Advertisement

கண்ணான கண்ணே 


அத்தியாயம் 11


மறுநாள் குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்குச் செல்வதால்…அனைவரும் காலையில் எழுந்து பரபரப்பாகக் கிளம்பிக் கொண்டு இருந்தனர். காவ்யா குழந்தையைத் தயார் செய்து, அவளும் கிளம்ப…. ஜெயஸ்ரீயும் நியதியும் சேர்ந்து மதியத்திற்குக் கொண்டு செல்ல கட்டுச் சாதம் கிளறினார்கள். 

“உங்க மாமா இருக்காரு பார்த்தியா? அவருக்கு வெளிய சாப்பிடுறதே பிடிக்காது.” 

அப்போது உள்ளே வந்த நிருபன், “ஏன் மா இந்த வேலையெல்லாம் இழுத்து வச்சுக்கிறீங்க. மதியம் வெளியவே சாப்பிட்டு இருக்கலாமே…” என்றான். 

“அதைத் தான் உன் பொண்டாட்டிகிட்ட சொல்லிட்டு இருக்கேன். வெளிய சாப்பிட உங்க அப்பா ஒத்துப்பாரா…” ஜெயஸ்ரீ சொல்லிக் கொண்டிருக்கும் போதே, உள்ளே வந்த ராஜ மாணிக்கம். 

“ஜெயஸ்ரீ, புளி சதத்துக்குத் தொட்டுக்கப் புதினா துவையல் இருக்கு தானே….அதோட கொஞ்சம் ஊறுகாயும் மறக்காம எடுத்துக்கோ…” எனச் சொல்லிவிட்டு செல்ல, பார்த்தியா என ஜெயஸ்ரீ மகனுக்கு ஜாடை காட்டினார். 

“எனக்கும் இது மாதுரி வீட்ல இருந்து எடுத்திட்டுப் போய்ச் சாப்பிட ரொம்பப் பிடிக்கும். அதுவும் புளி சாதம் ரொம்பப் பிடிக்கும்.” என நியதி சொல்ல, 

“உனக்குப் பிடிக்காத சாப்பாடுன்னு எதாவது இருக்கா?” என்றான் நிருபன். 

“அவளை ஏன் டா கேலி பண்ற?” ஜெயஸ்ரீ மருமகளுக்குப் பரிந்து கொண்டு வர… 

“அம்மா உங்களுக்குத் தெரியாது இவளைப் பத்தி. வீட்ல இருந்தாலும் சாப்பிடுவா, வெளிய போனாலும் சாப்பிடுவா…. ஊர்ல ஒரு சாப்பாடு கடையை விடுறது கிடையாது. சரியான சாப்பாட்டு ராமி.” நிருபன் சொல்லச் சொல்ல நியதியின் பார்வையில் சூடு ஏறிக் கொண்டே இருந்தது. 

அதைக் கவனித்த நிரஞ்சன், “தம்பி நீ வெளிநாட்டில இருக்க நியாபகம் இருக்கா… அங்க நியதி கூடத் தான் நீ இருக்கணும். பொண்டாட்டி கிட்ட கோவிச்சிக்கிட்டு அம்மா வீட்டுக்கு வர உனக்கு அம்மா வீடும் கிட்ட இல்ல….” என எச்சரிக்க, 

“இப்ப எனக்கே சமைக்கத் தெரியும். நான் யாரை நம்பியும் எல்லாம் இல்லை…” என்றான் நிருபன் அலட்சியமாக. 

“நல்லது தானே…. எனக்கும் சேர்த்து சமைச்சிடுங்க..” என்றாள் நியதி கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல். 

“அம்மா பாருங்க உங்க பையனை சமைக்கச் சொல்றா?” 

“நீ இப்படிப் பேசினா அப்படித்தான் சொல்வா.” மாமியார் தன் பக்கம் பேச… நியதி நிருபனை பார்த்துக் கேலியாகச் சிரித்தாள். 

“தேவையாடா இந்த அசிங்கம்.” என நிரஞ்சன் கேலி செய்ய… 

“விடு விடு இதெல்லாம் அரசியல்ல சாதாரணம்.” என நிருபன் தன் சட்டையைத் தட்டி விட…எல்லோரும் சிரித்தபடி கோவிலுக்குக் கிளம்பினர். 
பாட்டி தாத்தாவையும் தங்களோடு அழைத்துக் கொண்டு சென்றனர். 

அவர்களின் குல தெய்வ கோவில் மரங்கள் சூழ்ந்த இடத்தில் இருந்தது. முறையாகப் பூஜை செய்து சாமி கும்பிட்டு, கொண்டு வந்த உணவை எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டனர். 

ராஜ மாணிக்கம் ஊறுகாய் கேட்க, “நான் எடுத்து வைக்க மறந்துட்டேங்க.” எனப் பயந்தபடி ஜெயஸ்ரீ சொல்ல, 

“நான் எடுத்து வச்சேன் அத்தை.” என நியதி பையில் இருந்து எடுத்து தந்தாள். 

“நான் சொல்லலை, நம்ம ஆளு இதுல எல்லாம் கரெக்ட்டா இருப்பா.” என நிருபன் நியதியைப் பார்த்து புன்னகைக்க, 

தன் மாமனாருக்கு வைத்து விட்டு நியதி தனக்கும் கொஞ்சம் ஊறுகாய் வைத்துக் கொள்ள, எனக்கு என நிருபன் நியதியின் தட்டில் இருந்து ஊறுகாயை எடுக்கச் செல்ல, நியதி அவன் கையைத் தட்டி விட்டாள். 

“உங்களுக்குக் கிடையாது?” 

“ஏன் டி?” 

“உங்களுக்குத் தான் சாப்பிடவே பிடிக்காதே….” என்றவள், அவன் கையில் இருந்த சாப்பாடு தட்டையும் வாங்கி விட்டாள். 

“என்னைக் கிண்டல் பண்ணீங்க இல்ல.. பட்டினியா இருங்க.” என்றாள். அவர்கள் இருவரையும் கண்டும் காணாமல் மற்றவர்கள் சாப்பிட, 

“சரி போ…” என்றவன், நியதி அவள் வாயில் இட கொண்ட சென்ற உணவை, அவள் கையை இழுத்து அவன் வாயில் போட்டுக் கொண்டான். 

“இது கூட நல்லா இருக்கே…” என நிரஞ்சன் சிரிக்க, 

“இந்தாங்க…” என நியதி அவன் தட்டை கொடுத்து விட்டாள். நிருபன் புன்னகையுடன் சாப்பிட ஆரம்பித்தான். 

“நீ இவனை எப்படித் தனியா வச்சு சமாளிப்ப?” ஜெயஸ்ரீ கேட்க, 

“இவர் இவ்வளவு பேசுவாருன்னே எனக்கு இங்க வந்துதான் தெரியும். அங்க ரொம்ப அமைதியா தான் இருந்தார்.” என்றாள் நியதி. 

“ஏன் டா அப்படி இருந்த?” ஜெயஸ்ரீ தன் இளைய மகனைப் பார்த்து கேட்க, 

“ரொம்பப் பேசி எதாவது உளறிட்டா சோறு கிடைக்காது. அதனால தான்.” என்றான். 

“அப்ப பயம் இருக்கு. நியதி இங்க இருக்க வரை பேசிட்டுப் போறான் விடு. அங்க போனதும் நல்லா கவனி.” நிரஞ்சன் சொல்ல… 

“நல்லா கவனிக்க வேண்டியது தான்.” என நியதி அழுத்தி சொன்ன விதத்தில், 

“என் தம்பி கொஞ்சம் நல்லவன் தான். அடிக்கிறதுன்னா வீட்டுக்குள்ள மட்டும் வச்சு அடி.” என்றான் நிரஞ்சன். 

“நல்ல அண்ணன் எனக்கு. அண்ணி நீங்க அதுதான் செய்றீங்களா?” 

“டேய் ! உங்களைப் பத்தி பேசும்போது, எங்களை ஏன் டா இழுக்கிற?” 

“நீ பதறுவதைப் பார்த்தா, தினமும் வாங்குவ போலிருக்கே…” நிருபன் சொன்னதைக் கேட்டு எல்லோரும் சிரிக்க, காவ்யா வெட்கப்பட்டாள். 

அரட்டை அடித்தபடி சாப்பிட்டு முடித்து, வீடு திரும்ப மூன்று மணி ஆகிவிட்டது. வந்ததும் ஆளுக்கு ஒரு பக்கம் படுத்து நன்றாக உறங்கி எழுந்தனர். 

மாலை நிருபன் ஒரு பக்கமும், நியதி ஒரு பக்கமும் மடிக்கணினியில் தங்கள் வேலையைப் பார்க்க அமர்ந்து விட… ராஜமாணிக்கமும் நிரஞ்சனும் வெளி வேலையாகச் சென்று விட, ஜெயஸ்ரீயும் காவ்யாவும் இரவு உணவு செய்தனர். 

இரவு உணடுவிட்டு இருவரும் மீண்டும் கணினியின் முன்பு உட்கார்ந்து விட, வீட்டினர் இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் பார்ப்பதை உணர்ந்த நியதி தங்கள் அறைக்குச் சென்று விட… நிருபன் மட்டும் ஹாலில் உட்கார்ந்து வேலைப் பார்த்துக் கொண்டு இருந்தான். 

இங்கே வாங்க எனத் தன் கைபேசியில் இருந்து நிருபனுக்கு நியதி செய்தி அனுப்பினாள். 

தனது மடிக்கணினியுடன் அறைக்கு வந்தவன், “எதுக்குக் கூப்பிட்ட?” என்றான். 

“இங்க இருந்து வேலைப் பாருங்க.” 

“எனக்கு இங்க உட்கார்ந்தா தூக்கம் வரும்.” 

“வீட்ல எல்லோரும் நம்மையே பார்க்கிறாங்க. ஒழுங்கா இங்க உட்கார்ந்து வேலைப் பாருங்க.” 

“ஏன் நம்மையே பார்க்கணும்?” 

“ம்ம்… கல்யாணம் பண்ணியும் தனித் தனியா உட்கார்ந்து வேலைப் பார்த்திட்டு இருந்தா, அப்படித்தான் பார்ப்பாங்க.” 

“தனித் தனியா தான் வேலைப் பார்க்க முடியும்.” என்றவனுக்கு, அவள் சொல்ல வருவது புரிந்து விட, “அப்ப நாம சேர்ந்து பார்க்கிற வேலை எதாவது இருக்கா என்ன?” எனத் தெரியாதது போலக் கேட்டாலும், அவன் பார்வையில் இருந்த ஆர்வம் அவனைக் காட்டிக் கொடுக்க, 

“அது எனக்குத் தெரியாது…” என்றவள் உறங்க தயாராக… 

“ஹே நியதி சொல்லு…” என நிருபன் வம்பு செய்ய…. 

“எனக்குத் தெரியும், உங்களுக்கு வேலைப் பார்த்தே ஆகணும்ன்னு, சும்மா என வாயை பிடுங்க வேண்டாம்.” 

“உன் வாயை நான் எங்க பிடுங்கினேன்…ஆரம்பிச்சா நிறுத்தவே முடியாதுன்னு தான், நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.” 

“போதும் வேற பேசலாம்.” என்றவள், “ஆமாம் எப்ப எங்க வீட்டுக்கு போறோம்.” என்றாள். 

“சனிக்கிழமை ராத்திரி தான நமக்கு ப்ளைட். காலையில போகலாம்.” 

“எங்க அப்பா காலையிலேயே போன் பண்ணி எப்ப வர்றீங்கன்னு கேட்டார். ஒரு நாள் கூட அங்க தங்கலைனா தப்பா நினைக்க மாட்டாங்களா?” 

“அப்படியா சொல்ற? என்ன திடீர் அக்கறை உன் மேல…” நிருபன் கேட்க, நியதி முகம் கருத்துப் போனது. 

“என் மேல அக்கறை இல்லைன்னு உங்களுக்குத் தெரியுமா?” 

“நான்தான் பார்த்தேனே உங்க வீட்டு ஆளுங்க அக்கறையை. நீ கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்னதும், அவங்களும் அப்படியே விட்டாச்சு. இதுதான் அக்கறை இருக்கிறவங்க செய்யுற வேலை.” 

“உங்க வீட்டு ஆளுங்க ஒரு முயற்சியும் செய்யலை….நிரஞ்சன் மட்டும் வந்து பேசலைனா… இப்ப நம்ம கல்யாணம் நடந்தே இருக்காது.” 

“இதுதான் உங்களுக்குக் கோபமா?” 

“அது மட்டும் இல்லை. இன்னொரு பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணனும்ன்னு தெரியும் தானே… அப்ப அவ கல்யாணத்துக்குச் சேர்க்கனும்ன்னு தெரியாதா…” 

“உன்னை என்ன நிலைமையில விட்டிருந்தாங்க உங்க வீட்ல.” 

“அவங்கதான் எதுவும் பண்ணலை… ஆனா தானா வந்த சம்பந்தத்தையும் உன் அண்ணாவும் தங்கையும் கெடுக்கத் தான பார்த்தாங்க. என்னால அவங்களோட எல்லாம் பொய்யா கூடச் சிரிச்சு பேச முடியாது.” 

நிருபன் தெளிவாகத் தன் மனதை சொல்லிவிட, நியதிக்கு தான் வருத்தமாகப் போய்விட்டது. 

“நான் இதுக்குதான் சொன்னேன், எங்க குடும்பத்து மேல உங்களுக்கு மரியாதை இருக்காது. இந்தக் கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்னேன். இப்ப நான் சொன்ன மாதிரியே ஆகிடுச்சு பார்த்தீங்களா?” 

“எப்ப பாரு இது ஒன்னு சொல்லிடு கல்யாணம் வேண்டாம்னு.”

“இப்படி அடிச்சு பிடிச்சுக் கல்யாணம் பன்னதுனாலதான், இந்தக் கல்யாணம் நடந்தது. அதை முதல்ல தெரிஞ்சிக்கோ.” 

“எங்க வீட்லயும் இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சுக் கல்யாணம் பண்றதா தான் இருந்தாங்க.” 

“உங்க வீட்ல தான, பண்ணி இருப்பாங்க.” என நிருபன் நக்கலாகச் சொல்ல, நியதிக்குக் கோபம் வந்துவிட்டது. 

“எங்க வீட்டை பத்தி தப்பா பேசுறதுன்னா என்னோட பேசாதீங்க.” என்றவள், திரும்பிப் படுத்துக் கொண்டாள். 

நிருபனுக்கும் அவளைச் சமாதனம் செய்ய நேரமில்லை. அலுவலக வேலை நினைவுக்கு வர…. விளக்கை அணைத்துவிட்டு மடிக்கணினியுடன் வெளியே வராண்டாவுக்குச் சென்று விட்டான். 

நியதிக்கும் உறக்கம் வரவில்லை. அவளும் அலுவலக வேலைப் பார்க்க ஆரம்பித்து விட்டாள். 

அவளுக்கு ஒன்றும் அப்படி முக்கியமான வேலை இல்லை. ஆனால் நிருபனுக்கு அப்படி இல்லை. அடுத்த வாரத்திற்குள் முடிக்க வேண்டிய வேலை இருக்கிறது. 

வெகு நேரம் ஆகியும் நிருபன் வரவில்லை. நியதி படுத்து உறங்கி விட்டாள். காலை அவள் எழுந்து கொண்ட போது, நிருபன் உறங்கிக் கொண்டு இருந்தான்.
அவளைக் கைப்பேசியில் அழைத்து, எப்போது இங்கே வருகிறீர்கள் எனக் கேட்ட பெற்றோரிடம் என்ன சொல்வது என்று தெரியாமல். 

“அவர் இங்க ஆபீஸ் வேலை தான் பார்த்திட்டு இருக்கார். சனிக்கிழமை காலையில தான் வருவோம்ன்னு நினைக்கிறேன்.” எனச் சொல்லி வைத்து விட்டாள். 

நாதனுக்கும் பத்மாவுக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது.
“என்ன உங்க சம்பந்தி வீட்ல உங்களை மதிக்கலையா?” எனச் சேகர் நக்கலாகக் கேட்க, 

“எப்படி மதிப்பாங்க? நாம செய்ய வேண்டியது எல்லாம் அவங்க செஞ்சி கல்யாணத்தைப் பண்ணி இருக்காங்க.” 

“மாப்பிள்ளைக்கு அவங்க அண்ணன் எவ்வளவு பொறுப்பா இருந்து எல்லாம் செஞ்சார். நீ பொறுப்பா இருந்திருந்தா எங்களுக்கு ஏன் இந்த நிலைமை?” 

“உன் பேச்சை கேட்டு வீடு காருன்னு வாங்கி, நியதி தான் பாவம். இப்ப மாப்பிள்ளை மட்டும் பணம் தரலைனா, நகை கூட வாங்கி இருக்க முடியாது.” 

“நியாயமா பார்த்தா என்னோட பணத்துல தான நியதிக்குக் கல்யாணம் பண்ணனும். நான் ஒரு அப்பானா என் பெண்ணுக்கு எதுவும் செய்யலை… அப்ப நியதி வீட்ல எப்படி நம்மை மதிப்பாங்க.” நாதன் மிகுந்த கவலையுடன் சொல்ல, சேகர் தலைகுனிந்தான். 

“நம்ம வீட்டுக்கு வரலைனாலும் பரவாயில்லை. நியதியை நல்லா வச்சிகிட்டா போதும்.” என்றார் கலங்கிய கண்களைத் துடைத்தபடி பத்மா. 

“எங்களுக்குச் செய்யக் கூடாதுன்னு இல்லை அத்தை. எங்களுக்கும் ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க. நாங்க இன்னைக்குச் சேர்த்து வைக்கலைனா, நீங்க இப்ப நியதிக்குச் செய்ய முடியலைன்னு வருத்தபடுற மாதிரி தான் நாங்களும் வருத்தப்படணும்.” வசுமதி புத்திசாளித்தனகமாகப் பேசுவதாக நினைத்து பேச….

“அப்படி விவரமா இருக்கிறவ, உன் புருஷன் சம்பாத்தியத்தைத் தான செலவும் பண்ணனும், நாத்தனார் பணத்தை அனுபவிச்சு இருக்கக் கூடாது.” எனப் பத்மா நறுக்கென்று திருப்பிக் கொடுக்க, 

“விடு இனி பேசி என்ன ஆகப்போகுது. நாமும் இனி மருமகளைப் போலப் புத்திசாலியா இருப்போம்.” என்றார் நாதன். வசுமதிக்கு முகம் அஷ்ட்டகோணல் ஆனது. 

“டேய் நீயும் நியதியும் எங்காவது வெளியில போயிட்டு வரக் கூடாது.” ஜெயஸ்ரீ சொன்னதும், சாப்பிட்டுக் கொண்டிருந்த நிருபன், எனக்கு ஆபீஸ் வேலை முடிக்கணும். அங்க போய் நாங்க ரெண்டு பேரும் தனியத்தானே இருப்போம், அப்ப போயிக்கிறோம்.” என்றான். 

“என்னவோ பண்ணு.” என ஜெயஸ்ரீ உள்ளே சென்று விட, சாப்பிட்டுக் கைகழுவி வந்த நிருபன், மூன்று லட்ச்சத்துக்கு செக் எழுதி தன் தந்தையிடம் கொடுத்தான். 

“என்ன டா இது?” 

“கல்யாண செலவுக்கு நானும் கொடுக்கணும் இல்லப்பா.” என்றான். 

“என் பையனோட கல்யாணத்தைப் பண்ண முடியாத நிலைமையில நான் இல்லை டா….” ராஜ மாணிக்கம் சொல்ல, 

“அப்பா அதுக்காக என் பொண்டாட்டிக்கு தாலி வாங்கின செலவு எல்லாம் நீங்க செய்யலாமா, நான்தான் செய்வேன்.” என்றான். 

“என் பையன் கல்யாணம் நான்தான்டா பண்ணணும்.” என்றார் ராஜ மாணிக்கமும் பிடிவாதமாக. 

தந்தையும் தம்பியும் வழக்காடுவதைப் பார்த்து சிரித்தபடி நிரஞ்சன் அமர்ந்திருந்தான்.

“நீ அப்பாவை வாங்கிக்கச் சொல்லு.” என நிருபன் அவனிடம் சொல்ல, 

“இதுல என்னை இழுக்காதீங்க.” என்றான் நிரஞ்சன். 

“சரி நீ பணம் கொடுக்கணும்ன்னு ஆசைப்பட்டா, நீயும் உங்க அண்ணனும் ஆளுக்கு ஒரு பத்து லட்சம் கொடுங்க. இருபது லட்ச்சதுக்கு ஒரு இடம் வருது, உன் பேர்லையும் உன் அண்ணன் பேர்லையும் வாங்கிப் போடுவோம். பின்னாடி நல்ல விலை போகும். இல்லைனா நாமலே கூட, கடை கட்டி வாடகைக்கு விடலாம்.” தந்தை சொன்னதற்கு நிருபன் உடனே பதில் சொல்லவில்லை. 

“என்ன டா பதிலைக் காணோம்.” என ராஜா மாணிக்கம் கேட்க, 

“ஒரு ஆறு மாசம் போகட்டும் பா வாங்கலாம்.” என்றான்.
அவர்கள் பேசுவது கேட்டு அங்கே வந்த ஜெயஸ்ரீ, “சென்னையில இருந்தவரை சம்பளத்தை அப்படியே உங்க அப்பாகிட்ட தான் கொடுத்த, இப்ப வெளிநாடு போனதுல இருந்து தான் கொடுக்கலை.” 

“அங்க வாங்கின சம்பளத்தை என்ன பண்ண?” எனக் கேட்டார். 

“இருக்கு மா..” 

“இருந்தா கொடுக்க வேண்டியது தான…” 

“நீ கையில வச்சிருந்தா செலவு பண்ணிடுவ, அப்பா உனக்கு நல்லது தான் பண்ணுவாங்க. ஒழுங்கா அப்பா சொல்றது கேளு.” என ஜெயஸ்ரீ கண்டிப்பாகச் சொல்ல, 

“சரி தரேன், விடுங்க.” என நிருபன் அங்கிருந்து எழுந்து சென்றான். 

நியதிக்கு புரிந்து விட்டது, நிருபன் தனக்குப் பணம் கொடுத்ததை வீட்டில் சொல்லவில்லை. 

ஐயோ ! இனிமேல் தெரிந்தால் என்ன ஆகுமோ எனப் பயமாக இருந்தது. 

நிருபன் மீது கோபமாக வந்தது. அறைக்குச் சென்றவள், 

“நீங்க எனக்குப் பணம் கொடுத்ததை வீட்ல சொல்லலையா?” 

“போச்சு தெரிஞ்சா என்னைத் தானே கேவலமா நினைப்பாங்க.” 

“ஏன் இப்படியெல்லாம் பண்ணீங்க?” 

“இந்த மாதிரி கல்யாணம் பண்ணதுக்குக் கல்யாணம் பண்ணாமலே இருந்திருக்கலாம்.” 

அதுவரை அவள் பேசுவதைக் கண்டுகொள்ளாமல் இருந்தவன், கடைசியாக அவள் சொன்னதைக் கேட்டதும், ருத்ர அவதாரம் எடுத்தான். 

“ஏய் ! எப்ப பாரு இது ஒன்னு சொல்லிடு.”

“உன்னை மாதிரி என்னால மனசு எல்லாம் மாத்திக்க முடியாது புரியுதா?” 

“உனக்கு வேணா உன் குடும்பத்துக்கு அப்புறம் நானா இருக்கலாம். ஆனா எனக்கு அப்படி இல்லை. அதனாலதான் எப்படியாவது கல்யாணம் முடிஞ்சா போதும்ன்னு நினைச்சேன்.” 

“இது என்னோட பிரச்சனை, நான் பார்த்துகிறேன். நீ தலையிடாத புரியுதா.” என்றவன், உடைமாற்றிக் கொண்டு வெளியில் செல்லக் கிளம்பினான். 

அவன் கத்தியதில் நியதி இன்னும் திகைத்து போய் நின்று கொண்டு இருக்க, அறையின் வாயில் வரை சென்றவன், திரும்பி அவளிடம் வந்து, “இன்னொரு தடவை, அதுக்குத்தான் கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்னேன், இதுக்குத்தான் வேண்டாம்ன்னு சொன்னேன்னு ஆரம்பிச்ச, என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.” என எச்சரித்து விட்டுச் சென்றான். 

என்னையே மிரட்டிட்டுப் போறான். அவன் வீட்ல மட்டும் எதாவது சொல்லட்டும், அப்புறம் இருக்கு அவனுக்கு என மனதிற்குள் நியதி திட்டுக் கொண்டு இருந்தாள். 

கணவன் பார்த்துக் கொள்வேன் என்றாலும், என்னாகுமோ என மனதிற்குள் திக் திக்கென்று, நியதிக்கு அடித்துக் கொண்டு இருந்தது.

Advertisement