Advertisement

கண்ணான கண்ணே


அத்தியாயம் 1


நியூ ஜெர்சி நகரம் உறங்கும் நேரம், ஆனால் அந்நேரத்தில் கூடச் சாலையில் இன்னும் ஆட்களின் நடமாட்டம் இருக்க, வாகனங்களும் போய் வந்து கொண்டிருந்தது.

யார் இருக்கிறார்கள் இல்லை என எந்தக் கவலையும் இல்லாமல், குளிருக்கு இதமாகத் தலை முதல் தொடை வரை மறைக்கும்படியான கருப்பு நிற உள்ளன் ஜாக்கெட் அணிந்து, விரித்து விட்டிருந்த கூந்தள் துள்ள, நடந்து வந்தவளின் முகம் மட்டும், மேகத்திற்குள் இருந்து எட்டி பார்க்கும் நிலவு போல இருந்தது.

அவள் நியதி, பேருக்கு ஏற்றார்போலக் கட்டுப்பாடும், ஒழுக்கச் சிந்தனைகளும் உடையவள். பார்பதற்கு எளிதாகத் தெரிந்தாலும், பழக எளிதானவள் அல்ல.
குளிர் நிலவு என அருகில் செல்ல நினைத்தால்… சுடும் நிலவு எனப் புரியவைப்பாள். எதிலும் ஒரு வரையறை கொண்டவள், உணவு விஷயத்தில் மட்டும் எந்த வரையறையும் வைத்துக் கொள்வது இல்லை.

சரியான சாப்பாட்டு பிரியை, எந்த நேரத்தில் எது கிடைத்தாலும் சாப்பிடுவாள். இப்போதும் அவள் தங்கி இருக்கும் குடுயிருப்பின் சாலையில் இருந்த உணவகம் திறந்து இருப்பதைப் பார்த்தவள், நேராக அங்குதான் சென்றாள்.

“ஹாய் மிஸ்டர் அண்ட் மிச்செஸ் ஜேன்…” என நியதியின் குரல் கேட்டு, திரும்பிய வயதான தம்பதியர்கள், நியதியை பார்த்ததும் பரிச்சயமான புன்னகையுடன், “ஹாய் நயதி…” என ஆங்கில உச்சரிப்பில் சொல்ல,
தன் பெயரை அவர்கள் வேறு விதமாக உச்சரிப்பதில், எப்போதும் போல இன்றும் தன் கோழி குண்டு கண்களைக் குறும்பாக உருட்டினாள்.

“மை நேம் இஸ் நியதி.” என்றவள், “இட்ஸ் ஓகே… கேன் ஐ கெட் சம்திங் டு ஈட்…” எனப் புன்னகைக்க,

அவள் வந்ததைப் பார்த்ததுமே, அவள் விரும்பி உண்ணும் சேண்ட்விச்சும், சாக்லேட் டிரிங்கும் தயார் செய்து கொண்டு வந்து ஜேன் வைக்க,

“தேங்க் யூ…” என்றவள், அங்கிருந்த மேஜையில் உட்கார்ந்து நிதானமாக உண்ண, உணவகத்தைச் சுத்தபடுத்தும் வேலையை ஜேன்னும், அவர் மனைவியும் தொடர்ந்தனர்.

அவர்கள் வேலையை முடிக்கும் வரை பொறுமையாக உண்டவள், அவர்கள் கடையை மூடி கிளம்பும் போதுதான், அவளும் அவர்களிடம் விடைபெற்றாள்.
ஆள் இல்லாத சாலையில் நிதானமாக நடந்து சென்றவள், தன் குடியிருப்பை அடைந்ததும், மூன்றாவது மாடியில் இருந்த தன் வீட்டை நோக்கி சென்றாள்.

நேரம் நள்ளிரவையும் தாண்டி இருக்க, இப்போது உண்ட மயக்கம் வேறு, வீட்டிற்குள் வந்ததும், உடை மாற்றிக் கொண்டு படுத்ததும் உறங்கி விட்டாள்.
காலை ஏழு மணிக்கு அலாரம் அடிக்க, நிதானமாக எழுத்து காபி போட்டுக் கையில் எடுத்துக் கொண்டு, பால்கனியில் சென்று அமர்ந்தாள்.

இப்போதுதான் குளிர் காலம் ஆரம்பித்து இருக்கிறது. இன்னும் போகப் போகத்தான் குளிர் வாட்டும். இப்போது உள்ள சீதோஷ்ண நிலை இதமாகவே இருக்க, அங்கு உட்கார்ந்து காபி குடிப்பதே சுகமாக இருந்தது. ஒவ்வொரு மிடறும் ரசித்து அருந்தியவள், நேரம் ஆவதை உணர்ந்து, எழுந்து உள்ளே சென்றாள்.

குளித்து விட்டு வந்து, குக்கரில் சாதம் வைத்துவிட்டு, வெண்டக்காய் கறியும் கொஞ்சமாகச் செய்து கொண்டாள். சாதம் தயார் ஆனாதும், குளிர் சாதனப் பெட்டியில் செய்து வைத்திருந்த தக்காளி தொக்கை எடுத்து சூடு செய்து, சாதத்தோடு கிளறியவள், அதை மதியத்திற்குக் கொண்டு செல்ல எடுத்து வைத்தாள்.

காலை வேளைக்கு இரண்டு பேன்கேக் செய்து சாப்பிட்டு, இடைவேளையில் சாப்பிட ஆப்பிள் ஒன்றை எடுத்து பைக்குள் வைத்துக் கொண்டு, அலுவலகம் செல்ல தயாரானாள்.

இரண்டு மைல் தூரத்தில் இருந்த அலுவலகத்திற்கு நடந்தேதான் சென்றாள். அந்த ஒரு விஷயமே அவள் உடல் எடையை அதிகரிக்காமல் வைத்திருந்ததோ என்னவோ. வேறு எதுவும் உடற்பயிற்சி என்று பெரிதாகச் செய்ய மாட்டாள். இரவு திரும்பும் போது மட்டும் பஸ்சில் வருவாள்.

அவள் வேலை செய்வது புகழ் பெற்ற மென்பொருள் நிறுவனம். அதுவும் அவள் டீம் லீட்டாக இருப்பதால்… பொறுப்புகள் அதிகம்.

நிறைய நேரம் மீட்டிங் டிஸ்கஷன் என்றே போய் விடும். அதன் பிறகுதான் அவள் வேலையைப் பார்க்க நேரம் இருக்கும். எப்போது மாலை ஆகும் எனச் சிலர் துடித்துக் கொண்டு கிளம்ப, நியதிக்கு அந்த மாதிரி அவசரமாக வீட்டிற்குச் செல்ல என எந்த அவசியமும் இல்லை. அதே போல அவள் வரவுக்காகக் காத்திருக்கவும் யாரும் இல்லை.

எட்டு மணி போல அலுவலகத்தில் இருக்கும் உணவகத்திற்குச் சென்று பிசா வாங்கி உண்டவள், மீண்டும் அவள் இருக்கைக்கு வந்து வேலையைத் தொடர்ந்தாள். அவளைப் போல இன்னும் சிலரும் இருந்து வேலைப் பார்க்க, பத்து மணி போல அலுவலகத்தில் இருந்து கிளம்பினாள்.

மறுநாளும் இதே கதை தான். ஆனால் அன்று வெள்ளிக் கிழமை என்பதால்… வார இறுதியைக் முன்னிட்டு அன்று அலுவலகத்தில் இருந்து எல்லோருமே சீக்கிரமே சென்று இருந்தனர். நியதி மட்டுமே உட்கார்ந்து வேலைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அப்போது அவளுடன் வேலைப் பார்க்கும் மைக்கல், “ஹே…. நியதி… டோன்ட் பீ வொர்க்காலிக்… ஹவே சம் பன்.” எனச் சொல்லிவிட்டு செல்ல, நியதி அவனுக்குப் புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்தாள்.

அன்றும் இரவு வழக்கம் போல அலுவலகத்தில் இருந்து தாமதமாகக் கிளம்பியவள், பஸ்சில் இருந்து இறங்கி மெதுவாக நடந்து சென்றாள்.

ஏனோ இன்று யாரோ தன்னைத் தொடர்வது போல, எதுவோ அவள் முதுகுகை துளைப்பது போல உணர்ந்தவள், சட்டென்று நின்று திரும்பி பார்க்க,
இவள் பார்க்கும்போது சாலையில் தூரத்தில் ஒருவன் திரும்பி நின்று போன் பேசிக் கொண்டு இருந்தான்.

நாம்தான் தவறாக நினைத்துக் கொண்டோம் என நினைத்தவள், திரும்பி நடந்தாள். கடந்த நான்கு ஆண்டுகளாக இங்கேதான் இருக்கிறாள். ரொம்பப் பாதுக்காப்பான பகுதிதான். எந்தப் பயமும் இல்லை.

ஜேன்னின் உணவகம் திறந்து இருந்தாலும், இன்று அங்கே செல்ல மனமில்லாமல் வீட்டை நோக்கி நடந்தாள்.

உடை மாற்றி டிவி போட்டுக் கொண்டு அமர்ந்தவள், கொஞ்ச நேரம் டிவி பார்த்தாள். அலுவலகத்தில் எட்டு மணிக்கு சாப்பிட்டது, இப்போது எதாவது சாப்பிட்டால் தான் உறக்கம் வரும் என நினைத்தவள், எழுந்து சென்று சூடான சாக்லேட் பானம் கலந்து எடுத்து வந்து டிவி பார்த்தபடி அருந்தினாள்.

ஒரு ஆங்கிலப் படத்தை உட்கார்ந்து பார்த்தவள், உறக்கம் வந்ததும் எழுந்து உள்ளே சென்று படுத்துக் கொண்டாள்.

மறுநாள் சனிக்கிழமை என்பதால்…. காலை தானாக விழிப்பு வரும் மட்டும் நன்றாக உறங்கினாள். அப்படி அவள் எழுந்த போது, நேரம் ஒன்பது மணி. அதன்பிறகு எழுந்து தன் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.

நேரம் கழித்து எழுந்ததால்… ஜேன்னின் உணவக எண்ணிற்கு அழைத்து, அவளிடம் இருந்த அவர்களின் மெனு பார்த்து, இந்த இந்த அயிட்டம் என எண்களில் சொல்ல, சிறிது நேரத்தில் ஜேன்னே வந்து கொடுத்து விட்டு சென்றார்.

முதலில் உக்கார்ந்து சாப்பிட்டவள், பிறகு வீட்டை சுத்தம் செய்து, தானும் குளித்து ஒரு வார ஆடைகளையும் துவைத்து உலர்த்தினாள்.

பிறகு மதியத்திற்குச் சாதம், குழம்பு, பொரியல் எனச் செய்து சாப்பிட்டு முடிக்க, இரண்டு மணி ஆகி விட, நான்கு மணி வரை ஓய்வு எடுத்து விட்டு, கடற்கரைக்குச் சென்றாள்.

ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என நிறையக் கூட்டம். பெண்கள் பிக்னி உடையில் சாதாரணமாக மணலில் படுத்து இருக்க, குழந்தைகள் அங்கே இங்கே என ஓடி விளையாடிக் கொண்டு இருந்தனர்.

ஒரு கேப்பசினோ வாங்கிக் கொண்டு சென்று அங்கிருந்த சாய்வு நாற்காலியில் அமார்ந்து, கடலை ரசித்தவாரே அருந்தியவள், பிறகு ஹெட் போன்னில் மெல்லிய பாடலை ஒலிக்கவிட்டு, சாய்ந்து படுத்து கண்மூடிக் கொண்டாள்.

இருட்டும் வரை அங்கிருந்தவள், பிறகு ஒரு மாலுக்குச் சென்று அடுத்த வாரத்திற்குத் தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினாள்.

வீடு திரும்பும் வழியில், ஒரு சாலை முழுவதுமே உணவகங்கள் தான் இருக்கும். அங்கே இந்திய உணவகமும் உண்டு. அங்கே சென்று, அவளுக்கு விருப்பமான உணவுகளை எல்லாம் வாங்கி உண்டு விட்டு, வீடு திரும்பினாள். இது வழக்கமாக நடப்பது தான்.

நடந்தே தன்னுடைய அபார்ட்மெண்ட் வந்து சேர்ந்தாள். அங்கு அந்த அமைதியான நேரத்தில் திடிரென “ஹாய்…” எனக் குரல் கேட்க, நியதி திடுக்கிட்டு திரும்பிப் பார்க்க,

“நான் நிரூபன் இங்கதான் புதுசா குடி வந்து இருக்கேன். நீங்க தமிழ் தானே.” என்றான், அங்கு நின்று கொண்டிருந்த புதியவன்.

சாதாரணமாக வெளிநாட்டில் யாரைவது நம் ஊர் ஆட்களைப் பார்த்தால்… எல்லோருக்கும் ஒரு பரவசம் வரும், யாரு என்ன என விசாரிப்பார்கள். ஆனால் நியதி புதியவனை ஆராய்ச்சியாகப் பார்த்துவிட்டு, மின்தூக்கியை பயன் படுத்தாமல் படி வழியாகவே மேலே ஏற….

“ஓ… எவ்வளவு சாப்பிட்டாலும், நீங்க ஸ்லிம்மா இருக்கிறதோட ரகசியம்… இப்படி நடக்கிறது தான் போல….” என நிரூபன் சொல்ல,

“என்ன மிஸ்டர், என்னைப் பாலோ பண்றீங்களா? என்னை ஹரேஸ் பண்றீங்கன்னு சொல்லி கம்ப்ளைன்ட் பண்ணவா?” நியதி கோபமாகக் கேட்க,

“ஐயோ ஏங்க? நம்ம ஊர் பொண்ணாச்சேன்னு கொஞ்சம் கவனிச்சு பார்த்தேங்க, அவ்வளவுதான். இதுக்கு ஏன் இவ்வளவு கோபம்?”

“அன்னைக்கு நைட் நீங்கதானே என் பின்னாடி வந்தது.”

“ரொம்ப ஷார்ப்புங்க நீங்க.” நிரூபன் புன்னகைக்க, நியதி அவனை முறைத்தாள்.

“நீங்க பஸ்ல இருந்து இறங்கி தனியா போயிட்டு இருந்தீங்களா…. நானும் அதே பஸ்ல தான் வந்தேன். அப்பவே உங்ககிட்ட வந்து பேசுவோம்னு நினைச்சேன். ஆனா நைட் நேரம் எப்படிப் பேசுறதுன்னு பேசலை.”

“இப்ப மட்டும் என்ன பகலா?”

“என்னங்க நம்ம ஊருன்னு ஆர்வமா பேச வந்தா… இவ்வளவு கேள்வி கேட்கிறீங்க.” நிரூபன் குறைபட…

“ஓகே… நான் நியதி…” என்றவள், தான் வேலைப் பார்க்கும் அலுவலகத்தின் பெயரையும் சொல்ல,

“பெரிய ஆளுங்க நீங்க.” என்றவன், தன்னுடைய அலுவலகத்தின் பெயரை சொன்னான். அவன் வேலைப் பார்ப்பதும் ஒன்றும் குறைவான இடத்தில் அல்ல, இரண்டு நிறுவனங்களும் அருகருகே தான் இருக்கிறது.
நியதி தனது வீட்டை நோக்கி நடக்க, நிருபனும் அவளுடன் இணைந்து நடந்தான்.

“நான் இங்க வந்து ரெண்டு வாரம் தாங்க ஆகுது. வெளிய தான் சாப்பிடுறேன். இன்னைக்கு உங்களை அந்த மால்ல பார்த்தேன். அங்க இருந்து நீங்க நடந்தே வந்தீங்களா… நானும் உங்க பின்னாடியே வந்தேன்.” நிரூபன் சொல்ல, நியதி அவனை முறைத்தாள்.
“சாரி தப்பா நினைச்சுக்காதீங்க. நீங்க எப்படியும் இங்கதான் வருவீங்கன்னு நினைச்சேன். ஆனா உங்களால இன்னைக்கு நல்லா நம்ம ஊரு சாப்பாடு சாப்பிட்டேன். இல்லைனா பிசா பர்கர்ன்னு தான் ஓட்டிட்டு இருந்தேன்.”

“இதெல்லாம் நீங்க கூகுள் பண்ணிப் பார்த்தாலே தெரியும். சும்மா என் பின்னாடி சுத்தாதீங்க சரியா…எனக்கு இதெல்லாம் பிடிக்காது.”

“இனிமே சுத்த மாட்டேங்க. எதுனாலும் உங்களையே கேட்டுகிறேன்.”

“நான் நாலு வருஷம் முன்னாடி இங்க வந்த போது, நான் யாரையும் கேட்டுட்டு இல்லை. நானாதான் தெரிஞ்சிகிட்டேன். நீங்களும் அதே பண்ணுங்க.” நியதி கொஞ்சம் கூட இறக்கம் காட்டுவதாகவே இல்லை.

“எனக்கு உங்க அளவுக்குத் திறமையோ பொறுமையோ இல்லைங்க.” என்ற நிருபனை, இவனை என்ன செய்வது என்பது போல நியதி பார்த்தாள்.

“சரிங்க உங்களைத் தொந்தரவு பண்ணலை…நான் பார்த்துகிறேன்.” என்றான்.
இருவரும் பேசிக்கொண்டே நடந்து நியதியின் வீட்டை அடைந்தனர். நியதி அவளின் வீட்டை சாவியால் திறக்க, அதற்கு அடுத்து இருந்த வீட்டை நிரூபன் திறந்தான்.

வீட்டிற்குள் செல்ல முயன்றவளை நிருபனின் குரல் தடுத்தது. “நியதி…” என்றவனை, என்ன என்பது போல அவள் பார்க்க, “நீங்க தான்உதவி  பண்ண மாட்டேன் சொல்லிட்டீங்க. ஆனா உங்களுக்கு என்ன உதவினாலும் என்னைத் தாராளமா கேட்கலாம்.” எனப் புன்னகைத்தவனை, மிதப்பாக ஒரு பார்வை பார்த்து விட்டு உள்ளே சென்றாள்.

“ஐயோ ! என்ன பார்வை டா இது?” என வியந்தபடி உள்ளே சென்றான்.
வீட்டிற்குள் வந்த நியதி, தான் வாங்கி வந்த பொருட்களைக் குளிர் சாதன பெட்டியில் அடுக்கிவிட்டு, உடைமாற்றி முகம் கழுவி வந்தவள், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால்… உறங்கும் அவசரம் இன்றி, டிவியின் முன்பு அமர்ந்தாள்.

இலக்கின்றி ஒவ்வொரு சேன்னலாக மாற்றிக் கொண்டு வந்தவள், தமிழ் இசைப் பாடல்கள் சேனலில் ஒரு நொடி தாமதித்தாள்… அதில் கதாநாயகன் கதாநாயகியின் அருகே முத்தமிடுவது போலச் செல்ல, உடனே டிவியை அணைத்தவள், ரிமோட்டை தூக்கி போட்டுவிட்டு பால்கனிக்கு சென்றாள்.

அங்கே சென்றால் பக்கத்துப் பால்கனியில் நிரூபன் துணிகளை உலர்த்திக் கொண்டு இருந்தான்.

“ஐயோ இவனா….” என நியதி உள்ளே செல்ல திரும்ப, அவளைக் கவனித்தவன், “நீங்க இருங்க, எனக்கு வேலை முடிஞ்சிடுச்சு.” என்றபடி உள்ளே சென்று விட்டான்.

நியதி பால்கனி விளக்கை போடாமல், அங்கிருந்த பீன் பேகில் நன்றாகச் சாய்ந்து படுத்து, வானத்தில் இருந்த நிலவை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
நிரூபன் பகலில் எல்லாம் நன்றாக உறங்கிவிட்டு, இப்போது உறக்கம் வராமல், அடுத்த வாரத்திற்குத் தேவையானது எல்லாம் தயார் செய்து கொண்டிருந்தான்.
அவன் வேலை எல்லாம் முடித்து விட்டு வந்து பார்த்த போதும், நியதி அங்கேதான் இருந்தாள்.

“இந்தப் பெண்ணைப் புரிஞ்சிக்கவே முடியலையே… புரிஞ்சிக்கவும் இடம் கொடுக்க மாட்டா போலிருக்கு… ரெண்டு வாரம் தனியா இருக்கவே நமக்கு முடியலை… இவ நாலு வருஷம் எப்படித் தனியா இங்க இருக்கா…” என யோசித்தபடி இருந்தவனுக்கு, உறக்கம் வர… நியதியை அப்படியே விட்டு செல்லவும் மனமில்லை.

அவன் வேண்டுமென்றே அவனின் பால்கனி விளக்கை போட… அந்த வெளிச்சத்தில் சிந்தனையில் இருந்து கலைந்த நியதி, எழுந்து உள்ளே சென்றாள். அதன் பிறகு நிருபனும் விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கச் சென்றான்.

மறுநாள் அவன் நியதியை பார்க்கவே இல்லை. அடுத்த நாள் அவன் அலுவலகத்திற்குச் செல்ல கிளம்பி வர… தனது வீட்டை பூட்டிக் கொண்டு நின்ற நியதி, அவனை அறிமுகமற்ற பார்வை பார்த்து வைக்க, இதைதான் அவளிடம் இருந்து எதிர்ப்பார்த்தான் என்பதால்… அவனுக்கு ஏமாற்றம் ஒன்றுமில்லை.

நீ எப்படியோ இரு, ஆனா நான் இப்படித்தான் என்னும் விதமாக, “ஹாய் நியதி.” எனச் சொல்லிவிட்டு அவளைக் கடந்து சென்றான்.

முதல் சந்திப்பில் நிரூபன் அதிகம் பேசியதால்… நியதி கொஞ்சம் மிரண்டு போய்யே இருந்தாள். ஆனால் இப்போது அவனின் நடவடிக்கையால், அவளால் இயல்பாக இருக்க முடிந்தது. தனது அலுவகத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தாள்.

வாழ்க்கையில் நாம் சில விஷயங்களைத் தவிர்க்க நினைத்தாலும், அது நடக்க வேண்டும் என்றால், நடந்தே தான் தீரும். அதற்கு நியதி மட்டும் விதிவிலக்கா என்ன?

Advertisement