Advertisement

காற்றின் மொழி



அத்தியாயம் 5


திருமணம் முடிந்து இரண்டு வாரங்கள் ஆகி இருந்தது. விருந்துக்குச் செல்வது எல்லாம் முடிந்து, அன்று நந்தா வழக்கம் போலக் கடைக்குச் சென்று இருக்க, பத்து மணி போலச் சிவகாமியின் தங்கை கஸ்தூரி வீட்டிற்கு வந்தார்.


நந்தா திருமணதிற்கு வந்த அவர் மகள், இத்தனை நாள் இங்கு இருந்ததால்… இந்தப் பக்கம் அதிகம் வராமல் இருந்தார். அவர் வீடு இங்கே அருகில் தான் இருக்கிறது. மகன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவர்களைப் போல வசதி இல்லை.


“டீ போடுமா.” சிவகாமி ஸ்வேதாவிடம் சொல்ல, அவருக்கும் அவர் தங்கைக்கும் டீ போட்டுக் கொண்டு வந்த ஸ்வேதா அவர்களிடம் கொடுத்து விட்டு அங்கேயே உட்கார்ந்தாள்.


“அக்கா உன்னை விட ஸ்வேதா நல்லா டீ போட்டிருக்கு கா…” என்றவர், “நீ நல்லா டீ போடுற பா…” என்றார். ஸ்வேதாவும் புன்னகைத்து விட்டு டிவி பார்த்தாள்.


பதினோரு மணி ஆனதும், சிவகாமி மதிய சமையலுக்கு முதலில் உலை வைத்து விட்டு வந்தவர், காய் நறுக்கியபடி நாடகம் பார்த்தார்.


அக்காவும் தங்கையும் அந்த நாடகம் எதோ நிஜ வாழ்வில் நடப்பது போல…. “அக்கா பார்த்தியா அவளை… நல்லா இருப்பாளா அவ….”


“ஐயையோ ! அதைச் சாப்பிட போறாளே… சாப்பிடாத அதுல விஷம் இருக்கு.” என இங்கே இருந்து டிவியைப் பார்த்து… இருவரும் பேச…. ஸ்வேதாவுக்கு ஒரே கடுப்பாக இருந்தது.


கேவலமான ஒரு நாடகம், அதைப் பார்த்து இருவரும் பதற வேறு செய்ய… ஐயோ நம்மால இதுக்கு மேல முடியாது என நினைத்தவள், “அத்தை, நான் போய்த் துணி மடிச்சு வைக்கிறேன்.” என அறைக்குச் சென்றுவிட்டாள்.


ஸ்வேதா அறைக்குள் சென்றதும், “என்னக்கா மருமகள் வந்தும் நீ சமைக்கிற?” என கஷ்தூரி கேட்க,


“காலையில மதியம் அவதான் சமைக்கிறா… மதியம் மட்டும்தான் நான் பண்றேன்.”  என்றார் சிவகாமி.


“என்னவோ போ கா… மருமகள் வந்தும் உனக்கு ரெஸ்ட் இல்லையா?”

“பசங்களுக்கு என் சமையல் தான் பிடிக்கும்.”


“சமையல் தான் பண்ணலை, காய்யாவது நறுக்கிக் கொடுக்கலாம் இல்லை. அது என்ன நாம ரெண்டு பேரும் இங்க இருக்க… அவ உள்ள போறது? நான் சொல்றேன்னு தப்பா நினைக்காத… இப்ப விட்டேனா அப்புறம் பிடிக்க முடியாது.” என்றார்.


துணியை மடித்து விட்டு, என்ன செய்வது என்று தெரியாமல் ஸ்வேதா கட்டிலில் படுத்துக் கொண்டாள்.


சிறிது நேரம் ஆகியும் அவள் வரவில்லை என்றதும், “ஸ்வேதா…” எனச் சிவகாமி குரல் கொடுக்க… ஸ்வேதா எழுந்து வெளியே வந்தாள்.


“இந்தக் கீரையைக் கொஞ்சம் கிள்ளிக் கொடு மா…” மாமியார் சொன்னதும், சரி என்று கீரையை எடுத்து சென்று, உணவு மேஜையில் உட்கார்ந்து ஸ்வேதா கிள்ளினாள்.


மதிய உணவுக்கும் அவர் தங்கை வீட்டிற்குச் செல்லவில்லை. இங்கே தான் சாப்பிட்டார். ஒரு மணி ஆனதும் அவர்கள் இருவரும் டிவி பார்த்துக் கொண்டே சாப்பிட, நந்தா வந்ததும் அவனோடு சேர்ந்து ஸ்வேதா சாப்பிட்டாள்.

மதியம் இரண்டு மணிக்கு வந்தால்.. அவன் திரும்பச் செல்ல நான்கு மணி ஆகும். இருவரும் தங்கள் அறையில் இருக்கும் டிவியில் படம் அல்லது பாட்டுக் கேட்பார்கள்.


மாலை நான்கு மணிக்கு டீ குடித்து விட்டுத்தான், கஸ்தூரி அவர் வீட்டிற்குக் கிளம்பினார். செல்லும் முன் அவர்கள் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தார்.


அந்த வார இறுதியில் ஸ்வேதாவும் நந்தாவும் கஸ்தூரியின் வீட்டிற்குச் சென்றனர். தங்கை வீடு என்பதால்… அவர்களுடன் சிவகாமியும் வந்தார். சாப்பிட்டதும் நந்தா உடனே கிளம்பி விட, சிவகாமி நாம சாயங்காலம் போகலாம் என்றதால்… ஸ்வேதா அவருடன் இருந்தாள்.


ஸ்வேதா கவனித்துக் கொண்டே இருந்தாள். கஸ்தூரி உட்கார்ந்து கொண்டு மருமகளையே எல்லா வேலையும் வாங்கினார். அந்தப் பெண்ணும் முகம் சுளிக்காமல் எல்லா வேலையும் செய்தாள்.


சற்று கருமையான நிறம் தான். ஒல்லியாக ,உயரம் குறைவாகப் பார்க்கக் சின்னப் பெண்ணாக இருந்தாலும், கலையாக இருந்தாள். உணர்ச்சிகள் தொலைத்த முகம். அவள் என்ன நினைக்கிறாள் என அவள் முகத்தில் இருந்து கண்டுபிடிக்கவே முடியவில்லை.


கஸ்தூரி வேலை வாங்க வாங்க செய்து கொண்டே இருந்தாள். ஒரு முகச் சுளிப்போ, வெறுப்போ இல்லை. நமக்கு எல்லாம் இப்படி இருக்க முடியாது பா…. இவள் தெய்வப் பிறவி என ஸ்வேதா நினைத்துக் கொண்டாள்.


“ஓவியா, சாயங்காலம் வடைக்கு ஊற வச்சிடு.” கஸ்தூரி சொல்ல, சரியென ஓவியா தலையாட்ட…

பாவம் அதையும் இந்தப் பெண்தான் செய்யவேண்டும் என நினைத்த ஸ்வேதா, “இப்ப சாப்பிட்டதே வயிறு நிறைய இருக்கு. வடை எல்லாம் வேண்டாமே.”  என்றாள். அவள் தனக்காகத் தான் சொல்கிறாள் என ஓவியாவுக்குப் புரிந்தது.


“இருங்க அக்கா, சாயங்காலம் போகலாம்.” எனச் சொல்லிவிட்டு ஓவியா உள்ளே போனாள்.


ஸ்வேதாவை விட ஓவியா சின்னவள் தான். கஸ்தூரியின் மகன் வாசு நந்தாவை விடச் சிறியவன்தான். ஆனால் அவனுக்கு முன்பே திருமணம் முடிந்து இருந்தது. அவனுக்குக் காலில் ஒரு சின்னக் குறை, சற்று தாங்கித் தான் நடப்பான். அதனால் ஏழ்மையான வீட்டில் இருந்து பெண் எடுத்து இருந்தனர். அதனால் கஸ்தூரி தன் இஷ்ட்டதிற்கு மருமகளை ஆட்டுவித்துக் கொண்டு இருந்தாள்.


கஸ்துரியின் கணவர் ஒரு கடையில் கணக்கு எழுதிக் கொடுக்கும் வேலை பார்க்கிறார். கணவரும், மகனும் காலையில் வேலைக்குச் சென்றதும், இவர் அக்கா வீட்டிற்கு வந்துவிடுவார்.


சிவகாமியும் கஸ்தூரியும் நாடகத்தில் ஆழ்ந்து விட… ஸ்வேதா ஓவியாவை தேடி சென்றாள். அவள் சமையல் அறையில் தரையில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள். அவளோடு சென்று ஸ்வேதாவும் உட்கார்ந்து கொண்டாள்.


சாப்பிட்டு முடித்து ஓவியா வடைக்கு ஊற வைத்து விட்டு, ஊற வைத்திருந்த துணியைத் துவைக்கச் சென்றாள். ஸ்வேதாவும் பின்கட்டில் இருந்த கல்லில் உட்கார்ந்து கொண்டாள்.


“எல்லா வேலையும் நீதான் பண்ணுவியா?”

“ஆமாம் கா…எப்பவும் காலையில துவைச்சிடுவேன். இன்னைக்குச் சமையல் பண்ணதுல லேட் ஆகிடுச்சு.”


“நீ என்ன படிச்சிருக்க?”


“ஸ்கூல் தான் முடிச்சேன். காலேஜ் போறதுக்குள்ள, இவங்க வீட்ல கேட்டாங்கன்னு கல்யாணம் பண்ணிட்டாங்க.” என்றாள்.


“ஏன் இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணாங்க?”


“எங்களை விட இவங்க வசதியான இடம், சொந்தக்காரங்க வேற, அதனால கேட்டதும் கொடுத்திட்டாங்க. எனக்கு ஒரு தங்கச்சி வேற இருக்கா.”


“ஓ…” என ஸ்வேதா எல்லாம் கேட்டுக் கொண்டாள்.


ஓவியா சுடிதார் தான் போட்டிருந்தாள். ஆனால் புடவையும் துவைத்தாள்.


“இது யாரோட புடவை?”


“அத்தை டிரஸ், மாமா டிரஸ், எல்லாமே நானே தான் துவைப்பேன்.” என்றாள்.


“ஏன் அவங்க துவைச்சிக்க மாட்டாங்களா?” ஸ்வேதா கேட்க,


“இது பரவாயில்லை. என் நாத்தனார் வந்தா, அவங்க துணி, அவங்க பசங்க துணி எல்லாம் என்னைத்தான் துவைக்க வைப்பாங்க.” என்றாள்.


“நீ ஏன் துவைக்கிற? முடியாதுன்னு சொல்ல வேண்டியது தான.”


“சொல்லிட்டு, நான் எப்படி இந்த வீட்ல இருக்கிறது? எங்க அப்பா அம்மாவோட வேற சண்டை போட்டுட்டாங்க. அதனால அவங்களும் என்னை வந்து பார்க்க முடியாம இருக்காங்க.” என்றாள்.


வீட்டிற்கு வந்த ஸ்வேதா நந்தாவிடம் புலம்பி தள்ளி விட்டாள். “இப்படியெல்லாம் கூடவா மனுஷங்க இருப்பாங்க. ஒரு மனசாட்சி வேண்டாம்.”

“உங்க சித்தி வீட்டுக்கு மருமகள் கொண்டு வரலை. வீட்டுக்கு ஒரு வேலைக்காரி கொண்டு வந்திருக்காங்க.”


“நான் மட்டும் ஓவியா இடத்தில இருந்தேன், உங்க சித்தி தலையில் ஒரு பெரிய கல்லைத் தூக்கி போட்டுடுவேன்.” என்றாள் ஆத்திரமாக.



“நீ சொன்னப் பிறகுதான் எனக்கு இவ்வளவு தெரியும். அவ புருஷன் தான் அவங்க அம்மாகிட்ட பேசணும். கல்யாணம் மட்டும் பண்ணிக்கத் தெரிஞ்சுது. பொண்டாட்டிய எப்படி வச்கிக்கனும்ன்னு அவனுக்குத் தெரியாதா…” என நந்தா, வாசு மீதுதான் கோபப்பட்டான்.


ஸ்வேதா அதைப் பற்றியே திரும்பத் திரும்பப் பேச… “போதும் நீ பொங்கினது. கொஞ்சம் அடங்கு.” என்றவன்,


“முரளி நம்மைப் பெங்களூர் கூப்பிடுறான். போயிட்டு வரலாமா.” என்றான்.


“ஓ… போகலாமே…” என ஸ்வேதா குஷியாகி விட்டாள்.


வியாழன் அன்று காலை நான்கு மணிக்கெல்லாம் இருவரும் வீட்டில் இருந்து காரில் கிளம்பினர். நந்தா தான் ஓட்டிக் கொண்டு வந்தான்.


திருமணம் முடிந்து இதுதான் அவர்களின் தொலைத்தூரப் பயணம். முன் தினம் முழுவதும் ஸ்வேதா அவள் வீட்டில்தான் இருந்தாள். இன்று பெங்களூர் செல்கின்றனர்.


ஒன்பது மணிக்கெல்லாம் பெங்களூர் சென்று சேர்ந்து விட்டனர். அங்கே முரளி இவர்களின் காரில் ஏறிக்கொள்ள, நகரத்தை தாண்டி இருந்த, வொண்டர் லா ரேசொர்ட் சென்றனர். வழியிலேயே காலை உணவை முடித்துக் கொண்டனர்.


அங்கே செல்லும் போதே காலை பதினொன்று மணிக்கு மேல் ஆகி விட… முதலில் அங்கிருந்த ரைட்ஸ் எல்லாம் சென்றனர். மூவருக்குமே மிகவும் விருப்பம் என்பதால்… நன்றாக அங்கே விளையாடி மகிழ்ந்தனர். அங்கங்கே நின்று செல்பி எடுத்துக் கொண்டனர்.


மதிய உணவு முடித்து விட்டு, நீரில் இறங்கி நன்றாக ஆட்டம் போட்டனர். மாலை ஆறு மணி வரை அங்கிருந்து விட்டு, காரில் பெங்களூர் திரும்பினர்.

வரும் வழியிலேயே அசதியில் பின் இருக்கையில் படுத்து ஸ்வேதா உறங்கி வட… முரளிதான் கார் ஓட்டிக் கொண்டு வந்தான். நந்தாவும் உறங்குவதும் விழிப்பதுமாக இருந்தான்.


முரளி தங்கி இருப்பது ஒற்றை அறையில் என்பதால்… அங்கே செல்லாமல், முக்கியச் சாலையில் இருந்த ஹோட்டல் ஒன்றில், இரவு தங்க முன் பதிவு செய்து வைத்திருந்தனர்.


அண்ணனையும் அண்ணியையும் ஹோட்டலில் இறக்கி விட்டவன், “இங்க இருந்து பக்கம்தான் வீடு. நான் கார் எடுத்து போயிட்டு, காலையில எடுத்திட்டு வந்திடுறேன்.” என முரளி விடைபெற்று செல்ல…. தூங்கி வழிந்த மனைவியை அழைத்துக் கொண்டு, நந்தா அறைக்குச் சென்றான்.


மாலை அங்கிருந்து கிளம்பும் போது சாப்பிட்டு இருந்ததால்…இருவரும் அப்படியே சென்று படுக்கையில் விழுந்தனர்.


விடியற்காலை நந்தாவின் உறக்கம் கலைய, அருகில் படுத்திருந்த ஸ்வேதாவின் உறக்கத்தை மட்டும் அல்லாமல், அவளையும் கலைக்க ஆரம்பித்தான்.


கணவனின் இதழ் மற்றும் விரல் செய்த மாயத்தில் கண் திறந்தவள், அவனோடு வேறு உலகில் சஞ்சரிக்கத் தொடங்கினாள். மீண்டும் இருவரும் நன்றாக உறங்கி விட, ஒன்பது மணிப் போல… முரளி கைப்பேசியில் அழைத்ததும் தான் எழுந்தனர்.


அதன்பிறகும் எங்கே உடனே கிளம்பினர். கணவன் மனைவி இருவருக்கும், காதல் பாடம் படிக்கவே நேரம் போதவில்லை. காலை கிளம்பும் போதே, அறையைக் காலி செய்து கொண்டு சென்றனர்.


“சீக்கிரம் கிளம்பச் சொன்னேன் தானே… ஊருக்குப் போய்த் தூங்க வேண்டியது தான… “முரளி சொல்ல… ஸ்வேதா அசடு வழிந்தாள்.


“சின்னப் பையன் டா நீ, இன்னும் வளரனும் தம்பி.” என நந்தா மனதிற்குள் நினைத்தான்.


ஒரு பெரிய மாலுக்கு முரளி அவர்களை அழைத்துச் சென்றான். ஏற்கனவே அங்கிருந்த திரை அரங்கில் முன் பதிவு செய்திருந்தான்.


படம் ஆரம்பிக்கும் நேரம்தான் உள்ளே சென்றனர். இது போல இடங்களுக்கு ஸ்வேதா வந்ததே இல்லை. அவள் எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.


படம் முடிந்து மதிய உணவுக்கு அங்கிருந்த ஹோட்டலில் சென்று சாப்பிட்டனர். உண்டு முடிக்க மூன்று மணி ஆகிவிட்டது. அதன் பிறகு அங்கே இருந்த கடைகளில் சுற்றிக் கொண்டு இருந்தனர்.


நந்தா ஸ்வேதாவுக்கு உடைகள் பார்த்துக் கொண்டு இருந்தான். “இந்தா இதைப் போய்ப் போட்டுட்டு வா…” அவன் கொடுத்தா உடைகளை வாங்கிக் கொண்டு ஸ்வேதா செல்ல, நந்தாவும் அவள் பின்னே சென்றான். முரளி ஆண்களுக்கான பிரிவில் இருந்தான்.


ஸ்வேதா உள்ளே சென்று ஒவ்வொன்றாக அணிந்து வந்து காட்ட, நந்தா வெளியே நின்று பார்த்தான். கடைசியாக ஸ்வேதா ஒரு டாப்ஸ் அணிந்து வர… “இது அவ்வளவா நல்லா இல்லை. மத்தது எல்லாம் கொடு. நான் பில் போடுறேன். நீ மாத்திட்டு வா.” என்றவன், ஸ்வேதா கொடுத்த உடைகளை வாங்கிக் கொண்டு சென்றான்.


ஸ்வேதா உடை மாற்றி விட்டு வெளியே வர..அப்போது, “ஹாய் ஸ்வேதா.” எனக் குரல் கேட்க, சட்டென்று திரும்பிப் பார்த்தாள். அங்கே மில்கி ஸ்வேதா நின்று கொண்டிருந்தாள்.


சட்டென்று ஆள் அடையாளமே தெரியவில்லை. கை இல்லாத உடையில், மெழுகு பொம்மை போல, கொழுக் மொழுக்கென்று இருந்தாள்.


“என்னைத் தெரியலையா?” என்றவள், “அது நந்தா தானே… நீ அவரைத் தான் கல்யாணம் பண்ணி இருக்கியா? அப்ப எல்லாம் அப்படிச் சண்டை போடுவீங்க. இப்ப உனக்காக டிரெஸ்ஸிங் ரூம் வாசல்ல நிற்கிறார்.” என அவள் சிரிக்க…


“இவ என்ன இவ்வளவு சாதாரணமா பேசுறா? அவர் இவளைப் பார்த்தா பீல் பண்ணப்போறார்.” என நினைத்தவளுக்குக் கோபம் வர…


“பிறகு நீ விட்டுட்டு போனா, அவர் உன்னையே நினைச்சிட்டு இருக்கணுமா?” என்றாள் சூடாக.


“தெரியாம பேசாத, நான் ஒன்னும் அவரை விடலை. அவர்தான் என்னை வேண்டாம்ன்னு சொன்னார்.” என்றதும், ஸ்வேதாவுக்கு மிகவும் அதிர்ச்சி, “ என்னது இவன்தான் வேண்டாம்ன்னு சொன்னனா?”


“எனக்கும் அதுல ஒன்னும் வருத்தம் இல்லை. ஏன்னா எப்படியும் ஒருநாள் நாங்க பிரிஞ்சுதான் இருப்போம். எனக்கு அவர்கிட்ட சொல்ல தைரியம் இல்லை. அதனால அவர் சொன்னதும், நானும் சரின்னு விலகிட்டேன்.” என்றாள்.


“ஏன்?”


“நீ அன்னைக்குச் சொல்லும் போதே, எனக்கு உறுத்தல் தான். லவ் பண்றேன்னு சொல்றியே, உங்க வீட்ல சொல்ல தைரியம் இருக்கான்னு கேட்டியே….”

“உண்மையாவே தைரியம் இல்லாதவங்க காதலிக்கக் கூடாது. என்னால அவரோட முழு மனசா பழக முடியலை. அது அவருக்கும் புரிஞ்சிருக்கும். அதுதான் அவரே விலகிட்டார்.” என்றாள்.


ஸ்வேதாவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவள் மௌனமாக நின்றாள்


“வீ ஆர் நாட் மேட் பார் ஈச் அதர். அதனால தான். நந்தா சீக்கிரமே அதை உணர்ந்திட்டார். இல்லைனா ரெண்டு பேரும் ரொம்பக் கஷ்ட்டப்பட்டிருப்போம்.” என்றாள்.


“நீ இங்க தான் இருக்கியா?”


“ஆமாம் பெங்களூர்ல தான் அவர் வேலை பார்கிறார். எனக்குக் காலேஜ் முடிச்சதும், கல்யாணம் ஆகிடுச்சு. மூன்னு வயசுல ஒரு பொண்ணு இருக்கா.” என்றாள்.


வேறு என்ன பேசுவது என்று தெரியாமல் ஸ்வேதா நிற்க, “நந்தா உன்னைத் தேடுறாங்க பாரு. நான் கிளம்புறேன்.” என்றவள், அங்கிருந்து விரைந்து சென்று விட…


வரிசையில் நின்றாலும், இன்னும் அவளைக் காணவில்லையே என நந்தா, அவள் வரும் திசையையே பார்த்துக் கொண்டு இருந்தான்.


சற்று முன்னே சென்று, இங்க இருக்கேன் எனக் கணவனுக்குக் கை அசைத்தவள், மில்கி ஸ்வேதாவைத் தேட… அவள் எந்தப் பக்கம் சென்றாள் என்றே தெரியவில்லை.


இத்தனை நாள் மனதிற்குள் ஒரு உறுத்தல் இருந்தது. அவன் காதலித்தவள் வேண்டாம் என்றதால் தானே, தன்னைத் திருமணம் செய்தான் என்று… ஆனால் இன்று அந்த உறுத்தல் மறைந்தது.

முரளி இருக்கிறான் என்று கூடப் பார்க்காமல், கணவனை ஒட்டிக் கொண்டே அலைந்தாள்.


கணவனிடம் பிஸா கேட்டாள். இதுவரை அவளாக எதுவும் அவனிடம்  கேட்டதே இல்லை. அவனாகத்தான் வாங்கிக் கொடுப்பான். அவள் கேட்ட மகிழ்ச்சியில், உடனே அங்கே எங்கே இருக்கிறது எனத் தேடி வாங்கிக் கொடுத்தான்.


அங்கிருந்தே அப்படியே சேலத்திற்குக் கிளம்பினர். வார இறுதி என்பதால்… முரளியும் அவர்களோடு சேர்ந்து கொண்டான்.


முரளி ஓட்டுனர் இருக்கையில் உட்கார, “நீங்களும் என்னோட பின்னாடி உட்காரணும்.” என்றாள் கணவனிடம்.


அவளோடு பின் இருக்கையில் உட்கார்ந்தவன் மடியில், வசதியாகப் படுத்துக் கொண்டாள்.


“என்ன டி அச்சு உனக்கு?” என்றான் அவளிடம் கிசுகிசுப்பாக. அவன் முகம் பார்த்து புன்னகைத்தவள், அவன் இடையைக் கட்டிக்கொண்டு கண் மூடிக் கொண்டாள். அவளுக்கு எதோ சொல்லத் தெரியாத மகிழ்ச்சி.

Advertisement