Advertisement

கண்ணான கண்ணே

அத்தியாயம் 2

வெள்ளிக்கிழமை இரவு நியதி பஸ்சில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தாள். அமைதியான சுழலில் திடிரென யாரோ தமிழில் உரத்து பேசும் சத்தம் கேட்க, திரும்பாமலே அது நிருபன் என அவளுக்குத் தெரிந்தது.


யாருடனோ போன்னில் பேசிக் கொண்டு இருந்தான். அவள் கவனித்துக் கேட்க அவசியமின்றி, அவன் பேசியது எல்லாமே அவள் காதில் தெளிவாக விழுந்தது.

“வெளிய தான் மா சாப்பிடுறேன். நாளைக்குத் தான் கடைக்குப் போய்த் தேவையான சாமான் எல்லாம் வாங்கிட்டு வந்து சமைக்க ஆரம்பிக்கணும்.”
….

“எனக்கு வீடியோ பார்த்து சமைக்க எல்லாம் பொறுமை இல்லை. நான் உங்களுக்குத் தான் வீடியோ கால் போடுவேன். நீங்க சொல்லுங்க நான் செய்றேன்.”

….

“என்னை ஏன் குத்தம் சொல்றீங்க? நீங்கதான் என்னை இப்படி வளர்த்து வச்சிருக்கீங்க. ஒரு நாலாவது எனக்குச் சமைக்கச் சொல்லிக் கொடுத்தீங்களா என்ன? அதுவும் இல்லாம நல்லா வக்கனையா வேற சமைச்சு போடுவீங்க. இப்ப நான்தானே கஷ்ட்டப்படுறேன்.”

பஸ்சில் உடன் பயணிப்போரின் முக மாறுதலை கவனித்த நியதி, திரும்பி நிருபனை ஒரு பார்வைப் பார்க்க, அவன் என்ன என்பது போலப் பதில் பார்வை பார்த்து வைத்தான்.

நியதி பஸ்சில் இருந்த மற்றவர்களைப் பார்க்க, என்னமா கண்ணுலையே பேசுறா டா… என வியந்தவன், “அம்மா நான் நாளைக்குப் பேசுறேன். இங்க நாம பேசுறது பார்த்து சிலருக்கு பொறாமை.” என்றதும், நியதி அவனை முறைத்துவிட்டு திரும்பிக் கொண்டாள்.

நியதி அன்று அவள் இறங்க வேண்டிய இடத்திற்கு ஒரு நிறுத்தம் முன்பே இறங்கி செல்ல, தன்னைத் தவிர்க்கவே அப்படிச் செய்கிறாள் என நிருபனுக்குப் புரிந்தது.

மறுநாள் நியதி வழக்கமாகச் செல்லும் இடங்களில், அவளுக்கு முன்பு நிருபன் அங்கு இருந்தான். முதலில் கடற்கரையில் இவள் காபி வாங்கிக் கொண்டு உட்கார இடம் தேடிக் கொண்டு செல்லும் போது, நிருபன் ஒரு இருக்கையில் வசதியாகச் சாய்ந்து படுத்து, வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவன் இருப்பதைப் பார்த்த நியதி, அவனுக்கு வெகு தள்ளி சென்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

அடுத்து வழக்கமாக மளிகை மற்றும் காய்கறி வாங்கும் மாலுக்குச் செல்ல, அங்கேயும் அவன் இருந்தான். அவன் அம்மா சொன்ன லிஸ்ட் படி பொருட்களைத் தேடித் தேடி எடுத்துக் கொண்டு இருந்தான்.

கடைசியாக அவள் வார இறுதியில் வழக்கமாக உண்ணும் உணவகத்திலும், அதுவும் நியதி கண்ணில் நன்றாகப் படும்படிதான் உட்கார்ந்து கொண்டிருந்தான்.

நியதி அவனைக் கண்டுகொள்ளாமல் சென்று அவளுக்கு வேண்டியதை வாங்கி உண்டு விட்டு கிளம்ப.

“போடி, பெரிய இவ…இவகிட்ட பேசலைனா எனக்கு நஷ்டம் பாரு. ரொம்பதான் சீன் போடுறா…” என நியதியை மனதிற்குள் வருத்தபடி வீடு வந்து சேர்ந்தான்.

ஏற்கனவே எரிச்சலில் இருந்தவன், போன் செய்த அன்னையிடமும் அதைக் காட்டினான்.

“என்ன டா மூட் அவுட்டா?”

“சில பேர் மனசுல தான் உலக அழகின்னு நினைப்பு. நாமா போய்ப் பேசினா, ரொம்பத் திமிர் காட்டுறாங்க.” என்றான்.
அவன் அன்னை யார் என்ன என்று விசாரிக்க, நியதி பற்றி நிருபன் சொன்னான்.

“உன்னைப் பத்தி அந்தப் பொண்ணுக்கு என்ன தெரியும்? நீ நல்லவனாவும் இருக்கலாம், கெட்டவனாவும் இருக்கலாம்.”

அவளுக்கு உன்னைப் பற்றித் தெரியாத பட்சத்தில, உடனே உன்கிட்ட சிரிச்சு பேசனும்ன்னு நீ எப்படி எதிர்பார்க்கலாம்?”

“நீங்க சொல்றது எல்லாம் சரி மா. ஆனா பழகியே பார்க்காம, நான் நல்லவனா கெட்டவனான்னு அவளுக்கு எப்படித் தெரியும். பேச கூட யோசிக்கிறா.”

“நிருபன், உன்னோட ஆதங்கம் எனக்குப் புரியாம இல்லை. ஆனா இந்தக் காலத்தில பொண்ணுங்க கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்க வேண்டி இருக்கு.”

“ஒரு பெண் நெருப்பா இருக்கிறதுல தப்பே இல்லை. அப்பத்தான் மத்தவங்களை ஒரு எல்லையில நிறுத்த முடியும். ஆனா அது நிறையப் பேர் திமிர்ன்னு தப்பா புரிஞ்சிகிறாங்க.”

“நீயே சொல்ற தனியா இருக்கான்னு. அப்ப அவ தன்னோட பாதுகாப்பை பத்தி யோசிப்பா இல்லையா?”

“அவளைக் குத்தம் சொல்லாத, நீ அவளைத் தொந்தரவும் பண்ணாத…. அவளே உன்னைப் புரிஞ்சிகிட்டு உன்னோட ப்ரண்ட் ஆகினா பரவாயில்லை… இல்லைனா விட்டுடு.”

“அவளுக்கு என்ன பிரச்சனையோ, நமக்குத் தெரியாது இல்லையா.”

“சரி மா… நான் பார்த்து இருந்துக்கிறேன்.”

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால், நிரூபன் நிதானமாகவே எழுந்து வேலை செய்து கொண்டிருந்தான். ஜெயஸ்ரீ அவனை அழைத்தார். அவரிடம் வீடியோ கால் பேசிக்கொண்டே, சாதம், பருப்பு, முட்டைகோஸ் செய்தான்.

“அம்மா, நீங்க போய்த் துங்குங்க நான் பார்த்துகிறேன்.” எனத் தொடர்பை துண்டித்தவன், முட்டை கோஸ் மட்டும் அடுப்பில் இருக்க, அதற்குள் குளித்து விட்டு வரலாம் எனக் குளியல் அறைக்குள் சென்றான்.

முட்டை கோஸ் சீக்கிரமே வெந்து விடும். அது அவனுக்குத் தெரியவில்லை. நிதானமாகக் குளித்துக் கொண்டிருந்தான்.

முன்தினம் உலர்த்திய துணிகளை, பால்கனியில் இருந்து நியதி எடுத்து கொண்டிருந்தாள். நிருபன் பால்கனி கதவை திறந்தே வைத்திருக்க, முட்டை கோஸ் தீய்ந்து கருகிய வாசனை, இவள் பால்கனி வரை வந்தது.

இவ்வளவு தீயும் வரை என்ன செய்கிறான் என யோசித்தவள், “நிரூபன் நிரூபன்…” எனக் குரல் கொடுக்க, குளியல் அறை படுக்கை அறைக்குள் இருப்பதால்… அவனுக்குக் கேட்கவில்லை.

நியதி முன் பக்கம் சென்று, அவன் வீட்டு அழைப்பு மணியை அழுத்த, மூன்று அழைப்புகளுக்குப் பிறகுதான், அப்படியே ஈரமான உடம்பில் துண்டை சுற்றிக் கொண்டு வந்து கதவை திறந்தான்.

அவனுமே நியதியை எதிர்பார்க்கவில்லை. இவள் வரமாட்டாளே எதற்கு வந்தாள் என்பது போலப் பார்த்துக் கொண்டு நின்றான்.

“அடுப்பில என்ன வச்சிருக்கீங்க?” நியதி கேட்டதும் தான் நிருபனுக்கு அடுப்பில் வைத்த காய் நினைவுக்கு வந்தது.

வேகமாகச் சமையல் அறைக்கு ஓடினான். முட்டை கோஸ் முழுவதும் கருகிப் போய் ஒரே வாடை.

அவன் அடுப்பை அணைத்துவிட்டு, ஸ்டுபிட், இடியட் எனத் தன்னையே திட்டிக் கொண்டான்.

உண்மையாகவே அவனுக்கு அவ்வளவு கோபம். காய் நறுக்கவே மிகவும் சிரமப்பட்டிருந்தான், இப்போது அனைத்தும் வீணானதும் அப்படி ஒரு கோபம் வந்தது.

நியதி வாசலில் நின்று எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.

“நீங்க போய் டிரஸ் பண்ணா, நான் உள்ள வருவேன் நிருபன்.” நியதி குரல் கொடுக்க, அதன்பிறகே அவள் இருப்பதை உணர்ந்து படுக்கை அறைக்குள் சென்றான்.

அவன் உள்ளே சென்றதும், சமையல் அறைக்குச் சென்றவள், அங்கிருந்த அலாரத்தை அனைத்து விட்டு, ஜன்னல் கதவுகளைத் திறந்து விட்டு, புகை போகச் சிம்னியை போட்டு விட்டாள்.

அதற்குள் அங்கே வந்த நிருபனுக்குக் கருகிய பாத்திரத்தை பார்த்தும் இன்னும் கோபத்தில் முகம் மாறியது.

“இதெல்லாம் ரொம்பச் சாதாரணம் நிருபன். எல்லோருக்கும் நடக்கிறது தான். டென்ஷன் ஆகாதீங்க. பாத்திரத்தை உடனே கழுவாதீங்க, ஆறினதும் ஊற வச்சு கழுவுங்க.” என்றவள், புகை நன்றாக வெளியேறிவிட்டது என உறுதி செய்துகொண்டு, அலாரத்தைத் திரும்பப் போட்டு விட்டாள்.

“தேங்க்ஸ் நியதி, நீங்க மட்டும் டைம்க்கு வரலைனா… அலாரம் வேற அடிச்சு, பெரிய சீன் ஆகி இருக்கும்.”

“பரவாயில்லை…. என்ன சமைச்சீங்க?”

“சாதம், பருப்பு, முட்டை கோஸ் பொரியல். இதுவே அம்மா சொல்ல சொல்லத்தான் பண்ணேன். அவங்களுக்குத் தூங்க டைம் ஆகுதேன்னு, போன்னை வச்சிட்டு காய் வேகும் முன்ன குளிச்சிட்டு வரலாம்ன்னு போனேன். அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு.”

“எல்லாமே பாடம் தான். இனிமே கவனமா இருப்பீங்க இல்லையா?”

“கண்டிப்பா.”
“இதை உங்க அம்மாகிட்ட சொல்லி அவங்களையும் டென்ஷன் பண்ணிடாதீங்க. ஊறுகாய் அப்பளம் எதாவது தொட்டுகிட்டு சாப்பிடுங்க.”

“ம்ம்…”

“சரி நான் வரேன்.” என நியதி விடைபெற, நிருபன் மீண்டும் அவளுக்கு நன்றி சொன்னான்.

அவனும் அவளுடன் வெளியே வரை வர, நியதியின் வீட்டுக் கதவு தானியங்கி கதவு என்பதால்…. தானாகவே பூட்டி இருந்தது.

இப்ப எப்படித் திறப்பா என்பது போல நிருபன் பார்க்க, தன் கழுத்தில் இருந்த சங்கிலியில் வீட்டுச் சாவி ஒன்றை நியதி கோர்த்து வைத்திருந்தாள். அவள் அதை வைத்து கதவை திறந்து கொண்டு செல்ல, “சரியான முன்ஜாக்கிரதை முத்தம்மா.” என நினைத்துக் கொண்டான்.

இத்தனை வருடங்கள் தனியாக இருந்து இருக்கிறாள், இது போல எவ்வளவு பார்த்திருப்பாள். அவளே சொன்னாளே எல்லாமே பாடம் என்று.

சிறிது நேரத்திற்கு முன்பு இருந்த மனசினுக்கம் இப்போது அவனுக்கு இல்லை. தனது மொபைலில் சத்தமாகப் பாடலை ஒலிக்க விட்டவன், ஆம்லெட் போட்டுக் கொண்டு சாப்பிட அமர்ந்தான்.

சாப்பிட்டு முடித்து, தன் வீட்டின் இன்னொரு சாவியை எடுத்துக் கொண்டு சென்று, நியதி வீட்டின் அழைப்பு மணியை அடித்தான்.
கதவு திறந்தவள், என்ன என்று கேட்க, “எனக்கு ஒரு உதவி பண்ணனும் நீங்க.” என்றான்.

நியதி உடனே சரி என்று சொல்லாமல், “என்னன்னு சொல்லுங்க பார்க்கலாம்.” என்றாள்.

“சரியான முன்ஜாக்கிரதை முத்தம்மா…” என மனதிற்குள் அவளைச் சிலாகித்தாலும், வெளியே ஒன்றும் காட்டிக் கொள்ளாமல்,

“இந்தச் சாவியை நீங்க உங்க வீட்ல வச்சிக்கிறீங்களா… என்னைக்காவது நான் சாவி எடுக்க மறந்து, கதவு பூட்டிகிட்டா… அப்பவும் உங்களைத்தான் வந்து தொந்தரவு செய்வேன். அதுக்குதான்.” என நிருபன் விளக்க, அவனை முறைத்தாலும் சாவியை வாங்கிக் கொண்டாள்.

“தேங்க்ஸ்…” என்றவன், புன்னகையுடன் வீடு திரும்பினான்.

அம்மா சொன்ன மாதிரிதான் போலிருக்கு, நாமதான் தப்பா நினைச்சிட்டோம் என நினைத்துக் கொண்டான்.

மறுநாள் இரவு வேலையில் இருந்து நியதி வீடு திரும்பும் போது, ஜேன்னின் உணவகத்திற்குச் செல்ல, அங்கே ஏற்கனவே நிருபன் உண்டு கொண்டிருந்தான்.

இவளைப் பார்த்ததும் ஹாய் என்றவன், தன்னுடைய உண்ணும் வேலையைத் தொடர…. வேறு இருக்கையில் சென்று உட்கார்ந்த நியதி, தனக்கு வேண்டியதை ஆர்டர் கொடுத்தவள், அதை எடுத்து வந்த ஜேன்னிடம், நிருபனைக் காட்டி எதோ சொல்ல, நிருபனும் அதைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.
ஜேன் சென்று நிருபனிடம் ஒரு உணவுப் பட்டியலைக் கொடுத்து, போன் செய்து சொன்னால்… வீட்டிலேயே வந்து கொடுப்பதாகச் சொல்ல… அவருக்கு நன்றி சொல்லி வாங்கி வைத்துக் கொண்டான்.

உண்டு விட்டு கிளம்பும் முன் நியதியிடம் வந்தவன், நன்றி சொல்ல, “அதைப் பத்திரமா சமையல் அறையில ஒட்டி வைங்க… தொலைச்சிட்டு தேடாதீங்க.” என்றாள். புன்னகையுடன் அவளிடம் தலையசைத்து விட்டுச் சென்றான்.

நிருபனுக்கு அவன் அம்மாவிடம் எதையும் மறைக்க முடியாது. அவரிடம் எல்லாவற்றையும் சொல்லி விட… ஜெயஸ்ரீக்கு நியதி மீது ஏற்கனவே நல்ல எண்ணம் தான். அது இன்னும் அதிகமாகியது.

நியதி சில நாட்கள் நிருபன் கண்ணில் படவே இல்லை. வார இறுதியில் கூட அவளைப் பார்க்க முடியவில்லை. தன்னை வேண்டும் என்றே தவிர்க்கிறாளா அல்லது வேறு எதுவும் வேலையா என நிருபன் தெரியாமல் குழம்பினான்.

அடுத்த மாதத்தில் வார இறுதியோடு சேர்த்து தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வர…. வீட்டில் இருந்தால்…. பொழுது போகாது என நினைத்தவன், உடன் வேலை செய்யும் நண்பனிடம் சொல்ல, அவன் டூர் போகச் சொன்னான்.

நண்பன் சொன்னபடி எங்கே செல்வது என நெட்டில் ஆராய்ந்தவன், பிரபல தீம் பார்க் செல்வது என முடிவு செய்தான். ஒரு நாட்கள் கூடச் சென்று வரலாம். ஆனால் எல்லாவற்றிலும் ஏற முடியாது என்பதால்… அங்கேயே தங்கி அடுத்த நாளும் பார்த்துவிட்டு வரலாம் என இரண்டு நாட்களுக்கு டிக்கெட் முன் பதிவு செய்தான்.
அடுத்த நாள் காலை அவர்கள் சொன்ன இடத்தில் தீம் பார்க் அழைத்துச் செல்லும் வாகனம் காத்திருக்க… அதில் சென்று ஏறியவனுக்கு ஆச்சர்யம். நியதியும் அதில் இருந்தாள்.

உண்மையாகச் சந்தோஷ படுவதற்குப் பதில், தான் அவளைத் தொடந்து வருவதாகத் தவறாக நினைத்து விடுவாளோ என அச்சம் தான் வந்தது. அது அவனுடைய உல்லாச மனநிலையையும் பாதிக்க, கொஞ்சம் எரிச்சலாக உணர்ந்தான்.

நேராக நியதியிடம் சென்றவன், “நீங்க வர்றீங்கன்னு உண்மையா எனக்குத் தெரியாதுங்க. நான் உங்களைப் பாலோ பண்றதா நினைச்சா… இப்பவே சொல்லிடுங்க. பணம் வீணா போனா கூடப் பரவாயில்லை. நான் வராம இருந்திடுறேன்.” என்றான்.

அவன் பேசியது நியதிக்கு மிகுந்த கோபத்தைக் கொடுக்க, “ஹலோ… இப்ப நான் எதாவது சொன்னேனா…. நீங்களா ஏன் சீன் கிரியேட் பண்றீங்க?” என வெடித்தாள்.

“நீங்க என்னைத் தவிர்க்கிறீங்கலோன்னு எனக்குத் தோனுச்சு. அதுதான் சொன்னேன்.”

“முதல்ல நீங்க யாரு எனக்கு? நான் ஏன் உங்களைத் தவிர்க்கணும்.” நியதி கோபமாகக் கேட்க,

“கரெக்ட், நான் யாரும் இல்லை உங்களுக்கு, அதே போல… நீங்களும் யாரும் இல்லை எனக்கு. நீங்க யாரோ, நான் யாரோ.” என்றவன் சென்று, பின் இருக்கையில் உட்கார்ந்து கொண்டான்.

“விட்டது தொல்லை…” என நியதியும் அவனைக் கண்டுகொள்ளவில்லை.
மூன்று மணி நேர பிரயாணம் செய்து தான் அந்த இடத்துக்குச் செல்ல முடியும்.
நகரச் சந்தடியில் இருந்து வெகு தொலைவு தள்ளி வந்த பிறகு, சுற்றிலும் இயற்கை காட்சிகள் கொட்டிக் கிடக்க, இருவருக்கும் மனம் அதில் திளைத்தது.

நியதிக்குச் அப்போது செல்லில் அழைப்பு வர, அதை அவள் எடுத்து பேசினாள். வாகன இறைச்சல் காரணமாக, அவள் சற்றுச் சத்தமாகப் பேச, பின் இருக்கையில் இருந்த நிருபன், ஒருவேளை அவள் வீட்டினருடன் பேசுகிறாளோ என் சற்று உற்றுக் கவனித்தான்.

“நான் ரெண்டு வாரமா இங்க இல்லை. ஆபீஸ் வேலையா டொராண்டோ போய் இருந்தேன்.” என ஆங்கிலத்தில் யாரிடமோ சொன்ன போதுதான், அவள் ஊரில் இல்லை என நிருபனுக்குப் புரிந்தது.

‘தேவை இல்லாம பேசிட்ட டா. சும்மாவே கண்டுக்க மாட்டா… இனிமே திரும்பியே பார்க்க மாட்டா.’ என நினைத்துக் கொண்டான்.

அவன் நினைத்தது போலத்தான். இவர்கள் தீம் பார்க் சென்று சேர்ந்த போது, காலை பத்து மணி ஆகி இருக்க, முதலில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று, தங்கள் உடமைகளை வைத்துவிட்டு வர இருவரும் சென்றனர்.

இருவருக்கும் பக்கத்து அறைதான். நிருபன் உடைமாற்றி அறையில் இருந்து வந்தவன், நியதியிடம் பேச செல்ல, அவனைக் கவனிக்காதது போலக் கடந்து சென்று விட்டாள்.

திரும்ப முதலில் இருந்தா என நிருபன் நொந்து போனான். இதற்குக்தான் யோசிக்காமல் பேசக்கூடாது. தவளை தன் வாயால் கெடும்.

Advertisement