Advertisement

கண்ணான கண்ணே 


அத்தியாயம் 10 

நியதியின் திருமணம் நிச்சயமாகி இருக்கிறது எனத் தெரிந்தும் சேகர் வசுமதி சுமதி மூவரும் எந்த மகிழ்ச்சியும் காட்டாமல், எதோ இவர்கள் கைசாசு போட்டுக் கல்யாணம் செய்வது போல முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருந்தனர். அதைக் கவனித்த நாதனும் பத்மாவும் கவலை கொண்டனர். 

“அந்த இடத்தை விற்களை. நீ அவங்களுக்காகக் கொடுத்திருக்கேன்னு சொல்லிடவா…” என நாதன் கேட்க, 

“பணத்தைக் காட்டி எல்லாம் அவங்க என்கிட்டே பாசமா இருக்க வேண்டாம் பா… இனிமேவாவது நம்ம சுய சம்பாத்தியத்துல முன்னுக்கு வரணும்ன்னு அவங்களுக்கு எண்ணம் வரனும்.” 

“இடம் உங்க பேர்ல இருக்கு. அது அப்படியே இருக்கட்டும். இப்ப அவங்ககிட்ட எதுவும் சொல்லாதீங்க. பின்னாடி பார்த்துக்கலாம்.” என்றாள் நியதி. அவள் சொல்வது தான் சரி என்றார் பத்மாவும். 

“இப்பவே சொன்னா… அதை வித்துப் பணத்தைத் தர சொல்லி கேட்பாங்க. நியதி சொல்றது போலப் பின்னாடி பார்த்துக்கலாம்.” 

நிருபன் சொன்னது போலப் பணத்தை அனுப்பி இருந்தான். நியதி தேவையான நகைகளை வாங்கி இருந்தாள். 

“கல்யாணம் பண்ண பணம் இல்லை. இடத்தை விற்கப் போறோம், அது இதுன்னு கதை சொன்னீங்க. இப்ப இந்த நகை எல்லாம் எப்படி வந்தது?” 

“அப்ப இவ பணத்தைப் பதுக்கி வச்சிட்டு தான். ஒன்னும் இல்லாத மாதிரி நடிச்சாளா.” எனச் சுமதி பழி சொல்ல, நியதி அலட்டிக்கொள்ளவே இல்லை. 

“எப்படி இருந்தா உனக்கு என்ன? அது நான் சம்பாதிச்ச பணம். நான் பதுக்கி வைக்கிறேன், இல்ல செலவு பண்றேன். அது என்னோட இஷ்ட்டம்.” 

நியதியின் பதிலில் சுமதி இன்னும் கொதித்துப் போனாள். 

“என்ன பெரிய இடத்தில கல்யாணம் பண்ணிட்டு போறோம்ன்னு திமிரா?” 

“அன்னைக்கு எதோ கல்யாணம் வேண்டாம்ன்னு நடிச்ச, மானம் இருக்காது, மரியாதை இருக்காதுன்னு சொன்ன.” 

“ஆமாம் சொன்னேன். ஆனா நிருபன் சொல்லிட்டார், எனக்கு நீதான் முக்கியம், உன் அண்ணன் தங்கை எப்படி இருந்தா என்ன? எனக்கு அவங்களைப் பத்தி ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டார்.” 

“நீ இன்னும் இதே மாதிரி பேசிட்டு இருந்தேனா, சுத்தமா உன்னை மதிக்கவே மாட்டார்.” 

“என் குடும்பத்தை மரியாதையா நிருபன் வீட்ல நடத்தனும்ன்னு தான் நான் நினைக்கிறேன். ஆனா நீ இப்படித்தான் இருப்பேனா, என்னால ஒன்னும் பண்ண முடியாது.” என்றுவிட்டு நியதி எழுந்து உள்ளே சென்றுவிட்டாள். 

“எதோ நீ பணம் போட்டு உங்க அக்கா கல்யாணம் பண்ற மாதிரி, நீயேன் இவ்வளவு அலட்டிக்கிற?” சுமதியின கணவன் சர்வேஷ் கேட்க, 

“அப்படி இல்லை… அவ மட்டும் பெரிய இடத்தில கல்யாணம் பண்ணி போறா?” 

“ஓ அப்ப நாங்க சின்ன இடம் சொல்றியா? நீ ஒப்பிட்டு பார்க்கிற மாதிரி, நானும் உன்னையும் உங்க அக்காவையும் ஒப்பிட்டு பார்த்தா?” என்றவன், 

“உன் அக்கா இன்ஜினியரிங் படிச்சு இருக்காங்க. நிறையச் சம்பாதிகிறாங்க, ஆளும் உன்னை விட அழகு, நீ டிகிரி தான் படிச்சு இருக்க, வேலைக்கும் போகலை…..” என்றதும், சுமதி தன் கணவனை முறைக்க. 

“உண்மையைச் சொன்னா கசக்கத்தான் செய்யும். நீ என்ன பண்ணாலும், இந்தக் கல்யாணம் நடக்கத்தான் போகுது. அப்புறம் ஏன் வீணா பேசி உன் மரியாதையைக் குறைச்சிக்கிற?” 

“கல்யாணத்துக்குப் போனோமா வந்தோமான்னு இரு.” எனச் சொல்லிவிட்டுச் சர்வேஷ் சென்றுவிட்டான். 

தன் மாமனார் கோபத்தில் சொல்கிறார், அப்படியெல்லாம் அதற்குள் வீட்டை காலி செய்யும் நிலை வராது என வசுமதி நினைத்து இருந்தாள். தான் பிறந்த வீட்டிற்குச் சென்றுவிட்டு வருவதற்குள், நியதிக்குத் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது. 

இத்தனை நாள் வசதியாக இந்த வீட்டில் வாழ்ந்து விட்டனர். இப்போது வீட்டை மாற்றிவிட்டு செல்ல மனம் வரவில்லை. அதனால் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு நடமாடிக் கொண்டு இருந்தாள். 

பகலில் பத்திரிக்கை வைக்கச் செல்வது, இரவில் விழித்திருந்து அலுவலக வேலைப் பார்ப்பது என நிருபனுக்குப் போதிய உறக்கம் கூட இல்லை. தினமும் மொத்தமே நாலு மணி நேரம் தான் உறங்கி எழுந்தான். 

அவர்கள் ஊரில் திருமணம் என்பதால்… மற்ற வேலைகளைச் செய்ய ஆட்கள் இருந்தனர். அவர்களை வைத்து ராஜ மாணிக்கம் பார்த்துக் கொண்டார். 

காவ்யா நியதியை கைப்பேசியில் அழைத்துத் திருமணப் புடவை எந்த நிறத்தில் வேண்டும் எனக் கேட்டாள். 

“நீங்களே பார்த்து வாங்குங்க, எனக்கு எதுனாலும் பிடிக்கும்.” என்றுவிட்டால் நியதி. 

“கொழுந்தனாரே கல்யாணப் புடவை வாங்கியாச்சு. ஆனா ரவிக்கை தைக்கணும். எப்படி நீங்களே உங்க பொண்டாட்டி அளவு சொல்றீங்களா?” எனக் காவ்யா நிருபனை வம்புக்கு இழுக்க, 

“ஐயோ அண்ணி நீங்க வேற, என்கிட்ட கொடுங்க, நான் கொரியர்ல அனுப்பி விடுறேன். அவங்க கல்யாணத்துக்கு வரும் போது எடுத்திட்டு வரட்டும்.” 

நிருபனின் பதற்றத்தை பார்த்துக் காவ்யா சிரிக்க, “ஏன் டா, எல்லோரும் லவ் பண்ணி, அப்புறம் தான் கல்யாணத்துக்கு வருவாங்க. நீ என்னடான்னா நேரா கல்யாணத்துக்குப் போயிட்ட……” நிரஞ்சன் சொல்ல, 

“பேசவே அவ்வளவு யோசிச்சா… அதனால தானா என்னவோ, நான் லவ்ன்னு எல்லாம் யோசிக்கவே இல்லை.” 

“இதுல நான் லவ்ன்னு எதாவது உளறி வச்சிருந்தா… என்ன பண்ணி இருப்பாளோ தெரியலை. கல்யாணத்துக்குன்னு கேட்டதுனால தான் இவ்வளவாவது இறங்கி வந்தா.” என்றான் நிருபன். 

திருமணதிற்கு முன் தினம் மதியம் போல, நியதி வீட்டினர் ஒரு கார் மற்றும் பஸ்சில் திருச்சி வந்து சேர்ந்தனர். நேராக அவர்களுக்காக வாடகைக்குப் பிடித்து இருந்த வீட்டிற்குத் தான் சென்றனர். 

அங்கே அவர்களுக்காக நிரஞ்சனும் காவ்யாவும் காத்திருந்து வரவேற்றனர். உறவினர்கள் எல்லோரம் உள்ளே சென்று விட, நியதி வீட்டினர் மட்டுமே எஞ்சி இருக்க, காவ்யா அவர்களுடன் பேசிக் கொண்டு இருக்க, நிரஞ்சன் நியதியுடன் பேசிக் கொண்டு இருந்தான். 

“ஹோட்டல்ல தனித் தனியா ரூமா போட்டா ரொம்பச் செலவு ஆகும். இந்த வீடு நமக்குத் தெரிஞ்சவங்க வீடு. பெரிய ஹால், நாலு ரூம், மூன்னு பாத்ரூம் இருக்கு. ரெண்டு நாள் வாடகையே அஞ்சாயிரம் தான்.” 

“முக்கியமானவங்க யாருக்கும் ஹோட்டல்ல ரூம் போடணும்ன்னா சொல்லு போட்டுடலாம்.” 

“இல்லை வேண்டாம் அண்ணா. இதே இருக்கட்டும் ஒன்னும் பிரச்சனை இல்லை.” 

“மண்டபத்தில பெண்ணுக்கு ஒரு ரூம் இருக்கு, நியதி அங்க தங்கிட்டா வசதியா இருக்கும். பார்லர்ல இருந்து அலங்காரம் பண்ண ஆள் வருவாங்க. கூட யாராவது பெரியவங்களை அனுப்புங்க.” காவ்யா பத்மாவிடம் சொல்ல, 

“அப்படியா மா… சரி.” என்றவர், உள்ளே சென்று தன் தங்கையையும், அவர் மகளையும் அழைத்து வந்தார். 

“நியதி நீ உன்னோட பெட்டியை எடுத்துக்கிட்டுக் கிளம்பு. கூடச் சித்தியும், மலரும் இருப்பாங்க. சாயங்காலம் நாங்க எல்லாம் ரெடி ஆனதும் அங்க வந்திடுறோம்.” என்றார். 

நியதி அவள் வீட்டினரிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினாள். மாலை ஆறு மணிக்குள் மண்டபத்திற்கு வந்து விடும்படியும், சிற்றுண்டி ஏற்பாடு செய்திருப்பதாகச் சொல்லிக் கிளம்பினர். 

“எங்களை எல்லாம் ஆளா தெரியலையா… சித்தியை கூட அனுப்பி இருக்கீங்க.” சுமதி கேட்க, 

“ம்ம்… அவங்களே சொன்னாங்க தான… யாராவது பெரியவங்களைக் கூட அனுப்ப சொல்லி.” 

“உன்னைக் கூட அனுப்பிட்டு, நீ என்ன பேசி வைப்பியோன்னு நாங்க பயந்திட்டே இருக்க முடியாது.” 

“நியதிக்கு நாமா பார்த்துச் செய்ய வேண்டியது. ஆனா அவ நல்ல குணத்துக்குத் தானா தேடி வந்து கல்யாணம் பண்றாங்க. அதை உங்க வாயால கெடுத்து வச்சீங்க, எனக்குப் பொல்லாத கோபம் வரும் சொல்லிட்டேன்.” எனத் தன் மக்களையும், மருமகளையும் ஒரு எச்சரிக்கை பார்வை பார்த்து விட்டு பத்மா உள்ளே சென்றார். 

நிரஞ்சன் அவர்களை மண்டபத்தில் இறக்கிவிட்டு, அவன் வேலையைப் பார்க்க சென்றான். காவ்யா அவர்களை அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்றாள். 

அங்கிருந்த கட்டிலில் தன் மகனை படுக்க வைத்தவள், குழந்தைக்குப் பால் கொடுக்கத் தயாராக, அதைப் பார்த்த நியதியின் சித்தி, தன் மகளுடன் வெளியே செல்ல, 

“பக்கத்து ரூம்ல வேணா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க மா…”
எனக் காவ்யா சொல்ல, அவர்கள் பக்கத்து அறைக்குச் சென்றுவிட்டனர். 

நியதி கதவை மூடி தாழ் போட்டுவிட்டு வர, “கொஞ்சம் நேரம் படு நியதி. நாலு மணிக்கு தான் பார்லர்ல இருந்து வருவாங்க.” என்றாள் காவ்யா. 

அவள் சொன்னபடி நியதி கட்டிலில் படுத்துக் கொள்ள, சிறிது நேரம் சென்று உறங்கிய மகனை கட்டிலில் விட்டு காவ்யாவும் படுத்துக் கொண்டாள்.
“அத்தை தான் என்னை, நீ இங்கயும் அங்கயும் அலைய வேண்டாம், மண்டபத்திலேயே இருன்னு சொல்லிட்டாங்க.” 

“மதியம் வீட்ல சாமி கும்பிட்டோம். சாப்பிட்டு நானும் இவரும் கிளம்பி வந்துட்டோம். அவங்க எல்லாம் ஒரு அஞ்சு மணி போல இங்க வந்திடுவாங்க.” 

காவ்யா பேசிக் கொண்டு இருக்க, நியதி உம் கொட்டியபடி தனது செல்லையே பார்த்துக் கொண்டு இருந்தாள். நிருபன் காலையில் அவளை அழைத்தது, அதன் பிறகு அழைக்கவே இல்லை. 

அவள் என்ன நினைக்கிறாள் எனப் புரிந்து கொண்ட காவ்யா, “உன் ஆளு ரொம்பப் பிஸி… வீட்ல நிறையச் சொந்தக்காரங்க வந்திருக்காங்க. அதனால போன் பண்ணி இருக்க மாட்டார்.” என்றாள். 

அப்போது யாரோ கதவை தட்ட, நியதி எழுந்து சென்று கதவை திறந்தாள். வெளியே நிருபன் நின்று கொண்டிருந்தான். 

அவனை எதிர்பார்க்காததால் நியதி திகைத்து விழிக்க, “எனக்கு வழி விடுவியா இல்லையா?” என அவன் கேட்க, அதன் பிறகே நியதி வழி விட்டு உள்ளே வந்தாள். 

அவனைப் பார்த்ததும் எழுந்து அமர்ந்த காவ்யா, “அத்தை எப்படி உங்களை விட்டாங்க?” எனப் புன்னகைக்க, 

“என் ப்ரண்ட்ஸ் கூட நானும் மண்டபம் போறேன்னு சொல்லிட்டு வந்திட்டேன். ஒன்னும் சொல்லலை.” என்றான். 

“நான் போய் உங்க அண்ணன் என்ன பண்றாருன்னு பார்க்கிறேன்.” என அவர்களுக்குத் தனிமை கொடுத்து காவ்யா எழுந்து சென்றாள். அவள் சென்றதும், நியதியிடம் திரும்பி, “எப்படி இருக்க?” என்றான். 

“பார்த்தா எப்படித் தெரியுது?” 

“இளைச்ச மாதிரி இருக்க.” என்றான் சரியாக. 

திருமணம் நிச்சயம் ஆனதில் இருந்தே நியதிக்குப் பதட்டம் தான். இந்தத் திருமணம் ஒழுங்காக நடக்க வேண்டுமே என்ற சிந்தனையில், உணவு கூட இறங்க மறுத்தது. 

அதை உணர்ந்தவன் போல, “இன்னும் ஒருநாள் தான், நாளைக்குக் காலையில நமக்குக் கல்யாணம் நடந்திருக்கும். அப்புறம் எந்த டென்ஷன்னும் இல்லை.” என்றான். 

நிரஞ்சனும் காவ்யாவும் கையில் டிபன் தட்டுடன் வர, நால்வரும் பேசிக்கொண்டே சாப்பிட்டனர். அவர்கள் சாப்பிட்டு முடிக்கவும் பார்லர் பெண் வரவும் சரியாக இருந்தது. அண்ணனும் தம்பியும் அங்கிருந்து செல்ல, அதன் பிறகு வரவேற்புக்குக் கிளம்பத்தான் நேரம் சரியாக இருந்தது. 

நிருபனின் சொந்த பந்தமே மேடையை ஆக்ரிமித்துக் கொள்ள, வசுமதி சுமதி இருவருக்கும் நியதியுடன் சென்று நிற்க கூட முடியவில்லை. ஆனாலும் நியதி அவர்களை விடவில்லை. தன் அருகில் அவர்களை நிற்க வைத்துக் கொண்டாள். 

வரவேற்பு திருமணம் என எல்லாம் நல்லபடியாக முடிந்தது. பத்து நாட்களில் முடிவான திருமணம் போல இல்லை. நிருபனின் தந்தையும் அண்ணனும் சேர்ந்து, திருமணத்தைச் சிறப்பாக நடத்தி முடித்து இருந்தனர். 

மீண்டும் ஒருநாள் எல்லோரையும் அழைப்பதற்குப் பதில், அன்று மதியமே மண்டபத்தில் அசைவ விருந்தையும் வைத்து விட்டனர். 

நிருபனின் வீட்டினர் நியதியின் பெற்றோரிடம் நன்றாக நடந்து கொண்டாலும், சேகர், வசுமதி, சுமதி மூவரிடமும் சற்று விலகலையே காண்பித்தனர். ஆனால் அது நியதிக்கு தெரியாமலும் பார்த்துக் கொண்டனர். 

மாலை நியதியை அவள் புகுந்த வீட்டில் விட்டுவிட்டு, நியதியின் வீட்டினர் கிளம்பும் சமயம், “எப்ப நம்ம வீட்டுக்கு வர்றீங்க?” என நியதியின் தந்தை கேட்க, நிருபன் சரியாகப் பதில் சொல்லவில்லை. 

நியதி தான் அவள் வீட்டினருடன் வெளியே வரை சென்றாள். நிருபன் வெளியே கூட வரவில்லை. ஏன் இப்படிப் பண்றான் என நியதிக்கு இருந்தாலும், மற்றவர் முன்பு அவள் ஒன்றும் காண்பித்துக் கொள்ளவில்லை. 

ஜெயஸ்ரீயும் காவ்யாவும் நியதியை நன்றாகக் கவனித்துக் கொண்டனர். 
திருமணம் எப்படி நடக்குமோ என்ற பதட்டமோ கவலையோ இப்போது இல்லாததால்… நியதியும் நல்ல மனநிலையில் இருந்தாள். 

திருமணப் பலகாரங்கள் வாங்கிக் கொண்டு நெருங்கிய உறவினர்களும் கிளம்பி விட, வீட்டினர் மட்டுமே இருந்தனர். 

எல்லோரும் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.
“என்ன நியதி இப்ப சந்தோஷமா?” நிரஞ்சன் கேட்க, 

அவனைப் பார்த்து புன்னகைத்த நியதி, “ரொம்பத் தேங்க்ஸ் அண்ணா, உங்களுக்கும் மாமாவுக்கும் தான் நிறைய வேலை.” என்றாள். 

“என்னது அண்ணா வா… அப்ப நான் உனக்குச் சின்ன அண்ணனா?” என நிருபன் சந்தேகம் கேட்க, எல்லோருக்கும் சிரிப்பு வந்துவிட்டது. 

“ஏன் இப்படி என் மானத்தை வாங்குறீங்க? அவரை எப்படிக் கூப்பிடணும் தெரியலை. அது தான் அண்ணன்ன்னு கூப்பிட்டேன்.” என்றாள், அவனுக்கு மட்டும் கேட்கும்படி. 

“நீ நிரஞ்சனை மச்சான்னு கூப்பிடணும்.” ஜெயஸ்ரீ சொல்ல, நியதி சம்மதமாகத் தலையை ஆட்டி வைத்தாள். 

ஜெயஸ்ரீயிடம் கேட்டு நியதி திருமணப் புடவையை மாற்றிக் கொண்டு வேறு புடவையில் வந்தவள், அவர்களோடு சேர்ந்து இரவு சமையலும் செய்தாள். 

நிரஞ்சனுக்குப் பரிமாறிய நியதி, “இன்னொரு தோசை கொண்டு வரவா அண்ணா?” எனக் கேட்க வந்தவள், நிருபனின் குறும்பு பார்வையில், மச்சான் என மாற்றினாள். 

“வீடே கலகலன்னு இருக்கு. இன்னும் அஞ்சு நாள் தான், அதுக்கு அப்புறம் கிளம்பிடுவீங்க இல்ல… இன்னும் கொஞ்ச நாள் லீவ் கேட்டுப் பாரேன் நிரு.” ஜெயஸ்ரீ சொல்ல, 

“மூன்னு வாரத்தில கிளம்ப வேண்டியது. இப்பவே மேல ரெண்டு வாரம் ஆகுது. இதுக்கு மேல கேட்க முடியாது. ஆனா ஆறு மாசத்தில வரப் பார்க்கிறோம். இல்லேன்னா நீங்களும் அப்பாவும் அங்க வந்து கொஞ்ச நாள் இருங்க.” 

“போடா, இங்கன்னா எல்லோரும் சேர்ந்து இருக்கலாம்ன்னு சொன்னா…” என்றவர், “இதுல நீங்க மருவீட்டுக்கு வேறப் போகணுமே, எப்ப போறீங்க?” என மகனைப் பார்த்தார். 

“சென்னையில இருந்து தான் ப்ளைட். போகும்போது அங்க தலையைக் காட்டிட்டு போக வேண்டியது தான்.” என நிருபன் முடித்துக் கொண்டான். 

“என்ன இவன் இப்படிச் சொல்றான்.” என நியதி நினைத்தாலும், அப்போது ஒன்றும் கேட்டுக் கொள்ளவில்லை. 

இரவு உணவை பெண்கள் சேர்ந்து அருந்தும் போது, “நீ நிருபனோட சாப்பிடுன்னா கேட்கலை.” என்றார் ஜெயஸ்ரீ. 

“பரவாயில்லை அத்தை, இங்க இருக்கும் போது உங்களோட சேர்ந்து சாப்பிடுறேன். அங்க போனா நாங்க ரெண்டு பேரும் தான தனியா இருக்கப் போறோம்.” என்றாள். 

மூவரும் சாப்பிட்டு முடித்துச் சமையல் அறையை ஒதுங்க வைக்க, காவ்யாவை அழைத்த நிரஞ்சன். 

“நிருபன் ரூமுக்கு போய் ரொம்ப நேரம் ஆகுது. இன்னும் நியதியை அனுப்பாம என்ன பண்றீங்க?” எனக் கேட்க, 

“அவ நாங்க சொல்றது எங்க கேட்கிறா? அவளும் எங்களோட வேலை பார்த்திட்டு இருக்கா.” 

“சரி, சீக்கிரம் போகச் சொல்லு.” என்றுவிட்டு அவன் செல்ல, 

“அம்மா தாயே ! நீ சீக்கிரம் உங்க ரூமுக்கு போ… உங்க மச்சான் என்னைத் திட்டுறார்.” என்றதும், நியதி மாடியில இருந்த தங்கள் அறைக்குச் சென்றாள். 

நிருபனிடம் நிறையப் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டு வந்தால், அவன் படுத்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். 

“என்ன இவங்க பேசலாம்ன்னு நினைச்சா இப்படித் தூங்கிறாங்க.” என நினைத்தவள், குளியல் அறை சென்று, நைட்டி மாற்றிக் கொண்டு வந்து, கட்டிலில் ஓரமாகப் படுத்துக் கொண்டாள். 

பேசினால் வாக்கு வாதத்தில் முடியும் எனத் தெரிந்துதான் நிருபனும், அவள் வருவதற்குள் படுத்து உறங்கி இருந்தான்.

Advertisement