Advertisement

 

காற்றின் மொழி



அத்தியாயம் 4



இரவு உணவு முடிந்து, அன்று இரவுக்காக ஸ்வேதாவை அவள் சகோதரிகள் தயார் செய்து கொண்டிருக்க…நந்தா முதலில் அறைக்கு வந்துவிட்டான்.


வெண் நிற பட்டில், ஸ்வேதா கையில் பால் செம்புடன் உள்ளே வர…. கட்டிலில் சாய்ந்து அமர்ந்தபடி, நந்தா அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.


“ஸ்வேதா அவனிடம் பாலைக் கொடுக்க… அதை வாங்கிப் பாதிக் குடித்தவன், மீதியை அவளிடம் கொடுத்தான், அவள் பேசாமல் குடித்து விட்டு டம்ளரை வைத்து விட்டு வந்து கட்டிலில் அமர்ந்தாள்.


“தூங்கலாமா…” என்றவன், கட்டிலில் தள்ளிப் படுத்துக் கொண்டான்.


விடி விளக்கை போட்டு விட்டு, ஸ்வேதாவும் அவன் அருகில் படுத்துக் கொண்டாள்.


கிடைச்ச சந்தர்ப்பத்துல எல்லாம் எதாவது பண்ணான், இப்ப ஏன் இப்படி அமைதியா இருக்கான். ஒரு வேளை நம்ம மேல கோபமா என நினைத்த ஸ்வேதா, அவனின் பக்கம் திரும்பி படுக்க, நந்தாவும் கொஞ்சம் நெருங்கி வந்தான்.


தங்க வளையல்களோடு கலந்து அவள் சிவப்பு நிற கண்ணாடி வளையலும் கை நிறைய அணிந்து இருக்க, அதை வருடியபடி அமைதியாக இருந்தான்.


“ஸ்வேதா, நான் ஒன்னு சொல்றேன் கேட்கிறியா?” என அவன் திடிரென்று சொல்ல,


“ம்ம்..” என்றவள், எதோ முக்கியமாகச் சொல்லப் போகிறான் என நினைத்து, அவனின் முகம் பார்க்க…


“உனக்கு இப்போ இருபத்தஞ்சு வயசா, எனக்கு இருபத்தி ஏழு. எனக்கு முப்பது வயசு முடியறதுக்குள்ள… ரெண்டு குழந்தை பெத்துக்கனும்ன்னு லட்சியத்டோட இருந்தேன்.”


“ஏற்கனவே கொஞ்சம் நான் நினைச்சது விடத் தள்ளிப் போகும் போலிருக்கு… இதுல நாம இன்னைக்கு வேஸ்ட் பண்ணனுமா சொல்லு…”


“என் லட்சியத்தை அடைய… உன்னோட தயவு இல்லைனா முடியாது. என்ன சொல்ற?” என்றான்.


எதோ சொல்லப் போகிறான் என நினைத்து கூர்ந்து கவனித்தவள், அவன் சொன்ன விஷயத்தைக் கேட்டு, கடுப்பனவள், எழுந்து உட்கார்ந்து தலையணை எடுத்து அவனை நன்றாக மொத்தினாள்.


சில நொடிகள் அவளை அடிக்க விட்டவன், அவளை அப்படியே கட்டிலில் தள்ளி, அவள் மீது படர்ந்து, “அடிச்சிட்டியா, கோபம் எல்லாம் போயிடுச்சா…” என்றான்.


ஸ்வேதாவுக்குச் சட்டென்று சிரிப்பு வந்து விட, “எனக்கு ஒன்னும் உங்க மேல கோபம் இல்லை. நீங்கதான் என்னைப் பார்த்து முறைச்சிட்டு இருப்பீங்க. உங்களுக்குத்தான் என்னைப் பிடிக்காது.” என்றாள்.


“நான் எப்ப டி உன்னைப் பிடிக்காதுன்னு சொன்னேன். சரி இப்ப உன்னை மட்டும் தான் பிடிக்குதுன்னு சொல்றேன். அதுக்குப் பதிலை சொல்லு.”


“இப்ப உங்களுக்கு என்ன வேணும்?” ஸ்வேதா கேட்க, பதில் சொல்லாமல் அவன் அவள் இதழில் முத்தமிட… இவன் விட மாட்டான் என் புரிந்தவள், அவனை அனைத்துக் கொள்ள… அதற்காகவே காத்திருந்தது போல… நந்தா அவளை ஆட்கொண்டான்.


அவனுக்காகத்தான் சரி என்று சொன்னாள். ஆனால் அவளை வேறு எதுவும் நினைக்கவிடாமல், தன்னை மட்டுமே நினைக்க வைத்தான் அவள் கணவன். அனலில் இட்ட மெழுகாக அவளை உருகி கரைய வைத்தான் என்றால் மிகையாகாது.


களைத்து உறங்கும் போது கூட… அவளை விட்டு விலகாமல் அனைத்துக் கொண்டுதான் உறங்கினான்.


அவன் முன்பு நடந்ததைப் பத்தி பேச விரும்பவில்லை என நினைத்தாள். இது வீட்டினர் பார்த்துச் செய்து வைத்த திருமணம். அதுவும் அவள் விரும்பியவனே… கணவனாக வாய்த்திருக்கிறான். சந்தோஷமாக இருக்காமல், தான் ரொம்பவும் யோசித்துக் குழப்பிக் கொள்கிறோமோ? என நினைத்தவள், கணவனின் சிகையைக் கோதி கொடுத்தபடி, சிறிது நேரத்தில் உறங்கிப் போனாள்.


மறுநாளின் விடியலில் உடலால் மட்டும் அல்ல, முழு மனதாலும் நந்தாவின் மனைவியாக மாறிவிட்டாள். ஆம் இனிமேல் அவளாகப் பழைய விஷயங்களைப் பேசக் கூடாது, ஏன் நினைக்கக் கூடக் கூடாது என நினைத்துக் கொண்டாள்.


காலையில் உறங்கிக் கொண்டிருந்த கணவனை, அவன் அருகில் உட்கார்ந்து அவள் எழுப்ப, சோம்பலாகக் கண் திறந்த நந்தா, மனைவியின் புன்னகை நிறைந்த முகத்தைப் பார்த்ததும், எழுந்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவன், அவளைத் தன் நெஞ்சின் மீது சாய்த்துக் கொண்டான்.


“அப்புறம் டா செல்ல குட்டி, மாமாவோட பர்பார்மன்ஸ் எப்படி? தேறுவேனா இல்லையா?” நந்தா கேட்க, ஸ்வேதாவுக்குப் புரியவே இல்லை.


“நேத்து நைட்டு டி.” என்றதும், அவளுக்குப் புரிந்து விட, அவன் இடுப்பில் நறுக்கென்று கிள்ளினாள்.


“கொழுப்பை பாரு, அடங்கவே மாட்டீங்களா நீங்க. ஒழுங்கா எழுந்து கிளம்புங்க.” என்றவள், அவன் மீதிருந்து திமிறிக் கொண்டு எழுந்து நின்றாள்.


நந்தா குளியல் அறைப் பக்கம் செல்ல, கட்டிலில் இருந்த போர்வைகளை ஸ்வேதா மடித்து வைக்க, அப்போது நந்தா திரும்பி வந்தான், எதற்கு வருகிறான் என்பது போல அவள் பார்க்க, “நீ என்னைக் கிள்ளினல, நானும்.” என்றவன், புடவை நழுவி இருந்த அவளின் வெட்றிடையில் அழுத்தமாகக் கிள்ளி விட்டுச் சென்றான்.


ஐயோ ! என வாய்விட்டு கத்த வேண்டும் போல் அவளுக்கு இருந்தது. எதையும் செய்ய முடியாமல் ஸ்வேதா அவனை முறைத்துப் பார்க்க, அவளைப் பார்த்துக் கண் சிமிட்டி விட்டுக் குளிக்கச் சென்றான்.


அன்று முழுவதும் அவள் வீட்டில் தான் இருந்தனர். மாலை விளக்கு வைப்பதற்குள் மீண்டும் நந்தாவின் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என ஐந்து மணிக்கெல்லாம் பலகாரம் சாப்பிட்டுவிட்டு, நந்தாவின் வீட்டிற்குக் கிளம்பினர்.


“ஒருமாசம் போகட்டும் , நீ அவங்க வீட்ல முதல்ல பொருந்தி இரு. அப்புறம் நம்ம ஆபீஸ்க்கு வரலாம்.” எனச் சண்முகம் மகளிடம் சொல்லி அனுப்பினார்.


நந்தாவின் வீடு நல்ல பெரிய வீடு, அவர்களின் கடையும் அருகில் தான். நந்தா ஸ்வேதாவை வீட்டில் விட்டு கடைவரை போயிட்டு வரேன் எனச் சென்று விட்டான்.


நந்தாவின் அம்மா சிவகாமி ஹாலில் உட்கார்ந்து டிவியில் நாடகம் பார்க்க, ஸ்வேதாவும் அவருடன் உட்கார்ந்து பார்த்துக் கொண்டு இருந்தாள்.


இரவு எட்டு மணி போல, முதலில் நந்தாவின் தம்பி முரளி வீட்டிற்கு வந்தவன், ஸ்வேதாவைப் பார்த்ததும் பேசினான்.


“எப்ப வந்தீங்க அண்ணி?”


“சாயங்காலம் வந்தோம்.”


“எங்க டா உங்க அண்ணன்?” சிவகாமி கேட்க,


“அவரு ஒருவாரமா கடைக்கு வரலையே… அதுதான் உட்கார்ந்து கணக்கு வழக்கு பார்த்திட்டு இருக்கார். என்னைப் போ வரேன்னு சொன்னார்.” என்றவன்,


“என்ன மா டிபன்?” என்றான்.


“இன்னும் ஒன்னும் பண்ணலை டா…தோசை மாவு இருக்கு.” என அவர் இழுக்க,


“நான் வேணா சட்னி அறைக்கவா அத்தை.” என ஸ்வேதா கேட்டதும், “சரி மா தேங்காய் சட்னியோட, கொஞ்ச கார சட்னியும் பண்ணிடு.” என்றவர், டிவி பார்ப்பதில் முழ்கி விட்டார்.


ஸ்வேதா சமையல் அறையில் கார சட்னிக்குக் காய்களை வதக்கி விட்டு, தேங்காய் சட்னி செய்ய, பொட்டுக் கடலையைத் தேட… முகம் கழுவி உடை மாற்றி வந்த முரளி, “என்ன அண்ணி தேடுறீங்க.” என்றவன், அவள் கேட்டதை எடுத்துக் கொடுத்தான்.


“பார்த்தீங்களா அண்ணி, எங்க அம்மாவோட சாமர்த்தியம். உங்க வாயில இருந்தே நான் சமைகிறேன்னு வர வச்சுட்டாங்க. இதுதான் மாமியார் டெக்னிக். நீங்க இப்படி ஏமாந்துடீங்களே அண்ணி.” என்றான்.


“பரவாயில்லை இருக்கட்டும், இத்தனை நாள் அவங்க தான செஞ்சாங்க. இனி நான் செய்றேன்.” என்றால் ஸ்வேதா சிரித்தபடி.

“இது தான் அடுத்த டெக்னிக். அப்புறம் உங்களையே எல்லா வேலையும் செய்யப் போட்டுடுவாங்க, ஜாக்கிரதையா இருந்துக்கோங்க.” என முரளி சொல்ல, அவன் பேசுவதைக் கேட்டபடி வந்த நந்தா,


“டேய் ! ஏன் டா வந்த அன்னைக்கே இப்படிப் பத்த வைக்கிற?” என்றவன்,


“அம்மா, நீங்க அங்க நல்லா நாடகம் பார்த்திட்டு இருங்க. இவன் இங்க என்ன பண்றான் பாருங்க.” நந்தா சொன்னதும், சிவகாமி எழுந்து சமையல் அறைக்குள் வந்தார்.


“என்ன டா பண்றான்.”


“அவங்க அண்ணிக்குக் கிளாஸ் எடுக்கிறான். நீங்க என் பொண்டாட்டியவே எல்லா வேலையும் செய்யப் போட்டுடுவீங்களாம்.”


“அடப்பாவி ! ஏன் டா உன் புத்தி இப்படிப் போகுது?” என்றவர், “இவ்வளவு நாள் நான் தானே செஞ்சேன். மருமகள் வந்தா ஓய்வு எடுக்கிறது தப்பா?” என அவர் சொல்ல,


“ஆரம்பிச்சிடீங்க பார்த்தீங்களா, உங்க உடன் பிறப்பு மாதிரி நீங்களும் ஆகப் போறீங்களா மா?” என்றவன், “அண்ணா, நீ ஒழுங்கா வேலையைப் பிரிச்சு விடு. இல்லைனா அம்மா அவங்க தங்கச்சி மாதிரி மருமகள் தலையிலேயே எல்லாம் கட்டிடுவாங்க.” என்றான்.


“நானே செய்றேன்.” என ஸ்வேதா சொல்ல, வாயில் விரல் வைத்துக் காட்டிய நந்தா, “அம்மா, அவ அவங்க அப்பா ஆபீஸ் பார்க்க போவா… அதனால காலையில நைட் அவ சமைக்கட்டும், நீங்க மத்தியானத்துக்கு மட்டும் பண்ணிடுங்க. சரியா.” என்றான்.


“என்னைக்கு டா நீங்க சொல்றது நான் வேண்டாம்ன்னு சொல்லி இருக்கேன்.” எனச் சிவகாமி சொல்ல, அவர் குரலில் இருந்த சலிப்பை உணர்ந்த ஸ்வேதா “நானே பண்ணிடுறேன். அத்தையை எதுக்குத் தொந்தரவு பண்றீங்க?” என்றாள்.


“அம்மா நல்லா சமைப்பாங்க ஸ்வேதா, அதுவும் நீ காலையில செஞ்சு வச்சிட்டு போனா ஆறிடும். அதனால அம்மா செஞ்சாதான் சரியா இருக்கும்.” நந்தா சொல்ல…


“ஆமாம் மா நானே பண்றேன். அதுதான் நீ ரெண்டு வேளை பண்ணிடுறியே. எனக்கும் எதாவது வேலை செஞ்சாத்தானே பொழுது போகும்.” எனச் சொல்லிவிட்டு சிவகாமி டிவி பார்க்க சென்று விட, ஸ்வேதா எல்லோருக்கும் தோசை ஊற்றிக் கொடுத்தாள்.


“நீ எப்போடா பெங்களூர் கிளம்புற?” நந்தா முரளியிடம் கேட்க,


“ஞாயிறு வரை இருந்திட்டுத்தான் கிளம்புவேன்.” என்றான்.
அப்போதான் ஸ்வேதாவுக்கு அவன் இங்கு இல்லை என்று தெரியும்.


“நீங்க இங்க இல்லையா?” எனக் கேட்டாள்.


“இல்லை அண்ணி, நான் பெங்களூர்ல வேலை பார்கிறேன். சாப்ட்வேர் இன்ஜினியர்.” என்றவன்,


“அண்ணன் கூடக் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிட்டு, வேலைக்குதான் போகணும்ன்னு இருந்தாங்க. திடிர்ன்னு அப்பா தவறினதுனால தான் பிசினஸ் வந்தாங்க.” என்றான்.


பாவம், ஆசைப்பட்டது அவனுக்குக் கிடைக்கவில்லையே என ஸ்வேதா வருத்தம் கொள்ள…. அதை உணர்ந்த நந்தா, “அப்ப வருத்தம் இருந்துச்சு ஸ்வேதா, ஆனா எனக்கு ஒரு முன்னோடி இருந்தாங்க. அவங்களைப் பார்த்து நான் தேத்திகிட்டேன்.”


“இப்ப எனக்கு இந்தப் பிசினஸ் பிடித்துதான் இருக்கு. நான் யாரை நம்பியும் இல்லை. நானே ராஜா.” என்றான் மகிழ்ச்சியுடன், அவனுடைய மகிழ்ச்சி ஸ்வேதாவையும் தொற்றிக்கொண்டது.


இரவு அறைக்கு வந்தவள், “நீங்களும் உங்க தம்பியும் ஏன் உங்க அம்மாவை போட்டு இவ்வளவு மிரட்டுறீங்க? பாவம் அவங்க. அதுவும் என்னைத் தானே தப்பா நினைப்பாங்க.” என ஸ்வேதா சொல்ல,


“அம்மா நல்லவங்க தான் ஸ்வேதா. ஆனா அவங்க தங்கச்சி ஒன்னு இருக்கு பாரு. அது இவங்களுக்குச் சொல்லிக் கொடுக்கும். அதோட மருமகளைப் போட்டு, அது என்ன பாடுபடுத்தும் தெரியுமா? அதுதான் நாங்க முந்திகிட்டோம்.”


“அம்மாவுக்கு நாங்க ஏன் சொல்றோம்ன்னு தெரியும், நீ டென்ஷன் ஆகாத.” என்றான்.


மறுநாளில் இருந்து மதிய நேரத்தில் உள்ளுரில் இருந்த உறவினர்கள் வீட்டிற்கு விருந்துக்குச் சென்று வந்தனர். இருவர் பக்கமும் நிறையச் சொந்தங்கள்.


அந்த வார இறுதியில் முரளி பெங்களூர் கிளம்ப, ஸ்வேதா அவனுக்குத் தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.


“நீங்க இப்படி உங்க வீட்ல கடைசியா வா அண்ணி பிறப்பீங்க. ஒரு தங்கச்சி கூட உங்களுக்கு இல்லை.” முரளி சோகமாகச் சொல்ல, எதற்கு என்பது போல ஸ்வேதா பார்க்க…


“உங்க வீட்ல எனக்குச் சைட் அடிக்க யாருமே இல்லையே.” என அவனின் வருத்தத்தைப் பார்த்து நந்தா சிரிக்க…


“ஏன் என் பாட்டி இருந்தாங்களே… அவங்க போதாதா உனக்கு.” என ஸ்வேதா சொல்ல.. “அது தானே…” என்ற நந்தாவும் மனைவிக்கு ஒத்து ஊத…முரளி முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டான்.


“என்ன கொழுந்தனாரே உங்க ஆபீஸ்ல இல்லாததா?”


“யாரு கமிட்டெட், யாரு ப்ரீன்னே தெரியலை அண்ணி. அதுதான் குழப்ப மா இருக்கு.” என அவன் சொன்ன விதத்தில், கணவன் மனைவி இருவரும்  வாய்விட்டு சிரித்தனர்.


முரளியும் ஊருக்கு சென்று விட, நந்தாவே கடையை முழுவதும் பார்த்துக் கொண்டான். வேலை ஆட்கள் நிறையப் பேர் உண்டு. அதனால் மேற்பார்வையிடுவது மட்டுதான் அவன்.


இரவு எட்டு மணிக்கெல்லாம் கடையை அடைத்து விடுவதால்… நந்தா வீட்டிற்குச் சீக்கிரமே வந்துவிடுவான். ஒன்பது மணிக்கெல்லாம் சாப்பிட்டு இவர்கள் அறைக்கு வந்துவிடுவார்கள். அதன் பிறகு விடியும் வரை இருவருக்கும் மட்டுமேயான பிரத்யேக நேரம்.


நந்தா நிறையச் சொல்லுவான். ஸ்வேதாவையும் நிறையப் பேச வைப்பான். ஆனால் இருவருக்குள்ளும் இன்னும் பேசப்படாத ஒரு விஷயம் அப்படியேதான் இருந்தது.


ஸ்வேதாவும் அதைப் பற்றிப் பேசவில்லை. நந்தாவும் சொல்லவில்லை. மற்றபடி அவர்களின் திருமண வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லை. வெகு மகிழ்ச்சியாகவே சென்றது.


Advertisement