Advertisement

காற்றின் மொழி  

 

அத்தியாயம் 2

 

சங்கீதாவிற்கு இப்போது ஆறாம் மாதம். அவளுடைய பிரசவத்திற்கு பிறகு என்றால்…ஆறு மாதத்திற்கு மேல் ஆகும் என்பதால்… பிரசவத்திற்கு முன்பு திருமணத்தை வைத்து விட வேண்டும் என்று அடுத்து இருந்த ஒன்னரை மாத இடைவெளியில் முஹுர்ததிற்கு நாள் குறித்து இருந்தனர்.

ஒன்னரை மாதம் என்பது ஒரு திருமணத்திற்கு மிகவும் குறுகிய காலமே. பத்திரிகை அடித்து, சொந்தபந்தங்களை அழைத்து, மண்டபத்தில் இருந்து யார் சமையல் என்பது வரை, இருப்பக்கமும் பார்க்க வேண்டிய திருமண வேலைகள் நிறையவே இருந்தது.

ஸ்வேதா வீட்டில் அவள் அப்பா இருக்கிறார் எல்லாம் பொறுப்பேற்று செய்ய, அதே அங்கே நந்தாவுக்கோ அவனே தான் எல்லாம் பார்த்தாக வேண்டும். அவன் தம்பியை கடையில் வைத்து விட்டு, அவன்தான் எல்லாவற்றிற்கும் அலைய வேண்டியதாக இருந்தது.

நடுநடுவே ஸ்வேதாவையும் செல்லில் அழைத்து பேசி விடுவான். ஏற்கனவே அவளைப் பார்க்க செல்லவில்லை… இதில் போன்னிலும் பேசாமல் இருந்தால்… மற்றவர்கள் தவறாக நினைப்பார்கள் என்றே அழைத்து விடுவான். அதுவும் வீட்டில் எல்லோரும் இருக்கும் நேரமாக அவன் அழைப்பதால்… ஸ்வேதாவுக்கும அவனோடு பேசி ஆக வேண்டிய நிலை.

இவள் போன்னை எடுக்கவில்லை என்றால்… அவள் அப்பாவின் செல்லுக்கு அழைத்து விடுவான். “உன் போனுக்கு என்ன ஆச்சு?” என சண்முகம் வேறு கேட்பார். அதனால் அவன் போன் செய்தால்… எடுத்து பேசுவாள்.

எல்லோர் எதிரேயும் நன்றாக பேசுபவள், தனியாக அறைக்குள் வந்ததும், “என்ன வேணும் உங்களுக்கு? எதுக்கு போன் பண்ணி, இம்சை பண்றீங்க?” என சிடு சிடுப்பாள்.

“கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுக்கு போன் பண்றது தப்பா?”

“அவ்வளவு ஆசை இருந்தா, ஏன் நேர்ல வர வேண்டியது தான ?”

“அப்படி சும்மா எல்லாம் வர முடியாது. நான் வரும் போது, நீயும் என்னோட வரணும். அப்பத்தான் வருவேன்.” என்றான்.

“ஓ… நானும் அதுக்குதான் காத்திட்டு இருக்கேன்.”

“ரொம்ப ஆசையா என் மேல.”

“என்னோடஆசையை விடுங்க. உங்க ஆசை வேற ஒருத்தவங்க மேல இல்லை இருந்துச்சு.” ஸ்வேதா சொல்ல, நந்தாவிடம் இருந்து பதிலே இல்லை.

“என்ன விட்டு போயிட்டாங்களா? “

“தெரியும் தான உனக்கு, பிறகு ஏன் கேட்கிற?”

“அவ தான் போனா சரி, ஆனா வேற யாரும் உங்களுக்கு கிடைக்கலையா? ஏன் உங்க வண்டவாளம் தெரிஞ்சு யாரும் பொண்ணு கொடுக்கலையா? எங்க அப்பாவுக்கு தெரியாது போலிருக்கு பாவம்.”

“ஹே… ரொம்ப பேசினேன்னு வச்சுக்கோ, பல்லை தட்டிடுவேன். நான் லவ் தான டி பண்ணேன். வேற எதோ பண்ண மாதிரி ஸீன் போடுற, ஏன் நீயும் தான் என்னை லவ் பண்ணிட்டு, வேற ஒருத்தனை கல்யாணம் பண்ண இருந்த. அது மட்டும் என்ன?”

“நான் லவ் பண்ணேன்னு உங்ககிட்ட சொன்னேனா?”

“நீ சொல்லலை, ஆனா எனக்கு தெரியும்.”

“ஓ அப்படி நினைச்சிட்டுத்தான், இப்ப பாவம் பார்த்து என்னைக் கல்யாணம் பண்றீங்களா?”

“எதாவது தெரியாம பேசாத. முன்னாடி நடந்ததை விட்டுட்டு, இப்ப நம்ம ரெண்டு பேர் வீட்ல நம்ம கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணி இருக்காங்க. கல்யாணத்துக்கு பிறகு, நாம புதுசா நம்ம வாழ்க்கையை தொடங்குவோம், சரியா…”

“அதெல்லாம் இப்ப என்னால எதுவும் சொல்ல முடியாது.”

“சரி நீ இப்ப சொல்ல வேண்டாம், முதல் ராத்திரி கொண்டாடிட்டு மெதுவா சொல்லு.” நந்தா சொல்ல,

“என்னது?” என ஸ்வேதா அலற…

“உம்மா…” என்றவன், கைபேசி வழியே அவளுக்கு ஒரு முத்தத்தை தந்துவிட்டு போன்னை வைத்தான்.

“முன்னாடி எல்லாம் இப்படி பேச மாட்டானே….  இவனுக்கு ரொம்ப கொழுப்பாகிடுச்சு.” என நினைத்தபடி, அவள் வேலையை பார்க்க சென்றாள்.

சொன்னது போல் திருமணதிற்கு முன் தினம் நிச்சயம் செய்து பெண் அழைத்துக் கொண்டு செல்ல தான் நந்தா வந்தான்.

அவர்கள் வழக்கப்படி நிச்சயம் பெண் வீட்டிலும், திருமணம் மாப்பிள்ளை வீட்டிலும் செய்வார்கள். பெண் வீட்டினர் சார்பில் இவர்கள் ஒரு மண்டபம் பிடித்து இருக்க, மாலை நான்கு  மணிக்கு நிச்சயம் தொடங்கியது.

சீர் வரிசை தட்டோடு மாப்பிள்ளை வீட்டினர் வர…. நந்தாவிற்கு  முறையாக ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றனர். அவன் முன் வரிசையில் நண்பர்களோடு அமர்ந்து இருக்க…  வீட்டில் பெரியவர்கள் பேசி முடித்து, நிச்சய தட்டு மாற்றியதும், பெண்ணை மேடைக்கு அழைத்து நிச்சய புடவை கொடுத்தனர்.

ஸ்வேதா மணப்பெண் அலங்காரத்தில் சர்வ லட்ச்சனமாக இருந்தாள். மேடைக்கு வந்தவள், பெரியவர்களை வணங்கி விட்டு, நிச்சய புடவை வாங்கிக் கொண்டு சென்றாள்.

அவள் பெரிய அக்கா சுகன்யா, ஸ்வேதாவின் காதில், முன் வரிசையில் நந்தா உட்கார்ந்து இருப்பதை சொல்லியும், அவள் அவனை பார்க்கவே இல்லை. நந்தா செம கடுப்பாகி விட்டான்.

அவள் புடவை மாற்றி வர வேண்டும் என்பதால்… எழுந்து நண்பர்களுடன் பின் வரிசைக்கு சென்றான்.

“என்ன டா மாப்பிள்ளை. உன்னை கண்டுக்கவே இல்லை.” நந்தாவின் நண்பன் பாலா சொல்ல,

“ம்ம்… மேடம் இன்னும் கோபத்தில தான் இருக்காங்க.” என்றான் நந்தா.

“பின்ன நீ பண்ணி வச்ச வேலைக்கு.”

“வேண்டாம் அதை பத்தி பேசாதே… அதை நினைச்சாலே எனக்கு மூட் அவுட் ஆகும்.” என்றவன், மேடையைப் பார்க்க, ஸ்வேதா மேடைக்கு வந்திருந்தாள்.

அவளை மனையில் உட்கார வைத்து, பெண்கள் நலங்கு வைக்க ஆரம்பித்தனர். பிறகு நந்தாவையும் மேடைக்கு அழைத்து இருவருக்குமாக செய்ய வேண்டிய சடங்குகள் செய்து முடிக்க,  நந்தா அருகில் இருந்தாலும், இன்னும் ஸ்வேதா அவனைப் பார்க்கவில்லை. கொஞ்சம் படபடப்பாக உணர்ந்தாள்.

நந்தாவின் அத்தைப் பெண் சுமதி, “நந்தா பெண்ணை கைபிடிச்சு அழைச்சிட்டு வா, நம்ம வீட்டுக்கு கிளம்பணும்.” என்றதும்,  அப்போதுதான் ஸ்வேதா நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.

அவள் முகத்தில் கலக்கம், அவள் விழிகள் வேறு கலங்க ஆரம்பிக்க, “ஒன்னும் இல்லை. நான் இருக்கேன்.” என மெதுவாக அவளிடம் சொன்னவன், அவள் கையை பிடித்துக் கொண்டான்.

ஸ்வேதா அவள் பெற்றோர் மற்றும் சகோதரிகளிடம் சொல்லிக் கொண்டு, காத்திருந்த காரில் நந்தாவோடு சென்று ஏறினாள். இன்னும் சிலரும் அவர்களோடு ஏறிக்கொள்ள, இருவருக்கும் இடித்துக் கொண்டு அமர வேண்டிய நிலை. நந்தா நன்றாக நகர்ந்து உட்கார்ந்து, அவள் வசதியாக உட்கார இடம் விட்டான்.

நந்தாவின் வீட்டிற்கு சென்றதும், இருவரையும் நிற்க வைத்து ஆரத்தி எடுத்து, உள்ளே அழைத்து சென்றனர். பிறகு அங்கேயும் சில சம்பரதாயங்கள் இருக்க, அது முடிந்து எல்லோரும் ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

முக்கியமானவர்கள் மட்டும் தான் வீட்டிற்கு வந்திருந்தனர். மற்றவர்கள் எல்லாம் நேராக மண்டபம் சென்று விட்டனர். தம்பதிகளுக்கு சாப்பிட பலகாரங்கள் கொடுத்துவிட்டு, மற்றவர்கள் அந்தப் பக்கம் நகர, கிடைத்த இடைவெளியில், “ஸ்வேதா, நம்ம ரெண்டு பேர் பிரச்சனை, நமக்கு மட்டும் தெரிஞ்சா போதும்.” என்றான் நந்தா அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக.

ஸ்வேதா அமைதியாக இருக்க,“சரின்னு சொல்லு.” அவன் குரலில் தெரிந்த அழுத்தத்தில், தலை தானாக சரி என்பதாக அசைந்தது. அவர்கள் சாப்பிட்டு முடித்ததும், இருவரையும் அழைத்துக் கொண்டு மண்டபத்திற்கு சென்றனர்.

அங்கேயும் சில சம்ப்ரதாயங்கள் இருக்க, அது முடிந்து, ஸ்வேதா முகத்தை மட்டும் கழுவி, மீண்டும் ஒப்பனை செய்து கொண்டாள். நந்தா சூட் அணிந்து வர…. இரவு ஏழரை மணிக்கு அவர்கள் வரவேற்ப்பு தொடங்கியது.

தனக்கு தெரிந்தவர்களை நந்தா ஸ்வேதாவுக்கு அறிமுகம் செய்ய, ஸ்வேதாவும் அவனோடு கொஞ்சம் கொஞ்சமாக பேச  ஆரம்பித்தாள்.

மறுநாள் அதிகாலை நான்கு மணிக்கே எழுப்பி, தலைக்கு குளிக்க வைத்து, இருவரையும் வைத்து சம்ப்ரதாயங்கள் செய்ய தொடக்கி விட்டனர்.

அவர்களில் தாலி மஞ்சள் கயிற்றில் தான் கட்டுவது வழக்கம் என்பதால்… குறித்த முஹுர்த்த நேரத்தில், தாலிகயிற்றில் கோர்க்கப்பட்டிருந்த திருமாங்கல்யத்தை நந்தா ஸ்வேதாவின் கழுத்தில் கட்டி, தன் மனைவியாக்கிக் கொண்டான்.

அந்த நொடி ஸ்வேதாவுக்கு மிகவும் நெகிழ்ச்சியாகவே இருந்தது. ஒரு காலத்தில் நந்தாவின் மீது விருப்பம் கொண்டிருந்தாலும், கிட்டாதாயின் வெட்டென மற என்பதற்கு ஏற்ப, மறந்தும் போனாள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால், இன்று அவனையே திருமணம் செய்து கொண்டிருக்கிறாள்.

திருமணம் முடிந்து மணமக்கள் நந்தாவின் வீட்டிற்கு சென்றனர். அவர்களுடன் பெண் வீட்டினர் சார்பில் சில உறவினர்களும், சுகன்யாவும் அவள் கணவரும் வந்தனர். மாலை வரை ஸ்வேதாவுடன் இருந்துவிட்டு சென்றனர்.

அன்று இரவு அவர்கள் இருவரையும் ஒரே அறையில் விடவில்லை. இருவரையும் வேறு வேறு அறையில் உறங்க சொல்ல….

நந்தா தன் அத்தை பெண் சுமதியிடம் ஏன் என்று கேட்க, “நாளைக்கு கோவிலுக்கு போகணும், அப்புறம் நாளைக்கு நாள் நல்லா இல்லை. அதனால மூன்னாம் நாள்தான்.” என்றாள்.

நந்தா நொந்தே போனான். “அடப்பாவிகளா ! கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியா?” என முனங்கியவன், “நேத்துல இருந்து ரெண்டு போரையும் பக்கத்தில இருக்க வச்சு சூடேத்தி  விட்டுட்டு. இப்ப ஒன்னும் இல்லைன்னு சொன்னா, நியாயமா? நீயே சொல்லு?” என அவன் ஸ்வேதாவிடம் மெதுவாக முறையிட…

“அட அலைஞ்சானே….” என்பது போல அவள் அவனைப் பார்த்து வைக்க, அதை புரிந்தவன், “ஆம்பிளைங்க கஷ்ட்டம் உனக்கு தெரியாது.” என வேறு சொல்லிவிட்டு சென்றான்.

சுமதி ஸ்வேதாவோடு துணைக்கு படுத்துக் கொள்ள, அவள் கணவன் சரண் நந்தாவோடு இருந்தான். “ஏன் மாப்பிள்ளை சோகமா இருக்க. ரொம்ப எதிர்பார்த்திட்டியோ? நம்மதுல யாருக்குமே கல்யாணம் அன்னைக்கு முதல் ராத்திரி வைக்க மாட்டாங்களே, உனக்கு தெரியாதா?” என அவன் கேட்க,

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே நான் நல்லத்தான் இருக்கேன்.” என சமாளித்தாலும், உண்மையாகவே அவனுக்கு தெரியாது. அவனுக்கு உடன்பிறந்த சகோதரிகள் யாரும் இல்லை. மற்ற உறவினர்களின் திருமணதிற்கு சென்றால்…  திருமணம் முடிந்ததும் வந்து விடுவான். அதனால் இதை பற்றி அவன் அறிந்திருக்கவில்லை.

கண்ணை மூடி படுத்து  பார்த்தும், உறக்கம் மட்டும் வரவேயில்லை. அருகில் இருந்த சரண் உறங்கி விட, தன் கைபேசியில் ஸ்வேதாவை அழைத்தான். புது இடம் என்பதால் அவளும் உறங்காமல் தான் இருந்தாள்.

“என்ன?”

“பிரிச்சு வைக்க எதுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க?”

“நீங்க இன்னும் புலம்புறதை நிறுத்தலையா?”

“யாரு இந்த சடங்கு சம்பரதாயம் எல்லாம் கண்டு பிடிச்சாங்களோ. அவங்களை வர்ஜின் பசங்க சாபம் சும்மா விடாது.”

ஸ்வேதா பதில் சொல்லாமல் இருக்க, “நீ ரொம்ப சந்தோஷமா இருப்பியே?” என்றான்.

ஆமாம் என்றும் சொல்ல முடியாது, இல்லை என்றும் சொல்ல முடியாது. இப்படி ஒரு கேள்வி அவன் கேட்டு வைத்தால்… இப்போதும் ஸ்வேதா அமைதியாக இருக்க.

“நான் அப்ப பண்ணதுக்கு, நீ இப்ப பழி வாங்கிறியா?” என்றான்.

பக்கத்தில் சுமதி இன்னும் உறங்கவில்லை. இப்போது எதுவும் பேச முடியாத நிலை. “எனக்கு தூக்கம் வருது.” என்றாள். கோபத்தில் பேசாமலே கைப்பேசியை அணைத்துவிட்டான். சிறிது நேரத்தில் உறங்கியும் போனான்.

என்ன டா இவன்? முன்னாடி எல்லாம் நம்மை பார்த்தா, அப்படி காய்வான். இப்ப என்ன இப்படி பேசுறான் என நினைத்தபடி ஸ்வேதாவும் உறங்கிப் போனாள்.

மறுநாள் காலையில் குளித்துவிட்டு, ஸ்வேதா மயில் வண்ண பட்டுப்புடவையில் தயாராகி வர…. நந்தாவின் அம்மா சிவகாமி அவளை விளக்கேற்றி வைக்க சொன்னார்.

அவர் சொன்னபடி ஸ்வேதாவும் செய்துவிட்டு வர… நந்தாவும் குளித்து தயாராகி வந்தான். நேற்று அவள் பேசாததில்… இன்னும் கோபமாகத்தான் இருந்தான். ஆனால் மற்றவர்களுக்கு ஒன்னும் தெரியவில்லை.

தாபமோ, கோபமோ அவளிடம் மாடும்தான் காட்டினான்.

காலை உணவு வெளியில் இருந்து வந்தது. உணவு முடிந்ததும், கோவிலுக்கு கிளம்பி சென்றனர். அங்கே பூஜை எல்லாம் முடிந்து வரும் வழியில், ஹோட்டலில் மதிய உணவை முடித்துக்  கொண்டு வீட்டிற்கு வந்தனர்.

மற்ற உறவினர்கள் சென்று இருக்க, நந்தாவின் அத்தை, சித்தி வீட்டினர் மட்டும் இருந்தனர். மதியம் அதே போல ஆளுக்கு ஒரு அறையில் படுத்து உறங்க, மாலை வந்திருந்த பரிசுகளை பிரித்து பார்த்து, ஒரு புத்தகத்தில் யார் என்ன செய்திருக்கிறார்கள் என சுமதி எழுத, அவளுக்கு ஸ்வேதா உதவிக் கொண்டு இருந்தாள்.

மாடி ஹாலில் உட்கார்ந்து தான் எழுதிக் கொண்டு இருந்தனர். “இதோ வரேன்…” என சுமதி கீழே செல்ல, ஸ்வேதா சிரத்தையாக செய்து கொண்டிருந்த வேலையைத் தொடர, அப்போது நந்தா அங்கே வந்தான்.

“உன்னை கீழ கூப்பிடுறாங்க. நாளைக்கு எழுதிக்கலாம். வா.” என்றான். ஸ்வேதாவும் உடனே எழுந்து வர… அவனைத் தாண்டிக் கொண்டு சென்றவளை, இழுத்து சுவற்றில் சாய்த்தவன்,  அவள் செல்லமுடியாமல், அவனின் கைகளுக்குள் அவளை சிறை வைத்தான்.

அவன் அவள் முகம் நோக்கி குனிய, அவனின் நோக்கம் உணர்ந்தவள், “நான் போகணும்.” என்றாள்.

“போகலாம். ஒன்னே ஒன்னு.” என்றவன், அவள் இதழ் நோக்கி, தன் இதழை கொண்டு செல்ல, ஸ்வேதா தலையை திருப்பிக் கொண்டாள்.

நந்தா சட்டென்று விளக்கை அணைத்தவன், அவள் முகம் திருப்ப முடியாதபடி, அவள் முகத்தை ஒரு கையால் பற்றிக் கொண்டு, அவள் இதழில் அழுத்தமாக முத்தமிட்டான். நீண்ட சில நொடிகள் மட்டுமே, பிறகு அவளிடம் இருந்து விலகியவன், “வா போகலாம்.” என அவளை அழைத்துக் கொண்டு கீழே சென்றான்.

முகத்தில் எதையும் காட்டாமல் இருக்க, ஸ்வேதா பெரும் பாடு பட்டாள். ஆனால் நந்தாவோ சாதாரணமாக இருந்தான்.

மறுநாள் ஸ்வேதாவின் வீட்டிற்கு சென்றனர். அங்கே சுகன்யாவின் கணவன், சங்கீதாவின் கணவன் எல்லோரும் இருக்க… நந்தா அவர்களோடு சேர்ந்து நன்றாக அரட்டை அடித்தான். ஸ்வேதாவின் பாட்டியோடும் நன்றாக பேசிக்கொண்டு இருந்தான்.

மதிய விருந்து முடிந்ததும், அவள் அம்மா சொன்னதற்காக,  ஓய்வு எடுப்பதற்காக நந்தாவை அழைத்துக் கொண்டு சென்று, அறையைக் காட்டினாள். வெளியே இருந்தே காட்டிவிட்டு ஓடி வந்துவிட்டாள்.

எப்படியும் தனியா மாட்டுவ இல்ல, அப்ப பார்த்துகிறேன் என நினைத்தபடி உறங்கிப் போனான்.மாலையில் அவனை எழுப்ப ஸ்வேதா வர, அவளை இழுத்து தன் மேல் போட்டவன், அவன் முகம் பற்றி முத்தமிட்டான்.

நெருக்கமான நேரங்களில் ஸ்வேதா இயல்பாக இல்லாதது போல தோன்றியது. அவளிடம் ஒத்துழைப்பு இல்லை. ஆசையோ இணக்கமோ இல்லை. மாறாக அவள் உடல் விரைத்து போகிறாள் என்பதை உணர்ந்தவன், அவளை விட்டு விட்டான்.

அவனுக்கு தெரியும், அவள் ஏன் இப்படி இருக்கிறாள் என்று. அவளிடம் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டான்.

“நீ போ… நான் வரேன்.” என்றவன், அவளைத் தன்னிடம் இருந்து மெல்ல விலக்கினான்.

அவன் மற்றவர்களிடம் சாதாரணமாக பேசினாலும், முன்பிருந்த கலகலப்பு அவனிடம் இல்லை. அதை ஸ்வேதா உணர்ந்தாள். தன்னால் தான் அவன் இப்படி இருக்கிறான் என்றும் புரிந்தது.

தான் அவனிடம் இப்படி நடந்து கொள்வது நியாயமா என யோசித்துப் பார்த்தால்… இல்லை என்றுதான் தோன்றியது. அவனை முதல்முதலில் சந்தித்த தினத்துக்கு சென்றாள்.

 

Advertisement