தான்.

தன்னிடம் தான் கொஞ்சம் உரிமை எடுத்து பேசுகிறாள். அதைக் கெடுத்துக்கொள்ள வேண்டாமே என நினைத்தவன், “ஓகே குட் நைட்.” என்றவன், இந்தப் பால்கனியில் இருந்து அந்தப் பால்கனிக்கு அப்படியே தாண்டி சென்றான்.

எதற்கு இப்படி என்பது போல நியதி பார்க்க, “இந்தப் பக்கம் போனா ஈஸியா இருக்கும். வரும் போது கதவு திறந்து வச்சிட்டுதான் வந்தேன். பாய்.” எனச் சொல்லிவிட்டு உள்ளே சென்றான். நியதியும் சிரித்தபடி உள்ளே சென்றாள்.

வீட்டிற்கு வந்ததும், தன் அன்னை அழைக்க, அவரிடம் இன்று வெளியே போய் வந்ததைப் பற்றிச் சொன்னவன், அவனும் நியதியும் இன்று விருந்தில் எடுத்துக் கொண்டு புகைப்படங்களை அனுப்பிவிட்டுப் படுத்தான்.

ஜெயஸ்ரீ செல்லில் ஆவலாகப் போட்டோ பார்க்க, அப்போது வந்த அவரின் மூத்த மகன் நிரஞ்சனிடம் புகைப்படங்களைக் காட்டிவிட்டு, நிருபன் நியதியும் வெளியே போய்விட்டு வந்து கதையைச் சொன்னார்.

“சின்ன மருமகளா… நல்லாத்தான் இருக்கா..” என நிரஞ்சன் கேலி பேசினான்.

“டேய் ! அவங்க ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் டா…”

“இவன் அவளுக்காகச் சமைக்கிறான், அவ இவனுக்காகச் சமைக்கிறா. ரெண்டு பேரும் ஒண்ணா வெளிய போய்ட்டு வராங்க. நீங்க இன்னும் பிரான்ட்ன்னு நம்பிட்டு இருங்க.”

“அவன் அப்படி ஏதாவதுன்னா என்கிட்டே சொல்வான் டா…”

“அவனுக்கே இன்னும் தெரியலையா இருக்கும். எனக்கு என்னவோ ரெண்டு போரையும் பார்த்தா, நல்ல ஜோடியாதான் தெரியுது.”

“அப்படியா சொல்ற, அவங்க என்ன ஆளுங்கலோ என்னவோ… நம்ம ஆளுங்களா இருந்தா பரவாயில்லை.”

“ஆமாம் இந்தக் காலத்தில நீங்க இன்னும் அதெல்லாம் பாருங்க. முதல்ல உங்ககிட்ட சொல்லிட்டுக் கல்யாணம் பண்ணா அதுக்கே நீங்க சந்தோஷப்படனும். அதை விட்டு ஜாதி மதமான்னு பேசிட்டு.”

“நிறையப் பேர் கல்யாணம் பண்ணிட்டு, வீட்லயே நிதானமா தான் சொல்றாங்க. தேவையில்லாது எல்லாம் பேசிட்டு.”

“நீ தான் டா இப்ப தேவையில்லாதது எல்லாம் பேசுற. அவங்க பிரண்ட்ஸ் தான். அங்க தனியா இருக்காங்க, ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா இருக்காங்க, அது தப்பா?”

“நான் தப்புன்னு சொல்லலை. எனக்குத் தோனுனதை சொன்னேன்.”

“அப்படி உண்மையா இருந்தாலும், இப்ப என்ன நஷ்ட்டம்? நாம பொண்ணு தேடுற வேலை மிச்சம்.” என்றுவிட்டு நிரஞ்சன் செல்ல,

“இவன் என்ன இவ்வளவு ஈஸியா பேசுறான்.” என வியந்தபடி ஜெயஸ்ரீ சென்றார். மூத்த மகன் பேசியதை பற்றி அவர் இளைய மகனிடம் சொல்லவில்லை.

எதற்கு நாமே அப்படி ஒரு எண்ணத்தை, அவன் மனதில் உருவாக்க வேண்டும் என நினைத்து, அவனிடம் சொல்லவில்லை. ஆனால் அவனிடம் “தனியாக இருக்கும் பெண் ,நீ அவள் வீட்டிற்குப் போய் வந்து இருந்தால், மற்றவர்கள் தவறாக நினைக்க வாய்ப்பு உண்டு.” என எச்சரித்தார்.

“அதுக்காக நாங்க வெளியவா மா உட்கார்ந்து சாப்பிட முடியும். நம்ம ஊர் போல இங்க இல்லை… மத்தவங்க என்ன பண்றாங்கன்னு நோட்டம் எல்லாம் விட்டுட்டு இருக்க மாட்டாங்க. அவங்கவங்க வேலைப் பார்த்திட்டு இருப்பாங்க.”

“சரி டா பார்த்து இருதுக்கோ…” எனச் சொல்ல்விட்டு ஜெயஸ்ரீ வைத்து விட்டார்.

வார நாட்களில் இருவருமே பிஸியாக இருந்தனர். இருந்தாலும் முன்பு போல வெகு நேரம் வரை நியதி அலுவலகத்தில் இருப்பது இல்லை.

அன்று சீக்கிரமே வீடு திரும்பியவள், இரவுக்கு எதாவது சூடாகச் சமைக்கலாம் என்று நினைத்தாள். நிருபனுக்கும் சேர்த்து செய்வோமா, ஒருவேளை அவன் வெளியேவே உண்டு விட்டு வந்துவிட்டால் எனக் குழப்பிக் கொண்டு இருந்தாள். அவனை அழைத்துக் கேட்க, அவனிடம் இருந்து செல் எண்ணை வாங்கவே இல்லை.

சரி சேர்த்துச் செய்வோம். அவன் சாப்பிட்டு விட்டால், மறுநாளுக்கு வைத்துக் கொள்ளலாம் எனப் புலாவும் தயிர் பச்சடியும் செய்து வைத்தாள்.

சிறிது நேரம் சென்று நிருபன் வந்துவிட்டானா என்று பார்க்க, அவன் வந்திருந்தான்.

“உங்களுக்கும் சேர்த்து தான் சமைச்சு இருக்கேன். சாப்பிட வாங்க.” என்றதும், இப்பத்தான் எதாவது ஆர்டர் பன்னுவோமான்னு நினைச்சிட்டு இருந்தேன். நீ போ நான் வரேன்.” என்றான்.

சிறிது நேரத்தில் நிருபன் வர, இருவரும் டிவி பார்த்துக் கொண்டே உண்டு முடித்தனர்.

“முதல்ல உங்க செல் நம்பர் கொடுங்க.” என நியதி தன் செல்லை எடுக்க, அவளுடையதை வாங்கி, அதில் தன் கைபேசிக்கு அழைத்துப் பிறகு துண்டித்தான்.

“நீ சென்னை தான் இல்ல… நானும் சென்னையில தான் வேலைப் பார்த்தேன். ஆனா நாம அப்ப எல்லாம் மீட் பண்ணலை… இங்க வந்து மீட் பண்ணி இருக்கோம்.”

“சென்னையில சாப்பாட்டுக்கு என்ன பண்ணீங்க?”

“சனி ஞாயிறு ஊருக்கு போய்டுவேன். மத்த நாள் மட்டும் தான். ஆனா அங்க பிரச்சனையே இல்லை, சென்னைதான் பெஸ்ட். எப்ப டா இந்த ஊரை விட்டு போவோம்ன்னு இருக்கு.”

“உனக்கு எப்படி? நீயும் சென்னைக்கு வந்து தான ஆகணும்.”

“நான் சென்னைக்கு வர மாட்டேன் நிருபன்.”

“ஏன் நியதி? இந்த ஊர் அவ்வளவு பிடிச்சு இருக்கா?”

“பிடிக்குது பிடிக்கலை இல்லை பிரச்சனை. இங்க தனியா இருந்தாலும் நிம்மதியா இருக்கேன். என்னால சுதந்திரமா இருக்க முடியுது.”

“சில நேரம் சில பிரச்சனைகள் இருக்கலாம் நியதி. ஆனா அது எப்பவும் நிரந்தரம் இல்லை.” நிருபன் சொன்னதற்கு நியதி பதில் எதுவும் சொல்லவில்லை.

வெள்ளி மாலை எப்போது வீட்டிற்குப் போவோம் என்று இருந்தது. ஆறு மணி ஆனதும் நியதி வீட்டிற்குக் கிளம்ப, அதை அதிசயமாகப் பார்த்த சக ஊழியர் ஒருவர், “நீ சீக்கிரம் போறியா ஆச்சர்யமா இருக்கு.” எனக் கேட்டுவிட்டு செல்ல, நியதிக்கும் ஒரே யோசனை தான்.

நிருபனோடு நேரம் செலவழிக்கும் ஆவலில் தான் செல்கிறாள். அது சரியா தவறா என ஒரே சிந்தனை.

அவன் எத்தனை நாள் இங்க இருப்பானோ, இருக்கும் வரை அவனுடன் நட்பு பாராட்டுவதில் என்ன தவறு எனத் தோன்ற, அங்கிருந்து லேசான மனதுடன் வீட்டிற்குச் சென்றாள்.

கிறிஸ்துமஸ் மாதம் என்பதால்… வழியெங்கும் வர்ண தோரணைகளும், அலங்கார விளக்குகள் என ஊரே ஜொலித்துக் கொண்டு இருந்தது.

நிருபனும் அன்று சீக்கிரமே வீடு திரும்பி இருந்தான். “நான் இன்னைக்குச் சமைக்கிறேன்.” என்றான்.

“நானும் டிரஸ் மாத்திட்டு வரேன். ரெண்டு பேரும் சேர்ந்து செய்வோம்.” என்றாள் நியதி.

இருவரும் பேசிக்கொண்டே சமைத்தனர்.

“அப்புறம் எப்ப கல்யாணம் பண்ணிப்ப நியதி? எதாவது ஐடியா இருக்கா?”

“எனக்குக் கல்யாணத்தில எல்லாம் விருப்பம் இல்லை நிருபன். இப்படித் தனியாவே இருந்திட வேண்டியது தான்.”

“நியதி சொன்னதைக் கேட்டவன், எதாவது உளறாத நியதி. தனியாவே எப்பவும் இருக்க முடியாது.”

“என்னால முடியும்.” நியதி அழுத்தமாகச் சொல்ல,

“நீ நினைச்சாலும் உங்க வீட்ல விடுவாங்களா?” நிருபன் சொல்ல, “எங்க வீட்ல தான…” என நக்கலாகச் சிரித்து விட்டு சென்றாள்.

மறுநாள் மாலை இருவரும் ஒன்றாகவே கடற்கரைக்குச் சென்று விட்டு, மாலுக்குச் சென்று தேவையானவற்றை வாங்கி விட்டு, வெளியவே இரவு உணவையும் முடித்துக் கொண்டு வந்தனர்.

நள்ளிரவில் திடிரென்று நியதிக்கு ஒரே வாயிற்று வலி. அவளும் எலுமிச்சை சாறு, மோர் எனக் குடித்துப் பார்த்தாள். ஆனால் ஒரு பயனும் இல்லை.

மறுநாள் காலை காய்ச்சலும் சேர்ந்துகொள்ள, மருத்துவமனை செல்ல கூடத் தெம்பு இல்லாமல் படுத்து கிடந்தாள். உதவி எண்ணை அழைத்தால்… உடனே உதவி கிடைக்கும் தான். ஆனாலும் அழைக்கவில்லை.

ஞாயிறு என்பதால் நிருபன் நேரம் கழித்தே எழுந்து வந்து அவளை அழைக்க… பிறகே அவளுக்கு உடல்நலமில்லாதது தெரியும்.

அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்று வந்தான். ட்ரிப்ஸ் எல்லாம் போட்டு மாலைதான் வீட்டிற்கு அனுப்பினர். உணவு ஒவ்வாமை தான்.

இரவுக்கு அவன் அம்மாவைக் கேட்டு கஞ்சி செய்து கொண்டு வந்தான்.

“பாரு ஒருநாள் உடம்பு முடியலைனா எப்படி இருக்க? இதுல கல்யாணம் பண்ணிக்காம இந்த அம்மா தனியாவே இருப்பாங்களாம்.” நிருபன் கிண்டல் செய்ய,

“நான் இருந்துப்பேன் நிருபன், நீங்க போங்க.” என நியதி வெடுக்கெனச் சொல்லிவிட,

அவளை முறைத்து விட்டு, அவளுக்குக் கிண்ணத்தில் கஞ்சி ஊற்றிக் கொடுத்தான்.

“சாரி..” என்றவள், “நீங்க என்ன சாப்பிடுவீங்க.” என்றதற்கு, சாதம் வைத்து விட்டேன் என்றான்.

அவள் சாப்பிட்டு முடித்ததும், மாத்திரை கொடுத்து விட்டு, “நைட் உடம்பு முடியலைனா, உடனே என்னைக் கூப்பிடணும்.” எனச் சொல்லிவிட்டே சென்றான்.

மறுநாள் நியதி விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டில் தான் இருந்தாள். நிருபனும் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே வேலைப் பார்த்தான்.

நியதி அன்று நன்றாகத்தான் இருந்தாள். இருவருக்கும் சேர்த்து அவளே எளிமையாகச் சமைத்தாள். நிருபன் அவள் வீட்டின் ஹாலில் உட்கார்ந்து தான் மடிக்கணினியில் வேலைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
ஜெயஸ்ரீ அப்போது அழைக்க அவரிடமும் எல்லாவற்றையும் சொன்னான். ஜெயஸ்ரீக்கு ஒரே குழப்பம், இவன் ஏன் அந்த பெண்ணிற்காக இவ்வளவு பார்கிறான், ஒருவேளை காதலிக்கிறானோ என சந்தேகம் வேறு.
“டேய் ! உனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிக்க போறேன்.” என்றார்.
“வேண்டாம்ன்னு சொன்னா கேட்கவா போறீங்க. சரி பாருங்க.” என்றான் சாதாரணமாக.
அதை நியதியிடமும் சொன்னான். அவள் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் எதோ யோசனையாக இருக்கிறாள் என முகம் காட்டியது.
 

Advertisement