Advertisement

காற்றின் மொழி



அத்தியாயம் 8


நந்தாவின் கடை இரண்டு பகுதிகளாக இருக்கும். நல்ல பெரிய கடை. அது அவர்களின் சொந்தக் கடையும் கூட. ஒரு பக்கம் சிமெண்ட் மூட்டை அடுக்கி இருந்தது. அங்கே கட்டிடம் கட்ட தேவையான பொருட்களுக்கு ஆர்டர் எடுத்து, பிறகு பொருட்கள் லாரியில் அனுப்பி வைக்கப்படும்.


இன்னொரு பக்கம் பெயிண்ட் கடை. அதன் ஒரு பகுதியில் கண்ணாடியால் தடுப்பு அமைத்து, நந்தாவின் அலுவலக அறையாக இயங்கியது.


ஸ்வேதா சென்றபோது, நந்தா யாருடனோ உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவன், மனைவியைப் பார்த்ததும், எதிரே இருந்த இன்னொரு இருக்கையைத் தன் பக்கம் போட்டு, அவளை உட்கார சொன்னான்.


“எனக்கு மூன்னு மாசத்தில வேலை முடியனும்.” நந்தா சொல்ல,


“கண்டிப்பா சார். நீங்களே சாமான்கள் எல்லாம் கொடுக்கப் போறீங்க. வேலைக்கு ஆட்கள் மட்டும் தானே… நிறையப் பேரை வச்சு, சீக்கிரம் முடிச்சு கொடுத்திடுறேன்.”


“வர்ற வெள்ளிக் கிழமை, நல்ல நாளா இருக்கு. அன்னைக்கே ஆரம்பிச்சிடலாம்.”


“சரி சார். நான் அப்புறம் போன் பண்றேன்.” எனச் சொல்லி அவர் விடைபெற.


“இவர் சிவில் இன்ஜினியர். நம்ம கடைக்கு மேலையே டைல்ஸ் ஷோரூம் வைக்கப் போறோம் இல்லையா… அதுக்குதான் பேச வர சொன்னேன்.”


“இந்த வாரமே வேலையை ஆரம்பிச்சடலாம்ன்னு பார்க்கிறேன்.”


“சரிங்க…” என்றாள் ஸ்வேதா மகிழ்ச்சியுடன்.


“இன்னைக்குக் காலையில இருந்து போட்ட பில் எல்லாம் இதுல இருக்கு. நீ இதைப் பார்த்து கம்ப்யூட்டர்ல ஏத்திடு. நான் டைல்ஸ் வைக்கக் கோடௌன் பார்க்க போறேன். வர முன்ன பின்ன ஆகும். நீ வேலையை முடிச்சிட்டு வீட்டுக்கு கிளம்பிடு.” எனச் சொல்லிவிட்டு நந்தா செல்ல, ஸ்வேதா உட்கார்ந்து வேலைப் பார்க்க ஆரம்பித்தாள்.


வேலையில் ஸ்வேதாவுக்குத் தான் கேட்க வேண்டிய விஷயம், பின்னுக்குச் சென்று விட்டது.


அன்றிலிருந்து நந்தா மிகவும் பிஸியாக இருந்தான். மதியம் கூடச் சாப்பிட்டதும் உடனே கிளம்பி விடுவான். பிறகு ஒரு இரண்டு நாள் பாண்டிச்சேரியில் இருக்கும் டைல்ஸ் பாக்டரிக்கு சென்று ஆர்டர் போட்டுவிட்டு வந்தான்.


வெள்ளிக்கிழமை காலையில் பூஜைக்கு வீட்டு ஆட்கள் மட்டும் தான். வெளியே யாரையும் அழைக்கவில்லை. ஸ்வேதா வீட்டினரை மட்டுமே பூஜைக்கு அழைத்து இருந்தனர். அதே போல முரளியும் வந்துவிட்டான்.


கஸ்தூரியை அழைக்கக் கூட நந்தா மறுத்துவிட்டான். “சித்திக்கு சொன்னா, மாமா, அத்தை எல்லோருக்கும் சொல்லணும். ஒருத்தரை கூப்பிட்டு இன்னொருத்தரை கூப்பிடலைனா வீணா பிரச்சனை வரும். கடை திறக்கும் போது பார்த்துக் கொள்ளலாம்.” என்று விட்டான்.


ஸ்வேதாவின் பெற்றோர் காலையில் நேராக மகள் வீட்டுக்கே வந்தனர். சிவகாமி ஸ்வேதாவின் பெற்றோரை மதிக்காமல் நடந்து கொண்டார். எதோ கடமைக்காக வாங்க என்று கேட்டவர், பிறகு வேலை இருப்பது போல… அங்கிருந்து நகர்ந்து விட்டார். அவர்கள் பேசவும் சந்தர்ப்பம் கொடுக்கவில்லை.


அவர்கள் வந்த போது, நந்தாவும் முரளியும் வீட்டில் இல்லை. சாப்பிடும் நேரம் இருவரும் வந்துவிட, வீட்டில் டிபன் சாப்பிட்ட பிறகுதான் கடைக்குச் சென்றனர்.


சங்கீதாவுக்குப் பிரசவம் இப்போதோ அப்போதோ என இருப்பதால்… ஸ்வேதாவின் பெற்றோர் பூஜை முடிந்த சிறிது நேரத்திற்கெல்லாம் கிளம்பி விட்டனர்.


மதியம் சாப்பிட்டுப் போகலாம் என நந்தா சொல்ல, சங்கீதாவை காரணம் காட்டி அப்போதே கிளம்பி சென்றனர்.


வீட்டில் பாட்டி மற்றும் சங்கீதாவின் கணவன் இருக்கிறான். அப்படி ஒன்றும் அவசரமாகப் போக வேண்டியது இல்லை. ஆனால் சிவகாமி நடந்து கொண்ட முறையிலேயே, தன் பெற்றோர் உடனே கிளம்புகிறார்கள் என ஸ்வேதாவுக்குப் புரிந்தது.


அவளுக்கு மனதிற்குள் மிகவும் கோபம். இவர்கள் எல்லோரும் முன்பே வீட்டிற்கு வந்திருக்க, எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு நந்தா சாப்பிடதான் வந்தான்.


அன்று வீட்டில் இருந்தாலும், ஸ்வேதா மதிய சமையலுக்கு எந்த வேலையும் செய்யவில்லை. அறையில் சென்று முடங்கிக் கொண்டாள்.


“ஸ்வேதா எங்க?” நந்தா கேட்க,


“உடம்பு முடியலையோ என்னவோ? வீட்டுக்கு வந்ததில இருந்து. உள்ளதான் இருக்கா.” என்றார் சிவகாமி. அவருக்கு நன்றாகத் தெரியும், அவள் கோபமாக இருக்கிறாள் என்று.


நந்தா தங்கள் அறைக்குச் சென்றான். “ஸ்வேதா சாப்பிட வா…” நந்தா அழைக்க, அவள் அசையவே இல்லை.


சாதாரணமாக அவள் இப்படி இருக்க மாட்டாள் என்று அவனுக்குத் தெரியும். கட்டிலில் அவளுக்கு அருகில் சென்று படுத்தவன், “இப்ப என்ன டி பிரச்சனை?” என்றான்.


“நீங்க கூப்பிட்டு தான எங்க அப்பா அம்மா வந்தாங்க. ஆனா அத்தை அவங்களை வாங்கன்னு கேட்டதோட சரி. அப்புறம் ஒரு வார்த்தை கூட அவங்களோட பேசலை.”


“அவங்க என்ன யாரோவா? என் மேல கோபம் இருந்தா, அதை என்கிட்டே காட்ட வேண்டியது தான. ஏன் அவங்ககிட்ட காட்டணும்?”


“நானும் இதைத் திருப்பிப் பண்ணிக் காட்டட்டுமா? நானும் இனிமே உங்க வீட்ல இருந்து யார் வந்தாலும், வாங்கன்னு மட்டும் கேட்டுட்டு போயிடுறேன். அப்ப உங்களுக்கு எப்படி இருக்கும்.” ஸ்வேதா கோபத்தில் வெடிக்க,


“ஹே… அதுதான் என்கிட்டே சொல்லிட்ட இல்லை. நான் பார்த்துகிறேன். அவங்கதான் அறிவு இல்லாம பண்ணா, நீயும் பதிலுக்குப் பண்ணுவியா?”


“அம்மா பண்ணது கண்டிப்பா தப்புதான். நான் அவங்களைக் கேட்கிறேன். நீ வா.” என்றான்.


ஸ்வேதா அவனோடு எழுந்து சாப்பிட சென்றாள். இருவரும் சாப்பிட்டு முடித்ததும், “அம்மா, இன்னைக்கு அத்தை மாமாவோட என்ன பேசினீங்க?” என்றான்.


எதாவது பேசி இருந்தால் தானே சொல்ல முடியும். “எனக்கு எங்க பேச டைம் இருந்துச்சு?வந்தாங்க, அப்புறம் சாப்பிட்டாங்க உடனே கிளம்பிட்டாங்க.” என்றார்.


“ஓ… அதனாலதான் பேசலையா? சரி எனக்கும் இந்தக் காரணம் சொல்ல நேரம் வராமலா போகும். நானும் அப்ப பார்த்துகிறேன்.” என்றான்.


“என்ன டா மிரட்டுறியா?” சிவகாமி கேட்க,


“என்ன மிரட்றாங்க? ஸ்வேதா மேல கோபம்ன்னா அவகிட்ட காமிங்க. உங்க மருமகளைக் கேட்க உங்களுக்கு உரிமை இருக்கு. ஆனா அவ அப்பா அம்மாவை மரியாதை இல்லாம நடத்தக் கூடாது. பாவம் அவங்க என்ன செஞ்சாங்க?”


“இப்படி உங்களை அவங்க நடத்தினா, நான் அவங்களைச் சும்மா விடுவேனா? அதே போலத்தானே அவளுக்கும் இருக்கும்.” என்றான்.


“இங்க பாரு நந்தா, அவங்க யாரு என்னன்னு எல்லாம் எனக்குத் தெரியாது. நம்மோட தகிதிக்கு அவங்க வீட்ல நாம சம்பந்தம் பண்ணாதே பெரிசு.”


“என்னால அவங்களோட இப்படித்தான் இருக்க முடியும். நீ என்னை அதட்டிற வேலை எல்லாம் வேண்டாம்.”


“இது உங்க அப்பா சம்பாதிச்சு கட்டின வீடு. நான் என் புருஷன் வீட்ல தான் இருக்கேன். இங்க நான் என் இஷ்ட்டபடித்தான் இருப்பேன்.”


“இப்ப நீங்க என்ன மா சொல்ல வர்றீங்க? என்னை வீட்டை விட்டு வெளிய போகச் சொல்றீங்களா?” நந்தா கோபத்தை அடக்கியபடி கேட்க,


“அண்ணா என்ன பேசுறீங்க?” என்ற முரளி, “அம்மா, ஏன் மா இப்படியெல்லாம் நடந்துக்கிறீங்க?” எனக் கத்தினான்.


“நாங்க இங்க இருக்கிறது பிரச்சனைனா சொல்ல சொல்லிடு முரளி. நான் வேணா தனியா போயிடுறேன்.” என்றான் நந்தா.


“அண்ணா, இப்ப கோபமா இருக்கிற நேரத்தில எதுவும் பேச வேண்டாம். நீங்க உள்ள போங்க.” என்றான்.


நந்தா கோபத்தில் வெளியே கிளம்பி சென்றுவிட்டான். ஸ்வேதா அங்கேதான் இருந்தாள்.


“இங்கப்பாரு டா, நான் ஒன்னும் யாரை நம்பியும் இல்லை. என் புருஷன் என்னை ஒன்னும் வக்கத்து விட்டுட்டு போகலை.உங்க இஷ்ட்டத்துக்கு என்னால அட முடியாது. நான் எப்படி இருக்கணுமோ அப்படித்தான் இருப்பேன்.” சிவகாமி அழுத்தம் திருத்தமாகச் சொல்ல…


இப்படிச் சொல்பவரிடம் என்ன பேசுவது? “என்னவோ பண்ணித் தொலைங்க.” என்ற முரளி அறைக்குள் சென்றுவிட, ஸ்வேதாவும் உள்ளே சென்றுவிட்டாள்.


மாலை ஸ்வேதா கடையில் இருக்கும்போது, அவள் வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. சங்கீதாவை வலி வந்து மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகத் சொன்னார்கள்.


“நீ உடனே போ…” என நந்தா ஸ்வேதாவை அனுப்பி வைத்தான். நள்ளிரவில் பெண் குழந்தை பிறக்க, மறுநாள் காலை நந்தா மருத்துவமனை சென்று பார்த்துவிட்டுச் சென்றான்.


சங்கீதா மருத்துவமனையில் இருந்து வந்த பிறகும், ஸ்வேதா வீடு திரும்பாமல் இருந்தாள். நந்தா சிவகாமியோடு பேசுவதில்லை. அவரும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருந்தார். நந்தா வீட்டில் அதிகம் தங்குவதே இல்லை. சாப்பிட மற்றும் இரவு உறங்கத்தான் வீட்டிற்கு வந்தான்.


ஸ்வேதா இங்கு வராமல் இருப்பது, சிவகாமிக்கே உறுத்த ஆரம்பித்தது. கடையில் கட்டுமான பணி நடப்பதால்… அண்ணனுக்கு உதவிக்காக முரளி அடுத்த வார இருதியில் சேலம் வந்தான்.


“அண்ணி எங்க மா?” முரளி கேட்க,


“அவங்க அம்மா வீட்டுக்கு அன்னைக்குப் போனவ, இன்னும் திரும்பி வரலை. இவ அக்காவுக்குப் பிரசவமா, இல்லை இவளுக்குப் பிரசவமான்னு தெரியலை. உங்க அண்ணனும் பொண்டாட்டியை கூப்பிட்ட மாதிரி தெரியலை.” என்றார் சலிப்பாக.


“பின்ன நீங்க அந்தப் பேச்சு பேசினா, அண்ணி கோவிச்சிக்கிட்டு போயிட்டாங்களோ என்னவோ.”


“நான் என் பையனுங்களைதான் பேசினேன். அவளை ஒன்னும் பேசலை.”


“இருந்தாலும், நீங்க அவங்க அம்மா வீட்டை மதிக்க மாட்டேன்னு சொன்னா, அண்ணிக்குக் கோபம் தானே வரும்.” முரளி சொன்னதற்குச் சிவகாமி எந்தப் பதிலும் சொல்லவில்லை.


மதியம் சாப்பிட வந்த நந்தாவிடம் முரளியே கேட்டான். “அண்ணி ஏன் இன்னும் இங்க வராம இருக்காங்க?”


“அவ இங்க வரணுமா வேண்டாம்ன்னு அம்மாதான் சொல்லணும்.”


“எதுக்கு டா என்னை இழுக்கிற? நான் எதோ உன் பொண்டாட்டியை வீட்டை விட்டு அனுப்பின மாதிரி.” சிவகாமி கோபப்பட,


“நீங்க அனுப்பலை. அவளும் போகணும்ன்னு போகலை. ஆனா நான்தான் அவளை வர வேண்டாம்ன்னு நிறுத்தி வச்சிருக்கேன்.” என்றான்.


“நீங்க சொன்னீங்க இது உங்க வீடு. என் இஷ்ட்டபடிதான் இருப்பேன்னு. நல்லா இருங்க எங்களுக்கு அது பிரச்சனை இல்லை. ஆனா என் பொண்டாட்டி இங்க இருக்கணும்ன்னா அவளுக்கு உண்டான மரியாதை கிடைக்கணும். அவ சுயமரியாதை இழந்து இங்க இருக்கனும்ன்னு தேவை இல்லை.”

“இன்னொரு தடவை நீங்க அவங்க அப்பா அம்மாவை அவமதிச்சா… அவளே நீயும் ஆச்சு, உன் அம்மாவும் ஆச்சுன்னு என்னைத் தூக்கி போட்டுட்டு போய்டுவா.”


“எனக்குத் தெரியும் என் பொண்டாட்டி பத்தி. அதுதான் உங்ககிட்ட நல்லா பேசிட்டு தான், அவளை இங்க கூப்பிடனும்ன்னு, அவளை நிறுத்தி வச்சிருக்கேன்.”


சிவகாமி எதோ சொல்ல வர, “நீங்க இப்ப ஒன்னும் சொல்ல வேண்டாம். நல்லா யோசிச்சு சொல்லுங்க.”


“ஸ்வேதா எதாவது தப்பு பண்ணி இருந்தா, அதையும் சொல்லுங்க நான் கேட்கிறேன். ஆனா நீங்க அவளை மரியாதை குறைவா நடத்தினா, நான் பொறுத்துக்க மாட்டேன்.”


“அவங்க நம்ம வீட்ல சம்பந்தம் பண்ண தேடி வரலை. நான்தான் நமக்குத் தெரிஞ்சவங்க மூலமா, அவங்க வீட்ல பேசினேன்.”


“நீங்க ஒன்னும் அவங்க வீட்டோட கட்டிபிடிச்சு கொண்டாட வேண்டாம். அவங்க இந்த வந்தா, ஒழுங்கா நாலு வார்த்தை பேசுங்க. அது போதும்.”


“இதுக்கு எல்லாம் நீங்க சரின்னு சொன்னா ,என் பொண்டாட்டியை இங்க கூட்டிட்டு வரேன். இல்லைனா தனிக் குடித்தனம் போய்டுறேன். நம்ம கடைக்கு வேணாலும், நான் உங்களுக்கு வாடகை கொடுத்திடுறேன்.” என்றவன், வெளியே சென்று விட்டான்.


“எப்படிப் பேசுறான் பார்த்தியா? அவன் பொண்டாட்டிதான் இப்படிப் பேச சொல்லிக் கொடுத்திருப்பா. சரியான திமிர் பிடிச்சவ.” சிவகாமி பொரிய…


“அண்ணி ஒன்னும் காரணம் இல்லை. அண்ணன் இப்படிப் பேச நீங்கதான் காரணம்.” என்றான் முரளி.


“நான் இந்தப் பிரச்சனை எல்லாம் வர்றதுக்கு முன்னாடியே அண்ணன் கிட்ட கேட்டேன். அம்மாவை நான் என் கூட வச்சிகிறேன்னு.”


“அப்ப அண்ணன் என்ன சொன்னார் தெரியுமா?” என்றவன், அன்று நந்தா பேசிய அனைத்தையும் சொன்னவன்,


“அம்மா எப்பவும் எங்களோடதான்ன்னு சொன்னார். அதே அண்ணனை, நான் தனிக் குடித்தனம் போறேன்னு சொல்ல வச்சது நீங்கதான்.”


“இப்படி நீங்க பிரச்சனைப் பண்ணா, அவங்களுக்கு எப்படி மா சேர்ந்து இருக்கனும்ன்னு தோணும்? நானும் பக்கத்தில இல்லை, அண்ணனும் இல்லாம, நீங்க இவ்வளவு பெரிய வீட்ல தனியா இருப்பீங்களா?” முரளி நன்றாக உரைக்கும்படி சொல்ல,


“சரி அவளைக் கூடிட்டு வர சொல்லு.” என்றார் சிவகாமி.


“நீங்க திரும்ப அந்த மாதிரி பண்ணீங்கன்னா அண்ணனுக்கு ரொம்பக் கோபம் வந்திடும், பார்த்து இருந்துக்கோங்க.” என்றவன், தன் அண்ணனிடம் சென்று சொல்ல,


“சரி டா, நீ ரெண்டு நாள் இருப்ப இல்ல.. நான் இன்னைக்குப் போயிட்டு, நாளைக்கு அவளோட நம்ம வீட்டுக்கு வரேன்.” என்றான்.


அன்று இரவு நந்தா சொல்லாமல் கொள்ளாமல் ஸ்வேதா முன்பு சென்று நிற்க, அவளுக்கு ஒரே ஆச்சர்யம்.


“நீங்க வரேன்னு சொல்லவே இல்லையே…” என்றாள்.


“என் மாமனார் வீட்டுக்கு நான் சொல்லிட்டு வரணுமா?” நந்தா கேட்க,


“வந்தவர் கிட்ட ஏன் இப்படிக் கேள்வியா கேட்டுட்டு இருக்க…” என்ற அவளின் பாட்டி, “வாங்க தம்பி.” என்றார்.


திடிரென்று நந்தா வந்ததும், பார்வதிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அன்று வீட்டில் எளிமையான சமையல் தான். சண்முகமும் இன்னும் வீட்டிற்கு வந்திருக்கவில்லை. அவர் கணவருக்குச் செல்லில் அழைக்க முயற்சிக்க,


“நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம் அத்தை. நானும் ஸ்வேதாவும் போய் எல்லோருக்கும் பிரியாணி வாங்கிட்டு வரோம்.” எனச் சொல்லிவிட்டு நந்தா ஸ்வேதாவை அழைத்துக் கொண்டு சென்றான்.


இருவரும் அங்கிருந்த பிரபல ஹோட்டலில் பிரியாணி வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தனர். அதற்குள் சண்முகமும் வந்திருந்தார்.


“மாப்பிள்ளையை ஏன் அலைய வச்சீங்க? நான் வாங்கிட்டு வந்திருப்பேனே.” என அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போது, இருவரும் வீட்டிற்குள் நுழைந்தனர்.


அதன் பிறகு எல்லோரும் பேசி சிரித்தபடி உண்டு முடித்தனர். ஒரு வாரம் சென்று கணவனைப் பார்த்த மகிழ்ச்சியில் ஸ்வேதா இருந்தாள். பார்வை முழுவதும் கணவன் மீதுதான். அதை நந்தாவும் உணர்ந்து இருந்தான்.

அறைக்குள் வந்து கதவை மூடியதும், கணவனை ஆசையாக அனைத்துக் கொண்டவள், உடனே அவனிடம் இருந்து விலகி, “நீங்க இளைச்சு போயிட்டீங்க. வேலை வேலைன்னு சுத்திட்டே இருக்கீங்களா?” என்றாள்.

மனைவியின் கேள்வியில் நந்தாவுக்குச் சிரிப்புதான் வந்தது. “உங்க அம்மாவுக்கு ஒரு போன் போட்டுக் கொடுங்க. அந்த வாய் பேசுறாங்க உங்க அம்மா, பையனை ஒழுங்கா பார்த்துக்க முடியலையா?”


“ஏன் என் வீட்டுக்காரர் இளைச்சு போய் இருக்காருன்னு கேட்கிறேன்.” என்றாள் சட்டமாக.


“அம்மா தாயே, இப்பதான் அவங்களை அடக்கி இருக்கு. அடுத்து நீ ஆரம்பிக்காத.” என்றான்.


“சரி அதை விடுங்க. எனக்கு ஒன்னு உங்ககிட்ட கேட்கணும்.”  

அவள் என்ன கேட்கப்போகிறாள் என நந்தாவுக்கு தெரியும், “கேளு, ஆனா இப்ப இல்லை.” என்றவன், மனைவியைத் தூக்கிக்கொண்டு கட்டிலுக்குச் சென்றான். அதன் பிறகு அவன் எங்கே அவளைப் பேச விட்டான்.


Advertisement