Advertisement

காற்றின் மொழி



அத்தியாயம் 3



ஸ்வேதா பள்ளி முடித்துக் கல்லூரியில் சேரும் சமயம் கொஞ்சம் மெத்தனமாக இருந்து விட்டாள். B.com., தானே கிடைக்கும் எனக் கடைசி நேரத்தில் முயல…. அனைத்து மகளிர் கல்லூரிகளிலும் ஏற்கனவே மாணவிகள் சேர்க்கை முடிந்து இருக்க, சற்று தள்ளி இருந்த இருபாலரும் படிக்கும் கல்லூரியில் தான் அவளுக்கு இடம் கிடைத்தது.


ஏற்கனவே அந்தக் கல்லூரியில் ஸ்வேதாவின் உறவுப் பெண் வினோதினி படித்துக் கொண்டிருந்ததால்… சண்முகமும் மகள் அங்குப் படிக்க ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் வீட்டில் அவள் அம்மாவும், பாட்டியும் புலம்பிக் கொண்டு தான் இருந்தனர். கல்லூரிக்குப் பேருந்தில் தான் சென்று வந்தாள்.


இவள் வகுப்பில் நிறையப் பையன்கள் தான். கொஞ்சமே பெண்கள் இருந்தனர். அங்கே சென்ற போது, அவளுக்கு இன்னொரு ஆச்சர்யம், வகுப்பில் இன்னொரு ஸ்வேதாவும் இருந்தாள். இவள் எஸ். ஸ்வேதா, அவள் ஆர். ஸ்வேதா.


இவளும் அந்த ஆர். ஸ்வேதாவும் கொஞ்ச நாட்களில் நெருங்கிய தோழிகள் ஆகி விட்டனர். ஆர். ஸ்வேதாவுக்குப் பால் வழியும் முகம். நல்ல வெள்ளையாக உயரம் குறைவாக அழகாக இருப்பாள். ஆளும் வெகு அமைதி. பால் நிறத்தில் இருப்பதால்… மில்கி என்றுதான் ஸ்வேதா அவளை அழைப்பாள்.


அந்த ஸ்வேதாவுக்கு இந்த ஸ்வேதா அப்படியே எதிர்மறை. உருவத்திலும் நடத்தையிலும். முதல் வருடமே சீனியர் மாணவர்களுடன் ஏற்பட்ட பிரச்சனையில், ஸ்வேதா வாயை கொடுத்து, அராத்து, திமிர் பிடித்தவள் எனப் பெயர் வாங்கி இருந்தாள்.


அடுத்து இரண்டாம் வருடத்தில் அடியெடுத்து வைத்திருந்தாள்.
கல்லூரியில் நந்தாவின் பெயர் மிகப் பிரபலம். அவன்தான் மாணவர் தலைவனாகவும் இருந்தான். M.SC., இரண்டாம் வருடத்தில் இருந்தான். மாநிறத்தை விடச் சற்று கூடுதலான நிறம், நெடு நெடுவென உயரம். கூர்மையான மூக்கு, அடர்த்தியான மீசை என ஆண் அழகன் தான் அவன்.


கல்லூரியில் நிறையப் பெண்களின் கனவு நாயகனாகவும் இருந்தான். ஸ்வேதாவுக்கும் அவனைப் பிடிக்கும்.


வினோதினியின் அக்கா திருமணதிற்கு ஸ்வேதா குடும்பத்துடன் சென்றிருந்தாள். நந்தாவும் அங்கே வந்திருக்க… “ஹே… நம்ம சீனியர் டி. உனக்குச் சொந்தமா.” என நந்தாவை காட்டி ஸ்வேதா வினோதினியிடம் விசாரிக்க…


“ஆமாம் டி, அவர் எனக்கு அண்ணன் முறை.” என வினோதினி சொல்ல,


“ஹப்பா டா ! உனக்கு அண்ணனா, அப்ப எனக்கு அண்ணன் முறை இல்லை.” என ஸ்வேதா நிம்மதிக் கொள்ள…


“அடிப்பாவி, இரு அந்த அண்ணன் கிட்டயே சொல்றேன். உங்களை ஒரு பொண்ணு சைட் அடிக்குதுன்னு.”


“சொல்லு சொல்லு….” என ஸ்வேதாவும் சொல்ல, அப்படி ஆரம்பித்ததுதான்.

முதலில் அவன் மீது ஈர்ப்புதான், பிறகு அவன் எதோ வகையில் உறவினன் எனத் தெரிய, அவன் மீது இன்னும் ஆசையை வளர்த்துக் கொண்டாள்.


நந்தாவை ஒருநாள் கல்லூரியில் சந்தித்த வினோதினி, “அண்ணா,  உங்களைப் பத்தி ஒருத்தி தீவிரமா என்கிட்டே விசாரிச்சிட்டு இருக்கா… அதுவும் நீங்க எனக்கு அண்ணன் தெரிஞ்சதும், அப்ப எனக்கு அண்ணன் இல்லைன்னு சொல்லி ஒரே சந்தோஷம். அண்ணின்னு கூப்பிட சொல்லி வேற டார்ச்சர் பண்றா.” எனச் சொல்ல..


யாரு அவள் எனத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் நந்தாவும், “யாரு?” எனக் கேட்க, ஸ்வேதா B.Com., ரெண்டாவது வருசம் படிக்கிறா.” என வினோதினி சொல்ல,


“நான் இப்போதைக்கு யார்கிட்டயும் மாட்றதா இல்லை.” என நந்தாவும் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டுச் சென்றான். ஆனாலும் மனதில் ஒரு குறுகுறுப்பு. யார் ஸ்வேதா எனத் தெரிந்து கொள்ள வேண்டும் என ஆர்வத்தில் இருந்தான்.


அந்த வருடம் கல்லூரியில் நடக்கவிருக்கும் கலைவிழாவுக்கான ஒத்திகையில் மாணவர்கள் ஈடுபட்டிருக்க, அவர்களின் தலைவன் என்ற முறையில் நந்தா தான் எல்லாம் ஒழுங்காக நடக்கிறதா எனப் பார்த்துக் கொண்டிருந்தான்.


நடனப் பட்டியலில் இருந்த பெயர்களை வாசித்துக் கொண்டிருந்த நந்தா, ஸ்வேதா என்ற பெயரை பார்த்ததும், யார் எனத் தெரிந்துகொள்ள எழுந்த ஆவலில், ஸ்வேதா யார் என்று கேட்க, பயந்தபடி மில்கி ஸ்வேதா முன்னால் வந்தாள்.


நந்தா இவள்தான் வினோதினி சொன்ன ஸ்வேதா என நினைத்துக் கொண்டான். அதற்கு ஏற்றார்போல, ஒருநாள் ஸ்வேதா கல்லூரிக்கு வரவில்லை. அன்று வினோதினியும் மில்கி ஸ்வேதாவும் ஒன்றாகச் செல்ல, இவள்தான் வினோதினி சொன்னவள் என நந்தா முடிவு செய்து கொண்டான்.


அவனுக்கு அவளைப் பார்த்ததும் பிடித்து விட்டது. தினமும் ஒத்திகைக்கு வரும் போது, அவளிடம் பேசி பழக ஆரம்பித்தான்.


“நமக்கு இந்த டேன்ஸ், பாட்டு, எல்லாம் வராது. எதாவது பேசுறதுக்கு இருந்தா கொடுங்க.” என ஸ்வேதா சொல்ல, அவளது திறமை தெரிந்த பேராசிரியர், அவளைக் கலை நிகழ்ச்சியின் வரவேற்பு உரை கொடுக்கச் சொல்லி இருந்தார்.


“நான் எழுதி தரட்டுமா?” எனக் கேட்டதற்கு, “இல்லை சார் நானே எழுதிக்கிறேன்.”என்றாள். அதே போல அவள் எழுதி சென்று காட்டியது, மிகவும் நன்றாக இருக்க, பேராசிரியர் அவளைப் பாராட்டினார்.


மறுநாள் நடக்கவிருந்த கலை நிகழ்ச்சிக்கு முன்தினம் மதியம் முழு ஒத்திகை, கல்லூரி அரங்கத்தில் இருந்தது. அதற்காக ஸ்வேதாவும் சென்றாள். நந்தாவின் வகுப்பு மாணவர்கள். அவனிடம் ஏற்கனவே ஸ்வேதா பற்றிச் சொல்லி, அவன் மனதில் தவறான எண்ணத்தை விதைத்து இருந்தனர். அதற்கு ஏற்றாற்போல் சம்பவங்களும் நடந்தது.


வரவேற்பு பேச்சை ஸ்வேதாவிடம் பேராசிரியர் கொடுத்தது தெரியாமல், நந்தா வேறு ஒருவரை பேச சொல்லி இருந்தான். அவள் ஸ்வேதாவை விடச் சீனியர்.


பெயர் பட்டியலில் தன்னுடைய பெயர் இல்லாததைப் பார்த்து, ஸ்வேதா சென்று நந்தாவிடம் கேட்க,


“யாரு உன்னைப் பேச சொன்னா, நீயாவே முடிவு பண்ணிப்பியா?” என நந்தாவின் அருகில் இருந்த வெங்கட் திமிராகக் கேட்க,


“அது தானே?” என்றான் நந்தாவும்.


“ரொம்ப ஜாஸ்த்தி பேசாதீங்க? நானா ஒன்னும் நினைச்சுக்கலை சார் தான் சொன்னாங்க.” என்றாள் ஸ்வேதா எரிச்சலாக. வெங்கட் தன்னைக் குறையாகப் பேசியதும், அவளுக்குக் கோபம் வந்துவிட்டது.


அவள் பேசிய முறையில் வெங்கட்டும் எகிற, அவனை அடக்கிய நந்தா, “சார் சொன்னாரா. ஆனா எங்ககிட்ட ஒன்னும் சொல்லலையே…. அப்படி அவர் சொல்லி இருந்தாலும், இத்தனை நாள் இங்க ஒத்திகை நடக்குதுன்னு தெரியும் இல்ல… ஏன் நீ வரலை?” எனக் கேட்டான்.


“சார் என்கிட்டே ஒன்னும் சொல்லலை. அதனால எனக்கு இங்க வரணும்ன்னு தெரியாது.” என்றாள் ஸ்வேதா.


என்ன பண்ணலாம் என்பது போல நந்தா பார்க்க, “ஒரு ஜூனியர்க்காக, நான் விட்டுக் கொடுக்க முடியாது. நான்தான் பேசுவேன்.” என்றாள் அந்தச் சீனியர் மாணவி.


“சரி விடு, இந்தமுறை இவங்களே பேசட்டும்.” எனச் சீனியர் மாணவியின் பக்கம் கையைக் காட்டியவன், உனக்கு அடுத்த முறை பார்க்கலாம்.” என்றான் நந்தா.


“அதை நீங்க சொல்ல வேண்டாம். சார் சொல்லட்டும்.” என்றதும் நந்தாவுக்குக் கோபம் வந்துவிட்டது.


“உன்னோட திமிர் எல்லாம் வேற யார்கிட்டையாவது போய்க் காட்டு. இங்க நான் சொல்றது தான்.” என்றான் திமிராக.


ஸ்வேதா அவனிடம் எதுவும் சொல்லாமல், நேராகப் பேராசிரியரை சென்று பார்த்து நடந்ததைச் சொன்னாள். அவர் அவளோடு ஒத்திகை நடக்கும் இடத்திற்கே வந்துவிட்டார்.


“என்ன நந்தா, நான்தான் ஸ்வேதாவை பேச சொன்னேன்.” என்றார்.


“சாரி சார் எனக்கு நீங்க இவங்களைப் பேச சொன்னது தெரியாது. சீனியர் ஒருத்தவங்களும் பேச ரெடி பண்ணிட்டாங்க. அதுதான் என்ன பண்றதுன்னு தெரியலை.” என அவன் இழுக்க,


அந்தச் சீனியர் மாணவியிடம் இருந்து, அவள் பேசப் போவதை பேராசிரியர் வாங்கிப் படித்தவர், “இது நீங்களே எழுதுனீங்களா.” என்றார்.


“இல்லை என் பிரான்ட் எழுதிக் கொடுத்தான்.” என அந்தப் பெண் தயங்க…


“இது அவ்வளவா நல்லா இல்லையே நந்தா. வரவேற்பு உரை எல்லோரையும் கவர்ந்திழுக்க வேண்டாமா… ஸ்வேதா எழுதினது நல்லா இருந்தது. அதுவே இருக்கட்டம், அவங்களே பேசட்டும்.” என அவர் சொல்லிவிட்டு செல்ல, அதற்கு மேல் நந்தாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை.


சீனியர் மாணவர்களின் தலை தொங்கி போய் விட, ஸ்வேதா சென்று, மில்கி ஸ்வேதாவுடன் அமர்ந்து கொண்டாள்.


அப்போது நந்தாவுக்கு ஸ்வேதா மீது கடுப்புதான். தான் சொன்னதைக் கேட்காமல், அவள் சென்று பேராசிரியரை அழைத்து வந்தது அவனுக்குப் பிடிக்கவில்லை. சின்ன விஷயத்தை ஏன் இவ்வளவு பெரிசாக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான்.


மறுநாள் நந்தா மில்கி ஸ்வேதாவிடம் காதலை சொல்ல, அவளும் வெட்கப்பட்டுக் கொண்டே ஒத்துக் கொண்டாள். இதை அவள் ஸ்வேதாவிடம் சொல்லவில்லை.


மாலை கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாக, முதல் நிகழ்ச்சியாக ஸ்வேதாவின் வரவேற்பு இருக்க, அவள் பேசிய விஷயமும் சரி, பேசிய விதமும் சரி, பார்வையாளர்களை வசியம் செய்து வைத்திருக்க, அரங்கம் அவ்வளவு அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருந்தது.


கலாட்டா செய்து அவளைப் பேசவே விடக் கூடாது என்றிருந்த சீனியர் மாணவர்களை, “நம்ம காலேஜ் பத்திதான் கேவலமா நினைப்பாங்க.” என நந்தாதான் அவர்களை அடக்கி வைத்திருந்தான்.


உண்மையாகவே அவள் நன்றாகப் பேசினாள். அவள் பேசி முடித்ததும், கைதட்டல் அடங்க வெகு நேரம் ஆனது. மேடையை விட்டு இறங்கும் போது, முன்னால் இருந்த நந்தாவைப் பார்த்து அவள் புன்னகைக்க, நந்தா பதிலுக்குப் புன்னகைக்கவில்லை. ஆனால் அவள் மீது அவன் கோபமாகவும் இல்லை.


கலைவிழா முடிந்து மறுவாரம் கல்லூரி வகுப்புகள் வழக்கம் போலத் தொடங்க, மாலை வீடு செல்லும் போது, மில்கி ஸ்வேதாவும், ஸ்வேதாவும் ஒன்றாகச் செல்ல, நந்தா தன் வண்டியைக் கொண்டு வந்து அவர்கள் முன்பு நிறுத்தியவன், மில்கி ஸ்வேதாவை பார்த்து ஏறு என்றான்.


முதலில் ஸ்வேதாவுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் மில்கி ஸ்வேதா வெட்கப்பட்டவள், “நான் வரேன் ஸ்வேதா.” என அவனோடு வண்டியில் ஏறி சென்றுவிட்டாள்.


இதைப் பார்த்துவிட்டு வினோதினி அவளிடம் ஓடிவந்தாள். “என்ன டி, அவ நந்தா அண்ணனோட போறா?”


“அவருக்கு அவளைத்தான் பிடிச்சிருக்குன்னு அர்த்தம், விடு.” என வெளியில் சொன்னாலும், அவள் மனதிற்குள் அவ்வளவு வலி. மொட்டவிழ்ந்த காதல் மலரும் முன்பே கருகி போய் விட்டது.


மறுநாள் கல்லூரிக்கு வந்த மில்கி ஸ்வேதாவிடம், “நீ நந்தாவை லவ் பண்றியா?” என ஸ்வேதா கேட்க,


“ஆமாம் அவர்தான் கேட்டார்.” என்றாள் அவள்.

“அவர் கேட்டாரு சரி, ஆனா நீ நிஜமாவே அவரை லவ் பண்றியா?”


“ஆமாம் .” எனப் பதில் உடனே வரவில்லை…அவள் தயங்க…


“இதைச் சொல்லவே இவ்வளவு யோசிக்கிற. நாளைக்கு உங்க வீட்ல இதைச் சொல்லணுமே… காதலிக்கிறது பெரிய விஷயமே இல்லை. ஆனா அவங்களயே கல்யாணம் பண்ணனும்.”


“இப்ப லவ் பண்றேன்னு சொல்லிட்டு, நாளை நீ வேண்டாம்ன்னு சொன்னா, அவர்தான் பாவம். நல்லா யோசிச்சு முடிவு பண்ணு.” என்றாள்.


ஸ்வேதாவுக்குத் தன் தோழியைப் பற்றித் தெரியும். இவள் உண்மையாக எல்லாம் அவனைக் காதலிக்கவில்லை என்பதை அவள் அறிவாள்.


மில்கி ஸ்வேதா அவள் வீட்டினருக்கு ஒரே பெண். பேருக்கு ஒரு டிகிரி வேண்டும் என்றுதான் கல்லூரிக்கு அனுப்புகிறார்கள். சீக்கிரமே அவளுக்குத் திருமணம் முடிக்கும் எண்ணம் அவள் வீட்டினருக்கு உண்டு என அவள்தான் ஸ்வேதாவிடம் சொல்லி இருக்கிறாள்.


தன் தோழி சொன்னதும் ஸ்வேதாவுக்கு உறுத்தத் தொடங்கிவிட்டது. அவளின் கலக்கமான முகத்தைக் கவனித்த நந்தா என்ன என்று விசாரிக்க,


“இல்லை என் பிரான்ட் சொல்றா… நல்லா யோசிச்சிக்கோ…. பின்னாடி எதுவும் பிரச்சனை ஆகப் போகுதுன்னு சொல்றா?” எனப் பாதியை மட்டும் சொல்ல… நந்தாவுக்குக் கோபம் வந்துவிட்டது.


ஸ்வேதாவிடம் வந்தவன், “நீ உன் வேலையைப் பாரு சரியா. உன்கிட்ட இங்க யாரும் அட்வைஸ் கேட்கலை.” என்றான்.


“அவ என் பிரண்ட் நான் சொல்லுவேன்.” என ஸ்வேதாவும் தைரியமாகச் சொல்ல…


“உன்னோட திமிரு, கர்வம் எல்லாம் வேற யார்ககிட்டயாவது வச்சுக்கோ என்கிட்டே காட்டினா அவ்வளவுதான்.” என நந்தாவும் கத்த…


“என்ன எப்பபாரு என்னை அப்படியே சொல்றீங்க. நான் திமிரா என்ன பண்ணேன்?”

“நீ ஒன்னுமே பண்ணலையா?


“நான் தப்பா எதுவும் பண்ணலை. உங்க பிரண்ட்ஸ் தான் அன்னைக்குப் பஸ் ஸ்டான்ட்ல வச்சு…. போற வர பொண்ணுங்களைக் கிண்டல் பண்ணாங்க. அதுக்குதான் அவங்க கூடச் சண்டை போட்டேன்.”


“அப்புறம் என்ன பேச சொன்னது சார், வேற யாரோ பேசுறாங்கன்னு அவர்கிட்ட சொல்ல வேண்டாமா. அதுக்குதான் அவர்கிட்ட போனேன். அவர் நீ பேச வேண்டாம்ன்னு சொல்லி இருந்தா, சரின்னு தான் சொல்லி இருப்பேன்.”


“இதுல என்னோட திமிர் என்ன? நீங்களாவே அப்படிக் கற்பனை பண்ணிட்டா நான் பொறுப்பு கிடையாது.”

“நாங்க பொண்ணுங்க தைரியமா இருந்தா அது உங்க கண்ணுக்கு திமிரா தெரிஞ்சா நான் ஒன்னும் பண்ண முடியாது.”  எனச் சொல்லிவிட்டு ஸ்வேதா அங்கிருந்து விலகி செல்ல, நந்தா சென்று நண்பர்களை விசாரித்தான்.


“ஆமாம் டா, நாங்க கிண்டல் பண்ணது உண்மைதான். ஆனா அவ ஜூனியர் டா, அவ எப்படி எங்களைக் கேட்கலாம்.” என வெங்கட் சொல்ல….


“பின்ன பொண்ணுங்களைக் கிண்டல் பண்ணா பார்த்திட்டு இருப்பாங்களா. உங்களால நான் அவளைத் தப்பா நினைச்சு பேசி… இப்ப என்னைப் பார்த்து நல்லா கேட்டுட்டு போறா. எனக்கு இது தேவையா?” என்றான் நந்தா கடுப்பாக.


அதன்பிறகு வந்த நாட்களில் ஸ்வேதாவும் நந்தாவை பார்த்தால் கண்டுகொள்ளாமல் சென்று விடுவாள். மில்கி ஸ்வேதாவும் வேறு புதுத் தோழிகளுடன் சேர்ந்து கொண்டு ஸ்வேதாவை விட்டு விலக ஆரம்பித்தாள்.


இரண்டாம் ஆண்டு விடுமுறையில், ஒருநாள் ஸ்வேதாவின் அப்பா சண்முகம், மார்க்கட்டில் இருந்து இரவில் வீடு திரும்பும் போது, சிலரால் தாக்கப்பட்டார். அவர் வட்டி பணம் வசூலித்துக் கொண்டு வருவார் எனத் தெரிந்து, யாரோ அவரை வழி மடக்கி தாக்கிவிட்டு பணப் பையோடு ஓடி இருந்தனர்.


நல்ல வேளை பெரிய காயம் இல்லை. அப்போது ஸ்வேதா அவருக்குப் பதில் மார்க்கட்டில் லாரி ஆபீஸ்ல் உட்கார ஆரம்பித்தாள். அதன் பிறகு அவள் வீட்டினர் எவ்வளவு சொல்லியும், அவள் கல்லூரி செல்லவே இல்லை.


மூன்றாம் ஆண்டுத் தபாலில் தான் முடித்தாள். அப்போது கல்லூரியில் நந்தாவை பார்த்ததுதான். அதன் பிறகு திருமணத்தின் போது தான் பார்த்தாள்.


இவள் அவனிடம் காதலை சொல்லி எல்லாம் அவன் மறுக்கவில்லை. அவன் வேறு ஒருத்தியை காதலிப்பது தெரிந்து இவளாகத்தான் விலகினாள். இதில் அவனைக் குற்றவாளி ஆக்க முடியாது. ஆனால் அப்போது இவளைப் பிடிக்காதது போல நடந்தவன், இப்போது ஏன் தன்னைத் திருமணம் செய்து கொண்டான் என்றுதான் தெரியவில்லை என நினைத்தாள்.

ஒரு வேளை அவன் வீட்டில் வற்புறுத்தி இருப்பார்களோ என நினைத்துக் கொண்டாள்.

 

Advertisement