Advertisement

கண்ணான கண்ணே


அத்தியாயம் 3


நியதி ஒரு குளிர் பானத்தை வாங்கிக் கொண்டு வந்து ரோலர் கோஸ்டர் வரிசையில் நிற்க, அதே வரிசையில் சற்று முன்பு நிருபன் நின்றிருந்தான்.

நம் ஊர் ரோலர் கோஸ்டர் போல நிருபன் நினைத்து இருந்தான். நம் ஊரில் இருப்பது எல்லாம் மாதிரி தான். ஆனால் அங்கே அது போல இல்லை. ராட்சஸ ரோலர் கோஸ்டர் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஏறிய நொடியிலேயே எப்போது இறங்குவோம் என ஆகிவிட்டது. பயத்தில் கண்ணையும் வாயையும் இறுக மூடிக்கொண்டான். நின்று முடிக்கும் வரை கண்ணைத் திறக்கவில்லை.

தன்னுடைய சீட் பெல்ட் கழட்டிவிட்டு வெளியே வந்தவனுக்குத் தலை கிறுகிறுத்துப் போய் வயிற்றைப் பிரட்ட, வேகமாகக் குப்பை போடும் இடத்தில் நின்று வாந்தி எடுக்க முயன்றான். ஆனால் வாந்தியும் வரவில்லை.

“இதைக் குடிங்க.” எனச் சத்தம் கேட்டு திரும்பியவன், நியதி கொடுத்த நீரை வாங்கிப் பருகினான்.

“காலையில சாப்பிடலையா?” நியதி கேட்க, இல்லை எனத் தலையசைத்தான்.

“அறிவில்லையா உங்களுக்கு? வெறும் வயித்துல யாராவது இதுல ஏறுவாங்களா?” என்றவள், “வாங்க என்னோட…” என முன்னே நடக்க, அவள் பின்னே நிருபன் மெதுவாக நடந்து சென்றான்.

அங்கிருந்த உணவகத்திற்குச் சென்றவள், அவளே சாண்ட்விட்ச் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் ஆர்டர் கொடுக்க, நிருபன் தனது செல்லை மேஜையில் வைத்துவிட்டு ரெஸ்ட்ரூம் சென்றான்.

மேஜையில் இருந்த அவனது கைபேசி அடிக்க, நியதி நிருபன் வருகிறானா என்று பார்த்தாள். அவன் வருவதாகத் தெரியவில்லை. கைப்பேசியும் விடாமல் அடிக்க, நியதி கைபேசியைப் பார்க்க, திரையில் நிருபனின் குடும்பப் படம் தெரிந்தது.

கைபேசியைக் கையில் எடுத்து, திரையில் தெரிந்த அவர்களின் குடும்பப் படத்தையே விடாமல் பார்த்தாள். நிருபனின் பெற்றோர் மற்றும் அவனது சகோதரன் எனப் பார்த்ததும் தெரிந்தது.

அந்தப் படம் மனதில் பதிவது போல இருந்தது. புகைப்படம் எடுக்க வேண்டும் என எடுத்தது அல்ல…. எல்லோரும் சாதாரணமாக இருந்தனர். ஆனால் மொத்த குடும்பமும் சந்தோஷமாக இருந்தது.

நிருபன் வந்து நின்றது கூடத் தெரியாமல், நியதி அந்தப் படத்திலேயே ஆழ்ந்து போய் இருந்தாள்.

நிருபன் அவள் எதிரில் அமர்ந்ததும் தான் நிகழ்காலத்திற்கு வந்தவள், “விடாம அடிச்சுது அதுதான் எடுத்தேன்.” எனச் செல்லை அவனிடம் கொடுத்தாள்.

“அம்மா பண்ணி இருப்பாங்க.” என்றவன், தன் அன்னையை அழைத்துப் பேசினான்.

“வந்துட்டேன் மா… இப்ப தான் சாப்பிட போறேன். நைட் பேசுறேன்.” என வைத்து விட்டான்.

நியதி சென்று சாண்ட்விட்ச் எடுத்து வந்து நிருபனிடம் கொடுக்க, “நீங்க சாப்பிடலையா…” என்றதுக்கு மறுப்பாகத் தலையசைத்தவள், “உங்க வீட்ல நீங்க நாலு பேரு தானா…” எனக் கேட்டாள்.

“இல்லைங்க எங்களோட தாத்தா பாட்டியும் இருக்காங்க. அண்ணா நல்லா படிச்சு இருக்கான். ஆனா வேலைக்குப் போகலை. விவசாயம் அப்புறம் இன்னும் வேற பிசினஸ் இருக்கு. அப்பாவும் அவனும் அதெல்லாம் பார்த்துகிறாங்க. அண்ணனுக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. இப்ப அண்ணி கர்ப்பமா இருக்காங்க.” எனத் தன் குடும்பத்தைப் பற்றிச் சொல்ல, நியதி அமைதியாகக் கேட்டுக் கொண்டாள்.

நிருபன் சாப்பிட்டு ஜூஸ் குடித்து முடித்ததும், “சரி போகலாமா?” என்றாள் நியதி.

“எங்க?”

“இன்னைக்கு முழுக்க வேஸ்ட் பண்ணப் போறீங்களா…. எழுந்திருங்க போகலாம்.”

“ஐயோ நான் வரலைப்பா.”

“ச்ச… ஒழுங்கா வாங்க…” என நியதி முறைக்க, எழுந்து அவளோடு சென்றான்.

“நான் கொஞ்சம் தான் சாப்பிட்டேன்.”

“நிறையச் சாப்பிட்டாலும் வாந்தி வரும். அப்பப்ப கொஞ்ச கொஞ்சமா சாப்பிட்டுக்கலாம்.”

நியதி சென்று ரயில் பெட்டியை போல இருந்த ராட்டினத்தில் அமர….

“இது எப்படி இருக்குமோ…” என நிருபன் சற்று அச்சத்தோடு தான் அமர்ந்தான்.
அவனைப் பார்த்து சிரித்த நியதி “பயப்படாத தம்பி நான் இருக்கேன்.” எனக் கேலியாகச் சொல்ல,

என்னது தம்பியா? என்பது போலப் பார்த்தவன், “எல்லாம் என் நேரம்.” என முனங்கிக்கொண்டே சீட் பெல்ட் மாட்டினான்.

நிருபன் தயாராகக் கண்ணை மூடிக்கொள்ள, “ஹலோ… கண்ணை ஏன் முடுறீங்க?”
“பயம் தெரியாம இருக்க…”

“ஐயோ கடவுளே…” என நியதி தலையில் அடித்துக் கொள்ள, அந்த நேரம் ரயில் பெட்டி நகரத் தொடங்க, நிரூபன் ஒரு கண்ணை மட்டும் திறந்து நியதி என்ன செய்கிறாள் என்பது போலப் பார்க்க, அவள் சிரித்துக் கொண்டு இருந்தாள்.

ரயில் வண்டி அந்தக் குகைக்குள் அதி வேகத்தில் சென்று, மேலே கீழே என வட்டம் அடிக்க, நியதி “ஹோ….” எனச் சத்தம் போட….. நிருபனும் அவளோடு சேர்ந்து அந்தப் பொழுதை அனுபவிக்க ஆரம்பித்தான். அதன் பிறகு இருவருக்கும் உற்சாகம் மட்டுமே.

இருவரும் ஒன்று விடாமல் எல்லாவற்றிற்கும் சென்றனர். நடுநடுவே கொஞ்சம் உணவையும் கொறித்துக் கொண்டனர்.

மாலை முடிந்து இரவு வந்த போது, இருவரும் மிகவும் களைத்துப் போய் அங்கிருந்த புல் வெளியில் அமர்ந்தனர்.

“உங்களுக்குப் பயமே இல்லையா நியதி.” நிரூபன் கேட்டதற்கு, வெறும் புன்னகை மட்டுமே பதிலாகக் கிடைத்தது.

“உங்க அப்பா அம்மா எல்லாம் எங்க இருக்காங்க.”

“அவங்க எல்லாம் சென்னையில் இருக்காங்க.”

சிறிது நேரம் கனத்த மௌனம், “எனக்கு ரொம்ப டயர்ட்டா இருக்கு. நான் ரூமுக்கு போறேன்.” எனச் சொல்லிவிட்டு நியதி எழுந்து செல்ல, நிருபன் அந்தப் புல்வெளியிலேயே படுத்துக் கொண்டான்.

தன் அன்னையை அழைத்துப் பேசினான். அன்று நடந்ததெல்லாம் சொன்னவன், “நியதி இல்லைனா ரொம்பப் போர் அடிச்சு இருக்கும் மா… என்ன தைரியம் தெரியுமா? எல்லாத்திலேயும் பயமே இல்லாம ஏறினா.”

“அவ தைரியத்துக்கு என்ன குறைச்சல், அது தானே தனியா இருக்கா. நீயும் கல்யாணம் பண்ணிட்டு வெளிநாடு போய் இருந்தா… தனியா கஷ்டபட மாட்ட…”

“இதுல என்னமா கஷ்ட்டம். நியதி கூட இங்க தனியாத்தான் இருக்காங்க.”

“அவ கெட்டிகாரி டா…. தனியா இருந்தாலும், எப்படிப் பொறுப்பா இருக்கா…. நீ அப்படியா?”

“ஏன் சொல்ல மாட்டீங்க. ஒரு வேலையும் செய்ய விடாம பொத்தி பொத்தி வளர்த்திட்டு, இப்ப இப்படிச் சொல்றீங்க.”

“நீ ஆரம்பிச்சா நிறுத்த மாட்ட, எனக்கு வேலை இருக்கு வைக்கிறேன்.” என ஜெயஸ்ரீ வைத்து விட்டார்.

குளித்து உடைமாற்றி அறைக்கே உணவை வரவழைத்து உண்டு படுத்த நியதி, எதை எதையோ நினைத்து வெகு நேரம் உறங்கவே இல்லை. காலை தாமதமாக எழுந்து தயாராகி வந்தவள், நேராகச் சாப்பிட உணவகம் சென்றாள்.
அங்கே ஏற்கனவே நிருபன் இருந்தான். வெகுவாகத் தயங்கித்தான் ஹாய் என்றே சொன்னாள்.

மீண்டும் நத்தையாக ஓட்டுக்குள் ஒடுங்க பார்க்கிறாள் என அவனுக்குப் புரிய, அவள் மாற்றத்தை உணராதது போல…. “உட்காருங்க…” என இருக்கையைக் காட்டியவன், “இன்னைக்கு என்னங்க பிளான்.” என அவளிடம் கேட்டான்.

“இன்னும் வாட்டர் ரைட்ஸ் எல்லாம் போகலையே… அதெல்லாம் போனா டைம் போயிடும்.”

சாப்பிட்டு இருவரும் வாட்டர் ரைட்ஸ் சென்றனர். ஒரு வட்ட மிதவையில் இருவர் மட்டும் அமர்ந்து நீரில் சென்றனர். செல்லும் வழியாவும் வெகு அமைதி. எதோ காட்டிற்குள் செல்வது போல இருந்தது.

“இது மாதிரி வரணும்ங்க எவ்வளவு அமைதியா இருக்கு.”  நிருபன் சொல்லும் போதே ஒரு பெரிய கதவின் முன்பே வந்திருந்தனர். அந்தப் பெரிய கதவு திறக்க, உள்ளே சென்றால்… திகில் படத்தில் வருவது போல, அந்த இடத்தைப் பயங்கிறமாக வடிவமைத்து இருந்தனர்.

“என்னங்க இவ்வளவு நேரம் நல்லத்தானே போயிட்டு இருந்தது.” என அவன் அச்சப்பட…நியதி சிரித்தாள்.

பொய்யாக அங்கங்கே நிறுத்தி வைக்கப்படிருந்த விலங்குகள், மற்றும் பறவைகளைத் தாண்டி, ஒரு இருட்டு குகைக்குள் இவர்கள் மிதவை செல்ல,
“ஐயோ பயமாயிருக்கே….” என நிருபன் கத்த.

“நிருபன், போதும் உங்க நடிப்பு. உங்களுக்குப் பயமே இல்லை. சும்மா ஏன் பயப்படுற மாதிரி நடிக்கிறீங்க.” நியதி சொல்ல,

“பெரிய ஆளுங்க நீங்க.” என நிரூபன் புன்னகைக்க,

“நேத்துல இருந்து ஏன் இந்த டிராமா?”

“நீங்க தான் காரணம். பேசவே யோசிக்கிறீங்க, அப்புறம் எப்படி என்னோட சேர்ந்து சுத்துவீங்க. பயந்தது போல நடிச்சதுனால தான் கூடவே இருந்தீங்க.”
ஏன் நியதி? என்னைப் பார்த்தா உங்களுக்குத் தப்பானவன்னு தோணுதா?

“அப்படி இல்லை நிருபன், நான் தனியா இருந்து பழகிட்டேன் அவ்வளவுதான்.”

“நான் உங்ககிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்க மாட்டேன், நாம பிரண்ட்ஸா இருக்கலாம், ஓகே வா…”

“ம்ம்…”

இருவரும் ஒரு உடன்படிக்கைக்கு வர…. மிதவை தண்டவாளம் போல இருந்ததில் ஏற ஆரம்பித்தது. மேலே உச்சிக்கு வந்ததும், அதி வேகத்தில் கீழே நோக்கி செல்ல, இருவரும் மூச்சைப் பிடித்துக் கொண்டு தான் இருந்தனர்.

இருவரும் கீழே வந்து நீரில் பொத்தென்று விழுந்ததில், முழுவதும் நனைந்து போய் வெளியே வந்தனர்.

அதன் பிறகு நிறைய நேரம் நீரில் ஆடிவிட்டு, மாலை பஸ்சில் ஒன்றாகவே வீடு திரும்பினர்.

பஸ் நிலையத்தில் இருந்து இருவரும் நடக்கும்போது, நியதின் செல் அடிக்க, அதில் வந்த எண்ணை பார்த்தவள், பேசாத என நிருபனுக்குச் சைகை காட்டிவிட்டுப் போன்னை எடுத்தாள்.

“சொல்லுங்க மா…”

“எங்க இருக்க?”

“வீட்ல தான். ஏன்?”

“அப்பவே போன் பண்ணோம் போன் சுவிட்ச் ஆப்ன்னு வந்தது. அது சார்ஜ் இல்லாம சுவிட்ச் ஆப் ஆகிடுச்சு.”

“பார்த்துச் சார்ஜ் போட்டு வச்சுக்க மாட்டியா.”

“சரி சொல்லுங்க எதுக்குப் போன் பண்ணீங்க? அப்பா பணம் அனுப்பிடியான்னு கேட்டாரு.”

“எதுக்குச் சும்மா பணம்?”

“இங்க எதோ இடம் வந்திருக்காம், அது வாங்கனும்ன்னு சொன்னாரு.”

“இருக்கிற வீடு காரு எல்லாத்துக்கும் லோன் கட்டு முடிச்சதும் பார்க்கலாம். சும்மா பணம் பணம் கேட்டீங்க. அவ்வளவு தான், நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.”

நியதி சொன்னதைக் கேட்டு அவள் அம்மா விழிக்க, அவரிடமிருந்து போன்னை வாங்கிய அவளது அப்பா, “அட்வான்ஸ் கொடுத்தாச்சு… இப்ப மீதி பணம் கொடுக்கலைனா… அட்வான்ஸ் திருப்பித் தர மாட்டான்.” என இழுக்க…

“அட்வான்ஸ் கொடுக்கிறதுக்கு முன்னாடி என்னைக் கேட்கணும்ன்னு தோணலையா பா…. வீடு காரு எல்லாத்துக்கும் லோன் கட்டிட்டு மீதம் இருக்கிறதையும் என்கிட்டே இருந்து வழிக்கப் பார்க்கிறீங்க. அது தானே…அனுப்பித் தொலைகிறேன் வைங்க.”

பேச ஆரம்பித்த போது இருந்த கவனம், பெற்றோர் பேசியதில் எரிச்சலாகி நிருபன் இருப்பதை மறந்து பேசி விட்டிருந்தாள். அவள் கண்கள் கலங்க ஆரம்பிக்க, ஆனால் சமாளித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

அவள் பேசியதை எல்லாம் வைத்து, அவனால் சிலவற்றை யூகிக்க முடிந்தது. ஆனால் அவன் நியதியிடம் எதுவும் கேட்கவில்லை.

வீட்டின் அருகே வந்ததும், “வெளிய பர்கர் பீசான்னு சாப்பிட்டு நாக்கு செத்து போச்சு. ரசம் வச்சுச் சாதம் சாப்பிட்டா நல்லா இருக்கும். நான் நம்ம ரெண்டு பேருக்கும் சேர்த்து பண்றேன். நீங்க பிரெஷ் ஆகிட்டு சாப்பிட வாங்க.” என நிருபன் அழைக்க,

“வேண்டாம் நிருபன்.” என மறுத்த நியதியின் பேச்சை அவன் கேட்கவில்லை.

“நான் உங்களுக்காகக் காத்திருப்பேன்.” எனச் சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

நியதி சென்று சோபாவில் படுத்து விட்டாள். உடல் அசதியை விட மன அசதி தான் அதிகம் இருந்தது.

நிருபன் குளித்து விட்டு வந்து சமைக்க ஆரம்பித்து இருந்தான்.

சிறிது நேரம் சென்று எழுந்தவள், குளித்து விட்டு, நிருபனின் வீட்டிற்குச் சென்றாள்.

அவன் அப்போது தான் ரசம் வைத்துக் கொண்டு இருந்தான். “தள்ளுங்க…” என்றவள், அவள் செய்ய ஆரம்பிக்க,

“நீங்க போய் ரெஸ்ட் எடுங்க நியதி, நான் பண்றேன்.” என்றான்.

“இல்லை எனக்கும் மைன்ட் டைவர்ட் ஆகணும்.” என்றதும், சரியென்று நிருபனும் ஆம்லெட் போட வெங்காயம் நறுக்கினான்.

ரசத்துக்குக் கூட்டி வைத்தவள், ஹாலில் சென்று உட்கார்ந்து கொண்டாள்.

ஹால் என்றால் ரொம்பப் பெரிதானது அல்ல… வீடே சின்னதுதான். ஸ்டுடியோ அபார்ட்மெண்ட். நடுத்தர ஹால், சின்னத் திறந்தவெளி சமையல் அறை…. படுக்கை அறையோடு ஒட்டிய குளியல் அறை. ஹாலில் இருந்து ஒரு சின்னப் பால்கனி இருந்தது. அங்கே எல்லா வீடுகளும் அப்படித்தான்.
அதற்கே நம் ஊர் மதிப்புக்கு ஒரு லட்சம் வாடகை. ஆனால் என்ன ஒன்று, வீட்டிற்குத் தேவையான சகல விதமான பொருட்களும் அங்கே இருந்தது.
டிவி ஓடிக் கொண்டிருந்தாலும், நியதின் கவனம் அதில் இல்லவே இல்லை. அவள் வேறு எங்கோ வெறித்துக் கொண்டு இருந்தாள்.

தான் இந்தப் பெண்ணை முதன் முதலில் பார்க்கும் போது என்ன நினைத்தோம், இப்போது முற்றிலும் அவள் உடைந்து போய் இருப்பதைப் பார்க்க வருத்தமாக இருந்தது.

“நியதி சாப்பிட வாங்க.” எல்லாவற்றையும் உணவு மேஜையில் வைத்து விட்டு நிருபன் அழைக்க,

எழுந்து வந்து தனக்கு வேண்டியதை போட்டுக் கொண்டவள், “நான் அங்க உட்கார்ந்துகிறேன்.” எனச் சோபாவில் சென்று உட்கார்ந்து கொண்டாள்.
நிருபனும் அவனுக்கு வெண்டியதை எடுத்துக் கொண்டு இன்னொரு குஷனில் உட்கார்ந்து உண்டான்.

“என்ன இருந்தாலும் நம்ம சாப்பாடு போல வராது இல்லைங்க.”

“ம்ம்… ஆமாம். தேங்க்ஸ் நிருபன்.”

“நீங்க தேங்க்ஸ் எல்லாம் சொல்லாதீங்க, பதிலுக்கு இன்னொரு நாள் எனக்கு நல்லா சமைச்சு கொடுத்திடுங்க போதும்.” அவன் சிரித்துக் கொண்டு சொல்ல,
“நாளைக்கு மதியம் நீங்க அங்க வந்து சாப்பிடுங்க.” என்றாள்.

ஒரு பேச்சுக்கு கூட நிருபன் மறுக்கவில்லை. “என்னங்க செய்யப் போறீங்க?” என்றான் ஆவலாக.

“இப்போ தான் நினைவு வருது. நாளைக்கு மதியம் ஒரு தெலுங்குகாரங்க வீட்ல கெட் டு கெதர் இருக்கு. நீங்களும் என்னோட வாங்க.”

“நான் எப்படிங்க வர்றது.”

“நாம ஒன்னும் சும்மா போக மாட்டோம். நம்ம பங்குக்கு எதாவது செஞ்சு கொண்டு போவோம். நான் எதாவது பண்றேன், நீங்க ஜூஸ் மட்டும் வாங்கிகோங்க.”
“இங்க எல்லாம் அப்படித்தான். நிறைய பேர் வருவாங்க. ஆளுக்கு ஒன்னு செஞ்சு கொண்டு வருவாங்க. அதனால நிறைய இருக்கும். ஒரு கட்டு கட்டலாம்.”

“நான் காலையில சாப்பிடவே மாட்டேங்க.” நிருபன் சொன்னதைக் கேட்டு சிரித்த நியதி, “கவலைப்படதீங்க, எப்படியும் மாசம் ஒரு விருந்து இப்படி யார் வீட்லையாவது இருக்கும்.” என்றாள்.

அவளை வேறு எதுவும் நினைக்க விடாமல் நிருபன் ஏதேதோ பேசிக் கொண்டு இருந்தான். பிறகு இருவருக்குமே அசதி என்பதால்… குட் நைட் சொல்லி நியதி அவள் வீட்டிற்குச் சென்றாள்.

இரண்டு நாள் அசதி, இப்போது நன்றாக உண்டது என வீட்டிற்குச் சென்றதும் படுத்து உறங்கிவிட்டாள்.

நிருபன்தான் உறங்காமல் நியதியை நினைத்துக் கொண்டு படுத்துக் கிடந்தான்.

பெரிய சிக்கலில் இருக்கிறாள் எனப் புரிந்தது. எப்படி வெளியே கொண்டு வருவது என்றுதான் தெரியவில்லை.


Advertisement