Advertisement

காற்றின் மொழி



அத்தியாயம் 9



நள்ளிரவுக்கு மேல் இருவரும் களைத்துப் போய்க் கட்டிலில் விழ. இருவர் முகத்திலும் நிறைவான புன்னகை.


நந்தாவின் மார்பில் தலை வைத்துப் படுத்த ஸ்வேதா, “நீங்க வினோதினிகிட்ட பேசினீங்களா… அவ தான் நான் உங்களை லவ் பண்ணேன்னு சொன்னாளா. அதனால்தான் நீங்க எங்க வீட்ல பொண்ணு கேட்டீங்களா?” என்றாள்.


“நான் எல்லாம் உனக்குச் சொல்றேன். ஆனா கேட்க உனக்குக் கஷ்ட்டமா இருக்கும். அதுதான் நான் இதுவரை அதைப் பத்தி பேசலை.”


நந்தா சொன்னதைக் கேட்டு ஸ்வேதா முகம் மாறவே செய்தது. இருந்தாலும், “பரவாயில்லை நீங்க சொல்லுங்க.” என்றாள்.


விடுமுறை முடிந்து கல்லூரி மீண்டும் திறக்க, ஸ்வேதா(மில்கி) ஆவலாக நந்தாவை தேட… அவன் புன்னகையுடன் அவள் எதிரில் வந்து நின்றான்.


“பெங்களூர்ல இருந்து எப்ப வந்தீங்க?”


“இன்னைக்குக் காலையில தான் வந்தேன்.”


“எதாவது வேலை கிடைச்சுதா?”


“ஒரு கம்பனியில கிடைக்கிற மாதிரி இருக்கு பார்க்கலாம்.” என்றவன், அவளோடு பேசியபடியே இணைந்து நடந்தான்.


“நாம காலேஜ்குள்ள மட்டும் பேசிக்கலாம். வீட்ல தெரிஞ்சா பிரச்சனை ஆகும்.” என்றாள். நந்தா ஒரு பெரூ முச்சுடன் அங்கேயே நின்றான்.


“இந்த வருஷத்தோட படிப்பு முடிஞ்சிடுமே. அடுத்து என்ன பண்ணப் போற?”


“தெரியலை, இப்பவரை எந்த ஐடியாவும் இல்லை.”


“இப்படி இருக்காத ஸ்வேதா, மேல எதாவது படி, எனக்கும் வேலை கிடைக்கணும். ஒரு மூன்னு வருஷமாவது ஆகும், நாம கல்யாணம் பண்ணிக்க.” நந்தா சொன்னதும், ஸ்வேதாவுக்குப் பயம் தான் வந்தது.


“மூன்னு வருஷமா, அதுவரை தன் வீட்டில் தன்னை விட்டு வைப்பார்களா.” எனத் தெரியவில்லையே என யோசித்தவள், நந்தாவிடம் ஒன்றும் சொல்லவில்லை.


அவளை அடுத்த மாதம் வந்து பார்ப்பதாகச் சொல்லி, நந்தா விடைபெற்றுச் சென்றான். இருவரும் போனில் அதிக நேரம் பேசிக்கொள்ளவார்கள்.


நந்தா அடுத்த மாதமும் வந்தான். இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, “ஆமாம் உன்னோட பிரான்ட் ,அந்த வாயாடி எங்க காணோம்.” என நந்தா கேட்க,


“யாரு எஸ். ஸ்வேதாவா?” என்றவள், அவ இந்த வருஷம் காலேஜ்கே வரலை.” என்றாள்.


“ஏன்?”


“தெரியலை.”


“உன் பிரண்ட் தான, இது கூட விசாரிச்சு தெரிஞ்சிக்க மாட்டியா?” நந்தா கோபப்பட…ஆமாம் விசாரித்து இருக்கலாம் என இப்போது நினைத்தாள்.
ஸ்வேதா வினோதினியிடம் சென்று ஆர். ஸ்வேதாவைப் பற்றிக் கேட்க,

“அவங்க அப்பாவுக்கு ஒரு விபத்து நடந்துச்சு. அதுல இருந்து அவதான் அவங்க அப்பா ஆபீஸ் பார்த்துகிறா. அதனால காலேஜ் வரலைன்னு சொல்லிட்டா.” என்றாள்.


மறுநாள் ஸ்வேதா அதை நந்தாவிடம் சொல்ல, பாரு டா சரியான வாலுன்னு நினைச்சா… இவ்வளவு பொறுப்பா இருக்கா… நாமதான் அவளைத் தப்பா நினைத்துவிட்டோம் என எண்ணினான்.


நந்தாவுக்கு ஒரு கம்பெனியில் வேலை கிடைத்து விட.. அவன் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தான். அதனால் அவனால் ஸ்வேதாவை அடிக்கடி வந்து பார்க்க முடியவில்லை. போன்னில் மட்டும் இருவரும் பேசிக் கொண்டனர். ஆனால் சில நாட்களில் ஸ்வேதா போன்னில் அவனிடம் பேசுவதைக் கூடத் தவிர்த்தாள்.


வீட்டில் அவளுக்கு வரன் பார்க்க ஆரம்பித்ததே காரணம். அதை நந்தாவிடம் சொல்லவும் அவ்வளவு பயம். இதற்கு இடையில் நந்தாவின் அப்பா திடிரென்று உடல்நலக் குறைவால் இறந்து விட…. நந்தா முற்றிலும் உடைந்தே போனான்.


அந்த நேரம் ஸ்வேதாவின் ஆறுதலை, அவன் மிகவும் எதிர்பார்த்தான். அவள் நேரில் வருவாள் என்று எல்லாம் நினைத்தான். ஆனால் அவள் வரவே இல்லை.


நந்தாவுக்கு வேலைக்குச் செல்வதா அல்லது தந்தையின் தொழிலைப் பார்ப்பதா என்று ஒரே குழப்பம். அவனே ஸ்வேதாவை பார்க்க கல்லூரிக்குச் சென்றான்.


“சாரி நந்தா, நான் வரணும்ன்னு தான் நினைச்சேன். ஆனா வர முடியலை.” என்றாள்.


“அப்பா இல்லாம கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருக்கு. முரளி வேற படிச்சிட்டு இருக்கான். நான் தொடர்ந்து வேலைக்குப் போறதா, இல்லை பிசினஸ் பண்றதா, ஒன்னும் புரியலை.” என்றான் சோகமாக.


“நீங்களே உங்களுக்கு எது ஒத்து வரும்ன்னு யோசிச்சு முடிவு பண்ணுங்க.” என்றாள் பட்டும் படாமல். அது அவனுக்குத் தெரியாதா, அவள் எதாவது சொல்வாள் என எதிர்ப்பர்த்தான்.


அந்த நேரம் நந்தாவுக்கு ஒன்று தோன்றியது. இவளோடு தன்னால் வாழ்க்கையில் இணைய முடியாது என்று.


“ஸ்வேதா, என் தம்பி செட்டில் ஆன பிறகுதான், நான் என்னைப் பத்தி யோசிப்பேன். நீ எனக்காகக் காத்திருப்பியா? சொல்லு.” என்றான்.
ஸ்வேதா பதில் சொல்லவே இல்லை. அவள் மெளனமாக இருக்க.


“சொல்லு ஸ்வேதா, நீதான முதல்ல ஆரம்பிச்ச ?இப்ப அமைதியா இருந்தா என்ன அர்த்தம்.” நந்தா கேட்க, ஸ்வேதாவுக்கு ஒன்றும் புரியவில்லை.


“நான் எங்க ஆரம்பிச்சேன். நீங்க தான் என்னை லவ் பண்றேன்னு சொன்னீங்க.” என்றாள்.


“அது நீ என்னைப் பிடிச்சிருக்குன்னு வினோதினி கிட்ட சொன்ன பிறகுதான்.”


“நான் எப்ப வினோதினிகிட்ட சொன்னேன். நான் சொல்லவே இல்லையே.” என்றாள்.


நந்தா தலையைப் பிடித்துக் கொண்டான். அவனுக்குப் புரிந்து விட்டது, தான் எதோ தவறாகப் புரிந்து கொண்டோம் என்று.


“சரி அதெல்லாம் விடு, இப்ப சொல்லு, நாம லவ் பண்றதுல அர்த்தம் இருக்கப் போகுதா… இல்லையா?”


ஸ்வேதா அப்போதும் பதில் சொல்லாமல் மெளனமாக இருக்க,


“என்னால சும்மா டைம் பாஸ்க்கு லவ் பண்ண முடியாது.” என்றவன், “நாம பிரிஞ்சிடலாம் ஸ்வேதா.” என்றான் தெளிவாக.


“எங்க அப்பாவும் இல்லை. நான்தான் என் குடும்பத்தைப் பார்க்கணும். இந்தக் காதல் எனக்கு வேண்டாம்ன்னு தோணுது.”


ஸ்வேதாவுக்கு அவனைப் பிரிவது வருத்தம் தான். ஆனால் சேரவே முடியாது என அவளுக்குத் தெரியும். இன்னும் அவன் மனதில் ஆசையை வளர்க்க வேண்டாம் என்று நினைத்தவள், “நீங்க சொல்றதுதான் சரின்னு எனக்கும் தோணுது.” என்றாள்.


“தேங்க்ஸ்…” என்றவன், அவளிடம் விடைபெற்று சென்று விட்டான். அதன் பிறகு அவளை அவன் சந்திக்கவோ, போன்னில் பேசவோ இல்லை.


“இதுதான் நடந்தது.” நந்தா சொல்லி முடித்துவிட்டு மனைவியின் முகம் பார்க்க…


“நான் உங்ககிட்ட உங்க காதல் கதை கேட்கலை. என்னைப் பத்தி சொல்லுங்க.” ஸ்வேதா முறைப்பாகக் கேட்க,


“எருமை, உன்னாலதாண்டி நான் லவ்வே பண்ணேன். நம்மை ஒரு பெண்ணுக்கு பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சதும் வந்த ஆர்வம் தான். கண்டிப்பா நானா யாரையும் தேடி போய், லவ் பண்ணி இருக்க மாட்டேன்.”


“வினோதினி சொன்ன ஸ்வேதா அவன்னு நினைச்சுக்கிட்டேன்.”


“சரி அப்பவே அது நான்தான்னு தெரிஞ்சிருந்தா?”


“கண்டிப்பா இதுக்கு நான் பதில் சொல்லணுமா ஸ்வேதா?” நந்தா பாவமாகக் கேட்க,


“ஒழுங்கா சொல்லுங்க.” என ஸ்வேதா மிரட்ட,


“அது நீன்னு தெரிஞ்சிருந்தா, கலாச்சி தான் விட்டிருப்பேன். லவ் எல்லாம் பண்ணி இருக்க மாட்டேன்.” என்றான். ஸ்வேதா அங்கிருந்த தலையணையால் அவனை மொத்த…


“அப்ப உன் மேல எனக்கு என்ன அபிப்பிராயம் சொல்லு? திமிர் பிடிச்சவ, கர்வம் பிடிச்சவன்னு தான் நினைச்சு இருந்தேன்.”


“அது மட்டும் இல்லை. அவ அழகா இருந்தா, அதனால லவ் பண்ணேன்னு சொல்லுங்க.” ஸ்வேதா சொல்ல,


“அதுவும் ஒரு காரணம் தான்.” நந்தா உண்மையை ஒத்துக் கொள்ள…


“போங்க நீங்க, என்றவள், அவனைப் பிடித்துக் கட்டிலில் இருந்து தள்ளினாள்.


“பாரு எப்படி டென்ஷன் ஆகுறேன்னு, இதுக்குதான் நான் உன்கிட்ட அதைப் பத்தி பேசலை… நீதான் சொல்லு சொல்லுன்னு உயிரை எடுத்த.”


“போடா பேசாத…”


“தப்புதான் ஸ்வேதா, அப்ப என் வயசு அப்படி. எனக்கு எது நல்லது கெட்டதுன்னு தெரியலை. பார்க்க அழகா இருந்ததும், நான் லவ் பண்றதா சொல்லிட்டேன்.”


“அவளையே கல்யாணம் பண்ணி இருக்க வேண்டியது தான. ஏன் என்னைப் பண்ண?”


“என்னை முழுசா சொல்ல விடு.”


ஸ்வேதாவின் மௌனத்தைச் சம்மதமாக எடுத்துக் கொண்டு மேலே தொடர்ந்தான்.


“எனக்கு அப்பவே அது நீதான்னு புரிஞ்சிடுச்சு. உடனே எனக்கு உன் மேல லவ் எல்லாம் வரலை. ஆனா நான் அப்பாவோட பிசினஸ் பார்க்கனும்ன்னு முடிவு எடுக்க நீதான் காரணம்.”


“சின்னப் பொண்ணு, படிப்பு கூட முடிக்கலை. அவங்க அப்பா பிசினஸ் பார்க்கிறா, நம்மால முடியாதன்னு ஒரு எண்ணம் வந்தது.”


“நான் உன்னைப் பார்க்கலை, உன்னோட பேசலை, ஆனா உன்னை நினைக்கும்போது எனக்கு ஒரு திடம் வந்தது. நான் பிசினஸ் எடுத்து நடத்த ஆரம்பிச்சேன்.”


“லீவ் நாள்ல அப்பாவுக்கு உதவி பண்ணதுனால, எனக்கு ஒன்னும் புதுசா இல்லை. கொஞ்ச நாள் வெறித்தனமா உழைச்சேன்.”


“சில மாதங்கள் கழிச்சு, பிசினஸ் எனக்கு அத்துப்படி ஆனது. அதுக்குப் பிறகு தான் அடுத்தது என்னன்னு யோசிச்சேன். அப்ப நீதான் ஞாபகம் வந்த.”


“வினோதினியை தேடிப் போய் உன்னைப் பத்தி கேட்டேன்.”


“உங்களுக்கு இப்பவாவது யாரு அந்த ஸ்வேதான்னு புரிஞ்சிதான்னு கேட்டா. அப்புறம் உன்னைப் பத்தி விவரம் சொன்னா. நான் உன்னைப் பார்க்க மார்க்கெட் வந்தேன். தூரத்தில இருந்து உன்னைப் பார்த்தேன்.”


“அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு தோனுச்சு, உன்னைக் கல்யாணம் பண்ணிகிட்டா என்னன்னு?”


“நல்லவேளை நாம ரெண்டு பேரும் எதோ ஒரு வகையில சொந்தம். அதனால வினோதினியோட அப்பாகிட்ட சொல்லி வச்சிருந்தேன். உனக்கு மாப்பிள்ளை பார்த்தா சொல்ல சொல்லி.”


“உன்னோட ரெண்டாவது அக்காவுக்கும் கல்யாணம் ஆனதும். அவர் மூலமாத்தான் உங்க அப்பாகிட்ட பேச வச்சேன்.”


“சரி இதெல்லாம் பண்ண தெரிஞ்சது இல்லை. ஏன் என் முன்னாடி வரலை?”


“முன்னாடி வந்தா அடிச்சிடுவியோன்னு ஒரே பயம்.” என அவன் கண் சிமிட்ட,


“பயப்படுற மூஞ்சியைப் பாரு.” என ஸ்வேதா சொல்ல,


“ஹே என்ன ஓவரா பேசுற? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, இந்த மூஞ்சியைத் தான அந்தக் கொஞ்சு கொஞ்சின.” என்றான்.


“இனிமே கொஞ்ச மாட்டேன்.” என்றவள், அவனைக் கட்டிலில் இருந்து உருட்டி தள்ளியே விட்டாள்.


அவன் மீது தலையணை தூக்கி போட்டவள், “ஒழுங்கா கீழ படுத்து தூங்குங்க.” என்றாள்.


“ஏன் டி?”


“நான் லவ் பண்ணேன்னு தெரிஞ்சிருந்தா கலாச்சிருப்பேன்னு சொன்ன இல்ல… இனிமே தனியாவே தூங்கு.” என்றாள்.


“அது அப்ப டி, இப்ப உன்னைத் தானே லவ் பண்றேன்.”


“கல்யாணம் பண்ணிகிட்டீங்க வேற வழியில்லாம லவ் பண்றேன்னு சொல்றீங்க.”


“வேற வழியில்லாம உன்னைக் கல்யாணம் பண்ணலை. நீதான் வேணும்ன்னு தானே கல்யாணம் பண்ணேன். அதையும் நினைச்சு பாரு.”


“அதெல்லாம் என்னால ஒத்துக்க முடியாது. நான் லவ் பண்றேன்னு சொல்லி இருந்தா ஏத்துக்க மாட்டாராம். ஆனா இவரா வந்து கல்யாணம் பண்ணா, நாங்க ஏத்துக்கணுமாம். இது எந்த ஊரு நியாயம்.”


அதன் பிறகு நந்தா எவ்வளவு கெஞ்சியும் ஸ்வேதா மலை இறங்கவே இல்லை. நான் காதலை சொல்லி இருந்தா, ஏத்திருக்க மாட்டானா என அதிலேயே நின்றாள்.


தரையில் குப்புற படுத்துக் கொண்டு நந்தா தன்னையே திட்டுக் கொண்டு இருந்தான்.

“உன் வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா டா?”


“ரொம்ப நியாயவான் மாதிரி ஏன் உண்மையைச் சொன்னோமோ…. உன்னையும் லவ் பண்ணி இருப்பேன்னு சொல்லி இருக்கலாம்.”


“நல்லவேளை முதல் ராத்திரி அன்னைக்குச் சொல்லலை… சொல்லி இருந்தா, இப்பவரை முதல் ராத்திரியே நடந்திருக்காது போல….” என அவனே பலவாறு மனதிற்குள் புலம்பியபடி உறங்கிப் போனான்.


மறுநாள் காலையில் எழுந்தும் ஸ்வேதா முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு தான் இருந்தாள். சுகன்யா வேறு அவள் கணவனுடன் சங்கீதாவின் குழந்தையைப் பார்க்க வந்திருக்க, மற்ற இரு சகலைகள் வந்திருப்பது தெரிந்து, சங்கீதாவின் கணவனும் வந்துவிட, மூன்று சகலைகள் சேர்ந்தால்… கேட்கவும் வேண்டுமா?


தங்கள் மனைவிமார்களைக் கிண்டல் செய்து ஓட்டிக் கொண்டு இருந்தனர்.


பேச்சு வாக்கில் நந்தா அவன் படித்த கல்லூரியின் பெயரை சொல்லிவிட..

“எங்க ஸ்வேதாவும் அங்கதான் படிச்சா?” என்ற சங்கீதா, “உங்களுக்கு அவளை முன்பே தெரியுமா?” என்று கேட்க,


“உங்க தங்கச்சியைப் போய் யாருக்காவது தெரியாம இருக்குமா?” நந்தா கிண்டலாகச் சொல்ல,


“ப்ரோ, நாங்க எல்லாம் தெரியாம வந்து மாட்டினோம். நீங்க இப்படித் தெரிஞ்சே வந்து மாட்டி இருக்கீங்களே.” எனச் சுகன்யாவின் கணவன் கிண்டல் செய்ய,


“என்ன பண்றது ப்ரோ? விதி வலியது.” என்றான் நந்தா ஸ்வேதாவைப் பார்த்து கண்சிமிட்டியபடி.


ஸ்வேதா முறைப்பாள் எனப் பார்த்தாள், அவள் கண் கலங்க, நந்தாவுக்குக் கஷ்ட்டமாகப் போய்விட்டது. மற்றவர்கள் முன்பு ஒன்றும் சொல்ல முடியாமல், ஸ்வேதாவைப் பார்த்து முறைத்து வைத்தான்.

Advertisement