Advertisement

கண்ணான கண்ணே 


அத்தியாயம் 12 

நிருபன் அவர்களின் உரக் கடைக்குச் செல்ல, அங்கேதான் அவனின் அப்பாவும் அண்ணனும் இருந்தார்கள். அவர்களிடம் அவன் நியதிக்குப் பணம் கொடுத்தது, எதற்காகக் கொடுத்தான் என அனைத்தையும் சொல்லிவிட்டான். 

“நாளைக்கு நீ வெளிநாட்டில இருந்து வந்தாக் கூடச் சென்னையில தான் வேலைப் பார்ப்ப…. அங்க ஒரு வீடு இருக்கிறது நல்லது தான்.” நிரஞ்சன் சொல்ல, 

“இதை நீ முதலிலேயே சொல்ல மாட்டியா. நான் வேற நியதி முன்னாடியே பணம் கேட்டேன். அந்தப் பெண்ணுக்குச் சங்கடமா போய் இருக்கும்.” என்றார் ராஜமாணிக்கம். 

“எனக்கு என்னப்பா தெரியும், நீங்க திடிர்ன்னு இடம் வாங்கனும்ன்னு சொல்வீங்கன்னு. ஆனா அந்த இடத்தை விட வேண்டாம். ஒரு நாலு மாசம் போகட்டும் வாங்கலாம்.” 

“அதுவரை அந்த இடம் இருக்காது. ஆனா என்கிட்ட பணம் இருக்கு, நான் போட்டு வாங்கிறேன்.” 

“நீங்க இப்ப போட்டு வாங்குங்க. ஆனா நானும் பணம் அனுப்புவேன்.” 

“உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு, இனிமே செலவு அதிகமா இருக்கும். வீட்டுக்குச் சீக்கிரம் லோன் கட்டி முடிக்கப் பாரு, இங்க நாங்க பார்த்துக்கிறோம்.” 

“சரிப்பா…. இதைச் சொல்லத்தான் வந்தேன். நான் என் ப்ரண்ட்ஸ் பார்த்திட்டு வீட்டுக்கு போறேன்.” என்று நிருபன் கிளம்பி செல்ல, 

“இவன் நியதியை கல்யாணம் பண்றதுல இவ்வளவு தீவிரமா இருப்பான்னு நான் நினைக்கவே இல்லைடா…” 

“எனக்குத் தெரியும் பா… அதுதான் நான் வேகமா கல்யாண வேலையில இறங்கினேன். இந்தப் பெண்ணை விட்டு நாம வேற எந்தப் பெண்ணைப் பார்த்திருந்தாலும், நிருபன் சதோஷமா இருந்திருக்க மாட்டான்.” 

“நியதியும் நல்ல குணமான பெண்ணைத்தான் தெரியுது. நல்லவேளை கல்யாணத்தை உடனே வச்சோம்.” எனத் தந்தையும் மகனும் பேசிக்கொண்டனர். 

நிருபன் அவன் நண்பர்களோடு அரட்டை அடித்துவிட்டு, மதிய உணவு நேரத்திற்குத் தான் வீட்டிற்கு வந்தான். அவனுக்கு முன்பே அவன் அப்பாவும் அண்ணனும் வந்திருந்தனர். 

“ஏன் டா எப்ப போன எப்ப வர?” ஜெயஸ்ரீ கேட்க, 

“நான் நம்ம கடைக்குப் போய்ட்டு அப்படியே பிரண்ட்ஸ் பார்க்க போயிட்டேன் மா….” 

“நியதிகிட்ட சொல்லிட்டு போக மாட்டியா… அவ வாசலை வாசலை பார்த்திட்டு இருந்தா… இன்னைக்கு என்னவோ முகமே சரி இல்லை.” 

தன் அம்மா சொன்னதைக் கேட்ட நிருபன் நியதியை தேடி அறைக்குச் சென்றான். நியதி அறையில் தலைத் துவட்டிக் கொண்டு இருந்தாள். இவ காலையில குளிக்கலையா என நினைத்தவன்,  

“நியதி சாப்பிட வா…” என்றான். நியதி இருந்த இடத்தை விட்டு அசையாமல்  “என்ன ஆச்சு?” எனக் கேட்டாள். 

“என்னது என்ன ஆச்சு மொட்டையா கேட்டா?” 

“நீங்க மாமாகிட்ட பேசத்தானே போனீங்க. அதுதான் என்ன ஆச்சு?” 

“நான்தான் பார்த்துகிறேன்னு சொன்னேன் இல்ல… என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?” நிருபன் எரிந்து விழ, 

“என்ன ஆச்சுன்னு கேட்டா நம்பிக்கை இல்லைன்னு அர்த்தமா? கேள்வி கேட்டா அதுக்குப் பதில் சொல்ல உங்களுக்கு என்ன கஷ்ட்டம்?” 

“அப்பா ஒண்ணுமே சொல்லலை. ஏன் முன்னாடியே சொல்லலைன்னு தான் கேட்டார். சென்னையில ஒரு வீடு இருக்கிறது நல்லதுதான். சீக்கிரம் லோன் கட்டி முடிங்கன்னு தான் சொன்னார்.” 

நிருபன் சொன்னதக் கேட்ட பிறகுதான் நியதிக்கு நிம்மதியாக இருந்தது. அவள் முகத்தில் மகிழ்ச்சி எட்டிப் பார்க்க… 

“இப்ப சந்தோஷமா, கொஞ்சம் என் மேலையும் நம்பிக்கை வை நியதி.” என நிருபன் சலிப்பாகச் சொல்ல, 

“நம்பிக்கை இல்லைன்னு உங்களுக்குத் தெரியுமா?” என்றாள் நியதி. 

“நீ பண்றது எல்லாம் பார்த்தா அப்படித்தான் இருக்கு.” என்றவன், “சரி சாப்பிட வா…” என அறையை விட்டு வெளியே சென்றுவிட்டான். 

மேல பேச வாய்ப்புக் கொடுக்காமல் அவன் சென்றுவிட, நியதியும் அறையில் இருந்து வெளியே சென்றாள். அங்கே எல்லோரும் சாப்பிட தயாராக இருக்க, நியதியும் சென்று காவ்யாவோடு பரிமாறினாள். 

“இவ்வளவு நேரம் அழுது வடிஞ்ச மூஞ்சியா இது.” காவ்யா கிண்டல் செய்ய…. நியதி நிருபனை பார்க்க, அவன் முகம் இன்னும் கடுகடுத்தது. 

“கல்யாணத்துக்கு அப்புறமும் ப்ரண்ட்ஸ் கூடச் சேர்ந்து சுத்திட்டு இருந்தா… அப்படித்தான் இருப்பாங்க. என்னைத் தேடி பிரண்ட்ஸ் யாரவது வந்தா, உன் மூஞ்சியும் இப்படித்த இருக்கும்.” என நிரஞ்சன் காவ்யாவை வம்புக்கு இழுக்க…. 

“ஒ அதுதான் கோபமா….வெளிநாட்டுக்கு போனா நீங்க ரெண்டு பேர் தானே இருக்கப் போறீங்க. இங்க இருக்கிறவரை கொஞ்சம் கொழுந்தனாரை ப்ரீயா விடு.” 

“ஆமாம் நியதி உங்க அக்கா சொல்றது கேளு…. ஆனா அவ மட்டும் என்னை ப்ரீயா விடமாட்டா… அதையும் கொஞ்சம் ஏன்னு கேளு…” 

அவர்கள் இருவர் பேசுவதைக் கேட்டு மற்றவர்கள் சிரிக்க, நிருபன் மட்டும் உணவு அருந்துவதில் கவனமாக இருந்தான். அவன் சாப்பிட்டு உடனே சென்று படுத்து உறங்கி விட, நியதி அறைக்கு வந்தவள், அவளும் சிறிது நேரத்தில் உறங்கி விட்டாள். 

மாலையில் இருந்து நிருபன் மீண்டும் அலுவலக வேளையில் முழுகிப் போனான். அவன் கோபமாக இருப்பதை உணர்ந்து நியதியும் அவனிடம் எப்போது சென்னை செல்கிறோம் என எதுவும் கேட்கவில்லை. 

அவள் தேவைப்படும் நேரத்தில் மட்டும் தான் அலுவலக வேலைப் பார்த்தாள். மற்ற நேரம் வீட்டினரோடு தான் நேரம் செலவு செய்தாள். 

“என்ன நியதி போர் அடிக்குதா?” காவ்யா கேட்க, 

“இல்லை கா… எப்ப இந்தக் குட்டி பையன் எழுந்துப்பான்னு பார்த்திட்டே இருக்கேன்.” என்றாள் உறங்கும் நிரஞ்சனின் மகனைக் காட்டி. 

“இவன் இப்ப நல்லா தூங்கி எழுந்துட்டு ராத்திரி என்னைத் தூங்கவே விட மாட்டான்.” காவ்யா புகார் சொல்ல, 

“நைட் வேணா நாங்க எங்க ரூம்ல வச்சுக்கிறோம். இவனோட சித்தப்பா விடியும் வரை வேலைதான் பார்த்திட்டு இருப்பாரு, நாங்க பார்த்துக்கிறோம். நீங்க இன்னைக்கு நைட் நல்லா தூங்குங்க.” 

கல்யாணம் ஆன புதுப் பெண் இப்படிச் சொன்னால் வேடிக்கையாக இல்லை. மற்றவர்கள் நிருபனை பார்த்தனர். 

“அடிப்பாவி இப்படி எல்லார் முன்னாடியும் மானத்தை வாங்கிறாளே…” என நிருபன் நினைக்க, 

“இன்னும் கொஞ்சம் பெரிசானதும், நீயே வச்சுக்கலாம். இப்ப பால் கேட்டு அழுவான் இல்ல…” எனக் காவ்யா சொல்ல, 

“ஓ… ஆமாம் மறந்துட்டேன். ஆனா நாங்கதான் ஊருக்கு போயடுவோமே…” நியதி வருத்தமாகச் சொல்ல, 

“நீங்க அங்க போனதும் எங்களை எல்லாம் மறந்திடுவ…” 

“அப்படியெல்லாம் எதுவும் இல்லை. எனக்கு இங்க இருக்கத்தான் பிடிச்சு இருக்கு. அங்க போனா, நாங்க ரெண்டு பேர் மட்டும் தனியா இருக்கணும்.”

“என்ன நியதி இப்படிச் சொல்லிட்ட? நான் இருக்கேன் டா உனக்கு. என்னை விட உனக்கு யார் வேணும்.” நிருபன் பாசத்தைப் பொழிய…நியதி அவனை அப்படியா என்பது போலப் பார்த்தாள். 

“என்னை நம்பலையா நீ?” 

“கல்யாணம் ஆனதுல இருந்து நீ லேப்டாப்பும் கையுமா தான் இருக்க…. இதுக்கு எதுக்கு டா அவசரமா கல்யாணம் பண்ண? நீ பண்றது எங்களுக்கே கடுப்பா இருக்கு, அவளுக்கு இருக்காதா?” என்றான் நிரஞ்சன். 

“அவளும் இதே வேலையில தான் இருக்கா… அவளுக்குப் புரியும்.” என நிருபன் சொல்ல, நியதி பதில் எதுவும் சொல்லவில்லை. அமைதியாக இருந்தாள். 

இரவு உணவு சாப்பிட்டு எல்லோரும் பேசிக் கொண்டு இருக்க, “அம்மா நாளைக்குக் காலையில நாங்க நியதி வீட்டுக்கு கிளம்புறோம்.” என்றான் நிருபன். 

“சனிக்கிழமை போறேன்னு சொன்ன.” ஜெயஸ்ரீ சொல்ல, 

“அவங்க வீட்ல ஒருநாள் கூடத் தங்கலைனா நல்லா இருக்காது இல்ல மா…”

“அவங்க போகட்டும் ஜெயஸ்ரீ.” ராஜமாணிக்கம் சொல்ல, ஜெயஸ்ரீயும் சரி என்று சொல்லிவிட்டார். 

“நம்ம வண்டியிலேயே போங்க. நான் டிரைவருக்குச் சொல்லிடுறேன்.” என்றான் நிரஞ்சன். 

மறுநாள் அவர்கள் கொண்டு செல்ல ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த பொடி வகைகளை ஜெயஸ்ரீ எடுத்து வைக்க, அவருக்கு மருமகள்கள் இருவரும் உதவி கொண்டு இருந்தனர். 

நியதி இரவு தாமதமாகத்தான் அறைக்கு வந்தாள். அவள் வருவதைப் பார்த்ததும் நிருபன் கணினியை மூடி வைத்து விட்டான். 

உடை மாற்றி வந்தவள், அவன் வேலைப் பார்க்காமல் இருப்பதைப் பார்த்து, ஏன் என்பது போலப் பார்க்க, 

“நான் உன்னைக் கவனிக்கலைன்னு, நீ ரொம்பப் பீல் பண்ற போலையே… அதுதான் வேலைப் பார்த்தது போதும்ன்னு மூடி வச்சிட்டேன்.” 

“நான் ஒன்னும் பீல் பண்ணலை… நீங்க வேலையே பாருங்க.” 

“இப்ப இப்படிச் சொல்லு… அங்க எல்லார் முன்னாடியும் என் மானத்தை வாங்கு.” 

“நீங்க வேலைப் பார்க்கிறது யாருக்கும் தெரியாத மாதிரி சொல்றீங்க.” 

“சரி உனக்காக இல்லை எனக்காகப் போதுமா… இப்ப நான் வேலை பார்க்கிற மூட்ல இல்லை.” 

“சரி அப்ப தூங்குங்க.” 

“நான் தூங்கிற மூட்ளையும் இல்லை.” நிருபனின் பார்வை நியதியை படப்படப்பாக்க… 

“இங்க வா…” என்றான். 

“நாளைக்கு ஊருக்கு போகணும்ன்னு சொன்னீங்க இல்ல… நான் எல்லாம் எடுத்து வைக்கிறேன்.” என்றவள், அலமாரியின் அருகே சென்று, அவள் பெட்டியில் பொருட்களை அடுக்க ஆரம்பிக்க, நிருபன் அவள் அருகே சென்றான். 

“எனக்கு உடம்பு சரி இல்லை.” என்றவள், அவன் கண்ணில் படுவது போல, நேப்கினை எடுத்து மேலே வைக்க, அவளை அணைக்கச் சென்றவன், அங்கேயே தேங்கி நின்றான். 

அவளைத் தன் பக்கம் திருப்பியவன், “எப்ப இருந்து?” எனக் கேட்க, 

“இன்னைக்கு மதியம் தான்.” 

“ஓ அதுதான் திரும்பக் குளிச்சியா?” 

“ம்ம்…” 

“சரி நீ ரெஸ்ட் எடு, நான் எடுத்து வைக்கிறேன்.” என்றவன், முதலில் நியதியின் பெட்டியை அடுக்கி விட்டு, தன்னுடையதை அடுக்க ஆரம்பித்தான். 

“இதோட நாளைக்குப் பிரயாணம் பண்ண உனக்குக் கஷ்ட்டமா இருக்குமா…” 

“கார்ல தான போறோம், தேவைப்படுற எடுத்ததில நிறுத்திக்கலாம்.” 

“நல்லவேளை… பிளைட்ல போற போது இல்லை.” 

“இப்ப என்ன நாளைக்கே கிளம்புறோம்.” 

“நீ முகத்தைத் தூக்கி வச்சிட்டு இருக்கிறது எனக்குப் பார்க்க முடியலை… அதோட நீ மனசு சந்தோஷமா பிளைட் ஏறினாத்தான் அங்கேயும் போய் நிம்மதியா இருப்ப.” 

“அப்ப உங்களுக்கு வர விருப்பம் இல்லை. எனக்காகத்தான் வர்றீங்க.” 

“நீயா எதாவது கற்பனை பண்ணிகிட்டா நான் பொறுப்பு இல்லை.” 

அவன் பேச்சில் நியதியின் முகம் வாடினாலும், வேறு எதுவும் வழக்காடாமல் மறுநாள் அணிய வேண்டிய ஆடையை எடுத்து வைத்து விட்டுப் படுக்கச் சென்றாள். 

அவள் அருகில் வந்து படுத்த நிருபன், அவள் முகம் பார்த்து, “கோபமா…” எனக் கேட்க… 

“இந்தக் கல்யாணத்துனால எனக்கு ஒரு நல்ல குடும்பம் கிடைச்சிருக்கு, நான் சந்தோஷமா இருக்கேன். ஆனா உங்களுக்கு அப்படி இல்லையோன்னு தோணுது.” 

“நான் சந்தோஷமா இல்லைன்னு யாரு சொன்னா உனக்கு. உன் குடும்பத்து ஆட்கள் எப்படி இருந்தாலும், இனி அவங்களும் என் குடும்பம் தான்.” 

“எனக்கு அவங்களோட சரளமா பேச கொஞ்ச நாட்கள் ஆகலாம். ஆனா எல்லாம் சரி ஆகிடும் நம்பு.” 

நியதி அமைதியாகக் கண்ணை மூடிக்கொள்ள… 

“வயிறு எதுவும் வலிக்குதா நியதி….” நிருபன் கேட்டதற்குப் பதில் சொல்லாமல், அவன் கையை எடுத்து தனது கீழ் முதுகில் வைத்து நியதி அழுத்த, புரிந்து கொண்டவன் அவளுக்கு மென்மையாக அழுத்தி விட்டான். 

அவள் உறங்கியவுடன் தனது மடிக்கணினியுடன் வெளியே சென்று விட்டான்.
அவன் வேலையை முடிக்கும்போது விடியற்காலை ஆகிவிட்டது. 

தனது வேலையை முடித்து விட்டதாகவும், இனி திங்கள் அலுவலகம் வந்து மீதி வேலையைப் பார்ப்பதாகவும் அலுவகத்திற்கு ஒரு மின்னஞ்சல் தட்டி விட்டு உறங்க சென்றான். 

நியதி காலையில் தலைக்கு ஊற்றி, பிரயாணம் செய்யத் தோதான புடவையைக் கட்டிக் கொண்டு கீழே வந்த போது, ஜெயஸ்ரீயும் காவ்யாவும் வித விதமாகக் காலை உணவு தயாரிப்பில் இறங்கி இருந்தனர். 

நியதி அவர்களுக்கு உதவச் செல்ல, “நீ போய் ஊருக்கு போக எடுத்து வைக்கிற வேலைப் பாரு… இங்க நாங்க பார்த்துக்கிறோம்.” என அனுப்பி வைத்தனர். 

நிருபனும் சிறிது நேரத்தில் கிளம்பி வந்து விட, அவனின் பாட்டி இருவரையும் அழைத்து உட்கார வைத்து பேசினார். 

“உங்க அப்பா ஊர்ல பெரிய மனுஷன், ஆனா நீ வேற ஆளுங்க பெண்ணை விரும்பினாலும், மறுப்பு சொல்லாம கல்யாணம் பண்ணி வச்சான்.” 

“கல்யாணம் பண்ணிக்கிறது பெரிசே இல்லை. நீங்க ரெண்டு பேரும் நல்லா சேர்ந்து வாழ்ந்து காட்டணும். வேறு யாரும் ஒரு பேச்சு பேசுற மாதிரி நடந்துக்காதீங்க.” என அறிவுரை சொல்ல, இருவரும் சம்மதமாகத் தலையசைத்தனர். 

காலை உணவு முடிந்து, நல்ல நேரத்தில் கிளம்ப வேண்டும் என்று பத்தரை மணிக்குள் எல்லோரிடமும் விடைபெற்றுக் காரில் ஏறிக் கொண்டனர். மனமே இல்லாமல் தான் நியதி அங்கிருந்து கிளம்பினாள். 
கிளம்பும் போது அழ வேண்டாம் என்று ராஜ மாணிக்கம் எச்சரித்ததால்… ஜெயஸ்ரீ தன்னை அடக்கிக் கொண்டு இருவருக்கும் விடைகொடுத்தார். 
“அடுத்த தடவை வரும் போது நிறைய நாள் இருக்கணும்.” ஜெயஸ்ரீ சொல்ல, 
“நீங்க அங்க வாங்க மா.” என்றான் நிருபன்.
“நீங்க நல்ல செய்தி சொன்னாத்தான் வருவேன்.” என்றார் ஜெயஸ்ரீ பதிலுக்கு, இப்படி கார் கிளம்பும் வரை ஒருவர்மாற்றி மற்றவர் பேசிக்கொண்டு இருந்தனர்.

சிறிது தூரம் சென்ற பிறகுதான், நியதி அவள் வீட்டினரை அழைத்துத் தாங்கள் அங்கே வர கிளம்பிவிட்டோம் எனச் சொன்னாள். 

பரவயில்லையே ஒருநாள் முன்னாடியே வருகிறார்களே என நியதியின் பெற்றோருக்கு மகிழ்ச்சி. 

தாமதமானாலும் மதிய உணவை வீட்டிலேயே வந்து அருந்தும்படி சொல்லிவிட்டு வைத்தனர். 

“நீ படுத்து தூங்கு.” என்றவன், முன்னே சென்று அமர்ந்து கொண்டான். 

நியதியும் படுத்து நன்றாக உறங்கி விட்டாள். நடுவில் ஒரு இடத்தில் இறங்கி நொறுக்கு தீனி சாப்பிட்டு ஜூஸ் மட்டும் குடித்தவர்கள், மூன்று மணி போல நியதியின் வீட்டிற்குச் சென்று சேர்ந்தனர். 

நிருபன் தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு, காரை அப்போதே திருச்சி அனுப்பி விட்டான். 

இவர்கள் சென்றபோது, வீட்டில் நியதியின் பெற்றோர் தவிர வேறு யாரும் இல்லை. 

சமைத்து வைத்த உணவை சாப்பிட்டுவிட்டு, சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, நிருபன் நியதியை அழைத்துக் கொண்டு ஷாப்பிங் சென்றான். 

சில உடைகள் மற்றும் தேவையான பொருட்கள் வாங்கிவிட்டு, இரவு உணவையும் வெளியேவே முடித்துக் கொண்டு தாமதமாகத்தான் வீடு வந்து சேர்ந்தனர். 

அப்போது வீட்டில் எல்லோருமே இருந்தனர். சேகர் மற்றும் சுமதியின் கணவன் சர்வேஷுடன் சிறிது நேரம் உட்கார்ந்து பொதுவாகப் பேசிய நிருபன், அலுப்பாக இருக்கிறது உறங்க வேண்டும் என அறைக்குள் சென்றுவிட்டான். 

மறுநாள் காலை தாமதமாக எழுந்து கிளம்பியவர்கள், காலை உணவை முடித்துக் கொண்டு வங்கிக்கு சென்றனர். அந்த வங்கியில் தான் நியதி வீட்டிற்காக லோன் எடுத்து இருந்தாள். 

இன்னும் கொஞ்சம் கூடுதலாகப் பணம் கட்டி, சீக்கிரம் தவணை முடிவது போல ஏற்பாடு செய்துவிட்டு, நியதியை மட்டும் வீட்டில் விட்டவன், அவன் சென்னையில் இதற்கு முன் நண்பர்களுடன் தங்கி இருந்த வீட்டிற்குச் சென்று விட்டான். நியதிக்கும் அவள் வீட்டினரோடு இருக்க நேரம் கிடைத்தது. 
சுமதியின் மகள் மற்றும் அண்ணனின் பிள்ளைகளுக்கு நியதி தாராளமாகவே பணம் கொடுக்க, வசுமதி சுமதி இருவரும் மகிழ்ந்து தான் போனார்கள். 
மாலை இருள் சூழந்த நேரத்தில் தான் நிருபன் வீடு திரும்பினான். அதன்பிறகு எல்லாம் எடுத்து வைத்து, இரவு உணவு முடித்துக் கிளம்பத்தான் நேரம் சரியாக இருந்தது. 

மருமகன் இந்த அளவிற்குத் தங்கள் வீட்டில் இருந்ததே நியதியின் பெற்றோருக்கு மகிழ்ச்சி தான். 

இந்த மாதம் இறுதியில் வீடு காலி செய்வதாக நாதன் சொல்ல, “அப்படி அவசரமா காலி பண்ணனும்ன்னு அவசியம் இல்லை. பசங்க இங்க இருந்து ஸ்கூல் போவாங்க இல்லையா…. நடுவுல மாத்தினா கஷ்ட்டமா இருக்கும். இந்த வருஷம் முடிச்சிட்டு வேணா காலி பண்ணுங்க.” என்றான் நிருபன். 

அதைக் கேட்டு சேகர் வசுமதி இருவரின் முகமும் மலர, “பரவாயில்லை இருக்கட்டும், அவங்க எடுத்த முடிவுபடியே நடக்கட்டும்.” என்றாள் நியதி பட்டென்று. 

“அந்த வீடும் தூரம் இல்லை. பசங்களை நாங்களே தான் ஸ்கூல்ல கொண்டு போய் விடுறது, அங்க இருந்தும் ஸ்கூல் கிட்டதான்.” என்றார் நாதன். 

நியதி மேற்கொண்டு பேச இடம் கொடுக்காமல், கிளம்பத் தயராக… அந்தப் பேச்சு அதோடு முடிந்துவிட்டது. 

எல்லோரிடமும் விடைபெற்று, விமான நிலையம் செல்ல வாடகை காரில் ஏறினர். 

“அவங்க அந்த வீட்ல இருந்தா உனக்கு என்ன பிரச்சனை?” என நிருபன் கேட்க, 

“நீங்க என் குடும்பத்தை வாழ வச்சதா இருக்க வேண்டாம்னு தான் சொன்னேன்.” என்றாள் நியதி பட்டென்று. 

“என்ன வார்த்தை பேசுற நீ… நான் அவங்களை வாழ வைக்கிறேனா…. என்னை அவ்வளவுதான் நீ புரிஞ்சு வச்சிருக்க இல்ல… உன்னோட பேசுறதே வேஸ்ட்.” என்றவன், ஜன்னல் பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டான். 

நிருபன் தன் குடும்பத்தைக் கீழாகப் பார்க்கிறானோ என நியதிக்கு  எண்ணம். அதனால்தான் பட்டென்று அப்படிப் பேசி விட்டாள்.





Advertisement