Advertisement

காற்றின் மொழி



அத்தியாயம் 6



வீட்டிற்கு வர நள்ளிரவு ஆகிவிட… முகம் கழுவி உடை மாற்றி வந்த ஸ்வேதா, அறைக்கு வெளியே செல்ல, நந்தா குளியலறை புகுந்தான். அவனும் முகம் கைகால் கழுவி கொண்டு வெளியே வர… ஸ்வேதா இருவருக்கும் பால் கொண்டு வந்தாள்.


“இந்நேரம் தூங்கி இருப்பேன்னு நினைச்சேன்.” எனப் புன்னகைத்தவன், பாலை எடுத்துக் கொண்டான். அவன் குடித்து முடித்து வைத்ததும், ஸ்வேதா அவனை அனைத்துக் கொள்ள…. நந்தாவுக்கு இன்று எல்லாமே புதிதாக இருந்தது.


அவளாக வந்து ஒருநாளும் இப்படி அணைத்தது இல்லை. “என்ன டி இன்னைக்கு ஒரு மார்கமா இருக்க?” எனக் கேட்டவனுக்கு, புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தாள்.


“ஊர் சுத்திட்டு வந்தது அலுப்பா இல்லையா உனக்கு.” என்றவனைப் பேச விடாமல், அவனை அருகில் இழுத்து அவன் இதழில் அவள் இதழ் பதிக்க….


அவளிடம் இருந்து விலகியவன், “என்ன டி திடீர் காதல் என்மேல?” என்றான்.


“ஐயையையோ ! உங்களோட பெரிய இம்சையா இருக்கு. இத்தனை நாள் நீங்க இப்படிப் பண்ணும் போது, நான் எதாவது கேட்டேனா? நீங்க மட்டும் ஏன் இவ்வளவு கேள்வி கேட்கிறீங்க? போங்க போய்த் தூங்குங்க.” என்றாள் ஸ்வேதா கடுப்பாக.


இன்னைக்குதான் அவளா இறங்கி வந்தா, நீயே ஏன் டா அதைக் கெடுத்துகிற? எனத் தன்னையே கேட்டுக் கொண்டவன், திரும்பி நின்றவளை தன் பக்கம் திருப்பி, “இனிமே நான் பேசினா நீ என்னன்னு கேளு.” என்றவன்,


“கம் ஆன், ஸ்டார்ட்த்த மியூசிக்.” என்றான்.


“நானா…” ஸ்வேதா திணறலாகக் கேட்க,


“ம்ம்.. நீதான்.” என்றவன், மனைவியை ஆர்வமாகப் பார்க்க, அவனை மெதுவாக அணைத்தவள், அவன் உயரத்துக்கு எம்பி நின்று, அவள் இதழில் இதழ் பதித்தாள். அவள் இடையில் கைக் கொடுத்து, நந்தா அப்படியே அவளைத் தன் உயரத்திற்குத் தூக்கினான்.


அன்று ஸ்வேதா காட்டிய அதீதமான காதலில், அவர்கள் கூடல் விடியும் வரை தொடர்ந்தது. கணவன் மனைவிக்கும் மறக்க முடியாத இரவாகிப் போனது. அன்று மட்டும் அல்ல அதன் பிறகு வந்த இரவுகளும்.


முரளியும் இருந்ததால், அந்த வார இறுதி வேகமாக முடிய… திங்கள் அன்று வழக்கமான வேலைகள் தொடர்ந்தது. அன்றும் கஸ்தூரி வந்திருக்க, அக்கா தங்கை இருவரும் உட்கார்ந்து நாடகம் பார்க்க, அந்த நாடகக் கொடுமையைக் கேட்டபடி, சமையல் அறையில் உட்கார்ந்து ஸ்வேதா காய் நறுக்கிக் கொண்டு இருந்தாள்.


அந்நேரம் வீட்டிற்கு வந்த நந்தா, ஸ்வேதாவின் முகத்தைப் பார்த்தவனுக்கு, அவள் விருப்பம் இல்லாமல் உட்கார்ந்து இருப்பது தெரிய,


“ஆமாம் நீ ஏன் இன்னும் ஆபீஸ் போகாம இருக்க? உங்க லாரி ஆபீஸ் போக வேண்டியது தான.” என்றான்.


“அப்பா தான் ஒரு மாசம் ஆகட்டும்ன்னு சொன்னார்.”


“அதனால என்ன பரவாயில்லை. நீ இன்னைக்கே வேணாலும் போ.” என்றான்.


“ஏன் டா இன்னும் கொஞ்ச நாள் இருக்கட்டுமே.” என்ற அன்னையிடம்,


“இவளும் இந்த நாடகம் எல்லாம் பார்த்து மெண்டல் ஆகவா.” என்றவன்,


“இதை எல்லாம் எப்படித்தான் பார்க்கிறீங்களோ தெரியலை. எதோ பொழுது போகலைன்னு ஒன்னு ரெண்டு பார்த்தா பரவாயில்லை. பொழுதன்னைக்கும் இதுதான் வேலையா?” என்றவன், ஸ்வேதாவிடம், “வா நானே கொண்டு போய் உன்னை விடுறேன்.” என்றான்.


அவள் நறுக்கிக் கொண்டு இருந்த காய்கறிகளைப் பார்க்க, “அம்மா நறுக்கிப்பாங்க வா.” என்றான்.


நல்ல சுடிதார் தான் அணிந்து இருந்தாள். அதனால் அப்படியே கிளம்பினாள்.


“போயிட்டு வரேன் அத்தை.” என்றவள், கஸ்தூரியிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினாள்.


“கதவை தாழ்பாள் போட்டுக்கோங்க. நாடகம் பார்க்கிற ஆர்வத்தில திருடன் வந்தாக் கூடத் தெரியாது போல.” என்ற நந்தா, மனைவியை அழைத்துக் கொண்டு சென்றான்.


“பார்த்தியா அக்கா, உன்கிட்ட போகட்டுமான்னு ஒரு வார்த்தை கேட்கலை. உன் பையன் சரி இல்லை. அதுதான் அவ உன்னை மதிக்காம போறா.”


“நீயும் இப்படிக் கண்டும் காணாம இருந்தேன்னு வச்சுக்கோ… நாளைக்கு உன்பாடு தான் திண்டாட்டம் பார்த்துக்கோ.” என அக்காவை தங்கை நன்றாக ஏத்தி விட்டார்.


அங்கிருந்து மார்க்கெட் செல்ல கால் மணி நேரம் ஆகியது. இவர்கள் பைக்கில் சென்று இறங்கியதும், இவர்களைப் பார்த்த சண்முகம், இவர்களை நோக்கி விரைந்து வந்தார்.


“வாங்க மாப்பிள்ளை, வா மா ஸ்வேதா.” என்றார் மகிழ்ச்சியாக.


“ஸ்வேதா இன்னையில இருந்து ஆபீஸ் வரட்டும் மாமா. வீட்லயும் அவளுக்குப் போர் அடிக்குது.” என்றவன், “எனக்கு வேலை இருக்கு. நான் கிளம்புறேன்.” என உடனே கிளம்பியும் விட்டான்.


“நீ சொன்னியா ஆபீஸ் போறேன்னு?” சண்முகம் கேட்க,


“நான் சொல்லைப்பா… அவராத்தான் கூடிட்டு வந்தார்.” என்றாள் ஸ்வேதா. அதனால் சண்முகம் வேறு ஒன்றும் கேட்கவில்லை.
மதியம் வரை ஆபீஸ்ல் இருந்தவள், மதிய உணவிற்குத் தந்தையோடு தங்கள் வீட்டிற்குச் சென்றாள்.


பார்வதி தட்டில் அவளுக்கு உணவை வைக்க, அதைக் கவனிக்காமல் அவள் கைபேசியில் நந்தாவை அழைத்தாள்.


“என்ன டா? என்ன பண்ற?”


“இங்க அம்மா வீட்ல இருக்கேன்.”


“நீங்க சாப்டீங்களா…”


“இப்பதான் சாப்பிடுறேன்.”


“இன்னைக்கு ஏன் லேட்?”


“இப்பதான் வந்தேன்.” என்றான்.


“சரி சாப்பிடுங்க.” என வைத்து விட்டாள். பிறகே அவள் சாப்பிட ஆரம்பித்தாள். பெற்றோர் அவளைக் கவனித்துக் கொண்டிருந்ததைக் கூட அவள் அறியவில்லை.


“நீ போகும்போது, இங்க இருக்கிற உன் வண்டியை எடுத்துட்டு போ ஸ்வேதா. நாளைக்கு வரும்போது அதிலேயே ஆபீஸ் வந்திடு.”


“சரிப்பா…”


“நாளையில இருந்து காலையில ஆபீஸ் வந்திட்டு, மத்தியானமா வீட்டுக்கு போய்டுமா… மாப்பிள்ளை வேற வீட்டுக்கு சாப்பிட வருவார். நீ இல்லைனா நல்லா இருக்காது.” தந்தை சொல்ல, மகிழ்ச்சியுடன் சரி என்றாள்.


இன்று ஒரு நாளே நந்தாவை விட்டு இருக்க அவளுக்கும் கஷ்ட்டமாகத்தான் இருந்தது. ஆபீஸ்ல் பில் போட இன்னொருவர் இருக்கிறார். கணக்குப் பார்ப்பது தான் ஸ்வேதா. அதனால் கவலை இல்லை.


அங்கே நந்தாவுக்கு ஒரே தலைவலி, சாப்பிட வந்தவனைப் போட்டு சிவகாமி ஒரு வழியாக்கி இருந்தார்.


“கல்யாணத்துக்கு முன்னடின்னா பரவாயில்லை. கல்யாணத்துக்குப் பிறகும் இவதான் அவங்க அப்பா ஆபீஸ் பார்க்கணுமா?”


“என்கிட்டே போகட்டுமான்னு ஒரு வார்த்தை கூடக் கேட்கலை. எல்லாம் அவங்க இஷ்ட்டத்துக்கு நடந்தா, அப்புறம் நாங்க எதுக்கு இங்க இருக்கோம்?”என அவனை ஒரு வழியாக்கி இருந்தார்.


“அவ ஆபீஸ் போறேன்னு என்கிட்டே சொல்லவே இல்லை. நான்தான் வீட்ல சும்மா இருக்கிறதுக்குப் போயிட்டு வரட்டுமேன்னு நினைச்சேன்.”


“இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை? காலையில நான்தான் அவளைக் கிளம்புன்னு உங்க முன்னாடிதான் சொன்னேன். அவளுக்கே அப்பத்தான் தெரியும். என்னோட அப்படியே கிளம்பி வந்திட்டா, நீங்க பார்த்திட்டே தான இருந்தீங்க.”


“சும்மா சின்ன விஷயத்தை எல்லாம் பெரிசாக்காதீங்க.” என்றவன், சாப்பிட்டு எழுந்தான். இருந்த மனநிலையில டிவி கூடப் போடாமல் படுத்துக் கொண்டான்.


அங்கே ஸ்வேதா வீட்டில், சாப்பிட்டதுமே, “நான் கிளம்புறேன்.” என உடனே கிளம்பி சென்ற மகளைப் பார்த்து பெற்றவர்களுக்குச் சிரிப்புதான்.


மூன்று மணி போல வீட்டுக்கு வந்தவள், வாயில் மணியை அழுத்த, அப்போதுதான் மதிய உறக்கத்திற்குத் தயாராக இருந்த சிவகாமி வந்து கதவை திறந்து விட்டார்.


இவளைப் பார்த்ததும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டார். ஆனால் அதை ஸ்வேதா கவனிக்கவில்லை. நந்தாவை பார்க்கும் ஆவலில் நேராக, தங்கள் அறைக்குச் சென்று விட்டாள்.


கண் மூடி படுத்திருந்தவன், தன் நெற்றியில் படித்த மென்மையான ஸ்பரிசத்தை உணர்ந்த நொடி, விழிகளைத் திறந்தவன், தன் அருகே இருந்த மனைவியை ஆவலாக அனைத்துக் கொண்டான்.


“சாயங்காலம் தான் வருவேன்னு நினைச்சேன். இப்பவே வந்திட்ட.”


“ம்ம்.. அப்பா தான் மதியம் வரை இருந்தா போதும்ன்னு சொல்லிட்டாங்க. என்னோட வண்டி எடுத்திட்டு வந்திட்டேன். இனிமே மதியம் சேர்ந்தே சாப்பிடலாம்.” என்றாள்.


“அப்ப காலையில சீக்கிரம் போயிடு.” என்றான்.


“ம்ம்.. நீங்க ஒன்பது மணிக்கு கிளம்புவீங்க இல்ல… அப்ப போனா சரியா இருக்கும்.” என்றாள்.


மாலை இவர்கள் அறையில் இருந்து வந்தபோது, கஸ்தூரி கிளம்பி இருந்தார். நந்தா டீ குடித்து விட்டு கடைக்குக் சென்றுவிட்டான்.


மாலை பாத்திரம் கழுவி, வேலைக்காரி துவைத்துப் போட்டிருந்த துணிகளை எடுத்து வந்து மடித்து வைத்து, விளக்கேற்றி என எல்லா வேலைகளையும் ஸ்வேதா தான் செய்வாள். ஆனால் இன்று ஏனோ, அவள் செய்வதற்கு முன் முந்திக் கொண்டு எல்லாமே சிவகாமியே செய்தார்.


அவர்கள் வீட்டில் வீடு பெருக்கி துடைக்கவும், துணி துவைக்கவும் மட்டும் ஆள் உண்டு. சிவகாமி மட்டும் எல்லா வேலைகளையும் செய்ய முடியாது என முன்பே வைத்திருந்தார்கள்.


எதோ கோபமாக இருக்கிறார் என ஸ்வேதாவுக்குப் புரிந்தது. ஆனால் என்ன என்று புரியவில்லை. ஸ்வேதா இஸ்த்திரி செய்ய வேண்டிய துணிகளை எடுத்து சென்று, திவனில் உட்கார்ந்து அதைச் செய்ய ஆரம்பித்தாள்.


எல்லாமே அவர் தானே செய்தார். இரவு உணவும் ஒரு வேளை அவரே செய்வாரோ என நினைத்து, ஸ்வேதா எதுவும் செய்யாமல் இருந்தாள்.


டிவி பார்ப்பது போல உட்கார்ந்து இருந்த சிவகாமிக்கு அவளது எண்ணம் புரிந்தது.

“அம்மா டி, இவ லேசுபட்டவ இல்லை. நாம வேலை செஞ்சா நம்மையே செய்யப் போட்டுடுவா போலிருக்கு.” என நினைத்துக் கொண்டார்.
ஏழு மணி வரை அவர் எழுந்து செல்ல வில்லை என்றதும், தோசைக்கு மாவு இல்லாததால், ஸ்வேதா சென்று சப்பாத்தி செய்து குருமா வைத்தாள்.


நந்தா வந்ததும், அவள் சூடாகச் சப்பாத்தி போட்டுக் கொண்டு வர… அம்மாவும் மகனும் உட்கார்ந்து சாப்பிட்டார்கள். தானும் சாப்பிட்டுப் பாத்திரம் எல்லாம் தேய்த்து வைத்து விட்டுதான் அறைக்குச் சென்றாள்.


காலை ஆபீஸ் செல்ல வேண்டும் என்பதால், சீக்கிரமே எழுந்த ஸ்வேதா, அன்று செவ்வாய்க் கிழமை என்பதால் பொங்கல் வைத்து சாம்பார் செய்தாள். மதியத்துக்கும் சேர்த்து நிறையவே சாம்பார் செய்து விட்டாள். அதனால் சிவகாமிக்கு பொரியல் வைக்கும் வேலை மட்டும் தான்.


நந்தா கடைக்குச் செல்லும் போதே ஸ்வேதாவும் சென்றுவிட, சிவகாமி காலை உணவை முடித்து விட்டு, பாத்திரம் தேய்த்துக் கொண்டு இருந்தார். அப்போது அங்கே வந்த கஸ்தூரி, “என்ன அக்கா,  நீ பாத்திரம் தேய்க்கிற? உன் மருமகள் இதைக் கூடச் செய்யமாட்டாளா?” எனக் கேட்க,


“அவ அவங்க அப்பா ஆபீஸ் போயிட்டா, அவ வர்ற வரை, அப்படியே போட்டு வைக்க முடியுமா, அதுதான் நான் தேய்க்கிறேன்.” என்றார் சிவகாமி.


“அவங்க அப்பா ஆபீஸ் தான. ஏன் லேட்டா போனா என்ன? வேலையை முடிச்சு வச்சிட்டு போக வேண்டியது தான.”


“இந்த வீட்ல அதெல்லாம் நாம சொல்ல முடியாது கஸ்தூரி.” சொல்லிவிட்டு சிவகாமி திரும்ப, அங்கே ஹாலில் நின்று நந்தா எல்லாவற்றையும் கேட்டு இருந்தான்.


மகன் எதாவது பேசுவான் என்று பார்த்தால்… எதுவும் பேசாது, எதோ எடுக்க வந்ததை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டான்.


நந்தா எதுவும் பேசாமல் சென்றதும், சிவகாமிக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. மதியம் ஸ்வேதா வந்தபிறகுதான் நந்தா வந்தான். அப்போதும் எதுவும் கேட்கவில்லை. எப்போது வந்தாலும் சாப்பிடீங்களா, டிவி பார்க்கிறீங்களா இல்லையென்றால் இதைப் போய் எப்படிப் பார்க்கிறீங்க என எதாவது பேசுவான். இன்று எதுவும் கேட்கவில்லை.


அன்று மாலை வரை கூடக் கஸ்தூரி கிளம்பவில்லை. “கால் வலி இருக்கு. டாக்டர் வீட்டுக்கு போயிட்டு போகணும், டாக்டர் ஏழு மணிக்குதான் வருவார்.” என இங்கேயே தான் இருந்தார்.


அன்று ஸ்வேதா தான் எல்லா வேலைகளையும் செய்தாள். காலையில் மாவு அரைத்து விட்டதால். இரவுக்கு இட்லி ஊற்றி சட்னி வைத்தாள்.


“நைட்டுக்கு என்ன மா?” கஸ்தூரி கேட்க,


“இட்லி அத்தை.” என்றாள்.


“நீ செய்றதுக்கு முன்னாடி உன் மாமியார் கிட்ட ஒரு வார்த்தை என்ன செய்யட்டும்ன்னு கேட்டுக்க மாட்டியா? என்ன செய்றதுனாலும் சொல்லிட்டு செய்யணும்.” என அவர் நீட்டி முழங்க,


“இது என்ன பெரிய பங்கு வர்த்தகமா? நான் ஒவ்வொன்னுக்கும் வந்து கேட்க, இட்லி இல்லைனா தோசை, அதுவும் இல்லைனா சப்பாத்தி. இதைச் செய்யறதுக்குக் கேட்க வேற செய்யணுமா?”


“நான் உங்க ஓவியா மாதிரி இல்லை அத்தை. இருபது வயசுல இருந்து எங்க அப்பாவோட பிசினஸ் பார்கிறேன். இப்படி ஒன்னாங்கிளாஸ் படிக்கிற பிள்ளைங்க மாதிரி, ஒவ்வொன்னுக்கும் கேட்டு கேட்டுச் செய்ய எனக்குத் தோணாது. நீங்களும் எதிர்பார்க்காதீங்க.” எனச் சொல்லிவிட்டு எழுந்து உள்ளே சென்று விட்டாள்.


“அம்மாடி என்ன வாய்?” எனக் கஸ்தூரி வாய் பிளக்க,


“நானே பேசாம தான இருக்கிறேன். நீயேன் அவகிட்ட வாயைக் கொடுக்கிற?” எனச் சிவகாமி தன் தங்கையைக் கடிந்துகொண்டார்.


இவரும் தங்கையோடு சேர்ந்து தான் ஆடியிருப்பார். ஆனால் நந்தாவின் பாராமுகமே அவரை அடக்கி வைத்திருந்தது.


இரவு வீட்டிற்கு வந்தவன், “என்ன மா சாப்டீங்களா?” என்றான். அதிலேயே சிவகாமி கொஞ்சம் குளிர்ந்து விட்டார்.


“இல்லை இனிமே தான்.” என்றார்.


இரவு அறைக்கு வந்த ஸ்வேதா, நந்தாவிடம் அவன் சித்தியோடு பேசியதை அப்படியே சொல்லிவிட்டாள்.


“நேத்து அத்தை என்னோட பேசவே இல்லை. அவங்களே எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செஞ்சாங்க. எதோ கோபமா இருக்காங்கன்னு நினைச்சு நான் அமைதியாதான் இருந்தேன். உங்ககிட்ட கூட நான் அதைச் சொல்லலை. ஆனா உங்க சித்தி என்னை அதிகாரம் பண்ணா, அதெல்லாம் என்னால பார்த்திட்டு இருக்க முடியாது.” ஸ்வேதா தெளிவாகச் சொல்லிவிட…


“சரி விடு நான் பார்த்துகிறேன். ஆனா அம்மாவை எதுவும் எதிர்த்து பேசாத… எதுவா இருந்தாலும், என்கிட்டே சொல்லு நான் பார்த்துகிறேன்.”


“பாத்திரம் தேய்க்க வேணா ஆள் வச்சுக்கோ. அம்மாவுக்குக் கொஞ்ச நாள் ரெஸ்ட் கொடுக்கலாம்.” என்றான்.


“வேண்டாம் அது ஒன்னும் கஷ்ட்டமான வேலை இல்லை. நானே பண்ணிக்கிறேன்.” என்றாள் ஸ்வேதா.


அம்மாவுக்கும் மனைவிக்கும் இடையே அல்லாட ஆரம்பித்தான் நந்தா.

Advertisement